தகவல் இல்லா தொடர்புகள்

 

.
இணையத்தில்
ஏதோ இணைப்புப் பிழை,
உனக்கனுப்பிய
இ-மெயில்
வழியில் எங்கோ விழுந்துவிட்டது.

உன்
வீட்டுத் தொலைபேசி
வேலை செய்யவில்லையா ?

மறந்து போன நண்பனை
வழியில் சந்திக்கும் போது
உதடுகள்
ஓயாமல் பொய்சொல்லும்.

‘கடுதாசி போட்டேனே’
என்று அப்பா யாரிடமோ
ஒரு நாள்
சொல்லிக் கொண்டிருந்தார்.

பாம்பின் மேல் பழி சுமத்திய
ஆதாம் காலத்து ஆரம்பம் தான்
இந்த
தப்பித்தல் உளறல்கள்.

கற்காலத்துக்கும்
தற்காலத்துக்கும்
அர்த்தங்களின் தூரம் அதிகமில்லை,
பெயர் சூட்டுதலில் தான்
பல நூற்றாண்டு நீளம்.

மறக்கத் துவங்கியிருக்கும்
பால்ய கால நண்பர்களுக்கு
டைரியைத் தொலைத்தேனெனும்
முன் ஜாமீன் பதில் தான்.

இந்த நட்பு
இறுதிவரை இருக்குமென்று நினைத்து
இறுக்கமற்றுப் போனவற்றின்
கணக்குகள்
ஐந்தாம் வகுப்பிலிருந்து
அமெரிக்கா வரை நீள்கிறது.

நேற்று,
சாலையோரம் மங்கலான வெளிச்சத்தில்
அவனைப் பார்த்தேன்,
ஒரு காலத்தில் என்னோடு
நெருக்கமாய் இருந்தவன்.

விசாரிப்புக்கிடையில்
வினவினான்
ஒரு கடிதம் அனுப்பினேனே,
கிடைத்ததா ?

சிரிப்புக்கிடையில் சொன்னேன்.
ஆம்,
பதில் கூட அனுப்பினேனே !

3 மறுமொழிகள்

  1. ஆகஸ்ட் 22, 2006 இல் 11:08 பிற்பகல்

    “கற்காலத்துக்கும்
    தற்காலத்துக்கும்
    அர்த்தங்களின் தூரம் அதிகமில்லை,
    பெயர் சூட்டுதலில் தான்
    பல நூற்றாண்டு நீளம்.” ——–இது முற்றிலும் உண்மை.

    ” விசாரிப்புக்கிடையில்
    வினவினான்
    ஒரு கடிதம் அனுப்பினேனே,
    கிடைத்ததா ?

    சிரிப்புக்கிடையில் சொன்னேன்.
    ஆம்,
    பதில் கூட அனுப்பினேனே ! ” —– எதார்த்தமான உண்மைகள்.

    உங்கள் கவிதைகளில் உண்மைகளை படம் பிடித்து காட்டுகின்றீர்கள்.

  2. ஆகஸ்ட் 23, 2006 இல் 11:14 பிற்பகல்

    இணைய தளங்களைக் கிளறிக்கொண்டு வருகையில் உங்கள் கவிதைகளின் அமைதியான மொழி படிக்கத்தூண்டியது. நன்றி.

  3. karthiga சொன்னது,

    ஆகஸ்ட் 29, 2006 இல் 2:16 மு.பகல்

    NANN KODA UNGAL ELLA KAVITHAI KALUKKUM VALLTHU ANUPPINEN.

    XAVIR:YA..YA..NANNKODA THX PANNINENE.


மறுமொழியொன்றை வழங்குக