ஆக்னஸின் பெற்றோர்
பிள்ளைகளின் மனதில்
அன்பின் அஸ்திவாரத்தை
ஆழமாய்த் தோண்டினர்.
நற்செயல்கள்
விளம்பரங்களுக்கானதல்ல,
விளம்பரங்களுக்காய்
வெளி வருவது நற்செயல் அல்ல.
நீ
செய்யும் நற்செயல்
கடலில் வீசப்பட்ட கல் போல
கரைப் பார்வைக்கு
மறைந்தே இருக்கட்டும்.
கடலுக்கும் உனக்குமான
ரகசிய ஒப்பந்தமாய்
நற்செயல்கள் நிறைவேறட்டும்.
பிறரோடு பகிர்ந்து கொள்ளாத
எதையும்
நீ தனியாய்
சொந்தமாக்கக் கூடாது.
இவையெல்லாம்
அந்த
அறிவுரை அலைகள்
நிறுத்திச் சென்ற
சில துளிகள்.
ஆக்னஸின் அன்னையும் தந்தையும்
ஒற்றுமையின்
ஓடையில் நீந்திய மீன்கள்.
என்றும்
வழக்கிடும் வழக்கத்தைக்
கொண்டிருந்ததில்லை.
அவர்களின் வாழ்க்கையே
ஆக்னஸிற்கு
முன்னால் செல்லும்
விளக்குத் தூண் ஆனது.








