மனசுக்கு டானிக் : கைகளில்லை + கால்களில்லை = கவலைகள் இல்லை

Nick9

“உங்களுக்கு ஒரு பையன் பொறந்திருக்கான்” என நிக்கை (Nick Vujicic) அவனுடைய தந்தையிடம் காட்டியபோது உள்ளுக்குள் குமட்டிக் கொண்டு வர, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே ஒடி வந்து வாந்தியெடுத்தார் தந்தை !

“இந்தாங்க உங்க பையன்” என தாயிடம் நீட்டியபோது “ஐயோ.. என் முன்னாலிருந்து கொண்டு போங்கள்…” என நான்கு மாதங்கள் அவனைத் தொடாமலேயே அழுது தீர்த்தாள் தாய்.

விஷயம் இது தான். நாளும் கிழமையும் எண்ணி எண்ணி ஆவலுடன் குழந்தையைக் கொஞ்ச காத்திருந்த அந்த பெற்றோருக்குப் பிறந்ததோ கைகளும் கால்களும் இல்லாத ஒரு குழந்தை ! இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத ஒருவனால் என்ன செய்ய முடியும் பிச்சை எடுப்பதைத் தவிர ? என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

அந்தக் கவலைதான் அந்த ஆஸ்திரேலியப் பெற்றோருக்கும் இருந்தது. ஒரு சின்ன குறை இருந்தாலே சமூகத்தில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம். கைகளும் இல்லாமல், கால்களும் இல்லாமல் இல்லாமல் இவனெல்லாம் என்ன வாழ்க்கை வாழப்போகிறான் ? தொட்டதுக்கெல்லாம் யாரோ ஒருவருடைய உதவியில் தானே இவன் வாழ முடியும் என்பதே பெற்றோரின் தலையாய கவலையாய் ஆகிப் போனது.

அன்றைக்கு அவர்களிடம் போய், “கவலைப்படாதீர்கள். உங்கள் மகன் ஒரு நாள் ஓடுவான், குதிப்பான், நீச்சலடிப்பான், கால்ஃப் Nick4விளையாடுவான், புட்பால் விளையாடுவான், கடலில் ஷர்ப் செய்வான் என்றெல்லாம் சொல்லியிருந்தால்” அன்றைக்கே ஒரு கொலை விழுந்தாலும் விழுந்திருக்கும். ஆனால் எல்லாமே ஒரு பரபரப்பான சினிமா போல நிஜமாகியிருக்கிறது இன்று.

தற்போது தனது இருபத்து ஆறாவது வயதில் இருக்கும் நிக், இன்றைக்கு மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்கிறார். கூடவே கோடானு கோடி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் சின்னமாகவும் உருவெடுத்திருக்கிறார்.

இப்போது மிகவும் உற்சாகமாய் இருக்கும் நிக் கடந்து வந்த ஆரம்ப வாழ்க்கை ரொம்பவே கொடுமையானது. கைகளும் கால்களும் இல்லையென்றாலும் பெற்றோர் அவனை பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்கள். பள்ளிக்கூடத்துக்குச் சென்றால் பிள்ளைகள் நிக்கை நெருங்கி வரவே பயப்பட்டார்கள். ஏதோ ஏலியனைப் பார்ப்பது போலத் தான் நிக்கை பார்த்தார்கள்.

எல்லாரையும் போல சாதாரணமாய் வாழ முடியாத ஏக்கம் நிக்கிற்குள் டன் கணக்காய் கனத்தது. மற்றவர்களின் கிண்டலும், கேலியும், அருவருப்புப் பார்வையும் நிக்கை நிலைகுலைய வைத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. டீன் ஏஜ் வயது வரை நிக் செய்த செபம் என்ன தெரியுமா ? “கடவுளே தலைமுடி வளர்வது போல எனக்கு கைகளும் கால்களும் வளர வேண்டுமே” என்பது தான்.

EFG6462

அப்போதெல்லாம் தொட்டதுக்கெல்லாம் தற்கொலைச் சிந்தனைகள் வந்து கொண்டே இருந்தன. எப்படியாவது செத்துப் போகவேண்டும் என்று நினைத்தாலும் அதையும் தனியே செய்ய முடியாத நிலை. “கொஞ்சம் என்னைக் கொல்வீர்களா பிளீஸ்” என யாரிடமாவது கெஞ்ச வேண்டிய நிலையே நிக்கிற்கு.

அப்படியும் ஒருமுறை பாத்டப்பில் தண்ணீரை நிரப்பி மூழ்கிச் சாக முனைத்திருக்கிறார். இன்னொரு கழுத்து உடையட்டும் செத்து விடலாம் என டேபிளில் இருந்து தலைகீழாய் குதித்திருக்கிறார். ! என்ன செய்ய? வாழவேண்டும் எனும் விதி அவருக்கு. எல்லா தற்கொலை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

ஆரம்ப காலத்தில் நிக்கின் உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் பின்னர் நிக்கிற்கு தன்னம்பிக்கையை ஊட்டத் துவங்கினர். 18 மாதமாக இருந்தபோதே நீச்சல் பழக்கத் துவக்கிய தந்தை, ஆறு வயதாக இருக்கும் போது கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தார். தாய் பிளாஸ்டிக்கில் ஒரு வளையத்தைச் செய்து அதில் பென்சிலை மாட்டி எழுத கற்றுக் கொடுத்தார். இவையெல்லாம் தான் நிக்கிற்கு நிமிர்ந்து நிற்கும் தைரியத்தைக் கொடுத்தது.

Nick1

நிக்கின் இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் ஆறாவது விரல் போல நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாகம் தான் அவனுடைய வரப்பிரசாதம். அதுதான் அவனுடைய கை, கால், துடுப்பு, எல்லாமே !. நடப்பது, எழுதுவது, நீந்துவது, விளையாடுவது என சர்வமும் அதன் வழியாகவே. இது மட்டும் இல்லாமலிருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியாது என சொல்லி சிரிக்கிறார் நிக்.

தனது பதின்மூன்றாவது வயதில் ஊனமுற்ற ஒருவரைப் பற்றிய வரலாறு ஒன்றை நிக் படித்தார். அதுதான் அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அந்த ஊனமுற்ற மனிதர் கழுத்தையும், நாடியையும் பயன்படுத்தி கால்ப் விளையாடியதைப் படித்தபோது நிக்கிற்குள் ஒரு மின்னல் அடித்தது.

Nick3

“அடடா… தேவையில்லாமல் தற்கொலை செய்யப் பார்த்தேனே” என தன்னையே நொந்து கொண்டவர், “நல்ல வேளை இதுவரை சாகவில்லை” என நினைத்துக் கொண்டு வாழ்க்கையை புதிய உத்வேகத்துடன் எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அதுவரை கண்ணாடியைப் பார்க்கும் போது கைகளும், கால்களும் இல்லாத சதுர உடம்பு மட்டுமே தெரிந்த நிக்கிற்கு அதன் பின் தான் தனது அழகிய கண்கள் தெரிந்தன என சிலிர்ப்பூட்டும் நம்பிக்கை விதைக்கிறார்.

அதன் பிறகு கடவுளைப் பழிப்பது, சாக நினைப்பது, முனகுவது, அழுவது, கவலை கொள்வது என அனைத்து வேண்டாத விஷயங்களையும் மூட்டை கட்டி தூர எறிந்து விட்டு உற்சாகமாகிவிட்டார் நிக். பிறருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சுகளையும் மீட்டிங்களையும் நடத்தத் துவங்கிவிட்டார்.

அப்படி ஆரம்பித்த அவரது தெம்பூட்டும் பணி, 24 நாடுகளுக்குப் பயணம் செய்து இலட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் உரையாற்றுமளவுக்கு பரந்து விரிந்திருப்பது வியக்க வைக்கிறது ! தற்போது ஊனமுற்றவர்களுக்காக இயங்கும் “லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்” எனும் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் அவர்.

Nick5

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் பிறந்த நிக் இப்போது வசிப்பது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில். சோர்வுற்றும், சோகமுற்றும் இருப்பவர்களுக்கு இப்போது உற்சாக டானிக் இவர் தான், இவருடைய பேச்சுகள் தான்.

ஐயோ அது இல்லையே, இது இல்லையே என புலம்பும் மக்கள் எதுவும் இல்லாமல் எல்லாம் இருப்பதை விட மகிழ்ச்சியாய் இருக்கும் நிக்கைப் பார்த்ததும் விளக்கைப் போட்ட இருட்டு அறைபோல சட்டென தெளிவாகி விடுகின்றனராம்.

குறிப்பாக இளம் வயதினரின் தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கைக் குறைவு, மன அழுத்தம் இவையெல்லாம் இவரைப் பார்த்ததும் பனிக்கட்டியில் வரைந்த ஓவியமாய் ஈரமாய் ஒழுகி மறைந்துவிடுகிறதாம்.

“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை” எனச் சிரிக்கும் நிக் உண்மையிலேயே இந்த நூற்றாண்டின் வியப்புக் குறியீடாய் நிமிர்ந்து நிற்கிறார்.

Nick7

தமிழிஷில் வாக்களிக்க….

நிலா 40 !!

 

 

1969

ஆயிற்று நீண்ட நெடிய நாற்பது வருடங்கள். கவிஞர்கள் பேனா உதறி உதறி சலித்துப் போன நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து நடந்து ஜூலை இருபதாம் தியதியுடன் நாற்பது வருடங்கள் முடிந்து விட்டன. நிலாவில் வடை சுடும் பாட்டியைப் போய் பார்த்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும், மைக்கேல் காலின்ஸும் இப்போது தாத்தாக்களாகிவிட்டார்கள். நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும், மைக்கேல் காலிங்ஸ் க்கும் வயது 78. ஆல்ட்ரின் வயது 79 !

உலகையே வியப்புக்கும், சிலிர்ப்புக்கும், சந்தேகத்துக்கும் உள்ளாக்கிய இந்த “கிரேட்டஸ்ட் வாக்” என அழைக்கப்படும் மனிதனின் முதல் நிலவு நடை உணர்ச்சி பூர்வமாக திரும்பிப் பார்க்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1969 ல் இளைஞர்களாக பூமிக்கு வெளியே போய் நிலவைப் பார்த்து வந்தவர்கள் இப்போது முதுமைக்காலத்தில் சந்தித்து தங்கள் இறந்த காலத்தின் பறந்த நினைவுகளைப் புரட்டிப் பார்த்து ஆனந்தமடைந்தார்கள்.

மைக்கேல் காலிங்ஸ் விண்கலத்தில் அமர்ந்து நிலவுக்கு மேலே சுற்றிக் கொண்டிருக்க, பதட்டமும், பயமும், திகிலும் நிறைந்த மனநிலையில் வேற்றுக் கிரகத்துக்குள் ஆம்ஸ்டிராங்கும் ஆல்டிரினும் பாதம் பதித்த நிமிடங்கள் இன்னும் அவர்கள் மனதில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் போலவே விரிகிறது.

இவர்கள் பயணம் செய்த விண்கலத்தின் தொழில் நுட்பத்தை விட மிகச் சிறந்த தொழில் நுட்பம் இன்றைக்கு நாம் சர்வ சாதாரணமாய் கையில் வைத்துச் சுழற்றும் செல்போனுக்கு உண்டு ! இன்றைக்கு அருங்காட்சியகத்துக்கு மட்டுமே பயன்படக்கூடிய அந்த தொழில் நுட்பத்தைக் கொண்டே நிலவு வரை போய் வந்ததை நினைத்து இப்போது வியக்கின்றனர் இந்த விண்வெளி வீரர்கள்.

ஒரே விண்கலத்தில் நிலவு வரை சென்று திரும்பியிருந்தாலும், நிலத்தில் வந்தபின் தனித் தனியாகிவிட்டார்கள். எப்போதாவது அத்தி பூத்தார்போல சந்தித்துக் கொள்வது தான் இவர்களது வழக்கம். இதற்கு முன் 35வது ஆண்டு நிறைவு விழாவில் சந்தித்துக் கொண்டவர்கள் இப்போது 40வது ஆண்டு நிறைவு விழாவில் கைகுலுக்கிக் கொண்டனர். அவ்வளவு தான்.

ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் தேசிய விண்வெளி மியூசியத்தில் நடந்த நாற்பதாவது ஆண்டு நிறைவு விழா விண்வெளி ஜாம்பவான்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள், நாசா ஊழியர்கள் என ஒரு சிறப்பு மிக்க விழாவாக நடந்தது.

இந்த நினைவு கூரலின் சிறப்பு நிகழ்ச்சியாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவையும் சந்தித்தனர் இந்த மூன்று விண்வெளி வீரர்களும். நிலவு வரை போய்வந்தவர்களின் அருகில் நிற்பதே பரவசமானது என நெகிழ்ந்து போனார் கருப்புத் தங்கம் ஒபாமா.

8“நேற்று நடந்தது போல் இருக்கிறது. ஹவாய் தீவில் என்னுடைய தாத்தாவின் தோளில் அமர்ந்து கொண்டு விண்வெளி வீரர்களை கொடியசைத்து வரவேற்றபோது எனக்கு வயது எட்டு. அமெரிக்கர்கள் தங்கள் கனவை எப்படி நனவாக்குகிறார்கள் என்பதன் மிகச் சிறந்த உதாரணம் இந்தப் பயணம் என்றார் என்னைத் தோளில் தாங்கியிருந்த தாத்தா.” என ஒபாமா மழலைக்கால நினைவுகளை சுவாரஸ்யமாய் நினைவு கூர்ந்தார்.

 

 

 

 

 

ஒபாமாவைச் சந்தித்த விண்வெளி வீரர்கள், அமெரிக்கா மீண்டும் இது போன்ற விண்வெளிப் பயணங்கள் நடத்தவேண்டும். குறிப்பாக செவ்வாயை இலக்காய் வைத்து புதிய புதிய விண்வெளிப் பயணங்கள் நடத்த வேண்டும் என தங்கள் விருப்பத்தையும் வெளியிட்டனர்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் ஒபாமா, எதையும் சட்டென ஒத்துக் கொள்ளவில்லை. “ஆகட்டும் பார்க்கலாம்” என நாசூக்காகச் சொல்லியிருக்கிறார். செவ்வாய்ப் பயணத்துக்கு தோராயமாக 150 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். மக்கள் வேலையில்லாமல் நெருக்கடியில் இருக்கும் போது 150 பில்லியன் டாலர்களை விண்வெளிப் பயணத்துக்கு ஒதுக்கினால் ஒபாமாவின் கதை கந்தல் தான்.

ஏனென்றால் அமெரிக்காவிலுள்ள 60 சதவீத மக்களும் இதை எதிர்க்கிறார்கள். முதலில் பூமியைக் கவனியுங்கள் மகாராஜாவே !, பிறகு வானத்தைப் பார்க்கலாம் என்பதே அவர்களுடைய ஒட்டுமொத்த குரலொலி. பொருளாதாரம் படுகாயமடைந்து கிடக்கும் போது எதற்கு வெட்டியாய் நிலவுக்கும், செவ்வாய்க்கும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். முதலில் ஆடாமல் அசையாமல் நிற்கப் பழகுங்கள், பிறகு பறக்கப் பழகலாம் என படபடக்கின்றனர் அவர்கள்.

எனினும் நாசா செவ்வாய்க்கான பயணத்தையே அடுத்த மாபெரும் இலக்காக வைத்திருக்கிறது. “கான்ஸ்டலேஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயணம் போகும் வழியில் நிலவில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு செவ்வாய்க்குச் செல்லுமாம் ! எனினும் நாசாவின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டான 18.6 பில்லியனை வைத்துக் கொண்டு பயணத்தை கற்பனையில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும் என்பது தான் உண்மை.

செவ்வாய்ப் பயணம் நிலவுப் பயணத்தை விட பல மடங்கு சிக்கலானது. இப்போது இருக்கும் அதி நவீன டெக்னாலஜியை வைத்துப் பார்த்தால் கூட மனிதன் இங்கிருந்து கிளம்பி செவ்வாய்க்குச் சென்று சேர ஆகும் காலம் குறைந்த பட்சம் ஏழு மாதங்கள். பயணம் செய்பவர்கள் ஏழுமாதங்கள் விண்வெளியில் தாக்குப் பிடிப்பார்களா, தேவையான தண்ணீர் கொண்டு போக முடியுமா போன்றவையெல்லாம் விடை தெரியாத வினாக்கள்.

செவ்வாய்க்குப் போவது ஒரு அற்புதமான விஷயம். செவ்வாயில் இரண்டு நிலவுகள் உள்ளன, அதில் ஒன்றான “ஃபோபோஸ்” எனும் நிலவுக்குப் போவதை நாசா தனது அடுத்த இலக்காக வைத்துக் கொள்ளலாம் என கருத்து சொல்கிறார் முதன் முதலில் நிலவுக்குப் போய் வந்த மைக்கேல் காலின்ஸ்.

ரஷ்யாவுடன் நிகழ்ந்த ஆரோக்கியமான அறிவியல் மோதலே இந்த முதல் நிலவுப் பயணத்தின் மிக முக்கிய காரணம். இந்த பயணம் தான் நாடுகளுக்கிடையே உள்ள போர்க் குணத்தை மாற்றி அறிவியல் போரை தீவிரமாய் நடத்த தூண்டுகோலாய் இருந்தது என ஆரம்பிக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங், விண்வெளிப் பயணங்களுக்கு விஞ்ஞானிகள் துணிச்சலுடன் முன்வரவேண்டும் என வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய விண்வெளிப் பயணத்தின் ஒலிகளையும், படங்களையும் நவீன தொழில் நுட்பத்தில் தெளிவாக்கி நாசா தற்போது வெளியிட்டுள்ளது. அப்போதையை வீடியோவிலிருந்து சில சிலிர்ப்பூட்டும் படங்களை ஆண்ட்ரூ செய்கின் எனும் எழுத்தாளர் “நிலவிலிருந்து எழுந்த குரல்கள்” எனும் தனது நூலில் வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். இருபத்து ஓரு மணி நேரம் இவர்கள் நிலவில் செலவிட்ட நிமிடங்கள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. இதே எழுத்தாளர் 1986ம் ஆண்டு “எ மேன் ஆன் தி மூன்” எனும் நூலை எழுதி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5

விண்வெளி வீரர்களுக்கு இன்று நிலவு சாதாராண சங்கதியாகிவிட்டது. நிலவில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்டிரின் பாதங்களைத் தொடர்ந்து இன்றுவரை 12 பேர் நிலவின் மீது நடந்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட “ஸ்கை வாக்” எனப்படும் விண்வெளிப் பயணங்களும் நடந்திருக்கின்றன.

நாசா விஞ்ஞானிகள் நிலவுப் பயணத்தைப் பற்றி சிலாகித்துப் பேசினாலும், இதெல்லாம் வெறும் கப்சா. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான். எஃப் .கென்னடி நாசாவை வைத்துக் கொண்டு நடத்திய நாடகம் தான் இந்த விண்வெளிப் பயணம். அதற்கான ஆதாரங்கள் இவை இவை என பட்டியலிடும் எதிர்ப்பாளர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.

 

தமிழிஷில் வாக்களிக்க…

நிலநடுக்கம் : செய்ய வேண்டியது என்ன ?

 earthquake1
சில வினாடிகள், அல்லது சில நிமிடங்கள். அவ்வளவு தான் நிலநடுக்கத்தின் வாழ்க்கை. ஆனால் அதற்குள் பல்லாயிரம் உயிர்களைக் குடித்து முடித்து விடுகிறது நிலநடுக்கம் எனும் ராட்சஸன். சில நாட்களுக்கு முன் 9.1 ரிக்டர் எனுமளவில் திகிலூட்டும் நிலநடுக்கம் அந்தமான் பகுதிகளில் நிகழ்ந்தது. இந்தியாவை சட்டென சுனாமி பீதி தொற்றிக் கொண்டது. நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை.

நிலநடுக்கங்களை எதிர்கொள்வது குறித்து போதுமான அறிவு மக்களிடம் இல்லை. அது தான் இழப்புகள் அதிகமாகக் காரணம் என்கின்றன ஆய்வுகள். நில நடுக்கம் குறித்த விழிப்புணர்வும், என்ன செய்யவேண்டும் எனும் தெளிவும் இருந்தால் நிலநடுக்கத்தை மன நடுக்கமில்லாமல் எதிர்கொள்ளலாம்.
நிலநடுக்கம் வரும் முன் கவனிக்க வேண்டியவை.

• நில நடுக்கம் போன்ற ஆபத்து எப்போது வேண்டுமானாலும் வரலாம் எனும் எண்ணம் இருக்க வேண்டும். அப்போது தான் திடீர் பதட்டங்களும், அதிர்ச்சிகளும் தவிர்க்க முடியும்.

• வீட்டை இன்சூர் செய்து விடுங்கள்.

• கண்ணாடிப் பொருட்களையும், கனமான பொருட்களையும் அலமாராக்களின் கீழ் அறைகளில் வையுங்கள். கிரைண்டரைத் தூக்கி பரணில் வைக்கும் விபரீதங்கள் வேண்டாம்

• வீட்டிலுள்ள அலமாராக்கள், கபோடுகள் இவற்றையெல்லாம் பூட்டியே வைத்திருங்கள். நிலநடுக்கம் அலமாராக்களைத் திறந்து உள்ளிருப்பதையெல்லாம் வெளியே எறியும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சமையலறை கபோடுகள் ரொம்ப வழவழப்பில்லாததாய் இருந்தால் நல்லது. சிறு அதிர்வுகளுக்கெல்லாம் பொருட்கள் கீழே விழாமல் இருக்கும்.

• ஒரு பெட்டியில் முக்கியமான ஆவணங்களைப் பத்திரமாய் வையுங்கள். பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்ட், அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பேப்பர்ஸ், மருத்துவ ரிப்போர்ட் போன்றவை அதில் இருக்கட்டும். முக்கியமாக எளிதில் எடுக்கக் கூடிய இடத்தில் இதை வையுங்கள்.

• ஒரு முதலுதவிப் பெட்டியும் தயாராய் இருக்கட்டும். டார்ச் லைட், பாட்டரி ரேடியோ, முதலுதவிப் பொருட்கள், போர்வை போன்றவை அதன் குறைந்த பட்சத் தேவைகள்.

• படுக்கையின் அருகிலோ, அமரும் இடங்களின் மேலேயோ கனமான புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எதையும் வைக்காதீர்கள்.

• செல்போன்களை சார்ஜ் செய்து, அதற்குரிய இடத்திலேயே வைத்திருங்கள். அவசர நேரத்தில் எங்கே வைத்தோம் என பதற வேண்டி வராது. அதே போல வீட்டுச் சாவிகளையும் குறிப்பிட்ட இடத்தில் வைத்திருங்கள். அவசர நிமிடத்தில் வாசல் சாவியை எங்கே வைத்தோம் என தேடும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.

• அவசர உதவி எண்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். குறிப்பாக டாக்டர், போலீஸ், தீயணைப்பு , மருத்துவமனை, ஆம்புலன்ஸ் போன்றவற்றுக்கான எண்கள்.

• வாட்டர் ஹீட்டர், புத்தக அலமாரி போன்றவை சரியாய் மாட்டப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பெட்ரோல், மண்ணெண்ணை போன்ற எரிபொருட்களையெல்லாம் நெருப்புக்கு வெகு தூரத்தில் வையுங்கள்.

• நிலநடுக்கம் வந்தால் வீட்டுக்கு வெளியே எந்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே வீட்டில் கலந்துரையாடுங்கள். வீட்டிலுள்ள அனைவருக்கும் குறைந்த பட்ச முதலுதவி வழிகளையும் சொல்லிக் கொடுங்கள். அதே போல நிலநடுக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.

நிலநடுக்கம் நிகழும் போது கவனிக்க வேண்டியவை.

• நிலநடுக்கம் வந்து விட்டது, வீடு ஆடுகிறது எனில் பதட்டப்படாதீர்கள். தைரியம் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியேறுவதை விட வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பானது.

• நல்ல கனமான மேஜை, பெஞ்ச், கட்டில், கிச்சன் மேடை என ஏதாவது ஒன்றின் அடியில் பதுங்கிக் கொள்ளுங்கள். சன்னலருகேயோ, கதவின் அருகேயோ நிற்காதீர்கள். கண்ணாடிகள் உடைந்து சிதறி காயம் ஏற்படலாம்.

• வீட்டை விட்டு வெளியேறுவது அதிகபட்ச பாதுகாப்பு என உறுதியாகத் தெரிந்தால் வெளியேறலாம். வெளியேறும் போது கண்களையும் பின்னந்தலையையும் பாதுகாப்பாய்ப் பிடித்துக் கொள்வது அவசியம். இல்லையேல் பறந்து கொண்டிருக்கும் ஏதேனும் பொருள் பட்டு காயம் ஏற்படலாம்.

• எப்படியானாலும் நிலநடுக்கம் நடந்து கொண்டே இருக்கும் போது, அதாவது வீடு ஆடிக்கொண்டே இருக்கும் போது ஓடவே ஓடாதீர்கள். ஒரே இடத்தில் இருங்கள். அங்கும் இங்கும் ஓடுவதால் தான் அதிக காயங்கள் ஏற்படுவதாய் ஆய்வுகள் அடித்துச் சொல்கின்றன

• சமைத்துக் கொண்டிருக்கிறீர்களெனில் உடனடியாக அடுப்பை அணைத்துவிடுங்கள்.

• நில நடுக்க காலத்தில் எக்காரணம் கொண்டும் லிப்டைப் பயன்படுத்தாதீர்கள்.

• வீட்டுக்கு வெளியே வந்துவிட்டீர்களெனில், வெட்ட வெளியில் நில்லுங்கள். அருகில் கட்டிடம், மரங்கள்,டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது முக்கியம்.

• ஒரு வேளை நீங்கள் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறீர்களெனில், உடனடியாக பாதுகாப்பான இடத்தில் வண்டியை நிறுத்துங்கள். எஞ்சினை அணைத்து விட்டு வண்டிக்குள்ளேயே அமைதியாய் இருங்கள். எலக்ட்ரிக் கம்பங்கள், பாலங்கள், போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தாதீர்கள்.

• வீட்டில் செல்லப்பிராணி இருந்தால் அதைக் கையில் வைத்திருக்கவேண்டாம். விலங்குகள் பயந்து போய் கடித்து விட வாய்ப்பு அதிகம்.  

நிலநடுக்கம் முடிந்த பின் கவனிக்க வேண்டியவை.

• யாருக்கேனும் காயம் பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். தேவையான முதலுதவி செய்வது அவசியம். படுகாயம் அடைந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை அடிக்கடி இடம் மாற்றாதீர்கள். காயமும், விளைவுகளும் விபரீதமாகிவிடக் கூடும்.

• முதியோர்களையும், குழந்தைகளையும் கவனியுங்கள். அவர்களுக்கு தெம்பூட்டுங்கள்.

• நிலநடுக்கம் மீண்டும் வரக் கூடும் எனும் எண்ணம் இருக்கட்டும். அவசரப்பட்டு வீட்டுக்குள் நுழைந்துவிடாதீர்கள். இரண்டாவது நடுக்கத்தில் வீடுகள் விரைவாய் உடையக் கூடும்.

• ஷூவோ, செருப்போ அணிந்து கொள்ளுங்கள். கண்ணாடி, கம்பி, கல் போன்றவை குத்தி காயம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

• இடிபாடுகளைச் சுற்றி வேடிக்கைக் கூட்டம் போடுவது, சாலைகளை அடைத்துக் கொண்டு கும்பல் சேர்வது இவற்றை தவிருங்கள். மீட்பு பணிகள் தாமதமாகக் கூடும்.

• மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தாலும் கவனமாய் இருங்கள். கீறல்கள் இருக்கிறதா என கவனியுங்கள். வீட்டிலுள்ள பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் விழலாம். அதிலும் கபோடுகள் திறக்கும் போது இரட்டைக் கவனம் தேவை.

• நெருப்பு பற்ற வைக்காதீர்கள், காஸ் எங்கிருந்தாவது கசியலாம். எரிபொருட்கள் சிதறிக் கிடக்கலாம் ! கவனம் தேவை.

• மின் வயர்களைத் தொடுவதோ, மின் சுவிட்களைப் போடுவதோ, வேண்டாம்.

• ஒருவேளை நீங்கள் இடிபாடுகளிடையே மாட்டிக் கொண்டு விட்டால் பயப்படாதீர்கள். அவசரப்பட்டு வெளியே வர முயலாதீர்கள். அது ஆபத்தை அதிகரிக்கும். மிரண்டு போய் கத்தாதீர்கள். கத்தினால் நச்சுவாயுவைச் சுவாசிக்கவும், இருக்கும் சக்தியை இழக்கவும் அது காரணமாகிவிடும். அருகிலிருக்கும் சுவரில் கைகளால் தட்டி ஒலி எழுப்புங்கள். கையில் ஒருவேளை விசில் இருந்தால் நல்லது ! ஊதுங்கள் !

• ஒருவேளை நீங்கள் கடற்கரை அருகில் இருந்தால் கவனம் தேவை. பெரிய அலை வரக்கூடும்

• மிக முக்கியமாக விஷயம். எதையும் ஊதிப் பெருசாக்கி பரபரப்பையும், கிலியையும் மக்களிடையே கிளப்பி விடாதீர்கள் !

இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கருத்தில் கொண்டால், பெரிய பெரிய நடுக்கங்களைக் கூட தைரியமாய் எதிர்கொள்ளலாம்.

தமிழிஷில் வாக்களிக்க…

வாங்க சிரிக்கலாம்…

smile
உற்சாகமாக பட்டாம்பூச்சியைப் போல ஓடித் திரியும் பலருக்கு உடலும் மனமும் இளமையாக இருப்பதை நாம் கவனித்திருக்கக் கூடும். கவலைகளற்ற, அல்லது தேவையற்ற கவலைகளை மூட்டைகளைப் போல முதுகில் தூக்கிச் சுமக்காத மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது உற்சாகப் பயணமே.

வயிறு குலுங்கச் சிரிப்பது இதய நோயையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் என்கிறது அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.  மன அழுத்தம் மாரடைப்பின் முதல் காரணி. மன அழுத்தமானது நமது இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதெலியத்தை வலுவிழக்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை வரவழைத்து விடுகிறது.

மனம் திறந்த சிரிப்பு மன அழுத்தத்தைக் குறைப்பதால் இரத்தக் குழாய்கள் சீராக இயங்க உதவுகின்றன, இதன் மூலம் மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது என இதற்கு மருத்துவ விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் மைக்கேல் மில்லர். ஆய்வில் ஈடுபடுத்தப் பட்ட இதய நோயாளிகள் அனைவருமே தினசரி வாழ்க்கையை இலகுவாய் ஆனந்தமாய், சிரிப்புடன் கொண்டாடாதவர்களே. !

மனதை மட்டுமற்றி உடலையும் வலுவாக்குகிறது சிரிப்பு. சிரிக்கும் போது உடலிலுள்ள அனைத்து பாகங்களும் இயங்குகின்றன, இரத்த ஓட்டம் அதிகமாகிறது, மூளைக்கு உயிர்வளி அதிகம் செலுத்தப்பட்டு மூளை சுறுசுறுப்படைகிறது, உடல் தசைகள், முக தசைகள் எல்லாம் அதிக இயக்கமடைந்து உற்சாகம் பெறுகின்றன. எல்லாவற்றையும் விட, உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது சிரிப்பு என்பது சிறப்புச் செய்தி !

சிரிக்கும் போது உடலில் லிம்ப் திரவம் வேகமாகப் பரவுகிறது. நமது உள் உடல் உறுப்புகளில் தேங்கிக் கிடக்கும் அசுத்த திரவங்களை இது வெளியேற்றி சுத்தமாக்கி விடுகிறது. கூடவே நமது செரிமானக் கோளாறுகளையும் சரி செய்து விடுகின்றன.

சிரிக்கும் போது நமது உடலில் ஏராளம் உயிர்வழியும் பரவுகின்றது. இந்த உயிர் வழி உடலை புத்துணர்ச்சியாக்குகிறது. உடலுக்குள் உயிர் வழி நிரம்பி வழியும்போது பல பாக்டீரியாக்கள், மற்றும் உயிரைக் கொல்லும் புற்று நோய் கிருமிகளெல்லாம் வெளிYயேறத் துவங்குகின்றன. நுரையீரல் தனக்குள் தேங்கிக் கிடக்கும் கரியமில வாயுவை முழுமையாய் வெளியேற்றி உயிர்வழியைக் கொண்டு நிரப்புகிறது. யோகாசனத்தில் பயிற்றுவிக்கப்படும் மூச்சுப் பயிற்சியைப் போல சிரிப்பும் உடலுக்குள் பிராணவாயுவை நிரப்பி உடலை வலுவாக்குகிறது.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மக்கள் உயிர்வழி நிலையங்களுக்குச் சென்று சுத்தமான உயிர்வழியை டாலர்கள் செலுத்தி சுவாசிக்கின்றனர். அந்த உயிர்வழி நிலையங்கள் தரும் பலனை மனம் விட்ட சிரிப்பு தரும் என்பதை அறியும்போது சிரிக்கத் தோன்றுகிறதல்லவா ?
சரி வெறுமனே உடலுக்கு உற்சாகம் தருவது தான் சிரிப்பா என நினைக்கிறீர்களா ? விஷயமே இனிமேல் தான் இருக்கிறது. சிரிக்கும் போது நமது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களின் பயன்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த பயோகெமிக்கல்ஸ் செரிமானச் சிக்கல்களை சரிசெய்து, மன அழுத்தத்தை துடைத்தெறிந்து, மூளையை உற்சாகப்படுத்தி, மனதை இலகுவாக்குகிறது. ஒரு முறை மனம் விட்டுச் சிரிக்கும் போது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களை கடையில் பணம் கொடுத்து வாங்க வேண்டுமானால் எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா ? சுமார் 5 இலட்சம் ரூபாய்கள் ! இன்னுமா சிரிக்கத் தோன்றவில்லை.

சிலர் வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மனம் விட்டுச் சிரிப்பார்கள். சிலருக்கு சிரிப்பு சுட்டுப் போட்டாலும் வராது. இப்படி சிரிப்பே வராதவர்கள் இப்போதெல்லாம் சிரிப்பு நிலையங்களுக்குச் சென்று செயற்கையாய் சிரித்து வைக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட செயற்கைச் சிரிப்பினால் அதிக பயன் இல்லை என்பது ஒரு தரப்பினரின் வாதம். ஆனந்தமான சூழல், இலகுவான மனநிலை, இயல்பான பீறிட்டுக் கிளம்பும் சிரிப்பு, வாழ்க்கையை நேர்மனதுடன் அணுகும் நிலை இவையெல்லாம் கலந்த சிரிப்பே முழுமையானது என்பது அவர்களுடைய விளக்கம்

பத்து நிமிட நேரங்கள் உடற்பயிற்சி கூடத்தில் வியர்க்க விறுவிறுக்க ஓடுவதும், ஒரு நிமிடம் ஆனந்தமாய் சிரிப்பதும் ஒரே பயன் தரக் கூடியது என கூறி வியக்க வைக்கிறார் சிரிப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வில்லியம் பிரை என்பவர்.

மேலை நாடுகளில் பிரபலமாய் இருக்கும் “கிச்சு கிச்சு மூட்டும்” நிகழ்ச்சிகள் தற்போது இந்தியாவிலும் மென்பொருள் துறை உட்பட பல்வேறு துறைகளில் மிகப் பிரபலம். இதற்கென்றே சிறப்புக் குழுக்கள் இயங்குகின்றன. இவர்களுடைய ஒரே வேலை நகைச்சுவைகளை அடுக்கடுக்காய் சொல்லி பார்வையாளர்களைச் வாய்விட்டுச் சிரிக்க வைப்பது தான்.
இதற்கான கட்டணம் பல ஆயிரம் ரூபாய்கள் !

நமக்கு வரக் கூடிய நோய்களில் 85 விழுக்காடு நோய்களை நமது உடலிலுள்ள சக்தியைத் தூண்டுவதன் மூலமாக குணப்படுத்த முடியும் என அடித்துச் சொல்கிறார் இங்கிலாந்தின் மருத்துவர் பிரான்ஸ் இன்கெல்பிங்கர். அதற்குத் தேவையானதெல்லாம் மருந்துகளோ, ஊசிகளோ அல்ல, மாறாக உற்சாகமான சிந்தனைகள், இலகுவான மனம், அன்பு செலுத்தும் குணம், நம்பிக்கை, நகைச்சுவை, சிரிப்பு, ஆனந்தம் இவையே !

சிரிப்புக்கு வலிகளைக் குறைக்கும் வலிமையும் இருக்கிறது என்கிறார் நார்மன் கசின் என்பவர். இவர் நிரந்தர முதுகெலும்பு வலியினால் பாதிக்கப்பட்டவர். பத்து நிமிடம் வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்த்தால் என்னால் இரண்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்கிறார் அவர். அதன் பின் சிரிப்பு வலியைக் குறைக்கும் என பல்வேறு மருத்துவ அறிக்கைகள், ஆய்வுகள் வெளியாகிவிட்டன. ஜேம்ஸ் வால்சன் எனும் அமெரிக்க மருத்துவர் தனது நூலான “ சிரிப்பும் உடல்நலமும்” எனும் நூலில் சிரிப்புக்கு இருக்கும் வலி நீக்கும் குணத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். 

வலியைக் குறைக்கும் எண்டோர்பின்கள் உடலில் சுரக்க சிரிப்பு உதவும் எனும் நம்பிக்கை சிலருக்கு, இல்லையில்லை சிரிக்கும் போது உடலில் இறுக்கம் குறைவதே வலி குறைய காரணம் என்னும் நம்பிக்கை வேறு சிலருக்கு. எப்படியோ சிரித்தால் வலி குறையும் என்பது மட்டும் பொதுவாகவே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தெரிந்த நண்பர்களில் எப்போதும் உற்சாகமும், சிரிப்புமாய் இருக்கும் நண்பர்கள் நிச்சயம் ஓரிருவராவது இருப்பார்கள். அவர்களுக்கு கடைசியாய் எப்போது ஜலதோஷம் வந்தது என நினைத்துப் பாருங்கள் வியப்படைவீர்கள் என்கின்றனர் மருத்துவர்கள். காரணம் சிரிப்பும், களிப்புமாய் இருக்கும் உற்சாகவாதிகளை இந்த ஜலதோஷம் அடிக்கடி தொந்தரவு செய்வதில்லையாம் !

இன்னொரு வியப்பூட்டும் ஆராய்ச்சியும் சிரிப்பைக் குறித்து வெளியாகியிருக்கிறது. அதாவது பாலூட்டும் தாய்மார்கள் உற்சாகமாய் சிரித்துக் கொண்டிருக்கும் மனநிலையில் இருந்தால் அவர்களுடைய குழந்தை நோய்நொடியின்றி ஆரோக்கியமாய் இருக்குமாம். அதிலும் குறிப்பாக தாய்மை நிலையிலிருக்கும்போதே உற்சாகமாய் சிரித்துக் கொண்டிருந்தால் மழலைக்கு இன்னும் அதிக பலனாம். காரணம் உற்சாகமாய் சிரித்து வாழும் தாய்மார்களிளுக்கு பாலில் இம்யூனோகுளோபுலின் எ அதிகமாய் இருப்பது தான் என மருத்துவம் குறித்து வைத்திருக்கிறது.

இன்னோர் மருத்துவ அறிக்கை உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸைக் கூட சிரிப்பு துரத்தும் எனக் கூறி அசர வைக்கிறது. அதாவது எயிட்ஸ் கிருமிகளுடன் போராடும் டி- அணுக்களை சிரிப்பு வலிமைப் படுத்துகிறதாம் !
மகிழ்ச்சியும், சிரிப்பும் குறித்த விழிப்புணர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கிமு எழுநூறுகளில் வாழ்ந்த சாலமோன் மன்னன் தனது நீதி மொழிகளில், “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” என எழுதியிருப்பதை நினைத்தால் ஆச்சரியம் மேலிடுகிறது. கிபி பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஹென்றி டி மோண்டிவிலி, அறுவை சிகிச்சைக் காயத்தை சிரிப்பு விரைவில் குணப்படுத்திவிடும் எனவும், எதிர்மறை உணர்வுகள் காயத்தை அதிகப்படுத்தும் எனவும் கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது.
 
சிரிப்பு குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், நுரையீரலை வலிமையாக்கும், இதயத்தைப் பாதுகாக்கும், உடலுக்கும் மனதுக்கும் தேவையான பயிற்சியை அளிக்கும், மன அழுத்தத்தைத் துரத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மூளையை வலிமையாக்கும் என மருத்துவ உலகம் சிரிப்பின் பயன்களைப் பட்டியலிடும்போது விழிகள் விரிய, உதடுகள் மலர வியக்க வேண்டியிருக்கிறது.
 
ஆனால், இன்றைய அழுத்தமான வாழ்க்கை முறை அடுத்த வீட்டு நபரின் பெயரைக் கூட அறிந்து கொள்ளாத மனிதர்களைத் தான் வீதிகள் தோறும் உருவாக்கியிருக்கிறது. அலுவலகங்கள் தங்கள் கண்ணாடி அறைகளை கணினியை விரல்களால் விசாரிக்கும் மனித ரோபோக்களால் நிரப்பியிருக்கின்றன. மனிதர்கள் சிரிக்க மறந்து விட்டார்களோ என ஐயப்படத் தோன்றுகிறது.

சிரிப்பு வரவில்லையேல் நல்ல நகைச்சுவை நூல்கள் வாசிக்கலாம், திரைப்படங்கள் பார்க்கலாம், நண்பர்களுடன் உரையாடலாம் என்றெல்லாம் யோசனைகள் சொல்கின்றனர் மருத்துவர்கள். அப்படியும் சிரிப்பு வரவில்லையா ? அனைத்தையும் மறந்து ஒரு குழந்தையிடம் உங்களை ஒப்படையுங்கள். குழந்தையின் தேசத்துக்குச் சென்று வாருங்கள். சிரிப்பு உங்களை சிறையெடுக்கும்.

அது ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான், வாழ்க்கையை ஆனந்தத்துடன் அணுகுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், சரியானதை உண்ணுங்கள் கூடவே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வஞ்சகம் பாராமல் வாய்விட்டுச் சிரியுங்கள்.

பெண்ணே நீ – இதழில் வெளியான கட்டுரை.

“பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்பு

“காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம். இப்படிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் மருந்துகளில் எத்தனை மருந்துகள் உண்மையானவை ? எத்தனை மருந்துகள் போலியானவை ? எனும் கேள்வியை எப்போதாவது நாம் எழுப்பியதுண்டா ?

மேலை நாடுகளிலெல்லாம் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லையெனில் மருந்துக் கடைகளில் மருந்துகளைத் தரமாட்டார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படியில்லை எந்த நோயாய் இருந்தாலும் மருந்தகங்களில் இருப்பவர்களே மருத்துவர்களாகி ஏதேனும் நான்கைந்து பெயர் தெரியாத மாத்திரைகளைத் தந்து விடுகின்றனர். இவை உண்மையிலேயே பயனுள்ளவை தானா ? உடலுக்கு நலமளிப்பவை தானா ?

இது குறித்து உலக நலவாழ்வு நிறுவனம் சொல்லும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதாவது உலக அளவில் புழக்கத்தில் உள்ள மருந்துகளில் சுமார் பதினைந்து முதல் இருபது விழுக்காடு மருந்துகள் போலியானவையே என அது அறிக்கை வெளியிட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சுமார் ஒரு விழுக்காடு மட்டுமே போலி மருந்துகள் கலந்துள்ளன. ஆனால் வளரும் நாடுகளிலோ சுமார் இருபத்தைந்து முதல் முப்பது விழுக்காடு என இந்த புள்ளி விவரங்கள் மூர்ச்சையடைய வைக்கின்றன.

வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே போலி மருந்துகளும், தரமற்ற தயாரிப்புகளும் அதிகமாய் தயாராவதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கிறது. அதன் கூற்றை நிரூபிக்க புள்ளி விவரக் கணக்குகளையும் சமர்ப்பிக்கின்றது.

உலக அளவில் பின் தங்கிய நாடுகளில் தயாராகும் மருந்துகளில் 25 விழுக்காடு மருந்துகள் போலியானவையாம்.

நைஜீரியாவிலும், பாகிஸ்தானிலும் தயாராகும் மருந்துகளில் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு மருந்துகள் தரமற்ற மாற்று மருந்துகள் எனவும், சீனாவில் சில மருந்துகள் சுமார் 85 விழுக்காடு போலியாய் இருப்பதாகவும், நைஜீரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சுமார் 37 விழுக்காடு ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் போலியே என்றும், ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் உலவும் மலேரியா தடுப்பு மருந்துகளில் 90 விழுக்காடு போலியே என்றும் இந்த அதிர்ச்சிப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

உலகெங்கும் ஒவ்வோர் வினாடியும் சுமார் 35 இலட்ச ரூபாய்க்கான போலி மருந்துகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் வினாடிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கான போலி மருந்துகள் விற்பனையாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் போதும் இந்தக் கள்ளச் சந்தையின் பலத்தைக் காட்ட !

இந்தியாவிலும் சுமார் 10 விழுக்காடு மருந்துகள் போலியானவையே என்பதே உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை சொல்லும் செய்தி. ஆனால் உண்மையில் இது இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.

போலி மருந்துகள் என்பவை உண்மையான மருந்துகளைப் போல தயாராக்கப்பட்டு, தரம் குறைந்ததாகவோ, தரமற்றதாகவோ, ஊறு விளைவிப்பதாகவோ இருக்கின்றன என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம்.

போலி மருந்துகளால் என்ன தான் பிரச்சனை ?

முதலாவதாக இந்த போலி மருந்துகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இந்த மருந்துகளால் நோய் குணமாகும் வாய்ப்பு மிகவும் குறைவு

இரண்டாவதாக இந்த போலி மருந்துகளில் மருத்துவ மூலக்கூறுகள் தேவையான அளவில் இல்லாமல் இருப்பதால் குறைவாகவோ, அதிகமாகவோ உட்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இது நோயின் வீரியம் அதிகரிக்கவோ, நோயாளிக்கு வேறு பக்க விளைவுகள் வரவோ வழி வகுக்கிறது.

மூன்றாவதாக இந்த மருந்துகளில் நிறைய விஷத் தன்மையுடைய பொருட்கள் கலந்திருப்பதால் இவை நோயாளியின் உயிருக்கே ஆபத்தாய் முடிகின்றன.

உதாரணமாக ஹெய்தியில் ஒருமுறை இருமல் மருந்து எண்பத்தொன்பது பேரைப் பலிவாங்கியது, சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தில் இருந்த டைஎத்தலின் கிளைகோல் எனும் வேதியல் பொருளே இதன் காரணம் என பின்னர் கண்டறியப்பட்டது.
நைஜீரியாவில் ஒருமுறை 2500 பேர் மரணம், வங்கதேசத்தில் 109 பேர் மரணம், சமீபத்தில் இந்தியாவில் பல குழந்தைகள் மரணம் என இந்த துயரக் கணக்கு உலகெங்கும் விரிவடைகிறது.

சீனாவில் ஆண்டுதோறும் சுமார் மூன்று இலட்சம் பேர் தரம் குறைந்த போலி மாற்று மருந்துகளினால் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்த போலி மருந்துகளால் சமூகத்திற்கு நேரக்கூடிய மிகப்பெரிய ஆபத்தின் சிறு சிறு துணிக்கைகள் எனக் கொள்ளலாம்.

பாலியல் சார்ந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் புழக்கத்தில் உள்ளவற்றில் பெரும்பாலானவை போலி மருந்துகளே. ரகசியமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் எனும் மக்களின் எண்ணமும், பாலியல் கல்வி இல்லாத சூழலும், பாலியல் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இத்தகைய தரமற்ற பாலியல் சார்ந்த மருந்துகளின் அசுர வளர்ச்சிக்கு வழிகோல்கின்றன. இத்தகைய மருந்துகளுக்கான விளம்பரங்களையும், உரையாடல்களையும் ஊடகங்கள் மிகைப்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும் இந்த நேரத்தில் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

இன்னொன்று எயிட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள். அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் இல்லாத இத்தகைய பெரிய நோய்கள் போலி மருந்து தயாரிப்போருக்கு ஒரு வரமாய் மாறியிருக்கிறது. உலகமே மூளையைக் கசக்கும் எயிட்ஸ் நோய்க்கான மருந்தை நமது தெருக்கள் கூவிக் கூவி விற்கின்றன !

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என எல்லா கண்டங்களிலும் போலிகள் புகுந்திருந்தாலும், ஆசியக் கண்டம் தான் இந்த போலி மருந்துகளின் ஊற்றாய் இருக்கிறது என மேலை நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. சீனாவில் மட்டும் சுமார் 500 அனுமதியற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியிருந்தது.

தென்மேற்கு ஆசியாவிலுள்ள கம்போடியாவில் சுமார் 2800 போலி மருந்து விற்பனை நிலையங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கீகாரமற்ற மருந்துகளும் உலவுகின்றனவாம். தாய்லாந்தில் விற்கப்படும் மருந்துகளில் சுமார் 8.5 விழுக்காடு போலி தானாம்.

ஈராக்கின் மீது அமெரிக்கா போர்தொடுக்க ஆரம்பித்த பின் அங்கே சுமார் 70 விழுக்காடு மருந்துகள் காலாவதியானதாகவோ, தரமற்ற தயாரிப்பாகவோ, போலியானதாகவோ தான் கிடைப்பதாக ஈராக்கின் அமைச்சர் அதில் முஸின் தெரிவிக்கிறார்.

போலி மருந்துகள் இப்படி உலக நாடுகளையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கையில் இன்னொரு அச்சுறுத்தலாய் உலவுகின்றன தடை செய்யப்பட்ட மருந்துகள்.

இதிலுள்ள துயரம் என்னவென்றால் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் ஏராளமாய், வெகு சகஜமாய் இந்தியாவில் கிடைக்கின்றன என்பது தான். இந்தியா தான் போலிகளின் புகலிடமாயிற்றே எங்கும் போலி எதிலும் போலி என்பது மருத்துவத்திலும் இரண்டறக் கலந்து விட்டது.

ஆடைகளிலோ அல்லது பிற பொருட்களிலோ போலிகள் இருந்தால் பண விரயம் எனுமளவில் அது நின்று விடுகிறது. ஆனால் மருந்துப் பொருட்களில் போலித்தனம் நுழையும்போதோ அது உயிரையே அழித்து விடுகிறது. எனவே தான் பிற போலித்தனங்களைப் போல இலகுவாக மருத்துகளிலுள்ள போலித்தனங்களை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

இந்தியாவில் சுமார் 515 மருந்துகள் 3000 வேறு வேறு பெயர்களில் உலவுவதாகவும் இவை உலக நாடுகள் பலவற்றிலும் தடைசெய்யப்பட்ட போதிலும் இந்திய மருந்து கடைகளில் எந்த விதமான தடையுமின்றி கிடைப்பதாகவும் மருத்துவம் சார்ந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மருந்துகள் புற்று நோய், பக்கவாதம், பார்வையிழப்பு போன்ற பல்வேறு கொடிய நோய்களை வரவழைக்கும் வலிமை கொண்டவையாம்.

பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜோர்டன், மலேஷியா, நார்வே, ஸ்பெயின், டென்மார்க், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட இத்தகைய மருந்துகளைக் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் இன்றி இந்திய மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், இதன் மூலம் பல இலட்சக் கணக்கான மக்கள் பாதிப்பு அடைகின்றனர் என்பதும் அதிர்ச்சியூட்டும் செய்திகளாகும்.

உதாரணமாக ஜப்பானில் சுமார் பத்தாயிரம் பேரை பார்வையிழக்கவும், உடலுறுப்புகள் செயலிழக்கவும் வைத்த மருந்துகளும், உலக அளவில் சுமார் 15 ஆயிரம் பேரை உயிரிழக்கவும் வைத்த மருந்துகளும் இன்றும் இந்தியச் சந்தையில் அச்சமின்றி உலவுகின்றன. இவை சர்வதேச அரங்கில் நிராகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

நவால்ஜின், டி கோல்ட், விக்ஸ் ஆக்சன் 500, நிம்சுலைட், அனால்ஜின் போன்ற சர்வ சாதாரணமாய் எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும் மருந்துகள் எல்லாம் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால் தடை செய்யப்பட்ட மருந்துகளே என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ? இதில் இன்னொரு வருத்தத்துக்குரிய விஷயம் என்னவெனில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் பல இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை என்பதே !

ஒரு மருந்தைத் தடை செய்யும் அதிகாரம் மருத்துவத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு வுக்கு உண்டு. ஒரு மருந்தை தடை செய்யும் முன் ஒரு மருத்துவக் குழு அந்த மருந்தை முழுமையாக ஆராய்கிறது. அந்த மருந்தில் உள்ள வேதியல் பொருட்கள், அவை உடலுக்கு ஏற்படுத்தக் கூடிய பக்க விளைவுகள் போன்றவற்றை முழுமையாக ஆராய்ந்தபின் அந்த மருந்தைத் தடை செய்வதா, வேண்டாமா எனும் அறிக்கையை ஆலோசனைக் குழுவுக்கு அளிக்கிறது. ஆலோசனைக் குழு அந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது.

அப்படித் தடை செய்தாலும் அவை விற்பனைக் கூடங்களுக்கு திருட்டுத் தனமாக வந்து சேர்ந்து விடுகின்றன. கடந்த மாதம் பஞ்சாபில் ஒரு மருந்து கடையிலிருந்து மட்டும் சுமார் ஒரு இலட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மருந்துகள் கைப்பற்றப்பட்டன. ஒரு கடையில் நிலமையே இப்படியெனில் இந்தியா முழுவதுமுள்ள கோடிக்கணக்கான மருந்து கடைகளில் எத்தனை கோடி ரூபாய்களுக்கான தடை செய்யப்பட்ட மருந்துகள் இருக்கின்றனவோ எனும் பதட்டம் இயல்பாகவே எழுகிறது.

மருந்தை வாங்க வரும் நோயாளிகள் எந்தெந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை, எவை அங்கீகரிக்கப்பட்டவை என்பதை அறிந்திருக்க முடியாது. அந்தத் தார்மீகக் கடமை மருந்தைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கும், மருந்தை வினியோகிக்கும் மருந்து கடைகளுக்கும் உண்டு. தடை செய்யப்பட்ட மருந்துகளை பரிந்துரை செய்யாமலும், அவற்றை விற்பனை செய்யாமலும் இருக்க வேண்டியது அவர்களுடைய கடமை.
பரிந்துரைக்கப்படும் மருந்துகள் உலக நலவாழ்வு நிறுவனத்தின் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இருக்கிறதா எப்பதைக் கவனித்தால் ஆபத்திலிருந்து தப்பலாம். தனிநபர்களைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான வழிமுறை அல்ல. ஆனால் இந்த சோதனையை மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் எளிதில் செய்ய முடியும்.

தடை செய்யப்பட்டவை எவை என்பன போன்ற தகவல்களை பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் எளிதில் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவின் பல எல்லைகளிலும் இருக்கும் சிறு சிறு மருத்துவமனை மருத்துவர்களை இந்தத் தகவல் சென்றடைவதில்லை. எனவே அவர்களுக்கு எந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை என்பதில் தெளிவில்லை. பெரும்பாலும் இவையெல்லாம் மருத்துவ இதழ்கள், அறிக்கைகள் மூலம் மட்டுமே மருத்துவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அவை எல்லோரையும் சென்றடையாமல் இருப்பதில் வியப்பில்லை.

நேரடியாக வாங்கும் கடைகளிலேயே இத்தகைய போலிகளின் புழக்கம் இருக்கும் போது இணையம் மூலமாக வாங்கும் மருந்துகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இணையத்தில் மருந்துகள் வாங்கும்போது தரமற்ற மருந்துகளே ஐம்பது விழுக்காடு நேரங்களில் வழங்கப்படுகின்றனவாம். முடிந்தவரை இணையம் மூலம் மருந்துகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இணையம் மூலமாக வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கூட விலையைப் பார்க்காமல் அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே வாங்க வேண்டும்.

இந்த போலி மருந்துகள், தடை செய்யப்பட்ட மருந்துகள், அங்கீகாரமற்ற மருந்துகள் போன்றவை சமூகத்தில் நிகழ்த்தும் பாதிப்பு மிகப்பெரிய தீவிர வாதத் தாக்குதல் போன்றது என்பதை உணர்தல் அவசியம். இதைத் தடுக்க அரசு ரீதியான திட்டமிட்ட செயல்பாடு மிக அவசியம்.

அனைத்து மருத்துவ மனைகளும் தரக்கட்டுப்பாடுக்குள் வரவேண்டும். டிரேட்மார்க் இல்லாத மருத்துவமனைகள் இயங்க அரசு அனுமதி மறுக்க வேண்டும். இந்த மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை தரமான நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெறவேண்டும். அந்த நிறுவனங்களின் தயாரிப்புத் தரத்தையும் அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்.

போலி மருந்துகள், அனுமதியற்ற மருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும். ஒரு பயங்கரவாத, கொலைக் குற்றத்துக்குரிய அல்லது அதற்கும் மேற்பட்ட வீரியத்துடன் இந்த குற்றங்கள் அணுகப்பட வேண்டும். போலி மருந்துகளுக்கு எதிரான விசாரணைகள் சமூகத்தின் ஒட்டுமொத்த நலன் சார்ந்தது என்பதால் விரைந்து முடிக்கப்படவும் வேண்டும்.

போலி மருந்துகள், தரமற்ற தயாரிப்புகள் இவற்றுக்கான அனுமதிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், சுயநல நோக்கங்களுடன் அனுமதி வழங்கியவர்கள் இவர்களுக்கு எதிராய் சட்டம் கடுமையாய் பாய வேண்டும்.

கடுமையான தரக்கட்டுப்பாடு அமைப்பும், அதில் தனிநபர் நலம் கலக்காத அணுகு முறையும் வேண்டும்.

போலி மருந்து குறித்த புகார்கள் எளிமையாக்கப்படவேண்டும். போலியா ? அப்படின்னா என்ன ? எனக் கேட்கும் பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவையெல்லாம் இருந்தால் சந்தையிலும், தயாரிப்பு நிலையங்களிலும், இறக்குமதிகளிலும் இந்த போலி மருந்துகளை ஒழித்தல் சாத்தியமே.
நைஜீரியா இத்தகைய போலி மருந்துகளால் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாடு. 2001 ல் சுமார் 41 விழுக்காடு மருந்துகள் அங்கே போலியாகவே உலவி வந்தன. நைஜீரிய அரசு எடுத்த தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அந்த விகிதம் கணிசமாய் குறைந்து 15 விழுக்காடு எனுமளவுக்குக் குறைந்திருக்கிறது. பதிவு செய்யப்படாத மருந்துகள் 68 விழுக்காடிலிருந்து 19 விழுக்காடாக வீழ்ந்திருக்கிறது. இவையெல்லாம் மற்ற வளரும் நாடுகளுக்கான ஒரு முன்னுதாரணம் எனலாம்.

சரி இந்த போலி மருந்து விஷயத்தில் நமது பங்கு என்ன ?

முதலில் விளம்பரங்களின் வசீகரத்தைக் கொண்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் மருந்து என்றால் கண்டிப்பாக உயர் தரம் என முடிவு கட்டாமல் இருப்பது. இரவு நேரங்களில் தொலைக்காட்சியில் பேசும் “வாலிப வயோதிக அன்பர்களே” அழைப்புகள் உண்மை என நம்பி ஏமாறாமல் இருப்பது. போலிகளை எந்த விதத்திலும் ஊக்குவிக்காமல் இருப்பது என பல வழிகளில் நமது பங்காற்றல் இருக்க முடியும்.

போலி மருந்துகளை தெரிந்தே வாங்கும் போது நாம் அந்த குற்றத்தின் பங்கு தாரர்கள் ஆகின்றோம் என்பதையும், நாமும் பணத்தைக் கொடுத்து அந்த குற்றத்தையும் அது தொடர்பாய் எழக்கூடிய தொடர் குற்றங்களையும் ஊக்குவிக்கிறோம் என்பதையும் உணரவேண்டும்.

போலி மருந்துகளை விற்கும் மருந்தகங்கள், தங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்பதால் இந்த பிழையைச் செய்கின்றனர். இத்தகையோர் சமூகத்தைச் சிதைக்கும் கொடும் செயலைச் செய்கின்றோம் என்பதை உணர வேண்டும்.

வளரும் நாடுகளிலுள்ள மக்கள் சுகாதார வசதிகள் இல்லாமல் தொடர் நோய்களுக்கு இலக்கானவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். தினசரி வாழ்க்கையை இழுக்கவே திராணியற்ற மக்கள் லாபமானதை வாங்கவே விரும்புவர். அவர்களுடைய பொருளாதார இயலாமையை மூலதனமாக்கி ஆபத்தான போலிகளை அவர்கள் தலையில் கட்டாமல், மருந்தகங்கள் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

போலி மருந்துகளைக் கண்டறிவது கடினம். எனிலும் நம்மால் முடிந்த அளவுக்கு போலியில்லாத மருந்து தானா என்பதை ஊர்ஜிதப்படுத்திய பின்பே வாங்க வேண்டும்.

மருந்துகள் வாங்கும்போது அளவிலோ, வடிவத்திலோ, நிறத்திலோ, எழுத்துகளிலோ ஏதேனும் வித்தியாசம் தென்பட்டால் வாங்காதீர்கள். வேறொரு மருந்து கடையை நாடுங்கள். வாங்கிவிட்டால் மருத்துவரை அணுகி உங்கள் சந்தேகத்தைத் தெரிவிக்கலாம்.

பெரும்பாலும் போலிகள் மாத்திரைகளில் தான் காணப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. எனவே மாத்திரைகள் வாங்கும் போது அதிக கவனம் செலுத்துங்கள்.

மருந்துகளின் ஆயுளைக் கண்டிப்பாகப் பாருங்கள். அதன் கடைசி நாள் தாண்டியிருந்தாலோ, அதன் மீது புதிதாக ஸ்டிக்கர் ஏதேனும் ஒட்டப்பட்டிருந்தாலோ, நாள் திருத்தப்பட்டிருந்தாலோ அதை வாங்காதீர்கள்.
மருந்துகள் “காலாவதி” நாள் இல்லாமல் இருந்தால் அது நிச்சயம் போலி மருந்து என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.
மருந்துகளில் தயாரிப்பு நிறுவனத்தைக் குறித்த விவரம் இல்லாமல் இருந்தாலும் அது போலியே.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்த போலி மருந்துகள் ஆயிரம் சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன. போலி மருந்துகள் பிரச்சினை சமூகத்தைக் கரையானாக அரித்து, சமூகத்தின் நலனையே கெடுக்கும் பிரச்சனையாகும்.

இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து அரசு தீவிர நடவடிக்கைகள் எடுப்பது, ஊடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் தங்கள் தார்மீகக் கடமையை உணர்ந்து செயல்படுவது என கூட்டு முயற்சி கைகூடினால் சுகாதாரமான சமூகம் சாத்தியமாகும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரை : பாலை நிலமாகுமா பூகோளம்.

 இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை

தண்ணீர் பிரச்சனை என்றதும் சட்டென நம் நினைவுக்கு காவேரியும், முல்லைப் பெரியாறும், சேது சமுத்திரமும் வரக் கூடும். விவசாயத் தோழர்கள் எனில் சில்லென வயல் நனைக்கும் மழையோ, நகர்ப்புற வாசிகள் எனில் தெருமுனையில் நிற்கும் மாநகர தண்ணீர் தொட்டியோ, எப்போதேனும் வரும் கார்ப்பரேஷன் தண்ணீரோ, தண்ணீர் லாரியோ நினைவுக்கு வரலாம். எதைப்பற்றியும் கவலைப்படாத கண்ணாடிக் கட்டிட வாசிகளுக்குக் குறைந்தபட்சம் மினரல் வாட்டராவது நினைவு வரும்.

காவேரியோ, முல்லைப்பெரியாறோ முற்றிலுமாக வற்றிப் போய்விட்டால் என்ன செய்வார்கள் என குதர்க்கமாய் சிந்திப்பவர்களுக்கு அப்படி ஒரு காலம் விரைவில் வரக் கூடும் என எச்சரிக்கை செய்கிறது ஐக்கிய நாடுகளின் சபை.

உலகில் தண்ணீருக்காக மக்கள் தவிக்கப் போகின்றனர். தேவையான அளவு நல்ல தண்ணீர் கிடைக்காமல் உலகம் பாலைவனமாகப் போகிறது. என அதிர்ச்சியூட்டும் அறிக்கைகளை அது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போதைய உலகின் மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால், உலக மக்கள் தொகை தற்போதைய ஆறு பில்லியன் எனும் அளவிலிருந்து எட்டரை பில்லியன் எனுமளவுக்கு இன்னும் இருபதே ஆண்டுகளில் அதிகரிக்கப் போகிறதாம். இந்த அதிகப்படியான மக்கள் தொகை தண்ணீரின் தேவையை உலக அளவில் அதிகரிக்கப் போகிறது.

ஒரு ஆண்டுக்கு மூவாயிரம் லிட்டர் எனுமளவில் வளர்ந்த நாடுகளிலுள்ள மக்கள் நல்ல தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். அதாவது தினமும் சுமார் எட்டே கால் லிட்டர் தண்ணீர். இந்த அளவை வைத்துப் பார்த்தால், இன்னும் ஒரு இரண்டரை மில்லியன் மக்களுக்குத் தேவையான தண்ணீர் எவ்வளவு தெரியுமா ? சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர்  நீளமும், இரண்டாயிரம் கிலோமீட்டர் ஆழமும், இரண்டாயிரம் கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு மிகப்பெரிய தண்ணீர் கடல்.

கடந்த நூறு ஆண்டுகளில் உலக அளவில் தண்ணீரின் தேவை ஆறு மடங்கு அதிகரித்திருக்கிறது. இனி வரும் காலம் இந்த அளவு வெகு விரைவாக பல மடங்கு உயர்ந்து விடும், காரணம் தேவை அதிகரிப்பு. இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் இந்த தேவை 2050 களில் இப்போதைய தேவையிலிருந்து இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

உலகின் பல பகுதிகளில் இன்றைக்கே தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. குறிப்பாக விவசாயத் தேவைக்கான தண்ணீரோ, வளரும் நாடுகளிலுள்ள மக்களுக்குத் தேவையான குடிநீரோ கூட தேவையை விட குறைவாகவே கிடைக்கிறது. இத்தகைய சூழலில் தேவையும் அதிகரிக்கும் போது மனுக்குலம் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிவரும் என எச்சரிக்கிறார் உலக தண்ணீர் மேலாண்மை நிறுவன இயக்குனர் பிராங்க் ரிஜர்ஸ்பன்.
காடுகளை அழிப்பதும், நகர்ப்புறங்களை விரிவுபடுத்தி இயற்கை வளங்களை விலக்குவதும் இன்றைய சூழலை இன்னும் அதிகமாய் சிக்கலுக்குள் ஆளாக்கி விடுகின்றன என்பது நாம் அறிந்ததே. ஒருபுறம் தேவை அதிகரிக்க, மறுபுறம் வரத்தும் குறைவாய் இருக்குமானால் எதிர்பார்ப்பதை விட விரைவாகவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில் தண்ணீருக்கான மிகப்பெரிய சிக்கல் உலக அளவில் உருவாகும் என கணிக்கப்பட்டிருப்பதால், அரசுகள் அதற்குரிய நடவடிக்கையில் இறங்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் குழு அறிவுறுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுகளில் தண்ணீர் சேமிப்பு, மழை நீர் சேமிப்பு, கடல்நீரை குடிநீராக்குதல், இயற்கை வளங்களை சேமித்தல் என பல்வேறு உயர் நிலை அறிவுறுத்தல்கள் அரசுகளை நோக்கி நீட்டப்படுகையில்,

சிக்கனமாய் தண்ணீரைச் செலவு செய்யுங்கள் என்பதும், தண்ணீரை மாசு படுத்தாதிருங்கள் என்பதும், நீர் வளங்களை அழிக்காதீர்கள் என்பதும் பொதுமக்களை நோக்கி உலகம் நீட்டும் கோரிக்கையாய் இருக்கிறது.

உலக அளவில் தண்ணீர் தேவை அதிகரிக்கும் போது இன்றைக்கு எண்ணைக்காகவும், வளங்களுக்காகவும் நடக்கும் போர் தண்ணீருக்காகவும் நடக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். உதாரணமாக துருக்கியிலிருந்து சிரியா, ஈராக் போன்ற நாடுகளுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும் திக்ரிஸ், யூப்பிரட்டீஸ் போன்ற நதிகள் கர்நாடகாவின் கைங்கர்யம் போல துருக்கியிலேயே அணைகளுக்குள் அடைக்கப்பட்டால் சிரியாவும், ஈராக்கும் தண்ணீருக்காக தவிக்க வேண்டியிருக்கும்.

இப்போது இஸ்ரேலும், ஜோர்தான் பகுதியும் இணைந்து ஜோர்தான் நதியைப் பாதுகாத்து பயன்படுத்தி வருகின்றனர். எதிர்கால தண்ணீர் சிக்கல் அரசியலாக்கப்பட்டாலோ, சுயநலமாக்கப்பட்டாலோ சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு. எத்தியோப்பியாவும், எகிப்தும் வருடம் ஒருமுறை கலந்து பேசி தங்கள் தண்ணீர் தேவைகளைக் குறித்தும், பயன்பாடு குறித்தும் விவாதிக்கின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

போர்களுக்கு முன்பாகவே, தண்ணீர் உலக அளவில் விலையேற்றத்துக்கான முக்கிய காரணமாகப் போகிறது என்பது இன்னோர் கணிப்பு. வறட்சியின் காரணமாக பட்டினியையும், எலிக்கறி உண்ணும் அவலத்தையும் கண்ட நமக்கு அதன் விஸ்வரூப வெளிப்பாட்டை கற்பனை செய்வதே நடுங்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதிலும் குறிப்பாக ஆசியா-பசிபிக் பகுதியில் வாழும் மக்களில் சுமார் ஒரு நூற்று பத்து கோடி பேர் சரியான இப்போதே சரியான தண்ணீர் வசதி இல்லாமல் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கைப் படி உலகில் சுமார் ஐம்பது இலட்சம் மக்கள் ஆண்டுதோறும் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காததால் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலான நாடுகள் தண்ணீர் நிர்வாகத்தைச் சரியாக நிர்வகிக்கவில்லை எனவும் ஏனோ தானோவெனும் போக்கையே பல நாடுகளும் தண்ணீர் விஷயத்தில் கடைபிடிக்கின்றன எனவும் உலக நாடுகளின் தண்ணீர் வள ஆலோசகர் பிரிஸ்கோ குற்றம் சாட்டுகிறார்.

இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவில் நிகழும் காடு அழிப்பு, நாடு விரிவாக்கம், ஏரிகள் அழிப்பு போன்றவை அந்தப் பகுதிகளை வெகு விரைவிலேயே வறட்சிக்குள் தள்ளி பாலை நிலமாக்கி விடுகின்றன.

உலக மக்கள் தொகை அளவின் படி முதலிடத்தில் இருக்கும் சீனா தனது முன்னூறு நகரங்களில் தேவையான குடிநீர் வசதிகள் இல்லை என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறது. இருக்கின்ற நீர் நிலைகளும் பெரிதும் மாசுபட்டுள்ள நிலையில் சீனாவின் தண்ணீர் சிக்கல் எந்நேரமும் பெரிய அளவில் வெடிக்கலாம் எனும் சூழலே அங்கும் நிலவுகிறது.

மழை கைவிடாத நாடுகளில் நிலமையே இப்படி இருக்கையில் நைல் நதியை மட்டுமே நம்பியிருக்கும் எகிப்தின் நிலமை இன்னும் பரிதாபம். நைல் நதியின் அளவு குறைவதை திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் எகிப்திய மக்கள்.

தண்ணீரின் தேவை உலகின் மாசு அதிகரித்தலுக்கு முக்கிய காரணமாகி விடும். குடிநீரைத் தவிர சுத்தமான வாழ்க்கைக்கும், கழிவுப் பொருட்களை அகற்றவும் தேவையான தண்ணீர் இல்லாத சூழல் சுகாதாரமற்ற வாழ்க்கையையே வலுக்கட்டாயமாய் திணிக்கும்.

வழக்கம் போலவே வறுமையானாலும், தண்ணீர் பற்றாக்குறையானாலும் முதலில் பாதிக்கப்படுவது வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் நமது சகோதரர்களே. தண்ணீருக்காய் அதிகமான பணம் செலவிட வேண்டிய சூழல் தண்ணீரே இல்லாமல் தவிக்கும் நிலைக்கோ, சுகாதாரமற்ற சூழலுக்கோ இவர்கள் தள்ளப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

ஏற்கனவே சுகாதாரமற்ற வாழ்க்கை வாழும் நாடுகளில் இது இன்னும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ஆப்பிரிக்கா போன்ற வளர்ச்சியடையாத நாடுகளில் சுமார் நான்காயிரம் குழந்தைகள் தினம்தோறும் கக்கல், கழிச்சல் போன்ற நோய்களால் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த சிக்கல் இன்னும் பெருமளவு அதிகரிக்க இந்த தண்ணீர் சிக்கல் காரணமாகிவிடக் கூடும்.

பாலையில் நடப்பவனுக்குத் தான் தெரியும் தண்ணீரின் மகத்துவம். தாகத்தில் தவிக்கும் போது நமக்கு தங்கத்தை விட மதிப்பானது தண்ணீரே. நம்மால் முடிந்த அளவு தண்ணீரைச் சேமிக்கவும், மிச்சப்படுத்தவும் முயல்வது நமது வருங்கால சந்ததிக்கு நாம் வழங்கும் வரமெனக் கொள்ளப்படும்.

சரி… நாம் ஏதேனும் செய்யமுடியுமா ?

1. வீட்டுக் குழாய்களில் எங்கேனும் தண்ணீர் சொட்டுச் சொட்டாய் வழிகிறதா எனப் பாருங்கள். சிறு துளி பெருவெள்ளம். ஏராளமான தண்ணீர், கசிவுகளின் வழியாகத் தான் வீணாகிக் கொண்டிருக்கிறது. ஒரு வினாடிக்கு ஒரு துளி தண்ணீர் என கணக்கிட்டால் வருடத்துக்கு சுமார் எட்டாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது.

.
2. முகச் சவரம் செய்யும்போதோ, பல் துலக்கும்போதோ, பாத்திரம் கழுவும் போதோ குழாயைத் திறந்து விடாமல் ஒரு பாத்திரத்தைப் பயன்படுத்துவதும், ஷவரை சரியான முறையில் பயன்படுத்துவதும் வீடுகளில் நிறைய தண்ணீரை மிச்சப்படுத்தும்.

.
3. தேவையானபோது மட்டும் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுங்கள். தேவையான அளவு. செடிகளின் வேரருகே தண்ணீர் விடுவது அதிக பயன் தரும்.

.
4. செடிகளுக்குத் தண்ணீர் விடும்போது காலையில் விடவேண்டும். அப்படிச் செய்தால் செடிகள் குறைந்த தண்ணீரிலேயே அதிக பயனடையும்.

.
5. வாகனங்களை சுத்தம் செய்யும் போது குழாயிலிருந்து தண்ணீரை மழைபோல அடிக்காமல் இருப்பது தண்ணீரை மிச்சப்படுத்தும். ஒரு பக்கெட் பயன்படுத்தலாம்.

.
6. குழாயைத் திறந்து விட்டுக்கொண்டே காய்கறிகளைக் கழுவுதலைத் தவிருங்கள்.

.
7. வீடுகளில் தண்ணீரைச் சிக்கனமாய் பயன்படுத்துவதைப் போலவே பொது தண்ணீரையும் பயன்படுத்துங்கள். உதாரணமாக பூங்காக்கள், உணவகங்கள், தெருவோர தண்ணீர் குழாய்கள், அலுவலகங்கள்.

.
8. மறுபடியும் பயன்படுத்தக் கூடிய தண்ணீரை வீணாக்காதீர்கள். உதாரணமாக மீன் தொட்டியைக் கழுவும் தண்ணீர் கூட செடிக்கு ஊற்றப்படலாம்.

.
9. வாஷிங் மெஷின் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் சரியான அளவு துணிகள் சேர்ந்தபின் பயன்படுத்துங்கள்.

.
10. மிக முக்கியமாக, குழந்தைகளுக்கும், நண்பர்களுக்கும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

தாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்

 

( World Breastfeeding Week Special )

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி  தாய்ப்பாலுக்கு இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகும். உலக அளவில் சுமார் முப்பது கோடி பேர் ஆஸ்த்மா நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது என்பதை கடந்த இருபது ஆண்டுகளில் பல ஆராய்ச்சிகள், பல்வேறு கால கட்டங்களில் விளக்கியுள்ளன.

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. இது மிகவும் தவறானதாகும். ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைவதாக ஒரு ஆராய்ச்சி குறிப்பிட்டிருந்தது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.

அது மட்டுமன்றி தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன. குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.

தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. எனவே தான் எல்லா நாடுகளும் அன்னையர் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கின்றன.

வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.

வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த  தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்துவதை ஸ்காட்லாந்து நாடு சட்ட விரோதமாக அறிவித்திருக்கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன என்பது கனடாவில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் முடிவாகும். தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.

தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும்.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.

SIDS (Sudden Infant Death Syndrome)  எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.

பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன.

தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.

முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது. மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். உலகிலுள்ள சுமார் 4000 வகையான பாலூட்டிகளின் பாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்

பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்..

எனினும் தாய்ப்பாலில் இருக்கும் சுமார் நூறு மூலக்கூறுகள் கடைகளில் கிடைக்கும் செயற்கை உணவுகளில் கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

குழந்தைகள் தாய்ப்பாலின் வாசனையை விரும்புகின்றன என்பதையும் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. பிறந்த ஒரு வாரத்திலேயே தாய்ப்பாலின் வாசனையை குழந்தைகள் கண்டுபிடித்து விடுகின்றனவாம்.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்தும் பயன்படுத்தலாம். ஆனால் அதை மருத்துவரின் உரிய ஆலோசனைப்படி மட்டுமே செயல்படுத்த வேண்டும். தாய்ப்பாலை பாதுகாக்க பல மருத்துவ உபகரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

குழந்தை குடிக்கக் குடிக்க சுரந்து கொண்டே இருப்பது தான் தாய்ப்பாலின் தனித்துவம். ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாட்டில் பாலுக்குப் பழகிய குழந்தைகளை மீண்டும் தாய்ப்பால் பழக்கத்திற்குக் கொண்டு வருதல் மிகவும் கடினம்.

உலகிலேயே குழந்தைகளுக்கு ஒவ்வாமை வராத ஒரே உணவு தாய்ப்பால் தான் என்பதை இயற்கையின் கொடை என்றோ, இறைவனின் படைப்பின் உன்னதம் என்றோ விருப்பப்படி அழைத்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் தாய்க்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கும் உன்னதமான கொடை என்பதை உணர்ந்து செயல்படுதல் தாய்க்கும், குழந்தைக்கும் ஓர் ஆரோக்கியமான, உறவுப் பிணைப்பான எதிர்காலத்தை பரிசளிக்கும்.

கட்டுரை : இடி… மின்னல்… இன்னல்

( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

மழைக்காலம் வந்துவிட்டாலே இடி மின்னல் குறித்த அச்சமும் எழுந்து விடுகிறது. நாளேடுகளின் பக்கங்களில் மின்னல் தாக்கி பரிதாபமாய் உயிரை விடும் அப்பாவிகளின் செய்திகள் மனதை உலுக்குகின்றன.

எப்போது எங்கே எப்படித் தாக்கும் என அறிய முடியாத ஒரு ரகசியச் சாத்தான் போல மின்னலும் இடியும் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. எனவே தான் பழைய புராணங்கள் இடியையும், மின்னலையும் கடவுளின் கோபத்தின் வெளிப்பாடுகள் என புரிந்து கொண்டன.

உதாரணமாக கிரேக்க புராணங்கள் இடியை ஸீயஸ் எனும் கடவுளிடமிருந்து வருவதாக நம்பினர். வைக்கிங்ஸ் பிரிவினர் தோர் எனும் கடவுள் மேகங்களின் மீது தேரில் பவனி வரும்போது சும்மா இருக்க முடியாமல் கையிலிருக்கும் சுத்தியலால் மேகத்தின் தலையில் அடிப்பதால் தான் மின்னலும் இடியும் உண்டாகின்றன என்றனர்.

செவ்விந்தியர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் இது ஒரு மாயப் பறவையின் மின்னும் சிறகடிப்பு என்று கற்பனை விரித்தனர். அந்த பறவையின் இறக்கைகள் அடிக்கும் ஒலியே இடிச் சத்தம் எனவும் அவர்கள் சுவாரஸ்யமாகக் கற்பனை செய்து கொண்டனர்.

வானத்திலிருந்து வருகிறது என்பதைக் கொண்டு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழல் மத பின்னணியில் இருந்தவர்கள் அவர்களின் கற்பனைக்கு ஏற்ப கட்டிய கதைகளில் ஏதும் உண்மை இல்லை என்பதையே இன்றைய விஞ்ஞானம் விளக்கியுள்ளது.

எனில் இடி மின்னல் தான் என்ன ? மிகவும் எளிதாகச் சொல்லவேண்டுமெனில் மின்னல் என்பது மின்சாரம். அடர் ஈர மேகங்களில் மின்சாரம் உலவிக் கொண்டே இருக்கும். அந்த மின்சாரம் உள்ளுக்குள்ளே மேலும் கீழுமாக அசையும். பொதுவாக மேகத்தின் மேல்பகுதியில் நேர் மின்சாரமும் (பாசிடிவ்), கீழ் பகுதியில் எதிர் மின்சாரமும் (நெகட்டிவ்) இருக்கும்.

மழைக்காலத்தில் நீங்கள் வானத்தில் பார்த்தால் மேகத்துக்குள்ளேயே வெளிச்சம் மின்னி மின்னி மறைவதைக் காண முடியும். அது இந்த மின்சாரத்தின் உலவல் தான். அவ்வப்போது நேர் எதிர் மேகங்கள் அருகருகே வரும்போது மேகங்களுக்கிடையேயும் இந்த மின்னல் உருவாகிறது.

இவ்ளோ சின்ன மேகத்தில் எப்படி இந்த வேலைகளெல்லாம் நடக்கும் என சிந்திக்கிறீர்களா ? மேகத்தின் அளவு நாம் நினைப்பது போல சிறியதல்ல. சாதாரணமாக சுமார் இரண்டு சதுர மைல் அளவு முதல், சுமார் இருநூறு சதுர மைல் அளவுவரையிலான பெரிய மேகக் கூட்டங்களே வானில் உலவுகின்றன.

மேகத்தில் மின்சாரம் இருக்கிறது சரி. எது எப்படி பூமியைத் தாக்குகிறது என்பது அடுத்த கேள்வி. உண்மையில் இது ஒருவகை கொடுக்கல் வாங்கல். மேகத்தின் கீழ்பகுதியில் இருக்கும் எதிர்மின்சாரத்தை பூமியிலிருக்கும் ஏதேனும் நேர் மின்சாரம் ஈர்த்தால் மட்டுமே மின்னல், இடி எல்லாம் உருவாகும். இதன் தாக்கம் மேகத்தின் அளவைப் பொறுத்து அமையும். அதாவது மிகப்பெரிய மேகத்திலிருந்து உருவாகும் மின்னல் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு வகையில் உண்மையில் மின்னல் வானத்திலிருந்து கீழே வரவில்லை, பூமியிலிருந்து வானத்துக்குச் செல்கிறது என்று சொல்லலாம். இந்த மின்சாரப் பாய்ச்சல் வானுக்கும் பூமிக்கும் இடையே நிகழும் போது அந்தப் பகுதியில் அதிகமான வெப்பம் உருவாகும். அது காற்றில் உருவாக்கும் துளையும், அதிர்வும், காற்றின் விரிவாக்கமும் எல்லாம் சேர்ந்தே இந்த இடிச் சத்தம் உருவாகிறது.

இந்த வெப்பம் சாதாரண வெப்பமல்ல. இது சூரியனின் பரப்பில் காணப்படும் வெப்பத்தை விட ஐந்து மடங்கு அதிகம். அதாவது 33,315 டிகிரி செல்சியஸ் வரை இந்த வெப்பம் இருக்கும். நமது சென்னை வீதிகள் சந்தித்த அதிகபட்ச வெப்பமே நாற்பதோ, நாற்பத்து ஐந்தோ செண்டி கிரேட் தான். எனில் அதைப் போல ஆயிரம் மடங்கு அதிக வெப்பத்தை யோசித்துப் கொள்ளுங்கள்.

மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் தான் உருவாகின்றன. ஒளியானது ஒலியை விட வேகமாய் பயணிப்பதால் தான் வெளிச்சம் முதலில் தெரிகிறது, ஒலி பின்னால் வருகிறது. ஒளியின் வேகமான வினாடிக்கு 186,000 மைல்கள் எனும் வேகத்துடன் ஒப்பிடுகையில் ஒலியின் வேகம் நத்தையின் வேகம் தான்.

பூமியிலிருந்து வானுக்கு ஒரு நேர் மின் தொடர்பு உருவாகவில்லையெனில் மின்னலோ இடியோ உருவாகாது. ஆனால் அப்படி நிகழாமல் தடுப்பது சாத்தியமில்லை. ஏனெனில் ஒரு பெரிய மரமோ, மின் கம்பமோ, தெருவுக்கு தெரு முளைத்து நிற்கும் கொடிகம்பமோ ஏதேனும் ஒன்று போதும் மின்னலை வரவேற்க.

அதனால் தான் பெரிய கட்டிடங்கள், ஆலைகள் போன்றவற்றின் உச்சியில் பெரிய இடிதாங்கியை வைப்பார்கள். இது மேகத்திலிருந்து வரும் மின்சாரத்தை அருகிலுள்ள பகுதிகளில் விழாமல் பாதுகாத்து தானே வாங்கிக் கொள்ளும். அப்படியே பூமிக்கு அடியில் அதைக் கடத்தியும் விடும். இப்படி மின்னலை இழுத்து அதிலிருந்து மின்சாரத்தைத் தயாராக்க முடியுமா எனும் முனைப்பும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

மின்னலுக்கு நாடு, மொழி, இனம், வல்லரசு, நல்லரசு என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லா மக்களையும் ஒரேபோல பாதிக்கும். அமெரிக்காவில் வெளியாகும் ஒரு புள்ளிவிவரம் சுமார் நூறு பேராவது ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் மின்னல் தாக்கி மரணமடைகின்றனர், பல நூறு பேர் நிரந்தர ஊனமடைகின்றனர் என துயரச் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது அமெரிக்காவில் சூறாவளி போன்ற மிரட்டல்களினால் நிகழும் உயிர்சேதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை செய்யும் போது ஏன் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்பதற்கு இது தான் காரணம். உலகில் சுமார் ஒரு இலட்சம் இடியுடன் கூடிய மழை பெய்தாலும் எல்லாமே ஆபத்தானவை அல்ல என்பது உலக வானிலை குழுவின் கருத்து.

மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் ?

  1. வானிலையைக் கவனியுங்கள். இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருந்தால் வெளியில் செல்லும் பயணத்தை ஒத்திவையுங்கள், அல்லது வகைப்படுத்துங்கள். வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.
  2. பெரும்பாலான மின்னல் பாதிப்புகள் மழைவிட்ட பின்போ, மழை துவங்குவதற்கு முன்போ தான் நிகழ்கின்றன எனவே, மழை விட்டபின் ஒரு அரைமணி நேரமாவது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதுபோலவே மழை வரும் வாய்ப்பு தெரியும் போதே கவனமாய் இருக்க வேண்டும்.
  3.  மின்னலை நாம் பார்ப்பதற்கும், தொடரும் இடிச் சத்தத்தைக் கேட்பதற்கும்  இடையேயான நேரமே நமக்கும் மின்னல் தாக்கிய இடத்தும் இடையேயான தூரத்தைச் சொல்கிறது. இந்த இடைவெளி ஐந்து வினாடிகளை விடக் குறைவெனில் சுமார் ஒரு மைல் இடைவெளியில் எங்கோ மின்னல் தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு என கணித்துக் கொள்ளுங்கள்.
  4. இடி மின்னல் வேளைகளில், உயரமான மரங்கள், கொடிக் கம்பங்கள், கைபேசிக் கோபுரங்கள், பேருந்து நிறுத்தங்கள், உலோகப் பொருட்கள் இருக்கும் இடங்கள் இவற்றின் அருகே நிற்காதீர்கள்.
  5. அதே போலவே வெட்டவெளியிலோ, நீர் நிலைகளிலோ, கடற்கரைகளிலோ, விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள். அந்த இடங்களில் உயரமாய் இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர் மின்சாரத்தை மேகம் உங்கள் உடலிலிருந்து ஈர்க்கக் கூடும்.
  6. ஒருவேளை வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால் தரையில் படுக்கவே படுக்காதீர்கள். குனிந்து வயல் வரப்பில் குந்தவைத்து அமர்வது போல அமருங்கள். தலையைக் குனித்து கால் முட்டியில் வையுங்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பு எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.
  7. சட்டென மயிர்க்கூச்செரிந்தாலோ, அதிர்வு உணரப்பட்டாலோ மின்னல் வெகு அருகில் தாக்கும் வாய்ப்பு உண்டு என உணர்ந்துகொள்ளுங்கள். குழுவாக இருக்காதீர்கள் பிரிந்து தனித்தனியே செல்லுங்கள்.
  8. வீட்டுக்குள்ளே இருந்தால், அந்த நேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தாதீர்கள். தொலைபேசியில் அருகே இருப்பதைத் தவிருங்கள். தொலைக்காட்சி, கணினி உட்பட அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளையும் சற்று ஓய்வில் இருக்க விடுங்கள். மின் இணைப்பிலிருந்து அவற்றை துண்டித்து விடுங்கள். கேபிள் டிவியின் கேபிளையும் கழற்றிவிடுங்கள்.
  9. காரில் சென்று கொண்டிருந்தால் காரின் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிவிட்டு ஓரமாக நிறுத்திவிட்டு அமைதியாய் இருங்கள். மரங்கள், கம்பங்கள் போன்றவற்றின் அருகே வண்டியை நிறுத்தாமல் கவனமாய் இருங்கள்.
  10. வீடுகளில் அந்த நேரங்களில் சமையல் செய்வது, குளிப்பது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள். குறிப்பாக திறந்த சன்னல் அருகே நின்று வானத்தை வெறிக்காதீர்கள்.

இயற்கையின் மொழிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்வதே ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகும்.

ESCAP : எல்லாவற்றுக்கும் காரணம் “விவசாயப் புறக்கணிப்பே”

கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு விதமான பொருளாதாரக் கொள்கைகள், தாராளமயகாக்கம் என அனைத்து முயற்சிகளும் ஆசிய-பசிபிக் பகுதியின் பொருளாதார வளர்ச்சியை வியக்க வைக்கும் எண்ணிக்கையான சுமார் 7 விழுக்காடு அளவுக்கு உயர்த்தியுள்ளது.

உலக அரங்கிலுள்ள பல தொழிற்சாலைகள், கணினி நிறுவனங்கள், பன்னாட்டுக் கேளிக்கை நிறுவனங்கள் தங்கள் இருப்பை இந்த நாடுகளில் இறுக்கமாக நிறுவியுள்ளன. இது இந்தப் பகுதி நாடுகளின் வருமானத்தை அதிகரித்திருக்கிறது.

ஆனால் இத்தகைய வளர்ச்சி ஒட்டு மொத்த சமூகத்தின் நிலைமையை கவலைக்கிடமான சூழலுக்குத் தள்ளி விட்டது என்பது தான் வேதனை.

உலகின் ஏழைகளில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஆசியா-பசிபிக் பகுதிகளில் வாழ்கின்றனர். இந்தப் பகுதிகளில் வசிக்கும் சுமார் அறுபத்தைந்து கோடி மக்கள் வறுமையின் கோரமான பள்ளத்தாக்குக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இங்கே வசிக்கும் மக்களில் சுமார் பத்து கோடி பேர் சரியான உடல் வளர்ச்சியில்லாமல் இருக்கின்றார்கள். காரணம் போதுமான ஊட்டச்சத்தும், உணவும் வாய்க்கவில்லை.

கண்ணுக்கு முன்னாலேயே குழந்தைகளின் மரணத்தைக் கண்டு துடிக்கும் வாழ்க்கை இந்தப் பகுதியிலுள்ள பல இலட்சம் குடும்பங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட நாற்பது இலட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் மரித்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் வறுமை, பசி, வசதியின்மை.

சுமார் அறுபது கோடி மக்கள் சரியான தண்ணீர் வசதி இல்லாமல், குடிக்கக் கூட சுத்தமான தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். சுகாதாரமான வாழ்க்கை என்பது இங்கே கால்வாசி மக்களுக்குக் கூட இல்லை.

இந்தியாவில் மட்டுமே சுமார் 87 ஆயிரம் விவசாயிகள் 2001க்குப் பிறகு வறுமையின் காரணமாக தற்கொலை செய்திருப்பதாக சீனப் பத்திரிகை அதிர்ச்சித் தகவல் தருகிறது.

ஒரு பக்கம் பிரமிக்க வைக்கும் புள்ளி விவரங்கள் நாடுகளின் வளர்ச்சியை வண்ண விளக்குகளிலும், பங்குச் சந்தைகளிலும், மேனாட்டு முதலீடுகளிலும், கண்ணாடிக் கட்டிடங்களிலும், நிறுவனங்களிலும் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அதன் நேர் எதிர் சூழல் நிலவுவதன் காரணம் என்ன ?

விவசாயிகளும் விவசாயமும் புறக்கணிக்கப்படுவதே இதன் முக்கியக் காரணம்.

இதை நான் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. காரணம் எத்தனையோ முறை சமூக ஆர்வலர்களும், மனித நேயம் மிக்க மனிதர்களும், தலைவர்களும் சொல்லிய செய்தி தான் இது.

இப்போது ESCAP : ஆசிய – பசிபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் சமூக பொருளாதாரக் குழு (United Nations Economic and Social Commission for Asia and the Pacific )  இதை தனது விரிவான ஒரு ஆய்வு மூலம் தெரிவித்திருக்கிறது.

விவசாயிகளின் நலன்களில் அரசுகள் காட்டிய மெத்தனமும், விவசாய நிலங்களைப் பாதுகாப்பதில் அரசுகள் தராத முக்கியத்துவமுமே இன்றைய வறுமைக்குக் காரணம் என மிகவும் தெளிவான ஒரு பதிலை இந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.

இந்தப் பகுதிகளில் வசிக்கும் சுமார் அறுபது விழுக்காடு மக்கள் விவசாயம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிக்கும் சூழலில் இவர்களுக்கு இத்தனை காலமாக அரசுகள் தரத் தவறிய முதன்மை அனைத்து மக்களையும் ஒட்டு மொத்தமாகப் பாதித்திருக்கிறது என்பதே இதன் மூலம் தெளிவாகும் உண்மையாகும்.

விளை நிலங்கள் பல்வேறு விவசாயம் சாராத திட்டங்களுக்காக அழிக்கப்படுவதும், விவசாயிகள் தங்கள் வாழ்க்கைக்காக விவசாயத்தை விட்டு வெளியேறியே ஆகவேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதும், விவசாயிகள் விவசாயத்தினால் தன்னிறைவை எட்ட முடியாத அவலம் உருவாகியிருப்பதும் இன்றைய நிலைமைக்கு முக்கியமான சில காரணங்களாகும்.

இதே போன்ற எச்சரிக்கையை Official development assistance (ODA) ஏற்கனவே பலமுறை அளித்திருந்தும் அரசுகள் தங்கள் முதன்மைக் கவனத்தை விவசாயிகள் மீது வைப்பதை நிராகரித்தே வந்துள்ளன.

இந்த நிலமை மிச்சமிருக்கும் விவசாய வளர்ச்சியை அழிவுக்குள் தள்ளியிருப்பதுடன், புதிதாக மக்கள் விவசாய வாழ்க்கைக்குள் நுழைவதையும் நிறுத்தியிருக்கிறது. வாழ்தலுக்கான நிச்சயமின்மை விவசாயிகளை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் போது நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கிறது, வறுமை விலகுகிறது என்பதற்கு உதாரணமாக பல நாடுகள் உள்ளன. குறிப்பாக சீனாவில் 1980 களில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட போது வறுமை நிலவரம் பாதியாகக் குறைந்திருக்கிறது.

தொடர்ந்து விவசாயிகள் அலட்சியப்படுத்தப்பட்டால் விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குறைவான உற்பத்தி, விவசாயத்துக்குத் தேவையான் பொருட்களின் விலையேற்றம், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்மை, சந்தை கொள்முதல் விலை குறைவு, உற்பத்திப் பொருட்களை விற்பதற்குரிய வழிகள் இல்லாமை, காலநிலை மாற்றங்கள் தரும் அழிவுகளுக்கான போதிய பாதுகாப்பின்மை என பல்வேறு வடிவங்களில் விவசாயிகள் இன்று தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கின்றனர்.

தாய்லாந்தில் உள்ளது போல விவசாயிகளை அரசு முதன்மையாகக் கவனித்துக் கொண்டால் இந்தியா, சீனா, பங்களாதேஷ், இந்தோனேஷியா போன்ற ஆசியா-பசிபிக் பகுதிகளில் வாழும் சுமார் 22 கோடி ஏழைகள் வறுமையை விட்டு மீண்டு வருவார்கள் என்கிறது இந்த ஆய்வை நடத்திய ESCAP.

விவசாயிகளைத் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக இந்த வறுமை எண்ணிக்கையும், வறுமையின் ஆழமும் அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர குறையப் போவதில்லை எனவும் அது அறுதியிட்டுக் கூறுகிறது.

விவசாயிகளின் வாழ்க்கை மேம்படும் போதும், விவசாயிகளுக்கும் குறைந்த பட்ச வாழ்க்கை உத்தரவாதம் வழங்கப்படும் போதும், ஒட்டு மொத்த வறுமை சமூகமும் நிமிர முடியும் எனவும், இன்றைய சமநிலையற்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் சற்று சமநிலைப்படும் எனவும் இந்த நிறுவனம் கூறுகிறது.

அரசுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளின் மீதான பார்வையை விவசாயிகளின் மேல் திருப்பும் காலம் வந்துவிட்டது. விழித்துக் கொள்ளாவிடில் உலகளாவிய அவலத்தை சந்திக்கும் காலம் விரைவில் வரும்.

விவசாய வளங்களை மேம்படுத்துவதும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், விவசாயிகளுக்கு முதன்மை அளிப்பதும், அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து, சந்தை போன்ற வசதிகள் செய்து தருவதும், அவர்களுக்கு இழப்பீடு, காப்பீடு என திட்டங்கள் வகுப்பதும் வளமான எதிர்காலத்தின் அவசியமாகும்.

மனித வளம் என்பதும், பொருளாதார முன்னேற்றம் என்பதும் கணினியின் குளிரூட்டப்பட்ட அறைகளில் நிர்ணயம் செய்யப்படுவதல்ல. அவையெல்லாம் வெறும் மாயைகளே. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலே ஆட்டம் காணும் நிலமை தான் அவற்றுக்கு. ஆனால் விவசாயம் அப்படியல்ல. ஒட்டுமொத்த பசுமைப் புரட்சி நிலையான வளத்தை நல்கக் கூடியது.

மேல்நாட்டு பொருளாதார சட்ட மாறுதல்களால் அழிக்கமுடியாத தன்னிறைவை விவசாயம் தரும் என்பதை மீண்டும் ஒருமுறை அரசுகள் உணரவேண்டும்.

இனியாகிலும் விவசாயிகளுக்கான திட்டங்கள் மரணப் படுக்கையில் இருப்பவன் மீதான இரக்கமாக இருக்காமல் மேல் நாட்டு முதலீடுகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்துடன் அணுகப்படவேண்டும். இல்லையேல் உலகம் கண்ணாடிக் கல்லறையாய் மாறிப்போகும் என்பதில் ஐயமில்லை.

தற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் !!!

நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எப்படிச் சாவது நல்லது என்று சொல்லுங்கள்

இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் ? அந்த நபரை அழைத்து பேசி, தனியே அறிவுரை சொல்லி தற்கொலை எண்ணத்தை கைவிட உதவி செய்வீர்கள். அப்படித் தானே ?

ஆனால் எல்லா இடங்களிலும் இதே அரவணைப்பும், ஆறுதலும், வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை !

இப்படி ஒரு கேள்வி இணையதளத்தில் எழும்ப, உடனடியாக களத்தில் குதிக்கின்றன பல பதில்கள். எல்லோரும் பல்வேறு வழிமுறைகளை கைவசம் வைத்திருக்கின்றனர்.

இப்படிச் சாவது வலியற்ற சாவு. இப்படிச் சாக செய்யவேண்டியவை இவை, தற்கொலைக்குத் தேவையான இந்தப் பொருட்கள் இந்த இடங்களில் கிடைக்கின்றன. இந்த முறையில் சாக நினைப்பது உசிதம் ஏனெனில் சில மணி நேரங்களில் இறந்து விடலாம்.

இப்படி ஏராளமான அதிர்ச்சியூட்டும் வழிமுறைகள் தற்கொலையை உற்சாகப்படுத்துகின்றன. இந்தக் கட்டுரையில் நான் விளக்க விரும்பாத அந்த வழிமுறைகளில், திரைப்படங்களில் நாம் பார்த்துப் பழகிய தற்கொலை வழிகள் முதல் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அதி நவீன முறைகள் வரை உள்ளன என்பது பகீர் பயங்கரம்.

“நன்றி… இது தான் என் விலாசம். நான் தற்கொலை செய்யப் போகிறேன்.” சொல்லி விட்டு விடைபெறுகிறான் ஒரு பதின் வயது இளைஞன். கடமையில் கருத்தாய் இருப்பதாய் கருதிக் கொண்டு செத்துப் போகிறான்.

எல்லோரும் அவனை உற்சாகமாய் வழியனுப்பி வைக்கிறார்கள். ஒரு உயிர் அநியாயமாய் செத்துப் போகிறது. அதன் பின்னணியில் எழும் ஒரு குடும்பத்தின் அழுகுரலைப் பற்றிய எந்த விதமான உறுத்தலும் இன்றி விவாதம் தொடர்கிறது.

“நான் தனியா தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். யாராவது சேர்ந்து தற்கொலை செய்யலாம் வருகிறீர்களா?”  அழைப்பு விடப்படுகிறது. உடனே உற்சாகமாக கும்பல் சேர்ந்து விடுகிறது.

அந்த கும்பல் ஐந்து பேரோ, ஐம்பது பேரோ குவிகின்றனர். தங்களுக்குள்ளாகவே எப்படிச் சாவது ? எங்கே சாவது ? எப்போது சாவது என பேசி முடிவெடுக்கின்றனர்.

அனைவரும் கை கோர்த்துக் கொள்கிறார்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதெல்லாம் பரபரப்பூட்டும் திரைக்கதையோ, நாவலோ அல்ல. அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி என்று சொன்னால் உள்ளம் பதறுகிறது அல்லவா?

உலகெங்கும் இத்தகைய இணைய தளங்கள் தற்கொலை விரும்பிகளால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் மட்டும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இணைய தளங்கள் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறுப்பினராக இருக்கும் பல இணணய தளங்கள் உள்ளன. இத்தகைய தளங்கள் பலரை தற்கொலைக்கு வழியனுப்பி வைத்துக் கொண்டே இருக்கின்றன.

இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவெனில், யாரேனும் தனக்கு ஒரு பிரச்சனை இருப்பதாகச் சொன்னால் உடனே தற்கொலையே தீர்வு என பலர் அறிவுரை செய்கின்றனர்.
யாரும், தற்கொலை செய்ய வேண்டாம் என்றோ, அது தவறு என்றோ சொல்வதே இல்லை. எப்போதேனும் எழும் சிறு சிறு குரல்களும் வெளிவராமல் அடங்கிவிடுகிறது.

தற்கொலை செய்வதா ? வேண்டாமா எனும் மனநிலையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் இத்தகைய தளங்களில் வந்தால் செத்துப் போவது உறுதி என்கின்றனர்.

சுமார் பதினொன்று முதல் இருபத்து ஐந்து வரையிலான வயதினரே இத்தகைய தளங்களில் இணைந்து விவாதிக்கின்றனர். இத்தகைய இணைய தளங்களின் கொடிய விளைவாக ரஷ்யாவில் மாதம் ஒன்றுக்கு சுமார் இருபது பதின் வயதினர் தற்கொலை செய்து கொள்கின்றனர், மிக மிக மகிழ்ச்சியுடன்.

இந்தத் தளங்களில் இணைபவர்களில் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவர்களும் உண்டு அவர்கள் தங்கள் அனுபவங்களை இதில் பதிவு செய்கின்றனர்.

இப்படிப்பட்ட தளங்கள் வேறு விதமான முகமூடி அணிந்து நல்ல பிள்ளையாய் காட்சியளிப்பதால் இதை தடை செய்யும் வழியும் தெரியாமல் விழிக்கின்றனர்.

பதின் வயது துடிப்புடனும், உற்சாகத்துடனும் செலவிட வேண்டிய வயது. இந்த வயதில் தற்கொலை செய்ய வேண்டும் எனும் எண்ணம் ஏன் இவர்களுக்கு வருகிறது என்பதற்கு உளவியலார் பல்வேறு காரணங்களைச் சொல்கின்றனர்.

முதலாவதாக, எங்கும் நிறைந்திருக்கும் பதின் வயதுக் காதல். அவனோ, அவளோ இல்லையேல் வாழ்க்கை இல்லை என நினைக்கும் முட்டாள்தனமான பாலியல் ஈர்ப்புகள் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. பெரும்பாலும் பெண்கள் இத்தகைய வசீகர வலையில் சிக்கி தற்கொலையே தீர்வு என முடிவெடுத்து விடுகின்றனர். 

இரண்டாவதாக பெற்றோருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பதின் வயதினரை சட்டென உணர்ச்சி பூர்வமான முடிவுக்குள் தள்ளி விடுகின்றன. தனக்குத் தண்டனை தந்த பெற்றோரைத் தண்டிக்க வேண்டும் எனும் உணர்வு நிலை உந்துதல் தற்கொலைக்குத் தூண்டுகிறது.

மூன்றாவதாக சகவயதினரின் கேலி, கிண்டல், படிப்பில் ஏற்படும் தோல்வி, இயலாமை என சிறி சிறு பலவீனங்களின் தற்கொலைக்குத் தூண்டுகின்றன.

நான்காவதாக, மரணத்துக்குப் பின் வாழ்க்கையில் ஏதோ மிக மிக அதிக சந்தோசமும், சுவர்க்கமும் இருக்கின்றன எனும் நம்பிக்கை. என்னதான் இருக்கிறது என்பதை அறிய வேண்டுமே எனும் ஆவல். பதின் வயதினரின் ஆர்வக் கோளாறு தற்கொலைக்குத் தூண்டுகிறது.

இந்த இணைய தளங்களில் சென்று தற்கொலை செய்வதாக சொன்னால் மனம் மாற வாய்ப்பே தராமல் கூடவே நின்று சாவதை உறுதி செய்து விடுகின்றனர். குறிப்பாக குழுவினராக தற்கொலை செய்ய நினைப்பவர்கள் இடையில் விட்டு விலக வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் மற்ற தற்கொலை விரும்பிகளின் கட்டாயம்!

கடந்த முப்பது வருடங்களில் இந்த தற்கொலை விகிதம் முப்பது மடங்கு அதிகரித்திருப்பதாக ரஷ்ய இணைய தளம் ஒன்று தெரிவிக்கிறது.

நவீனயுகம் பல்வேறு வசதிகளைச் செய்து தருகிறது, அவை நன்மையின் பாதையிலும், தீமையும் பாதையிலும் தடங்களைப் பதித்துக் கொண்டே செல்கிறது. தண்ணீர் விடுத்து பாலை எடுக்கும் சங்க கால அன்னப் பறவை போல தீமை விடுத்து நல்லதை எடுக்க வேண்டியது அவசியம்.

பதின் வயதுப் பருவம் என்பது மதில் மேல் அமர்ந்திருக்கும் பூனையைப் போன்றது. அது சரியான திசையில் குதிப்பதும், குதிக்காததும் குடும்பத்தினரின் அரவணைப்பையும், வழிகாட்டுதலையும் பொறுத்தது.

( இந்த வாரம் களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 73 other followers