கவிதை : எதிரேறும் மீன்கள்

ஆளில்லாத தீவிலெனில்
இந்த
சில்மிஷம்
இத்தனை சுவையாய்
இருந்திருக்குமா ?

விரலில் வழியும்
தேனுக்கு இருக்கும்
சுவை
தேனில் அமிழ்ந்திருந்தால்
கிடைத்திருக்குமா ?

கவசங்களே
தேவைப்படாத காதல்
இனித்திருக்குமா ?

பின்னிருக்கைப்
பயணங்கள் தரும் பேருந்து,

கிசுகிசுப்புப்
பேச்சுக்களுக்கான
தொலைபேசி நிறுத்தங்கள்

யார் கண்ணிலும்
படாமல்
உன்னை வந்தடையும்,
பின்னிரவில் எழுதப்பட்ட
மோக மின்னலடிக்கும்
கடிதங்கள்,

இவை தானடி
இனிப்பு.
என்று தான் பேசமுடிகிறது.

படகுக் கரையில்
பயந்தபடி அமர்ந்திருக்கும்
மாலையில்.

தமிழிஷில் வாக்களிக்க…

இப்படியாய் என் காதல்…

கம்பிக்குள்
ஓடும்
மின்சாரம் போன்றதோ,
கம்பிக்கு வெளியே
ஓடும்
காற்றைப் போன்றதோ தான்
என் காதல்.

கருவிகளின்
இசைவுகளிலோ,
இலைகளின்
அசைவுகளிலோ
உணர்ந்து கொள்ள வேண்டும்
அதன் இருப்பை.

என்னால்
காட்ட முடியாது
ஒரு பிடி காற்றையும்
கால் கிலோ
மின்சாரத்தையும்.

To Vote in Tamilish

நான் முள்ளானால்….

 


முள்ளாய் இருந்து விடச்
சம்மதமெனக்கு,
தழுவலில் காயம் தருவேனோ
என்று தான்
தயங்குகிறேன்.

எப்போதேனும்
நீ
மொட்டுப் பல்லக்கை விட்டு
பூவாய்த்
தரையிறங்குகையில்
தாங்கிப் பிடிக்க முடியாதே
என்னும் வருத்தமும்,

காற்றோடு பேசும்
உன் கலந்துரையாடலில்
உன்னைக்
கைகுலுக்குப் பாராட்ட
முடியாதே எனும் பயமும்,

சில்மிசச் சிந்தனைகளை
முந்தானையில் கட்டி
மோகம் முன்வருகையில்
உன்
இதழ்களை வருட
இயலாதே எனும் கவலையும்,

இவைதான்
என்னை
முள்ளாய் இருக்க விடாமல்
மல்லுக்கு நிற்கின்றன.

பேசாமல்
முள்ளாய் மாறிவிடேன்.

தமிழிஷில் வாக்களிக்க..

காதலா, காமமா ?

நிஜமாகவே நான்
உன்னைக் காதலிக்கிறேனா ?

இல்லை,
செழித்து வளரும்
தளிர்களைக் காணும்
ஆட்டுக் குட்டியின் ஆசைதான்
எனதா ?

உன் விழிகள்,
உன் இதழ்கள்,
உன் கன்னங்கள்
இவை
இப்படி இல்லாதிருந்தாலும்
நான்
இப்படியே தான் இருந்திருப்பேனா ?

நான்
காதல் மயக்கத்திலா ?
இல்லை
காதல் தெளிவிலா ?

நினைவுகளாலோ
விரல்களாலோ
உன்னை
உரசிப்பார்க்காதபோதும்
எனக்குள் அணையாமல் கிடக்கிறதா
இந்த காதல் ?

இல்லை
தொடுதல் ஆசையில் தான்
தொடர்ந்து வருகிறதா ?

எப்படித் தெரிந்து கொள்வது
நிஜமாகவே நான்
உன்னைக் காதலிக்கிறேனா
என்பதை ?

நீயே சொல் பெண்ணே,
நான் மறுத்தால்
உன் இரவுகள் நொறுங்குமா ?
உன்
பகல்கள் படுகாயப் படுமா ?

*

தமிழிஷில் வாக்களிக்க…

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers