துயர நிமிடங்களில்
பதறி ஓடி வரும்
நட்புகளும்,
உயர நிமிடங்களில்
நட்புகளைத் தேடி ஓடும்
மனமும்
இந்த ஆண்டு உங்களுக்கு வாய்க்கட்டும்.
இது புத்தாண்டு
கூடவே பத்தாண்டு !
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
December 31, 2009 இல் 9:31 பிற்பகல் (1)
Tags: 2010, புத்தாண்டு, Greeting, Happy, New Year, Wish
December 28, 2009 இல் 3:39 மு.பகல் (கவிதைகள்)
Tags: இலக்கியம், கவிதை, சமூகம், பிரிவு
பிரிவுகளை கொஞ்சம்
பிரியமாய் நேசியுங்களே.
வண்டுத் தேரேறி
பிரிந்து செல்லாத
மகரந்தத் துகள்களுக்கேது
மறுபிறப்பு ?
மேகத்தின் தேகம் விட்டு
பிரிய மறுக்கும்
ஈரத் துளிகளுக்கு
இங்கேது சிறப்பு ?
விதைகளை விட்டு
வெளியேறட்டும் கிளைகள்,
மூங்கிலை விட்டு
வெளியேறட்டும் இசைகள்,
பாறைவிட்டு
வெளிக்குதிக்கட்டும் சிலைகள்,
இதயம் விட்டு
வெளித்தாவட்டும் கலைகள்
தடுக்காதீர்கள்.
முட்டையோடான
பிரிவு
சிறகுச் சரித்திரத்தின்
முதல் சுவடு.
பிரியவிடுங்கள்,
இல்லையேல் பிரித்துவிடுங்கள்,
தொப்புள் கொடியை
யாரும்
தொடரவிடுவதில்லையே !
பிரிவு என்பதே
உறவுக்காகத் தான்,
ஆரம்பப் பாடம்
கருவறை வாசலிலேயே
கண்விழிக்கிறதே.
December 25, 2009 இல் 1:50 மு.பகல் (கவிதைகள்)
கிறிஸ்மஸ் நாள்..
சர்ப்பம் தந்த பாவத்தை
கர்ப்பம் வந்து
தீர்த்த நாள்…
மரத்தால் விளைந்த பாவத்தை
வரத்தால் களைந்த
மந்திர நாள்.
வார்த்தை ஒன்று
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.
தொழுவம் ஒன்று
தொழுகை பெற்ற
திருநாள்…
ஒதுக்கப்பட்டவை
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.
ஆடிடைக் கூட்டில்
ஆதவன் உதித்த
அதிசய நாள்.
அனைவருக்கும் விழா நாள் வாழ்த்துக்கள்…
December 22, 2009 இல் 3:23 மு.பகல் (கவிதைகள்)
Tags: அநீதி, இலக்கியம், கவிதை, சமூகம்
எடைகள் எப்போதும்
நியாயமாய் இருந்ததில்லை
எனினும்
‘நியாய விலைக் கடை’கள்
பெயர் மாற்றிக் கொள்ளவில்லை.
பாதி அளவுக்கே இருக்கிறது
நீதி,
ஆனாலும் நீதிபதிகள்
நீதிபாதிகள்
என அழைக்கப்படவில்லை.
ஜனங்களை விட அதிகமாய்
இருக்கைகளைப் பற்றியே
இருக்கின்றன அரசுகள்,
ஆனாலும்
சாசனங்கள் பெயர்மாறி
ஆசனங்கள் ஆகவில்லை.
பிடுங்கல்களைக் கூட
‘தட்சணை’கள் என்றே
வரன் வீட்டுச்
சவரன்கள் வாயாரச் சொல்கின்றன.
என்ன சொல்வது ?
மரணத்தைக் கூட
மறுவீட்டுப் பிரவேசம் என்று
அன்போடழைத்தே
பழக்கப் பட்டவர்கள் நாம்.
பெயர்களில் என்ன இருக்கிறது
வேர்களில்
வித்யாசம் இல்லா ஊர்களில் ?
December 22, 2009 இல் 2:58 மு.பகல் (கவிதைகள்)
Tags: இலக்கியம், கவிதை, கிராமம், நட்பு, பள்ளி
ஆரம்பப் பள்ளியில்
என்னோடு கூடவே இருந்தான்
பட்டன் அறுந்து போன
சட்டையோடு
ஒரு நண்பன்.
ஆசிரியர் மேஜையில்
சாக்பீஸ் திருடினாலும்,
பள்ளித் தோட்டத்தில்
கொய்யா திருடினாலும்
பாதி தர தவறாதவன்.
வீட்டுப் பாடங்களை
எழுத மறந்து போன
நாட்களில் எல்லாம்,
ஆசிரியர் வரக்கூடாதெனும்
என்
பிரார்த்தனையில் தவறாமல்
அவனும் பங்கெடுப்பதுண்டு.
‘குளமாங்கா’ உடைத்துத் தின்றும்,
கடலை மிட்டாய்
கடித்துச் சிரித்தும்,
புன்னை மரத்தடியில்
புன்னக்காய் பொறுக்கிக்
கோலி விளையாடியும்,
எங்கள்
முதல் ஐந்தாண்டுக் கல்வி
கரைந்தே போயிற்று.
பிரியவே முடியாதென்றும்
உடையவே கூடாதென்றும்
நான்
கங்கணம் கட்டிக் கொண்ட
முதல் நண்பன் அவன்.
பின்,
அந்த மேய் மாத
வெயில் விடுமுறைக்குப் பின்
நான்
ஆறாம் வகுப்புக்கு சென்றபோது
அவன்
நினைவுகள் மட்டும்
அவ்வப்போது வந்து சென்றன.
அவன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
சில கிலோமீட்டர் தான்
தூரம்.
அப்போது.
நாங்களோ வெவ்வேறு திசையில்
வெகுதூரம்
நடந்திருந்தோம்.
கடந்து விட்டது
கால்நூற்றாண்டு
இப்போது பார்த்தால்,
‘மணி என்னாச்சு’ என்று கேட்டு
நகரக் கூடும்.
பரிச்சயமில்லாத
புது முகம் கண்டு.
December 17, 2009 இல் 2:52 மு.பகல் (கவிதைகள்)
Tags: இலக்கியம், கவிதை, நிதானம், வாழ்க்கை
அழுத்தங்களின்
வயல் வெளிகளில்
நீ
முளைப்பிப்பவற்றை வைத்தே
உன்
உண்மை முகம்
எழுதப்படும்.
அத்தனை தேடல்களும்
சந்திக்கப் பட்டபின்
உதடுகள் விரிவதில்
பெருமை என்ன இருக்கிறது.
பாம்புகளே இல்லா தேசத்தில்
புற்றுகளைப்
பற்றிக் கொள்வதில்
வீரம் என்ன இருக்கிறது.
திறமை என்பது
தவறும் சூழல்
தவறாமல் தொடரும்போது
தவறாமல் இருப்பது,
ஈரக் கூந்தலை
முடிந்து நடக்கும்
மேகப் பெண்கள்
வானில் இருந்தால்,
வற்றிய வயிறுகளோடும்
குழி விழுந்த
கிணற்றுக் கண்களோடும்,
வெடித்த தோல் வயல்கள்
அழுகை நடத்துவதில்லையே.
மழையே விழாத
மலைகளின் இடுக்கிலும்
முளைக்க முடியுமானால்
உன் விழிகளில்
பெருமை வடியலாம்.
வாரிசாய் வந்ததால் மட்டுமே
கிரீடம் சூட்டிக் கொள்ளும்
இளவரசனுக்கு
என்ன பெருமை இருக்க இயலும் ?
நீ யார் என்பதற்கு
உன் அடையாள அட்டை
காட்டுவதே
உனக்குப் பெருமை !
முடியும் என்னும்
நம்பிக்கை முனைகளை
உள்ளுக்குள்
முடிந்து வை.
நிதானமே பிரதானம்.
நிதானி.
அத்தனை அம்புகள்
சீறி வந்தாலும்,
சிரித்தே அவற்றை
சேகரித்து வை.
0
December 14, 2009 இல் 2:44 மு.பகல் (கவிதைகள்)
Tags: இலக்கியம், கவிதை, பரிசு, மறதி
ஒன்றாம் வகுப்பில்
நான் துடைத்துத் துடைத்தே
உடைந்து போன என்
சட்டம் போட்ட சிலேட்.
கர்ணனா – கும்பகர்ணனா
பேச்சுப் போட்டியில்
பரிசளிக்கப்பட்ட
அந்த பச்சை நிறப் புத்தகம்.
அந்த
முதல் கவிதை பிரசுரமான
பழைய காகிதம்,
என் கல்லூரி கால
கையெழுத்துப் பத்திரிகையின்
முதல் பிரதி,
பரிசு வாங்கித் தந்த
என்
நீளமான கவிதைகள்,
அத்தனை பக்கங்களிலும்
கிறுக்கி வைத்த
என் கால்நூற்றாண்டு
டைரிகள்,
பாட்டி
பிரியும் முன் பிரியமாய்
வாங்கித் தந்த
கை நீளச் சட்டை,
எதுவும்,
எதுவுமே என்னிடம் இல்லை.
கடந்து போன
காலத்தின் கால்வாய்களில்
அவை
கரைந்தே போயின.
நினைத்துப் பார்க்கும் போதெல்லாம்
மனசு
வினாடி நேரம்
நின்று விட்டுத் தான்
நிதானமாகிறது.
என்ன சொல்வது,
எங்கேயோ தொலைத்துவிட்டேன்
கடந்த மாதம்
புது மனைவி
முதன் முதலாய் எனக்குத் தந்த
பிறந்த நாள் வாழ்த்தை.
December 9, 2009 இல் 2:39 மு.பகல் (கவிதைகள்)
Tags: இலக்கியம், கவிதை
நான்
இப்போது எழுத நினைத்த
கவிதையை
யாரேனும்
எழுத நினைத்திருக்கலாம்.
நான்
நேற்று எழுதிய கவிதையை
யாரேனும்
என்றோ எழுதியிருக்கலாம்.
யாரும் எழுதவில்லை என
நான்
வார்த்தைகளால்
கோத்து வைத்த கவிதையை,
என்றேனும்
ஓர் செல்லரித்த ஓலைச் சுவடி
சுமந்து கனத்திருக்கலாம்.
வெளிக்காட்டாத
டைரிகள் ஏதேனும்
அவற்றை
ஒலிபரப்பு செய்யாமல்
ஒளித்து வைத்திருக்கலாம்.
இல்லையேல்,
மனசுக்குள் மட்டுமாவது
யாரேனும்
முனகிப் பார்த்திருக்கலாம்.
எனக்கே எனக்கான
என்
அனுபவக் கவிதைகள் கூட,
ஏதேனும்
கிராமத்துத் திண்ணைகள்
அனுபவித்து உரையாடியிருக்கலாம்.
எதுவும்
புதிதென்று என்னிடம்
எதுவுமே இல்லை.
எல்லாமே
நேற்றின் நீட்சிகள்,
இல்லையேல்
துண்டிக்கப்பட்ட
கடந்தகாலக் காற்றின்
இணைப்புகள் மட்டுமே.
0
December 4, 2009 இல் 1:48 மு.பகல் (கவிதைகள்)
Tags: இலக்கியம், இளமை, கவிதை, சமூகம், வாழ்க்கை
வெற்றிகள் உனக்கு
சிற்பங்கள் பரிசளிக்கலாம்
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்து கொள்.
ஃ
மழை
நதி
விதை
விழுவதால் எழுபவை இவை.
நீ மட்டும் ஏன்
விழுந்த இடத்தில்
உனக்கு நீயே
கல்லறை கட்டுகிறாய்.
ஃ
உன் சுவடுகள்
சிறை பிடிக்கப்படலாம்
உன் பாதைகள்
திருடப்படலாம்
பயப்படாதே
பாதங்களைப் பாதுகாத்துக் கொள்.
ஃ
நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்வி தான் அடைந்திருப்பாய்
நீ
தோற்றுப் போனதாய் நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றி தான் பெற்றிருப்பாய்
உணர்ந்து கொள்
நீ
தோல்வியடைந்தது வாழ்க்கையிலல்ல
புரிதலில்.
ஃ
உன் வழிகளெங்கும்
தூண்டில்கள் விழித்திருக்கலாம்
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்
தண்ணீராய் மாறி தப்பித்துக் கொள்
தங்கமீனாய்
தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே !
ஃ
காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை !
ஃ