கவிதை : நீ எனது சுவர்க்கத்தின் முகவரி.

amritarao

 

 

 

 

 

பிரியமே,
நீ
சங்கீதம் கற்கிறாயாமே !
குயிலுக்கு எதுக்கடி
புல்லாங்குழல் பயிற்சி ?

 

 

0

 ஒரு
நாட்டிய மேடையின்
அத்தனை கொலுசுகளும்
சட்டென்று
மௌனமாயின,
என் மனசுக்குள்
நீ
சிரிக்கத் துவங்கிய வினாடியில்.

0

8_001

 

 

 

 

உன்
இயல்போடே காதலிக்கப்
பிடித்திருக்கிறது எனக்கு,
என்
இயல்பே
பிடிப்பதில்லை உனக்கு.

 

 

 

 
0

உன்னால்
தினம் தினம்
நிராகரிக்கப்பட்டும்
கடல் நீர் அள்ளிக் கண்ணீர் துடைக்கும்
பேதையாய்
உப்புக் கன்னங்களோடே
உலவுகின்றேன்.
0

aaaDSC_01428-_28_

 

 

 

 

 கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில்

 

 

0

 

எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு ?

0

DSC_0324

 

 

 

 

உன்
வரைபடம் பார்த்துப் பார்த்தே
வயதாகிறது எனக்கு,
இன்னும்
நீ
பயணிக்கும் பாதை
புரியவே இல்லை.

 

 
0

 

நீ
பேசியதை விட
பேசுவாய் என்று
நினைத்தது தான் அதிகம்,
மிக மிக அதிகம்.
தொடாமலேயே
சிணுங்கும்
ஓர் தொட்டாச்சிணுங்கித்
தோட்டம் தானே நீ.
0

DSC_0028

 

 

 

 

இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?

0

 உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.

 

தமிழிஷில் வாக்களிக்கலாமே…

கி.மு : எரிகோ வீழ்ந்த வரலாறு.

jericho_walls_wide_view

மோசே இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டியாக இருந்து கானானை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார். அவருக்குப் பின் மக்களை வழிகாட்டுவதற்காகத் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர் தான் யோசுவா.

யோசுவாவும் மோசேயைப் போல கடவுளை முழுமையாக நம்பி அவருடைய வழியில் நடந்து வந்தார். மோசேயைக் கடவுள் தன்னிடம் அழைத்துக் கொண்டபின் யோசுவா மோசேயின் இடத்திற்கு வந்தார். இப்போது மக்கள் யோசுவாவின் கீழ் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். யோசுவாவின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் நிறைய போர்களில் ஈடுபட்டனர். கடவுள் அவர்களோடு இருந்ததால் பல வெற்றிகளைப் பெற்றனர்.

இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் கொடுப்பதாக வாக்களித்திருந்த ஒரு இடம் எரிகோ. யோசுவா முதலில் எரிகோவைக் கைப்பற்றத் திட்டமிட்டார்.

யோசுவா தன் நம்பிக்கைக்குரிய இரண்டு பேரை அழைத்து,’ நாம் நமக்குரிய இருப்பிடத்தை அடைவதற்குரிய நேரம் வந்துவிட்டது. முதலில் எரிகோவைக் கைப்பற்றவேண்டும். நீங்கள் இரண்டுபேரும் அந்த நகருக்குள் சென்று நோட்டமிட வேண்டும். எரிகோவைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் நீங்கள் சேகரித்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்.’ என்றார்.

‘சரி… நாங்கள் சென்று நாட்டை உளவு பார்த்து வருகிறோம். என்னென்ன தகவல்கள் வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் நாங்கள் எதையும் தவறவிடாமல் பார்த்து வருவதற்கு உதவியாய் இருக்கும்’ அவர்கள் சொன்னார்கள்.

‘முதலில் நகரின் அமைப்பு நமக்குத் தெரியவேண்டும். அவர்களின் நகருக்குள் எந்த வழியாக நுழையலாம் ? எந்த யுத்த தந்திரம் ஒத்து வரும் ? நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன ? மக்கள் எப்படிப்பட்டவர்கள் ? என்பதையெல்லாம் நீங்கள் அறிந்து வரவேண்டும்’ யோசுவா தெளிவுபடுத்தினார். உளவாளிகள் தங்கள் பணியைச் செய்யப் புறப்பட்டனர். எரிகோ பட்டணம் யோர்தான் நதியின் மறுகரையில் இருந்தது. அவர்கள் இருவரும் நதியைக் கடந்து எரிகோவுக்குள் நுழைந்தார்கள்.

அவர்கள் எரிகோ நகரை நோட்டமிட்டுக் கொண்டே நடந்தார்கள். நகர் மிகவும் உயரமான வலிமையான மதில்சுவரினால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதைத் தாண்டி உள்ளே செல்வது மிகவும் கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

மதில் சுவரின் அருகே காவல் காத்துக் கொண்டிருந்த படைவீரர்கள் இவர்களைக் கண்டு சந்தேகப்பட்டார்கள்.

‘இவர்களைப் பார்த்தால் நம்முடைய தேசத்தவர் போல இல்லை… ஏதோ திட்டத்துடன் தான் இங்கே வந்திருக்கின்றார்கள்’

‘கோட்டைக்கு இரவில் கூட காவல் இருக்குமா என்று அவர்கள் ஒருவரிடம் விசாரிப்பதைக் கண்டேன்’ காவலர்களின் சந்தேகம் வலுத்தது.

‘எதற்கும் நாம் மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொல்வோம்’ அவர்கள் முடிவெடுத்து மன்னனிடம் சென்று தங்கள் சந்தேகத்தைச் சொன்னார்கள்.

‘அப்படியா ? அவர்கள் உளவாளிகளாய்த் தான் இருக்கவேண்டும். ஏன் நீங்கள் அவர்களைக் கைதுசெய்து அழைத்து வரவில்லை. உடனே செல்லுங்கள். போய் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களைப் பிடித்து அரசவைக்குக் கொண்டுவாருங்கள்’ மன்னன் கட்டளையிட்டான். வீரர்கள் உளவாளிகளைத் தேடி எரிகோ ம் அதிலருகே வந்தார்கள்.

உளவாளிகள் இருவரும் ஒரு சத்திரத்தை அடைந்தார்கள். அந்தச் சத்திரத்தை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பெண். அவளுடைய பெயர் ராகாப். ராகாப் என்பதற்கு விசாலம் என்பது பொருள். அவள் எரிகோ மதிலை ஒட்டிய ஒரு சத்திரத்தில் பாலியல் தொழில் செய்து பிழைப்பை நடத்தி வந்தாள். மனதளவில் அவள் மிகவும் நல்லவள்.

வந்த இருவரையும் ராகாப் வரவேற்றாள்.

‘நீங்கள் யார் ? உங்களை நான் இதற்குமுன் பார்த்ததேயில்லையே’ அவள் கேட்டாள்.

‘நாங்கள் ஒரு விஷயமாக இங்கே வந்திருக்கிறோம். அது என்னவென்பதை நீ விரைவிலேயே அறிந்து கொள்வாய்’ அவர்கள் சொன்னார்கள்.

இதற்கிடையில் அரசரின் படையினர் அந்த இருவரையும் தேடி அவளுடைய சத்திரத்திற்கு வந்தார்கள். அரச வீரர்கள் வந்திருப்பதை அறிந்ததும் அவள் உளவாளிகள் இருவரையும் பரணின் மீது கிடத்தி சணல்கொண்டு மூடினாள். பின் வெளியே வந்தாள்.

‘இங்கே இரண்டு உளவாளிகள் வந்ததாக கேள்விப்பட்டோ ம். உண்மையா ?’ வந்த வீரர்கள் கேட்டார்கள்.

‘இங்கே இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் உளவாளிகளா ? அது எனக்குத் தெரியாதே. தெரிந்திருந்தால் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து உங்களிடம் ஒப்படைத்திருப்பேனே.’ ராகாப் நடித்தாள்.

‘அவர்கள் இப்போது எங்கே ?’

‘அவர்கள் இரவில் வந்தார்கள். வந்துவிட்டு கொஞ்ச நேரத்திலேயே சென்று விட்டார்கள். என்வீட்டுக்கு மக்கள் வருவதும் போவதும் சகஜம் தான். ஆனால் யாரும் இங்கே தங்குவதில்லை. அவர்கள் இருவரும் யோர்தான் நதியிருக்கும் பக்கமாகச் சென்றார்கள்’ ராகாப் சொன்னாள்.

‘சரி.. அவர்கள் இனிமேல் இங்கே வந்தால் உடனே எங்களுக்குத் தகவல் சொல்’ சொல்லிக் கொண்டே வீரர்கள் யோர்தானை நோக்கி விரைந்தார்கள். அவர்கள் சென்றபின் சணலுக்குள் ஒளிந்திருந்த உளவாளிகள் இருவரும் வெளியே வந்தார்கள்.

‘எங்கள் உயிரைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி’

‘ நன்றி இருக்கட்டும். முதலில் உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் யார் ?’

‘எங்களைக் காப்பாற்றிய உன்னிடம் நாங்கள் உண்மையை மறைக்க விரும்பவில்லை. நாங்கள் இருவரும் இஸ்ரயேலரின் உளவாளிகள்.’

‘இஸ்ரயேலரின் உளவாளிகளா ? எகிப்திலிருந்து மீண்டு வந்த அந்த இஸ்ரயேலர்களா ?’ ராகாப் ஆச்சரியமாய்க் கேட்டாள்.

‘ஆம். அதே இஸ்ரயேலர்கள் தான்’

‘உங்களுக்குக் கடவுள் செய்த அற்புதங்களைப்பற்றியெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்கள் கடவுள் உண்மையிலேயே மிகவும் சக்திவாய்ந்தவர் தான். நீங்கள் இந்த நாட்டின் மீது போர் தொடுக்கப் போகிறீர்களா ?’ ராகாப் கேட்டாள்.

‘ஆம். இந்த நகரைக் கடவுள் எங்களுக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே நாங்கள் இந்த நகரைக் கைப்பற்றி குடியேறுவோம்’ அவர்கள் சொன்னார்கள்.

‘நீங்கள் போரிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்’ ராகாப் கேட்டாள்.

‘சொல்.. எங்கள் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் நீ இஸ்ரயேல் குலத்துக்கே உதவியிருக்கிறாய். உனக்கு என்ன உதவி வேண்டும் என்று தயங்காமல் கேள்’

‘நீங்கள் போரிட்டு நகரைப் பிடிக்கும்போது என்னையும், என் குடும்பத்தினரையும் கொல்லாமல் காப்பாற்ற வேண்டும்’ அவள் விண்ணப்பித்தாள்.

‘சரி… உன்னையும் உன் குடும்பத்தினரையும் நாங்கள் கொல்லமாட்டோ ம். போர் நடக்கும் போது, நீ உன்னுடைய உறவினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இந்த வீட்டில் தங்கியிருக்கவேண்டும். வீட்டை மூடியே வைத்திரு. வீட்டு சன்னலில் ஒரு பெரிய சிவப்புக் கயிறு ஒன்றைக் கட்டிவை. அது எங்களுக்கு அடையாளமாக இருக்கட்டும்’ அவர்கள் சொன்னார்கள். ராகாப் திருப்தியடைந்தாள்.

‘சரி.. நாங்கள் எப்படி இங்கிருந்துத் தப்பிப்பது. எங்கும் எங்களைத் தேடி வீரர்கள் நிற்பார்களே’ உளவாளிகள் பயந்தனர்.

‘கவலைப்படாதீர்கள். இந்த வீட்டு மாடியிலுள்ள சன்னல் எரிகோ மதிலை ஒட்டியே இருக்கிறது. ஒரு நீளமான கயிற்றை ஜன்னலில் கட்டி அதன் வழியாக நீங்கள் மதிலைத் தாண்டலாம்’ அவள் யோசனை சொன்னாள்.

‘ஓ… மிக்க நன்றி. அது நல்ல யோசனையாய் இருக்கிறது. அப்படியானால் நாங்கள் விரைவிலேயே யோர்தானை அடைந்துவிடலாம்’

‘இல்லை…….. நீங்கள் நகருக்கு வெளியேபோனதும் யோர்தான் நதிக்குச் போகாதீர்கள். அங்கே கண்டிப்பாக காவல் பலமாக இருக்கும். அருகிலேயே ஒரு மலைப்பகுதி இருக்கிறது. நீங்கள் அங்கே போய் மூன்று நாட்கள் பாறைகளுக்கிடையே ஒளிந்திருங்கள். மூன்று நாட்களுக்குப் பின் எப்படியும் மன்னன் உங்களைத் தேடுவதைக் கைவிடுவான். நீங்கள் தப்பிக்கலாம்’ அவள் சொன்னாள்.

அவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டார்கள். அவள் ஒரு நீளமான கயிற்றை எடுத்து ஜன்னலில் கட்டி மறுநுனியை மதிலுக்கு வெளியே போட்டாள். அவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு இறங்கத் தயாரானார்கள்.

‘என்னை மறந்து விடாதீர்கள். இந்த சன்னலில் சிவப்புக் கயிறொன்றைக் கட்டி வைப்பேன். நீங்கள் என் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டும்’ அவள் மீண்டும் நினைவு படுத்தினாள்.

‘கவலைப்படாதே.. எங்களைக் காப்பாற்றிய உங்களை நிச்சயம் காப்பாற்றுவோம்’ உளவாளிகள் வாக்குறுதி கொடுத்து விட்டுத் தப்பிச் சென்றார்கள். ராகாப் சொன்னதன்படி அவர்கள் மலைப்பகுதிகளில் மூன்று நாள் மறைந்திருந்துவிட்டு நான்காம்நாள் நள்ளிரவில் யோர்தானைக் கடந்து தப்பித்தார்கள்.

தப்பிவந்த உளவாளிகள் யோசுவாவிடம் வந்து எரிகோவைப்பற்றிய அனைத்துச் செய்திகளையும் சொன்னார்கள். யோசுவா மகிழ்ந்தார். வெற்றி நமக்குப் பக்கத்தில் தான் என்று ஆனந்தமடைந்தார். ராகாப்பின் வீட்டிற்குள் யாரும் நுழையக் கூடாதென மக்களுக்குக் கட்டளையிட்டார்.

‘தலைவரே… எரிகோவின் மதில்சுவர் மிகவும் பெரியது, வலுவானது. அதைத் தாண்டி நாம் உள்ளே செல்வது எப்படி ?’ மக்கள் யோசுவாவிடம் கேட்டனர்.

‘அதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்’ யோசுவா சொன்னார்.

‘ நாம் யோர்தான் நதியைக் கடந்து செல்லவேண்டுமே ? இருநூறு அடி நீளமான நதி கரைபுரண்டோ டுகிறதே. நம்முடைய பெண்களும், குழந்தைகளும், கால்நடைகளும் எப்படிக் கடந்து செல்வார்கள்’ மக்கள் மீண்டும் கேட்டார்கள்.

‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.

‘வாருங்கள். எல்லோரும் எரிகோவுக்குப் போவோம்’ யோசுவா மக்களையெல்லாம் கூட்டிச் சேர்த்தார். கடவுளின் பத்துக் கட்டளைகள் அடங்கிய பேழையை திருப்பணியாளர்கள் முன்னே எடுத்துச் செல்ல மக்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டார்கள். யோர்தான் நதி கரைபுரண்டோ டிக் கொண்டிருந்தது.

மக்கள் அனைவரும் யோர்தானின் கரையில் வந்து சேர்ந்தார்கள்.

‘கடவுளின் பேழையைச் சுமந்து வருபவர்கள் முதலில் நதியில் இறங்குங்கள்’ யோசுவா சொன்னார்.

கடவுளின் பேழையைச் சுமந்து வந்தவர்கள் நதியில் கால்வைத்தார்கள்.

என்ன ஆச்சரியம் ! யோர்தான் நதியின் தண்ணீர் இரண்டு புறமும் பிரிய நதியின் நடுவே ஓர் பாதை உருவானது. வலதுபுறமும் இடதுபுறமும் தண்ணீர் மதில் போல உயர்ந்தது. ஓடிக் கொண்டிருந்த நதி. ஓய்வெடுத்தது.

மக்கள் வியந்தனர். செங்கடலைக் கடந்தது போல, மக்கள் கூட்டம் யோர்தானையும் கடந்தது. எல்லா மக்களும் மறுகரையை அடையும் வரை கடவுளின் பேழையைச் சுமந்தவர்கள் நதிக்குள் நின்றார்கள். அவர்களும் கடைசியாகக் கரையேறியதும் இரண்டு பக்கமுமாகப் பிரிந்திருந்த நதி ஒன்றுசேர்ந்தது. மக்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். எரிகோ தமக்குச் சொந்தமாகும் என்று உறுதியாக நம்பினார்கள்.

அவர்கள் யோர்தானைக் கடந்து கில்கால் என்னுமிடத்தில் கூடாரங்களை அமைத்தார்கள். யோசுவா அவர்களிடம்’ இஸ்ரவேலர்களுடைய பன்னிரண்டு கோத்திரங்களின் நினைவாக பன்னிரண்டு கற்களை இங்கே நடுங்கள். வருங்கால சந்ததியினர் இந்தக் கற்களைக் காட்டி இது என்ன ? என்று விசாரிக்கும் போது, கடவுள் நமக்குச் செய்த அற்புதங்களைச் சொல்லுங்கள்’ என்றார். அதன்படியே அவர்கள் பன்னிரண்டு கற்களை நாட்டி யோர்தான் நதி வழிவிட்ட அதிசயத்தை நினைவு கூர்ந்தார்கள்.

எரிகோவை எப்படிப் பிடிப்பது ? என்ன யுத்த தந்திரம் வகுப்பது என்பதைப்பற்றிக் கடவுள் எதுவும் சொல்லாததால் அனைவரும் கூடாரங்களில் அமைதியாகக் காத்திருந்தனர். திடீரென ஒரு நாள் கடவுளின் தூதர் யோசுவாவிற்குத் தோன்றினார்.

யோசுவா தரையில் வீழ்ந்து தூதரைப் பணிந்தார்.

‘கடவுளின் தூதரே… நீர் எங்களுக்குச் சொல்லவந்த செய்தி என்னவோ ?’ யோசுவா பணிவுடன் கேட்டார்.

‘எரிகோவை நீங்கள் எப்படிக் கைப்பற்றப் போகிறீர்கள் என்பதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்…’ தூதர் சொல்ல, யோசுவா கவனமானார்.

‘கடவுளின் உடன்படிக்கையை ஆலயப்பணியாளர்கள் ஏழுபேர் சுமந்து செல்லவேண்டும். அவர்களுக்கு முன்பாக ஏழு கொம்புகளையுடைய எக்காளத்தை ஊதியபடி ஏழுபேர் செல்லவேண்டும். அவர்கள் எரிகோ மதிலை ஒருநாளைக்கு ஒருமுறை என ஆறு நாள் சுற்றவேண்டும். ஏழாவது நாளில் மட்டும் ஏழுமுறை சுற்றிவர வேண்டும். ஏழுமுறை சுற்றிவந்தபின் அவர்கள் எக்காளம் ஊதவேண்டும். அப்போது எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து பயங்கர சத்தத்தோடு ஆர்ப்பரிக்க வேண்டும். அப்போது மதிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழும் நீங்கள் நகரைக் கைப்பற்றலாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நகரிலுள்ள பொருட்கள் தீட்டானவை. அவற்றை தீயிட்டு அழியுங்கள் யாரும் அதிலிருந்து எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டாம்’ கடவுளின் தூதர் சொல்லி மறைந்தார்.

யுத்தத்துக்கான வியூகம் வகுக்கப்பட்டதில் யோசுவா மிகவும் மகிழ்ந்தார். உடனே தகவல் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலையிலேயே தூதர் சொன்னபடி கடவுளின் பேழை எக்காள சத்தத்தோடு மதிலைச் சுற்றி வந்தது. அப்படியே தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்தன.

ஏழாவது நாள். இன்று தான் எரிகோ மீது இஸ்ரயேலர்கள் படையெடுக்கப் போகும் நாள். கடவுள் சொன்னபடி அன்று மட்டும் ஏழுமுறை மதில் சுற்றிவரப்பட்டது. யோசுவா எல்லோரையும் அமைதியாய் இருக்குமாறு பணித்தார். மக்கள் அமைதியாய் இருந்தார்கள். ஏழாவது முறை சுற்றி வந்து எக்காளம் ஊதப்பட்டபோது.

‘ஆர்ப்பரியுங்கள். இதோ… இந்த நகர் நமக்குச் சொந்தமாகப் போகிறது’ யோசுவா மக்களை உற்சாகப்படுத்தவும் மக்கள் ஒரே குரலாய் ஆரவாரம் செய்தார்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் ஒரே குரலாக கூக்குரலிட்டதும் எரிகோ நகர மதில் இடிந்து விழுந்தது. உறுதியாகவும், உயரமாகவும் பாதுகாப்பாக இருந்த மதில் தானாகவே இடிந்துத் தரையில் விழுந்தது. இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினார்கள். எரிகோ மக்கள் பயந்து சிதறி ஓடினார்கள்.

இதுதான் தருணம் என்று இஸ்ரயேல் படை எரிகோவுக்குள் நுழைந்து நகரிலுள்ள அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தியது ! ராகாப் தன்னுடைய சன்னலில் ஒரு சிகப்புக் கயிறை அடையாளமாகக் கட்டி வைத்திருந்தாள். எனவே அவளுடைய வீடு மட்டும் தாக்கப்படவில்லை. அவளுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் அந்த வீட்டிற்குள் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். நகர் அழிக்கப்பட்டு, தீயிடப்பட்டுக் கொளுத்தப்பட்டது. ராகாப் உளவாளிகளுக்குச் செய்த உதவி அவளுடைய முழுக் குடும்பத்தையும் காப்பாற்றியது.

எரிகோ, இஸ்ரயேலர்களுக்குச் சொந்தமாயிற்று.

0

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்.

கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…

illiyana-042909-21வுனம்
எனக்குப் பிடிக்கும்.

நகரத்து நெரிசல்களில்
நசுங்கி
மொட்டை மாடியில்
இளைப்பாறும் மாலை நேரத்தில்
இந்த மவுனம் எனக்குப் பிடிக்கும்.

வண்ணத்துப் பூச்சி
பூவின் வாசல்திறக்கும்
அழகை
விழிகள் விரியப் பார்க்கும் போதும

மாவிலையின்
முதுகெலும்பில்
நழுவிவரும் மழைத்துளி
மண்ணின் மார்பை முத்தமிடப்போகும்
சில்லென்ற நிமிடங்களிலும

சொட்டுச் சொட்டாய்
வடிந்து கொண்டிருக்கும்
மாலை மஞ்சளின் மரண நிமிடங்களை
மலையுச்சியின் மரத்தடியில்
மனம் கலைய இரசிக்கும் போதும

இனங்காண இயலாத பறவையொன்று
சிறகடித்துப்
பாடிச் சென்றது எந்த ராகம் என்று
சிந்தனையைக் கொஞ்சம்
சிறகடிக்க விடும்போதும

இதயம் முழுவதும்
இன்ப அதிர்வுகளை விட்டுச் செல்லும்
இந்த மௌனம்
எனக்குப் பிடிக்கும

சத்தம்
எனக்குப் பிடிக்கும

விழுவதனால் வேகம் சேர்க்கும்
மலையருவி
அடிப்பதனால் அழகு விற்கும்
கடல் அலைகள்
இயற்கை மேல் ஈரம் துவட்டும்
மழைக் கரங்கள

மௌனத்துக்குத் தூண்டில் போடும்
சத்தங்களும
மௌனங்களுக்குள் மறைந்து கிடக்கும்
சத்தங்களும
கொலுசு மாட்டிய நதிபோல
சங்கீதமாய் எப்போதுமே மனசைக் கொத்தும

இத்தனை இருந்தும

மொத்த ரசனைகளையும்
யுத்தமில்லாமல் சிதைத்துச் செல்லும்,
கண்மூடி
கவிதை யோசிக்கும் கணங்களில்
கன்னத்தில் நீ இடும்
சத்தமில்லாத ஒரு முத்தம்…

 

கவிதை பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்

கவிதை : மோகம் மிச்சமில்லை

 

5

மோகத்தின்
பானம் ஊற்றிய கோப்பைகளில்
காதல் உவமைகள்
தெறிக்கின்றன.

வாத்சாயன விழிகளோடும்
கம்பன் விரல்களோடும்
காகிதக் குடுவைகளில்
தயாராகின்றன
காதல் கவிதைகள்.

தூரமாய் போன
நிலவை
எட்டித் தொட
கவிதை வாலில்
தீ கட்டி நீட்டுகின்றனர்
சிலர்,

தீ நாக்குகளின்
வெப்பத்தில்
மூச்சு முட்டும்
மோகத் திணிப்புகளில்
கவிதையை
வழிய விடுகின்றனர் சிலர்,

அசைந்து நடக்கும்
அழகையும்,
பார்வைக்குத் தெரியும்
பாதங்களையும்
கவிதைச் சமையலறை
மிகச் சுவையாய் சமைக்கிறது.

காமத்திற்கு
ஆயிரம் கோடி விரல்கள்
அதனால் தான்
கவிதைகள் பல
அங்க வருணிப்புகளோடு
அடங்கி விடுகின்றன.

மோகம் வடிந்த
பிற்காலப் பொழுதுகளில்
பெய்யக் கூடும்
சில
ரம்மியக் காதல் மழைகள்.

 

தமிழிஷில் வாக்களிக்க விரும்பினால்….

பசுமை விகடன் கட்டுரை : அடி எடுத்தது அமெரிக்கா, அணி வகுக்குமா உலகம்

untitled

அப்பாடி…! ஒரு வழியாக அமெரிக்காவே மனமிரங்கி, “குளோபல் வாமிங்” குறித்து உருப்படியாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பின்னே… இத்தனை நாட்களாக உலக அளவில் நடத் தப்பட்ட குளோபல் வாமிங் பிரச்னையில் இருந்து தப்பிப்பது குறித்த மாநாடுகளின்போது, மற்ற நாடுகளின் மீது குற்றச்சாட்டு சேற்றை வாரிப் பூசி, உலகத்தின் சுற்றுச் சூழல் கேடுகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் “பாவ்லா” காட்டிக் கொண்டிருந்த நாடாயிற்றே!

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி ஏற்ற பிறகுதான் இந்த நிலையில் கொஞ்சம் மாற்றம் தெரியத் தொடங்கி, தற்போது அவரே முன்மொழிய, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறது சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்தும் விஷயங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் தீர்மானம். இதன் மூலம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்

‘குளோபல் வாமிங்” பயங்கரத்துக்கு நல்ல தீர்வு கிடைக் கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது!

பூமியின் வெப்ப நிலையானது, இயற்கைக்கு எதிரான மனிதனுடைய செயல்பாடுகள் காரணமாக குறைந்தகால இடைவெளியில் சட்டென அதிகரிப்பதுதான் குளோபல் வாமிங். கொஞ்சம் அறிவியல்ரீதியாகச் சொல்லவேண்டுமெனில்… பூமியானது, நூறு ஆண்டுக்குள் இயல்பான வெப்ப நிலையிலி ருந்து ஒரு டிகிரி செல்சியஸோ அல்லது அதற்கு மேலாகவே வெப்பமடைந்தால் அது “குளோபல் வாமிங்” எனப்படும் சிக்கலுக்குள் வருகிறது எனலாம்.

பூமி, வழக்கத்துக்கு மாறாக இப்படிச் சூடாவதற்கு அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஆயிரக்கணக்கான காரணங்கள் உண்டு. அவற்றிலி ருந்து முக்கியமான காரணிகளைப் பிரித்தெடுத்து வரிசைப்படுத்தினால்… முதலிடத்தில் நிற்பது கார்பன் டை ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு. இதன் பரவலைக் கட்டுப்படுத்தினாலே பூமி வெப்பமயமாவதிலிருந்து தடுக்கலாம் என்பது விஞ்ஞானிகளுடைய நம்பிக்கை மற்றும் ஆலோசனை.

உண்மையில், ‘குளோபல் வாமிங்” என்ற வார்த்தைகளைக் கேட்டாலே உலகமே குலைநடுக் கம் கொள்ளவேண்டும். காரணம்… அதன் எதிர் விளைவுகள் அப்படி! இன்றைக்கு மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சுனாமி, நிலநடுக்கம், பெருமழை, கடும் வறட்சி, கோர புயல், வெப்ப அலை என்று பலவற்றுக்கும் ஒரு வகையில் காரணகர்த்தா… இந்த குளோபல் வாமிங்.

இது, அண்டார்டிகா உள்ளிட்ட பனிப்பிர தேசங்களில் உள்ள பனிப் பாறைகளை உருக வைப்பதன் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்து, கடலோர பிரதேசங்களை குறிப்பாக இந்தியா, வங்கதேசம், பர்மா போன்ற நாடுகளின் கடற்கரைகளை விழுங்கிவிடும் என்று எச்சரிக் கிறார்கள் விஞ்ஞானிகள்.

“குளோபல் வாமிங்கின் நேரடி அறிகுறிகளான சுனாமி, புயல், வெப்ப அலை, வெள்ளப் பெருக்கு, காட்டுத் தீ, நில நடுக்கம், பனிமலை உருகுதல், காலநிலை மாற்றம் போன்றவை காரணமாக உலகில் ஆண்டுக்கு மூன்று லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மூன்று கோடி மக்கள் பாதிப்படைகின்றனர்” என்கிறது சமீபத்தில் லண்டனின் வெளியான ஆய்வு முடிவு ஒன்று.

“இப்படியே போனால்… 2030 ம் ஆண்டு வாக்கில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் இந்த புவி வெப்பத்தினால் உயிரிழப்பார்கள்” என்கிறது பதறடிக்கும் இன்னொரு புள்ளி விவரம்.

“மனிதர்கள் மட்டுமன்றி உலகிலுள்ள பல்வேறு வகை உயிரினங்களும்கூட அழிவுக்கு உள்ளாகும். பூமியின் வெப்பம் 3.5 டிகிரி செல்சியஸ் அதிகரித் தால் 40 முதல் 70% உயிரினங்கள் அழியும் வாய்ப்பு உண்டு” என்கிறது ‘ஐ.பி.சி.சி.” எனப்படும் அகில உலக குழு

லட்சக் கணக்கான உயிர்கள் பலியாவது ஒருபுறமிருக்க, பொருளாதார ரீதியில் ஆண்டுக்கு 125 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும். இது, 2030 களில் பல மடங்கு உயர்ந்து, 600 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய ஆபத்துக்கள் இருக்கிறது என்றபோதும், துரதிர்ஷ்டவசமாக… விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலா னவர்கள் மட்டுமே இதை நினைத்து அலறல் போடுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம், “பக்கத்து வீட்டுல சாவு” என்று சின்னதாக ஒரு “உச்” போட்டுவிட்டு, தன் வீட்டுக் கதவை மூடிக் கொண்டுவிடும் நகர்ப்புறத்து “அடுக்குமாடி குடியிருப்பு” கலாசாரத்தில் ஊறிப்போனவர்கள் போல, எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்களில் பலரும் விவரம் தெரியாமல், குளோபல் வாமிங் பற்றிய பயமில்லாமல் இருக்கலாம். ஆனால், நாடு களைக் கட்டி ஆளும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரும் அவ்வாறே கடந்து செல்வதுதான் கொடுமை. “உலகத் தின் இந்த நிலைக்கு நீதான் காரணம்…”, “இல்லையில்லை, நீதான் காரணம்” என்று வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் பரஸ்பரம் கைநீட்டி முட்டிக் கொண்ட படியே இருப்பது கொடுமையிலும் கொடுமை!

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முயற்சியினால் சமீபத்தில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படை அம்சங்கள் இரண்டு. ஒன்று, அமெரிக்காவில் கார்பன் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைப்பது. இரண்டு, அந்த சக்திக்கு மாற்றாக “க்ரீன் எனர்ஜி” எனப்படும் பசுமை சக்தியை (அல்லது கிளீன் எனர்ஜி எனப்படும் தூய சக்தி) உருவாக்குவது.

அமெரிக்காவில் எந்த அளவுக்கு கார்பன்டை ஆக்சைடைக் குறைக்கவேண்டும் என்பதற்கான வரைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. தற்போதைக்கு பயன்பாட்டில் இருக்கும் கார்பனின் அளவிலிருந்து 2020 ம் ஆண்டில் 17%, 2030 ம் ஆண்டில் 40%, 2050 ம் ஆண்டில் 83% என்ற அளவில் குறைத்துக் கொள்ளவேண்டும். அதாவது, 2050 ம் ஆண்டில் கார்பனின் பயன்பாடு என்பது 17% என்ற அளவில் மட்டுமே இருக்கவேண்டும் என்று சொல்கிறது 1,200 பக்கங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அந்த மகா தீர்மானம்.

அதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தேவையில்லாமல் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடும் கார்பன் மற்றும் நிலக்கரி தொழிற்சாலைகளின் தேவையைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு, மாற்று சக்தியாக சூரிய ஒளி, காற்று, தாவரங்கள் போன்றவற்றிலிருந்து சக்தியைப் பெறுவது.

““கேட்பதற்கு எளிதாகத் தோன்றும் இந்தத் தீர்மானத்தில் நடைமுறைச் சிக்கல்கள் ஏரளமாக இருக்கின்றன. நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறு தொழிற்சாலைகள் சட்டென தற்போதைய நிலையை மாற்றி, வேறு சக்தியைப் பெறுவது எப்படி என்பது புரியாத புதிர். 2020 ம் ஆண்டில் 17% கார்பன் பயன்பாட்டை நிறுத்துவதெல்லாம் பகல் கனவு என்கின்றனர் பலர். எனவேதான் அமெரிக்க அரசிலேயே இந்தத் தீர்மானத்தை பலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். 219 பேர் ஆதரவாக வாக்களிக்க, 212 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

என்றாலும் அமெரிக்கா நிறைவேற்றியிருக்கும் இந்தத் தீர்மானம், வருகிற டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்கோஹ னில் நடைபெற உள்ள காலநிலை தொடர்பான அகில உலக மாநாட்டில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவே களம் இறங்கிவிட்டது என்றால்… அதன் வால்பிடித்து இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் என்று பல நாடுகளும் வரிசையாக அணி வகுக்கும். மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் மீதுதான் குளோபல் வாமிங் விஷயத்தில் உலக நாடுகள் கை நீட்டுகின்றன. எனவே, இந்த நாடுகளுக்கும் நெருக்கடி ஏற்படும். அதன் காரணமாக உலக அளவில் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இது இப்படி இருக்க… இப்போது சொல்லப்படும் “குளோபல் வாமிங்” என்ப தெல்லாம் ஒரு மாயை. பூமி வெப்பமடைவதும், பின் குளிர்வதும் பல ஆயிரம் காலமாக நிகழ்வதுதான். கி.பி. 1,000 ம் ஆண்டுகளில் வெப்பமடைந்த பூமி, கி.பி. 1,500 களில் குளிர்ந்தது. இப்போது கி.பி. 2000 ம் ஆண்டுகளில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கிறது. காலப்போக்கில் குளிர்ந்து விடும்என்று சொல்லும் விஞ்ஞானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த வம்பளப்புகள் ஒருபுறமிருந்தாலும்… வீடு அசுத்தமானால், துடைக்க வேண்டும் என்பது நியதி. அதேதான் பூமிக்கும். அது மாசுபட்டு கிடப்பப்பது கண்கூடு. இது நோயின் அறிகுறி மட்டுமே. இப்போதே விழிப்படையாவிட்டால்… உயிரைப் பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

- சேவியர்

தமிழிஷில் வாக்களிக்க விரும்பினால்…

கேட்டானே 32 கேள்வி…

IMG_09241. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பிரியமாய் பெற்றோர் வைத்த பெயர் இது. தவமாய்த் தவமிருந்து ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்று நாகர்கோவில் சவேரியார் கோயிலில் செபித்த போது ஒரு காட்சி தோன்றி அடுத்த ஆண்டு ஆண் குழந்தை பிறப்பான் என அருள் கிடைத்ததாய் அம்மா சொல்வது பெயர் பிறந்த கதை. சவேரியாரின் நினைவு மறையாமல் இருக்கட்டும் என சேவியர் என வைத்து விட்டார்கள்.

சேவியர்- பெயரை மாற்றினா எழுத்துத் துறையில் உன்னை பெரிய ஆளாக்கிக் காட்டுகிறேன் என பத்திரிகை நண்பர்கள் சிலர் சொன்னார்கள். பெற்றோர் இட்ட பெயரை மாற்றி பெரிய ஆளாவதை விட பெற்றோரின் அன்பில் சின்ன ஆளாகவே இருந்து விடலாம் என அப்படியே இருந்து விட்டேன்.

என்னையும், என் பெயரையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்

(ஜேஏவியார் – என யாரும் அழைக்காத போது (பெரும்பாலும் தெலுங்கு நண்பர்கள் ஜேவீயார், ஜேவியர், க்ஸாவீயர் என பல விதங்களில் அழைப்பார்கள். . Xerox – ஐ ஜெராக்ஸ் என்று சொல்லும் போ Xavier – ஷுட் பி ஜேஏவியார் னா என்று விளக்கம் வேறு )

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

தோழி ஜானகியின் ஆறுவயது மகன் விபத்தில் பலியான துயரத்தின் போது. பதினாறு நாட்களுக்குப் பின் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தபோது மீண்டும் அழநேர்ந்தது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

புடிக்கும். முக்கியமா பிடித்தமானவர்களின் பெயர்களைத் தமிழில் எழுதும் போது.

4. பிடித்த மதிய உணவு என்ன?

சுடு சாதம் + மீன் குழம்பு + வெங்காயம் பச்சைமிளகாய் எல்லாம் போட்டு ஒரு டபுல் ஆம்லெட் + கடைசியா தயிரும் மோர் மிளகாயும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்சம் பழகினாலே நண்பனாகி விடும் பழக்கம் எனக்கு உண்டு. அதன் பின் நண்பர்களுக்காக எதையும் செய்யத் தோன்றும். வீட்டுக் தெரியாமல் நண்பர்களின் தேவைக்காய் பல ஆயிரங்களை அள்ளிக் கொடுக்கும் திருட்டுக் குணமும் உண்டு

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா….அருவியில் குளிக்கப் பிடிக்குமா?xavier4

அருவியில் குளிக்கவும்,

கடலில் குதிக்கவும் பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அது நபரைப் பார்க்கும் இடம் பொருள் ஏவல் எல்லாவற்றையும் பொறுத்து மாறுபடும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது : கோபப்படுத்திய, எரிச்சலூட்டிய, அவமானப்படுத்திய நிகழ்வுகளையெல்லாம் ஜஸ்ட் லைக் தேட் மறந்து விட முடிவது.

பிடிக்காதது : நண்பர்களின் பெயர்களைக் கூட சமயத்தில் மறந்து விட்டு குழம்புவது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது

அலுவலகத்தில் வேலை செய்தாலும் தனது விருப்பமான பரத நாட்டியத்தைத் தொடர்வது, நான் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் சற்றும் பிசகாமல் அட்டவணை போட்டு ஞாபகமூட்டுவது, கோபத்தை ஒரு நாளுக்கு மேல் வளர்க்க விரும்பாதது எல்லாவற்றுக்கும் மேலே சூப்பராக சமைப்பது !

இத்யாதி இத்யாதி….

பிடிக்காதது :

“கிரிக்கெட் பாத்தது போதும் தூங்குங்க….”

“வேலை பாத்தது போதும் தூங்குங்க…”

“வீக் எண்ட்லயும் கம்ப்யூட்டரையே கட்டிகிட்டு அழுங்க…”

இத்யாதி..இத்யாதி…

 

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

கூட்டுக் குடும்பத்துல இருந்து சென்னைக்கு வந்து குடியேறிய என்னைப் போன்ற ஒரு கிராமத்து மனுஷனை அலைக்கழிக்கும் கேள்வி இது !

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

நீல நிற  ஜீன்ஸ் + மஞ்சள் நிற – டி ஷர்ட். இப்போ தான் ஆபீஸ்ல இருந்து வந்தேன்

 

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

பார்ப்பது, சன்னல் வழியே  சாலையில் நடக்கும் இருளை.

கேட்பது, லவ் பேர்ட்ஸ் இசைக்கும் புரியாக் கவிதை.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

“பேனாக்களாக” எனில் எல்லா வண்ணமும்

14. பிடித்த மணம்?

புதிய புத்தகத்தின் வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

மனசாலும், எழுத்தாலும் வசீகரிக்கும் நண்பர் புகாரி.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

நண்பர் விஜய் கோபால் சாமி எழுதும் “என்னமோ போடா மாதவா”. ரொம்பவே சுவாரஸ்யமான தொடர். வியக்கவும், ரசிக்கவும், பிரமிக்கவும் வைக்கிறது.

17. பிடித்த விளையாட்டு?

விளையாட, டேபிள் டென்னிஸ்.

பார்க்க – கிரிக்கெட்

 

18. கண்ணாடி அணிபவரா?

கண்ணாடி, காண்டாக்ட் லென்ஸ், ஏதும் தேவைப்படாத பார்வை இருக்கிறது !

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ஆங்கிலத்தில், அனிமேஷன் படங்கள், கார்ட்டூன் படங்கள் பிடிக்கும்.

ஹாலிவுட் படங்கள் எக்கச் சக்கமாய் பார்ப்பதுண்டு.

தமிழில் இயல்பான படங்கள். மொழி, அபியும் நானும்,

தவமாய் தவமிருந்து, போல

மலையாளத்தில்: நகைச்சுவைப் படங்கள் & பூதக்கண்ணாடி போல நண்பர்கள்

பரிந்துரைக்கும் படங்கள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

ஏண்டா பார்த்தோம், விதி விளையாடிடுச்சே, என நினைக்க வைத்த

எஸ்.ஜே சூர்யாவின் மூன்றாம் விதி !

 

20. பிடித்த பருவ காலம் எது?

கல்லூரி காலத்தில் படித்த “பருவகாலம்” பத்தி கேக்கறீங்களா ?

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க.. ?

ஈழக் கதவுகள், அருவி வெளியீடு.

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

படமே வைப்பதில்லை

பளிச் என இருந்தால் தான் பிடிக்கிறது

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : குழந்தைகளின் சிரிப்பொலி

பிடிக்காத சத்தம் : பனை ஓலைகளினால் பாய் முடையும் போது எழும் ஒலி.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இதில் எது அதிக தொலைவோ அது. நிஜமாவே எனக்குத் தெரியாது

 

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சென்னை டிராபிக்கில் கோபப்படாமலேயே காரோட்டுவது !

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

குழந்தைகள் மீதான வன்முறை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பல் சைக்கிள் கேப் கிடைச்சா ஒரு தூக்கம் போடணும்ன்னு தோணுது.

 

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

குறிஞ்சி அல்லது நெய்தல்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இயல்பா…

31. கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

 

நீண்டகால நண்பர்களுடன் அரட்டை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

மன்னிப்பை தயங்காமல் கேட்டும், தயங்காமல் கொடுத்தும் வாழுங்கள் வாழ்க்கை அர்த்தப்படும்

 

பின் குறிப்பு : அழைத்த சகோதரன் விஜய் கோபால் சாமிக்கு நன்றி !

 

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்..

மீண்டும் காதலிக்கலாம்…

2

1.

மெளனங்கள்
இறுகிக் கிடக்கும் பாறை போல
சுமையானவை.


உன்
கரம் கோர்த்த
மெளனத்தைத் தவிர

 

  

  

2.

எப்போதும்
உன்னுடன் இருப்பேன்
என்று
சொன்ன நினைவு மட்டும்
இப்போதும்
என்னுடன் இருக்கிறது

0

23.

உன்னுடைய
முத்தங்களின் ஒன்றைத்
திருட முடிந்தால்
என்
தனிமைகளின் உதடுகளுக்கு
தத்துக் கொடுத்திருப்பேன்.

0

4.

வயலில் இட்ட விதை நெல் போல
நடப்பட்டிருக்கிறது
உன் புன்னகை
என் இதய வயலில்.

உன் பார்வை ஈரத்தைப்
பரிமாறினால்
முளைத்து வளரும்
நீ அறியாத ஒரு கணத்தில்

0

5.

2நீ
என்னுடன் இருந்தால்
என் வாழ்க்கை
ஆனந்தமாகும்.


என் வாழ்க்கை
ஆனந்தமாய் இருந்தால்
நீ
என்னுடன் இருக்கிறாய் என்று அர்த்தம்.

0

6

நீ
விலகமாட்டாய் எனும்
என்
நம்பிக்கையின் அலட்சியமே
நீ
விலகிவிடக் காரணம்

0

7.

2

இந்தியாவின் எதிர்காலம்
இளைஞர்களின்
கையில் என்கிறார்கள்
இளைஞர்களின் எதிர்காலம்
உன் கையில்
என்பதை அறியாதவர்கள்.

0

 

 

8

உனது
மனக் கடலுக்குள் மூழ்கி
முத்தெடுக்க முனைகையில்,
நீ
கரையில் ஒதுங்கி
எனக்காய் காத்திருந்தாய்
காதல்
புரிந்தது எனக்கு.

0

9

2காதலிக்கும் இதயம்
நிலவுடன் கதை பேசும்.

காதலிக்கப்படும் இதயம்
நட்சத்திரங்களுடன் நாட்டியமாடும்.

எப்படியோ
காதலில் இருப்பவர்கள்
நிலத்தை நிராகரித்து
வானத்தில் மட்டுமே வலம் வருகிறார்கள்

0

10.

 

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
பரவசப் படியேறுகையில்
உணர்ந்தேன்
ஒவ்வோர் காதலுக்குள்ளும்
ஒவ்வோர்
பிரபஞ்சம் படுத்திருப்பதை

0

2

அங்கிங்கெனாதபடி
எங்கும்
உன் நினைவுகளின் உருவம்
புன்னகைத்தபோது
உளவியலார் சொன்னார்கள்
கடவுளுக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
உருவமில்லை என்று

 

 

பிடித்திருந்தால்…. தமிழிஷ் வாக்களியுங்கள்…

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers