உயிர்ப்பு தின நல் வாழ்த்துக்கள்…
தாவீது அரசரின்
புதல்வன்,
ஞாலத்தின் ஞானத்தினன்
சாலமோன்.
சாலமோனின்
நீதி மொழிகள்,
இங்கே
இதயங்களுக்காய்க்
காத்திருக்கிறது.

நீதி மொழிகள் 1
ஆண்டவன் மீதான
அச்சமே,
அற்புத ஞானத்தின்
ஆரம்பம்.
பெற்றோரிடம் உள்ளது.
அறிவின் முதல் படி.
தவறாமல்
அதைக் கடைபிடி.
அதுவே,
உன்
தலையை அலங்கரிக்கும்
தங்கக் கிரீடம்,
கழுத்தைத் தழுவும்
பவழ மாலை.
தீயவர்களின் வார்த்தைகளுக்கு
வானவில் போல
ஏராளம் வண்ணங்கள்.
அப்பாவிகளைக்
கொள்ளையடிப்பதும்,
பாதாளச் சமாதிக்குள்
வேதாளங்களாய் சுற்றி வருவதும்,
யாரையேனும் அழித்து
அந்த
செல்வம் சுருட்டி
மிரட்டும் மாளிகை கட்டுவதும்,
என,
கொடியவன் வார்த்தைகளில்
இனிப்பு விஷம்
கனியும்.
நீ,
அவர்களோடு செல்லாதே.
பறவைக்கான கண்ணி
அதன்
பார்வை படாத இடத்தில்
பதுங்கி இருக்கும்.
தீயோருக்கான
தீர்ப்பும் அப்படியே.
உன்
வியர்வை தொடாத
பணம் உன்னை
விழுங்கும்.
இகழ்ச்சி செய்வதில்
மகிழ்ச்சி கொள்தல்
இன்னும் எத்தனை நாளைக்கு ?
அறிவின் விளக்கை
அணைத்து,
முட்டாள் தன
முட்டுக்கட்டைகளில்
முத்தமிடுவது
இன்னும் எத்தனை நாளைக்கு ?
உங்கள்
தர்ப்பெருமை உங்களை
தகர்க்கும்,
சூழ்ச்சி உங்களை
சிதைக்கும்.
விறகாகிப் போன மரத்தில்
வட்டமிட்டுத்
தேன் தேடும் வண்டாய்
காலம் கடந்த தேடல்கள்
கவனிப்பாரின்றி கலையும்.
அறிவின் கடலை
நிராகரிப்போரை
பின்
அனுதாப
அலைகள் கூட வருடாது.
0
நீதி மொழிகள் – 2
0
உணவுக்கான ஓடுதலோடு
உணர்வுக்கான
தேடுதலையும் வளர்த்துக் கொள்.
மெய்யறிவுக்காய்
மன்றாடு.
சுரங்கம் தோண்டி
புதையல் தேடும்
ஆர்வத்தை
ஞானம் தோண்டுவதில்
நடத்து.
அறிவும், ஞானமும்
ஆண்டவன் அருள்வதே.
மாசற்றோனுக்கான
கேடயம்
கடவுளே.
அவருடைய
வரைபடத்தில் வருபவை
எல்லாம்
நேர்மையின் பாதைகளே.
நீதியையும்,
நேர்மையையும்
நீ பற்றிக் கொள்.
ஞானம் வந்து
உன்னைத் தொற்றிக் கொள்ளும்.
பின்,
உன் நுண்ணறிவும்
மெய்யறிவும்,
உன் வழியை உருவாக்கும்.
உன்
நிழல் விழும் ஓரமும்
நீதியின் கரமாய் இருக்கும்.
உதடுகளில்
தேன் வடிக்கும்,
தேள் போன்ற
விலைமகளிடமிருந்து
உன்னைத் தப்புவிக்கும்.
அவள் உதடுகள்
வெள்ளைப்பூக்களில் வாழும்
வண்ணத்துப் பூச்சிபோல
வம்புக்கிழுக்கும்,
அதில் மயங்கினாலோ,
சிற்றின்பச் சூறாவளி
தென்றலென தீண்டி,
உன் செல்வத்தைச் சிதைக்கும்
சூறாவளியாகும்,
உன் உயிரை உருக்கும்
உருக்காலையாகும்.
இருபுறமும் கூராள
வாள் போல உனை
வெட்டிச் சாய்க்கும்.
சுடுகாட்டுப் பாதை போல
அவள் வீட்டுக்கான பாதையும்
ஓர்
ஒற்றையடிப்பாதையே !.
வாழ்வுக்கான மாற்றுவழி
அந்த
வாசலுக்குள் வருவதில்லை !
அவள் வீட்டு
முற்றத்தில்
அழிவின் ஆசனங்கள் மட்டுமே
அணிவகுத்து நிற்கும்.
நீ
நல்லவற்றைத் தேர்ந்தெடு.
முளைகள் வந்தபின் தான்
களைகள் விதைத்த
கவலை வரும்.
உன் நீர்த்தொட்டியில்
நல்ல நீர் உள்ளது,
உன் கிணறுகளில்
பரிசுத்த ஊற்று இருக்கிறது,
அதைப் பருகு.
உன் ஊற்று நீர்
ஊருக்கான ஆற்று நீரில்
கலக்கவேண்டாம் ?
உன் வாய்க்கால் நீர்
வயலைத் தாண்டி
வழிந்தோட வேண்டாம்.
உன் முற்றம் முழுதும்
வாசனை நிரப்பும்
உரிமைப் பூ ஒன்று
அருகிருக்கையில்,
தெருவோரக் கள்ளியோடென்ன
பருவப் போராட்டம் ?
உன் வீட்டு முற்றத்தில்
நட்சத்திரப் புள்ளிமான்
விளையாடும் போது,
கானகத்து நரிகளோடு
காலம் கழிப்பதெதற்கு ?
இதயத்தை அடக்கு
ஆண்டவனில் அடங்கு.
அப்போது
அறிவு உன் அகத்துக்கு
அணிகலனாகும்.
0
நீதி மொழிகள் – 3
0
அறிவைத் தேடுதலே
அறிவு.
ஞானம் தேடுதலே
உண்மை ஞானம்.
அதை நீ
உயர்வாய் கொள்
உன்னை அது
உயர்த்தும்.
வேண்டாமென்போரை அது
தீண்டாது.
நேரிய பாதை
உன்னை இடறாது,
ஏனென்றால்
உன் நடையில்
தெளிவுகள் இருக்கும்.
சறுக்காத பாதை அது
ஏனெனில்
நீ
வெறுக்காத ஞானம் அது.
தீயவர்களோ,
தீவினை உண்டு
கொடுஞ்செயல் குடித்து
இருட்டின் மடியில்
குருடாய் கிடக்கிறார்கள்.
அவர்கள் கண்களை
வைகறை
உறுத்தும்.
நல்லோருக்கோ
வைகறை
மெல்ல மெல்ல விரிந்து
நண்பகல் நோக்கி
நடக்கும்.
உன் கோட்டைகளை
காவல் செய்வது இருக்கட்டும்,
உன்
இதயத்தை முதலில்
காவல் செய்.
உன் வாயில்
அழிவின் நாகங்கள்
படமெடுக்க வேண்டாம்.
அன்பின் வார்த்தைகள்
புடமிடட்டும்.
நாணயமற்ற பேச்சுகளோ
வஞ்சக வார்த்தைகளோ
கொஞ்சமும் உன்னில்
மிஞ்சவேண்டாம்.
நேர் பார்வையோடு
நேர் வழியில் செல்,
வலப்புறமும்
இடப்புறமும்
இருக்கையோடு காத்திருக்கும்
தீமைகளை
பார்வையாலும் தீண்டாதே.
0
நீதி மொழிகள் – 4
0
நீ,
யார் கடனுக்கோ
பொறுப்பேற்றிருந்தாலோ,
அன்னியனுக்காய்
பிணையாய் நின்றால்,
அவனை
வருந்தி வேண்ட
வருந்தாதே.
வலைகளில் சிக்கிய
மான்,
புரண்டு படுத்து துயிலாது,
பொறியில் சிக்கிய கிளி
கண் மூடி
கனா காணாது.
நீ
விடுவிக்கப் படும் வரை
போராடு.
உன் ஞானம் உன் மேலான
இக்கட்டுகளின் கட்டுகளை
வெட்டிப் போடும்.
சோம்பேறிகளாய்
சொக்கித் திரியாதீர்கள்.
தலைவனோ,
கண்காணிப்பாளனோ,
அதிகாரியோ இல்லாத
எறும்புகளை
பொறுமையாய் பாருங்கள்.
கோடையில் சேமிக்கிறது
பசியால்
வாடையில் உண்கிறது.
இன்னும் என்ன தூக்கம் ?
உங்கள்
இமைகளின்
இன்னும் என்ன நங்கூரத்தின்
கொக்கிகள் ?
திறவுங்கள்,
படுக்கை என்பது பாடையல்ல.
தொடர்ந்து தூங்கினால்,
வறுமை உன்மேல்
வழிப்பறிக் கொள்ளையனாய்
கொடூரமாய் பாயும்,
ஏழ்மை
உங்கள் எல்லைகளை
போர்ப்படையாய்
கைப்பற்றும்.
ஆண்டவன் வெறுக்கும்
காரியங்கள்
ஆறு.
இறுமாப்புள்ள பார்வை
அது
கழுத்திறுக்கும் போர்வை.
பொய்யுரைக்கும் நாவு
அது
உயிர் கொய்யும் தீவு.
நீதி கொல்லும் கை
அது
பாதி கொல்லும் உன்னை.
தீங்கிழைக்க ஓடும் கால்
அது
தீக்குழியாய் உனை தொடும்.
பொய்யுரைக்கும் சான்று
அது
மெய்யழிக்கும் நின்று.
தீய எண்ண உள்ளம்
அது
வீழ வைக்கும் பள்ளம்.
சண்டை மூட்டும் செயல்
அது
தொண்டை வெட்டும் வாள்.
காட்டாறு கரைபுரண்டால்
பள்ளங்கள் நிலைக்காது.
கட்டளைகள் நிலைபுரண்டால்
உள்ளங்கள் வெளுக்காது.
பெற்றோரின் கட்டளைகளை
சுவாசமாய் இழு,
உன் கழுத்துகளில் அவை
மாலையாய் விழும்.
கட்டளைகள் உனக்கான
விளக்கு.
அறிவுரைகள் அதையேற்றும்
ஒளி,
அது மட்டுமே வாழ்வின் வழி.
0
நீதி மொழிகள் – 5
0
பிறன் மனைவியை
இச்சைப் பார்வையோடும்
கொச்சைக் கண்களோடும்
காணாதீர்கள்.
விலைமகள்
ஒரு வேளை சோறு,
பிறன் மனையோ
விஷச் சாறு.
அதை
குடிக்க நினைப்பவன்
மடிவது உறுதி.
மடியில் கட்டிய நெருப்பு
ஆடையை
எரிக்காமல் இருக்குமா ?
மனசில் மூட்டிய அடுப்பு
உயிரை
தீய்க்காமல் கெடுமா ?
தழல் கொண்டு
பாதை நெய்தால்
காலுக்கென்ன உத்தரவாதம் ?
கற்பு நெறி
தவறி நடப்பவன்
தோகை தொலைத்த மயிலாய்
அழகிழந்து அலைவான்,
பழியின் குழியில் விழுவான்.
0
நீதி மொழிகள் – 6
0
நீ
ஞானத்தை உன்
சகோதரி எனச் சொல்.
உணர்வை உன்
உற்ற தோழி
எனக் கொள்.
ஒரு நாள்
மாலை இரவைத் தேடி
ஓடிய பொழுதில்
இளையவன் ஒருவன்
பரத்தையின் படியை
தீண்டல் கண்டேன்.
அவள்,
கண்கள் முழுதும் கண்ணி வைத்து
காதல் மொழியில்
அவனை இழுத்தாள்.
என் தனிமைப் படுக்கை
உன்
இரவுக் களியாட்டம் காண
விழித்துக் கிடக்கிறது.
வா என்னருகில்
என்று
சாவுக்கான பாதைக்காய்
ஒப்பந்தம் இட்டாள்.
இரைக்கு ஆசைப்பட்டு
தூண்டில் தின்னும்
மீனாய்,
பலிபீடக் கட்டையில்
படுக்கப் போகும்
பலியாடாய்.
வேடன் அம்புக்காய்
மார்பைத் தயாரிக்கும்
புறாவாய்,
அழிவின் பக்கத்தில்
அவன்
வழுக்கினான்.
நான் சொல்வதை
கேளுங்கள்,
அழிவின் பாதை
கம்பளம் போட்டு காத்திருக்கும்.
வாழ்வின் வழி
உன் அறிவின் உள்ளே
உறைந்திருக்கும்.
அறிவை வழிய விடு
வழிகள் தெரிய வரும்.
0
நீதி மொழிகள் – 7
0
இதோ
ஞானம்
பொதுவிடங்களில் இருந்து
உங்களை அழைக்கிறது.
வாருங்கள்,
என்னை ஆர்வத்தோடு தேடி
கண்டடையுங்கள்.
உங்கள்
சஞ்சல இடுக்குகளில்
என்னை பூசி செம்மையாகுங்கள்.
உலகின் நீதி
என்னை நிரப்பியோராலேயே
வழங்கப் படுகிறது,
இல்லாத பாத்திரம்
தாகம் தீர்க்குமா ?
வறண்ட மேகம்
வன் மழையை பொழியுமா ?
வாருங்கள்,
காலங்களுக்கும் முன்
நிலையானவன் நானே.
கடவுள்
மலைகளின் தலைகளை
பூமியில் இருத்தும் முன்
நான்
இருந்தேன்.
அவர்
கடல்களின் ஊற்றுகளை
கையால் திறந்தபோது
நான் நிரம்பி இருந்தேன்.
அவர்
வானக் கம்பளத்தில்
சுடரை நட்டபோது
நானும் அதை
கண்டேன்.
வெள்ளியின் பளபளப்பு
பசும்பொன்னின் மினுமினுப்பு
எல்லாம்
ஞானத்தின் தெளிவின் முன்
அழுக்காய் தோன்றும்.
திருடப் படாமல்
இருக்கிறது
நீ வருட மறுக்கும் ஞானம்.
எனக்கு
பொல்லாப்புகள் எல்லாம்
அருவருப்பு,
பர பரக்கும் பொய்களெல்லாம்
பெரும் வெறுப்பு.
என்னைத் தீண்டுவோர்
தங்கள்
களஞ்சியங்களையும்
இடைவெளியின்றி
நிரப்பிக் கொள்வார்கள்.
ஆண்டவனை தேடுங்கள்
அதன் மூலம்
என்னை கண்டடையுங்கள்.
பரத்தையின் பக்கம்
பார்வை எதற்கு ?
அறிவின் வாசலில் இருங்கள்.
கதவு திறக்கக் காத்திருங்கள்.
எல்லா செடிகளும்
மண்ணில் தான் முளைக்கின்றன.
ஆனால்
எல்லா பூக்களும் மணப்பதில்லை.
எல்லா மனிதர்களும்
கர்ப்பத்தில் உற்பத்தியானவரே
ஆனால்
அறிவு எல்லோரையும் அணைப்பதில்லை
அறிவை எடுத்து
ஆடையாய் உடுத்து.
0
நீதி மொழிகள் – 8
0
ஞானத்தை
பெற்றுக் கொள்ளும்
கரங்களுக்கே அது
போய் சேரும்.
தூர் இல்லா பானையில்
நீர் நிற்பதில்லை,
அடித்தளம் இல்லா வீட்டில்
உறுதி இருப்பதில்லை,
உண்மை உலவா உள்ளத்தில்
ஞானம் சஞ்சரிப்பதில்லை.
தெய்வ பயமே
ஞானத்தின் துவக்கம்.
ஆண்டவர் மீதான பயமே
அறிவின் ஆரம்பம்.
அழிவின் கரங்களுக்கு
ஆயிரம் நகங்கள்,
வாழ்வின் கரங்களுக்கோ
சில விரல்கள்.
அதை பற்றிக் கொள்ளுங்கள்.
நீ
ஞானிகளுக்கு மேலும்
ஞானம் வழங்கலாம்,
அவர்களின்
தோட்டம் தான்
விளைச்சலுக்காய் தயாரானது.
பரிகாசம் செய்பவருக்கு
ஞானத்தின்
பரிசுகள் தரவேண்டாம்
கழிவில் விழுந்த
கோதுமை மணி
உணவுக்கு உதவாது.
தீயவனின் பாதங்கள்
உங்கள்
வாசல் வரை வந்து
உங்களுக்காய் காத்திருக்கும்.
ஞானத்தின் தேடலையோ
நீ தான்
தேடிச் செல்ல வேண்டும்.
தேடல்கள் இல்லாமல்
வருபவை
பெரும்பாலும்
தேவை இல்லாதவையே.
0
நீதி மொழிகள் – 9
0
சாலமோனின்
நீதி மொழிகள் சில.
ஞானம் உள்ளவன்
தன்
தந்தையின் உள்ளத்தில்
உவகைப் பூவை
விளைவிக்கிறார்கள்.
அறிவற்ற மக்களோ
தன்
தாயின் கண்களுக்குள்
கண்ணீர் காய்ச்சி
ஊற்றுகிறார்கள்.
தீய வழியில்
தேடிய செல்வம்,
பாயும் புலியாய்
பாய்ந்தே மறையும்.
தேயும் நிலவாய்
மாய்ந்தே போகும்.
நல்லோரின் வயிறுகளில்
வறுமை விளையாது.
தீயோனின் வயல்களில்
பயிரும் உயிரோடிருக்காது.
சோம்பலின் கை
ஏழ்மையை உருவாக்கும்,
சுறு சுறுப்போ
வளமையை வருவிக்கும்.
அறுவடைக் காலத்தில்
தூங்குவோன்
அவமதிப்புகளையே
வாங்குவான்.
கோணலான வழிகள்
கால்களை வெட்டும்,
நாணயமான வழி
நல்லவரை உருவாக்கும்.
சண்டைகளை
தட்டி எழுப்பும் பகைமையை
பூட்டிலிடுங்கள்,
அன்பெனும் ஆட்டுக் குட்டியை
அவிழ்த்து விடுங்கள்.
அறிவுரை என்பது
வாழ்வுக்கான அரண்.
மதில் கட்டா மாளிகைகள்
கள்வரால்
கவரப்படலாம்.
வெறுப்பை மறைத்து
வெறுமனே சிரிப்பதும்,
திசைகள் எங்கும்
வசை சொல்லி அலைவதும்
வீழ்ச்சியின் அறிகுறிகள்.
உலகை அடைய
நாவை அடக்கு.
தன்
நாவுக்கு மடை கட்டாதவன்
மடையன்.
நல்லோரின் எண்ணங்கள்
வெள்ளிக் காசாய்
வெளிச்சமிடும்.
பொல்லாரின் எண்ணங்கள்
பதர்போல சிதறும்.
நல்லாரின் சொற்கள்
உள்ளத்தின் உணவாகும்,
செருக்குள்ளோர் சொற்கள்
செரிமானம் ஆவதில்லை.
பொல்லார்
எதற்குப் பயப்படுகிறார்களோ
அதுவே
அவர்களுக்கு
பரிசாய் வரும்.
நல்லோர்
எதை ஆசைப்படுகிறார்களோ
அதுவே
அவர்களுக்கு
அளிக்கப்படும்.
வஞ்சகம் பேசா நெஞ்சமே
ஞானத்தின் மஞ்சம்.
வஞ்சின நெஞ்சத்திலோ
தீமையே மிஞ்சும்.
0
நீதி மொழிகள் – 10
0
கள்ளத் துலாக்கோலில்
அளப்பது,
ஆண்டவரால்
அருவருக்கப்படும்.
கடவுளின் சினத்தை
மனிதன் சந்திக்கும்போது
களஞ்சியத் தானியங்கள்
கைகொடுக்காது.
சேர்த்து வைத்த செல்வம்
சிக்கல் விலக்காது.
நல்லோர் கிளைவிட்டாலும்
தீயோர் வீழ்த்தப்பட்டாலும்
ஊர் உற்சாகமடையும்.
நம்பிக்கையின் நாக்குகள்
ரகசியங்களை
காப்பாற்றும்,
வம்பளக்கும் வாய்க்கோ
ஒராயிரம் நாவுகள் உருவாகும்.
திறமையான தலைமை
இல்லா நாடு
வீழ்ச்சியில் சங்கமிக்கும்.
மதிகெட்ட பெண்ணின்
அழகு
பன்றிக்குப் போட்ட
மூக்குத்தி !
தெய்வத்தை நம்புங்கள்.
அதிகமாய் செலவழித்து
செல்வரானவரும்,
வறுமையாய் போன
கஞ்சனும்
காணக் கிடைப்பதுண்டு.
எத்தனை முறை
மழை தந்தாலும்
மேகம் அலையும்
வானம் என்ன வற்றிவிட்டதா ?
கொடுத்து வாழ்வோனுக்கு
மீண்டும்
கொடுக்கப்படும்.
பதுக்கல் காரரை
பாமரன் சபிப்பான்.
தன் செல்வத்தை
நம்பி வாழ்வோன்
சருகாய் உலர்வான்.
பச்சையம் செத்தபின்
இலைகளுக்கேது
இறுமாப்பு ?
கடவுளைப் பற்றியவன்
காலம் முழுதும் வாழ்வான்.
பச்சையம் விற்கும்
பகலவன் போல.
பண்பான மனைவி
கணவனுக்குக் கிரீடம்.
இழிவு தரும் மனைவி
கணவனுக்கு
அழிவு தரும் நோயாவாள்.
அடுப்பில் வெப்பம் இல்லாமல்
தெருவில்
பகட்டாய் வாழ்வதை விட,
உழைத்து வாழும்
எளிய வாழ்வே
உன்னதமானது.
பகட்டுப் பட்டாடைகள்
உள்ளத்தின் அழகல்ல,
தாமரை சிரித்தாலும்
அதன்
தண்டுகள் புதைவது சேற்றில் தானே.
தீயோனின்
கோட்டைகள்
களிமண் சுவர்களால்
கட்டப்பட்டவை.
அவை
தூறும் மழையில்
ஊறி வீழும்.
0
நீதி மொழிகள் – 11
0
ஞானிகள்
அறிவுரைகளை கேட்பதில்
ஆர்வம் காட்டுவர்,
மூடரோ
மூடி வைத்த மனதுடம்
ஓரம் கட்டுவர்.
மனதிற்குள் கவலையை
கூட்டி வைக்க வேண்டாம்
அவை
மகிழ்வைத் தின்று
வேதனையை துப்பும்.
ஆர்வமானவன்
வேட்டையாடவும் வேகமாய் இருப்பான்
சோம்பேறியோ
அதை
சமைக்கவே சங்கடப் படுவான்.
வறியவன் செல்வனாய்
நடிப்பதும்,
செல்வன் வறியவனாய்
நடிப்பதும்
தினசரி நிகழ்வுகளே.
உண்மை எப்போதும்
பொய்யின் நிழலில்
பதுங்க இயலாது.
கதிரவன் வந்து
இருட்டாடையை அவிழ்ப்பான்.
நம்பிக்கை துரோகம் வேண்டாம்
அது
தலையில் ஊற்றும் அமிலம்.
தன்னைத் தானே
தின்று தீர்க்கும்.
ஞானமுள்ளோரோடு
சேர்ந்திருங்கள்,
தீயோரை சேராதிருங்கள்
பன்றிக் கூட்டத்தில்
வண்ணத்துப் பூச்சிகள்
வளராது.
உழவு மாடுகள்
விளைச்சலின் ஆதாயம்.
ஞான சிந்தனைகள்
வளர்ச்சியின் ஆதாரம்.
உன் இன்பமும்,
உன் துன்பமும்,
உன் வேர்கள் சம்பந்தப் பட்டதே.
இன்னொருவன் வேர்களால்
உன் கிளைகள்
பூப்பூக்காது.
காதில் விழுவதை எல்லாம்
பேதை நம்புவான்,
அறிவாளி
இதயத்தில் அதைப் போட்டு
நிறுத்துப் பார்ப்பான்.
பொறுமை,
அறிவாளியின் ஆயுதம்.
அவசரம்
மதியீனனின் ஆயுதம்.
அடுத்தோரை இகழ்தல்
பாவம்,
ஒவ்வோர் மனமும்
ஒவ்வோர் இயல்பில்,
பழித்தல் பாவம்.
மேகங்கள் பலவானாலும்
மழை நீர் சுவை
ஒன்று தான்.
0
நீதி மொழிகள் – 12
0
ஏழையை வெறுக்காதே,
அது
அவனைப் படைத்த
பரமனை புறக்கணிப்பது
போன்றதே.
கனிவான வார்த்தைகள்
கடுஞ்சினத்தை
ஆற்றி விடும்.
சினத்தை சீண்டும்
கடும் சொற்களை
கட்டிப்போடு.
மனதில் மகிழ்ச்சியை
குடி வை,
பின் வரும் நாட்களெல்லாம்
வசந்த நாட்களே.
மனதில் வெறுமை வாழ்ந்தால்
வசந்த நாட்களும்
வறண்ட நாட்களே.
பகையானவன் தரும்
பெருந்தொகையை
நல்லோர் இரும்
சிறு காணிக்கை
மூடி விடும்.
கைக்கூலி வாங்காதவன்
மேன்மை அடைவான்,
ஏமாற்றுவோன்
ஏமாற்றம் அடைவான்.
படைத்த அத்தனைக்கும்
ஓர் முற்றுப் புள்ளி உண்டு.
முடிவற்ற ஒன்று
கடவுளே.
ஆண்டவரின் தராசுகளில்
ஏமாற்றுவோனின்
படிக்கற்கள்
போடப்படுவதில்லை.
அகந்தை
அழிவின் முதல் படி
வீண்பெருமை
வீழ்ச்சியின் முதல் படி.
கொள்ளையடித்த செல்வத்தோடு
குடியிருப்பதை விட
ஏழையின் குடிசையில்
வாழ்வதே மேல்.
நட்சத்திரக் கனவுகள்
எதற்கு ?
பூக்களை நேசிக்கப்
பழகிக் கொள்
கயவரின் நாக்கு
தீப்பந்தம் போன்றது.
அது
எதிர் படுவோரையெல்லாம்
எரிக்கத் துடிக்கும்.
வலிமையை விட
வலியது பொறுமை.
நகரை அடக்குதலை விட
தன்னை அடக்குதலே
தலை சிறந்தது.
மனுப் போடுவது யாராகிலும்
தீர்ப்பிடும் தலைவன்
கடவுளே.
சண்டை நடக்கும் வீட்டில்
அறுசுவை பந்தியை
அருந்துவதை விட,
மன அமைதியோடு
பழையதைப் புசிப்பதே மேல்.
வெள்ளியை உலைக்களமும்,
பொன்னை
புடக் குகையும் சோதிக்கும்.
உள்ளம் சோதிப்பது
ஆண்டவனே.
0
நீதி மொழிகள் – 13
0
மரத்துப் போனவனுக்குப்
போடும்
நூறு சவுக்கடியை விட,
உணர்வுள்ளவனுக்குத் தரும்
ஒரு சொல் உபயோகமானது.
குட்டியைப் பறிகொடுத்த
கரடியின் வேதனை,
அறிவை பெறாத
மூடனை பிடிக்கும்.
சுயநலச் சங்கிலிகளால்
அணிகலன்கள் செய்யாதே,
பொது நலப்
பாதணிகளை போட்டுக் கொள்.
மனிதனின் சொற்கள்
நதியாகவோ,
கடலாகவோ பரிமளிக்கலாம்.
ஆனால்
ஊற்று என்பது ஞானமே.
ஊற்றில்லா நீர்நிலை
வைகறையில்
வற்றிப்போகும்.
வினாவை விளங்குதலே
விடை வழங்குதலின்
முன்தேவை.
நாவினால் நீ
விதைப்பதையே
நாளை
நீ உண்பாய்.
எண்ணிப்பாராமல்
செயலில் குதிப்பது
ஆழம் அறியா
கிணற்றில் குதிப்பது போன்றதே.
ஏழைக்கு உதவுதல்
கடவுளுக்குக் கடன் கொடுப்பது.
அவர் அதை
வட்டியோடு திருப்புவார்.
போதைகளின் பாதை
மடையனுக்கு
உடையதே.
சோம்பேறி
விதைக்கும் காலம் தூங்கி
அறுவடையில்
ஆயுதமெடுத்து ஏமாறுவான்.
மனித சிந்தனைகள்
ஆழமான நீர் நிலை போன்றது,
அதை
வழிய விடுதலே
ஞானத்தின் சிறப்பு.
பேரம் பேசும் போது
சொத்தை என்று சொல்வாய்,
அதையே
வாங்கிச் சென்றபின்
நல்லதென்று பூரிப்பாய்.
தீமைக்குத் தீமை தீர்வல்ல
கண்ணீர் கொண்டு
கண்ணீர் துடைத்தால்
கண்கள் தூய்மையாவதில்லை.
பாதங்கள் தந்தவர்
பரமன்,
பாதங்களை பெற்றுக் கொண்டு
பாதைகள் தருவதை ஏன்
புறக்கணிக்கிறீர்கள்.
தாய் தந்தையை சபித்தால்
காரிருளில்
அணைவாய்.
0
நீதி மொழிகள் – 14
0
விருப்பப்படி
திருப்பப் படும்
வாய்க்கால் நீர் போன்றதே
வாழ்க்கை.
ஆண்டவனே திருப்புபவர்.
சமுதாயம்
நடத்தையை வைத்து
எடையிடும்,
கடவுள் உள்ளெண்ணத்தையும்
கிள்ளிப் பார்ப்பார்.
பலிசெலுத்தும் பாதகரை விட
நியாயவானையே
தேவன் தேடுகிறார்.
பொய் பேசி
குவிக்கும் செல்வம்,
காற்றில் பறக்கும் பஞ்சு போன்றதே.
பணக்கார
சண்டைக்காரியை மணப்பதை
விட,
குடிசையின்
சமாதானக் காரியோடான
சகவாசமே சிறந்தது.
ஏழையின் கூக்குரலுக்கு
உன்
காதுக் கதவுகள்
தாழ்பாழிட்டுக் கொண்டால்
உன் கதறல் நாளில்
எந்த சன்னலும் திறக்காது.
விவேகத்தின் வழியை
விலக்குபவன்,
பிணங்களிடையே படுத்துக் கிடக்க
பிரியப் படுபவன் போன்றவனே.
அமைதியை
கொத்தித் தின்னும்
மனைவியோடு வாழ்வதை விட,
பாலையில்
படுத்துக் கிடப்பது
பரம சுகம்.
பொய்சாட்சிக் காரன்
அழிவான்,
கூர் காதுகளுடையவனோ
நேர்மையாய் வாழ்வான்.
போலி வீரம்
போர்த்தி நடக்கும்
பொல்லாதார்,
தீர்ப்பிடும் போது
உண்மை முகம் அறிவிப்பர்.
திறமையான குதிரைகள்
படைக்கு அழகு,
ஆனால்
வெற்றி வருவது
குதிரைகளால் அல்ல
கடவுளாலேயே !!!
0
நீதி மொழிகள் – 15
0
உயரமாய் குவிக்கும்
செல்வத்தை விட,
ஊர்வாய் உன்னை
உயர்வாய் பேசும்
பெயரைச் சம்பாதித்துக் கொள்.
வறியவரும்
செல்வரும்,
பயணிக்கும் பாதை வேறானாலும்
சங்கமிக்கும் இடம்
ஒன்றென்பதை சிந்தையில் கொள்.
எதிரில் வரும் இடர்கண்டு
விவேகி மறைவான்,
அறிவற்றோன்
புதைகுழியில் புதையல் தேடி
புதையுண்டு போவான் புரிந்துகொள்.
கெட்ட வழியில்
எங்கும்
கண்ணிகள் கண்விழித்திருக்கும்
விவேகமுடையோன்
அப் பாதையை புறக்கணிப்பான்
புரிந்து கொள்.
பகிர்வின் தேவை
பொருட்களல்ல
கருணையே என்பதை
கருத்தில் கொள்.
ஏளனம் செய்வோன்
இல்லாத இடத்தில்,
சண்டை ஓயும் தெரிந்துகொள்.
வெளியே சிங்கம் நிற்பதாய்
கனவில் கண்டே,
செத்துப் போகும் கவலையில்
வாழ்ந்து சாகிறான் சோம்பேறி.
ஆழமான படுகுழியே
பரத்தையின் வாய்,
இடறி விழுபவன் எழுவதில்லை.
பிள்ளையின்
உள்ளுக்குள் ஒட்டிக் கொண்ட
தீய துருக்களை
பிரம்புகள் அகற்றுதல் தவறில்லை.
கண்டிப்பும், தண்டிப்பும்
முன்னேற்றத்தை முடக்காதவரை
முறையானதே.
ஏழையாய் இருப்பவனை
வஞ்சிப்பதும்,
ஆதரவில்லாதவனை
நீதிமன்றத்தில் நிந்திப்பதும்
வேண்டாம்,
ஆண்டவன் அந்தப் பக்கமே !.
கோபக்காரனின் நட்பும்
எரிச்சல்காரனின் ஸ்நேகமும்
உன்
வாசனையை பிடுங்கி
உன்னையும் சருகாக்கும்.
ஆலோசனையின்றி எதையும்
அனுமதிக்காதே,
ஆளுநன் வீட்டு உணவாயினும்
உண்ணும் ஆவல் கொள்ளாதே.
இல்லாத ஒன்றுக்காய்
ஏன் இந்த
உருக்குலையும் போராட்டம்,
அந்த வேகத்தில்
நீ
தொலைப்பதெல்லாம் இருப்பதையல்லவா ?
0
நீதி மொழிகள் – 16
0
நீ
தேடும் பொருள்,
தனக்குத் தானே சிறகு வளர்த்து
வானில் பறந்து
மறைந்து போகலாம் வருந்தாதே.
கஞ்சன் உணவை
உண்ணாதே,
அவன் உள்ளுக்குள்
கணக்குப் பார்ப்பவன்.
உன் நிலத்தின்
எல்லைக் கற்களை
அடுத்தவன் நிலத்தில் நிறுத்தாதே.
நல்லவற்றைக் கேள்,
அறிவுக்கு அடிமையாகு.
பிள்ளைகளை
அடித்துத் திருத்த வருந்தாதே.
பிரம்படியால் பிள்ளைகள்
செத்துப் போவதில்லை.
உண்டு குடித்த மயக்கம்
கந்தையை உடுத்தும்.
விலைகொடுப்பதானாலும்
ஞானத்தை
வாங்கத் தயங்காதே.
அது
வளமையை உனக்கு வழங்கும்.
அலைமீது நீ மிதப்பதாகவும்,
மெல்லிய
பாய்மரக் கப்பலில் படுத்திருப்பதாகவும்
உன்
புலன்களுக்குள் பொய் சொல்லும்
மதுவை தீண்டாதே.
ஞானம் வீட்டைக் கட்டும்
மெய்யறிவு
அதன் உறுதியைக் கூட்டும்.
அறிவு
அதன் அறைகளை நிரப்பும்.
வீரனை விட
ஞானவானே வலியவன்.
சிறப்பாய் வகுக்காத
போர் திட்டம்
வலிமையைக் குடித்து
தோற்றுப் போகும்.
கொலைக்களம் நோக்கி
இழுத்துச் செல்லப்படும்
வறியவரை
விடுவிக்கப் பார்.
அது உன் உள்ளத்தை வலுவாக்கும்.
தேன்
நாவுக்கு தித்திப்பு
தேவ ஞானம்
ஆன்மாவின் தித்திப்பு.
எதிரி வீழும் போதும்,
அவன் கால்
கல்லில் இடறும் போதோ
களி கூராதே.
ஆண்டவரின் சினம்
உன்மேல் திரும்பக் கூடும்.
கோபத்தின் கொம்புகளால்
யார் மார்பிலும்
பொய் சான்றுப்
பள்ளம் பறிக்காதே.
மாசு நீக்கிய வெள்ளி
உள்ளம் கிள்ளும்
அற்புத உருவமாய்
செதுக்கப்படும்.
மாசுகளிலிருந்து விலகியே இரு.
நீ
கீழிடத்துக்கு அனுப்பப் படுவதை விட
மேலிடத்துக்கு
அழைக்கப் படுவதே மேல்.
எனவே
எங்கும் பெரியவனாய் உன்னை
காட்டிக் கொள்ளாதே !
0
நீதி மொழிகள் – 17
0
சரியான நேரத்தில்
சொல்லப்படும்
ஒரு சொல்,
வெள்ளித் தட்டில் வைத்த
ஓர்
தங்கக் காசு போன்றது.
நீ நீதியின் பக்கம் நில்.
கோடைக் காலத்தில்
குடிக்கும்
குளிர்பானமாய் இரு.
உன்னைச் சுற்றிய வாழும்
அத்தனை பேருக்கும்.
தேனானாலும்
அளவாய் உண்பதே ஆனந்தம்.
உயிர் நண்பனானாலும்
அடிக்கடி
சந்தித்து சலிப்பு கொடுக்காதே.
இக்கட்டான வேளையில்
துரோகியை நம்பாதே,
அது
சொத்தைப் பல்லையும்
உடைந்த காலையும் நம்பி
தொலைதூர விருந்துக்கு
செல்வதற்குச் சமம்.
துயரத்தில் இருப்போரை
இசைக்கச் சொல்லாதே,
அது
பனிக்கட்டியில் படுத்து
உடைகளைக் களைவதாயும்,
வலிக்கும் புண்ணில்
கசப்புக் காடியைக்
கொட்டுவதற்குச் சமம்.
எதிரி பசியாய் இருந்தால்
அவனுக்கு உணவு கொடு,
அவன்
தாகமாய் இருந்தால்
தண்ணீர் கொடு.
அப்படிச் செய்வது
தவறு செய்தவன் தலையில்
எரிதழல்
கொட்டுதற்குச் சமம்.
வட காற்று
பருவ மழையை
பிரசவிக்கும்,
புறங்கூறுதல்
சீற்றப் பார்வையைத்
தோற்றுவிக்கும்.
பொல்லார்க்கு இணங்கும்
நல்லான்,
கலங்கிய ஊற்றுக்கு
உதாரணமாவான்.
0
நீதி மொழிகள் – 18
0
அரண் இல்லா மனையையும்
அளவுக்கு மீறிய புகழையும்
அனுமதிக்காதே.
கொளுத்தும் வெயிலில்
பனி உறையாது,
மதி கேடனுக்கு
புகழ் நிறையாது !
அறுவடைக் காலத்தில்
மழை உதவாது,
மதியீனனுக்கு
பெயர் ஒவ்வாது.
காரணமின்றி இட்ட சாபம்
கிளை அசைந்தால்
பறந்து மறையும் கிளியாய்
விலகிப் போகும்.
குதிரைக்குக் கடிவாளம்,
கழுதைக்குச் சவுக்கடி
மதியீனனுக்கு
முதுகில் பிரம்படி.
திருத்தம் வருத்தும்
தண்டனைகளுக்காய் வருந்தாதே.
தூதனுப்பும் பணிக்கு
மூடனை அனுப்புதல்
தன் காலை வெட்டிக் கொண்டு
ஓட்டப் பந்தயம்
போவதற்குச் சமம்.
மடையனின் கேள்விக்கு
அறிவாளியாய் பதிலளி
இல்லையேல்
உன் அறிவின் மேல்
அவனுடைய முட்டாள் முத்திரை
அழுத்தமாய் பதிந்து போகும்.
மூடனை
உயர்வான இடத்தில் இருத்துபவன்,
கவணில் கட்டிய கல்
குறிபார்க்கும் இடத்தில்
இருப்பவனுக்குச் சமம்.
நாய்
தான் கக்கியதை
தானே தின்னும்,
மூடனும் தன் தீயசெயலை
மீண்டும் மீண்டும்
தவறாமல் செய்வான்.
ஞானி
தன்னை ஞானியென்று
சொல்லமாட்டான்,
சொல்லிக் கொண்டால்
பின்
அவன் ஞானியாய் இருக்கமாட்டான்.
விவேகமாய் விடையளிக்கும்
ஏழு அறிவாளிகளை விட
தான்
அறிவாளியென்பான் சோம்பேறி,
அவன்
பிசைந்தெடுத்த சோற்றை
வாயில் திணிக்கவும் சோம்பல் கொள்வான்.
0
நீதி மொழிகள் – 19
0
பிறர் சச்சரவில்
தலையிடுபவன்,
வழியே செல்லும் வெறிநாயின்
வாலை இழுத்து
வம்பு செய்யும் மதியீனனுக்கு
ஒப்பாவான்.
கொல்லும் தீக்கொள்ளியையும்,
அழிக்கும் அம்பையும்
எறிந்து விட்டு
விளையாட்டாய் வீசினேன்
என்பான்
வஞ்சக நெஞ்சினன்.
விறகு இல்லையேல்
நெருப்பு தானாய் அணையும்,
புறங்கூறுபவன்
புறந்தள்ளப் பட்டால்
சண்டையும் சடுதியில் அடங்கும்.
புறணி கேட்பது
அறுசுவை விருந்து
இலவசமாய் வருவதுபோல்
பலர் அதை
வாரி வாரி விழுங்குவர்.
தீய மனசை
மறைக்க நினைப்பது,
மண்பாட்டத்தை
மெருகூட்டும் முயற்சியே.
பகையுணர்வு உள்ளவன்
உதடுகளில்
நாடகம் நடத்துவான்
உள்ளத்தில் மீண்டும்
கபடத்தை நிரப்புவான்.
அவனை நம்பாதே.
இன்று நடப்பதே
நீ
அறிந்ததல்ல.
பின்
நாளை நடப்பதை அறிவேன்
என்று பெருமை பாராட்டாதே.
உன்னை
புகழும் நாவு
உன்னுடையதாய்
இருக்க வேண்டாம்.
சினத்தையும்
சீற்றத்தையும் விடப் பெரிது
பாறாங்கல் பாரமான
பொறாமையே.
வெளிப்படுத்தா அன்பை விட
வெளிப்படுத்திய
திருத்தும் கண்டிப்பு
சிறந்ததே.
பகைவனின் முத்தத்தை விட
நண்பனின்
அடி அழகானது
அர்த்தமுள்ளது.
பசி அடங்கியபின்
தேனும் தேவையற்றதாகும்,
பட்டினி வயிற்றுக்கோ
கசப்பும் இனிக்கும்.
நறுமணம் நாசிக்கும்
அறிவுரை மனசுக்கும்
ஆறுதல் அளிக்கும்.
தொலைவில் இருக்கும்
சொந்தத்தை விட,
அருகிலிருக்கும் நட்பு
ஆராதிக்கப்பட வேண்டும்.
0
நீதி மொழிகள் – 20
0
கையால் எண்ணையை
இறுகப் பற்றுதல்
சுலபம்,
காற்றின் கால்களைக்
கட்டுதல் எளிது,
அடைமழைநாளின் தூறலாய்
விடாமல் தொடரும்
சண்டைக்காரி மனைவியை
அடக்குதல் கடினம்.
இரும்பை இரும்பு
கூர்மையாக்குவது போல்,
ஒருவர் மதி
இன்னொருவர் அறிவை
கூர்மைப் படுத்தலாம்.
கண்ணாடி
முகத்தைக் காட்டும்
உள்ளமே அவனை
முழுமையாய் காட்டும்.
பாதாளம் எப்போதும்
நிறைவு பெறுவதில்லை,
அத்தனை
அழகுகளை கண்டு முடித்தாலும்
நிறைவு கொள்ளாத
கண்களைப் போல.
பொல்லாங்கு செய்வோர்
போட்டி இல்லாத களத்திலும்
தொடர்ந்து ஓடுவர்,
தீயவன்
யாரும் துரத்தாத போதும்
பயத்தின் கால்களால்
பாய்ந்து ஓடுவர்.
நேர்மையானவன்
சிங்கம் போல அச்சமின்றி இருப்பான்.
ஏழைகளை ஒடுக்கும்
அதிகாரியும்,
விளைச்சலை அழிக்கும் பெருமழையும்
ஒன்றே.
குற்றத்தை ஒளிப்பவன்
என்றும் திருந்தான்,
அழுக்கிருப்பதை அறிந்தால்
மட்டுமே
கழுவும் வழியை தேடுவான்.
கொலை செய்தவன்
படுகுழி நோக்கி
தப்பி ஓடுவான்,
அவன் முடிவு அவன்
கால்களைச் சுற்றிக் கிடக்கிறது.
முகப் புகழ்ச்சி
முதலில் இனிக்கும்,
கடிந்துரைத்தலே
கடைசி வரை நிலைக்கும்.
அடிமேல் அடிவைத்தும்
திருந்தாத மூடன்
தானே அழியும்
விட்டிலுக்கு ஒப்பாவான்.
வரிக்காய் அலையும்
அரசனை விட,
நீதிக்காய் வாழும்
மன்னனையே மக்கள் மதிப்பர்.
யாரோ
உன்னைப் புகழ்ந்தால்
ஏதோ கண்ணி
இருக்கிறதென்பதை புரிந்து கொள்.
எங்கே
தெய்வபயம் ஓய்கிறதோ,
அங்கே
மனித மனம்
தீமை மேல் சாய்கிறது.
0
நீதி மொழிகள் – 21
0
மாசா ஊரன் யாக்கோபின்
மகன் ஆகூர் மொழிகள் :
நான்
மதிகேடன்.
ஞானத்தின் வெளிச்சம்
என்
ஆடைகளையும் தொடவில்லை.
கடவுளறிவும்
என்னைக் கடக்கவில்லை.
கடவுளின் வாக்குகள்
காருண்ய ஊற்றுகள்.
என் வரம் இது தான்,
வஞ்சனையும் பொய்யும்
விலகட்டும் என்னை விட்டு.
எனக்கு
செல்வம், வறுமை
இரண்டுமே வேண்டாம்
அன்றன்றைய உணவை மட்டும்
அன்பாய் அளித்தருளும்.
செல்வத்தின் படுக்கையில்
நான் படுத்தால்,
ஆண்டவன் யார் என
வினவக் கூடும்.
வறுமையின் பள்ளத்தில்
விழுந்து விட்டால்,
திருட்டுக் கூட்டத்தில்
இருக்கக் கூடும்.
இரண்டுமே ஆண்டவனை
அவமதித்தலே.
பாதாள மடை,
உயிரை தரஇயலா கருப்பை,
நீரை
விடாமல் குடிக்கும் வறண்ட நிலம்.
போதும் எனாத
கொழுந்து விட்டெரியும் நெருப்பு,
இவை நான்கும்
அட்டைப் பூச்சிகளே.
பெற்றோரைப் புறக்கணிக்கும்
புதல்வர்களை
கானகக் காக்கை கொத்தட்டும்
கழுகுகள்
அவன் கண்களைத் தின்னட்டும்.
எனக்கு
வியப்புத் தருபவை நான்கு.
சிறகசைக்காமல்
மிதக்கும் கழுகு.
கால்வழுக்காமல்
கல்லில் ஊரும் பாம்பு,
நடுக்கடலில்
மிதக்கும் கப்பல்,
ஆணுக்கு
பெண்மீதான நாட்டம்.
குளித்தபின்
தான்
சுத்தமானதாய் சொல்வாள்
விலைமகள் !
விலகிக் கொள்.
சிறியவையாயினும்
ஞானமுள்ள சிற்றுயிர்கள்
நான்குண்டு.
எதிர்கால தேவைக்கு
உணவு சேர்க்கும்
எறும்புக் கூட்டம்,
கற்பாறைக்கிடையிலும்
குகை அமைக்கும்
மெல்லிய முயல்கள்.
அரசன் இல்லையேலும்
அணிவகுத்துச் செல்லும்
வெட்டுக் கிளிகள்,
சின்னதாய் இருந்தாலும்
அரச மாளிகையிலும்
பற்றி நிற்கும்
பல்லிக் கூட்டம்.
பீடு நடை போடுபவை
மூன்று உண்டு.
பின்வாங்காச் சிங்கம்,
பெருமிதச் சேவல்,
வெள்ளாட்டுக் கடா,
படை முன் செல்லும் அரசன்.
வாயை அடக்குபவன்
வாழ்வை அடைவான்.
0
நீதி மொழிகள் – 22
0
மாசாவின் மன்னன்
இலமுவுக்கு
அன்னை அளித்த
அறிவுரைகள் :
வீரியத்தை
விலைமகளிடம் விட்டுவிடாதே.
குடிப்பழக்கம்
நல்லதல்ல தொட்டுவிடாதே.
மரிப்பவனுக்கு
மது வழங்க மறுத்து விடாதே.
எளியோர்க்கும்
நீதி வழங்க மறந்து விடாதே.
வைகரையில்
துயிலெழுவாள் நல்ல மனைவி,
அவள்
பவழத்தை விட பெரிதாய்
பேணப்படுவாள்.
எளியவனை பேணுவாள்,
உழைப்பினை நாடுவாள்
எல்லாவற்றுக்கும் மேல்
அவள்
ஆண்டவன் மேல்
அச்சம் கொண்டிருப்பாள்.
0
===========================================