கவிதை : யாரும் எழுதாத கவிதைகள்

 

 

விரித்த புத்தகமும்
திறந்த பேனாவுமாய்,
கண்கள் மூடி
சன்னலோரம் அமர்ந்து
நான்
கவிதை தேடும் தருணங்களில்,
கவிதைகள்
சத்தமில்லாத பாதங்களோடு
பார்வையில்லா சன்னலைப்
பார்த்தபடி கடந்து போகும்
.

 

To Vote – Click Here Please….

கவிதை : காதல் விண்வெளி


அந்த
வெண்கல நிற விண்கலம்
உலோகக் கதவுகளை
விரித்துக் காத்திருக்கிறது.

நானும்,
என் தேசத்து தேவதையும்
செவ்வாய் கிரகம் போகிறோம்.

பிடிக்கவில்லை.
உருகும் போதே உலர வைக்கும்
இந்த
உலைக்கள உலகம் பிடிக்கவில்லை.

பூமி மக்களுக்கு
பனித்துளி கூட
பாதம் கழுவவே பயன்படுகிறது.
காதலைக் கழுவிலேற்று
என்று
கால்கள் கூட கத்துகின்றன.

அந்தஸ்தின் அட்டவணைகளில்
அன்புக்கு எதிராய்
அரிவாள் தான் சாய்க்கப்பட்டிருக்கிறது.

எனவே,
தேடாதீர்கள் என்று
சீட்டெழுதி விட்டு
சத்தமில்லாமல் செவ்வாய் செல்கிறோம்.

செவ்வாயில் உயிர்களில்லை
என்பதெல்லாம் இனி
சரித்திரத்திலிருந்து துரத்தப்படும்.

எங்கள்
இருவர் பெயர்களும்
துருவங்கள் வரை பொறிக்கப்படும்.

விண்கலம்
ஓர் ஆகாய திமிங்கலமாய்
காலத்தை வென்று
கலத்தை செவ்வாயில் நடுகிறது.

காதலுக்கு எதிர்ப்பில்லா
காற்றில்லா தேசமது,
எங்களிடம் மட்டும்
ஆக்சிஜன் அணிகலன்கள்.

மணித்துளிகள் மங்க மங்க
செவ்வாய் ஓர்
சவக்காட்டு ஊதுபத்தியாய்
அமைதி கெடுக்க ஆரம்பித்தது.

வற்றிப் போன வசந்தத்துக்கு
வாழ்க்கை என்று பெயரா ?
எதிர்ப்பில்லா தேசத்தில்
உதிர்ப்பதெல்லாம் சட்டங்களே.
ஆனால்
மக்கள் இல்லா தேசத்தில்
மணி மகுடம் எதற்கு ?

சமஸ்தானம் அஸ்தமனமானபின்
சிம்மாசனங்கள்
இருந்தென்ன சரிந்தென்ன ?

முடிவெடுக்கிறோம்,
இனி,
வௌவால்களாய் வாழ்வதென்றாலும்,
பூமியின் புதர்களோடுதான்.

விண்கலம்,
மீண்டும் எங்களை ஏற்றி
பூமி நோக்கி பாய்ந்த போது தான்
விண்கலக் கருவிகள்
சினிமாபோல் சட்டென செயலிழந்தன.

பிடி நழுவிய விண்கலம்
கீழ் நோக்கிப் பா.ய்ந்து
கடலில் . . . . .

திடுக்கிட்டு விழித்தேன்,
சாரளம் வளியே சாரல் அடித்தது.
மேஜை மீது
‘காதல்.’ தலைப்பிட்ட
காகிதம் ஒன்று
நான்
கவிதை நிரப்பக் காத்திருந்தது.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

கவிதை : இனியும் ஒரு முறை…

நீ மறைய
நினைவுகள் மட்டும் வளரும்.
வெட்டிய மூங்கில் மூட்டில்
வெடித்தெழும் முளைகள் போல.

நினைவுகளின்
மெழுகு வெளிச்சத்தில்
குளித்துக் கரையேறுகின்றன
இரவுப் பொழுதுகளின் இனிப்புத் தட்டுகள்.

இப்போதென்
இதயத்தின் இயங்கு தசைகளுக்குள்
இளைப்பாறிக் கிடக்கிறாய் நீ.

இரு முனைகள் எரித்துக் கொள்ளாமல்
இணைத்துக் கொள்ளும்
மின்சாரக் காலம் கவிழ்ந்து விட்டது.
இப்போது இடிபாடுகள் மட்டுமே மிச்சம்.

உடை வாளை உருவியபின்
உறையைத் தொலைத்து விட்டேன்.
வாளின் கூர்மை கேலியான பின்
ஓரமாய்க் கிடக்கிறது உறை.

வடிகட்டிகளை
வாரிக்கட்டிய வாழ்க்கையில்
தங்கி விட்டவை எல்லாம்
தவிர்க்க வேண்டியவை மட்டும்.

சூரியன் மறையத் துவங்குகிறான்.
தொலைதூரப் பயணம் துரத்துகிறது.
பாலைவனப் புதருக்குள்
யுகம் மறந்த ஒற்றை உயிராய்
வெப்பத்தில் ஜீவன் கனலாகத் துவங்கும்.

இன்னுமொரு காலை விடியும்,
நீ
இல்லை என்பதைச் சொல்ல.

இன்னுமொரு இரவு வரும்
உண்மையை செரித்து உறங்கிட.

கவிதை : சிறு மோகச் சிந்தனை

அந்த தேவதை
மெல்ல மெல்ல கேசம் கலைய
மிதப்பது போல் நடந்து வந்தது
என்னை நோக்கி.

அவளுக்கும் எனக்கும்
இடையே இருந்த இடைவெளி
சொல்லாமல் கொள்ளாமல்
குறையத் துவங்கியது.

அந்த சின்ன உதடுகளை
இறுகப் பற்றி ஓர்
ஆனந்த முத்தம் அளிக்கலாமா ?.

அந்த
செம்பருத்திக் கரங்களைக் சேர்த்து,
விழிகளை விழிகளில் கோர்த்து
விடியும் வரையில்
விழித்துக் கிடக்கலாமா ?

இதயத் துடிப்பின் வேகம் நிற்க
இருகைகளால் அவளை எடுத்து
இதயம் இடிக்கும் தூரத்தில்
இணைத்துக் கொள்ளலாமா ?

கூந்தல் இடையில்
விரல் கவிதை வரையலாமா ?
கன்னங்களின் கதகதப்பில்
சிறு கவிதை படிக்கலாமா ?

சிறு மோகச் சிந்தனைகள்
சிறுகச் சிறுக வலுத்த நேரம்,
என்னை நெருங்கி.
என்னைக் கடந்து நடந்து போய்விட்டாள்..

ம்ம்ம்.
அவளுக்கென்ன தெரியும்
என் மனசு அவளுக்காய் எழுதி
கலைத்துப் போட்ட மணல் கவிதை பற்றி.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….

கவிதை : இணையக் காதல்…

இது
இருபதாம் நூற்றாண்டின் காதல்.
விரலாலும் குரலாலும்
விருப்பங்கள் பரிமாறிக் கொள்ளும்
விஞ்ஞானக் காதல்.

விழிபார்த்து வார்த்தைகளை
விழுங்கி விட்டேனென்று
கவிஞர்கள்
இனி பொய் சொல்லவேண்டாம்.

யாரும் பார்க்கக் கூடாதென்று
நெரிசல் நகரங்களில்
நிழல்ப்பூங்கா தேடவேண்டாம்.

மணிக்கணக்கில் அலங்காரம் செய்து
பிம்பங்களோடு பிடிவாதம் பிடித்து
கசங்காமல் நசுங்காமல்
நிழல் கூடக் கலையாமல்
நடக்கும்
அவஸ்த்தை இனி வேண்டாம்.

இந்த நேரம் பார்த்தா
இவன் இங்கே வரவேண்டுமென்று
பயத்தின் படபடப்பில்
இதயத்துடிப்பை இறக்குமதி செய்யவேண்டாம்.

தொடுதல்களால் பற்றிக்கொள்ளும்
தொட்டாச் சிணுங்கி இலைகளாய்
எத்தனை நாள் தான் காதலிப்பது ?

காக்கவைத்ததற்குக் காரணத்தை
எத்தனை நாள் தான்
பிரதி எடுப்பது.
புதிதாய் கொஞ்சம் பேசுவோமே…

உலக வலையில்
ஏதோ ஓட்டையாம்.

கணிப்பொறி என்னோடு
முரண்டு பிடிக்கிறது.

தொலைபேசி
நேற்றைக்கு மூர்ச்சையாகி விட்டது.

காதலில் பொய் சொல்வது விதியாகி விட்டது
அதை
புதிதாய் சொல்வதற்கு பழகிக் கொள்ளலாம்.

விழிகள் இரண்டும் மோதும் முன்
விரல்கள் விரலிடை தூங்கும் முன்..
தீண்டலின் தூண்டல் துவங்கும் முன்
இதயங்களிடையே
நம்பிக்கை பரிமாறுகிறதே விஞ்ஞானக் காதல் !!!

காதலுக்கு
சிணுங்கலின் வெப்பத்தை விட
நம்பிக்கையின் சப்தம் தானே
தேசிய கீதம் !!!

கவிதை : சொல்ல மறந்த கவிதை

வெள்ளைப் புன்னகையால்
என் மனதில்
கனவுகளின் நிறம் ஊற்றிய
சின்னப் புறாவே.

புன்னகை மின்னலால்
என்
இதய வானத்தில்
வெள்ளை வேரிறக்கியவள்
நீ.

இதயத்தின் ஒருபாகம்
இருண்டு தான் கிடந்தது
உன்
வெள்ளிக் கொலுசுகளின்
வெள்ளை மணிகள் தான்
அதை
துலக்கிவைத்துப் போயின.

தரை மோதும் முன்
முகம் மோதும்
ஓர்
பனித்துகளின் மென்மை
உன் புன்னகையில்.

நிறம் மாறா
அடர் வெண்
மேகத்தின் மென்மை
உன் கன்னங்களில்.

கவலைக் குவியலில்
கூட
வெள்ளைப் பூக்களை
விளைவிக்க
உன்னால் எப்படி முடிகிறது ?.

என்
கருப்பு இரவுகளில்
தினம் தினம்
பௌர்ணமியாய் உலவ
உன்னால் மட்டுமே முடிகிறது.

உன் கண்களில்
தூண்டில்கள் இல்லை,
ஆனாலும்
மாட்டிக் கொள்ளவே
மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.

உச்சந்தலையில்
ஒற்றை விரல் கோடிழுத்து
மூக்கு வரை
வரும்போதே
நான்
மூச்சிழந்து போகின்றேன்.
உதடுகளைத்
தீண்டும் வரை
உயிர் வாழ விழைகின்றேன்.

கனவுகள் அகல,
விரல்கள் விலக
வெயில் வந்து தாக்குகையில்
சுள்ளெனச் சுடுகிறது
சொல்லாத காதல்.

வருகிறது
காதலர் தினம்.
அப்போதேனும் சொல்வேனா ?
இல்லை
கனவுகளில் மட்டுமே வெல்வேனா ?

0

கவிதை : பின்னொரு பொழுதில்

ப்போதெல்லாம் அவனை
நினைக்காமல் இருக்க நினைப்பதில்லை.
நினைத்தால்
முடிக்க முடிவதில்லை.

என் அகத்துக்குள் இறங்கி
அகழ்வாராய்ச்சி செய்தால்.
அவன் மட்டுமே
ஆலமரமாய் அங்கிருக்கின்றான்.

அவனோடு
உரையாடுவதில் உதிர்ந்து போகும்
இரவின் இதழ்கள்.
மயக்கத்தில் முடியும் மாலைகள்.

என்
சிந்தனைகளின் சிலந்தி வலையெங்கும்
நினைவுப் பூச்சிகளும்
கனவுக் குழவிகளும்.

அவன் கரம் கோர்த்து
மணமேடையில் சிரிக்கவேண்டும்.
ஓர் மழலைக் குழந்தையாய்
அவனை என்
மடியில் கொஞ்சம் கொஞ்ச வேண்டும்.

காலங்களுக்கு அப்பால் காணும்
வயல் வெளிகளில்
காதல் சிட்டுகளாய்
தானியம் தின்றுத் திரிய வேண்டும்.

வட்டத்தின் நுனிதேடித் திரியும்
மூட்டைப் பூச்சியாய்,
தூரில்லாத் ஓட்டைப்பானையில்
தொடர்ந்து விழும் மழைத்துளியாய்
முடிய மறுத்து ஒழுகும்
என் கனவுகள்.

அவனுக்குள்
காதல் தான் வழிகிறதா ?
கண்டு பிடிக்க முயன்று  முயன்று
சரிவிகித வெற்றி தோல்வியில் சரிந்திருக்கிறேன்.

கேட்டு விட வேண்டுமென்று
இதயம் கதறும் போதெல்லாம்
நாவில் லாடம் அடித்து நிறுத்துகிறது
எப்போதோ
நான் அவன் கையில் கட்டிய ராக்கி.

கவிதை : வரங்கள், தேவதைக் கரங்கள்…


எதிர்ப்பில்லாத காதலை
நான் பார்த்ததில்லை.

மண்ணுக்கும் வேருக்கும்
இருக்கும் இறுக்கம்
வேலிகளுக்கு புரிவதில்லை.

பலரும்
பயம் கொள்வதெல்லாம்
பார்வையாளர்களைப்
பார்த்துத் தான்.

நான் மகிழ்கிறேன்.

உன்

நேசம் பெய்யும்
நெஞ்சுக் கூட்டில்
ஒதுங்க முடிந்ததில்,
உண்மையாகவே மகிழ்கிறேன்.

இன்றுவரை என் இதயத்தின் ஆழத்தை
உனக்குக் காட்டியதில்லை.
உன்னைப் பற்றிய என் கனவுகளை
உனக்குள்
ஒளிபரப்பு செய்ததுமில்லை.

ஆனாலும் உனக்குத் தெரியும்.
நான் உன்
நிழலைக் கூட காதலிக்கிறேன்.

என் ரத்தத்தில்
சிவப்பு இரத்த அணுக்களை விட
உன்
நினைப்பு அணுக்கள் தான் அதிகம்.

என் கண்களில்
நீ சொல்லியதும்
நான் சொல்லாததுமான
கவிதைகள் தான் அதிகம்.

நம்
தேனிலவுக் காலத்தின்
ஓர்
தேய் நிலா வெளிச்சத்தில்
உனக்கு
என் காதலைச் சொல்லவேண்டும்.

சுற்றிலும் கடல் வேலியிட்ட
ஓர்
தீவுக்குள்
உன்னைக் கொஞ்சம் கொஞ்ச வேண்டும்..

முடிவு தெரியாத ஓர் சாலையில்
பிரியாத கரங்களுடன்
ஏதோ பேசி
நடக்கவேண்டும்.

கொஞ்சமாய் ஊடல்.
நிறையவே கூடல்.
என்று
என் அணுக்களெங்கும்
செதுக்கி வைத்திருந்த ஆசைகள்
சீனப் பெருஞ்சுவரை சிறிதாக்கும்.

என்ன செய்வது ?
கடலுக்குள் வலை விரிப்பவனும்
காதலுக்குள் அகப்படுபவனும்
கன்னங்களில்
காண்பதெல்லாம் உப்பு நீர் தானே.

ஜென்மங்கள் மேல் எனக்கு
நம்பிக்கை இல்லை !
அப்படி ஒன்று இருந்தால்.
வினாடி நேரமும் பிரியாத உறவாய்
நீ எனக்கு வேண்டும்..
எனக்கு மட்டுமாய் !!

நான் வேண்டும் வரம்
இது ஒன்று தான்,
தேவதை வந்தபின்
கேட்காமலேயே கிடைக்காதா
வரங்களின் கரங்கள் !

கவிதை : அந்த அரசன்

அந்த அரண்மனை
வாசல்கள் தோறும் வீரர்களை நட்டு
விரிந்து பரந்துக் கிடக்கிறது.

மதில் மோதும் காற்றுக்கும்
முகத்தில் முத்திரை குத்தும் வெளிவாசல்.
பூமியில் பாதியை
முதுகுக்குப் பின் மறைக்கும் மதில் சுவர்.

பட்டறைகளில் ஓயாத வேலை,
வேலுக்கு நுனி சுருக்குவதும்,
வாளுக்கு முனை செதுக்குவதுமாய்
உலோக உராய்வுகளின் ஊசிச் சத்தங்கள்.

உயிர் கொடுக்க
உயிர் தேக்கும் படைக்கூட்டம்.

படைகளுக்குப் பின் பாதுகாக்கப்படும் அரசவை,
சாரளங்களுக்குப் பின்னால்
மிதக்கமட்டுமே பழக்கப்பட்ட
அந்தப்புரத் தாமரைகள்.

வரைபடங்களால் வரையப்படும் வீரம்,
படையெடுப்பு மட்டுமே பழகிப்போன
பரம்பரை.
போர்க்களங்களுக்கு
குருதி இறைத்து இறைத்து
வளர்க்கப்பட்ட சாம்ராஜ்யம்.

அந்த அரண்மனையின்
மூலைகளுக்குள்ளும் உளவு வீரர்களின் வாசனை.
கேளிக்கைகளில் காலம் விரட்டுகிறது
அகலமான சிறையில் அடைக்கப்பட்ட
ராஜ குடும்பம்.

அதிகம்பீர ஆசனத்தில்,
மயில்தோகைக் காற்றின் அடியில்,
வரிசை கலையாத பணிப்பெண்கள் அருகில்,
வீரச் செருக்குடன் பேரரசன்.

வலம் வரப் போன வீதியில்,
வாள் வீச்சின் வேகத்தைக் கடந்து
விழி வீச்சால் மார் பிளந்த
ஏதோ ஓர் பெண்ணின் கனவில்
இதோ,
இன்னும் விலங்கிடப்பட்டுக் கிடக்கிறான்.

0

பருவத்தைக் கொண்டாடு !

இது
மரங்கள் உடைகளின்
நிறம்
மாற்றும் காலம்.
அவசர அவசரமாய்
உடை மாற்றும் காலம்.

பச்சைய நரம்புகளுக்குள்
வர்ணப் பாம்புகள்
நெளிய,
இலைகள் எல்லாம்
வானவில் போர்த்திச் சிரிக்கும்
வர்ணங்களின் மாதம்.

காற்றில் சூரியனின்
வெப்பம் நகர
ஓராயிரம் குளிர்வேகத் தடைகள்
உருவாகும்.

குளிரில் நடுங்கிக் கொண்டே,
வெப்பம் இழந்த வெயிலை
இழுத்துக் கொண்டே,
முகிலிடை ஓடுவான் ஆதவன்.
இலைகளுக்கு இது
குளிர் முத்தக் காலம்.

வெயில் காலம்
மரங்களுக்குச் சீருடை அணிவிக்கிறது,
இப்போது
மரங்கள் திருவிழா
கொண்டாடுகின்றன.

பிரகாசமாய் எரியும்
கடைசித்துளி மெழுகு தான் இது,

இன்னும் சில நாட்கள் தான்,
இலைகள்,
உறவுகளுக்கு விடைகொடுத்து
மர(ண)த்தின் காலடியில்
மண்டியிடும்.

இன்னும் சில நாட்கள் தான்,
இந்தக் குளிரும்
உறைந்து போய்,
மேகத்தை உருக விடாமல் உடைக்கும்.

உடைந்து வீழும்
மேகத் துண்டுகள்,
ஆடைகளைந்த
மரமேனியில் ஆனந்தமாய் கூடுகட்டும்,

வெப்பத்தின் கடைசித் துளிகள்
மரத்தின் மையத்திற்குள் ஓடி
மறைந்து கொள்ள,
பனிவீரர்கள் மட்டும்
ஆட்சியைப் பிடித்து விட்டதாய்
ஊரெங்கும் அறிவிப்பார்கள்.

வெப்பக் குளம் தேடி
தெப்பக் குளம் விட்டு
தவளை மனிதர்கள் தாவுவார்கள்.

தன்னை
அவரசமாய் மிதிக்கும் வாகனங்களைப்
புரட்டி,
தெரியாமல் தீண்டும்
வெற்றுக் கால்களை
விரட்டி,
எங்கும் சில மாதங்கள்
பகிரங்கத் தாக்குதல் நடக்கும்.

அதுவும் சில காலம் தான்,
பதுங்கிய சூரியப் புலி,
மீண்டும் தன்
குகைவிட்டுச் சீறும்
கதிர்களில் வெப்ப வரம்புகள் மீறும்.
அது
குளிர் யானைகளிள்
அகன்ற பாதங்களைக் கீறும்.

மெல்ல மெல்ல,
பனி வீரர் படை பின்வாங்கும்,
மீண்டும் வருவேன் என்னும்
சபதத் துளிகளை
நிற்குமிடத்தில் நிறுத்திவிட்டு.

கிளைகளில் இருக்கும்
பனிக் கூடுகளை
வெப்ப அரிவாள் அறுத்தெறியும்.
சாலைகளை அது
பனியின் கண்ணீர் மொண்டு
கழுவித் துடைக்கும்.

மரங்கள் எல்லாம்,
மீண்டும்
சூரியக் கட்டளைப்படி
சீருடை அணியத் தயாராகும்.
ஆதவன் வந்து
சிம்மாசனத்தில் அமருவான்.

எதுவும் நிரந்தரமாய்
வந்தமராது,
ஆனாலும்
மாற்றங்களை ஏற்கும் வரம் தரப்படும்,
மரங்களுக்கும்
மனிதர்களுக்கும்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers