எங்கள் ஊர்

தென்னம் ஓலைகளில்
வழுக்கி விளையாடும்
ஈரக் காற்று.
வாழை இலைகளில்
உட்கார முயன்று முயன்று
தோற்றுப் போய்
வரப்புக் குச்சிகளில்
வந்தமரும் கொக்குகள்,
ஓடையில்
தங்க மணலின் மேல்
வெள்ளி முதுகுடன்
துள்ளி விளையாடும் மீன்கள்,
அடர்ந்து வளர்ந்த
ஆலமர நிழலில்
அமைதியாய் துயிலும்
சர்ப்பக் குளம்,
பூமியின்
புன்னகைப் புல்லரிப்புகளாய்
எங்கும்
பச்சைகளின் மாநாடு,
பொறுங்கள்,
இதெல்லாம்
சங்க உரையில் இருப்பதல்ல
எங்கள் ஊரில் இருப்பது தான்.
0
நாற்பது கிலோ மீட்டர்
வேகத்தில் தடுக்கினால்
குமரி கடலில்,
இரண்டு கிலோமீட்டர் வேகத்தில்
வழுக்கினால்
கேரளா எல்லைக்குள்,
இங்கே தான்
பரந்த குன்றுகள் அடங்கியதால்
பரக்குன்று
என்று பெயர்சூட்டப்பட்ட
என்
கிராமக் குழந்தை இருக்கிறது.
0
குறைந்த பட்ச வசதிகள் கூட
இங்கே
குறையோடு தான்
கிடைக்கிறது.
போடப்படும் சாலைகள்
குறைப்பிரசவமாய்,
தரப்படும் மின்சாரம்
மின்மினி வெளிச்சமாய்,
வருகின்ற பேருந்துகள்
தூரத்து விருந்தாளியாய்,
எங்கள் ஊரில்
குறைந்த பட்ச வசதிகளுக்கே
குறை!
ஆனாலும்
இயற்கை அன்னை
கொடுத்திருக்கிறாள்
அதிகபட்ச அங்கீகாரம்.
மேலாடை இல்லாத
உழைப்பாளர்
மேனிகள்,
தொப்பை
என்றால் என்னவெனக் கேட்கும்.
தாவணி வழுக்காத
மங்கையர்
தோள்கள்,
வெட்கச் சேலைகளை
கண்களால் போர்த்தும்.
முட்டிக்கு மேல் என்பதே
கலாச்சாரத்தில் மேல்
என்னும் கலகப் புயல்
இன்னும் தாக்காத
கல்லூரிக் கன்னியர்கள்,
குளத்துக்குள்
தலைகீழ்ப் பாய்ச்சலில்
கலியுகத் தவளைகளாய்
டவுசர் வயதுகள்.
முக்கியமாக,
இரண்டு பர்லாங் நடப்பதற்குள்
நூறு வாய்கள் கேட்கும்
‘நல்லா இருக்கியா பிள்ளே…’
இதுதான் எங்கள் மனிதரைப்பற்றி
தரமுடிந்த
தரப்பட்டியல்.
அறியாமையின் வரைபடத்தில்
இருளாய் இருந்த
இந்தப் பிரதேசத்தை
ஜேம்ஸ் தொம்மர் எனும்
ஜெர்மன் வெளிச்சம் வந்து
தூர்வாரி தூய்மைப்படுத்தியது.
கல்விக்கூடங்கள்,
ஆலயங்கள்,
ஆலைகள்,
என
வாழ்வுக்கான வரைகோலை
அறிமுகப் படுத்தியது.
செங்கல் சூளைகளிலும்
முந்திரி ஆலைகளிலும்
ஆழக் குழி தோண்டி நடப்பட்ட
ஆட்கள்
கல்வி என்றதும் முதலில்
தள்ளியே ஓட,
அவர்களை இழுத்து வர
கோதுமை மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.
நான் இன்று
கவிதை எழுதுவதற்கும்
அந்த
வெள்ளை மனிதன்
என் பெற்றோருக்கு
பேனா உதறக் கற்றுக் கொடுத்தது தான்
காரணம் !
கடந்த ஆண்டு
அந்த தலை சாய்ந்த போது
எங்கள்
ஊருக்குள்
முதன் முதலாய்
கண்ணீர் அருவி பாய்ந்தது.
0
கவிதையாய்க் கிடக்கும்
என் கிராமத்தில்
பிறந்தோருக்கு
இலவச இணைப்பாய்க் கிடைக்கிறது
மலையாள மொழி.
வெள்ளைப் பாதிரியாரும்
காவிச் சாமியாரும்
ஒரே மேடையில்
அமர்ந்து பேசும்
தேவாலயங்கள்
என்னையும் பேச்சாளனாக்கிப் பார்த்தது.
கர்ணனா கும்பகர்ணனா ?
செய்நன்றியில் சிறந்தவன் யார்
என
சாஸ்தான் கோயிலிலும்,
சிலுவை காட்டும் வழி என
கிறிஸ்தவ ஆலயத்திலும்
அடுத்தடுத்த நாட்களிலேயே
பேசமுடியும்
அடிவாங்காமல்.
மத நல்லிணக்கத்தின்
இதமான காற்று
எங்கள் வீதிகள் தோறும்
வீசிக் கொண்டே இருக்கிறது
இன்றும்.
0
சங்கிலிப் பேய்
நள்ளிரவு தாண்டிய
ஏதேனும் ஓர் ஜாமத்தில்
சங்கிலி இழுத்து ஓடுவான் என்றும்,
ஊரோர ஆலமர
அடிவாரத்தில்
அமாவாசை இரவுகளில்
பேய்களின்
பொதுக்கூட்டம் நடக்கும் என்றும்,
கொல்லைப் பக்கத்தில்
ராத்திரி வேளைகளில்
எட்டிப்பார்த்தால்
எச்சில் பேய்கள்
கட்டிக் கொள்ளும் என்றும்,
பாட்டிகள் சொல்லும்
கதைகளெல்லாம்
மின்சாரம் வந்தபின்
கதைகளாகவே போயின.
கிராமத்தின் அழகையும்
கிராமத்தானின் மனதையும்
எனக்குள்
ஆழமாக அடித்திறக்கியவர்
என் அப்பா.
சமீபகாலமாக
என்னால்
என் கிராம அழகுகளை
அள்ளிப் பருக முடிவதில்லை.
கண்களுக்குள்ளே
படுத்துக் கிடக்கிறார்
அப்பா.
என் பாதப் பதிவுகளுக்குக்
கீழே
அவரது
உறைந்து போன சுவடுகள்
உறங்கிக் கொண்டிருக்கின்றன.
0
எங்கள் ஊர்
இன்னும் இருக்கிறது
அதன்
அழுத்தமான அடையாளங்களை
அவிழ்த்தெறியாமல்.




Ken சொன்னது,
மார்ச் 16, 2007 இல் 12:37 பிற்பகல்
திரு சேவியர் , உங்களின் ஊரைப்பற்றிய வர்ணனைகள் என்னூரின் ஞாபங்களை தூண்டி விட்டிருக்கிறது.
சேவியர் சொன்னது,
மார்ச் 16, 2007 இல் 1:01 பிற்பகல்
நன்றி நண்பரே… நீங்கள் எந்த ஊர் ?
காட்டாறு சொன்னது,
மார்ச் 25, 2007 இல் 5:29 நான்
கவியால் கவியை (ஊர்) பாடிவிட்டீர்கள். எப்போது காண்போம் என்று தவிக்கிறது என்னுள்ளம். நான் இங்கிலாந்து சென்ரிருந்த போது, ஊர் சுற்றி பார்த்ததெல்லாம் அங்குள்ள கிராமத்து அழகைத்தான். அப்போது என்னுள் ஓடிய எண்ணங்கள் இப்படி கொள்ளை கொள்ளும் அழகு இருப்பதால் தான் இங்கு பைரனும், ஷெல்லியும், ஷெக்ஸ்பியரும் இன்னும் பல கவிஞர்களும் இருந்திருக்கின்றனர் என்பது தான். உங்கள் கவிதைகளை படித்த போதும் அதே எண்ணோட்டம் என்னுள். இது வெறும் புகழ்ச்சி அல்ல கவிஞரே. நீங்கள் மென்மேலும் புகழடைய மனமார வாழ்த்துகிறேன்.
Mukundan சொன்னது,
ஏப்ரல் 19, 2007 இல் 9:39 பிற்பகல்
சேவியர்,
வாழை இலைகளில்
உட்கார முயன்று முயன்று
தோற்றுப் போய்
வரப்புக் குச்சிகளில்
வந்தமரும் கொக்குகள்,
ஓடையில்
தங்க மணலின் மேல்
வெள்ளி முதுகுடன்
துள்ளி விளையாடும் மீன்கள்,
தாவணி வழுக்காத
மங்கையர்
தோள்கள்,
வெட்கச் சேலைகளை
கண்களால் போர்த்தும்.
குளத்துக்குள்
தலைகீழ்ப் பாய்ச்சலில்
கலியுகத் தவளைகளாய்
டவுசர் வயதுகள்.
எங்கள் ஊர்
இன்னும் இருக்கிறது
அதன்
அழுத்தமான அடையாளங்களை
அவிழ்த்தெறியாமல்.
நான் ரசித்த வரிகள், உன்னை சாதா கவிஞர்களின்று வேறுபடுத்திக் காட்டும் வரிகள்.
ஓரு சிறு யோசனை,
இனி நீங்கள் படைப்பை பதிவு செய்யும் பொழுது ஒவ்வொரு பத்திக்கும் (para) வரிசை எண் கொடுத்தீர்களென்றால், அடிகோடிடுக் காட்டுபருக்கு சுலபமாகவும் இருக்கும். மேலும் ஒரே பக்கத்தில் பல பிரதிகளை தவிர்க்கவும் இயலும்.
இவண்,
எண்பிலும் தமிழன்புடன்,
வேலுமுகுந்தன்
Appaavi சொன்னது,
மே 24, 2007 இல் 10:11 நான்
ஓ! நம்ம ஊரு தானா உங்களுக்கும்!
Appaavi சொன்னது,
மே 24, 2007 இல் 10:12 நான்
சாதனைகள் பல படைக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
SIVAPARKAVI சொன்னது,
மே 29, 2007 இல் 12:09 பிற்பகல்
Kavithai nalla irukku aana.. ooru pera kadaisi varaikkum
sollaveyilla ?
Ram's சொன்னது,
ஜூலை 12, 2007 இல் 1:14 பிற்பகல்
Hai Kavinarea, Kavithai Varigal Very smart.Ungal Orr Parakkundruthanea.
Kandippaga ungal Orrukku Nanum Varuven orunal.
நாஞ்சில் மைந்தன் சொன்னது,
ஜூலை 29, 2007 இல் 7:13 பிற்பகல்
குமரிமாவட்டத்தில் எந்த ஊர். பார்த்தால் மார்த்தாண்டம் அருகில் என தோன்றுகிறது.
ஊரை பற்றி அழகாக உரைத்துள்ளீர்கள் கவிதை நடையில்
பிரதாப் குமார் சி
PradheepArumuham.K சொன்னது,
ஆகஸ்ட் 8, 2007 இல் 10:23 பிற்பகல்
//முக்கியமாக,
இரண்டு பர்லாங் நடப்பதற்குள்
நூறு வாய்கள் கேட்கும்
‘நல்லா இருக்கியா பிள்ளே…’//
Class!!!
-aru!
Thamarai Chandiran. சொன்னது,
செப்டம்பர் 23, 2007 இல் 8:31 பிற்பகல்
Enatharumai nanba!
Un kavithaiyin azhakil therinthathu Nie pirantha sorga boomi!
Un Kavithai varihazhil therinthathu Un Panpatta Manam!
Un Kavithai Varnanaiyil therinthathu Un Nesikkum Gunam!
Un Kavithai Mukavriyil therinthan en puthiya Nanban!
Vazhha! Valrha Un Thamizh Sevai!…….
Endrum Anbudan,
Thamarai Chandiran.
Lakshmipathy : Sudan சொன்னது,
அக்டோபர் 23, 2007 இல் 8:07 பிற்பகல்
Dear Xavier,
Ungal OOraipatrii…Padithabodhu, Enadhu oorin ninappai…meendum meendum konduvandhu vittadhu…Nanari…
Priyamudan
Lakshmipathy (Sudan)
ஜான் பீ. பெனடிக்ட் சொன்னது,
நவம்பர் 7, 2007 இல் 11:20 பிற்பகல்
நான் உங்கள் கவிதையை கீற்று இதழில் பார்த்தபோது, நீங்கள் இவ்வளவு பெரிய கவியாக இருப்பீர்கள் என்று சற்றும் எண்ணவில்லை. உங்கள் வலைதளத்திற்கு வந்து பார்த்தால்தான், அடடா நீங்கள் எவ்ளோவ்வ்வ்வ்வ் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எழுத்தாளர்ன்னு தெரியுது. அசந்து போயிட்டேன். ரொம்ப பெருமையாகவும் இருக்கு. கலக்குங்கள்.
அன்வர் சொன்னது,
டிசம்பர் 2, 2007 இல் 11:55 பிற்பகல்
கவிதை அருமை..
தங்களின் ஊரின் பெயரை மட்டும் மறைத்து விட்டீர்களே ஐயா!
என்ன்னுடய கணிப்புப்படி களியக்காவிளைக்கு மிக அருகாமையில் இருக்க வேண்டும். சரியா?
-அன்வர்,
தக்கலை.
சேவியர் சொன்னது,
டிசம்பர் 4, 2007 இல் 4:39 பிற்பகல்
ஆமாம் அன்வர்
2 கிலோ மீட்டர் தூரம் தான் களியக்காவிளைக்கு 
Kunthavai சொன்னது,
ஜனவரி 16, 2008 இல் 11:24 நான்
//முக்கியமாக,
இரண்டு பர்லாங் நடப்பதற்குள்
நூறு வாய்கள் கேட்கும்
‘நல்லா இருக்கியா பிள்ளே…’
//
எனக்கு பழக்கமான கேள்வி.
பாசமுள்ள வார்தைகள்.
வாழ்த்துக்கள்.
சேவியர் சொன்னது,
ஜனவரி 16, 2008 இல் 4:57 பிற்பகல்
மிக்க நன்றி குந்தவை.