பறவை : அறிவியல் புனைக் கதை

bird2a

 

 

 

 

 

 

 

 

 

 

“சார். என்னோட கார்ல ஒரு பறவை அடிபட்டு செத்துப் போச்சு சார்” சென்னை அறிவியல் ஆராய்சிக் கூடத்துக்கு வந்த தொலைபேசியைக் கேட்டு சிரித்தார் வெங்கட்ராமன்.

காலையிலேயே மனுஷனை டென்ஷன் பண்ண வந்திடுவாங்க ஏதாச்சும் ராங் கால் பார்ட்டிங்க என்று உள்ளுக்குள் பொருமியவர் வார்த்தைகளிலும் அதைக் காட்டினார்.

“சார்… நீங்க போன் பண்ணியிருக்கிறது அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்துக்கு. பறவை செத்துப் போனதையெல்லாம் எங்க கிட்டே சொல்ல வேண்டாம் சார். புளூ கிராஸ் க்கு போன்பண்ணுங்க. நான்வெஜ் சாப்பிடுவீங்கன்னா கரம் மசாலா போட்டு குழம்பு வைங்க. இல்லேன்னா நல்லடக்கம் பண்ணிடுங்க.”

சொல்லிக் கொண்டே எரிச்சலுடன் வைக்கப் போனவரை இழுத்துப் பிடித்தது மறுமுனையில் பேசிய வினோத்தின் குரல்.

“சார்… பிளீஸ் வைக்காதீங்க… எனக்குப் பயமா இருக்கு”

“பயமா இருக்கா ? ” வெங்கட்ராமன் வைக்கப்போன போனை மீண்டும் பற்றினார்.

“ஆமா சார். உண்மையிலே அந்தப் பறவை என் கார்ல அடிபட்டதும் சட்டுன்னு போய் பறவையைப் பார்த்தேன் சார். அப்படி ஒரு பறவையை நான் பார்த்ததே இல்லை..”

இப்போது வெங்கட்ராமனை சுவாரஸ்யம் பற்றிக் கொண்டது. “பாத்ததேயில்லைன்னா ? புது விதமான பறவையா ?”

“ஆமா சார். அடிபட்டுக் கிடந்த பறவையைத் தூக்கிப் பாத்தா அதோட வயிற்றுக்குள்ளேயிருந்து ஒரு சத்தம் வந்துட்டே இருந்துது…” வினோத் சொல்லி நிறுத்த வெங்கட்ராமனுக்கு இப்போது இருப்புக் கொள்ளவில்லை.

“சத்தம்ன்னா….?”

“ஏதோ ரேடியோ இரைச்சல் மாதிரி சத்தம் சார். பறவையை உற்றுப் பாத்தப்போ தான் தெரிஞ்சுது அது பறவை இல்ல சார்.. ஒரு ரோபோ ! ” வினோத் சொல்ல வெங்கட்ராமன் இருக்கையை விட்டு எழும்பினார்.

“வாட்…. சின்ன ரோபோவா ? பறவை வடிவிலா ? எங்கே இருக்கு இப்போ ? நீங்க எங்கேயிருந்து பேசறீங்க ? ” வெங்கட்ராமன் பரபரத்தார்.

தகவல் காட்டுத் தீ போல ஆராய்ச்சிக் கூடத்தின் இருக்கைகளுக்கெல்லாம் பரவியது. செய்தியைக் கேட்டு எல்லோரும் ஒட்டு மொத்தமாய் வியந்தார்கள்.

பறவை வடிவில் ஒரு ரோபோவா ? 

இந்தப் பறவை எங்கிருந்து வந்திருக்கக் கூடும் ? பாகிஸ்தான் ? சீனா ? ஏன் வந்திருக்க வேண்டும் ? நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக வந்திருக்கிறதா ?

இந்த ஒரு பறவை தானா இன்னும் நிறைய பறவைகள் நாட்டுக்குள் பறந்து திரிகின்றனவா ? இவைகளின் நோக்கம் என்ன ? ராணுவ தளவாடங்களைப் படமெடுத்து அண்டை நாடுகளுக்கு அனுப்புவதா ?

அறைகள் கேள்விகளால் நிரம்பிக் கொண்டிருந்தபோது பறவை ஆராய்ச்சிக் கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது. தகவல் கிடைத்த வல்லுனர்கள் சென்னை ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைந்தனர்.

சட்டென பார்த்தால் புறாவைப் போன்ற தோற்றம். ஒரு இயந்திரப் பறவை என நம்ப முடியாதபடி இறக்கைகள், அலகு, வால் எல்லாமே அச்சு அசலாய் உண்மையான பறவை போல.

அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் முதன்மை அறையில் கிடத்தப்பட்டது பறவை. சாத்தப்பட்ட கண்ணாடிக் கூண்டுகளுக்கு உள்ளே விஞ்ஞானிகளின் புருவம் உயர்வதும், வாய் திறந்து மூடுவதும் என ஏதோ வியப்பு ஓடிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.

சில மணி நேரங்களுக்குப் பின் டவுன்ஹால் உரையாற்றினார் கூடத்தின் தலைவர் மதன் கபூர்.

இன்றைக்கு நமது பார்வைக்கு வந்திருக்கும் பறவை ஒரு விஞ்ஞான ஆச்சரியம். பறவையைப் போல இயல்பாகவே பறக்கக்கூடிய இந்தப் பறவை ஏதோ இயக்கக் கோளாறு காரணமாக பழுதடைந்து வீழ்ந்திருக்கிறது.

இதன் கண்கள் மிக மிக சக்திவாய்ந்த காமராக்கள். இவை இந்த படத்தை எங்கே அனுப்புகின்றன என்பது மர்மமாக இருக்கிறது. இந்தப் பறவையினுள்ளே இருக்கக் கூடிய எல்லா கருவிகளுமே மிக மிகப் புதியதாக உள்ளன. நாம் இதுவரை தெரிந்து கொள்ளாத நுட்பம் இதில் தெரிகிறது. மிகவும் நுண்ணிய, மெல்லிய அளவில் இருப்பதால் முழுமையாய் ஏதும் இன்னும் கண்டறியப்படவில்லை.

இது ஏதோ அயல் நாடு நமது நாட்டின் மீது பறவைகளை ஏவி நமது எல்லைகளைப் படம்பிடிக்கவும், நமது ராணுவ நிலையங்கள், பாதுகாப்பு பகுதிகள் அனைத்தையும் படம்பிடிக்கவும், அணு நிலையங்களை நோட்டம் விடவும் அனுப்பியிருப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.

இதை பாகிஸ்தான் செய்திருக்க வாய்ப்பில்லை. வெறுமனே அடி, வெட்டு, விதண்டாவாதாப் பேச்சு, தீவிரவாதம் இவற்றை மட்டுமே அறிந்திருக்கும் பாகிஸ்தான், இத்தனை உயரிய தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.

எனில் இது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடு செய்து வரும் மறைமுக வேலையாகவே கருத வேண்டியிருக்கிறது. இதை உலக சபையின் பார்வைக்குக் கொண்டு செல்லும் படி இந்திய அரசை இந்த ஆராய்சிக்கழகம் கேட்டுக் கொள்ளும். இந்த பறவையை மேலும் ஆய்வு செய்ய அகில இந்திய அளவிலான குழு அமைக்கப்படும்.

நாட்டின் பாதுகாப்பான இடங்களில் இத்தகைய பறவைகள் உலவுகின்றனவா என்பதைக் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கவேண்டியதும், அதற்காக சிறப்புக் கருவிகள் ஏற்படுத்த வேண்டியதும் அவசியம் எனவும் இந்த அமைப்பு கருதுகிறது.

மதன் கபூர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது வெங்கட்ராமனின் தொலைபேசி ஒலித்தது.

“சார்… ஒரு கிரிக்கட் பால் போல ஒண்ணு இங்கே கிடந்துது சார். நான் அதை எடுக்கப் போனதும் பறந்து போச்சு…” 

அதே நேரம்

மயூபா கிரகத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில் மக்கள் உற்சாகமாய் இருந்தனர்.

பூமி எனும் கிரகத்துக்கு நாம் அனுப்பிய விண்வெளிக் கலங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் வியப்பூட்டுகின்றன. அங்கும் ஓரளவு விஞ்ஞான வளர்ச்சியடைந்த பகுதிகள் இருக்கின்றன.

மயூபா கிரகத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போல இருக்கிறது பூமி எனும் கிரகம். ஏராளம் மரங்கள், தண்ணீர், மிக சுத்தமான காற்று என வியப்பூட்டும் அருமையான கிரகம்.

மயூபா இயந்திரங்களின் பூமியாகிவிட்டது. எனவே பூமியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நமது விண்கலப் பறவைகள், பந்துகள், மண்புழுக்கள், வண்டுகள் எல்லாம் அனுப்பிய தகவல்கள் சுவாரஸ்யமானவை. பூமியின் எல்லா பாகங்களிலும் இருக்கும் நாம் அனுப்பிய பத்து இலட்சம் கருவிகள் நமக்கு துல்லியமான தகவல்களைத் தந்து கொண்டே இருக்கின்றன.

சொல்லிக் கொண்டிருந்தவன் மனிதனைப் போலவே இருந்தான். அறிவியல் படங்கள் காண்பிப்பது போல அகோரமாய் இருக்கவில்லை. இரண்டு கைகள் இரண்டு கால்கள். சரியான அளவிலான தலை என இருந்தவன் திரும்பிய போது தெரிந்தது சின்னதாய் ஒரு வால்.

 ”பூமியை அபகரிப்பது எளிதா ?”

 ”பூமியின் மீது போர் தொடுத்தால் தான் பூமியை தன் வசப்படுத்த முடியும்.” 

“பூமியின் பலத்தை அறியாமல் அதன் மீது எப்படிப் போர் தொடுப்பது ?” 

“இப்போது நாம் அனுப்பியிருக்கும் பத்து இலட்சம் கருவிகளையும் வெடிக்க வைத்தாலே பூமியை முழுமையாய் அழித்துவிடலாம். ஆனால்…”

“ஆனால்.. ?”

“நமக்குத் தேவை வெறும் பொட்டல் காடல்ல. முழுமையான பூமியும், அதிலுள்ள மனிதர்களும். நாம் அவர்களைப் போலவே இருப்பதால் நாமும் அவர்களோடு அவர்களாக உலவ முடியும். இதுவரை நாம் கண்டறிந்த உயிரினங்கள் வாழும் நாற்பத்து எட்டு கிரகங்களிலும், இந்த கிரகத்து உயிரினம் மட்டுமே நம்மைப் போல் இருக்கிறது”

“இருந்தாலும் பூமியிலுள்ள உயிரிகளுக்கு வால் இல்லையே…”

“வால் இல்லாதது கொஞ்சம் அவலட்சணம் தான் ! இருந்தாலும் பரவாயில்லை. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர்களும் நம்மைப் போலவே நடக்கின்றனர், பேசுகின்றனர், குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்….”

“சரி.. கேட்க சுவாரஸ்யமாய் தான் இருக்கிறது. நம் கிரகத்து மக்கள் அனைவரும் தங்குமளவுக்கு பூமி பெரியதா ?”

“நம்மைப் போல பத்து மடங்கு கூட்டம் அங்கே வசிக்கிறது. எனவே நாமும் போய் சேர்ந்து கொள்ள வேண்டியது தான்.”

“சரி.. எப்படி பூமியில் போகப் போகிறோம்…”

“அது மட்டும் சஸ்பென்ஸ்” அதுவரை எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்த மனிதன் மெலிதாய் புன்னகைத்தான்.

 0

 மயூபா கிரகத்தின் திட்டத்தை அறியாத சென்னை ஆராய்ச்சிக் கழகம் இந்திய அரசின் உயர் மட்டக் குழுவில் தனது  கருத்துக்களைச் சமர்ப்பித்தது.

இந்திய அரசு உடனே இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரை அழைத்து நிலமையை விளக்க, எல்லாவற்றையும் உடனடியாக மறுக்கும் தூதர் இதையும் மறுத்தார். “இந்தியாவுடனான இணக்கமான சூழலை அமெரிக்கா எப்போதுமே உடைக்காது ” என்றார் வழக்கம் போலவே. 

தகவல் உலகத்தின் சபைக்குச் சென்றது. 

உலகத்தினர் அனைவருக்குமே இந்தச் செய்தி அதிர்ச்சிச் செய்தியாக இருந்தது. புறா, பந்து போன்ற வடிவங்களில் அதி நவீன கருவிகள் நாட்டில் ஊடுருவிக் கிடக்கின்றன என்றால் இன்னும் என்னென்ன வடிவங்களில் ஒற்றுக் கருவிகள் உலவுகின்றனவோ என உலகம் கவலைப்பட்டது. 

இது பின்லேடனின் சதியாய் இருக்கலாமோ எனவும் அமெரிக்கா பேசத் தவறவில்லை. அப்படியானால் பறவைகள் மோதி கட்டிடங்கள் உடையுமோ எனும் கவலையை அமெரிக்கர்களின் விழிகளில் பார்க்க முடிந்தது. 

பூமியின் தலைவர்களும், விஞ்ஞானிகளும், குழம்பிப் போய், வியந்து போய் பேசிக்கொண்டிருக்கையில். 

ஒருவேளை இது ஏலியனாக இருக்கலாமோ என யூ.எஃப். ஓ கூறியதை மட்டும் யாருமே காது கொடுத்துக் கேட்கவில்லை.

 0

 நாளை பூமி மீதான தாக்குதல் நாள்.

 மயூபாவில் நாள் குறித்தனர். ஆண்களும் பெண்களுமாக அனைவரும் விண்கலங்களில் ஏறி பூமிக்கு வர ஆயத்தமாகியிருந்தனர்.

 நோவாவின் பேழை போல மிகப்பெரிதாய் இருந்த விண்கலங்கள் ஏழு அடுக்குகளால் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கீழ் அடுக்கிலிருந்த காந்தப் பகுதியில் சக்தியைச் செலுத்தினால் அது ஒளியாண்டுகள் வேகத்தில் பாய்ந்து சேரவேண்டிய பகுதியை சில நிமிடங்களில் சேர்ந்து விடும்.

 வரிசையாய் நின்றிருந்த ஆயிரக்கணக்கான விண்கலங்கள் எங்கெங்கே இறங்கவேண்டும் என்பது இயந்திரப் பறவைகள் அனுப்பிய தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

 எப்படி பூமி மீது போரிடப் போகிறார்கள் என்பது மட்டும் மர்மமாகவே இருந்தது.

மயூபாவின் விஞ்ஞானக் கூடத்திலிருந்த தலைமை விஞ்ஞானி சொன்னார்.

நமது திட்டம் இது தான். பூமியில் வாழும் மனிதர்களுக்கு ஒரு விஷேஷ குணம் இருக்கிறது. நம்மைப் போல அவர்கள் பட்டியலிட்டு எதையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் காரணமாய் இருப்பவை அவர்களுடைய ஹார்மோன்கள் தான்.

 அதில் நாம் எடுத்திருப்பது ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோன். இதுதான் மனிதர்களை இன்பமான சூழலுக்கு இட்டுச் செல்கிறது. இதை நுகர்ந்தால் மனிதன் போர் சிந்தனையை எல்லாம் விட்டு விட்டு காதல் சிந்தனைக்குள் மூழ்வி விடுவான். 

தலைமை விஞ்ஞானி சொல்லச் சொல்ல குழுவிலிருந்தவர்கள் விழிகளை விரித்து கேட்டுக் கொண்டிருந்தனர். 

இந்த ஆக்ஸிடோசினைத் தான் நாம் செயற்கையாய் தயாரித்து ஏற்கனவே பூமியில் உலவும் கருவிகள் மூலம் காற்றில் பரவ விடப் போகிறோம். 

“எப்போது தயாரிப்பது ? அதற்கு ஒரு துளி ஆக்ஸிடோனின் வேண்டுமே” 

“ஏற்கனவே தயாரித்தாயிற்று. ஒரு துளியை வைத்துக் கடலை உருவாக்கலாம் என்பது இன்னும் பூமி மக்களுக்குத் தெரியாத கலை. நாம் ஏற்கனவே அந்த ஹார்மோனை பிரதியெடுத்தாயிற்று. கலவியின் போதும், தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் போதும் இந்த ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும் என்பது பூமி மக்களுக்கே கூட தெரிந்த சமாச்சாரம் தான். “

நாளைக் காலையில் நாம் புறப்படுவதற்கு முன் பூமியிலுள்ள நமது கருவிகளான பறவைகள், மண்புழுக்கள், பந்துகள், வண்டுகள் எல்லாம் பூமியெங்கும் பறந்து திரிந்து இந்த ஆக்ஸிடோசினை பூமியெங்கும் தூவிக்கொண்டே இருக்கும்.

மக்கள் மோகச் சிந்தனையில் மூழ்கும் போது, நாம் போய் இறங்குவோம். இதன் மூலம் மக்களுடைய போரிடும் சிந்தனை தற்காலிகமாய் மறையும் நாம் சென்று இறங்குவதை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள். கூடவே நமது இனத்தைப் பெருக்கிக் கொள்வதும் எளிதாகிவிடும்.

அவர் சொல்லிக் கொண்டே போக, விண்கலங்கள் பூமியை நோக்கிப் புறப்பட ஆயத்த நிலையில் இருந்தன.

விஷயம் தெரியாத இந்தியாவின் சில அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் பிரதமருக்கான கொடும்பாவியைத் தயாரித்துக் கொண்டிருந்தன.

 0 

 நன்றி : யூத்புல் விகடன்.

http://youthful.vikatan.com/youth/xaviorstory27032009.asp

கோடை – எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம்

 ac65

வறுத்தெடுக்கும் வெயிலில் பல்வேறு சிக்கல்கள் விக்கிரமாதித்ய வேதாளமாய் விடாமல் நம்மை வந்து தொற்றிக் கொள்கின்றன. உடல் வெப்பமடைவது, சரியான தூக்கமில்லாமல் போவது, கவனக் குறைவு, தோல் நோய்கள், எரிச்சல், படபடப்பு, உடலில் தண்ணீர் பற்றாக்குறை என பட்டியல் நீளும்.

இந்த கோடை காலத்தில் உடலை சமநிலைக்கு வைத்திருப்பதில் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன.

கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.

காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

fruit-salad-ck-320083-lபழங்கள் உண்பது கோடைக்காலத்துக்கு மிகவும் அவசியமானது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடலின் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.

காய்கறிகளும், பழங்களும் அதிகம் உண்பது உடலின் தண்ணீர் தேவையையும், குளிர் தேவையையும் நிறைவேற்றுவதுடன், அவற்றிலிருக்கும் வைட்டமின்கள், மினரல், விஷ எதிர்ப்பு தன்மை, நார்ச்சத்து இவையெல்லாம் கோடையில் நோய் வராமலும் நம்மைக் காத்துக் கொள்கின்றன.

 

வெங்காயம் நிறைய சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்க வெங்காயத்திலுள்ள குவர்சடின் எனும் வேதியல் பொருள் உதவும்.

தர்பூசணி சாப்பிடுங்கள். தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் தேவைக்கு சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள ஒரு காய்கறி உண்டு அது என்ன தெரியுமா ? வெள்ளரிக்காய் ! வெள்ளரிக்காயை அதிகமாய் உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

உடலின் வெப்பம் வெளியேற வேண்டியதும், உடல் குளிர வேண்டியதும் கோடை காலத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுப் பொருட்கள் உதவும். குறிப்பாக வேக வைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்டா ரொட்டி, அரிசி இவை.

அப்படியே வாழைப்பழம் சாப்பிடுவது கூட கோடைகாலத்தில் உடலை நலமுடன் வைத்திருக்கும் என்கிறார் இங்கிலாந்து மருத்துவர் டாக்டர் டாயில்.

காய்கறிகளினால் சூப் தயாரித்து அதைக் குளிர வைத்து உண்பது கோடைக்குச் சிறந்தது என்கிறார் அமெரிக்காவின் pepsi_ice_cucumber_2மருத்துவர் மூர்ஸ். கூடவே காய்கறி சாலட் இருந்தால் மிகவும் நல்லது !

சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். மிக முக்கியமாய் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் பாட்டில் குளிர்சாதனங்கள், மற்றும் தற்போது புற்றீசலாய் கிளம்பியிருக்கும் “எனர்ஜி டிரிங்” சமாச்சாரங்கள்.

குளிர்சாதனப் பொருட்கள், பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள், இவையெல்லாம் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. உங்கள் பணத்தையும் உடல்நலனையும் அழிப்பதற்காக வண்ண வண்ண பாட்டில்களில் கண்ணைக் கவரும் விளம்பரங்களோடு வரும் பானங்களை தவிருங்கள். தண்ணீர் நிறைய அருந்துதலே சிறப்பானது.

கோடையில் தண்ணீர் மூலமாக நோய்கள் விரைவில் பரவும் என்பதால் எப்போதும் கையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வதே பாதுகாப்பானது.

சோயாபீன்களை waterbottle-mகோடைகாலத்தில் சூடாய் இருக்கிறதே என்பதற்காக தெருவில் செல்லும் குச்சி ஐஸ் போன்ற வகையறாக்களை உள்ளே தள்ளாதீர்கள். அது உடலின் வெப்பத்தை அதிகரிப்பதுடன் நோய்களையும் தந்து செல்கிறது.

நன்றாகப் பொரித்த உணவு வகைகளை ஒதுக்குங்கள். சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், சிக்கன் ஃபிரை வகையறாக்களை முழுவதுமாய் ஒதுக்குங்கள். மூன்று வேளை மூக்கு முட்ட உண்பதை விட நான்கைந்து தடவைகளாக கொஞ்சம் கொஞ்சமாய் உண்பதே கோடையில் சிறப்பானது.

‘ஐஸ் காபி’, ‘ஐஸ் டீ’ போன்ற பானங்கள் கோடை காலத்துக்கு உகந்ததல்ல. அவை எந்தக் காலத்துக்கும் உகந்ததல்ல என்பது வேறு விஷயம். எனவே அவற்றை விட்டு தள்ளியே நிற்பதே நல்லது. இருக்கவே இருக்கிறதே இளநீர், மோர், எலுமிச்சை பழச் சாறு போன்றவை !

உணவுப் பழக்கத்தில் ஒழுங்கைக் கடைபிடித்தாலே கோடையில் வாடாமல் தப்பிக்கலாம்.

 

என்னாச்சு உனக்கு ?

man

முன்பெல்லாம்,
இருசக்கர வாகனம்
உறுமிக் கொண்டு ஓடினால் தான்
ஒத்துக் கொள்வாய்,

காதோடு ஒட்டவைத்த
ஒலிபெருக்கி
காது மடல்களையும்
அதிரவைத்தால் தான்
இசையென்று இயம்புவாய்,

காயப் போட்டிருக்கும்
சேலையைக் கூட
காமக் கண்ணோடு பார்ப்பாய்,

மாலை வேளைகளை
தேவதைகளின் ஊர்வல நேரமென
உற்சாகமாய்
மொழிபெயர்ப்பாய்,

போங்கப்பா,
உங்களுக்கு எதுவுமே புரியாது
என்று
அப்பனுக்கே கலாச்சார
அகரம் கற்றுத் தருவாய்,

கோயிலுக்கு உள்ளே வரவே
முப்பது முறை
முரண்டு பிடிப்பாய்.

இப்போது
உன்னில்
புது மாற்றங்கள் மிதக்கின்றன.

வயதாகிறது உனக்கு !

அமைதியை அங்கீகரிக்கிறாய்
நெரிசல் சாலைகளை நிராகரிக்கிறாய்
வாகனங்களின் ஆயுள் கேட்கிறாய்
பெண்களின் கண்கள் பார்க்கிறாய்…

மொத்தத்தில்,
அடுத்த தலைமுறையிடம்
அடிவாங்க ஆயத்தமாகிறாய்.

நண்பன் நவனீ நினைவாக…

n1அன்புள்ள நவனீ,

 

காலங்கள் காயங்களை ஆற்றிவிடும் என கருதியிருந்ததெல்லாம் பொய் என்பதை தினம் தோறும் புரியவைத்துக் கொண்டிருக்கின்றன உனது நினைவுகள்.

உனது “நினைவு நாள்” ஒவ்வோர் வருடமும் வந்து போகிறது, அது தரும் வலியும் ஒவ்வோர் வருடமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. ஏதோ ஒரு வெறி பிடித்த வாகனத்தினால் நீசத்தனமாய் வீசப்பட்டு, நீங்காமல் நீங்கிவிட்டு.

சட்டென கடந்து விட்டது போல சில கணங்கள் தோன்றும், நூறாண்டு ஆனது போல் சில கணங்கள் சொல்லும். ஏதும் புரியாத அவஸ்தையை இதைவிடக் கொடூரமாய் எனக்குள் யாரும் உணர்த்தியதில்லை.

இன்னும் எனது நினைவுத் தாழ்வாரங்களில் உனது சிரிப்பொலியைச் சேமிக்கின்றன செவிகள்.

இன்னும் எனது சிந்தனைகளெங்கும் உனது வார்த்தைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் எனது மனதின் மௌனப் படிகளெங்கும் திட்டுத் திட்டாய் அமர்ந்திருக்கிறது உன் நேசம்.

தினம் தோறும் நாளிதழைப் புரட்டும் போது கண்களுக்குள் கடந்து செல்கின்றன விபத்துக் கணக்குகள். ஒவ்வோர் விபத்துக்குப் பின்னாலும் எத்தனையோ தவிப்புகளும், கண்ணீரும், அழிக்க முடியாத சுவடுகளும் இருக்கின்றன என்பதை ஓர் விபத்தின் மூலம் தான் நீ எனக்குப் புரிய வைக்க வேண்டுமா ?

சந்திக்கவே முடியாதென்ற பின்பு தான் சந்திப்புகள் தேவை எனும் தவிப்புகளும் அதிகரிக்கின்றன.

இன்னும் நமது நண்பர்களுடனான உரையாடலில் நீ இடம் பெறாமல் போவதேயில்லை. எப்போதேனும் சந்தித்துக் கொள்ளும் உரையாடல்கள் கூட உனக்கான கண்ணீரை எழவைக்காமல் போனதில்லை.

இன்னும் நான் உன் பெற்றோருடன் பேசவில்லை. மன்னித்து விடு. நீ ஒரு முறை உண்ணவில்லை என்றாலே பதறிப் போகும் அவர்களுடைய வலியில் ஆழம் அறிவேன். இப்போதைய அவர்களின் பார்வைகளைத் தாங்கிக் கொள்ளும் வலிமை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் எனக்குள் முளைக்கவே இல்லை.

n2

நாம் எதைப்பற்றித் தான் பேசவில்லை என சில நேரம் நினைக்கிறேன், நாம் எதைப்பற்றியுமே பேசவில்லையா என சில நேரம் தவிக்கிறேன். தவிப்புக்கும் தவிர்ப்புக்குமிடையே ஓடுகிறது உனது நினைவுகளின் மீதான எனது வாழ்க்கைப் பயணம்.

உனது ஒவ்வோர் புகைப்படங்களுக்குப் பின்னாலும் விரியும் நினைவுகள் எதிலும் உன்னைப் பற்றிய கோபங்களோ, வெறுப்புகளோ இல்லாமல் போனதற்காய் ஆனந்தமும், கவலையும் ஒருசேர அடைகிறேன்.

 

வாழ்ந்தால் எப்படி வாழவேண்டும் என்பதற்கான ஒரு உதாரணம் நீ.

மடிந்தால் எப்படி மடியக் கூடாது என்பதற்கான ஒரு உதாரணமாகவும் ஆகிப் போனாயே நீ.

 

 

மடியாத, மடிய விழையாத நினைவுகளுடன்…

நண்பர்கள்.

The Curious Case of Benjamin Button : விமர்சனம்

த கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்.

 the_curious_case_of_benjamin_button

மரணப் படுக்கையில் கிடக்கும் ஒரு மூதாட்டி, தனது மகளிடம், தனது டைரியை வாசித்துக் காட்டும்படி கேட்கிறாள். டைரியைப் புரட்டி வாசிக்க ஆரம்பிக்கிறாள் மகள்.

முதலாம் உலகப் போரில் மகனை இழந்த ஒரு தந்தையின் துயர நினைவுகளுடன் துவங்குகிறது படம். பார்வையிழந்த அந்த மனிதர் கடிகாரம் செய்பவர். மகனின் நினைவாக அவர் செய்யும் கடிகாரம் பின்னோக்கி ஓடுகிறது !

“வாழ்க்கையில ஒரு ரிவர்ஸ் பட்டன் இருந்தா எப்படி இருக்கும்” எனக் கேட்கும் முதல்வன் பட வசனம் போல, வாழ்க்கை பின்னோக்கி ஓடினால் எப்படி இருக்கும் ? என் மகன் என்னுடன் இருந்திருப்பான் என மனதை உலுக்கும் சோக உணர்வுகளுடன் படம் துவங்குகிறது.

அந்த நிகழ்வின் மையம் கதையை உணர்த்த, படு கிழவனாய் பிறந்து கொஞ்சம் கொஞ்சமாய் இளமை திரும்பப் பெற்று, தனது கடைசி காலத்தில் சிறுவனாய், மழலையாய், கைக்குழந்தையாய் மாறி உயிர்விடும் பெஞ்சமின் பட்டரின் கதை விரிகிறது.

அருவருப்பாய், வயதானவனாய் பிறக்கும் கதாநாயகன் பிறக்கும் போதே அம்மாவை முழுங்கியவன். அவனது அப்பாவும் அவனை ஒரு முதியோர் இல்லத்தின் வாசலில் முழுகி விட அங்கேயே வளர்கிறார் நாயகன்.

இவனுக்கு ஆயுள் இன்னும் கொஞ்ச நாள் தான். எப்போ வேண்டுமானாலும் இறப்பான் என மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, அனைவரும் வியக்கும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து கொண்டே வருகிறான் நாயகன் என கதை பயணிக்கிறது.

முதலாம் உலகப் போர் காலத்தில் படம் நகர்வதாகக் காட்டுவதும், முதியோர் இல்லத்தை மையப்படுத்தி காட்சிகளை நகர்த்துவதும் படத்தை சற்றே பலப்படுத்த எடுத்துக் கொண்ட உத்திகள் என்பதைத் தவிர பெரிதாக வேறு ஏதும் இல்லை.

வயதான காலத்தில் சிறுமியாய் இருந்து, சிறுமி வயதாகிக் கொண்டே செல்ல, நாயகன் வயது குறைந்து கொண்டே வர அந்த வயது முரணின் இடைவெளி குறையும் காலத்தில் வருகிறது காதல்.

கடைசியில், காதலன் கைக்குழந்தையாகி மரணத்தை எதிர் நோக்கி காதலியின் கைகளில் இருக்க, துயரத்துடன் காதலி குழந்தையின் முகத்தையே பார்க்க, மெல்ல மெல்ல கண் மூடிக்கொள்ள பெஞ்சமின் மரணமடையும் காட்சி மனதைக் கனக்க வைக்கின்றன.

இந்த வயதாகும் முரணைத் தவிர்த்துப் பார்த்தால் படத்தில் சிலாகிக்க ஏதுமே இல்லாமப் போவது தான் படத்தின் மிகப்பெரிய குறை.

மேக்கப்பில் மிரட்டியிருக்கிறார்கள். குறிப்பாக வயதான தோற்றத்தில் வரும் நாயகனின் உடல், கைகால், பார்வை என ஒப்பனை கன கட்சிதம். ஒளிப்பதிவும் மனதை மயக்குகிறது. நேர்த்தியான கால இடைவெளிகளை கவனித்து ஒளிப்பதிவு நிறங்களால் பேசுவது சிலிர்க்க வைக்கிறது.

மற்றபடி ஆஹா, ஓஹோ என்று பேசப்பட்ட அளவுக்கு படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பது எனது கருத்து.

இழுத்து இழுத்து படத்தை நீட்டிக் கொண்டே இருக்கிறார்கள். எப்போது முடியும் என்ற சலிப்பே வந்து விடுகிறது ஒரு கட்டத்தில்.

என்ன வித்தியாசமான கதை கிடைத்தாலும், உலகம் சுற்றுதல், கற்பை இழத்தல், காதலித்தல், மரணித்தல் எனும் வட்டத்துக்குள் அடைக்கப்பட்டால் அது வலுவிழக்கும் என்பதற்கு உதாரணம் இந்தப் படம்.

1922ல் ஸ்காட் என்பவர் எழுதிய கதையாம் ! அந்த சிறுகதையை படமாக்கியிருக்கிய விதத்தில் தனது வேலையை முடித்திருக்கிறார் இயக்குனர் டேவிட் பிஞ்சர்.

Man On Wire : விமர்சனம்

6236இத்தனை சுவாரஸ்யமாய், படபடப்பாய், திடுக் திடுக் நிமிடங்களுடன் ஒரு டாக்குமெண்டரி படத்தை எடுக்க முடியுமா என நினைத்தால் வியப்பாய் இருக்கிறது.

1974 ஆகஸ்ட் ஏழாம் தியதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் என அழைக்கப்படும் உலக வர்த்தகக் கட்டிடங்களுக்கு இடையே கம்பி கட்டி அவற்றில் நடந்த Philippe Petit யின் நினைவுகளின் ஊடாகப் பயணிக்கிறது Man on Wire படம்.

இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதைப் பற்றியோ, அதன் பின்னணி பற்றியோ ஏதும் பேசாமல் முடிவுறும் தருவாயிலிருந்த இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே கம்பி கட்டி நடந்த ஒருவருடைய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் விதத்தில் படம் பரவசமூட்டுகிறது.

1974ல் இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே நடந்த நிகழ்ச்சி எப்படி சாத்தியமாயிற்று, என்னென்ன சிக்கல்கள் இருந்தன என்பதையெல்லாம் உரையாடல்கள் வழியே திரும்பிப் பார்க்கிறார் நாயகன்.

இளமையிலேயே கழைக்கூத்தாடி போல நீளமான குச்சியுடன் விறைப்பாய்க் கட்டியிருக்கும் கம்பியின் மீதும் கடிற்றின் மீதும் நடந்து திரிவது நாயகனின் பொழுது போக்கு.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவருக்கு அமெரிக்க வர்த்தகக் கட்டிடத்தைக் குறித்த செய்தியைப் பத்திரிகையில் படித்தவுடன் அதில் ஏறுவதே வாழ்க்கை இலட்சியம் என்றாகிவிட்டது.

அதை எப்படி நிறைவேற்றினார் என்பதை படபடப்புடன் பதிவுசெய்திருக்கின்றனர்.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள், நாளிதழ் செய்திகள், கருப்பு வெள்ளை வழியே பயணிக்கும் பழைய நிகழ்ச்சிகள் திடீர் திடீரென நிகழ்காலத்துக்குத் தாவி உரையாடல் அறைக்கு வருகிறது.

அங்கிருந்து மீண்டும் பழைய காலத்துக்குள் புகுந்து விடுகிறது. இப்படி மாறி மாறி பயணிக்கும் இடங்கள் வெகு சிரத்தையாக, சற்றும் தொய்வின்றி அமைக்கப்பட்டிருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலம்.

அன்றைய நியூயார்க் தெருக்கள், பல நூறு பவுண்ட் எடையுள்ள பொருட்களை WTC யின் உச்சிக்குக் கொண்டு செல்வதிலுள்ள சிரமம், பாதுகாவலர்களின் கண்களின் மண்ணைத் தூவ எடுத்துக் கொள்ளும் பொறுமை என வெகு நேர்த்தியாய் நகர்கிறது படம். ஆறு வருடமாய் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது இந்த நடைபயணம் என்பது சிலிர்ப்பூட்டுகிறது!

நியூயார்க் நகரின் அச்சுறுத்தும் அதிகாலைக் குளிர், ஆளையே தூக்கி வீசும் காற்று, ஐந்தடிக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதையே கணிக்க முடியாத மேக மூட்டம் என அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் படபடப்பை ஏகத்துக்கு எகிற வைக்கிறது.

ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து கொண்டு மறு கட்டிடத்துக்கு கயிறைக் கொண்டு செல்ல அம்பில் தூண்டில் நூலைச் சுற்றி அடுத்த கட்டிடத்துக்கு எய்வது, அதை எதிர் கட்டிடத்தில் காணாமல் நிர்வாணமாய் மாடி முழுக்க அலைவது (நூல் உடலில் பட்டால் உணர வேண்டும் என்பதற்காக ), கட்டிடத்தின் நுனியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அம்பைத் தேடி எடுப்பது என சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாத காட்சிகள் தொடர்கின்றன.

கடைசியில் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே கம்பியைக் கட்டினால் அது வளைந்து தொங்குகிறது ! இத்தனை வருட உழைப்பு, திட்டமிடல் எல்லாம் வீணா என வினாடி நேரம் திகைத்துப் போகின்றனர். எனினும், இலட்சியம் வெல்கிறது

ஒரு வழியாக எல்லாம் சரியாக முடிய, காலை 7 மணி கடந்தவுடன் கயிற்றில் காலை வைத்து நடக்கத் துவங்குகிறார்.

பயம் பார்ப்பவர்களுக்கு மட்டும் தான். “இங்கிருந்து விழுந்து மரணமடைந்தால்..அ து எத்துணை இனிமையான மரணம். இலட்சியத்தின் உச்சியில் இருக்கும் போது உதிர்வதில் எத்தனை ஆனந்தம்” என்பதே நாயகனின் கருத்து.

நாற்பத்து ஐந்து நிமிடங்கள் கயிற்றின் மேல் எட்டு முறை அங்கும் இங்கும் நடந்து, நடனமாடி, கம்பியின் அமர்ந்து, படுத்து என நாயகனின் செயல்கள் வீதியில் கவனிக்கத் தொடங்கிய கூட்டத்தினரையும், மாடியில் அவரைக் கைது செய்யக் காத்திருந்த காவலரையும் ஸ்தம்பிக்க வைக்கிறது !

இலட்சியம் நிறைவேற ஒரு வழியாய் காவல்துறையால் கைதுசெய்யப்படுகிறார் நாயகன்.

அறுபது வயது கடந்த நிலையில் இன்றும் கம்பியில் நடப்பதை நிறுத்தாத மனிதராய் அவரைக் காட்டி முடிகிறது படம். தொய்வின்றி இயக்கியதற்காக இயக்குனர் James Marsh அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். !

வாய்ப்புக் கிடைத்தால் தவற விடாதீர்கள்.

 

mow

சத்தம் வாழ்ந்த வீடு

house21

எப்போதும்
மௌனமாய் இருந்ததில்லை
வீடு.

சேர்த்த சொத்து
ஏழு பிள்ளைகள் என
அம்மாவும் அப்பாவும்
சொல்லாத நாள் நினைவில்லை.

மேற்குப் பக்க
புளிய மரத்தடியில்
மாலை நேரம் வந்தமர்ந்தால்
திருவிழா போல் கலகலக்கும்.

கவலைகளின் திவலையின்றி
சிறகடித்துப் பறந்த
அறைகளில்
சிறகுகளின்
சத்தங்கள் சரிந்ததேயில்லை.

மாங்காயோ, பேரக்காயோ,
மரவள்ளிக் கிழங்கோ….
தின்னவும், பேசவும்
திண்ணையும் ஓய்ந்ததில்லை.

கோழிகளின் குரலொலியும்
ஆடுகளின் வாசமும்
முற்றங்களை விட்டு
மறைந்ததில்லை.

காலங்களின் சவாரியில்
ஓர்
கண்ணீர் ஓலமாய்
நிமிர்ந்தெழுகின்றன நினைவுகள்.

திருமணங்கள்
கூட்டுக் குருவிகளை
கூடு கடத்தியபின்

மேய்க்க ஆளில்லாமல்
ஆடுகளும்
கவனிக்க ஆளில்லாமல்
கோழிகளும்
ஓர் துயர இருட்டாய் தொலைந்து விட்டன.
வலியோடே வாழ்ந்து
ஏக்கத்தோடே
அப்பாவும் மறைந்தபின்,

எப்போதேனும் வந்தமரும்
ஒற்றைக் குருவியாய்
ஆகிப் போனது
சொந்தங்களின் சந்திப்பும்.

உற்சாக அப்பாவை
நினைவிடத்தில்
மௌனமாய் தரிசித்தல்
துயரங்களின் கூட்டுத் தொகையெனில்.

ஏதும் அறியா
மழலையாய்
வலிகளின் விளை நிலமாய்
அம்மாவைப் பார்ப்பது
கவிதையால் நிரம்பாத வார்த்தை.
 
என்றேனும்
கிராமத்துக்குச் செல்கையில்,

குடும்ப வீட்டின்
வாசல் கடக்கையில்,

வெறுமை அமர்ந்திருக்கும்
படிகளை மிதிக்கையில்,

குரல்கள் உறைந்த
அறைகளில் நுழைகையில்,

பீறிட்டுக் கிளம்புகிறது
கண்ணீர்
உறைந்திருக்கும் மௌனத்தின்
சில்லுகளை உடைக்க.

தேர்வு எழுதுகிறீர்களா ?

review

மார்ச் மாதம் வந்தாலே மாணவ, மாணவியருக்குப் படபடப்பும் கூடவே வந்து தொற்றிக் கொள்கிறது. காரணம் ஆண்டு இறுதித் தேர்வு. மாணவர்கள் கொஞ்சம் சகஜமாய் இருந்தால் கூட பெற்றோரின் படபடப்பும், பரபரப்பும் எகிறிக் குதிக்கிறது.

கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும், சுற்றுலா, ஷாப்பிங், சொந்த பந்தங்கள் எல்லாம் தற்காலிகமாக நிறுத்தப்படும். வாசல் தாண்டுவது கூட ஆயிரம் முறை யோசித்தபின்பே அனுமதிக்கப்படும் எனுமளவில் தேர்வு காலங்கள் குடும்பங்களை தலை கீழாய்ப் புரட்டிப் போட்டு விடுகின்றன.

பயத்துக்கான காரணிகளைப் பார்த்தால், முதலாவது வந்து நிற்பது தேர்வுக்குச் சரியாகத் தயாராகாமல் இருப்பது. என்னென்ன பாடங்கள் உண்டோ அவற்றை அவ்வப்போது படிக்காமல் கடைசியில் போட்டு உருட்டுவதால் ஏற்படக் கூடிய குழப்பமே பயத்தின் முக்கியக் காரணம்.

அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த நிக்சன் ஒருமுறை வின்ஸ்டன் சர்ச்சிலின் மகனிடம் சர்ச்சிலின் மேடைப் பேச்சைக் குறிந்த்து வியந்து பேசிக்கொண்டிருந்தார். அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் மகன் சொன்னார்,’ உங்களுக்கு அந்த மேடைப் பேச்சு அருமையாக இருந்தது என்பது தான் தெரியும். அதைத் தயாரிக்க என் தந்தையாய் எடுத்துக் கொள்ளும் சிரத்தையும் பல மணி நேர பயிற்சியும் எனக்குத் தான் தெரியும்” என்று.

முறையான பயிற்சி இல்லையேல், தேர்வுகள் பயம் தரும். தேர்வுக்கான பயிற்சியை சரியான விதத்தில் செய்யவேண்டும்.

இரண்டாவது அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் எனும் பயம். பெற்றோர் திட்டுவார்களே, நண்பர்கள் கேலி செய்வார்களே, உறவினர்கள் என்ன நினைப்பார்கள், என்னுடைய “இமேஜ்” என்னாகும்,  எனும் தேவையற்ற சிந்தனைகள் பயத்தை அதிகரிக்கின்றன.

இதற்கு முன் தோற்ற அனுபவங்கள் உண்டெனில், அல்லது குடும்பத்தில் யாரேனும் தோற்று நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் உண்டெனில் இயல்பாகவே அந்தப் பயமும் வந்து தொற்றிக் கொள்ளும்.

இது தவிர உடல் நிலை சரியில்லையென்றாலும், தன்னம்பிக்கை இல்லையென்றாலும் கூடவே பயமும் வந்து விடும்.

தேர்வு எழுதுவோர் ஒன்றை மிகவும் ஆழமாக நினைவில் கொள்ளவேண்டும். தேர்வுகள் நாம் படித்திருப்பதை நினைவில் வைத்திருக்கிறோமா என்பதை சோதிக்க மட்டுமே. நமது உண்மையான திறமைகள் எல்லாம் இதில் வெளிப்படப் போவதில்லை.

தேர்வுகள் இயல்பாக அணுகப்பட வேண்டியவை. வீட்டில் நடக்கும் உரையாடல் போல அவை வெகு சகஜமானவை. அதற்காய் அதிகப்படியான அழுத்தத்தை மனதில் திணிக்கக் கூடாது. குறிப்பாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பதட்டப்படுத்தும் செயல்களைச் செய்யவே கூடாது.

ஊக்கம் ஊட்டுதல், தைரியமாக தேர்வை எதிர்கொள்ள வலுவூட்டுதல், நேர்மையாக தேர்வை அணுக அறிவுறுத்துதல், அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால்  நிறைவேற்றுதல். இத்துடன் நின்று விட வேண்டும் பெற்றோரின் பணி.

மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் கடைசி வாரத்தில் புதிதாக எதையும் படிக்காமல் இருப்பதே நல்லது. ஏற்கனவே படித்தவற்றை திரும்பிப் பார்க்கும் வகையிலேயே கடைசி தயாரிப்பு நாட்கள் இருக்க வேண்டும். இல்லையேல் தெரியாத பாடங்கள் கண்ணுக்கு முன்னால் மலைபோல காட்சி தந்து பயத்தை உண்டுபண்ணிவிடும்.

தேர்வு காலங்களில் அதிக நேரம் விழித்திருந்து படிப்பது, அல்லது வெகு அதி காலையிலேயே விழிப்பது போன்ற பழக்கமற்ற செயல்களை புதிதாய் செயல்படுத்தவே கூடாது. அவை உடல் நலத்தைக் கெடுத்து, நினைவாற்றலையும் மழுங்கடித்துவிடும்.

தேர்வுக் காலங்களில் மற்ற செயல்களையெல்லாம் ஒதுக்கி விட்டு முழு நேரமும் அறையிலேயே அடைந்து கிடந்து படிப்பதும் தவறு. சத்தான உணவுகளை உண்பது. சரியான உடற்பயிற்சிகள் செய்வது, அவ்வப்போது ஓய்வு எடுத்து வெளியே சென்று வருவது என எல்லா செயல்களும் வழக்கம் போல நடக்க வேண்டும். இவையெல்லாம் மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்க உதவும்.

தேர்வுக்குத் தயாராகும் போது காபி, தேனீர் போன்றவற்றை அருந்துவதைத் தவிர்த்து பழச்சாறுகள், பால் போன்றவற்றை அருந்துதல் நல்லது.

அதிக குளிரான பொருட்களை தேர்வுக் காலங்களில் குடிக்காதீர்கள். நீங்கள் எதிர்பாராத நேரத்தில் ஜலதோசமோ, காய்ச்சலோ வந்து உங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும்.

தேர்வை குறுக்கு வழியில் எப்படி வெல்வது என்பதைக் குறித்து சிந்திக்கவே சிந்திக்காதீர்கள். நேர்மையாய் தேர்வை அணுகுங்கள். குறுக்கு வழியைப் பற்றிப் பேசும் நண்பர்களை விட்டு ஒதுங்கியே இருங்கள்.

நேர் எண்ணங்களையே மனதில் கொள்ளுங்கள். எதிர்மறைச் சிந்தனைகள் அலைக்கழித்தால் உங்கள் மூளை சோர்வடையும், பலவீனமாகும்.

“உங்கள் நினைவாற்றல் அதிகரிக்க வேண்டுமா .. இதைச் சாப்பிடுங்கள், அதைச் சாப்பிடுங்கள்” என தேர்வுக் காலத்தில் நிறைய திடீர்க் கடைகள் முளைக்கும். திரும்பியே பார்க்காதீர்கள். தேர்வு மேஜிக் அல்ல. அப்படியே மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் நல்ல மருத்துவரை அணுகுவதே நல்லது.

படிக்காத பாடங்களைப் பற்றிய கவலையை விட, படித்த பாடங்களை நன்றாகப் படிப்பதிலேயே கவனம் செலுத்துங்கள். எவ்வளவு படித்திருக்கிறீர்களோ அந்த பகுதிகளிலிருந்து வரும் கேள்விகளை எதிர்கொள்ளுங்கள். படிக்காதவற்றைக் குறித்த கவலை படித்தவற்றையும் அழித்துவிடும்.

அதீத நம்பிக்கை ஆபத்து. நிஜத்தை நம்புங்கள். அதீத நம்பிக்கை வைத்ததால் கவிழ்ந்து போன வரலாறுகள் ஏராளம் உண்டு டைட்டானிக் கப்பல் உட்பட.

தேர்வுக்கு முந்தைய நாள் நன்றாகத் தூங்குங்கள். தேர்வைப்பற்றி ஏதும் நினைக்காமல் நிம்மதியாகத் தூங்குங்கள்.

தேர்வுக்கு அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வுக் கூடத்தை அடையும் படி திட்டமிடுங்கள். கடைசி நேரத்தில் கிளம்பி, போக்குவரத்து நெரிசலைச் சபித்து, திடீரென ஏற்படும் தடங்கல்களுக்கு எரிச்சலடைந்தால் படித்தவையும் மறந்து போகும்.

தேர்வுத்தாளில் கேள்விகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வடிவங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்க கேள்விகள் எத்தனை, ஒரு பத்தி கேள்விகள் எத்தனை போன்ற விவரங்கள் தெரிந்திருப்பது நல்லது.

மொத்தம் எத்தனை கேள்விகள் ?  சராசரியாய் ஒரு கேள்விக்கு எத்தனை நிமிடங்கள் ஒதுக்கலாம் என்பதை பழைய தேர்வுத் தாள்களை வைத்து தேர்வுக்கு முன்னமே ஒரு முறை திட்டமிடுங்கள். இறுதியில் தெரிந்ததை எழுதவும் நேரமில்லாமல் அல்லாடும் நிலையைத் தவிர்க்கலாம்.

கேள்வித் தாளைப் பார்த்தவுடன் பயப்படாதீர்கள். இயல்பாக இருங்கள். இந்தத் தேர்வுடன் உலகம் முடிந்து விடாது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துங்கள். நன்றாகத் தெரிந்த கேள்விக்கான விடையை முதலில் எழுதுங்கள். அது முடிந்தவுடன் அடுத்த கேள்விக்கான பதில் தானே நினைவுக்கு வரும்.

தேர்வு எழுதும் போது நேரமிருக்குமோ இருக்காதோ எனும் பயம் இருந்து கொண்டே இருக்கும். அதைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதுங்கள். திட்டமிட்டு எழுதினால் அனைத்தையும் எழுதி முடித்து, எழுதியவற்றை திரும்ப வாசித்துப் பார்க்கவும் நேரமிருக்கும்.

முக்கியமாக தேர்வு அறைக்கு நுழையும் முன் மற்றவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். அவை வீணான பதட்டத்தைத் தந்துவிடக் கூடும். கூடுமானவரை தனியே அமைதியாய் அமர்ந்திருங்கள்.

தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போதும் “ஐயோ அடுத்தவர்கள் இரண்டாவது கேள்வி எழுதுகிறார்களே, பத்து பக்கம் எழுதிவிட்டார்களே” எனும் பதட்டம் ஏதும் கொள்ளாதீர்கள். உங்கள் கேள்வித்தாளையும், விடைத்தாளையும் மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்.

மிக முக்கியமாக ஒரு தேர்வு எழுதும் போது அடுத்த தேர்வைக் குறித்து சிந்திக்கவே சிந்திக்காதீர்கள்.

தேர்வு வாழ்க்கையை வளமாக்கும் ஒரு பாதை, ஆனால் அதுவே வாழ்க்கையல்ல. வெற்றியோ தோல்வியோ அது ஒரு நிகழ்வு அவ்வளவே. நீங்கள் காரோட்டும் போது டயர் பழுதுபட்டால் டயரை மாற்ற முயல்வீர்களா ? காரையே எறிந்து விடுவீர்களா ? டயர் பழுது படுதல் என்பது ஒரு நிகழ்வு. எத்தனை முறை டயர் பழுது பட்டாலும் மாற்றிக் கொண்டு ஓடும் காரைப் போல வாழ்க்கையும் ஓடவேண்டும்.

தேர்வில் நிகழும் தோல்வி என்பது நிரந்தரத் தோல்வியல்ல. சற்றே தூரமாய் நிறுத்தி வைக்கப்பட்ட வெற்றி அவ்வளவே.

நன்றி : பெண்ணே நீ

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers