அப்பா….


காயங்களைக்
காலங்கள் ஆற்றிவிடும் என்பது
மெய் என்று
எல்லோரையும் போல்
நம்பிக்கொண்டிருந்தேன்.

ஆறு வருடங்கள்
என்கிறது நாள்காட்டி,
நூறு வருடங்களின்
பொதி சுமந்த பாரம் நெஞ்சில்.

வருடங்களின் கரைதல்
துயரங்களின்
கரையேறுதலை இன்னும்
கற்றுத் தரவில்லை.

இன்றும் கிராமத்து
ஓட்டு வீட்டின் முற்றங்களில்
அப்பாவின் சுவடுகளை
நினைவுக் கைகள்
தழுவத் துடிக்கின்றன.

என்
தொலைபேசி அழைப்பில்
பதறியடித்து ஓடிவந்த
பாதச் சுவடுகளல்லவா அவை !

பழுதடைந்த படிகளில்
பாதம் பதிக்கையில்
உள்ளறையிலிருந்து
பரவசத்துடன் ஓடிவருகிறது
அப்பாவின் குரல்.

எனக்குப் பசியெடுப்பதை
என்
வயிறு அறியும் முன்
அறிந்த குரலல்லவா ?

விரல் பிடித்து நடந்த
வரப்புகளில்
அப்பாவின் மூச்சுக்காற்றை
ஆழமாய் இழுத்துத்
தேடித் தேய்கிறது நுரையீரல்.

மரணப் படுக்கையில் கூட
என்
வருகை தேடி
பாரம் இழுத்த மூச்சல்லவா !

அவருடைய கட்டிலின் ஓரங்களில்
இன்னும்
மிச்சமிருக்கும் கைரேகையை
விரல்கள்
அனிச்சைச் செயலாய்
அரவணைத்துக் கசிகின்றன.

ஒரு முறையேனும்
பாதம் தொட்டு
அருகிருக்கத் தவித்து
குதிக்கும் கண்ணீரும்
புகைப்படப் பூக்களருகே
இயலாமையால் விசும்புகின்றன.

வெயில்க் கழுகுகள்
கொத்திக் கிழிக்கும்
நகரத்து வியர்வை வீதிகளிலும்
அப்பாவின் குளிர்ச்சியை
மனம்
மீண்டெடுத்துத் தவிக்கிறது.

இலைகளில்லா
என் தோட்டத்துச் செடிகளில்
கிளையுதிர் காலம்
இன்னும் நிற்கவே இல்லை.

அவரோடு வாழும் கனவுகள்
கனவுகளாகிப் போனதால்,
கனவுகளிலேனும்
அவருடன் வாழும் கனவே
இப்போதென்
கலையாத கனவாய் !

பிடித்திருந்தால் வாக்களிக்கவும்…

படிகளில் காத்திருக்கும் கதைகள்.

கிராமத்து வீட்டின்
வாசல்படிகளில்
அமைதியாய் அமர்ந்திருக்கின்றன
கதைகள்.

படிகளில் அமர்ந்து
பேன் பார்க்கையில்
பாட்டி சொன்னவையாய் இருக்கலாம்.

சிறுகல் பொறுக்கி
பாறை விளையாடுகையில்
சகோதரி சொன்ன
கதைகளாகவும் இருக்கலாம்.

கரிக்கட்டையால் கோடு கிழித்து
படிகளில்
புரண்டு விளையாடுகையில்
தம்பி சொன்னதும் இருக்கலாம்.

குளித்து விட்டுக்
குதித்தோடுகையில்
வழுக்கி விழுந்து உடைந்துபோன
என்
முன் பல்லின் கதையும் அதிலே ஒன்று ! 

யாரேனும் வந்தமர்ந்தால்
சொல்லி விடும் துடிப்புடன்
எதிர்பார்ப்புகளின் ஏக்கத்தில்
காத்திருக்கின்றன அவை !

நகரத்தில் நடப்பட்டு
ஆண்டுக்கோ ஆவணிக்கோ
கிராமம் திரும்பும் பிள்ளைகளுக்கு
படிகளில் அமர்வது
கௌரவக் குறைச்சலாகி விட்டது.

அவர்கள் உதறிப் போட்ட
செருப்புகளுக்கு அடியில்
நசுங்கியே கிடக்கின்றன
நேசம் சுமந்த
கதைகளின் தொகுப்புகள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

 

குட்டிக் குட்டிக் கவிதைகள்

 

 

 

 

 

சாரி என்றாள்
செல்லமாய்
நன்றி என்றேன் மெல்லமாய்…
சரேலென மோதிக்கொண்ட
அபாயமற்ற
வளைவு ஒன்றில்

 

 _________________________________________________________________________________

 

 

 

நீ
பொய் பேசும்போதெல்லாம்
கண்டு பிடித்து விடுகிறேன்,
எப்போதேனும்
உண்மை பேசும் போதோ
சந்தேகப்படுகிறேன்.

 _________________________________________________________________________________
 

 

 

 

 

உண்மையைக் காட்டும்
கண்ணாடிகளை
யாருமே விரும்புவதில்லை,
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
அழகாய்க்
காட்டும் கண்ணாடிகள்.
 

  _______________________________________________________________________

   
மொட்டை மாடியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
சாயம் போன
பட்டம் ஒன்று,
ஏதோ
சிறுவர்களின் துயரங்களைச் சுமந்தபடி.

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers