
அன்னை சொல்கிறார்.
பட்டினியின் எல்லையை
நம்மில் பலர்
கண்டிருக்கமாட்டோம்.
பசியின் கண்ணீரோடு
நம் பலரின் கண்களுக்கு
பரிச்சயம் இருக்காது.
உங்கள் பணி வீதியில் கிடக்கிறது.
நீங்களோ
வானம் பார்த்து நடக்கிறீர்கள்.
நான் பார்த்தேன்,
ஒருமுறை
அழுக்கு வீதியின்
ஓரத்தில்
ஓர் ஏழைச்சிறுமியைக் கண்டேன்.
அவள் கண்களில்
பட்டினியின் பரிதாபப் பார்வை
ஆயிரம் கண்களோடு
விழித்துக் கிடந்தது.
வாழ்வின்
முதல் பக்கத்தில் நிற்கும் சிறுமி.
வலியில்
கடைசிக் கட்டத்தையும்
தோளில் சுமக்கும் துயரம்
இதயத்தைத் தாக்க
ரொட்டி ஒன்றை கொடுத்தேன்.
அந்தச் சிறுமி,
அதை
வேக வேகமாய் வாங்கி
மெல்ல மெல்ல
தின்னத் துவங்கினாள்.
அவள் கண்கள் முழுதும்
ஓர்
பேரரசைப் பிடித்த
சக்கரவர்த்தியின் சந்தோசம்.
அவளை அரவணைத்துக் கொண்டே
நான் கேட்டேன்,
ரொட்டியை
விரைவாய் தின்றால்
விரைவிலேயே பசி போய் விடுமே ?
சிறுமி
கலவரத்துடன் பதிலளித்தாள்.
ரொட்டி தீர்ந்து விட்டால்
மீண்டும் பசிக்குமோ
என
பயமாய் இருக்கிறது.
- ‘அன்னை’ நூலிலிருந்து









செந்தழல் ரவி சொன்னது,
ஜனவரி 30, 2007 இல் 4:16 பிற்பகல்
அருமையான நூலில் இருந்து நல்லதொரு கவிதை
revathinarasimhan சொன்னது,
ஜனவரி 30, 2007 இல் 5:33 பிற்பகல்
என்ன ஒரு இதயம். வள்ளலார்ப் பாடல்கள் படிப்பது போல் இருந்தது.
தமிழில் இந்தப் பெயரில் நூல் இருக்கிறது என்றே தெரியாது.
நன்றி சேவியர்.