கவிதை : அழகாய்.. அழகழகாய்…

பிரியமே.
இன்று நான் உனக்கொரு
உண்மை சொல்லப் போகிறேன்.

உன்னை
பூக்களின் பிரதிபலிப்பு,
நிலாக்கிரணங்களின் உறைநிலை
என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன்.
மன்னித்துவிடு
எல்லாம் பொய்தான்.

நான்
கவிதை எழுத முனைந்தபோதெல்லாம்,
உன் சிரிப்புக்கிடையில்
கவிதை கொஞ்சம்
வெட்கப்பட்டதாய் ஒரு முறையும்,

முடிக்கத்தெரியாமல் தவித்த
ஓர் கவிதைக்கு
உன் கூந்தல் பூ விழுந்து
முற்றுப்புள்ளி இட்டதாய் ஒரு முறையும்,

உன் புன்னகையால்
நான்
புற்களில் தடுக்கி பூக்களில் விழுந்து,
கருவிழிக்குள் உன்முகம்
காயம்பட்டதாய் ஒருமுறையும்
சொல்லியிருக்கிறேன்.

மன்னித்துவிடு…
எல்லாம், எல்லாம் பொய்தான்.

உன்னை
நிலவாகவும், பூவாகவும் பார்த்தது
என் தவறு தான் என்பது
நேற்று எதிர் வீட்டு ஜன்னலில்
நிலவுமுகத்தில் புதிதாய்
ஓர் ரோஜாப்பூ
தலைசீவிச் சிரித்தபோது தான் புரிந்தது.

2 மறுமொழிகள்

  1. ஷாமா சொன்னது,

    ஜூன் 22, 2009 இல் 11:30 பிற்பகல்

    ஆய்வுகள் காலத்துக்குக் காலம் மாற்றியமைக்கப் படுவது போல……
    ஒரு பெண்ணைப் பற்றிய ரசனையும், வர்ணனையும்
    இன்னொரு பெண் வந்ததும் மாறுகிறது…… என்ற உண்மையை
    அழகாகவும் மென்மையாகவும் கூறும்
    உங்கள் நடையழகு ரொம்ப ரொம்ப பிரமாதம்.
    உங்கள் கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் எப்படி
    இப்படியெல்லாம் அழகாக எழுதத் தோற்றுகிறது உங்களால்
    என்ற வியப்பு என்னுள் எப்போதும் எழுவதுண்டு.
    உங்கள் அழகு நடை என்றும் போல்
    இன்னும் பல்லாயிரக்கணக்கில் தொடர வேண்டுமென
    மனமாற வாழ்த்துகிறேன்! have a nice day xavier.

  2. சேவியர் சொன்னது,

    ஜூன் 30, 2009 இல் 3:07 மு.பகல்

    ஷாமா… உங்கள் நட்பில் மகிழ்கிறேன். பாராட்டுக்கு நன்றிகள் பல.


மறுமொழியொன்றை வழங்குக