ஒரு வெட்டியான் வாய் திறக்கிறான்

 

cemetry
வாருங்கள்…

ஏதேன் தோட்டத்துள்
ஏதேதோ தேடி
கல்லறத்தோட்டம் வந்தவர்களே
வாருங்கள்.

சுமை சுமந்து
சோர்ந்துபோனவர்களுக்கு
நித்திய சமாதானம்
தருவது என் தோட்டம் தான்.
மனிதனுக்கு ஆயிரம் முகங்கள்
ஆனால்
என் வீட்டுக்கு வந்தபின்
சந்தனமானாலும் விறகானாலும்
மிஞ்சுவது சாம்பல் மட்டும் தான்.

உயிரோடிருக்கும் போது
கற்றுத் தெளிந்த
மானுடம்
இங்கு வந்து எனக்கு கற்றுத்தருகிறார்கள்.

ஆயிரம் பேர் சூழவரும்
பெரும் புள்ளிகளின்
சம்பிரதாய கண்ணீர்துளிகளில்
சிதை வற்றியதாய் சரித்திரமில்லை.

சில எழுத்தாளர்களின் சடலம்
அவர்களின்
நிறைவேறாத
கதைகள் சொல்வதுண்டு…

கல்லைறைகளிலும்
கருவறைகளிலும் சிதைந்துபோன
கானல்க் கனவுகளுடன் தான்
கனல் சுமக்க வருகிறார்கள் பலர்.

சில காதல் மரணங்கள்
எனக்குள்
ரணங்களை விட்டுச் செல்லும்..

வெந்து தணிந்த சிதையில்
தன்
உயிர்க்காதலியின்
கொலுசுதேடிய ஒருவனின் கண்ணீர்
இன்னும் எனக்குள் சத்தமிடுகிறது.

பல வேலைகளில்
அவர்களின் இயலாமை மீது எனக்கு
சுட்டெரிக்கும் கோபம் வருவதுண்டு.

ஒரு நாள்
தன் ஒற்றைக் குழந்தையைப்
பற்றிக்கொண்டுவந்த
அந்தத் தாயின் அலறல் ஒலியில்
பிணங்கள் கூட பரிதாபப்பட்டிருக்கும்.

பதுக்கிவைத்திருக்கும் பாசமும்
முகத்திரை போர்த்தி வைத்திருக்கும் பாசமும்
உடைபடுவது
இந்த மனிதவிறகு எரியும் வினாடிகளில் தான்.

சில உறவுகள்
கண்ணீர் விட்டு கதறிப் புரண்டு
மோதிரத்தைக் கழற்றியபின்
ஓரத்தில் அமர்ந்து
மௌனமாகும்.

சிதைக்குத் தீயிடுவது யார் ?
யார் கடனை தீர்த்துவைப்பது ?
இனி இவனிடத்தில் யார் ?
சண்டைகள் பலவேளைகளில்
செத்துப்போனவனை பெருமூச்சு விட வைக்கும்.

செத்துப் போன வினாடியில்
விட்டுப் போன உயிர்
சுற்றிக்கொண்டிருக்கும் என்று
மூடநம்பிக்கையைப் பற்றிக்கொண்டிருப்பவர்கள்
இன்னும்
ஆவிக்கு நிலத்தில் ஆணி அறைகிறார்கள்.

முதுமை மரணங்கள் பெரும்பாலும்
சிரிப்பிலும் அரட்டையிலுமாய் தான்
நடந்தேறும் ….
ஆனாலும் சில சுருக்கங்கள்
சத்தமின்றி அமர்ந்து வேதனைப்படும்.

பலருடைய நேசம்
அங்கீகரிக்கப் படுவதும்….
சொந்தத்தின் அடர்த்தியை வைத்து
அங்கிகள்
பங்கிடப்படுவதும் சாவுகளில் தான்.

நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.
என் சிதை எரியும் போது
எத்தனை விழிகள் கண்ணீர் சரிக்கும் என்பதில் தான்
என் வாழ்க்கை
எடையிடப்படும்…

சுற்றிப் பார்க்கிறேன்….

