கி.மு : முதல் கொலை

cain.jpg

ஆதிமனிதன் ஆதாமும், அவனுடைய துணைவியான ஏவாளும் கடவுளின் கட்டளையை மீறியதால் கடவுளுடைய தோட்டமான ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஏதேனை விட்டு வெளியேறிய ஆதாமும் ஏவாளும் தனியே வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.

காலம் உருண்டோ டியது. ஏவாள் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆதாம் அவனுக்குக் காயீன் என்று பெயரிட்டார். சில ஆண்டுகளில் அவர்களுக்கு இன்னொரு மகனும் பிறந்தான். அவனுக்கு ஆபேல் என்று பெயரிட்டார்கள். ஆதாமும், ஏவாளும் தங்கள் பிள்ளைகளை மிகவும் பாசத்துடன் பராமரித்தனர். தங்களுக்குக் குழந்தைகள் பிறந்ததற்கு கடவுளின் அருள் தான் காரணம் என்று மகிழ்ந்தார்கள். ஆதாம் கடுமையாக உழைத்துக் குடும்பத்திற்குத் தேவையான உணவைக் கொண்டு வந்தார்.

காயீனும், ஆபேலும் வளரத் துவங்கினார்கள். ஆதாமும் ஏவாளும் குழந்தைகளின் வளர்ச்சியைப் பிரமிப்புடன் பார்த்தார்கள். உலகின் முதல் தந்தையான ஆதாமுக்கும், முதல் தாயான ஏவாளுக்கும் எல்லாமே புதுமையானதாகவும், முதல் அனுபவமாகவும் இருந்தன. மகன்கள் இருவரும் வளர்ந்து இளைஞர்கள் ஆனார்கள்.

கடவுள் படைத்த விலங்குகளில் ஆட்டின் மாமிசம் சுவையானதாக இருப்பதை ஆதாம் அறிந்து கொண்டார். எனவே அவன் ஒரு ஆட்டுமந்தையை உருவாக்கி அதை மேய்க்கும் பொறுப்பை ஆபேலிடம் ஒப்படைத்தார். ஆபேல் தினமும் ஆட்டுமந்தைகளைக் கண்காணித்து வந்தான். அவை கூட்டத்தை விட்டு விலகிச் சென்று விடாமலும், வேறு விலங்குகள் எதுவும் வந்து மந்தையைச் சிதறடித்துவிடாமலும் பாதுகாத்துவந்தான்.

காயீன் தோட்டவேலை செய்தான். நிலத்தை பக்குவப் படுத்தி அங்கே கனிதரும் தாவரங்களை நட்டு அவற்றைப் பராமரித்துவந்தான். தோட்ட வேலையைப் பற்றியோ, மந்தை மேய்ப்பதைப் பற்றியோ அவர்களுக்கு ஏதும் முன் அனுபவங்களோ, முன் உதாரணங்களோ இருக்கவில்லை. எனவே அவர்கள் மிகவும் வருந்தி உழைத்து தங்கள் அன்றாட வாழ்வைக் கழித்து வந்தார்கள்.

தன்னைப் படைத்த கடவுளுக்கு, தான் உழைத்து உருவாக்கிய பொருட்களைக் காணிக்கைப் பலியாகக் கொடுப்பதை ஆதாம் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய மகன்கள் உழைக்க ஆரம்பித்ததும் அவர்களை ஆதாம் அழைத்து,
‘உங்கள் உழைப்பின் பயனைக் கடவுளுக்கும் கொடுக்கவேண்டும். அவர்தான் நம்மைப் படைத்தவர். எனவே கடவுளுக்குத் தவறாமல் காணிக்கைப் பலியைச் செலுத்தவேண்டும். கடவுளுக்குச் செலுத்தும் பலி சிறந்ததாக இருக்கவேண்டும்’ என்று அறிவுரை வழங்கினார். அதன்படி காயீனும், ஆபேலும் தங்கள் பலிகளைக் கடவுளுக்குச் செலுத்தி வந்தார்கள்.

அவர்கள் தனித்தனியே இரண்டு பலிபீடங்களைக் கட்டி அவற்றின் மீது காணிக்கைப் பொருட்களை வைப்பார்கள். வானத்திலிருந்து நெருப்பு இறங்கி வந்து அந்த பலிபொருட்களை எரிக்கும். அதுவே பலி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கான அடையாளம். அதன் பின் அவர்கள் இருவரும் மன மகிழ்வுடன் வீடு திரும்புவார்கள். இதுவே வழக்கமாக இருந்து வந்தது.

நாட்கள் செல்லச் செல்ல காயீனின் மனதுக்குள் ஒரு சிந்தனை எழுந்தது,’ நான் ஒவ்வொரு முறையும் என் தோட்டத்திலிருந்து தலைசிறந்த பழங்களையும், காய்கறிகளையும் கடவுளுக்குப் பலியிடுகிறேன். அதை நெருப்பு வந்து எரிக்கிறது. நான் பலியிடுவதால் எனக்கு எந்த பயனும் இல்லை. பின் ஏன் நான் வீணாக என் கடின உழைப்பைக் கடவுளுக்குக் கொடுக்கவேண்டும் ? என்னுடைய உழைப்பின் பயன் முழுவதும் எனக்கே கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்குமே ? ‘. காயீனின் மனதுக்குள் எழுந்த இந்த சிந்தனை நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வந்தது.

சிலநாட்கள் சென்றபின் காயீனும் ஆபேலும் தங்கள் உழைப்பின் பயனைக் கடவுளுக்கு அளிப்பதற்காக மீண்டும் பலிபீடத்தின் முன் வந்தார்கள். காயீன் இந்தமுறை தன்னுடைய நிலத்தில் விளைந்தவற்றில் மோசமான காய்கறிகளையும், பழங்களையும் காணிக்கைக்காக எடுத்து வந்தான். ஆனால் ஆபேலோ வழக்கம்போல தன்னுடைய மந்தையிலிருந்தவற்றிலிருந்து கொழுத்த தலையீற்றுகளைக் கொண்டு வந்தான்.

இருவரும் பலியிட்டார்கள். நெருப்பு இறங்கி வந்து ஆபேலில் பலிபீடத்தில் இருந்த பலியை எரித்தது. ஆனால் காயீனின் பலியோ ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வழக்கமாக வானிலிருந்து இறங்கி வரும் நெருப்பு இந்தமுறை மட்டும் வரவேயில்லை. காயீன் தன்னுடைய தவறை உணர்ந்துக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக ஆபேலின் மீது கோபம் கொண்டான். தன்னுடைய பலி ஏற்றுக் கொள்ளப் படாமல் அவனுடைய பலி மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டதே என்று உள்ளுக்குள் ஆவேசமடைந்தான்.

கடவுள் காயீனை அழைத்தார்.’ காயீன்… காயீன்…’

‘யார் என்னை அழைப்பது ?’ காயீன் கேட்டான்.

‘நான் தான்.. உன் கடவுள். உன்னுடைய முகத்தில் கோபமும், வாட்டமும் இருப்பதைக் கண்டதால் உன்னை அழைக்கிறேன்.’ கடவுள் சொன்னார்.

‘கோபமா ? நான் ஏன் கோபப் படவேண்டும் ? அல்லது நான் ஏன் வருத்தமடைய வேண்டும்?’ காயீன் கேட்டான்.

‘காயீனே… பாவம் செய்வதற்கு உன்னைத் தூண்டும் எண்ணங்களெல்லாம் உன் வாசலில் வந்து படுத்திருக்கும். ஆனால் நீ அவற்றினுள் விழுபவனாக இருக்கக் கூடாது. அதையெல்லாம் வெற்றி கொள்பவனாக இருக்க வேண்டும்.’ கடவுள் சொன்னார்.

காயீன் பதில் சொல்லவில்லை. அவன் மனம் கடவுளின் வார்த்தைகளில் சமாதானமடையவில்லை. அவனுடைய கோபமெல்லாம் ஆபேலின் மீதே இருந்தது. ‘மூத்தவன் நான் இருக்கும் போது இளையவன் உன்னுடைய பலிகள் மட்டும் அங்கீகரிக்கப் படுகிறதா ? அது எனக்கு அவமானமல்லவா ?’ என்று அவனுக்குள் வெறுப்பு எண்ணம் வளர்ந்து கொண்டே இருந்தது. அவனுக்குள் இருந்த வெறுப்பு எண்ணம் கொலைவெறியாக மாறியபோது அவன் வந்து ஆபேலை அழைத்தான்.

‘ஆபேல்….’

‘சொல்லுங்கள் அண்ணா…’ ஆபேல் எழுந்தான்.

‘வா… என்னுடைய வயல்வெளிக்கு வா… என்னுடைய விளைநிலங்களையெல்லாம் நீ பார்க்க வேண்டாமா ‘ காயீன் அழைத்தான்.

‘இதோ வருகிறேன் அண்ணா…’ ஆபேல் உற்சாகமாய் எழுந்தான்.

அவர்கள் இருவருமாக வயல்வெளியை நோக்கிச் சென்றார்கள். வழியில் ஆபேல் காயீனிடம், ‘உன்னுடைய பலிகளைக் கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கவலைப்படாதே அடுத்தமுறை கடவுளுக்குப் பலியிடும் போது மிகச் சிறப்பானவற்றைக் கொண்டு வா. கண்டிப்பாக உன்னுடைய பலியைக் கடவுள் ஏற்றுக் கொள்வார்’ என்றான். அதைக் கேட்டதும் காயீனின் கோபம் பலமடங்கு அதிகரித்தது.

‘நீ எனக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டாயா ?’ என்று கேட்டுக் கொண்டே அவன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளினான். ஆபேல் நிலைகுலைந்து விழுந்தான். தன் மீது தன் சகோதரன் முதன்முதலாக நடத்தும் தாக்குதலை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கீழே விழுந்த ஆபேல் எழுந்திருக்கும் முன் காயீன் அவனை அடித்துக் கொன்றான். ஆபேலின் குற்றமற்ற இரத்தம் மண்ணின் மீது பாய்ந்தோடியது. முதல் கொலை அங்கே அரங்கேறியது.

காயீன் நடுங்கினான். ‘ஆபேல்.. ஆபேல்….’ என்று காயீன் சற்று நேரம் அழைத்துப் பார்த்தான். பதில் வராததால் ஓடிப் போய் மலைகளிடையே ஒளிந்து கொண்டான்.

ஆண்டவர் காயீனை அழைத்தார். காயீன் மேலும் அதிகமாக நடுங்கினான்.

“காயீனே… நீ எங்கே இருக்கிறாய் ? எங்கே உன் சகோதரன் ஆபேல் ?”

“ஆபேலா ? அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. அவனுக்கு நான் என்ன காவலாளியா ? அவன் அவனுடைய மந்தையை மேய்த்துக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன்’ காயீன் உலகின் முதல் பொய்யைச் சொன்னான்.

“காயீனே. நீ கடவுளிடம் பேசுகிறாய் என்பதை நினைவில் கொள். நீ ஆபேலை என்ன செய்தாய் ? அவனுடைய இரத்தம் என்னை நோக்கிக் கூக்குரல் இடுகிறதே” கடவுள் சொன்னார். காயீன் பயத்திலும், பதட்டத்திலும் அமைதியானான்.

‘காயீனே… உன் சகோதரன் ஆபேலைக் கொன்று விட்டாயே ! அவனுடைய இரத்தத்தை இந்த மண்ணிலே சிந்திவிட்டாயே. அவனுடைய குற்றமற்ற இரத்தத்தை நீ இந்த மண்ணில் சிந்த வைத்ததனால் உன்னை சபிக்கிறேன். இனிமேல் நீ என்ன பயிரிட்டாலும் அது உனக்குக் பலன் தராது. நீ நாடோ டி போல அலைந்து திரிவாய்’ கடவுள் சபித்தார்.

‘கடவுளே.. என்னைக் கைவிடாதேயும். என்னை மன்னித்தருளும்…’ காயீன் கதறினான். மேலும் அந்த இடத்திலே நிற்க பயந்துபோய் வேறு திசையில் ஓடினான்.
ஒற்றுமையாய் ஒரு இடத்தில் இருந்த ஆபேலின் குடும்பம் சிதறியது.

இதுவே உலகில் நடந்த முதல் மனித கொலை.

About these ads

9 Comments

  1. April 3, 2008 at 7:25 pm

    கடவுளின் முதல் சாபம் :)

  2. April 4, 2008 at 9:29 pm

    கடவுளின் முதல் தோல்வி – ஆதாமின் கீழ்படியாமை
    கடவுளின் முதல் சாபம் – ஆதாம் ஏவாளை சபித்தது

    சரிதானே! அல்லது தவறா?

  3. April 7, 2008 at 9:59 am

    //கடவுளின் முதல் தோல்வி – ஆதாமின் கீழ்படியாமை//

    சரி !!

    //கடவுளின் முதல் சாபம் – ஆதாம் ஏவாளை சபித்தது//

    இல்லை. கடவுளின் முதல் சாபம், ஏவாள் – ஆதாமை ஏமாற்றிய பாம்பின் மீது !

  4. s.kslpana said,

    April 7, 2008 at 11:06 pm

    muthal kolai kathai naintru

  5. April 9, 2008 at 8:17 pm

    மிக்க நன்றி தோழி.

  6. ஷாமா said,

    May 29, 2009 at 10:37 am

    உலகில் முதல் முதலில் அரங்கேறிய “சகோதரக் கொலை”,
    இன்றும் பல இடங்களில் முடிவிலியாய்த் தொடர்வது
    கவலையை அளிக்கிறது….

    கடவுளின் சாபம்,… அவரின் கோபம் எல்லாம்,
    கிறிஸ்து வருகையின் பின் இல்லாது ஒழிக்கப்பட்டு விட்டது…
    இப்போதும் அவர் சாபம் இருக்குமேயானால்,
    இந்த உலகம் என்னாவது?…

    அழகிய எழுத்துருவம்…. நன்றி சேவியர்!!

  7. May 31, 2009 at 6:50 pm

    மிக்க நன்றி ஷாமா :)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 88 other followers

%d bloggers like this: