ஆயிரம் மைலுக்கு
அப்பால் இருந்தாலும்
என் குரல் கேட்பாய் என்று
சில நூற்றாண்டுகளுக்கு
முன் யாரேனும் சொல்லியிருந்தால்
அவனுக்குப்
பைத்தியக்காரப் பட்டம்
கிடைத்திருக்கும்.
எங்கே இருந்தாலும்
பார்த்துக் கொண்டே பேசலாம்
என
கடந்த நூற்றாண்டின்
முதல் படியில் யாரேனும்
முனகியிருந்தால்,
மனநிலை மருத்துவமனை
அவனை அனுமதித்திருக்கும்.
பூமிக்கு வெளியே போய்
பூமியை
படமெடுப்பேன் என்றவனை
ஈசல் கூட சீண்டியிருக்காது.
நிரூபிக்கப் பட்டபின்பே
நம்புவேன் என
பிடிவாதம் பிடிக்கும் பழக்கம்,
கடிவாளம் போட்டாலும்
நமக்குள் அடங்கி விடாது.
நேற்றைய கேலிகளில்
விளைந்திருக்கின்றன
இன்றைய
வியப்பின் விரல் நுனிகள்.
இன்றைய கேலிப் பேச்சுகள்
நாளை சில
ஆச்சரியங்களை
உச்சரிக்கும்.
புரியாவிட்டாலும் நம்பும்
நிலையில் நானும் நீயும்.
யாரோ சிரிக்கிறார்கள்,
கடவுள் தான்
மனிதனைப் படைத்தாராமே ?.










vikneshwaran adakkalam சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 11:35 மு.பகல்
//புரியாவிட்டாலும் நம்பும்
நிலையில் நானும் நீயும்.//
ரிப்பீட்டுகிறேன்…
vikneshwaran adakkalam சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 12:20 பிற்பகல்
சேவியர்னு ஒரு நல்லவர் கிட்ட புத்தகம் கேட்டிருந்தேன் அவர் இருக்காரா?
kalyanakamala சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 2:52 பிற்பகல்
சரிதான்!
அன்புடன்
கமலா
ஹேமா சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 3:34 பிற்பகல்
நம்பிக்கையோடு எடுக்கும் முயற்சி என்றும் தோல்வியடைவதில்லை.எவ்வளவோ கண்டுபிடிப்புக்கள் இதற்கு ஆதாரம்.கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்திதான் முயற்சிப்பவரின் உந்துசக்தியென நம்புகிறேன்.அதன் பெயர்தான் கடவுள்.
சேவியர் சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 4:14 பிற்பகல்
//சேவியர்னு ஒரு நல்லவர் கிட்ட புத்தகம் கேட்டிருந்தேன் அவர் இருக்காரா?//
நன்றி தம்பி. ஆனா அந்த சேவியர் ரொம்பப் பெரிய சோம்பேறி
சேவியர் சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 4:15 பிற்பகல்
நன்றி கமலா
சேவியர் சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 6:16 பிற்பகல்
//கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்திதான் முயற்சிப்பவரின் உந்துசக்தியென நம்புகிறேன்.//
கருத்துக்கு நன்றி ஹேமா.
aruna சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 6:18 பிற்பகல்
சிறந்த ஆச்சரியங்களில் ஒன்று உங்கள் கவிதை…அருமை!!
அன்புடன் அருணா
சேவியர் சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 6:25 பிற்பகல்
மனமார்ந்த நன்றிகள் அருணா
guhan சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 8:33 பிற்பகல்
கவிஞர் சேவியருக்கு,
மிகச் சிறந்த கவிதை.
எது முடியாததாக நேற்றைய வரலாறு பதிவு செய்ததோ , அதே வரலாறு தான் இன்றைய சாதனையாகவும் அதை பதிவு செய்கிறது.
அபாரமாக எழுதி உள்ளீர்கள் !!!!!!!!!!!!!!!!
“யாரோ சிரிக்கிறார்கள்,
கடவுள் தான்
மனிதனைப் படைத்தாராமே ?.”
தவறாக எண்ண வேண்டாம். நம்பிக்கை என்பதைக் காட்டிலும் , நல்லது எது என்று பார்க்கையில் “கடவுள் மறுப்பு” என்பதில் வலுவான கருத்து எனக்கு உண்டு .
இருப்பினும் ரசித்தேன் நீங்கள் நியாயபடுத்திய விதத்தை !!!!!!!!!!!!!!!!!!!
அன்புடன்
குகன்
சேவியர் சொன்னது,
ஜூலை 8, 2008 இல் 12:56 பிற்பகல்
//எது முடியாததாக நேற்றைய வரலாறு பதிவு செய்ததோ , அதே வரலாறு தான் இன்றைய சாதனையாகவும் அதை பதிவு செய்கிறது.
அபாரமாக எழுதி உள்ளீர்கள் !!!!!!!!!!!!!!!!
//
நன்றி குகன்.
//தவறாக எண்ண வேண்டாம். நம்பிக்கை என்பதைக் காட்டிலும் , நல்லது எது என்று பார்க்கையில் “கடவுள் மறுப்பு” என்பதில் வலுவான கருத்து எனக்கு உண்டு .
இருப்பினும் ரசித்தேன் நீங்கள் நியாயபடுத்திய விதத்தை//
நன்றி குகன்
நான் கடவுள் மறுப்புக் காரன் அல்ல. கடவுள் வெறுப்புக் காரனும் அல்ல. வாழ்க்கையில் செயல்களின் மூலமாக கடவுளைப் பிரதிபலிக்க முயன்று படுதோல்வி கண்டு, மீண்டும் முயன்று, மீண்டும் தோற்று…. இப்படியாக வழுக்கு மரம் ஏறிக்கொண்டிருக்கும் ஒருவன்
மாதரசன் சொன்னது,
ஜூலை 8, 2008 இல் 1:02 பிற்பகல்
உங்கள் கவிதைகளிலே நான் மிகவும் இரசித்த கவிதை…
சேவியர் சொன்னது,
ஜூலை 8, 2008 இல் 1:05 பிற்பகல்
நன்றி மாதரசன்