ஓரத்தில் இருக்கும்
என் ஒற்றைக் குடிசையைச் சுற்றி
மருந்துக்குக் கூட மனிதவாசம் இல்லாத,
பொட்டுக் குடிசை கூட தட்டுப்படாத
பெரும் பொட்டல்க் காடு.

தேவசகாயம் பிள்ளை நினைவிடம்

x3

செயற்கைக் காற்றாலைகள் சுழன்று மின்சார உற்பத்தியை நடத்திக் கொண்டிருக்கும் அழகுடன், எங்கும் பச்சைப் பசேல் என காற்றுக்குக் கரியமில வாயு தட்டுப்பாடு வருமளவுக்கு உயிர்வளி உறையும் இடமாக பரந்து பிரமிப்பூட்டுகிறது ஆரல்வாய்மொழி.

இயற்கை தனது செல்வத்தின் சுருக்குப் பையைத் திறந்து கொட்டியிருக்கும் இந்த ஆரல்வாய் மொழியில் மௌனத்தின் சின்னமாய் கிடக்கிறது மறை சாட்சி தேவசகாயம் பிள்ளையின் நினைவிடம். ஸ்வாகதம் என மலையாளத்தில் வரவேற்கும் இந்த காற்றாடி மலையை தேவசகாயம் மலை என்றே அழைக்கின்றனர்.

கொளுத்தும் வெயிலில் வந்தால் கூட சில்லென காற்று வீசும் இந்த நிழல் மலைப் பிரதேசத்தில் 1752ம் ஆண்டு கிறிஸ்தவத்தைத் தழுவியதற்காக சுட்டுக் கொல்லப்பட்டவர் தான் தேவசகாயம் பிள்ளை. இந்த படுகொலையை நிகழ்த்தியது திருவிதாங்கூர் அரசு.

அந்நாட்களில் மதம் மாறியவர்கள் எல்லோருமே கொல்லப்பட்டார்களா என்றால் இல்லை என்பதே பதில். எனில் தேவசகாயம் ஏன் கொல்லப்படவேண்டும் ? இந்த வினாவுக்கான விடையைத் தேடும்போது அகப்படுகிறது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நுரைக்க நுரைக்க நிரம்பி வழிந்திருந்த சாதீய அடக்குமுறை.

நீலகண்டம் பிள்ளையாய் பிறந்த தேவசகாயம் ஓர் கீழ்க்குலத்தில் பிறந்திருந்தால் நிச்சயமாய் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார். காரணம் அந்நாட்களில் ஏராளம் மீனவ சமூகங்களும், தாழ்த்தப்பட்டவர்களும் கிறிஸ்தவ மறையைத் தழுவிக் கொண்டு தான் இருந்தனர் என்கிறது வரலாறு. ஆனால் அவர் பிறந்ததோ ஒரு நாயர் பெண்ணுக்கும், நம்பூதிரி ஆணுக்கும் !

z12நம்பூதிரி ஆண்கள் விரும்பும் போதெல்லாம் நாயர் குல பெண்கள் நம்பூதிரிகளின் அந்தப் புரத்தை அலங்கரித்தாக வேண்டும் எனும் அந்தக் கால சமூக சாதீய அமைப்பின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது தேவசகாயத்தின் பிறப்பும். தந்தை யார் என தெரியாமலேயே நாயர் குலத்தில் கணக்கின்றி பிள்ளைகள் பிறந்து கொண்டிருந்த சிக்கலைச் சரிசெய்ய “மருமக்கள் தாயம்” எனப்படும் தாய்வழி சாதீய முறை வழக்கத்தில் இருந்தது. அதனால் தான் தேவசகாயம் பிள்ளையும் நாயர் என்றே அறியப்படுகிறார்.

தாழ்ந்த குல ஆண்கள் கால் முட்டிக்குக் கீழே ஆடை அணியக் கூடாது, பெண்கள் மேலாடை போடக்கூடாது என தாழ்த்தப்பட்டவர்களாய் எண்ணப்பட்டவர்கள்  ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பின்னணியில் உயர் குலத்தில் பிறந்தார் தேவசகாயம்.

1712ம் ஆண்டு குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னுமிடத்தில் ஒரு இந்துவாப் பிறந்த நீலகண்டன் பிள்ளை, இந்துவாக வளரும் வரை அவருக்கு எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. நல்ல ஆசான்களிடம் கல்வி கற்றார், போர்பயிற்சி பெற்றார், மன்னர் மார்த்தாண்டவர்மாவின் அரண்மனையிலேயே போர் வீரனாக பணியிலும் சேர்ந்தார்.

1941 ம் ஆண்டு குளச்சல் போரில் டச்சு வீரர்களுக்கு எதிரான போரில் மன்னன் மார்த்தாண்ட வர்மா வெற்றி பெற்றார். அந்தப் போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டார் டிலனாய் எனும் டச்சு தளபதி. அவரைச் சந்திக்காமல் இருந்திருந்தால் தேவசகாயம் நீலகண்டன் பிள்ளையாகவே மிச்சம் மீதி நாட்களையும் அரண்மனையில் உல்லாசமாய் செலவிட்டிருக்கக் கூடும்.

y4

டி-லனாய் தேவசகாயம் பிள்ளைக்கு கிறிஸ்தவத்தை அறிமுகப் படுத்தினார். வாழ்வின் கவலை சூழ் காலம் தேவசகாயத்தைப் பற்றியிருந்த காலம் அது. கிறிஸ்தவத்தின் மேல் சிந்தனை பற்றிக் கொள்ளவும் அது ஒரு காரணியாயிற்று. ஆனால் கிறிஸ்தவத்தைத் தழுவிய தேவசகாயம் கிறிஸ்தவத்துக்காய் உயிரை விடவும் தயாராய் இருப்பார் என டிலனாயே நினைத்திருக்க மாட்டார்.

ஓர் உயர் ஜாதி இந்து, அதுவும் அரசனின் அருகே இருப்பவன், அரசவைப் பணியாளன் கிறிஸ்தவம் தழுவியது உயர்குல இந்துக்களுக்கு எரிச்சலைக் கிளப்பியது. தேவசகாயத்தை பின்வாங்க கட்டாயப்படுத்தியது அந்தக் கூட்டம். தேவசகாயம் உறுதியாய் இருந்தார்.

தேவசகாயத்தின் உறுதி உயர்சாதி இந்துக்களுக்கு அதிகபட்ச ஆத்திரத்தை உருவாக்க,  அவர் மீது போலியாக் குற்றங்கள் சுமத்தப்பட்டன ! அவர் பந்தாடப்பட்டார். தோவாளை, விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம், பத்மநாபபுரம் என எல்லா அதிகாரிகளின் முன்னிலையிலும் தண்டனையும் அவமானமும் பெற்றார். எருக்கம் மாலை ஊர்வலம், எருமை ஊர்வலம் போன்றவை அவற்றில் சில.

அவமானத்துக்குப் பயந்து பின்வாங்காத தேவசகாயம் பின்னர் வன்முறைத் தாக்குதலுக்கும் ஆளானார். நான்கடி நீளம், இரண்டடி உயரமுள்ள பெட்டியில் வைத்து பூட்டப்பட்டார். பாம்புகளுக்கிடையே போடப்பட்டார், குரங்குகளின் கூட்டில் கட்டி வைக்கப்பட்டார், சுண்ணாம்பு சூளையில் எறியப்பட்டார் என அவர் மீதான வன்முறைத் தாக்குதல்களை வலியுடனும், குருதி வாசனையுடனும் வரைந்து வைத்திருக்கிறது வரலாறு.

z9தேவசகாயம் கொல்லப்பட்ட இடத்துக்கு சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள புலியூர் குறிச்சி என்னுமிடத்தில் வைத்து அவர்மேல் காயங்கள் ஏற்படுத்தி மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்தினர். அவர் தாகத்தில் தண்ணீர் கேட்டபோது வீரர்கள் தண்ணீர் வழங்காததால், கையின் முட்டியால் பாறையை இடித்து தண்ணீர் உருவாக்கினாராம். அந்த இடத்தில் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது, இன்னும் அந்த இடத்தில் பாறைத் தண்ணீர் வற்றாமல் இருக்கிறது. அந்த இடம் “முட்டிடிச்சான் பாறை” என அழைக்கப்பட்டு வழிபாட்டு நிலையமாகி விட்டது.

தேவசகாயம் கொல்லப்பட்ட மலையில் அமைந்துள்ள நினைவிடம், அவர் சுடப்பட்ட இடம், வீழ்ந்த இடம், பாறையில் முழங்கால் படியிட்டு செபித்த இடம் என பல பாகங்களுடன் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
அவருக்கு நோய்தீர்க்கும் வல்லமை இருப்பதாகவும், அவருடைய நினைவிடத்தில் செபித்தால் அதிசயங்கள் நடக்கும் எனவும் மக்கள் அளிக்கும் சாட்சியங்களை வைத்து கத்தோலிக்கத் திருச்சபை அவருக்கு புனிதர் பட்டம் வழங்கலாமா எனும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது. z6

 

தேவசகாயம் பிறந்த நட்டாலம், பாறையில் நீரூற்று ஏற்படுத்திய புலியூர்குறிச்சி, அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டாறு ஆலயம், காற்றாடி மலையிலுள்ள அவருடைய நினைவிடம் என குமரிமாவட்டத்தில் தேவசகாயத்தின் நினைவு இன்னும் மக்கள் மனதில் உயிரோட்டமாகவே இருக்கிறது.

சட்டென்று சில நூற்றாண்டுகள் பின்னோக்கித் தாவி தேவசகாயத்தின் காலத்தில் உலவிய பிரமை பீடிக்கிறது மலையை விட்டுக் கீழிறங்கி நடக்கும்போது !

வசீகரச் சூறாவளி

17நீ
தராத ஒன்றை
நான் எடுத்துக் கொண்ட
உறுத்தல் நிகழ்கிறது

வசீகரச் சூறாவளியில்
முகத்தின் தயக்கத்தை
மோதிச் சாத்தும்
அழகுகளை
விழிகளின் குழிகளில் நிரப்புகையில்.

எனினும்
அடுத்த உறுத்தல் தினத்துக்காய்
காத்திருப்பதே
வாடிக்கையாகி விட்டது
குறு குறுக்கும் விழிகளுக்கு.

காதல் கதவுகள்

2

கதவைத் தட்டுகையில்
சந்தேகம் எழுகிறது
நீ
உள்ளே இருக்கிறாயா ?

நீ இல்லாத
கதவுகளின் முன்னால்
நின்று
தட்டிக் கொண்டிருப்பதில்
அர்த்தமில்லை.

கதவு திறக்காதென்றல்ல.
திறப்பதற்கானவையே
கதவுகள்.

திறந்தாலும்
அது
உன்னால் திறக்கப்படாது
எனும் ஒற்றைக் காரணத்தால்.

நீ… மரபா, புதுசா…

18

 

 

 பெண்கள்
புதுக்கவிதைகள்
என
நினைத்திருந்தேன்.

அசையும்
சீரில் தான்
அழகென்பதை அறிந்தபின்
மங்கையர்
மரபுக் கவிதைகள் என்பதை
மறுக்க இயலவில்லை

சொல்லாமல் சொன்னவை

1

தனிமை
வறுத்தெடுக்கும் நாளில்
சில்லிடும் பனித் துகளாய்
வானிலிருந்து
உன் நினைவுகள்
நெஞ்சில் விழுந்ததாய்
சொல்லியிருக்கிறேன்.

பிறிதொரு நாளில்
கடுங்குளிர் போர்வை விரிக்க
ஓர்
வெப்பத் துளியாய்
என்
உயிரில் விழுந்ததையும்
சொல்லியிருக்கிறேன்.

உன்
பார்வை படும் தூரங்களே
என்
வாழ்வை நடும் தூரங்களென்றும்,

உன்
வார்த்தை விழும் சமவெளிகளே
என்
வாழ்க்கை எழும் சமவெளிகள்
என்றும் சொல்லியிருக்கிறேன்.

காதலிக்கிறேன் என்று
ஏன்
சொல்லவில்லை என்கிறாய்
பிரிவின் விரல் பிடித்து

இப்படியும் எழுதலாம்

rr1

நிலவில் நடப்பதை
விட
நிலவுடன் நடப்பதே
பெருமை
காதலுக்கு

2

காதல்
வாழ்க்கையைத் தருமாம்
மரணங்கள்
சொல்கின்றன

 

3

முதல் பார்வையில்
காதல் வருமென்பதை
நம்புங்கள்
இல்லையேல்
காதல் வருகையில் தான்
முதல்
பார்வை வருமென்பதையேனும்

இப்படியே அழையுங்கள்…

eye

சரேலென்று திரும்பிய
உன்
பார்வையின் விழுதுகளில்
என்
முதல் புலன் மூச்சிழந்தது.

உன்
கூந்தலின் அலைவரிசை
ஒலிபரப்பிய வாசனையில்
என்
அடுத்த புலனும் அடங்கியது.

இசைகளிள் உச்சத்தை
உன் வாய்
உச்சரித்த வினாடியில்
என்
செவிப் புலனும் சொக்கியது.

உன்
முத்தத்தின் சுவையை
கற்பனைக் காட்டுக்குள்
அலையவிடுகையில்
என் நாவும் நாவடக்கியது.

உன்
விரல்களின் நுனிகளில்
சுவர்க்கத்தைக் கட்டி
என் கைகளில்
அதன் ஸ்பரிசத்தைக் காட்டுகையில்
தொடு புலனும் தளர்ந்தது.

என்
புலன்களெல்லாம்
இப்போது
உன்னிடம் சரணமடைந்ததால்,

எனை நீங்கள்
புலன் பெயர்ந்தவன்
என்றே அழையுங்கள்

அவர்கள் அறியாதிருக்கிறார்கள்

malli

உனது
பார்வை உரசுகையில்
வேதியல் மாற்றம்
விளங்கிக் கொண்டேன்

விரல்களின்
ஸ்பரிசங்களில்
எல்லா தொடுதலுக்கும்
சமமான
எதிர் வெட்கம் உண்டென்று
இயற்பியல் அறிந்தேன்

உனது
புன்னகையின்
கூட்டுத் தொகையில் தான்
என்
ஆனந்தத்தின் அகலம்
என கணிதம் கற்றேன்.

உன்
நுனிநாக்கில்
தவறி விழுந்த வாக்கியங்களில்
வெட்கப்பட்ட
சேக்ஸ்பியரைக் கண்டேன்.

உன்
தோழியரின் துணையில்
சங்ககால
தூதுகளை கண்டுகொண்டேன்.

எனினும்
எதுவும் கற்கவில்லையென
பேராசிரியர்கள்
பொறுமித் திரிகிறார்கள்

வியக்க வைக்கும் பச்சைத் தேநீர் !!

greentea
“ஒரு டீ குடுங்க”   என கடைக்காரரிடம் கேட்டு அவர் இரண்டரை இஞ்ச் குவளையில் நீட்டும் தேனீரை சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் கிரீன் டீ என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ?

நிமிடத்துக்கு பத்து என விளம்பரங்களில் தலைகாட்டும் தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நம்மில் பலருக்கும் தெரியாமலே போய்விட்ட ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர்.

இந்தத் தேனீரில் மகத்துவமே இருக்கிறது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நானும் நினைப்பதற்குக் காரணம்.

இந்தத் தேனீரை அருந்தி வந்தால் உடல் பருமனாவதிலிருந்து தப்பலாம் எனவும், இந்த கிரீன் டீ உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும் எனவும் யூகேவின் பர்மிங்காம் பல்கலைக்கழகம் பச்சைத் தேநீர் பற்றி வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவிலிருந்தே துவங்குகிறேன்.

சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேநீர் அருந்தத் துவங்கி விட்ட சீனாவில் தான் இந்த பச்சைத் தேனீரும் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதே பெரும்பாலானோரால் ஒத்துக் கொள்ளப்பட்ட பச்சைத் தேநீர் வரலாறு. எனினும் சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தியா வில் இந்த பச்சைத் தேநீர் மிகப்பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதே பரவலான நம்பிக்கை.

எதற்குப் பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யமானது. உடலில் காயம் ஏதேனும் ஏற்பட்டால் குருதி வழிதலைக் கட்டுப்படுத்தவும், காயத்தை ஆற்றவும், உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தவும், செரிமானத்தன்மையை அதிகப்படுத்தவும் மற்றும் குருதி சர்க்கரை அளவை மட்டுப்படுத்தவும் இந்த பச்சைத் தேநீர் பயன்படுத்தப்பட்டு வந்ததாம்.

“தி கிஸா யோஜோக்கி” ( பச்சைத் தேநீர் ) எனும் நூல் தான் பச்சைத் தேனீருக்கு இருக்கும் மகிமையை வியக்க வியக்க விவரிக்கும் முதல் நூல். இந்த நூலை எழுதியவர் ஒரு ஜென் துறவி. இவர் பச்சைத் தேனீரைக் குறித்து இந்த நூல் முழுக்க எழுதியிருப்பதைப் பார்த்தால் இந்த பச்சைத் தேநீர் ஒரு சர்வரோக நிவாரிணி என்பது போன்ற பிரமிப்பு உருவாகிறது.

உடலின் மிக முக்கியமான ஐந்து உறுப்புகளுக்கு இந்த பச்சைத் தேநீர் எப்படியெல்லாம் பயன்படுகிறது என ஒரு கைதேர்ந்த மருத்துவரைப் போல இவர் விரிவாக விவரித்துள்ளார். குறிப்பாக இதயத்துக்கு பச்சைத் தேநீர் ஒரு வரப்பிரசாதமாம். இந்த நூல் வெளியான ஆண்டு 1191.

பச்சைத் தேனீரைக் குறித்த மருத்துவப் பயன்களில் பல நிரூபிக்கப்பட்டவை, சில நிரூபிக்கப்படாத நம்பிக்கைகள். அந்த நம்பிக்கைகள் மறுக்கப்படவும் இல்லை என்பதே நம்பிக்கையுடன் பச்சைத் தேனீரை நோக்கி நம்மை அணுக வைக்கிறது.

அல்சீமர், பார்கின்ஸன் என மருத்துவ உலகம் அச்சத்துடன் அணுகும் அதிபயங்கர நோய்கள் வராமல் தடுக்கும் வலிமை பச்சைத் தேனீருக்கு இருக்கிறதாம்.
பற்களைப் பாதுகாக்கிறது என்பது முதல் புற்று நோய் வராமல் தடுப்பது, மாரடைப்பு வராமல் தடுப்பது என உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிராகவும் பச்சைத் தேநீர் நிமிர்ந்து நிற்கிறது என ஆங்காங்கே பச்சைத் தேனீரைக் குறித்துக் கிடைக்கும் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன.

நியூயார்க் பத்திரிகையாளர் ஜாய் பானர், பச்சைத் தேநீர் மூளையின் வினையூக்கியாகச் செயல்படுகிறது, மூளையை சுறுசுறுப்புடனும் வலிமையுடனும் வைத்திருக்க உதவுகிறது என குறிப்பிடுகிறார்.

தினமும் ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்தி வந்தால் உடலிலிருந்து தேவையற்ற கொழுப்பு கரையும் என்கின்றனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். உடற்பயிற்சிக் கூடத்தில் அரை மணி நேரம் ஓடுவதும் ஐந்து கோப்பை தேநீர் அருந்துவதும் ஒரே அளவு கலோரிகளைக் கரைக்கும் என்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு.

ஆறு வாரங்கள் நீங்கள் காபியை விரட்டி விட்டு பச்சைத் தேனீரை அருந்தி வாருங்கள் உங்கள் உடல் எடை நான்கு கிலோ குறையும் என வியக்க வைக்கிறார் மருத்துவர் நிக்கோலர் பெரிகோன்.

அமெரிக்க புற்று நோய் ஆராய்ச்சிக் கூடம் வெளியிட்ட அறிக்கை ஒன்று பச்சைத் தேனீருக்கு புற்று நோயைத் தடுக்கும் வலிமை உண்டு என மருத்துவர் ஹான் சியோ மூலமாக மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.  அதேபோல அமெரிக்க மருத்துவக் கழக பத்திரிகை 1996 செப்டம்பர் 13 இதழில் பச்சைத் தேநீர் இதயம் சார்ந்த நோய்களைத் தடுக்கும் வலிமை கொண்டது என ஆய்வு முடிவு வெளியிட்டிருந்தது.

நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் அதிகப்படுத்துவதிலும், உயர் குருதி அழுத்தத்தைக் குறைப்பதிலும் தலை சிறந்தது பச்சைத் தேநீர் என்கின்றன சீன ஆய்வுகள். எல்லாவற்றுக்கும் மேலாக ஹைச்.ஐ.வி எனப்படும் எயிட்ஸ் கிருமி உடலின் டி-அணுக்களைப் பாதிக்காமல் பச்சைத் தேநீர் தடுக்கும் எனும் நிரூபிக்கப்படாத நம்பிக்கையும் மருத்துவ உலகில் நிலவுகிறது.

உடல் சார்ந்த இத்தகைய பயன்களோடு மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கும் வலிமை கூட பச்சைத் தேனீருக்கு உண்டு என ஒரு ஆராய்ச்சி வியக்க வைக்கிறது.

சற்றே மருத்துவ வாசனையில் சொன்னால், பச்சைத் தேனீரில் இருக்கும் எப்பிகலோகாட்ஸின் காலேட் ( EGCG ) எனப்படும் நச்சுத் தன்மையை எதிர்க்கும் பொருள் தான் பச்சைத் தேனீரை மருத்துவக் குணம் வாய்ந்த ஒன்றாக மாற்றுகிறது எனலாம். இந்தப் பொருள் தான் புற்று நோய் வர விடாமல் தடுப்பதுடன், உடலின் கொழுப்பைக் கரைத்தும், குருதிக் குழாய்களின் அடைப்பைக் கரைத்தும் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவுகிறது.

எழுபத்தைந்து விழுக்காடு மக்களும் புகைக்கு அடிமையாகி இருக்கும் ஜப்பானில் இதய நோயாளிகள் குறைவாகவே இருக்கிறார்களே !!! ஏன்  ? ஏன் ? அது ஏன் ?? எனும் மருத்துவ வினாவுக்குப் பின்னால் புன்னகைத்துக் கொண்டிருப்பது இந்த பச்சைத் தேநீர் தான்.

கெமீலியா சைனாஸிஸ் என தாவரவியல் பெயரிட்டழைக்கும் இந்த தேயிலை மரத்திலிருந்து வேறு சில தேநீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் தயாரிப்பு முறையினால் இந்த பச்சைத் தேநீர் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாகி விடுகிறது.

சரி இந்தப் பச்சைத் தேனீரில் சிக்கல்களே இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. உண்டு ! ஒரே ஒரு சிக்கல். பச்சைத் தேனீரிலும் காபியில் இருப்பது போன்ற காஃபைன் எனும் நச்சுத் தன்மை உண்டு. ஆனால் காபியுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்பதே சற்று நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கும் செய்தி.

ஒரு நாளைக்கு எத்தனை கோப்பை பச்சைத் தேநீர் அருந்தலாம் என்பதற்கும் பல்வேறு ஆய்வுகளும் பல்வேறு விதமான பதில்களைச் சொல்கின்றன. எல்லா ஆய்வுகளையும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், தினமும் நான்கு அல்லது ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்துவது சாலச் சிறந்தது எனும் முடிவுக்கு வரமுடிகிறது.

இதயம், நுரையீரல், குருதி, எலும்புகள் என உடலின் எல்லா பாகங்களுக்கும் நன்மையை விளைவித்து இந்தப் பச்சைத் தேநீர் தலை நிமிர்ந்து…. மன்னிக்கவும் இலை நிமிர்ந்து நிற்கிறது !

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers