மூளை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்….

brain_pool

 

தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையைப் பாதிக்கின்றன.
1. காலையில் அலறி அடித்துக் கொண்டு எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பி, குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடவேண்டும். இதுக்கு இடையில் காலை உணவெல்லாம் சாப்பிடுவதே இல்லை. அதுக்கெல்லாம் நேரமில்லை என சொல்லும் ஆசாமியா நீங்க ? கவனம் தேவை. காலை உணவைத் தவிர்த்தால் உடலில் சருக்கரை அளவு குறைந்து விடுகிறது. இதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் மூலம் மூளை சோர்வடைகிறது.

2. சிலர் இதற்கு நேர் எதிர். எப்போ உட்கார்ந்தாலும் கிலோ கணக்கில் உள்ளே தள்ளினால் தான் திருப்தி ! அவர்களுக்கும் சிக்கல் இருக்கிறது. அதிகம் உண்டால் மூளை தனது உற்சாக திறனை கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கும். அதிலும் சிப்ஸ், பீட்சா, கோக் போன்ற குப்பை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் மூளையும் காயலான் கடைக்குப் போடும் நிலைக்கு வந்து விடும். உனவில் மீனை தொடர்ந்து உட்கொள்வது மூளையின் நினைவாற்றலை வயதான காலத்திலும் கூர்மையாக வைத்திருக்கும் என்பது மீன் பிரியர்களுக்கான துள்ளல் செய்தி !

3. புகை பிடித்தல் ! மூளையின் முக்கியமான எதிரி. மூளையை இது சுருங்க வைக்கும், நினைவிழக்க வைக்கும், பிற்காலத்தில் அல்சீமர் போன்ற நினைவிழத்தல் நோய்களுக்கெல்லாம் காரணமாகிவிடும். கோகைன் போன்ற பொருட்களும் மூளைக்கு எதிரி. அது மூளையின் ஒரு குறிப்பிட்ட அணுக்களை சுனாமி போல வாரி அழித்துச் சென்று விடும்.

4. மொடாக்குடியர்களுக்கு மூளை செல்லாக்காசாகி விடும். கொஞ்சமாய் குடிப்பது மூளைக்குப் பாதிப்பில்லை (வேறு பல பாதிப்புகள் உண்டு என்பது கண்கூடு) என்றாலும் அதிக அளவு மது மூளையின் அணுக்களைக் கொலை செய்து விடுகிறது. எதுக்கு வம்பு, போதையை விட்டு விலகியே இருக்கலாமே !

5. சரியான அளவு தண்ணீர் குடிக்காததும் மூளையைப் பாதித்து விடுகிறது. உடலில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் குறைந்த இடைவெளியில் அதிக தண்ணீரைக் குடிப்பதை விலக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாய் அடிக்கடி குடிப்பதே மிகச் சிறந்தது, தேவையானது !

6. அடிக்கடி தலையை வேகமாய் ஆட்டுவது கூட மூளைக்குக் கெடுதலாம். உங்கள் தலை உங்களிடம் தானே இருக்கிறது, தேவையில்லாமல் ஆட்டாதீர்கள்.

7. அதிக இனிப்பை உட்கொள்வதும் மூளைக்கு நல்லதல்ல. புரோட்டீன்களையும், சத்துகளையும் கிரகித்துக் கொள்ளும் உடலின் தன்மையை அது குறைக்கிறது. இதன் மூலம் மூளையின் வளர்ச்சியும் தடைபடுகிறது.

8. உடலில் பிராணவாயுவை அதிகம் எடுத்துக் கொள்ளும் ஒரு பகுதி மூளை. இதனால் தான் மூச்சுப் பயிற்சிகள் மூளை வளர்ச்சிக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. சுகாதாரமற்ற காற்று உள்ள இடங்களில் தங்க நேர்ந்தால் அந்த காற்றின் மாசு, மூளையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

9. நிம்மதியான தூக்கம் மூளையின் நெருங்கிய நண்பன். மூளையை புத்துணர்ச்சியுடனும் கெட்ட செல்கள் இல்லாமலும் பாதுகாப்பது நிம்மதியான தூக்கமே.

10. மன அழுத்தம் மூளையைப் பாதிக்கும் முக்கியமான ஒரு வில்லன். கொஞ்சம் அழுத்தம் நம்மை இலட்சியத்தை நோக்கி ஓடச்செய்யும், ஆனால் அதிகப்படியான அழுத்தம் மூளையின் அணுக்களைக் கொன்று விடும்.

11. தலையை மூடிக் கொண்டு தூங்குவது மூளையைப் பாதிக்கும். காரணம் மிக எளிது ! மூளைக்கு அதிக ஆக்சிஜன் தேவை. தலையை மூடிக் கொண்டே தூங்கினால், கரியமில வாயுவைத் தான் அதிகம் சுவாசிக்க வேண்டி வரும். அதனால் தான் காரணம். நல்ல காற்றோட்டமான, வெளிச்சமான, பச்சைப் பசேலென்ற உற்சாகச் சூழல்கள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

12. உடல் நிலை சரியில்லாதபோதோ, சோர்வாய் இருக்கும் போதோ மூளைக்கு அதிக வேலை கொடுப்பதும் மூளையை வலுவிழக்கச் செய்யும். எனவே மூளைக்கு ஓய்வு தேவைப்படும் போது ஓய்வு கொடுப்பதே மிகவும் தேவையானதாகும்.

13. நல்ல சிந்தனைப் பயிற்சிகளைக் கொடுப்பது மூளைக்கு நல்லது. நேர் சிந்தனைகள், உற்சாகமான சிந்தனைகள் போன்றவை மூளையை உற்சாகமூட்டும். அதே நேரத்தில் எதிர்மறை சிந்தனைகளை அசை போட்டுக் கொண்டிருந்தீர்களெனில் உங்கள் மூளையின் அணுக்கள் செத்துக் கொண்டிருக்கும்.
மூளையைப் பாதுகாப்பது வாழ்க்கையைப் பாதுகாப்பது போல. கவனமுடன் கையாள்வோம் வாழ்க்கையையும், மூளையையும்.

எகிறும் தங்கம், பதறும் பெண்கள்

 

sruthதங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விண்ணைத் தொட்டிருப்பது கல்யாணம் கச்சேரியை நெருங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பெல்லாம் இத்தனை பவுன் நகை என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போதெல்லாம் இத்தனை ரூபாய்க்கு நகை என்றே பேசிக்கொள்கின்றனர். காரணம் நாள் தோறும் எகிறிக் குதிக்கும் தங்கத்தின் விலை.

தங்கத்தின் விலையேற்றத்துக்கு அடுத்த தெரு கடைகள் முதல் சர்வதேச கச்சா எண்ணையின் விலை வரை பல்வேறு காரணங்களை ஆர்வலர்கள் அலசி ஆராய்ந்து பல்வேறு தகவல்களைத் தந்திருக்கிறார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

தங்கம் எதற்கு ? வேறு ஆபரணங்களே இல்லையா ? தங்கம் போட்டால் தான் ஆச்சா ?  என கேள்வி எழுப்பினால் என்ன பதில் கிடைக்கிறது ?

 “விற்றால் விலை கிடக்கும், அடகு வைக்கலாம்” என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் தங்க நகைகள் தான் வேண்டும் என்பதில் ஆழமான காரணம் இல்லை.

நகர்ப்புற இளம் வயதினர் தங்கத்தை தூர எறிந்து விட்டு ஃபாஷன் நகைகளுக்கு மாறி வெகு நாட்களாகிறது. பாஷன் நகைகள் நகரின் எல்லா கடைகளிலும் எல்லா நிறங்களிலும், எல்லா வடிவங்களிலும் கிடைக்கிறது. பலர் இதை ஒரு குடிசைத் தொழிலாகவே செய்தும் வருகின்றனர். சில நூறு ரூபாய்களுக்கே காதணி, வளையல், கழுத்துச் சங்கிலி என எல்லாவற்றையும் ஒரே ஸ்டைலில் வாங்கவும் முடியும் என்பது இந்த வகை நகைகளின் சிறப்பம்சம்.

பட்டுப் புடவைகளை எடுத்துப் பாருங்களேன். முன்பெல்லாம் பட்டுப் புடவை உடுத்தாத பெண்களை திருமண வீட்டில் பார்ப்பது அரிது. அரிது என்பதை விட குதிரைக் கொம்பு என்று கூட சொல்லலாம். காரணம் பட்டு கட்டாம போனா கவுரக் குறைச்சல் என நினைத்தது தான். இப்போதெல்லாம் நிலமை மாறிவிட்டது ஃபாஷன் டிசைனர்ஸ் சேலைகள் தான் கண்களில் அதிகமாய் தென்படுகின்றன.

பட்டுப் புடவை செம வெயிட்டுப்பா… அதையெல்லாம் தூக்கிட்டு நடக்க முடியாது” என இளம் பெண்கள் வெளிப்படையாகவே மறுக்கத் துவங்கிவிட்டார்கள்.

எது வசதியாக இருக்கிறதோ, எது மலிவாகக் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தும் போக்கு நிச்சயம் வரவேற்கத் தக்கது. காரணம் ஆடை, நகை எல்லாமே நமக்கு ஆனந்தம் தருவனவாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை வருத்துபவையாக இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து.

பிளாட்டினம், இரிடியம், பல்லாடியம், ருத்தேனியம், ரோடியம் மற்றும் ஓஸ்மியம் என பல்வேறு நகைகள் இருந்தாலும் அவையெல்லாம் தங்கத்தை விட அதிக விலை என்பதால் அவற்றையும் ஒதுக்கியே வைக்க வேண்டியிருக்கிறது.

சரி தங்கம் இல்லையேல் அப்படி என்னதான் வாங்கலாம் ?

பிளாட்டிஃப்னா கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? பிளாட்டிஃப்னா என்றால் ஸ்பானிஷ் மொழியில் செழுமைப்படுத்தப்பட்ட வெள்ளி என்பது பொருள். 92.5 விழுக்காடு வெள்ளியும், ஒரு விழுக்காடு பிளாட்டினமும், எட்டு விழுக்காடு மற்ற உலோகப் பொருட்களும் கலந்து உருவாகியிருக்கும் இந்த பிளாட்டிஃப்னா எனும் புது வகை உலோகம் 2005 ல் அறிமுகம் செய்யப்பட்டது.

பிளாட்டினத்தின் வனப்பும், வெள்ளியின் மினுமினுப்புமாய் கலந்து புதுவிதமான அழகுடன் திகழ்கிறது இந்த பிளாட்டிஃப்னா !

டைட்டானியம் எனும் உலோகம் வலுவான பொருள். பளிச்சென இல்லாமல் சாம்பல் நிறத்தில் பளபளப்பான நகைகளாய் வடிவம் எடுத்திருக்கிறது. மருத்துவக் குணாதிசயங்களும் உண்டு என சொல்லப்படும் இந்த டைட்டானியம் நகைகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன. நீண்ட காலம் பயன்படுத்தலாம் எனும் உத்தரவாதத்துடன் வருகின்றன இந்த டைட்டானியம் நகைகள்.

டங்ஸ்டன் கார்பைடு என்பது டைட்டானியத்தைப் போலவே ஆனால் சற்றே அடர்த்தி குறைந்த நிறத்தில் கிடைக்கும் உலோகம். கார்பனையும் டங்ஸ்டன் எனும் உலோகத்தையும் கலந்து உருவாகியிருக்கும் இந்த உலோகம் எந்த விதமான நகைகளையும் செய்வதற்கு உகந்ததாம். அமெரிக்காவில் தங்கம் பயன்படுத்தும் ஆண்களின் விடுக்காடு 40 விழுக்காடு சரிந்து டங்ஸ்டன் நகைகள் பயன்படுத்தும் ஆண்களின் விழுக்காடு 50 ஆக உயர்ந்திருக்கிறதாம்.

தங்க முலாம் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் இந்த தங்க முலாமும் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. வெயிலில் அலைந்தால் கறுத்துப் போகும் என்றதெல்லாம் பாட்டி காலத்து சங்கதிகள். தங்கத்தையும், முலாமையும் கைகளில் தந்தால் சத்தியமாய் கண்டுபிடிக்க முடியாது என அடித்துச் சொல்லும் தரத்தில் இன்றைக்கு முலாம் நகைகள் கிடைக்கின்றன.

குறைந்தபட்சம் 10 காரட் தங்கத்தில் .175 செண்டீமீட்டர் அல்லது அதற்கு மேல் எனுமளவில் தரமான தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் கிடைக்கின்றன.

முலாம் பூசும் முறையை வெப்பத்திலும், அழுத்தத்திலும் தங்க நகையைப்  போலவே செய்யும் முறையும் உண்டு. இதற்கு நகையின் மொத்த எடையில் இருபதில் ஒரு பங்கு தங்கம் இருந்தாக வேண்டும் என்பது நிபந்தனை. இதை தங்க நிரப்பி என்றும் சொல்வார்கள்.

தங்க முலாத்தில் இன்னொரு பிரபலமான வகை வெள்ளியின் மேல் தங்கம் பூசப்படுவது. தரத்துக்கும், எடைக்கும், அழகுக்கும் உத்தரவாதம் இது.

தங்க நிற நகைகள் இன்னொரு வகை. இது தங்க முலாம் பூசப்படுவதல்ல, வெறுமனே தங்கத்தின் நிறம் பூசப்படுவது. மிக மிக மலிவானது. தரமும் சற்று குறைவானதே. ஆனாலும் பார்வையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் புகுந்திருக்கிறது.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது துருப்பிடிக்காத எஃகு என்பது இன்னொரு நகை வகை. ஆண்களுக்கான வாட்ச், பிரேஸ்லெட் போன்றவற்றுக்கு சிறந்தது இது. பத்து விழுக்காடு குரோமியத்தையும், .15 விழுக்காடு கார்பனையும் இரும்புடன் சேர்ப்பதால் கிடைக்கும் இந்த உலோகம் விரும்பிய வடிவங்களில் வடித்தெடுக்கும் வலிமை கொண்டது.

தங்கம் விலை குறையாதா குறையாதா என புலம்புவதை விட மிக மிக முக்கியமான தேவைகள் இல்லாத பட்சத்தில் தங்கத்தை விட்டு விட்டு வேறு நகைகளை நோக்கி கவனத்தைச் செலுத்தலாமே ?
தங்கத்தை புறக்கணித்து வேறு நகைகளை வாங்க பெரும்பாலான் மக்கள் நினைப்பது மறைமுகமாக தங்கத்தின் விலை கட்டுக்குள் வருவதற்கும் காரணமாகிவிடும்.

மேலை நாடுகளெல்லாம் தேவையில்லாமல் தங்கத்தில் பணத்தைக் கொட்டுவதைக் குறைத்தாலும் இன்னும் பழைய நினைப்பிலேயே தங்கத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
வாழ்க்கை மாறிக்கொண்டிருக்கிறது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நாம் இந்த நகை விஷயத்திலும் அதை நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே

நன்றி : தமிழ் ஓசையில் வெளியான எனது கட்டுரை

ஸ்லம்டாக் மில்லியனர் – எனது பார்வையில்

slum

 

அங்கிங்கெனாதபடி எங்கும் பரபரப்பு விஷயமாகியிருக்கும் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தை இந்த வார இறுதியில் தான் பார்த்தேன்.
சேரியில் வளரும் ஒரு முஸ்லீம் சிறுவன் எப்படி கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கிறான் எனும் முடிச்சுடன் படம் ஆரம்பிக்கும் போது ஏதோ ஒர் அறிவு ஜீவியின் கதையைச் சொல்லப்போகிறார்கள் என சகஜமாக அமர்ந்தால் மனதுக்குள் ஓராயிரம் ஈட்டிகளைப் பாய்ச்சுவது போல காட்சிகளை நகர்த்துகிறார்கள் இயக்குனரும் கதாசிரியரும்.

எங்கே இருக்கிறாள் என்று தெரியாத தனது காதலி இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பாள் என்னும் ஒரு நம்பிக்கை இழையில் மில்லியனயர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கதையின் நாயகன், கால் செண்டர் நிறுவனத்தில் “டீ” பையன்.

விஷயம் எதுவும் தெரியாது அவனுக்கு. மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அவன் சந்தித்த மனிதர்கள், அல்லது கேட்ட தகவல்கள், பார்த்த அனுபவங்கள் இவற்றின் வெளிச்சமே. ஆனால் மிகவும் கூர்மையான அறிவு அவனுக்கு. எப்போது போன் போட்டால் மில்லியனர் நிகழ்ச்சியில் இடம் பிடிக்கலாம் என்பது உட்பட.

ஆயிரம் ரூபாய் நோட்டில் காந்தித் தாத்தா இருக்கிறார் என்பது தெரியாத சிறுவனுக்கு நூறு டாலர் நோட்டில் இருப்பது பெஞ்சமின் பிராங்கிளின் என்பது தெரிகிறது.

“வாய்மையே வெல்லும்” எனும் தாரக மந்திரம் தெரியாத சிறுவனுக்கு தர்ஷன் தோ கான்ஷயாம் பாடல் எழுதியது யார் என்பது தெரிகிறது.

கேட்டால் யாருக்குமே சந்தேகம் வருவது இயல்பு தான். நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் அனில் கபூருக்கும் சந்தேகம் வருகிறது.
தான் மட்டுமே ஜெயித்த “கோடீஸ்வரன்” நிகழ்ச்சியில் ஒரு சேரிப்பையன் ஜெயித்து விட்டால் அது தனக்கு அவமானம் என உள்ளுக்குள் நினைக்கும் ஒரு ஆணவத் திமிர் அனில் கபூருக்கு. சிறுவனுக்கு தவறான விடையைச் சொல்லிக் கொடுத்து விலக்க முயல்கிறார் ! நாயகனோ மாட்டவில்லை.

அனில் கபூருக்கு சந்தேகம் வலுக்க, கடைசி கேள்வி நாளை நேரடி ஒளிபரப்பு வருவதற்கு முன் காவல் துறையிடம் தள்ளப்படுகிறான் சிறுவன். அங்கே நமது காவல்துறையின் “கண்ணியமான” விசாரணையில் நொறுக்கப்பட்டு, வாயில் இரத்தம் வடிய, கடைசியில் நாயகன் கேள்விகளுக்கான விடை தனக்குத் தெரிந்தது எப்படி என்பதை விளக்குகிறான், வலிக்க வலிக்க.

எந்த ஒரு அதீத சக்தியோ தயாரிப்போ ஏதுமின்றி தனது வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளில் அனுபவ வெளிச்சத்தில் விடைகளைச் சொல்லியது காவல் துறைக்குத் தெரிய வருகிறது. அந்த ஒவ்வோர் விளக்கமும், நெஞ்சைப் பிசைந்து, உயிருக்குள் ஈட்டிகளைப் பாய்ச்சுகின்றன.

அதிலும் குறிப்பாக கவலை என்னவென்பதே அறியாத இரண்டு இஸ்லாமிய சேரிச் சிறுவர்கள் மத வெறித்தாக்குதலில் அமைதியான வாழ்க்கையை இழந்து சின்னா பின்னமாகி சிதறுண்டு திகைக்கும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன.

அழகான, திறமையான சிறுவர்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தினரையும், அவர்களின் உண்மை முகம் தெரியாமல் உற்சாகமாய் பாடிக் காட்டு சிறுவர்களையும் பார்க்கும் போது இனம் புரியாத கவலை மனதை ஆகிரமித்துக் கொள்கிறது.

பெஞ்சமின் பிராங்கிளின் தான் நூறு ரூபாய் நோட்டில் இருக்கிறார் என்பது நாயகனுக்குத் தெரியவரும் காட்சி கல் மனதோரையும் கரைக்கிறது

வெளிநாடுகளில் சென்று படங்கள் எடுத்தே பழக்கப் பட்ட நமக்கு, நமது வீட்டின் கொல்லைப் பகுதி எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்தத் திரைப்படம். அதிலும் சேரியில் பிறந்த ஒரு சிறுவனின் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் கொடூர நிஜம் மனதை அறைகிறது. எதிர்த்துப் பேசக் கூட எங்கும் அனுமதியற்ற அவர்களுடைய வாழ்க்கை நமது நிதானத்தின் மேல் கேள்வி எழுப்புகிறது.

நமது நிராகரிப்புகள், மத சகிப்புத் தன்மை இருப்பதால் பீற்றிக் கொள்ளும் நமது நாட்டில் நிகழும் வன் முறை விபரீதங்கள், மனித நேயம் இருக்கிறது என பறை சாற்றிக் கொள்ளும் நமது தெருக்களில் நிலவும் வலி மிகும் நிகழ்வுகள் என காட்சிகள் நம்மைப் பற்றி நமக்கு விளக்குகின்றன.

என் வீட்டுச் சாக்கடையை எப்படி இன்னொருவன் எடுத்து விளம்பரப் படுத்தலாம் எனும் முழக்கங்கள் ஆங்காங்கே எழுவதற்குக் காரணம், தெரிந்தோ தெரியாமலோ இந்த நிலமைக்கு தானும் ஓர் காரணம் எனும் குற்ற உணர்வாய் கூட இருக்கலாம்.

முஸ்லிம் தீவிரவாதியை விஜயகாந்த் சுழற்றிச் சுழற்றி அடிக்கும் போது சிரித்துக் கை தட்டுபவர்கள், ஓர் இஸ்லாமியச் சேரியை சூறையாடும் இந்துத்துவ வெறியைக் கைத்தட்டி வரவேற்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது தான்.

எனினும் சிறுவனின் முகத்தை காவலர் ஒருவர் கொடூரமாய் எட்டி உதைக்கும் காட்சியில் “பாருங்கள் இது தான் உண்மையான இந்தியா” என சிறுவன் சொல்ல, வெள்ளைக்கார தம்பதியர் “உண்மையான அமெரிக்காவை உனக்குக் காட்டுகிறேன்” என பணம் கொடுத்து அரவணைப்பது ரொம்பவே மிகைப்படுத்தப்பட்ட செயற்கை.

துரோகம் செய்யும் அண்ணன், தம்பியின் காதலியை அபகரிக்கும் அண்ணன், தாதாவிடம் பணி செய்யும் அண்ணன், கடைசியில் தம்பிக்காய் உயிர் விடும் அண்ணன் என ஒரு சராசரி பலவீனமான காட்சிப் படைப்பாய் வரும் அண்ணன் கதாபாத்திரம் மனதை தொடுகிறது.

சிறுவயதுக் காதல் என்பதெல்லாம் மனதுக்குள் நெருடலாய் இருந்தாலும், எதையும் கற்றுத் தெரியாத சிறுவர்களிடம் துளிர்விடும் ஆத்மார்த்தமான நேசமாய் இதைப் பார்ப்பதில் பிழையொன்றுமில்லை.

இசை ரஹ்மான் என்பதனாலேயே இந்தப் படம் பிரபலமாயிருக்கிறதோ எனும் சந்தேகம் உண்டு. ஆங்கிலம் பேசும் ஒரு இந்தியப் படமாகவே இந்தப் படம் மிளிர்ந்திருக்கிறது. ரஹ்மானின் இசை பிரமாதம் என்றாலும் இதை விட சிறப்பாகவே தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் மனதில் நிற்கும் திரைப்படங்களின் ஒன்று இந்த ஸ்லம்டாக் மில்லியனயர். அதன் முக்கியக் காரணம் நாயகனின் சிறுவயதுக் காட்சிகள்.

உரையாடல்கள்

art

தலைக்கு மேல்
விடாமல்
கத்திக் கொண்டிருந்ததாம்
பல்லி.
 
இரவில் சில நாட்களாய்
கனவுகளின்
தொந்தரவாம்.
 
யாரோ இரவில்
உலுக்கி எழுப்பும்
உணர்வும் வந்ததாம்.
 
ஊரில்
தாத்தா காலமான
தகவல் அறிந்ததும்
அடுக்கத் துவங்கினர்
ஒவ்வொருவராய்.
 
அப்போதும்
சத்தம் போட்டது பல்லி.

சிறுகதை : ஒரு குரலின் கதை

oru-kuralin-kathai
கிசுகிசுப்பாய் காதில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு விழித்தாள் மாலதி.

மிகவும் தெளிவாகக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் பயமும், பதட்டமும் சூழ்ந்து கொள்ள படுக்கையில் அமர்ந்து சுற்று முற்றும் உற்றுப் பார்த்தாள். யாரும் இல்லை. சில நாட்களாகவே இந்தக் குரல் மாலதியை நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.

சுற்றிலும் நிலவும் அமானுஷ்ய அமைதியைக் கிழித்துக் கொண்டு சுவரில் தொங்கிய கடிகாரம் டிக்..டிக் என தனது இதயத் துடிப்பை அறைக்கு அறிவித்துக் கொண்டிருந்தது. மாலதி நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி இரண்டு.

அது விக்கி காதலுடன் பரிசளித்த கடிகாரம். உள்ளுக்குள் இரண்டு இதயங்கள் ஒன்றுக்கொன்று கைகோர்த்துக் கொள்ள இரண்டு பறவைகள் இருபுறமும் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு அழகிய கடிகாரம். அந்தக் கடிகாரத்தைப் பார்த்தால் மாலதியின் மனதுக்குள் காட்சிகள் கவிதைகளாய் விரியும். ஆனால் இப்போது அந்தக் கடிகாரத்தின் சத்தமே ஒருவித திகிலை ஏற்படுத்துகிறது.

மெல்லிய இருட்டில் சுவரைத் துழாவி சுவிட்சைப் போட்டாள். அறுசுவை உணவைக் கண்ட ஏழையின் விழிகளைப் போல அறை சட்டென இருட்டைத் துரத்தி வெளிச்சத்துக்குள் வந்தது.

கதவு சரியாக மூடியிருக்கிறதா என ஒருமுறை இழுத்துப் பார்த்தாள். சன்னலருகே வந்து திரையை மெல்லமாய் விலக்கி வெளியே பார்த்தாள். எட்டாவது மாடியில் இருக்கிறோம் என்பதை வெளியே, விளக்குகளை அணைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா உணர்த்தியது.

கீழே வெகு தூரத்தில் சீராகக் கத்தரிக்கப்பட்ட புல்லும், வரிசையாய் நடப்பட்டு அளவாய் வெட்டப்பட்டிருந்த செடிகளும் அந்த சிறு சாலையில் நின்றிருந்த மின்விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சமாய் தெரிந்தன. மாலை நேரங்களில் உற்சாகத்தை ஊற்றித் தரும் அந்த தோட்டம், இப்போது ஏதோ மர்மங்களின் கூட்டம் போல தோன்றியது மாலதிக்கு. ஒரே இடம், ஒரே காட்சி ஆனாலும் சூழலைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடுகிறதே என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மாலதியின் இதயத் துடிப்பு இன்னும் சீரடையவில்லை. சுற்றிலும் பார்த்தாள். படுக்கை கசங்கிப் போய், தலையணை கட்டிலை விட்டு விழுந்து விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளிரிலும் நெற்றியில் மெலிதாய் வியர்ப்பதாய் உணர்ந்தாள் மாலதி.

விளக்கை அணைக்காமல் படுக்கையில் இரண்டு தலையணைகளை சாய்வாய் வைத்து சாய்ந்து அமர்ந்தாள்.

இப்போது இந்தியாவில் மணி என்ன ? மதியம் பன்னிரண்டரை தானே விக்கியிடம் பேசலாமா ? இந்த நேரத்தில் தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்பானோ ? மாலதியின் மனதுக்குள் கேள்விகள் உருண்டன.

நேற்று முந்தினமும் இப்படித் தான் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்தபோது விக்கி பதட்டமடைந்தான். அவன் எப்போதுமே இப்படித் தான். முதலில் பதட்டப்படுவான், பிறகு கோபப்படுவான், பிறகு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவான்.

அவனுடைய கோபத்தைக் கூட ரசிக்கலாம், ஆனால் அவன் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு தான். நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பான். தேவையில்லாமல் எதையாவது நினைக்காதே. நல்லா மெடிடேட் பண்ணு.  தூங்கும் போ சூடா ஒரு கப் பால் குடி .. இப்படி ஏதாவது இண்டர் நெட்ல படிக்கிறதை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

பேச்சு.. பேச்சு பேச்சு.. இது தான் விக்கியின் வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. அதுதான் மாலதி விக்கியின் மேல் காதல் வயப்படவும் காரணமாய் இருந்தது.

அலுவலகத்தின் காண்டீனில் தான் முதன் முதலில் விக்கியைப் பார்த்தாள். சட்டென மனதுக்குள் மின்னல் அடிக்கவுமில்லை, மழை பொழியவும் இல்லை. கவிஞர்கள் பேனா உதறி எழுதும் பரவசம் ஏதும் பற்றிக் கொள்ளவும் இல்லை.

“இவன் என்னோட பிரண்ட் விக்கி” என தோழி கல்பனா அறிமுகப் படுத்திய போது “ஹாய்.. “ என மெல்லமாய் குரல்களைப் பரிமாறிக் கொண்டதோடு சரி.

அதன் பின் தனியே காண்டீனுக்குள் வர நேர்ந்த ஒரு நாள் அவனாகவே வந்து எதிரே அமர்ந்தான்.

‘ஹாய்… நீங்க கல்பனாவோட பிரண்ட் தானே… சாரி… பர்காட் யவர் நேம்… “ இழுத்தான்.

“மாலதி” மாலதி மெதுவாய் புன்னகைத்தாள்.

“உட்காரலாமா ? இல்லே யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?” கேள்வி கேட்டு மாலதி பதில் சொல்லும் முன் அவனே முந்திக் கொண்டான்.

“கேட்காமலேயே வந்து உட்கார்ந்துட்டு, சாப்பிடவும் ஆரம்பிச்சுட்டு .. உட்காரலாமான்னு கேக்கறியே.. உட்காரக் கூடாதுன்னா எழுந்து போயிடவா போறே… “ அப்படித் தானே யோசிக்கிறீங்க. சிரித்தான் விக்கி.

“இல்லை இல்லை….”  மாலதி சிரிப்புடன் மறுத்தாள்.

“அப்புறம் ? நீங்க எந்த புராஜக்ட் ல இருக்கீங்க ?..” விக்கி ஆரம்பித்தான்.

“நான் நேஷனல் ஹெல்த் புராஜக்ட் ல டெஸ்டிங் டீம்ல இருக்கேன்..”

“ஓ.. போச்சுடா… நான் அதே புராஜக்ட் – ல டெவலப்மெண்ட் டீம் ல இருக்கேன். இனிமே நாம அடிக்கடி சண்டை போட வேண்டியது தான். வேற வழியே இல்லை”  விக்கி சரளமாய் பேசத் துவங்கினான்.

சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென எழுந்து “சாரி…. கொஞ்சம் வேலை இருக்கு..

அடுத்த முறை சந்திப்போமா மாதவி…” என புன்னகைத்தான்.

“நான் மாதவி இல்லை.. மாலதி..” மாலதி சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டே ஒரு சின்ன “சாரி…” சொல்லி விடைபெற்றான்.

அவன் விடை பெறவும் கல்பனா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மாலதி… பையன் உன்னையே சுத்தி சுத்தி வரான் போல..” கல்பனா கண்ணடித்தாள்.

“இல்லையே… எதேச்சையா சந்திச்சுகிட்டோம்…” மாலதி தோள் குலுக்கினாள்.

“எனக்கென்னவோ அப்படித் தெரியலடி.. மூச்சுக்கு முன்னூறு தரம் மாலதி மாலதி ன்னு உன்னைப் பத்தி கேட்டுக் கேட்டு என் உயிரை வாங்கறான்…” கல்பனா சொல்ல மாலதி விழிகளை விரித்தாள்.

“அடப்பாவி… ஒண்ணுமே தெரியாதது மாதிரி.. சாரி பேரு மறந்துட்டேன் என்றெல்லாம் கதையடித்தானே… வேண்டுமென்றே தான் விளையாடுகிறாயா ”  :மாலதி உள்ளுக்குள் சிரித்தாள்.

அந்தச் சந்திப்பு அடிக்கடி நடந்தது.

எதேச்சையாய் நடக்கும் சந்திப்புகள் கூட விக்கி திட்டமிட்டே நடத்துவதாக மாலதி நினைத்தாள்.

பேசிக்கொள்ளவும், கேட்டுக் கொள்ளவும் ஒரு நண்பன் இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது.

இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

நெருங்கிய நட்புகள் காதலில் முடிவதை இன்று நேற்றா பார்க்கிறோம் ? இருவருமே காதல் பறவைகளானார்கள்.

“உன்னோட வாழ்க்கை இலட்சியம் என்னன்னு நினைக்கிறே ? “ ஒரு மாலைப் பொழுதில் மாலதி கேட்டாள்

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் இப்போதைய இலட்சியம். அதன்பிறகு உள்ள இலட்சியங்களைச் சொன்னால் நீ தேவையில்லாமல் வெட்கப்படுவாய்..” கொக்கி வைத்துக் கண்ணடித்தான் விக்கி.

மாலதி இமைகளிலும் வெட்கப் பட்டாள்.

சரி.. உன்னோட இலட்சியம் என்ன ? விக்கி கேட்டான்.

அமெரிக்கா போணும்… நாம இரண்டு பேரும் கொஞ்ச வருஷம் அங்கே இருக்கணும். அது தான் என்னோட ஒரே இலட்சியம் – மாலதி சொல்ல விக்கி சிரித்தான்.

அடிப்பாவி.. இதையெல்லாம் ஒரு இலட்சியம்ன்னு சொல்றே ?

இல்ல விக்கி. இது என்னோட மனசுல ரொம்ப வருஷமா இருக்கிற ஒரு வெறி. நானும் அமெரிக்கா போயி வரணும். வந்து சிலர் கிட்டே நான் யாருன்னு காட்டவேண்டியிருக்கு.

- மாலதி சீரியஸாய் சொன்னாள். அவள் மனதுக்குள் ஏதோ நினைவுகள் ஓடுவதாய் விக்கி உணர்ந்து
சிரித்தான்.

சரி.. சரி… டென்ஷன் ஆகாதே. நீ கண்டிப்பா அமெரிக்கா போகலாம்.

நாட்களும் வாரங்களும் மாதங்களும் ஓடின…

இருவருடைய காதலும் வீடுகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணை பையன் வீட்டாருக்கும், கைநிறைய சம்பாதிக்கும் பையனை பெண் வீட்டாருக்கும் பிடித்துப் போய் விட்டது.

ஏதோ முன் ஜென்ம புண்ணியமாக இருக்கலாம். இருவருக்கும் சாதி வேற்றுமையோ, சாதக வேற்றுமையோ ஏதும் இல்லை. இல்லையேல் கம்ப்யூட்டர் காலம் கூட இவர்கள் காதலை கைகழுவியிருக்கக் கூடும்.

காதல் திருமணத்தில் முடிந்தது. திரைப்படங்களில் வரும் கடைசிக் காட்சி போல ஒரு “சுபம்” போடப்பட்டதாய் இரண்டு வீட்டு பெருசுகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“விக்கி… நாள் தள்ளிட்டே போகுது… நான் பிரக்னண்ட் ஆயிட்டேனா தெரியல” திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த ஒரு காலைப் பொழுதில் விக்கியின் காது கடித்தாள் அவள்.

“வாவ்… என்ன சொல்றே ? நிஜமாவா ? அதுக்குள்ள என்னை அப்பாவாக்கிட்டியா ? நீ அம்மாவாயிட்டியா ? அடிப்பாவி… “ விக்கி குறும்பு கலந்த ஆனந்தம் கொப்பளிக்க கண்விரித்தான்.

சரி.. வா… இன்னிக்கே ஆஸ்பிட்டல் போயி கன்ஃபம் பண்ணிக்கலாம். விக்கி பரபரத்தான்.

மக்கு.. இதுக்கெல்லாமா ஆஸ்பிட்டல் போவாங்க. மெடிக்கல் ஸ்டோர்ல போயி ஒரு பிரக்னன்ஸி டெஸ்டர் வாங்கிக்கலாம். அதை வெச்சே கண்டுபிடிச்சுடலாம். கன்ஃபம் ஆச்சுன்னா ஆஸ்பிட்டல் போகலாம். மாலதி
உற்சாகமும் வெட்கமும் கலந்து சொன்னாள்.

அதுவும் உறுதியாகி விட்டது.

விக்கிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. மாலதியும் சிலிர்த்தாள். இருவரும் கோயிலுக்கும், ஹோட்டலுக்கும், ஆஸ்பிட்டலுக்கும் கைகோர்த்து அலைந்தனர்.

இந்த ஆனந்தத்தின் எதிரே ஒரு சாத்தானாய் வந்து நின்றது அந்த அறிவிப்பு.

“மாலதி… உனக்கு அமெரிக்கா போக வாய்ப்பு வந்திருக்கு…” மானேஜர் கூப்பிட்டு சொன்னார்.

மாலதி உற்சாகத்தில் குதித்தாள். ஆஹா.. அமெரிக்காவா ? வாழ்க்கை இலட்சியமாயிற்றே…

“எப்போ போகணும் சார்.. எவ்ளோ நாளைக்கு ?” மாலதி பரபரப்பாய் கேட்டாள்.

“உடனே போகணும், நீ ஓ.க்கே சொன்னால் எல். 1 விசா பிராசஸ் பண்றேன். குறைந்த பட்சம் ஆறு மாதம் அங்கே இருக்க வேண்டும்.” அவர் சொல்லச் சொல்ல மாலதி உற்சாகமானாள்.

“கண்டிப்பா போறேன் சார்” மாலதி பரவசமானாள்.

அதே உற்சாகத்தை உடனடியாக விக்கியிடம் போனில் கொட்டியபோது விக்கிக்கு தேள் கொட்டியது போல இருந்தது.

“என்ன மாலதி ? அமெரிக்காவா ? யூ ஆர் பிரக்னண்ட்.. நீ இப்போ டிராவல் பண்ணக் கூடாது தெரியாதா ? ஏன் ஒத்துகிட்டே ?”  விக்கி பதட்டப்பட்டான்.

மாலதிக்கு சுருக்கென்றது. அப்போது தான், தான் கர்ப்பமாய் இருக்கிறோம் என்பதும், முதல் மூன்று மாதங்கள் விமானப் பயணம் செல்லக் கூடாது என்பதும் உறைத்தது.

“என்ன மாலதி… மானேஜர் கிட்டே முடியாதுன்னு சொல்லிடு. அடுத்த தடவை போகலாம்ன்னு சொல்லு…” விக்கி அவசரமாய் சொன்னான்.

மாலதி மறுமுனையில் அமைதியானாள். அவளுடைய மனம் குழம்பியது. முதன் முறையாக தான் கர்ப்பமடைந்திருப்பதற்காக வருந்தினாள். ஏதோ ஓர் தேவையற்ற சுமை தனது வயிற்றில் வந்து தங்கி
தனது வாழ்க்கை இலட்சியத்தை முடக்கி வைத்ததாக உணர்ந்தாள்.

அவளுடைய மனக்கண்ணில் தான் அமெரிக்கா செல்வதும், நண்பர்கள், உறவினர்கள் முன்னால் பெருமையடிப்பதும் என கனவுகள் மாறி மாறி வந்தன.

“மாலதி… மாலதி….” மறுமுனையில் விக்கி அழைத்துக் கொண்டிருந்தான்.

“மாலதி… வீட்டுக்கு வந்தப்புறம் பேசிக்கலாம். இப்போ அதைப்பற்றியெல்லாம் ஒண்ணும் நினைக்காதே. வீட்ல வந்து எல்லாத்தையும் பொறுமையா யோசிக்கலாம்” விக்கி சொல்ல மெதுவாய் உம் கொட்டினாள்
மாலதி.

ஆனால் அவளுக்குள் ஒரு உறுதி உருவாகியிருந்தது.

“இந்தக் கர்ப்பத்தைக் கலைத்தேயாக வேண்டும்”

***

“அம்மா… ஏம்மா என்னைக் கொன்னீங்க”

மீண்டும் கிசுகிசுப்பாய் காதில் குரல் ஒலிக்க மாலதி சட்டென விழித்தாள். அறை வெளிச்சத்தால் நிரம்பியிருந்தது. கடிகாரம் நான்கு மணி என்றது.

மாலதி அமெரிக்காவுக்கு வந்து இரண்டு வாரங்களாகின்றன. இந்த இரண்டு வாரங்களும் இப்படித்தான்.

குழந்தையின் குரல் ஒன்று அவளை உலுக்கி எழுப்புவதும், இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பதும் அவளது வாடிக்கையாகிவிட்டன.

இடையிடையே தூங்கிப் போனாலும் கனவில் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தனர். இவள் ஆசையாய
தூக்கினால் நழுவி கீழே விழுந்தனர். விழும் குழந்தைகளும் முடிவு காண முடியாத அகல பாதாளத்தை நோக்கி அலறிக்கொண்டு விழுந்து கொண்டே இருந்தனர்.

ஒரு கனவில் தலைவிரி கோலமாய் ஓர் தாய் தனக்கு பத்து ஆண்டுகளாய் குழந்தையே இல்லை எனவும், உன்னை மாதிரி கொலைகாரிக்குத் தான்  குழந்தை உருவாகுது எனக்கு ஆகலையே எனவும் அவளைப்
பிடித்து உலுக்கினாள்.

ஒரு கனவில் விக்கி குழந்தை ஒன்றுடன் ஆசையாய் விளையாடிக் கொண்டிருக்கையில் இவள் கத்தியுடன் வந்து குழந்தையைக் கொல்லப் போனாள்”

எல்லா கனவுகளும் திடுக்கிடலுடன் கூடிய விழிப்பையும், பின் தூக்கம் அற்ற இரவையுமே அவளுக்குக் கொடுத்தன.

கையை நீட்டி மெத்தையின் அடியில் வைத்திருந்த செல்போனை எடுத்தாள். விக்கி மறு முனையில் பதட்டமானான்.

“என்ன மாலதி.. தூங்கலையா.. இன்னிக்கும் கனவா ?”

“ஆமா விக்கி இந்த மன அழுத்தத்தை என்னால தாங்க முடியும்ன்னு தோணலை. உடனே எனக்கு இந்தியா வரணும். உங்க எல்லாரையும் பாக்கணும்… மாலதி விசும்பினாள் “

“கவலைப்படாதே மாலதி. நானும் அமெரிக்கா வர முயற்சி பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு. நடந்ததையே நினைச்சு சும்மா சும்மா குற்ற உணர்ச்சியை வளத்துக்காதே. நடந்தது நடந்துபோச்சு.. அதைப் பற்றி யோசிக்காதே. எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ” விக்கியின் சமாதானங்கள் மாலதியை சாந்தப்படுத்தவில்லை.

அவளுடைய மனதுக்குள் தான் ஒரு கொலைகாரி என்பது போன்ற சிந்தனை ஆழமாய் படிந்து விட்டிருந்தது. ஆனந்தமான ஒரு வாழ்க்கையை வெறும் பந்தாவுக்காக அழித்துவிட்டது போல
தோன்றியது அவளுக்கு.

எது முக்கியம் என்பதை வெகு தாமதமாய் உணர்வது போலவும், விக்கியையும், இரண்டு குடும்ப பெரியவர்களையும் தேவையற்ற கவலைக்குள் அமிழ்த்தியது போலவும் உணர்ந்தாள்.

“மாலதி… இதுல பயப்பட ஒண்ணும் இல்லை. நீ செய்ததுல தப்பு ஏதும் இல்லேன்னு நீ நம்பினாலே போதும். நீ இங்கே வந்தப்புறம் நாம ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து பேசலாம். எல்லாம்
சரியாயிடும்… “ மறுமுனையில் விக்கி பேசிக் கொண்டிருந்தான்.

மாலதியின் கண்கள் சன்னலையே வெறித்துக் கொண்டிருந்தன. மனதுக்குள் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்யனின் வேதாளமாய் குற்ற உணர்ச்சி தொங்கியது.

என்னை மன்னித்துவிடு விக்கி… இந்த குற்ற உணர்ச்சியுடன் இனிமேல் என்னால் வாழமுடியாது.

மனதுக்குள் மாலதி திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு செல்போனை அணைத்தாள்.

நேராகச் சென்று சன்னலைத் திறந்தாள்.

தூரத்தில் எந்தத் துயரத்தையும் முதலில் பார்த்துவிடும் முனைப்புடன் சூரியன் சிவப்பாய் எழுந்தான்.

0

Seven Pounds : விமர்சனம்

ws

சிறிது நாட்களுக்கு முன் பார்த்த மனதை ரொம்பவே நெகிழச் செய்த The Pursuit Of Happyness  படத்தை மனதில் வைத்துக் கொண்டு கடந்த வார இறுதியில் செவன் பவுண்ட்ஸ் படத்தைப் பார்த்தது எவ்வளவு பெரிய தவறு என்பது இரண்டு மணிநேரங்கள் படத்தைப் பார்த்தபின் தான் புரிந்தது.

ஒரே இயக்குனர், ஒரே நடிகர் என்பதற்காக படமும் அதே தரத்துடன் இருக்காது என்பது நம்ம ஊர் பி.வாசு முதல் ஹாலிவுட் பட இயக்குனர்  Gabriele Muccino  வரை செல்லுபடியாகிறது.

“நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என அவசர போலீசுக்கு அழைப்பு விடும் திடுக் நிமிடத்துடன் ஆரம்பிக்கும் படம், முதல் அரை மணி நேரம் கதாநாயகன் என்ன செய்கிறான், எங்கே போகிறான் என்பது புரியாத புதிராக குழப்பமாக விரிகிறது.

பல இடங்களில் இதென்ன இப்போ நடப்பதா, முன்னரே நடந்ததா என்பதே கூட புரியவில்லை. ஏதோ மிகப்பெரிய சஸ்பென்ஸ் உள்ளுக்குள் உறைந்திருக்கிறது என்பதை உணர்ந்து உற்று உற்றுப் படத்தைப் பார்த்ததில் கண் வலி தான் மிச்சம்.

தனது வாழ்வில் ஏற்பட்ட ஒரு சோகத்தினால் மனம் உடைந்து போன வில் ஸ்மித், நல்லவர்களாய் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்கிறார் என்பதே கதை.

எப்படி உதவி செய்கிறார் என்பது திடுக். தனது உடல் உறுப்புகளையே வழங்குகிறார் நாயகன். கடைசியில் தான் தற்கொலை செய்து கொண்டு தனது இதயத்தை இதய நோயாளியான ஒரு பெண்ணுக்கு வழங்குகிறார்.

நம்ம எஸ் ஏ சந்திரசேகர் கூட இப்படி ஏதோ ஒண்ணு எடுத்திருக்காரேன்னு யோசிக்கிறீங்களா ? படம் முழுக்க அழுகாச்சி தமிழ் சீரியலுக்கு சவால் விடும் காட்சிகள்.

தொட்டால் வெடித்து விடும் அழுகையுடன் படம் முழுக்க வில் ஸ்மித்தைப் பார்ப்பதே சகிக்கவில்லை. முழுக்க முழுக்க அழுகாச்சி முகத்துடன் வருவதால் மனதில் எழவேண்டிய ஒரு கனமான உணர்வுக்குப் பதில் சலிப்பே மிஞ்சுகிறது.

ஏன் ஏழுபேருக்கு உதவ வேண்டும், ஏழு என்பதை மதப் பின்னணியில் தேர்ந்தெடுத்தாரா ?எப்படி அந்த ஏழுபேரும் கவனத்துக்குரியவர்களாகிறார்கள் ? , அவர்கள் நல்லவர்கள் தானா என ஏன் கதாநாயகன் சோதிக்கிறான்  ? என்பதெல்லாம் விடை பெறாத கேள்விகள். 

காதலன் தன் காதலியை விபத்தில் இழப்பது கூட, காரோட்டும் போது பிளாக் பெர்ரியை நோண்டும் கதாநாயகன் மீது கோபத்தை ஏற்படுத்துமளவுக்கு சோகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே நிஜம்.

பார்வையிழந்தவர் நல்லவரா என சோதிக்க சகட்டு மேனிக்குத் திட்டும் கதாநாயகன், தன்னை உயிராய் நேசிக்கும் புதுக் காதலிக்காக இதயத்தையும் கூடவே வலியையும் கொடுத்துச் செல்லும் கதாநாயகன், தன்மீது அதீத பாசம் வைத்திருக்கும் சகோதரனை மட்டும் கண்டுகொள்ளாத கதாநாயகன் என ஒரு வரையறையற்ற பிம்பம் கதாநாயகனைச் சுற்றி விழுகிறது.

மிக அதிகமாய் எதிர்பார்க்க வைக்கும் முதல் பாதிக் காட்சிகள், அதை நிவர்த்தி செய்ய வலுவற்ற அழுத்தமற்ற பின்னணி என படம் அல்லாடுகிறது. அதனால் தான் கடைசியில் கதாநாயகன் தற்கொலை செய்யும் போதும் … ம்ஹூம்….

கடவுளைக் கழுவி வைத்தது போல ஒரு கதாநாயகன் படம் முழுக்க ஒரே செண்டிமெண்ட் மழை.

சேரனை வைத்து யாரேனும் தமிழில் இயக்கலாம்.

கண்களில் வழியும் காதல்…

eye

உன்
கண்களில் தொற்றிக் கிடக்கும்
காதலைச் சேகரிக்க
எத்தனிக்கிறேன்
நீயோ
மின்சார இழைகளை
இமைகளில் தேக்கி
தத்தளிக்க வைக்கிறாய்.

eye

நீ
இமைக்கும் அழகைக்
காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன
என்
இமைகள்.

eye

உன்
கண்கள்
ஆழ் மலர்க் கேணிகள்.
பறித்ததை விட
அதிகமாய்
பறிகொடுத்திருக்கிறேன்.

eye

உன்
முதல் பார்வை
என்னைத் தழுவியபோது
உள்ளுக்குள்
உடைந்து நழுவிய
மெளனக் கிண்ணங்களுக்கு
நான்
காதலென்று பெயரிட்டேன்.

eye

நீ  கொடுத்த
பூக்கள்,
பரிசுகள்,
அட்டைகள்
என எல்லாம் மறந்து விட்டன.

ஆனாலும்
ஈரமாய் இருக்கிறது
கடைசியாய்
உள்ளங்கையில் நீ வடித்த
கண்ணீர்த் துளி.

eye

காதல்
உலகத்தின் அளவென்றால்
மிச்ச அளவை
எங்கே வைப்பதடி ?
பேசாமல்
உன் கண் அளவு என்று சொல்
இன்னும்
அந்தக் கிரகத்தின்
தன்மை அறியவில்லை விஞ்ஞானம்.

eye

என்
சன்னலுக்கு வெளியே
பறந்து திரியும்
புள்ளினங்களை விட
என்
கண்களுக்கு உள்ளே
பறந்து திரியும்
உன் பட்டாம்பூச்சிப்
புன்னகைக்கே
வண்ணச் சிறகுகள் ஏராளம்.

eye

நீ
பிரிகிறேன் என்று சொன்னபோது
எனக்குள்
ஒரு கோடி
சர்ப்பங்கள் படமெடுத்துப்
பாய்ந்தன.

பிரிவதாய் சொன்னதாலல்ல
உன்
விழிகளில் வழிந்த
சில துளிக் காதலுக்காக.

0

வரமானது…காதல் சுரமானது !

dsc_0200_001

காதல்…

வேர்களுக்கு
விளம்பரம் செய்யாமல்
வயதுச் செடிகள் பூக்கும்
வாசனைப் பூக்கள்

காதலின் சிறகுகள்
கனவுகளில் வீணை செய்து
கொலுசுச் சத்தத்தில்
இசை பயிலத் துவங்கும்..

மௌனம் உடைபட மறுத்து
உதடுகள் உண்மையை மறைத்து
தெரிந்தே வார்த்தைகள்
தற்கொலை செய்யும்

காதலுக்கும் கவிதைக்கும்
கற்காலப் பழக்கம்
காதல் கவிதையானதால்
காதலிப்பவர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்.

கடற்கரை மணலில்
பிடிமணல் அள்ளி
ஒன்றொன்றாய் எண்ணிப் பார்க்கும்
பொறுமை…

சிதறிய விண்மீன்கள்
விழித்திருக்கும் வரை
வானக் காட்டுக்குள் வேட்டையாடும்
வெறுமை…

எல்லாம் காதலின் பரிமானங்கள்.

கரைகளில் மோதி மோதி
நுரைகளாய் தங்கும் காதல்
நிமிடங்களில் கரைவதுண்டு

அலைகளாயும் பல காதல்
அவதாரம் எடுப்பதுண்டு
கரைகளோடு கொண்ட காதலை
கண நேரமும் மறுக்காமல்….

மூச்சுக்காற்றின் வெப்பத்தில்
மின்னல் தீண்டும் பார்வையில்
பனிமழை சொரியும் உரசலில்,

மோகத்தின்
முதல் உரை உள்வாங்கி தான்
காதலும் தன்
முகவரி எழுதுகிறது

மோகம் வடிந்து நேசம் தங்கும் காதல்
வானத்தை வசமாக்கும்.
மோகத்தின் மிச்சங்கள் மட்டுமே
காதலின் எச்சங்களாகும் போதோ
கலைகின்ற மேகங்களாய்
காதலும் உருமாறும்.

காதல்
இருக்கும் வரை இறுக்கம்.
இறுக்கம் தளர்ந்தால்
அது
கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கும்.

தனிமைகள் மட்டும் தேடும் நேசமும்
தலையணைகளில் மட்டும்
தஞ்சம் கொள்ளும் நேசமும்,
காதல் போர்வை சுற்றிய
மோகப் பார்வைகளும்,
காலை வானம் சிவந்தால்
கழுவப்பட்டுவிடும்.

எரிகல் விழுந்த தேசமாய்
சில ரணங்கள்
பள்ளங்களை உள்ளங்களில்
விட்டுச் செல்லும்.

விலகிச் சென்று
வேறு கூடு தேடிய பறவைகள்
சிறகுகள் உதிர
உதிரம் சிதறக் கதறும்
ஒற்றைக் கண்ணீர்ப்பறவையை
திரும்பிப் பார்ப்பதில்லை…

இலவசக் காயங்களின்
வினியோகஸ்தலம்
இந்த காதல் கூடங்கள்..

காதல்,
சூதாட்டம்,
இரண்டிலும்
எதுவும் நிகழலாம்
எதிர்பார்ப்புகளின் எதிர்திசையில்.

காதலர் தினம் – புதிர்களின் புகலிடம்

love
காதலர் தினம் காதலைப் புனிதப்படுத்துகிறது, உள்ளத்துக்குள் ஒளிந்து கிடக்கும் நேசத்தைப் பிரதிபலிக்க நாள்காட்டியில் தங்கத் தகடுகளால் நிரப்பப்பட்டிருக்கும் தினமே காதலர் தினம் என காதலர்கள் குதூகலிக்கின்றனர்.

காதலர் தினம் கலாச்சாரச் சீரழிவின் உச்சம். இது காதலைப் புனிதப்படுத்தி வந்த தேசத்தின் வேர்களில் விழுந்திருந்த போலித்தனமான மேலை நாட்டுக் கலாச்சார விஷம் என எதிர்ப்பாளர்கள் எதிர்க்கின்றனர்.

உணவகங்களில் உணவருந்தச் சென்றால் கூட பிப்ரவரி பதினான்காம் தியதி உங்களுக்குக் கிடைக்கும் “வேலண்டைன் ஸ்பெஷல் சிக்கனும், மட்டனும்”.

மின்னஞ்சல்களும், எஸ்.எம்.எஸ் களும் காதலர்களின் காதல் அலைவரிசையாய் மாறியிருக்கும் இன்றைய சூழலிலும் காதலர் தினத்தில் மட்டும் வாழ்த்து அட்டைகளையும், கூடவே ரோஜாப்பூக்களையும் வழங்க இளசுகள் பிரியப்படுகின்றனர்.

உண்மையில் காதலர் தினம் காதலர்களுக்கானதா ? அல்லது நமது கலாச்சாரத்தைச் சீரழிக்க வேண்டும் என யாரேனும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்களா ? இன்னும் கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால் இதன் பின்னணியில் உறைந்து கிடக்கும் உண்மைகள் முகம் காட்டுகின்றன. 

வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக முதலாளிகளால் உருவாக்கப்பட்டவை அல்லது பிரபலப் படுத்தப் பட்டவை தான் இந்த ‘தினங்கள்’ என்பதே முதன்மையான உண்மை. அதற்காகவே இவர்கள் ஊடகங்களைக் கவர்ச்சிகரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர் தினம், மனைவியர் தினம், எதிர் வீட்டுக்காரன் தினம் என்று ஏதேதோ தினங்களை வர்த்தக வளர்ச்சிக்காக உருவாக்கி அந்தந்த தினங்களில் அந்தந்த நபர்களுக்குப் பரிசுகள் வழங்காவிடில் அது சாவான பாவம் போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் வழியாக பரப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு அதன் வெப்பத்தில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திர சாலிகள் அவர்கள்.

முதலாளிகளின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத மக்கள் தங்கள் கரன்சிகளை வாழ்த்து அட்டைகளிலும், பூங்கொத்துகளிலும், சாக்லேட் பாக்கெட்களிலும் செலவிடுகையில் சத்தமில்லாமல் மில்லியன் கணக்கில் லாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள்.

நூறு ரூபாய் மதிப்புள்ள சாக்லேட்களை இதய வடிவப் பெட்டியில் வைத்து ஒரு சிவப்பு நிற ரிப்பனைக் கட்டி காதலர் தின சிறப்புச் சாக்லேட் எனும் பெயரில் விற்கின்றன நவீனக் கடைகள். இவற்றின் ஆயிரம் ரூபாய்க்கும் மேலே !

பழைய சில காதல் பாடல்களை கவர்ச்சிகரமான காதலர் தின ஸ்பெஷல் சிடி என கடைகளில் விற்கின்றனர் நான்கு மடங்கு அதிக விலையில்.
நகைக்கடை, வைரக்கடை, துணிக்கடைகள் எல்லாம் கேட்கவே வேண்டாம். இந்த வைர மாலையைப் போட்டால் காதல் வளரும் என்றெல்லாம் விளம்பரங்கள் சிலிர்க்க வைக்கும்.

என்னென்ன உத்திகளை உங்களால் கற்பனை செய்ய முடியுமோ அத்தனை யுத்திகளும் காதலர் தினத்தில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. நோக்கம் வியாபாரம், வியாபாரம், வியாபாரம் !

காதலர் தினம் என்னும் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய், ஏதேனும் அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள்.

நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது ஆனால் முதலாளிகள் நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம். இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் பளீரென புலப்படும்.

அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 210 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவையெல்லாம் காதலர் தினம் எத்தனை ஆழமாய் வேர் விட்டு விரிவாய் கிளை பரப்பியிருக்கின்றன என்பதற்கான  “ஒரு சோறு பதம்” மட்டுமே.

காதலர் தினத்தன்று தனக்கு ஒரு காதலனோ காதலியோ இல்லை என்று மற்றவர்கள் அறிந்து கொள்வதே அவமானம் என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். எப்படியாவது ஒரு இணையைப் பிடித்து வாழ்த்துத் தெரிவிப்பதே மரியாதைக்குரியது எனும் எண்ணத்தை ஊக்குவிக்கவே ஊடகங்களும், காதலர் தினம் போன்ற விழாக்களும் உதவுகின்றன.

காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கும் இன்று பரவி வருகிறது. தாய்லாந்தில் காதலர் தினத்தன்று திருமணப் பதிவு அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. காதலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடாவிடில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.

நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல், மெய்யின் கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது. இன்றைய திரைப்படங்கள் சித்தரிக்கும் கவர்ச்சிப் பணியே காதலென்று கற்றுக் கொள்ளும் இளவயதினர் ஆழமான திருமண உறவுகளின் மீதான கலாச்சார வேர்களை கத்தரிக்கவும் துணிந்து விடுவது தான் வேதனை.

டிஸ்கோதேக், இரவு உணவக விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு குத்தகைக்கு விட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் காளான்கள் போல சடுதியில் தோன்றி மறைவனவாக உள்ளன என்பதும் காதலை இளைய சமூகத்தினர் இன்னும் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.
“பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து …. “ கம்ப ராமாயணத்தில் கம்பரின் கவித்துவம் கவியும் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகூட்டுவதாய் விளங்குகிறது. காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது.

அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் மலர்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

தனக்குக் காதலி இருப்பதைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவும், பழைய காதலர்கள் தங்கள் உடைந்து போன காதலை நினைத்து டாஸ்மார்க் கடைகளில் தாடி தடவவும், மற்றவர்கள் ஐயோ நமக்கு யாரும் இல்லையே என நினைத்து தனிமையில் புலம்பவும் ஒரு நாள் தேவை தானா என்பதை இளைஞர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

வாழ்த்து அட்டைகள், பரிசுகள், பூங்கொத்துகள் என வர்த்தக வளாகத்தைச் சூடுபிடிக்கச் செய்யும் இந்த காதலர் தினம் உண்மையில் எதைத் தான் தருகிறது ?. காதலை வெளிப்படுத்தவும் கொண்டாடவும் 364 நாட்கள் வலுவற்றவையாகி ஒரே ஒரு நாள் பட்டுமே பலமுடையதாகிறதா ? காதல் என்பது மைல் கல்லா ? பயணமா ? சிந்திப்பவர்கள் கண்டடைகிறார்கள் எது தேவையானது என்பதை !

எனது நூலுக்கு விருது

xavier11

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்த எனது “இயேசு என்றொரு மனிதர் இருந்தார் “ எனும் நூலை கடந்த ஆண்டின் சிறந்த நூலாக “தென்னிந்தியத் திருச்சபையின் கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் தமிழிசைப்பள்ளி அமைப்பினர் “ தேர்வு செய்து விருது வழங்கினார்கள்.

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை அன்றைய சமூக அரசியல் கலாச்சாரப் பின்னணியில் விவிலிய மொழிக்கு வெளியே விரிவாய் சொன்ன நூல் இது என பல்வேறு தரப்பினரும் மனம் திறந்து பாராட்டியது மனதுக்கு நிறைவளித்தது.

இந்த நூலை எழுதுவதும் ஒரு சவாலான விஷயமாகவே இருந்தது. பைபிளில் இயேசுவின் வாழ்க்கையை நான்கு நற்செய்தியாளர்கள் எழுதியுள்ளனர். ஆனால் அவற்றில் வெளிப்படையான ஆண்டுக் குறிப்புகள் ஏதும் இல்லை.

இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு இவற்றைத் தவிர்த்து நற்செய்தியாளர்கள் பல்வேறு செய்திகளை அவர்களுடைய விருப்பப்படி சொல்கின்றனர்.  இந்த செய்திகளின் தொகுப்பில் எந்த வரிசைப்படி எவை வருகிறது என்பதை கண்டுபிடிக்கவே பெரும்பாலான நேரம் செலவானது. பல்வேறு இறையியல் நண்பர்கள், நூல்கள், ஆன்மீக வழிகாட்டிகள் என பலருடைய உதவியே இந்த நூலின் செய்திகளை கால வரிசைப்படி தொகுக்க பெரிதும் உதவியது.

இந்த நூல், இயேசுவின் வாழ்க்கையைத் தெரிந்த பலருக்கும் கூட சில புதிய தகவல்களைச் சொன்னது எனுமளவில் நிறைவு தந்தது.

நூலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மனதுக்கு ஆனந்தமளிக்கிறது. இந்த நேரத்தில் நூலை வெளியிட்ட கிழக்குப் பதிப்பகத்துக்கும், நண்பர்கள் பா.ரா, பத்ரி, சொக்கன் ஆகியோருக்கும், உதவிய மற்ற அனைத்து நபர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்வது அதை விட அதிகமாய் ஆனந்தமளிக்கிறது.

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers