காதல் பூனை

நான்
வளர்த்து வரும்
பூனைக்குட்டிக்கு
இப்போது
புலி நகம் முளைத்திருக்கிறது

அதன்
பற்களில் பல
புலிப்பற்களாகி விட்டன.

முன்பெல்லாம்
மடியிலமர்ந்து கொஞ்சும்.
இப்போதோ
படியிலமர்ந்து உறுமுகிறது.

அதன்
மெல்லிய மின்னல் மீசை
இன்னல்களையே
அள்ளித் தருகிறது.

என்
படுக்கையில் விரித்திருக்கும்
கனவுகளைச்
சுருட்டி வெளியே
எறிய வேண்டுமாம்,

தலை கோதும்
விரல் போதும்
என்றிருந்த என் பூனைக்குட்டி,
கனவுக் கன்றுகளைக் கூட
கட்டக் கூடாதென
கட்டளையிடுகிறது.

கனவுகளை
அவிழ்த்து விட்டு,
பூனையை அனுப்பவேண்டும்.

மீண்டும் வளர்க்க
ஓர்
செல்ல நாய்க்குட்டி
கிடைக்காமலா போய்விடும்.

ஆனாலும்
நினைக்கும் போதெல்லாம்
வலிக்கிறது
பூனை நகக் கீறல்கள்.

*

தமிழிஷில் வாக்களிக்க

கா….கா…காத்திருப்பு….

 

கடந்து போகும்
நபரை
எங்கோ பார்த்திருக்கிறேனோ ?

யாரோ
உற்றுப் பார்க்கிறார்களே
தெரிந்தவர்களோ ?

கடந்து செல்லும்
வாகனத்து சன்னலில்
பரிச்சய முகம் ஏதும்
பயணம் செய்ததோ ?

இந்த நேரத்தில்
இங்கென்ன வேலையென
எந்தக் குரலேனும்
பின் காதில் மோதுமோ ?

என்று
பதட்டம் தின்னும்
பொழுதுகளைத் தானா
காதலா
காத்திருப்பு சுகமென்று
கவிதையில் சொல்கிறாய் ?

தமிழிஷில் வாக்களிக்க….

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers