குழந்தைகளைக் குறிவைக்கும் பாலியல் வன்முறை

13

குகை போன்ற அறைகள் நிரம்பிய பாதாள வீட்டுக்குள் தன் சொந்த மகளையே இருபத்து நான்கு வருடங்களாகப் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்து குழந்தைகளும் பெற்றுக் கொண்ட ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு கொடூரமான தந்தையின் அதிர்ச்சியூட்டும் செய்தி கடந்த ஆண்டு உலகையே உலுக்கி எடுத்தது.

இந்தியாவில் சமீபத்தில் சாமியாரின் பேச்சைக் கேட்டு செல்வந்தராகவேண்டும் எனும் வெறியில் தனது மகள்களுடனேயே உறவு கொண்டு வாழ்ந்த ஒரு முட்டாள் தந்தையின் மிருக வரலாறு அதிர்ச்சியாய் அலசப்பட்டது.

உலகெங்கும் பரவலாக வரும் இத்தகைய தகாத உறவுகள் பற்றிய செய்திகள், குடும்ப உறவுகள் மீதான நம்பிக்கையை பெருமளவு வலுவிழக்கச் செய்வதுடன், பெற்றோரின் மீது மிகப்பெரிய சுமையையும் சுமத்தி விடுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சுமார் 53 விழுக்காடு குழந்தைகள் குடும்பத்தினரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என திடுக்கிடும் முடிவை வெளியிட்டிருந்தது.

இத்தகைய ஆய்வுகள், நமது சமூகம் குழந்தைகள் மீதான பாலியன் வன்முறையை எத்தனை தூரம் நிகழ்த்தி வருகிறது என்பதையும், எத்தனை அலட்சியமாக அவை இருட்டுக்குள்ளேயே அமிழ்த்தப்படுகின்றன என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

உலக குழந்தைகளில் பத்தொன்பது விழுக்காடு மக்கள் நமது இந்திய நாட்டில் இருக்கின்றனர். இந்தியாவிலுள்ள மக்கள் தொகையில் 42 விழுக்காட்டினர் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால் உலகோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குழந்தைகளை மையப்படுத்தி இன்னும் பாதுகாப்புகளோ, நலவாழ்வுத் திட்டங்களோ தேவையான அளவுக்கு இல்லாதது மிகப்பெரிய அவலம் என்றே சொல்லவேண்டும்.

பெண்குழந்தையைப் பெறுவதே மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நடப்பதற்கு சமம் என பாட்டிமார் கூறும் கூற்று இன்றைய நேயமற்ற சமூகத்தில் நிதர்சனமாகியிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்த போது நிகழாத அல்லது வெளிவராத இத்தகைய தவறான பாலியல் வன்முறைகள், குடும்பங்கள் சிறிது சிறிதாய் உடைந்து வாழத் துவங்கிய கலாச்சாரச் சூழலில் தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் துவங்கியிருக்கிறது. எனினும் இத்தகைய சிக்கல்கள் கூட்டுக் குடும்பம், மற்றும் தனியே வாழும் குடும்பம் என பாகுபாடின்றி நிகழ்வது கவனிக்கத் தக்கது.

அண்ணன் தங்கை, தந்தை மகள், வளர்ப்புத் தந்தை மகள் என அதிர்ச்சியூட்டும் பாலியல் உறவுகளும், திருமணங்களும் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டதாய் இருந்தாலும் சில நாடுகள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை என்பது திகைப்பூட்டும் உண்மையாகும்.

11
ஜெர்மனியில் சட்டத்துக்கு விரோதமாக திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்ட பேட்ரிக் மற்றும் சூசன் எனும் அண்ணன் தங்கை தம்பதியர் சட்டத்தை எதிர்த்துப் போராடிய நிகழ்வு 2007ல் நடந்தது. பரபரப்பூட்டிய அந்த வழக்கில் அந்த உறவை தகாததென்றே முடிவு செய்து தீர்ப்பு வழங்கியது ஜெர்மன் அரசு.

பிரேசில், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய குடும்ப உறவுகள் அங்கீகரிக்கப் படுகின்றன. அப்படியா என அதிச்சியுடன் பார்க்கும் நம்மை நோக்கி “இந்தியாவில் சொந்த அக்காவின் மகளையே திருமணம் செய்வார்களாமே?” என வியப்புக் கேள்வியை விடுக்கின்றன மேலை நாடுகள்.

அங்கீகரிக்கப்பட்ட, மற்றும் அங்கீகரிக்கப்படாத குடும்ப உறவுகள் ஒருபுறம் இருக்க, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், சர்வதேசச் சிக்கலாகவும் உருவாகியிருக்கிறது. குழந்தைகள் மீதான இத்தகைய பாலியல் தொந்தரவுகள் அவர்களுடைய உடலையும், மனதையும் ஒருசேர பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றன.

உலகெங்கும் பல்லாயிரம் குழந்தைகள் பாலியல் வன்முறையினால் உயிரையும் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

பெரும்பாலான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. “வெளியே சொன்னால் நம் குழந்தைக்குத் தான் அவமானம்” எனும் கவலையும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் குடும்பத்தின் நெருங்கிய நபர் எனும் நிர்பந்தமும் இத்தகைய பாலியல் வன்முறைகள் சட்டத்தின் முன் வராமல் செய்து விடுகின்றன.

உலகில் மூன்று பெண் குழந்தைகளில் ஒன்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்கிறது உலக நலவாழ்வு நிறுவனத்தின் புள்ளி விவரக் கணக்கு. இந்தியாவைப் பொறுத்தவரை ஐம்பது விழுக்காடு பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்கின்றது ஆராய்ச்சியாளர் லூயில் எங்கல்பிரக்ட் அவர்களது ஆய்வு முடிவு.

12

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 48 விழுக்காடு பெண் குழந்தைகள் தாங்கள் ஆண்களாய் பிறக்காததற்காய் வருத்தப்பட்டிருக்கிறார்கள். காரணம் பாலியல் தொந்தரவுகள் !. பெண்களை மதிப்பதாகவும், துதிப்பதாகவும் இனியும் கதை அளந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
வல்லரசாக ஆகிக்கொண்டிருக்கிறோம் என ஒருபுறம் கூவிக்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் குழந்தைகளை பாலியல் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் அவலம் இந்தியாவில் தான் மிக மிக அதிகம். மும்பையில் மட்டுமே வருடத்துக்கு 70,000 பெண் குழந்தைகள் பாலியல் பலவந்தத்தில் விழுகிறார்கள் என்கிறார் ஸ்வான்சேட்டன் அமைப்பின் தலைவரான டாக்டர் ரஜத் மித்ரா.

 
இந்தியாவில் ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், டெல்லி போன்ற இடங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிக அளவில் இருப்பதாக இந்திய அரசின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

சுமார் 5 இலட்சம் குழந்தைகள் இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பல இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் பரவலாக பணி செய்து கொண்டிருக்கிறார்கள், பல இலட்சம் குழந்தைகள் இந்தியா முழுவதும் ஆதரவின்றி உலவுகின்றனர். எனவே தான் இந்தியா குழந்தைகள் மீதான பாலியல் ஆக்கிரமிப்பு நிலமாகிப் போன துயரம் நேர்ந்திருக்கிறது.

திட்டமிட்டு செயல்படுத்தப்படும் ஆரோக்கியமான பாலியல் கல்வி கூட இல்லாத நமது நாட்டில், சமூகம், குடும்ப உறவுகள் எனும் இருவேறுபட்ட கழுகுக் கண்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் கடமை தாயின் தோள்களில் தான் சுமத்தப்பட்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மிக முக்கியமாக எது “நல்ல தொடுதல்”, எது “மோசமான தொடுதல்” எது “பாலியல் தொடுதல்” என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது அன்னையின் கடமையாகும்.

நல்ல தொடுதல் அன்னையின் அரவணைப்பைப் போல ஆனந்தமாய், பாதுகாப்பாய், உற்காசமூட்டுவதாய் இருக்கும். இவை இன்னும் மிச்சமிருக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள்.

மோசமான தொடுதல் என்பதை அடித்தல், உதைத்தல், காயப்படுத்துதல் போன்ற வலி ஏற்படுத்தும் நிகழ்வுகளாகச் சொல்லிக் கொடுங்கள்.

மூன்றாவதாக மிக முக்கியமான “பாலியல் தொந்தரவுத்” தொடுதல் பற்றி விளக்குங்கள். இந்தியாவில் 72.1 % குழந்தைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்கிறது அரசு ஆய்வு. எனவே பாலியல் தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் தெளிவாக விளக்கி விடுதல் மிகவும் அவசியமாகிறது.

14

தினமும் குழந்தைகளிடம் அன்றைய தினம் நடந்த செயல்கள், சந்தித்த மனிதர்கள் போன்ற அனைத்தையும் விரிவாக கேட்டு அறியுங்கள். ஏதேனும் பிழை நடந்திருப்பதாக உணர்ந்தால் பதட்டப்படாதீர்கள். முழுமையாய் கேளுங்கள்.

குழந்தை எதைச் சொன்னாலும் முழுமையாய் நம்புங்கள். பாலியல் தொந்தரவுகளை குழந்தைகள் ஒரு போதும் உருவாக்கிச் சொல்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏதேனும் “விளையாட்டு” எனும் பெயரில் குழந்தைகள் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதுண்டு என்பதை அன்னையர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான வெளிப்படையான, நட்புறவும் நம்பிக்கையும் கூடிய உரையாடல் மிக மிக முக்கியம். இல்லையேல் குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

சில சூழல் அல்லது சில நபர்களுடைய அருகாமை சந்தேகத்தைத் தருவதாக இருந்தால் அந்த சூழலைத் தவிருங்கள். குறிப்பாக குழந்தை யாருடனாவது நெருங்குவதை விரும்பவில்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள். அங்கே ஏதேனும் பிழை இருக்கலாம் !

உங்கள் குழந்தைகளை மூன்றாவது நபரிடம், நீங்கள் கூடவே இல்லாதபோது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக செலவிட அனுமதிக்காதீர்கள்.

உங்கள் குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தமானது. அதை வேறு யாரும் தொடும் உரிமை இல்லை என்பதை வெகு தெளிவாக, அழுத்தமாகவே குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதை மீறி யாரேனும் தொந்தரவு கொடுத்தால் கண்டிப்பான “நோ” சொல்ல குழந்தைகளைப் பழக்குங்கள்.

குழந்தைகளுடைய நடவடிக்கையில் பதட்டம், கோபம், மன அழுத்தம், சோகம் போன்ற உணர்வுகள் மேலோங்கியிருப்பதைக் கண்டாலோ, உடலில் ஏதேனும் அடையாளங்களைக் கண்டாலோ உஷாராகிவிடுங்கள்.

குழந்தைகளிடம் ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வு நடந்தால் யாரைச் சந்திக்க வேண்டும், யாரிடம் பேசவேண்டும் என்பதைச் சொல்லி வையுங்கள்.

குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளருங்கள். வீட்டில் பெற்றோர் முன்மாதிரிகையாக இருப்பதும், குழந்தைகளிடம் நேரத்தைச் செலவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதும் மிக மிக முக்கியம்.

குழந்தைகள் தவறு செய்தால் பக்குவமாய் திருத்துங்கள். பிழை செய்வது மனித இயல்பு, அதைத் திருத்துவதில் தான் மனித மாண்பு இருக்கிறது என்பதை உணர்த்துங்கள். இல்லையேல் பிழைகளை உங்களிடமிருந்து மறைக்கும் வழியையே குழந்தைகள் யோசிக்கும்.

திரையரங்கு, பேருந்து, பள்ளிக்கூடம், விளையாட்டுப் பூங்கா போன்ற இடங்களில் கவனமாக இருக்கவேண்டிய வழிமுறைகளை விளக்குங்கள். எதையும் பயமுறுத்தும் விதமாகச் சொல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

“அம்மா, அப்பாவிடம் சொல்லாதே” என யாராவது ஏதாவது சொன்னார்களா, செய்தார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பாலியல் விஷயத்தில் வாக்குறுதிகளை உடைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவையுங்கள்.

depressedREX_291x450“அம்மாவிடம் சொல்லுவேன், அப்பாவிடம் சொல்லுவேன் “என பயமுறுத்தி யாராவது தொந்தரவு செய்தார்களா என்பதையும் கேட்டறியுங்கள். இத்தகைய “பிளாக் மெயில்” கள் பெரும்பாலும் தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுக்குள் குழந்தைகளை இட்டுச் செல்லும்.

யாராவது ஏதாவது அன்பளிப்புகள், இனிப்புகள் தந்தார்களா ? அல்லது தருவதாக வாக்களித்திருக்கிறார்களா என்பதை கேளுங்கள். அப்படியெனில் யார் எதற்காக போன்ற செய்திகளையும் கவனமாய் கேட்டறியுங்கள். அவை பாலியல் தொந்தரவுக்கான முன்னுரையாய் இருக்கலாம்.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என எந்த விதத்திலும் இருக்கலாம் குழந்தைகளைத் தொந்தரவு செய்யும் நபர். எனவே ஒரு பொதுவான எச்சரிக்கை உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டுதல் அவசியம்.

குழந்தைகளிடம் திடீர் பாசம் பொழியும் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது ஒரு கண் வைப்பது அவசியம். குழந்தைகளை கடைக்கு அழைத்துப் போகிறேன், திரையரங்கு அழைத்துச் செல்கிறேன் என முன்வந்தால் நாகரீகமாக தவிர்த்து விடுங்கள்.

ஆபாசப் புத்தகங்கள், படங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து அவர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதும், பின்பு அதை வைத்தே அவர்களை மிரட்டி, பயமுறுத்தி தொடர் தொந்தரவுகளை கொடுப்பதும் பரவலாக நிகழும் செயல் என்பதால் எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்.

நம்பிக்கைக்குரியவர் அல்லாத நபர், புகைப்படம் வீடியோ போன்றவற்றை எடுத்தால் “வேண்டாம்” என கண்டிப்புடன் மறுக்க குழந்தைகளைப் பழக்குங்கள். தனியே குழந்தைகளை வைத்து தகாத படங்கள் எடுக்கும் நிலையிலிருந்து தப்பிக்கலாம்.

90 விழுக்காடு பாலியல் தொந்தரவுகளும் குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே வருகின்றன. எனவே குழந்தைகள் உண்மையை விரைவில் பெற்றோரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம். தாயும், மகளுமான மிகவும் தனிமையான சூழலில் நிகழும் உரையாடலே உண்மையை முழுமையாய் வெளிக்கொணரும்.

தன் சிறகின் கீழ் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல தனது குழந்தைகளைப் பாதுகாக்கும் கடமை அன்னையர்க்கு உண்டு. அதை சரிவரச் செயல்படுத்த குடும்பம் எனும் கட்டமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் அன்னையர் வழிகாட்டிகளாய் இருக்கவேண்டியது அவசியம்.

4_diverse_kids_smiling

பாலியல் தொந்தரவுகள் சில தவறான நம்பிக்கைகளும், உண்மையும்

நம்பிக்கை

குழந்தைகளை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவது பெரும்பாலும் நமக்குத் தெரியாத நபர்களே ! நமது உறவினர்களும், நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் பரிசுத்தமானவர்கள்., அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களைச்

உண்மை
90 விழுக்காடு தொந்தரவுகளும் தெரிந்த நபர்களாலேயே வருகின்றன !

4_diverse_kids_smiling

—————————————————————
நம்பிக்கை

எனது குழந்தைகளிடம் ஏற்கனவே இதைப் பற்றி விளக்கிவிட்டேன் எனவே அவர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏதும் இருக்காது.

உண்மை

குழந்தைகளுக்கு அடிக்கடி இதைக் குறித்து உரையாடுங்கள். குழந்தை எச்சரிக்கையாய் இருந்தாலும் பலவந்தமாகவோ, ஏமாற்றியோ யாரேனும் அவர்களை தொந்தரவு செய்து விட முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

எனது குழந்தையுடன் எனக்கு மிக நல்ல நட்புறவு உண்டு. என்ன பாலியல் தொந்தரவு நடந்தாலும் குழந்தை என்னிடம் உடனடியாக சொல்லிவிடும்

உண்மை

குழந்தைகள் பெற்றோருடன் எத்தனை சகஜமான நட்புறவு கொண்டிருந்தாலும் பாலியல் தொந்தரவுகளை சகஜமாகப் பகிர்ந்து கொள்வதில்லை. எனவே தொடர்ச்சியான கவனிப்பும், பராமரிப்பும், பகிர்தலும் அவசியம்

4_diverse_kids_smiling

—————————————————————
நம்பிக்கை

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நகரங்களில் மட்டுமே உண்டு

உண்மை

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை கிராமம், நகர்ப்புறம் என எல்லா இடங்களிலும் உண்டு என்பதே உண்மை

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

திருமணமான, அல்லது நடுவயது தாண்டியவர்கள் மட்டுமே இந்த பாலியல் தொந்தரவு செய்யும் பட்டியலில் வருவார்கள்.

உண்மை

பதின்வயது வாலிபர்கள் கூட பாலியல் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள்.

4_diverse_kids_smiling 

—————————————————————

நம்பிக்கை

ஏழை குடும்பங்களில் மட்டுமே பாலியல் தொந்தரவுகள் இருக்கும்.

உண்மை

ஏழை பணக்காரர் எனும் பாகுபாடு இன்றி பாலியல் தொந்தரவுகள் இருக்கும்.

 

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

மனநோயாளிகள் தான் குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுவார்கள்.

உண்மை

நல்ல மனநலம், உடல் நலம் உடையவர்களே பெரும்பாலும் இத்தகைய வன் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

 

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த செயல்களையெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக் கொடுக்கின்றனர். எனவே இனிமேல் தனியே நான் எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை.

உண்மை

குழந்தைகளுக்கு இத்தகைய சிக்கல்களைக் குறித்து விளக்கும் பெரிய பொறுப்பு அன்னைக்கு உண்டு. தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் குழந்தைகளிடம் அனைத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டியது அன்னையரின் கடமையாகும்.

 

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

சிறு சிறு பாலியல் தொந்தரவுகள் ஆபத்தற்றவை.

உண்மை

சிறு சிறு தொந்தரவுகள் குழந்தையின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும். அவர்களுடைய மனதிலும், உடலிலும், சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

 

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

பாலியல் தொந்தரவுகள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே.

உண்மை

மிக மிகத் தவறு. 6 சிறுவர்களில் ஒரு சிறுவன் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறான் என்கிறது உலக நலவாழ்வு நிறுவன அறிக்கை.

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

அவர் ரொம்ப நல்லவர், அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார், அல்லது தெரியாமல் தவறிழைத்திருப்பார். இனிமேல் நிச்சயம் நடக்காது. பழையவற்றை மனதில் வைத்திருக்கத் தேவையில்லை.

உண்மை

பாலியல் தொந்தரவு செய்பவர்கள் ஒருமுறையுடன் நிறுத்துவதில்லை. அவர்களுடைய சிந்தனை முழுக்க முழுக்க அதைச் சார்ந்தே இருக்கும். அதற்காகவே நல்லவர்களாய் நடமாடுபவர்கள் தான் அதிகம். எச்சரிக்கை அவசியம் !

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

குழந்தைகளிடம் இதையெல்லாம் பேசாமல் இருப்பதே நல்லது.

உண்மை

குழந்தைகளிடம் மிக விரிவாக, தெளிவாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் விதமாக இவற்றைப் பேசுவது மிகவும அவசியம்.

தமிழிஷ் வாக்களிக்க…

பெண்ணே நீ - இதழில் வெளியான கட்டுரை

 

கவிதை : சென்னை

100ft-bye-pass

அப்போதெல்லாம்
வெறும் ஐயாயிரம் தான்
நாலு கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தால்
நான் கோடீஸ்வரன்
அங்கலாய்த்தார் நண்பர்

அப்போதெல்லாம்
இங்கே
ஆள் நடமாட்டமே இருக்காது
பயங்களின்
பதுங்கு குழிதான் இந்த இடம்
என்றார் இன்னொருவர்.

எங்கே மழை பெய்தாலும்
இங்கே தான்
வந்து தேங்கும்.
இது
ஏரியாய் கிடந்த இடமப்பா
என்றார் மற்றொருவர்

அதோ அந்த இடத்தில்
இருந்தது
ஒரே ஒரு ஒற்றையடிப்பாதை
சைக்கிளில் வரவே
சங்கடப்படவேண்டும் அப்போதெல்லாம்

இதோ இந்த ஏரியா
நான்கு ரவுடிகளின்
தீர்மானத் தளங்கள்னா நம்புவியா ?
இது
கொலைகளின் கூடாரமாமப்பா !

ஆளாளுக்கு
காலாட்டிக் கொண்டே
கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம்
கிரவுண்ட் ஐம்பது இலட்சம் தான்
நாலு வாங்கிப் போட்டிருக்கலாம்
என
பிற்காலத்தில் பேசக் கூடும்
நான்
என் மகனிடம்

ஆறு வயது, ஆறா மனது

tears
சில துயரங்களை வார்த்தைகளால் நிச்சயம் சொல்ல முடியாது.
உயிரை உலுக்கிப் போடும் நிகழ்வுகளைச் சொல்ல கண்ணீரால் தான் முடியும்.
சில துயரங்களைக் கண்ணீர் கூட சொல்லிவிடாது
உறைந்து போனபின் உருகுவது கூட கடினமாகிவிடுகிறது.

நீண்டகாலக் கனவாக இருந்து, நிஜமாய் மாறிய சொந்தக் காரில் குடும்பத்துடன் ஆனந்தமாய் பாண்டிச்சேரி பயணித்தபோது,
கோர விபத்து ஒன்றில் படுகாயமடைந்து
ஆறு வயதேயான தனது தேவதை போன்ற மகன் ராகுலை
இழந்து, படுகாயமடைந்து
சொல்லொண்ணாத் துயரத்தில்  இருக்கும் உயிர்தோழியும், சகபதிவருமான ( உன்னுடன் ) ஜானகி அவர்களின் துயரத்தை என்னால் எப்படியும் சொல்லி விட முடியாது.

“வாடா ராகுல்” என மகனின் உடலருகே, அவனுடைய ஆடைகளை நெஞ்சோடணைத்து அவர் கதறிய கதறலைக் கேட்டபின் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

வாய் திறந்தால் அழுகை வெடித்துவிடுமோ எனும் பயத்தில் பேசாமலேயே இருந்து விடுகிறேன்.
அவருடைய துயரத்தில் பங்குகொள்ளும் விதமாய் எனது இரண்டு வலைத்தளங்களும் சில நாட்களுக்கு மெளனமாய் இருக்கும்.

12 ANGRY MEN – வியக்க வைத்த திரைப்படம் !

12-angry-men-1-800“கருப்பு வெள்ளை திரைப்படம், படம் முழுவதும் ஒரே அறையில் எடுத்திருக்கிறார்கள். உனக்கு நிச்சயம் புடிக்கும்” எனும் பீடிகையோடு என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார் இந்தத் திரைப்படத்தை.

ஒரே அறையிலா ? அதுவும் கருப்பு வெள்ளையிலா எப்படி எடுத்திருப்பார்கள் எனும் ஆர்வமே படத்தை உடனே பார்க்க வைத்தது. இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் தவறவிட்டேனே என நினைக்க வைத்தது இந்த 12 Angry Men எனும் திரைப்படம்.

வினாடிக்கு மூன்று ஷாட்கள் மாறினால் தான் நல்ல படம் என்றும், லொக்கேஷன்கள் புதிது புதிதாய் இருக்கவேண்டும் இல்லையேல் பார்வையாளனுக்குப் போரடிக்கும் என்றெல்லாம் சொல்லப்படும் இலக்கணங்களை உடைத்துக் காட்டும் பல திரைப்படங்கள் மேலை நாடுகளில் தான் பிறப்பெடுக்கின்றன என்றே கருதுகிறேன். போன்பூத் – சில வருடங்களுக்கு முன்பு அந்த வகையில் பிரமிப்பூட்டிய படங்களில் ஒன்று.

சரி, 12 Angry Men படத்தின் கதை தான் என்ன ?

தந்தையைக் கொலை செய்து விட்டான் எனும் குற்றச் சாட்டுகளுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறான் சேரியில் வசிக்கும் ஒரு இளைஞன். அவன் கொலை செய்திருக்கிறான் என்பதை நம்பி விடுகிறது நீதி மன்றம்.

நேரில் பார்த்த பெண்ணின் சாட்சியம், கொலை நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கத்தி, கேட்ட சத்தங்கள், இளைஞன் அறையிலிருந்து ஓடி வருவதைப் பார்த்த முதியவர் என சாட்சியங்கள் எல்லாம் இளைஞன் குற்றவாளி என அடித்துச் சொல்கின்றன.

போதாக்குறைக்கு அந்த நேரத்தில் படம் பார்க்கப் போனேன் எனச் சொல்லும் இளைஞனுக்கு அந்த படத்தின் பெயரோ, கதையோ, கதாபாத்திரங்களோ எதுவும் நினைவில் இல்லை. பட்ட காலிலேயே படும் என்பது போல அவனிடமிருந்த கத்தியும் அந்த இரவில் காணாமல் போய்விடுகிறது.tn2_12_angry_men_4

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்பா – நீ குற்றவாளிதான் என நீதிமன்றம் ஏறக்குறைய முடிவெடுத்து விடுகிறது.

இனி இந்த வழக்கைக் கவனித்து வரும் 12 நடுவர்கள் இவன் தான் குற்றவாளி அல்லது நிரபராதி என்று ஒரு தீர்ப்பை எழுதவேண்டும் அவ்வளவு தான் பாக்கி. இந்தப் பன்னிரண்டு பேருமே ஒத்த முடிவுடன் இந்த முடிவை எடுக்கவேண்டும் என்பது தான் சட்டம்.

அந்த பன்னிரண்டு பேரும் முன்பின் அறிமுகமற்றவர்கள். புழுக்கமாய் இருக்கும் ஒரு சிறிய அறைக்குள் சென்று அமர்ந்து, “சரி சரி.. இவன் குற்றவாளி தானே. சீக்கிரம் முடிவெடுத்து விட்டு இடத்தைக் காலி செய்வோம்” என அமர்ந்தால், ஒருவர் மட்டும் (கதாநாயகன் ஹென்ரி பாண்டா ) இவன் நிரபராதியாய் கூட இருக்கலாமே என ஒரு வாதத்தை முன்வைக்கிறான்.

ஒரு வேற்றுக் கிரக வாசியைப் போலவும், தீண்டத்தகாதவனைப் போலவும் மற்ற பதினோரு பேரும் அவனைப் பார்க்கிறார்கள். “சரி.. என்ன தான் சொல்ல வரே ?” என அலட்சியமாய் கேட்கும் அவர்களிடம் “இது ஒரு இளைஞனுடைய வாழ்க்கைப் பிரச்சனை. எனவே இதைப் பற்றி நாம் கொஞ்ச நேரம் விவாதிப்போம்” என்கிறான்.

இளைஞன் கொலையாளி என்பதை சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நம்பும் பதினோரு பேருமாக கதாநாயகனை ஒத்துக் கொள்ள வைக்கும் முயற்சியில் இறங்கி, கடைசியில் எல்லோருமே இளைஞன் நிரபராதியாய் இருக்கலாம் என  படம் நிறைவுறுகிறது.

அந்த விவாதக் களமே முழு திரைப்படமும். கொலையோ, கொலை நிகழ்ந்த இடங்களோ, நபர்களோ யாருமே காட்சிகளாய் காட்டப்படவில்லை. முழுக்க முழுக்க கதை வசனமே கதையை விளக்குவதும், நகர்வதும், நிற்பதும், ஓடுவதும், அழுவதும் என எல்லா வேலைகளையும் செய்கிறது.

ஒரு அறைக்குள் விவாதிக்கும்போது தெரியவரும் சங்கதிகளும், சந்தேகங்களும் ஏன் உண்மையான வழக்கு விசாரணையில் எழவில்லை எனும் நியாயமான கேள்விக்குப் பதிலாகத் தான் அந்த இளைஞன் சேரியில் வசிப்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான் என்பது நுட்பமான இழை.

பன்னிரண்டு வேறுபட்ட குணாதிசயமுடைய நபர்களின் இயல்புகளையும், அவர்களுடைய சிந்தனை ஓட்டங்களையும், சிக்கல்களையும், சண்டைகளையும் சற்றும் போரடிக்காமல் ஒன்றரை மணி நேரம் வார்த்தைகளாலேயே படமாக்கியிருக்கும் இயக்குனர் சிட்னி லூமெட் பிரமிக்க வைக்கிறார்.

இந்தத் திரைப்படம் முதலில் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டு பின்னர் இதன் அசாத்தியத் தாக்கம் காரணமாக திரைப்படமாக வெளியிடப்பட்டதாம் ( இதை எழுதும் போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கி திரை வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்த டூயல் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதுவும் முதலில் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது )

1957ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஐம்பது ஆண்டுகள் தாண்டிய இன்றைய நவீன திரைப்படங்களுக்கு ஒரு சவாலாய் இருக்கிறது என்றால் மிகையல்ல.

வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers