
எது சிறந்ததென்று
பறக்கிறாயோ,
அது சிறந்ததில்லை.
காலம்
உன்
கால்பந்துக் கோப்பைகளை
குப்பைக் கூடைக்கு
ஒப்புவிக்கும்.
உன் மேல் விழும்
வெளிச்ச ஒளி பரப்புகள்
நாளை
இன்னோர் தளத்துக்கு
இடம் பெயரும்.
உன்
பதக்கங்களை
பழைய பாத்திரக் கடைகள்
கரண்டிகள் செய்ய
சுரண்டும்.
நீ
மூளையைச் செதுக்கி
பிரசுரித்த புத்தகங்களை
மைலாப்பூர் மூலைகள்
மூன்று ரூபாய் பேரத்தில்
புறக்கக்கும்.
உன்
கவிதைக் காகிதங்களில்
கடற்கரைகள்
கடலை கொறித்துக்
கசக்கும்.
எதுவும் உன்
மரணப் படுக்கைக் கரையில்
விழும்
கண்ணீர் துளிகளை
காயும் முன் துடைக்காது.
இரண்டு கேள்விகள்
உன்
பெருமூச்சுக்குப் பதிலாய்
அங்கே மூச்சு விடும்.
நீ
யாரை அன்பு செய்தாய்,
உன்னை
யார் அன்பு செய்கிறார்கள்.
- “கல் மனிதன்” தொகுப்பிலிருந்து








