கிமு : சிம்சோன் – வியப்பூட்டும் கதை !

இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரிடம் அடிமைகளாக இருந்த காலம். அங்கு மனோவாகு என்றொருவர் இருந்தார். அவருக்குக் குழந்தைகளே இல்லை.  தனக்கு ஒரு குழந்தைபாக்கியம் இல்லையே என மனோவாகுவின் மனைவி மிகவும் வருந்தினாள். அவள் கடவுளிடம் தொடர்ந்து மன்றாடிக் கொண்டே இருந்தார்.

கடவுளின் தூதர் ஒருநாள் அவளுக்கு முன்பாக வந்து நின்று, ‘ கடவுள் உனக்கு ஒரு குழந்தையைத் தரப் போகிறார். எனவே நீ இன்றுமுதல் திராட்சை ரசமோ, மதுவோ அருந்தக் கூடாது. தீட்டான எதையும் உண்ணக் கூடாது’ என்றார்.

‘எனக்கா ? குழந்தை பிறக்கப் போகிறதா ‘ அவள் மகிழ்ச்சியும் பரவசமும் கலந்து கேட்டாள்.

‘ஆம். கடவுள் உனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அவன் மூலம் பெலிஸ்தியர்களிடம் அடிமையாய் இருக்கும் இஸ்ரயேல் மக்களை விடுதலையாக்கப் போகிறார்’ தூதர் சொன்னார்.

அவள் எதுவும் பேசாமல் வியப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தூதர் தொடர்ந்தார். ‘ உன் மகன் மிகப் பெரிய வீரனாக இருப்பான். அவன் கடவுளுக்கானவன், அவனுடைய தலையில் சவரக் கத்தி படவே கூடாது’.

அவள் இதையெல்லாம் கேட்டுத் திகைத்துப் போய் வீட்டை நோக்கி ஓடினாள். ஓடிச் சென்று தன் கணவனிடம் தான் கண்டதையெல்லாம் கூறினாள். அவனும் வியப்பும், சந்தேகமும் கலந்த மனநிலையில் இருந்தான்.

‘தூதர் என்ன சொன்னார் ?’ மனோவாகு கேட்டார்.

‘நமக்குப் பிறக்கும் மகன் பெரிய வீரனாக, பெலிஸ்தியரை வீழ்த்துபவனாக வருவானாம்’

‘வேறென்ன சொன்னார் ?’

‘ஏதோ சவரக் கத்தி அவன் தலையில் படக்கூடாது என்று சொன்னார்… என்று நினைக்கிறேன்’ அவள் பதில் சொன்னார்.

‘என்ன சொன்னார் என்பதே நினைவில்லையா ? கடவுள் சொன்ன எதையும் நாம் மீறிவிடக் கூடாது. அதற்காக கடவுள் என்ன சொன்னார் என்பதை மிகவும் தெளிவாய் அறிந்து கொள்வது அவசியம்’ என்ற மனோவாகு கடவுளை நோக்கி மன்றாடினார்.
‘கடவுளே இது உமது சித்தமென்றால் எங்களுக்கு இன்னொரு முறை காட்சி தந்து நாங்கள் மகனை எப்படி வளர்த்த வேண்டும் என்பதைச் சொல்லித் தாரும்’ என்று வேண்டினார்.

கடவுள் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தூதர் வழியாகக் காட்சிதந்தார். முதலில் சொன்ன அனைத்தையும் தூதர் அவர்கள் இருவரிடமும் சொன்னார். அவர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்த மன நிலையில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின் மனோவாகு அங்கேயே கடவுளுக்கு ஒரு ஆட்டுக் குட்டியைப் பலியாகச் செலுத்தினார். அவர் பலி செலுத்திய நெருப்பு மேல்நோக்கி எரிந்தபோது கடவுளின் தூதனும் அவர்களுக்கு முன்பாக மேலேறிச் சென்றார். மனோவாகும் அவர் மனைவியும் தரையில் வீழ்ந்து கடவுளை வனங்கினர்.

கடவுளின் தூதர் சொன்னபடியே மனோவாகுவின் மனைவி கர்ப்பமானாள். நீண்ட நாட்களுக்குப் பின் முதன் முதலாக கர்ப்பமான மகிழ்ச்சியில் அவர்கள் திளைத்தார்கள். மறக்காமல் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்.

பேறுகாலம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு சிம்சோன் என்று பெயரிட்டார்கள். கடவுளின் தூதர் கட்டளையிட்டிருந்தபடி அவனுடைய தலை மயிரை அவர்கள் கத்தரிக்கவே இல்லை.

சிம்சோன் மிகவும் வலிமைசாலியாய் வளர்ந்தான். ஒருநாள் அவன் திமினா என்னும் ஊருக்குச் சென்றான். அங்கே ஒரு பெலிஸ்திய இளம் பெண்னைச் சந்தித்தான். அவளுடைய அழகில் சிம்சோன் தன்னை மறந்தான். மணந்தால் அவளைத் தான் மணக்கவேண்டும் என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டார். நேராக பெற்றோரிடம் வந்தான்,
‘அப்பா… எனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்’

‘கண்டிப்பாக… உனக்குப் பிடித்திருந்தால் போதும். யாரவள் ? யாருடைய மகள் ?’ தந்தை கேட்டார்.

‘அவள் ஒரு பெலிஸ்தியரின் மகள்’ சிம்சோன் சொன்னான்.

‘என்ன??  பெலிஸ்தியரின் மகளா ? நாம் அவர்களிடம் பெண் கொள்ளவோ, கொடுக்கவோ கூடாது என்பது கடவுளின் கட்டளை தெரியாதா ?’ தந்தை சினந்தார்.

‘எனக்கு அந்தப் பெண்தான் வேண்டும்…. ‘ சிம்சோன் பிடிவாதமானார்.

‘மகனே… நீ கடவுளிடமிருந்து வந்தவன். பெலிஸ்தியர்களோ விருத்தசேதனம் கூட செய்து கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள். அவர்களோடு சம்பந்தம் வைப்பது நல்லதல்ல. அது கடவுளுக்கு விரோதமான செயல்’ தந்தை மீண்டும் மீண்டும் சொன்னார்.

சிம்சோனோ,’ நீங்கள் வந்து அந்தப் பெண்ணைப் பேசி முடித்து எனக்கு மனைவியாக்குங்கள். வேறு எதுவும் பேசவேண்டாம் ‘ என்றார். அதுதான் கடவுளின் சித்தம் என்பதை அறியாத பெற்றோர் வருந்தினர்.

சிம்சோன் தன்னுடைய மனதைக் கொள்ளை கொண்ட பெண்ணைக் காணச் சென்றார். போகும் வழியில் திடீரென ஒரு சிங்கம் ஆவேசமாக சிம்சோனின் மீது பாய்ந்தது. சிம்சோன் சிங்கத்தை தம்முடைய வெறும் கைகளினால் தூக்கி இரண்டாகக் கிழித்து எறிந்தார். அந்த முரட்டுச் சிங்கம் சிம்சோனின் கைகளில் சின்ன ஆட்டுக்குட்டியாகி துடிதுடித்து இறந்தது. சிம்சோன் இதை யாருக்கும் சொல்லவில்லை.

அவர் நேராகச் அந்தப் பெண்ணைச் சந்தித்துப் பேசினார். அவருக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிற்று. அவளும் அவரை விரும்பினார். சிறிது நாட்கள் இன்பமான காதல் பேச்சுகளில் செலவிட்டபின், சிம்சோன் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தன் பெற்றோரிடம் திரும்பினார். வரும் வழியில் அவர் கொன்று போட்டிருந்த சிங்கத்தின் பிணத்தின் மேல் தேனீக்கள் கூடு கட்டித் தேனடை வைத்திருந்தன. அதை எடுத்துத் தின்றார்.

நேராகத் தந்தையிடம் சென்று,’ அப்பா எனக்கு அந்தப் பெண்னை மிகவும் பிடித்திருக்கிறது, அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. நீங்கள் பெண்ணின் தந்தையிடம் பேசி எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்றார்.

சிம்சோனின் தந்தை வேறு வழியில்லாமல் நேராக பெண்ணின் வீட்டுக்குச் சென்று பேசி திருமணத்தை நடத்தி வைத்தார். மணவிழா ஏழு நாட்கள் நடப்பதாக ஏற்பாடு. சிம்சோனின் தோழர்களாக ஊரிலுள்ள முப்பது இளைஞர்களை பெண்ணின் தந்தை அழைத்து வந்திருந்தார். அவர்கள் அவனோடு உண்டு குடித்து மகிழ்ந்திருந்தார்கள்.

சிம்சோன் அவர்களிடம்,’ நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்கிறேன். அதன் பதிலை நீங்கள் இந்த விருந்து முடியும் முன் கண்டு பிடித்துச் சொன்னால், உங்களுக்கு முப்பது நாற்பட்டாடைகளையும், முப்பது மேலாடைகளையும் அளிப்பேன். ஒருவேளை விடுகதைக்கான விடையை நீங்கள் கண்டுபிடிக்காவிடில் நீங்கள் எனக்கு முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தரவேண்டும்’. என்றார். அவர்கள் சம்மதித்தனர்.

சிம்சோன் அவர்களிடம்,’ உண்பவனிடமிருந்து உணவு வந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது – இதுவே விடுகதை. இதன் பதிலைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்’ என்றார்.

அவர்கள் விடுகதைக்கான விடை தேடி அலைந்தார்கள். மூன்று நாட்களாகியும் அவர்களால் அதன் விடையைக் கண்டு பிடிக்க முடியவே இல்லை. அவர்கள் நேராக சிம்சோனின் மனைவியிடம்வந்தனர்.

‘உன் கணவன் எங்களுக்கு ஒரு விடுகதை சொன்னான். அதன் விடையைச் சொல்லாவிட்டால் நாங்கள் அவனுக்கு முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தரவேண்டுமாம்.’

‘சரி… விடையைக் கண்டு பிடித்தால் ?’

‘அவர் முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தருவாராம்’

‘அப்படியானால் நல்லது தானே ? விடையைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது தானே ?’

‘நாங்கள் எங்கெங்கோ தேடிப்பார்த்துவிட்டோ ம், மூளையைக் கசக்கிப் பார்த்துவிட்டோ ம், நிறைய பேரிடம் பேசியும் பார்த்துவிட்டோ ம் யாருக்கும் விடை தெரியவில்லை’

‘அப்படியானால் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள்’

‘தோல்வியா ? நீ இந்த மனிதனை வைத்து எங்கள் உடமைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறாயா ? இதற்கு நீ தான் ஒரு பதில் சொல்ல வேண்டும்’

‘நானா ? ‘

‘ஆம். நீ என்ன செய்வாவோ , ஏது செய்வாயோ எங்களுக்குக் கவலையில்லை , எங்களுக்கு அந்த விடுகதைக்கான விடை உடனே தெரியவேண்டும்’ அவர்கள் கோபத்தில் உறுமினார்கள்.

‘சரி கோபப்படாதீர்கள். நான் அவரிடம் கேட்டுச்  அந்த விடுகதைக்கான விடையைக் கண்டு பிடித்துச் சொல்கிறேன். அவ்வளவு தானே ? இதற்குப் போய் ஏன் கத்துகிறீர்கள் ?’ என்றாள். அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இரவில் அவள் சிம்சோனுடன் தனித்திருக்கையில் சிம்சோனை மயக்கும் வார்த்தைகளால் மயக்கி விடுகதைக்கான விடையைக் கண்டுபிடித்தாள். சிம்சோன் நடந்த அனைத்தையும் விளக்கினார். தன்னை உண்ண வந்த சிங்கத்திடமிருந்தே தனக்கு உணவு கிடைத்ததைச் சொன்னார். அவள் அதை அந்த இளைஞர்களிடம் சொன்னாள்.

ஏழாவது நாள்.

‘எங்கே என்னுடைய விடுகதைக்கான விடை ?’ சிம்சோன் புன்னகையுடன் கேட்டார்.

‘விடைதானே… கண்டுபிடித்து விட்டோ ம்’ அவர்கள் சிரித்தனர் ?

‘அப்படியா ? உண்பவனிடமிருந்து உணவு வந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது. இதன் பதிலைச் சொல்லுங்கள் பார்க்கலாம். இதன் விடை எனக்கு மட்டும் தான் தெரியும்’ சிம்சோன் சிரித்தார்.

‘தேனினும் இனியது எது ? சிங்கத்தினும் வலியது எது ?’ நண்பர்கள் சொல்லிவிட்டுச் சிரித்தனர்.

‘நாங்கள் உன் விடுகதைக்கான விடையைக் கண்டு பிடித்து விட்டோ மே !!! எங்கே எங்கள் பரிசு ? சீக்கிரம் கொடு…’ என்று கூறிச் சிரித்தனர்.

சிம்சோன் கோபமடைந்தான். எனக்கும் என்னுடைய மனைவிக்கு மட்டும் தெரிந்த இந்த ரகசியம் வெளியே தெரிந்திருக்கிறது. அப்படியென்றால் என் மனைவிக்கும் இந்த இளைஞர்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. இல்லாவிட்டால் இந்த ரகசியம் எப்படி வெளியே செல்லும் ? என்று உள்ளுக்குள் பல்வேறு எண்ணங்கள் அலைமோத சிம்சோன் கடும் கோபமடைந்தார்.

‘உங்களுக்குப் பரிசு தானே வேண்டும். கொஞ்சம் பொறுங்கள்’ என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி அருகிலுருந்த அஸ்கலோனுக்குச் சென்று கண்ணில் பட்ட முப்பது பேரைக் கொன்று அவர்களின் ஆடையை எடுத்து வந்தார். அதை பந்தயத்தில் வென்ற இளைஞர்களிடம் கொடுத்து விட்டு அதே கோபத்துடன் தன் தந்தையின் இல்லம் நோக்கிச் சென்றார்.

சிம்சோன் கோபித்துக் கொண்டு போனதை அறிந்த பெண்ணின் தந்தை வருந்தினார். தன்னுடைய மகளின் வாழ்க்கை சடுதியில் முடிந்து விட்டதே என்று மனம் உடைந்தார். மகளை வேறு யாருக்காவது உடனே மணமுடித்து வைக்கவேண்டும் என்று நினைத்து மாப்பிள்ளைத் தோழர்களாக இருந்த முப்பது பேரில் அழகாய் இருந்த ஒருவனுக்கு அவளை இரண்டாவதாக மணமுடித்து வைத்தார்.

சில நாட்கள் கடந்தன. சிம்சோனால் தன்னுடைய மனைவியைக் காணாமல் இருக்கமுடியவில்லை. கொஞ்ச நாட்களிலேயே மனம் மாறி தன் மனைவியைக் காணச் சென்றார். அவருக்கு தன்னுடைய மனைவி இன்னொருவனுக்கு வாழ்க்கைப் பட்ட செய்தி தெரியாது. நேராக பெண்ணின் வீட்டிற்குச் சென்றார். வாசலில் மாமனார் நின்றிருந்தார்.

‘நில்… எங்கே வந்தாய் ? ‘ பெண்ணின் தந்தை கேட்டார்.

‘என்னுடைய மனைவியைக் காண வந்தேன்…. ‘ சிம்சோன் பதில் சொன்னார்.

‘உன்னுடைய மனைவியா ? அது தான் வேண்டாமென்று உதறிவிட்டு ஓடி விட்டாயே ?’

‘என்னது ? வேண்டாமென்று உதறிவிட்டேனா ? யார் சொன்னது ? நான் அப்படிச் சொன்னேனா ? கணவன் மனைவிக்குள் கோபம் வருவது இயல்புதான்… வழி விடுங்கள் எனக்கு உடனே அவளைப் பார்க்க வேண்டும்’ சிம்சோன் அவசரப் பட்டார்.

‘அன்றைக்கு நீ கோபித்துக் கொண்டு ஓடி விட்டாயே ?’

‘கோபப்படுவது இயல்பு தான். அது எனக்கும் என் மனைவிக்கும் இடையே நடந்த விஷயம். இப்போது நான் அவளைச் சமாதானப் படுத்துவதற்காகத் தான் வந்திருக்கிறேன். இதோ பாருங்கள் பரிசுப் பொருட்கள்… ‘. சிம்சோன் தன்னிடமிருந்த பரிசுப் பொருட்களைக் காட்டியதும் பெண்ணின் தந்தை வருந்தினார். தான் அவசரப்பட்டுத் தவறிழைத்துவிட்டோ ம் என்று உணர்ந்து தலைகுனிந்தார்.

‘மன்னித்து விடு சிம்சோன்…. நீ திரும்பி வருவாய் என்று நினைக்கவேயில்லை’

‘பரவாயில்லை… வழி விடுங்கள். அவள் என் பிரியத்துக்குரியவள். அவளை நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்… அவளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை’ சிம்சோன் சொன்னார்.

‘அவள்…அவள்… இப்போது இங்கே இல்லை…’ தந்தை மெதுவாகச் சொன்னார்.

‘ஓ… வெளியே போயிருக்கிறாளா ? எங்கே போயிருக்கிறாள்  ? எப்போது திரும்ப வருவாள் ?’ சிம்சோன் கேட்டார்.

‘அவள் திரும்ப வரமாட்டாள்….’

‘ஏன் ?….’ சிம்சோன் குழம்பினார்.

‘அவளை நான் வேறொருவனுக்கு மணம் முடித்து வைத்துவிட்டேன்….’ பெண்ணின் தந்தை இதைச் சொன்னதும் சிம்சோன் மிகவும் ஆத்திரமடைந்தார்.

‘என்ன ? என் மனைவியை நீங்கள் வேறொருவனுக்கு மணம் முடித்து வைத்தீர்களா ? நீங்கள் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை எப்படிச் செய்யலாம் ?’ சிம்சோன் கோபத்தில் கத்தினார்.

‘நீ திரும்பி வரமாட்டாய் என்று நினைத்து நான் இப்படிச் செய்து விட்டேன். உன்னிடம் கேட்டிருக்க வேண்டும். கேட்காதது தவறு தான் மன்னித்துவிடு. ஆனால் இதற்காகக் கவலைப்படாதே… அவளுடைய தங்கை ஒருத்தி இருக்கிறாள். அவள் அக்காவை விட மிகவும் அழகானவள். அவளை உனக்கு மணமுடித்து வைக்கிறேன்’ தந்தை சொன்னார்.

அதைக்கேட்ட சிம்சோன் இன்னும் அதிகமாகக் கோபப்பட்டார். கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
‘பெலிஸ்தியர்களே… உங்கள் புத்தியைக் காட்டி விட்டீர்களே… உங்களை நான் என்ன செய்கிறேன் பாருங்கள்’ என்று தங்களுக்குள்ளே கருவிக் கொண்டான்.

அன்றைக்கே அவன் சென்று முந்நூறு நரிகளைத் துரத்திப் பிடித்தான். இரண்டிரண்டு நரிகளின் வால்களைச் சேர்த்து அதில் ஒரு தீப்பந்தத்தையும் வைத்துக் கட்டினார். பின் நரிகளை பெலிஸ்தியர்களின் வயல்களுக்குள் ஓடவிட்டார். நரிகள் தீப்பந்தத்தியும் கொண்டு அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டே ஓடியதில் பெலிஸ்தியர்களில் வயல்கள் எல்லாம் எரிந்து சாம்பலாயின. மிகப் பெரிய அழிவு அன்று ஏற்பட்டது.

பெலிஸ்தியர்கள் ஆத்திரமடைந்தார்கள். நேராக சிம்சோனின் மாமனார் வீட்டுக்குச் சென்று,’ உங்களால் தான் அந்த இஸ்ரயேலன் எங்கள் தானியங்களை எல்லாம் அழித்தான். எனவே நீங்களும் செத்துத் தொலையுங்கள் என்று சொல்லி சிம்சோனின் மனைவியையும், அவள் தகப்பனையும் வீட்டோ டு தீயிட்டுக் கொன்றார்கள்.

தன் அருமை மனைவி கொல்லப்பட்டதை அறிந்த சிம்சோனின் கோபம் தலைக்கேறியது. ‘பெலிஸ்திய நாய்களே… என்னோடா விளையாடுகிறீர்கள். உங்களைப் பழிக்குப் பழி வாங்காமல் ஓயமாட்டேன்’ என்று பகிரங்கமாய்க் கூவினார். சிம்சோனின் வலிமையை எல்லோரும் அறிந்திருந்ததனால் யாரும் அவரை நெருங்கவில்லை.

சிம்சோன் பெலிஸ்தியர்களின் கூட்டத்துக்குள் புகுந்தார். சிங்கம் புகுந்த ஆட்டு மந்தையைப் போல அவர்கள் சிதறி ஓடினார்கள். சீறும் சிங்கத்தையே இரண்டாய்க் கிழித்த வலிமையான கைகளினால் அவர் நூற்றுக் கணக்கானோரைக் அடித்தே கொன்றார் சிம்சோன். பின் அங்கிருந்து ஏற்றாம் என்னுமிடத்திற்குச் சென்று அங்குள்ள பாறைப் பிளவு ஒன்றில் தங்கியிருந்தார்.

பெலிஸ்தியர்களின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது. அவர்கள் ஒரு நாட்டைப் பிடிக்கப் போவது போல சிம்சோனைப் பிடிக்கப் போனார்கள். நேராக இஸ்ரயேலர்கள் அதிகமாக இருக்கும் நகருக்குப் போய் கூடாரமடித்தார்கள்.

‘ஐயோ… என்னவாயிற்று ? ஏன் போர்வீரர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்’ இஸ்ரயேலர்கள் பயத்தில் அலறினார்கள்.

‘உங்கள் சிம்சோனை நீங்கள் என்னிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும். இல்லையேல் அவன் பெலிஸ்தியர்களை அழித்தது போல இஸ்ரயேலர்களை எல்லோரையும் நாங்கள் அழிப்போம்’ என்று கர்ஜித்தார்கள்.

‘எங்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். நாங்கள் போய் சிம்சோனைக் கட்டி உங்களிடம் கொண்டு வந்து தருகிறோம்’ இஸ்ரேலிய மக்கள் வாக்களித்தார்கள்.

‘சரி உடனே போய் சிம்சோனைக் கட்டி இழுத்து வாருங்கள்’ பெலிஸ்தியர்கள் ஆணையிட்டார்கள்.

இஸ்ரயேலர்களில் மூவாயிரம் பேர் ஒன்று கூடி சிம்சோன் இருக்கும் பாறைப்பிளவுக்குச் சென்றார்கள்.

‘சிம்சோன்… பெலிஸ்தியர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள் என்பதை மறந்து விட்டாயா ? அவர்களுக்கு எதிராகவே நடக்கிறாயே ? இதனால் நாம் எல்லோருமே மிகப் பெரிய இக்கட்டில் மாட்டியிருக்கிறோம்.’ மக்கள் சொன்னார்கள்.

‘அவர்கள் எனக்குச் செய்தது உங்களுக்குத் தெரியாதா என்ன ? நான் அவர்களைப் பழி வாங்கியே தீருவேன். ‘ சிம்சோன் சினம் குறையாமல் பேசினார்.

‘சிம்சோன்… தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேள்.. உன்னை நாங்கள் பெலிஸ்தியரிடம் ஒப்படைக்காவிடில் நாங்கள் எல்லோரும் சாவது உறுதி. இப்போது உன் இன மக்களான எங்கள் உயிர் உன்னிடம் தான் இருக்கிறது. தயவு செய்து எங்களைக் காப்பாற்று’ என்றார்கள்.

சிம்சோன் யோசித்தார். ‘சரி.. என்னால் உங்கள் உயிர் போகவேண்டாம். என்னை நீங்கள் கயிற்றினால் கட்டி பெலிஸ்தியர்களிடம் ஒப்படையுங்கள். ஆனால் நீங்கள் என்னைக் கொல்லக் கூடாது ‘

‘சிம்சோன்… ஆண்டவர் மீது ஆணை. உன்னை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோ ம். உன்னைக் கட்டி பெலிஸ்தியர்களிடம் ஒப்படைப்போம். அவ்வளவே… ‘ என்றனர்.

சிம்சோன் ஒத்துக் கொண்டார். அவர்கள் சிம்சோனைக் கயிறுகளினால் பிணைத்துக் கட்டி பெலிஸ்தியர்களிடம் கூட்டிக் கொண்டுபோனார்கள். உடல் முழுவதும் கட்டப்பட்ட நிலையில் பெலிஸ்தியர்களின் முன்னால் நிறுத்தப்பட்டார் சிம்சோன். பெலிஸ்தியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

சிம்சோன் சிரித்தார்.’ ஏன் ஆரவாரம் செய்கிறீர்கள் மூடர்களே.. என்னையா கட்டிப் போடுகிறீர்கள்’ என்று சொல்லி உடலை முறுக்கினான். உடனே கட்டப்பட்டிருந்த கயிறுகளெல்லாம் அறுபட்டுத் தெறித்தன. அங்கே கிடந்த ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கையிலெடுத்து கூடிநின்ற பெலிஸ்தியர்களை மூர்க்கமாகத் தாக்கினார். அங்கேயே அவர் கையில் சிக்கி ஆயிரம் பேர் இறந்தார்கள். சிம்சோன் பெலிஸ்தியர்களின் கையில் சிக்காமல் தப்பினார்.

பெலிஸ்தியர்கள் சிம்சோனை எப்படியும் பிடித்துவிட வேண்டுமென்று தவியாய்த் தவித்தார்கள். அவர் காசா நகரிலுள்ள ஒரு விலைமாதுவின் வீட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவர்கள் நகரின் மிகப் பிரம்மாண்டமான வாசல் கதவை அடைத்து அதனருகே காவல் இருந்தார்கள். எப்படியும் சிம்சோன் இந்தக் கதவைத் தாண்டாமல் வெளியே போக முடியாது. இங்கே வைத்து அவனைக் கொன்று விடவேண்டும் என்று சத்தமில்லாமல் பதுங்கி இருந்தார்கள்.

சிம்சோன் நள்ளிரவில் விலைமாதின் வீட்டை விட்டு வெளியே வந்தார். நகரின் வாசலருகே வரும்போது வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன் மீது ஏறிக் குதிக்கவும் முடியாது ! அந்த அளவுக்கு  உயரமானது. சிம்சோன் அந்த வாசலருகே வந்ததும் பதுங்கியிருந்தவர்கள் அவரைத் தாக்க வந்தார்கள். சிம்சோன் அசரவில்லை, இரண்டு கைகளாலும் நகரின் கதவைப் பெயர்த்து எடுத்தார். தாக்க வந்த கூட்டம் நடுநடுங்கி பின்வாங்கியது. சிம்சோன் அந்த பிரம்மாண்டக் கதவைத் தலையில் சுமந்து கொண்டே நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்குப் போனார்.

பெலிஸ்தியர்களால் சிம்சோனை நெருங்கவே முடியவில்லை. சிம்சோன் சோரேக்கு ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் தெலீலா என்னும் பெண்ணைக் காதலிக்கிறார் என்னும் செய்தி பெலிஸ்தியர்களுக்குக் கிடைத்தது. அந்தப் பெண்ணை வைத்து சிம்சோனின் வீரத்தின் ரகசியத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

பெலிஸ்திய சிற்றரசன் தெலீசாவை அணுகி அவளுக்கு ஆசை காட்டினர்.

‘நீதான் சிம்சோனைக் காதலிக்கும் தெலீசாவா ?’

‘ஆம் …. அது நான் தான்…’

‘உன்னைப் பார்த்தால் மிகவும் அழகாக இருக்கிறாய்… ஆனால் உன்னிடம் வசதி இருப்பது போலத் தெரியவில்லையே … உனக்கு ஏராளமான வெள்ளிக்காசு தந்தால் வேண்டாம் என்று சொல்வாயா என்ன ?’

தெலீசா பிரகாசமானாள்,’ எதற்காக நீங்கள் எனக்கு வெள்ளிக்காசு தருகிறீர்கள் ?’

‘சிம்சோன் மிகவும் வலிமையானவன் என்று தெரியும். அவனுடைய பலவீனம் என்ன என்பதும், எதில் அவனுடைய சக்தி அடங்கியிருக்கிறது என்பதையும் நீ கண்டறிந்து சொல்ல வேண்டும்… அவ்வளவு தான்’

‘இது மிகப் பெரிய பணியாயிற்றே… சிம்சோனிடம் உண்மையை அறிந்து கொள்வது மிகவும் கஷ்டம்….’ தெலீசா முரண்டு பிடித்தாள்.

‘ஐநூறு வெள்ளிக்காசு தந்தால் ?….’ சிற்றரசன் ஆசை காட்டினான்.

‘ஐநூறு போதாதே…. அதிகம் தந்தால் முயன்று பார்க்கலாம்’ தெலீசா சொன்னாள்.

‘சரி ஆயிரம் வெள்ளிக்காசு தருகிறேன்….’ சிற்றரசன் சொன்னான்.

‘ஆயிரம் போதாது…. ஆயிரத்து இருநூறு வெள்ளிக்காசு தந்தால் அவனுடைய பலம் எங்கே இருக்கிறது ? அவனுடைய பலவீனம் என்ன என்பதையெல்லாம் நான் கண்டறிந்து சொல்வேன்’ தெலீசா சொன்னாள்.

சிற்றரசன் ஒத்துக் கொண்டான்.

அன்று இரவு தெலீசா சிம்சோனுடன் மஞ்சத்தில் கொஞ்சுகையில் மெல்லக் கேட்டாள்.
‘சிம்சோன்… உன்னுடைய வலிமை கண்டு நான் பிரமிக்கிறேன்…உங்கள் வலிமை எதில் இருக்கிறது ? உங்களை அடக்கவே முடியாதா ?’

சிம்சோன் சிரித்தார்,’ ஏன் கேட்கிறாய் ?’

‘இல்லை … நான் உன்னுடைய ஆசை நாயகியல்லவா ? எனக்குத் தெரியாத ஒரு ரகசியம் உம்மிடம் இருக்கிறதே என்று தான்….’ தெலீசா இழுத்தாள்.

‘அதெல்லாம் பெரிய விஷயமில்லை … உலராத ஏழு நார்க்கயிறுகளால் என்னைக் கட்டினால் அவ்வளவு தான் நான் எழும்பவே முடியாது’ என்று சொன்னார்.

தெலீசா அன்று இரவே ஏழு நார்க்கயிறுகளால் அவனை இறுக்கிக் கட்டினாள். பின்
‘சிம்சோன்…சிம்சோன்… எழுந்திரு இதோ பெலிஸ்தியர்கள் வருகிறார்கள்’ என்று கத்தினாள்.

சிம்சோன் எழுந்து கைகளை விரித்தான். கட்டப்பட்டிருந்த கயிறுகள் எல்லாம் நூல் போல உடைந்து தெறித்தன.

‘எங்கே பெலிஸ்தியர்கள்’ சிம்சோன் பதட்டமாய்க் கேட்டான்.

‘நான் சும்மா தான் சொன்னேன்… நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். பச்சை நார்க்கயிறுகள் உம்மைக் கட்டிப் போடவில்லையே…’ தெலீசா சிணுங்கினாள்.

‘உண்மையில் நீ… புதிய இரண்டு நார்க்கயிறுகளால் என்னைக் கட்ட வேண்டும்…. உலராத ஏழு நார்க்கயிறுகள் என்பது நான் சொன்ன பொய்’ சிம்சோன் சிரித்தார்.

தெலீசா கொஞ்சினாள். அன்று இரவு சிம்சோன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவள் புதிய இரண்டு கயிறுகளால் அவனைக் கட்டினாள். கட்டிவிட்டு முதல் நாள் கத்தியது போலவே கத்தினாள். சிம்சோன் எழுந்து உடம்பை முறுக்கியதும் கட்டுகள் எல்லாம் அறுந்து தெறித்தன.

தெலீசா மீண்டும் சிணுங்கினாள்,’ எப்போதும் என்னிடம் பொய்தான் சொல்கிறீர்கள். புதிய கயிறுகள் கூட உம்மைக் கட்டிப் போடவில்லையே.. உண்மையைச் சொல்லுங்கள் ‘

‘உண்மையைச் சொல்வதானால் என்னுடைய தலையில் இருக்கும் ஏழு ஜடைகளையும் நெசவு நூல் பாவுடன் பின்னிவிட்டால் போதும். என்னுடைய வலிமைகள் எல்லாம் போய்விடும்’ சிம்சோன் சொன்னார்.

தெலீசா அவ்வாறே செய்துபார்க்க அதுவும் பொய் என்று அறிந்து கொண்டாள்.
அதன் பின் தினமும் அவரை நச்சரித்து வந்தாள். இரவில் மஞ்சத்தில் சிம்சோனிடம் வழக்கிட்டுக் கொண்டே இருந்தாள்.

‘என்னை நீங்கள் அற்பமாய் நினைத்து விட்டீர்கள்.. நான் உங்களுக்கு இவ்வளவு உண்மையாய் இருக்கிறேன். நீங்கள் என்னை மதிக்கவேயில்லை’

‘நீ என்னுடைய காதலி. நான் உன்னை என் உயிராய் நினைக்கிறேன்.. நீ ஏன் இப்படிச் சொல்கிறாய் ?’

‘நான் உங்கள் உயிரென்பது உண்மையென்றால் எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லவேண்டும்’

‘அது எதற்கு தெலீசா ?’ சிம்சோன் தயங்கினார்.

‘நான் என்ன உங்களைக் கொல்லவா போகிறேன். உங்கள் ரகசியங்கள் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டீர்கள் என்று மகிழ்வேன்.. அவ்வளவு தான்… ‘சிம்சோனின் மார்பில் அவளுடைய விரல்கள் கோலம் போட்டன.

அவளுடைய கொஞ்சல்களில் மயங்கியும், அவளுடைய திட்டுகளில் வருத்தமுற்றும் சிம்சோன் உண்மையைச் சொல்வதென்று முடிவெடுத்தார்.

‘நான் உண்மையை உனக்குச் சொல்கிறேன்.. ஆனால் நீ யாரிடமும் அந்த ரகசியத்தைச் சொல்லக் கூடாது. அது என்னுடைய உயிருக்கே ஆபத்தாய் முடியும்’ சிம்சோன் சொன்னான்

‘நீங்கள் என்னை நம்பலாம். என் உயிரே போனாலும் நான் இந்த ரகசியத்தை நான் யாரிடமும் சொல்லமாட்டேன்; தெலீசா அவனை மடியில் கிடத்திக் கொஞ்சினாள்.

‘நான் கடவுளால் பிறந்தவன். கடவுளுடைய நசரேயன்… அவருடைய பணியாளன். என்னுடைய தலைமுடியில் தான் என்னுடைய பலமே அடங்கியிருக்கிறது. முடி போனால் என் வலிமையும் என்னைவிட்டுப் போய்விடும்’ சிம்சோன் சொன்னார். தெலீசா அவனை மோகத்தில் குளிப்பாட்டினாள். இரவில் சிம்சோன் அசந்து தூங்கியபோது அவனுடைய தலையை மொட்டையடித்தாள். பின் பெலிஸ்தியர்களுக்கு ஆளனுப்பினாள்.

‘சிம்சோன் எழுந்திரு… இதோ பெலிஸ்தியர்கள் வருகிறார்கள்’ தெலீசா கத்தினாள்.

சிம்சோன் எழுந்தார்,’ யார் வந்தால் என்ன எல்லோரையும் அழிப்பேன்’

‘அதற்கு உன்னுடைய தலைமயிர் உன்னிடம் இல்லையே…’ தெலீசா நகைத்தாள்.

சிம்சோன் தன்னுடைய தலையைத் தடவிப்பார்த்து அதிர்ந்தார். ‘ ஐயோ… உன்னை நால் மலை போல நம்பினேனே… இப்படி நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாயே…’ சிம்சோன் ஏமாற்றப்பட்டதை நினைத்து  அழுதார்.

‘எனக்கு வரப்போகும் வசதிக்காக உன்னுடைய மயிரை மழித்துவிட்டேன் சிம்சோன்… இன்னும் சிறிது நேரத்தில் பெலிஸ்தியர்கள் இங்கே வருவார்கள் தயாராய் இரு…’ தெலீசா சிரித்தாள்.

அதற்குள் பெலிஸ்தியர்கள் படையுடன் வந்து அவரைச் சூழ்ந்தனர். சிம்சோன் பழைய நினைப்பில் ஒருவனை அடித்தார், ஆனால் அந்த அடிக்கு வலு இருக்கவில்லை. அவர்கள் சிம்சோனை ஒரு ஆட்டுக் குட்டியைப் பிடிப்பதுபோல எளிதாகப் பிடித்தார்கள்.

‘நீதான் வீரனா ? பெலிஸ்தியர்களை அழிக்கப் பிறந்தவனா ?’ என்று சொல்லி அவனை அடித்துக் குற்றுயிராக்கினார்கள். சிம்சோன் வலியால் துடித்தார்.

பெலிஸ்தியர்கள் சிம்சோனை பிடித்து நிறுத்தி அவனுடைய கண்களைத் தோண்டி எடுத்தார்கள். சிம்சோன்  கதறினார். அவரை அவர்கள் சிறையில் அடைத்து சங்கிலிகளால் பிணைத்தனர். அவரைக் கேலிப்பொருளாக்கி மாவரைக்கும் வேலையைச் செய்ய வைத்தார்கள்.

சிம்சோன் உள்ளுக்குள் அழுதுகொண்டே மாவரைத்துக்கொண்டிருந்தார். அவரை பெலிஸ்தியர்கள் அவ்வப்போது அழைத்து சபையில் நிற்கவைத்து அவமானப் படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். சிம்சோன் நிராயுதபாணியாய் நின்றார்.

மொட்டையடிக்கப் பட்டிருந்த அவருடைய தலைமுடி வளரத் துவங்கியது ! பெலிஸ்தியர்கள் அதைக் கவனிக்கவில்லை. தலைமுடி வளர வளர சிம்சோன் தான் இழந்த வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக் கொண்டிருந்தார்.

பெலிஸ்தியர்கள் சிம்சோனைத் தங்கள்வசம் ஒப்படைத்த அவர்களின் கடவுளுக்கு மிகப் பெரிய விழா எடுப்பதற்காக ஒரு பெரிய மண்டபத்தில் ஒன்றுகூடினார்கள்.

‘சிம்சோனை அழைத்து வாருங்கள். வீராதி வீரனை நாம் அவமானப் படுத்துவோம்’ பெலிஸ்தியர்கள் சொல்லிச் சிரித்தார்கள்.

சிம்சோன் அழைத்துவரப்பட்டார். மக்களெல்லாம் குழுமியிருந்த மிகப்பெரிய மண்டபத்தின் நடுவே நிற்கவைக்கப் பட்டார்.

‘வீராதி வீரனே…. எங்கே உன் வீரம் ?’ பெலிஸ்தியர்கள் சொல்லிக் கொண்டே அவரை அடித்தார்கள். சிம்சோன் தடுமாறி விழுந்தார்.

‘என்னால் நிற்க முடியவில்லை… தயவு செய்து என்னை ஒரு தூணில் என்னை சாய்த்து நிறுத்துங்கள்…’ சிம்சோன் பரிதாபமாகக் கேட்டார்.

‘பெலிஸ்தியர்களைச் சாய்க்கும் வீரனைத் தூணில் சாய்த்து வையுங்கள்…. ‘ என்று சொல்லி எல்லோரும் பலமாகச் சிரித்தார்கள்.

அவர்கள் சிம்சோனை இழுத்து, ‘இதோ இந்த இரண்டு தூண்களையும் பிடித்துக் கொள்’ என்று சொல்லி அவருடைய வலது கையை ஒரு தூணிலும், இடது கையை இன்னொரு தூணிலுமாக இரண்டு பெரிய தூண்களில் பிடித்து வைத்தார்கள். வைத்துவிட்டு அவரை எள்ளி நகையாடினார்கள்.

சிம்சோன் உள்ளுக்குள் ஆண்டவரை நோக்கி உருக்கமாய் மன்றாடினார்.
‘ஆண்டவரே… இந்த ஒருமுறை மட்டும் எனக்குப் பழைய பலத்தைத் தாரும். இந்த பெலிஸ்தியர்களின் கொட்டத்தை அடக்க எனக்கு உதவிசெய்தருளும்’ என்று வேண்டினார்.

கடவுளின் அருள் அவர்மீது வந்திறங்கியது. அவருடைய முழு வலிமையும் அவருக்குள் திரும்ப வந்தது.
‘பெலிஸ்தியர்களைக் கொல்வதற்காக என் உயிரைக் கொடுப்பதில் மகிழ்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டே இரண்டு கைகளிலும் தன் முழுபலத்தையும் இறக்கி இரண்டு தூண்களையும் பலமாய்ச் சாய்த்தார்.

தூண்கள் இரண்டும் சாயத் துவங்கின. மண்டபத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திகிலடைந்தார்கள். அதற்குள் மண்டபத்தின் கூரை மொத்தமாய் அவர்கள் மேல் விழுந்து நசுக்கியது. மண்டபம் தரைமட்டமானது. அனைவரும் அதே இடத்தில் இறந்தார்கள்.

சிம்சோனும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.

சிம்சோனின் வழியாக கடவுள் தங்களை பெலிஸ்தியரிடமிருந்து மீட்டார் என்று இஸ்ரயேலர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

தமிழிஷில் வாக்களிக்க….

கி.மு : இப்தா, A Shocking Story !

 

இப்தா ஒரு வலிமையான போர்வீரன். கிலாயத்துக்கும் ஒரு விலைமாதிற்கும் பிறந்தவன். விலைமாதின் மகன் என்பதாலேயே நிராகரிக்கப்பட்டு அவனுடைய சகோதரர்களாலேயே வீட்டை விட்டுத் துரத்தப்பட்டான்.

‘விலைமாதின் மகன் எங்களோடு தங்குவது எங்களுக்கு அவமானம். எங்காவது ஓடிப் போ… ‘ என்று அவனுடைய தந்தைக்கும் தந்தையின் மனைவிக்கும் பிறந்தவர்கள் அவனைத் துரத்தினார்கள். இப்தா தன்னுடைய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறி தோபு என்னும் நாட்டில் குடியேறினார்

சிறிது காலம் சென்றபின் அம்மோனியர்கள் இஸ்ரயேலரின் மீது படையெடுத்தார்கள். அந்நாட்களில் நகரில் மக்களை ஒருங்கிணைத்து அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு வலிமையான தலைவன் இல்லை. அம்மோனியர்களை எப்படி எதிர்ப்பது ? யாரைக் கொண்டு அவர்களோடு போரிடுவது என்று பெரியவர்கள் ஆலோசித்தார்கள். கடைசியில் இப்தாவைக் கூட்டி வருவது என்று முடிவெடுத்து இப்தாவைத் தேடிச் சென்றனர்.

‘இப்தா… இஸ்ரயேல் மக்களுக்கு பெரிய ஆபத்து ஒன்று வந்திருக்கிறது. அம்மோனியர்கள் போருக்குத் தயாராகிறார்கள். அம்மோனியரோடு போரிட எங்களுக்கு ஒரு தலைவன் வேண்டும். அதற்கு நீ மட்டும் தான் தகுதியானவன். எங்களுடன் வந்துவிடு’ பெரியவர்கள் சொன்னார்கள்.

‘நன்றாக வாழ்ந்தபோது என்னை ஒரு நாயைப் போல அடித்துத் துரத்தினீர்கள். இப்போது கஷ்டம் என்றவுடன் என்னைத் தேடி வந்திருக்கிறீர்களா ? என்னால் முடியாது’ இப்தா மறுத்தார்.

‘நாங்கள் என்ன செய்வது உன்னுடைய சகோதரர்கள் தான் உன்னை எதிர்த்தார்கள். நாங்கள் யாரும் உன்னை எதிர்க்கவில்லையே  ‘

‘ எதிர்க்கவில்லை தான். ஆனால் என் சகோதரர்கள் என்னை அவமானப் படுத்தி அடித்து விரட்டியபோது நீங்கள் யாரும் சமாதானம் செய்து வைக்க முன்வரவில்லையே ?’

‘இப்தா… பழைய கதைகள் இப்போது எதற்கு ? இப்போது நீ வந்தால் உன்னை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல. உன்னையே நாங்கள் எங்கள் தலைவனாகவும் அமர்த்துவோம். நீ வந்து எங்களை வழிநடத்து’ பெரியவர்கள் மீண்டும் கேட்டனர்.

‘இல்லை. எனக்குத் தலைவனாகும் விருப்பம் இல்லை. இப்போது நான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறேன். எனக்கு இந்த வாழ்க்கை போதும். உங்கள் தயவு வேண்டாம்’

‘இப்தா மறுக்காதே. இது நம்முடைய இஸ்ரயேல் குலத்துக்கே வந்த சவால். இதை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். நீ வரவில்லையென்றால் நம்முடைய குலமே அழிந்து போய்விடும் அபாயம் இருக்கிறது. தயவு செய்து பழைய வருத்தங்களை மனதில் வைத்திருக்காமல் எங்களுக்கு உதவு’ வந்தவர்கள் தொடர்ந்து இப்தாவை வற்புறுத்தினார்கள்.

இப்தா யோசித்தார். ‘ சரி… நான் வருகிறேன். கடவுள் என்னோடு இருந்தால் நான் அவர்களை வெல்வேன். அவர்களை நான் வெற்றிகொண்டால் உங்கள் தலைவனாக நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவேண்டும். சம்மதம் தானே ?’

அனைவரும் ஒத்துக் கொண்டனர்
‘நீ வரவேண்டும். அவ்வளவு தான். உனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் நாங்கள் செய்து தரத் தயாராக இருக்கிறோம். நீ சொல்வதையெல்லாம் கேட்கவும் உடன்படுகிறோம் ‘ அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்.

இப்தா பெரியவர்களுடன் ஊருக்குள் வந்தார். வந்தவுடன் அவர் போருக்கான தயாரிப்புகளில் ஈடுபடவில்லை. முதலில் ஒரு தூதரைக் கொண்டு சமாதானப் பேச்சுகளைத் துவங்கினார்.

‘உங்களோடு எங்களுக்கு எந்தப் பகையும் இருந்ததில்லையே… ஏன் நீங்கள் எங்களோடு போரிடத் துடிக்கிறீர்கள்’ இப்தா அம்மோனியருக்கு சமாதானத் தூது அனுப்பினார்.

‘இது எங்கள் நிலம்.. முன்பு எங்களிடமிருந்து தான் இஸ்ரேலர்கள் இந்த நிலத்தை அபகரித்தார்கள். எனவே நாங்கள் இதைப் போரிட்டு மீட்போம். மீண்டும் நாங்களே இங்கு வாழ்வோம்’

‘இல்லை.. நீங்கள் நினைப்பது தவறு. இந்த நிலத்தை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலிருந்து மோசேயினால் மீட்டு வரப்பட்ட மக்களுக்குக் கடவுளே கொடுத்தார். இதை நீங்கள் அபகரிக்க நினைக்காதீர்கள். அது கடவுளுக்கு எதிரான செயல். போர் வேண்டாம் சென்று விடுங்கள்’

‘ஓகோ… கடவுள் கொடுத்தாரா ? நீங்கள் எங்கள் முன்னோர்களை வீழ்த்தி எடுத்துக் கொண்ட இந்த நிலத்தை நாங்கள் உங்களை வீழ்த்துவதன் மூலம் மீட்போம். போர் நடைபெறப் போவது உறுதி. உங்கள் கடவுள் உங்களுக்குத் தந்ததை எங்கள் கடவுள் இப்போது எங்களுக்குத் தரப் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்’ அம்மோனியர் தலைவன் ஏளனமாய் பதில் சொன்னான்.

‘கடைசியாக என்ன சொல்கிறீர்கள் ? போரா சமாதானமா ?’ இப்தாவின் தூதர் கேட்க. போரைத் தவிர வேறு வழியில்லை என்று அம்மோனியர்கள் உறுதியாய்ச் சொன்னார்கள்.

இப்தாவும் போருக்கான ஆயத்தங்களை ஆரம்பித்தார்.
போருக்குச் செல்லும் முன் இப்தா கடவுளுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்தார்.

‘கடவுளே… இதோ நீர் என்னோடு இருக்கிறீர் என்னும் தைரியத்தில் தான் நான் போருக்குச் செல்கிறேன். இந்தப் போரில் நீர் எனக்கு வெற்றியைக் கொடுத்தால் வெற்றிபெற்றுத் திரும்பும் போது முதலில் என் எதிரே வரும் உயிரினத்தை நான் உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்’ என்று நேர்ந்தார்.

போர் ஆரம்பமானது. இப்தா தன்னுடைய வீரர்களோடு அம்மோனியரை எதிர்த்துக் கடுமையான போரில் ஈடுபட்டார். கடவுள் இப்தாவோடு இருந்தார். அவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. அம்மோனியர் பின்னிட்டு ஓடினார்கள்.

இப்தா மகிழ்ந்தார். வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பினார். முதலில் என் எதிரே வரும் உயிரினத்தை ஆண்டவருக்குப் பலியாக செலுத்தவேண்டும் என்னும் எண்ணம் அவருக்குள் மறையாமல் இருந்தது.

அவர் ஊருக்குள் நுழைந்ததும் மேளதாளத்துடன், ஆடிப் பாடிக் கொண்டே மிகவும் சந்தோசமாக அவரை எதிர்கொண்டு வந்த பெண்ணைப் பார்த்ததும் இப்தா அதிர்ந்தார். அது அவருடைய ஒரே மகள். செல்ல மகள்.

இப்தாவின் மகள் நேர்ச்சையைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அவள் தந்தை வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டே தந்தைக்கு எதிரே மகிழ்ச்சியோடு ஓடிவந்தாள்.

‘அப்பா….. நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். எனக்கு இப்போது தான் போன உயிர் திரும்ப வந்திருக்கிறது’ ஆசை மகள் தந்தையைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.

இப்தா அழுதார். தன்னுடைய ஆடைகளைக் கிழித்துவிட்டுக் கதறி அழுதார்.
‘என் ஆசை மகளே… நீ எனக்கு உயிருக்கு உயிரானவள்….’ என்று அவளை அணைத்துக் கொண்டார்.

‘ஏன் அப்பா அழுகிறீர்கள். நீங்கள் மாபெரும் வெற்றியல்லவா பெற்றிருக்கிறீர்கள். உங்களோடு சேர்ந்து வெற்றியைக் கொண்டாடலாம் என்று வந்தால் அழுகிறீர்களே ? என்னவாயிற்று’ மகள் கேட்டாள்.

‘மகளே… அதை நான் எப்படிச் சொல்வேன்… நான் கடவுளுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்து விட்டேன்.. அதை திரும்பப் பெறவும் முடியாது, நிறைவேற்றவும் முடியாது. என்ன செய்வேன்’ என்று கூறி மீண்டும் அழுதார்.

‘நேர்ச்சை தானே… இப்போது நீங்கள் தலைவர். எந்த நேர்ச்சையை வேண்டுமானாலும் நீங்கள் நிறைவேற்றலாம். அதற்குரிய வசதிகள் உங்களுக்குக் கிடைக்கும்’ மகள் சொன்னாள்.

‘மகளே…  நீ புரியாமல் பேசுகிறாய். நான் வெற்றியுடன் திரும்பும்போது என் எதிரில் முதலில் வரும் உயிரினத்தைக் கடவுளுக்குப் பலிசெலுத்துவதாக நேர்ந்திருந்தேன். நீ என் எதிரே வந்து விட்டாய். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை’ இப்தா தளர்ந்து போன குரலில் சொன்னார்.

தந்தை சொல்லச் சொல்ல மகளின் கண்களில் திகில் படர்ந்தது. ‘அப்பா…… ‘ அவளுடைய வாய் குழறியது.
தந்தை ஒன்றும் பேசாமல் தரையில் மண்டியிட்டார்.

‘அப்பா… நீங்கள் கவலைப்படாதீர்கள். ஆண்டவருக்கு நீங்கள் நேர்ந்து கொண்டதை நிறைவேற்றியே ஆகவேண்டும்’ மகள் சொன்னாள்.

‘அதெப்படி….. உ..ன்னை…. நான்…?  முடியாது….முடியவே முடியாது ‘ இப்தா தடுமாறினார்.

‘இல்லை அப்பா… உங்கள் வெற்றியில் நானும் கலந்து கொள்வதாய் நினைத்துக் கொள்கிறேன்… ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும்’ மகள் கலங்கிய விழிகளோடு சொன்னாள்.

இப்தா மகளை ஏறிட்டுப் பார்த்தார்.

‘எனக்கு இரண்டு மாத கால அவகாசம் கொடுங்கள். நான் என் தோழியரோடு மலைகளில் சுற்றித் திரிந்து என்னுடைய கன்னித் தன்மைக்காக நான் துக்கம் கொண்டாடப் போகிறேன்’ என்றாள்

‘மகளே… ஆனால்….’ இப்தா இழுத்தார்.

‘பயப்படாதீர்கள் .. நான் என்னுடைய கன்னித் தன்மையை இழக்கமாட்டேன். எந்த ஆணுடனும் உறவு கொள்ளவும். என் தோழியரோடு நான் செல்கிறேன். இரண்டு மாதம் கழித்து வருவேன். அனுமதியுங்கள்’ என்றாள்.

இப்தா அனுமதித்தார்.

மாதங்கள் இரண்டு சட்டென்று ஓடி மறைய. மகள் எரிபலிக்குத் தயாராக தந்தையின் முன்னால் வந்து நின்றாள்.
‘அப்பா… இதோ பலிப்பொருள்… என்னைப் பலியிட்டு உங்கள் நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்’ மகள் சொன்னாள்.

இப்தா அழுதார். இப்தாவின் மகள் அவரைத் தேற்றினாள். ‘ இறப்பு என்பது எல்லோருக்கும் வருவது தானே. இப்படி ஒரு மரணம் வருவது எனக்குப் பெருமை தான்.’.

இப்தா கலங்கிய விழிகளோடும், அழுகின்ற இதயத்தோடும் அவளை பலிபீடத்தில் கிடத்தி இரண்டு துண்டுகளாக வெட்டி கடவுளுக்கு எரிபலியாகச் செலுத்தி நேர்ச்சையை நிறைவேற்றினார்.

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்…

கி.மு கதை : அபிமெலக்கும், அம்மிக்கல் பெண்ணும்…

இஸ்ரயேல் மக்களை மிதியானியர்களின் அடக்குமுறையிலிருந்து மீட்ட எருபாகால் என்னும் கிதியோனுக்கு, எழுபது மகன்களும் ஏராளமான மனைவியர்களும் இருந்தார்கள். எருபாகாலுக்கும் அவருடைய வேலைக்காரிக்கும் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் அபிமெலக்கு. அவன் தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பின் சகோதரர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தான்.

அவன் தன்னுடைய தாயின் சகோதரர்களிடம் போய்,
‘ பாருங்கள்… எருபாகாலின் எழுபது மகன்களுக்கே எங்கும் செல்வாக்கு. அவர்கள் தான் இனிமேல் இஸ்ரயேலர்களை ஆளப் போகிறார்களாம். அதை நாம் அனுமதிக்கக் கூடாது. எழுபதுபேர் ஆட்சியமைக்கவேண்டுமா ? உங்களின் இரத்த பந்தமான நான் ஆட்சி அமைக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்’ என்றான்

‘யார் ஆட்சியமைத்தால் எங்களுக்கு என்ன ?’ தாயின் சகோதரர்கள் கேட்டார்கள்.

‘அவர்களுடைய ஆட்சியில் உங்களுக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா ?’

‘நீ ஆட்சியமைத்தால் எங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுத் தருவாயா ?’

‘கண்டிப்பாக. நான் ஆட்சியமைத்தால் அது உங்கள் ஆட்சியாகத் தான் இருக்கும். உங்கள் சார்பாக நான் அரசனாக இருப்பேன். ஆனால் நீங்கள் சொல்வதையெல்லாம் அப்படியே நிறைவேற்றுவேன். நிறைவேற்றப்படாதது என உங்கள் தேவைகள் ஒன்று கூட இருக்காது’ அபிமெலக்கு வாக்குறுதி கொடுத்தான்.

அபிமெலெக்கின் ஆசைவார்த்தைகளில் மயங்கிய அவர்கள் போய் நகரெங்கும் அபிமெலக்குக்கு ஆதரவாக மக்களைத் திரட்டினார்கள். அவர்கள் நகரின் மையத்தில் நின்று கொண்டு,

‘அபிமெலக்கு நல்ல திறமையானவன். அவன் அரசனானால் நன்றாக இருக்கும்’

‘எருபாகாலின் திறமை அவருடைய பிள்ளைகளுக்கு இல்லை. ஆனால் அபிமெலெக்கு திறமையானவன்’

‘அபிமெலெக்கு நிறைய வாக்குறுதிகள் தந்திருக்கிறான்’

என்றெல்லாம் பேசி, அபிமெலக்கு தான் அரசராகும் திறமை வாய்ந்தவன், ஒரு நல்ல தலைவன் என்னும் எண்ணத்தை நாட்டு மக்களிடையே பரப்பினார்கள்.

ஒருபுறம் அபிமெலெக்கின் ஆதரவாளர்கள் நகரில் அபிமெலெக்கைப் பற்றிப் புகழ் பரப்ப, மறுபுறம் அபிமெலக்கு தன்னுடன் முரடர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு நேராக எருபாகலின் மகன்கள் இருக்கும் இடத்துக்கு வந்து அவர்கள் எழுபதுபேரில் இளையவனான யோத்தாமைத் தவிர அனைவரையும் சிறைபிடித்தான். யோத்தாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடி பாறை இடுக்கு ஒன்றில் ஒளிந்திருந்தான்.

அபிமெலக்கு சிறைபிடித்த அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டிச் சேர்த்தான். மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க, அபிமெலெக்கு தான் சிறைபிடித்திருந்த அத்தனை பேரையும் ஒவ்வொருவராய் ஒரே கல்லின் மீது வைத்து வெட்டிக் கொன்றான். அவர்களின் இரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது. மக்கள் அபிமெலெக்குவிற்குப் பயந்து அமைதிகாத்தார்கள். ஒளிந்திருந்து இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த யோத்தாம் உள்ளுக்குள் கதறி அழுதான்.
தன்னுடைய சகோதரர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டும் தன்னால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என புலம்பினான்.

இந்தப் படுகொலை நிகழ்ச்சிக்குப் பின் மக்கள் யாரும் அபிமெலெக்கை எதிர்க்கவில்லை. அவர்கள் அனைவரும் அபிமெலக்கிற்கு அஞ்சி அவனையே அரசனாக ஏற்றுக் கொண்டனர்.

அபிமெலக்கும் அவனுடைய முரட்டுப் படையினரும் அந்த இடத்தை விட்டுப் போனதும் யோத்தாம் பாறையிடுக்கிலிருந்து வெளியே வந்து பாறையின் உச்சியில் ஏறி நின்றான்.

‘மக்களே… நீங்கள் ஏன் இத்தனை கோழைகளாகிப் போனீர்கள் ? நீங்கள் அரசனாக்கி இருப்பது யாரைத் தெரியுமா ? தன் சகோதரர்கள் அனைவரையும் ஈவு இரக்கமில்லாமல் வெட்டிக் கொன்ற ஒரு மனிதனை !… நான் சொல்வதைக் கேளுங்கள்’ யோத்தாம் உரத்த குரலில் சொன்னான்.

மக்கள் அனைவரும் அவன் சொல்வதைக் கேட்க பாறை அடியில் கூட்டமாகக் கூடினார்கள். யோத்தாம் தொடர்ந்தான். நான் ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்.

மரங்கள் எல்லாம் ஒன்று கூடி தங்களுக்கு அரசனாக ஒரு மரம் வேண்டும் என்று தேடத் துவங்கின. அவை முதலில் ஒலிவ மரத்திடம் போய் ,’ நீ தான் எங்களுக்கு அரசனாக வேண்டும். மரங்களின் அரசன் ஒலிவ மரம் என்று நாளை எல்லோரும் சொல்ல வேண்டும்’ என்று கேட்டன.
ஒலிவமரமோ, ‘ அதெல்லாம் என்னால் முடியாது. என் பணி எண்ணை தயாரிப்பில் உதவுவது. என் எண்ணையால் எல்லோரும் பயனடைகிறார்கள். எனவே நான் என்னுடைய பணியை விட்டு விட்டு உங்களுக்கு அரசனாக முடியாது’ என்றது.

பின் மரங்கள் எல்லாம் அத்தி மரத்திடம் வந்தன.’ அத்தி மரமே அத்தி மரமே… நீ தான் மரங்களில் சிறப்பானவன். நீ எங்களின் அரசனாக சம்மதிக்கிறாயா ? ‘ என்று கேட்டன. அத்திமரமோ,’ எனக்கு பழங்களை விளைவிக்கும் வேலை இருக்கிறது. என்னால் உங்களுக்கு அரசனாக முடியாது. மன்னித்துவிடு’ என்று சொல்லி விண்ணப்பத்தை நிராகரித்தது.

மரங்கள் சுற்றுமுற்றும் பார்த்தன. அழகாய் கொத்துக் கொத்தாய்ப் பழங்களோடு திராட்சைக் கொடி ஒன்று அசைந்து கொண்டிருந்தது. மரங்கள் திராட்சைக் கொடியிடம் சென்றன,’ திராட்சைக் கொடியே… நீ தான் எங்களுக்கு அரசனாகத் தகுதியுடையவன் என்று நினைக்கிறேன். நீயே எங்களுக்கு அரசனாக இருந்து எங்களை வழிநடத்து’ என்றன.
திராட்சைக் கொடியோ,’ அடடா… மனிதர்களையும், தெய்வங்களையும் மகிழ்விக்கும் திராட்சை இரசத்தை நான் தராமல் வேறு யார் தரமுடியும். எனக்கு அந்த வேலையே போதும். அதை விட்டு விட்டு உங்களுக்கு அரசனாக உல்லாசமாய் உலவ என்னால் முடியாது’ என்றது.

இப்படியே மரங்கள் எல்லா இடத்திலும் தங்களுக்கு அரசனைத் தேடித் தேடி அலுத்துப் போய் கடைசியில் முட்செடியிடம் வந்தன.
‘நீ எங்களுக்கு அரசனாகிறாயா ?’ என்று மரங்கள் கேட்கும் முன்னரே முட்செடி.
‘வாருங்கள். நான் தான் உங்களுக்கு அரசன். என்னை விடத் தகுதியானவன் ஒருவனை நீங்கள் பார்க்கவே முடியாது. எனவே நீங்கள் என்னை அரசனாக்க வேண்டும். என்னை நீங்கள் அரசனாக்காவிடில் உங்களைக் குத்துவேன், எரிந்து உங்களையும் எரிப்பேன்’ என்று மிரட்டியது. மரங்கள் முட்செடியை தங்கள் அரசனாக்கின.

யோத்தாம் கதை சொல்லி முடித்தான். மக்கள் புரியாமல் விழித்தார்கள்.

‘புரியவில்லையா ? நீங்கள் என் தந்தை உட்பட பலரிடம் அரசராகும் படி கேட்டீர்கள். அவர்களோ கடவுளே அரசர் என்று சொல்லி தங்கள் கடமைகளைச் செய்யப் போய் விட்டார்கள். இப்போது நீங்கள் அபிமெலக்கு என்னும் முட்புதரை அரசனாக்கி இருக்கிறீர்கள். இது அழிவுக்கான ஆரம்பம்’ என்றான்.

மக்கள் பேசாமல் இருந்தார்கள்.

‘ஏன் பேசாமல் இருக்கிறீர்கள் ? உங்களுக்காக மிதியானியரிடம் தன்னுடைய உயிரையே பணயம் வைத்துப் போரிட்ட என் தந்தைக்கு நீங்கள் காட்டிய நன்றி மிகப் பெரிது. அவருடைய மகன்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டபோது அதை வெறுமனே வேடிக்கை பார்த்து நீங்கள் என் தந்தைக்கு நன்றிக்கடன் செலுத்தி விட்டீர்கள்.’ யோத்தாம் கோபத்துடன் சத்தமாகச் சொல்லிவிட்டு மீண்டும் தலைமறைவானான்.

மக்கள் வருந்திய மனதோடு சென்றார்கள். அபிமெலக்கு அரசனாக ஆட்சி செய்யத் துவங்கினான். மூன்று வருடங்களுக்குப் பிறகு அபிமெலக்கின் ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்தார்கள். மக்களில் பலர் வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறினார்கள். நாட்டில் அமைதியும், ஒழுக்கமும் சீர்கேடானது.

அப்போது கலால் என்பவன் அந்த ஊர் மக்களின் நம்பிக்கைக்குரியவனாக விஸ்வரூபம் எடுக்கத் துவங்கினான்.
அவன் மக்களை நோக்கி,’ அபிமெலக்கு என்பவன் யார் ? ஏன் அவனைக் கண்டு பயப்படுகிறீர்கள் ? எனக்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அபிமெலக்கை அழிப்பேன்..’  என்று மக்களுக்கு தைரியம் ஊட்டிக்கொண்டே இருந்தான்.

நகரின் அதிகாரியாய் இருந்த செபூலின் காதுகளுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவன் அரசன் அபிமெலக்குவிற்குத் தகவல் அனுப்பினான்.

தனக்கு எதிராய் ஒரு அலை ஆரம்பமாவதை அறிந்த அபிமெலக்கு, எப்படியாவது எதிரிகளை அழிக்க வேண்டும்  இல்லையேல் தன் ஆட்சி நிலைக்காது என்று முடிவெடுத்தான். உடனே அவன் தன் வீரர்களோடு சென்று இரவில் இருளோடு இருளாக விளை நிலங்களில் பதுங்கி கலால் இருக்கும் நகரை நோக்கி முன்னேறினான்.

செபூல் நகரைக் காவல் செய்து கொண்டிருக்க, கலால் தன்னுடைய ஆதரவாளர்களோடு நள்ளிரவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது மலைச்சரிவுகளில் அபிமெலெக்கு படைவீரர்களோடு வந்துகொண்டிருந்தான். படைவீரர்கள் மலைச்சரிவுகளில் இறங்கியபோது மரங்கள் அசைந்தன.  மலைச் சரிவுகளில் இருந்த விளைநிலங்களிலிருந்து ஆட்கள் இறங்கி வருவது கலாலுக்குத் தெரிந்ததும் பதட்டமானான்.

‘செபூல்… செபூல்… அதோ மலைகளிலிருந்து ஆட்கள் இறங்கி வருகிறார்கள். ‘ கலால் பதட்டமாய் சொன்னான்.

‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை கலால். அது மலையின் நிழல். உனக்கு மனிதர்கள் போல தெரிகிறது’ செபூல் உள்ளுக்குள் வஞ்சமாய் சிரித்தான்.

‘இல்லை செபூல், நீ நகர காவலன் தானே.. நிழலுக்கும், நிஜத்துக்குமான வித்தியாசம் கூடவா உனக்குத் தெரியவில்லை ? இது மனிதர்கள் தான்’ என்று மீண்டும் சொன்னான். செபூல் மறுத்தான். ஆனால் கலாலோ மீண்டும் மீண்டும் தன் சந்தேகத்தைக் செபூலிடம் சொல்லிக் கொண்டே இருக்க,

செபூல் கலாலை நோக்கித் திரும்பினான், ‘ ஆம்.. மனிதர்கள் தான்.. எனக்குத் தெரியும்’ செபூலின் முகத்தில் ஒரு வஞ்சகப் புன்னகை விரிந்தது.

‘உனக்குத் தெரியுமா ? அப்படியென்றால்…..’ கலாலின் முகத்தில் திகில் படர்ந்தது.

‘எனக்குத் தெரியும். நான் தான் வரச் சொன்னேன். அது அபிமெலக்கின் படை ! உன்னைத் தேடித் தான் அவர்கள் வருகிறார்கள்’ செபூல் சொன்னான்

‘என்னைத் தேடியா ? ஏ..ஏன் ?’ கலாலின் வார்த்தைகள் நடுங்கின.

‘நீதான் வாய்ப்புக் கிடைத்தால் அபிமெலக்கை கொன்று விடுவேன் என்றாயே… இது தான் அந்த வாய்ப்பு.. எங்கே அவனைக் கொல் பார்க்கலாம் ?’ செபூல் நகைத்தான்.

‘ஐயோ… உண்மையாகவா சொல்கிறீர்கள் ?’ கலால் பதறி எழுந்தான்.

‘ஆம்.. உன்னையும், உன் ஆதரவாளர்களால் நிறைந்திருக்கும் இந்த நகரையும், அழித்து ஒழிப்பதற்காகத் தான் அபிமெலக்கு படையுடன் வருகிறார்’ செபூல் சிரித்தான்.

கலால் சற்றும் தாமதிக்கவில்லை. சட்டென்று எழுந்து ஓட ஆரம்பித்தான். செபூல் சுதாரிக்கும் முன் கால்போன போக்கில் பின்னங்கால் பிடறியில் பட வேகமாய் ஓடி மறைந்தான். அப்போது அபிமெலக்கு நகருக்குள் நுழைந்தான். அங்கே கண்களுக்குத் தென்பட்ட அனைவரையும் கொன்று குவித்தான். அத்துடன் நின்றுவிடாமல் நகரிலேயே தங்கி, மறுநாள் காலையில் விளைநிலங்களுக்கு மக்கள் வந்தபோது சுற்றி வளைத்து அவர்களையும் கொன்றான்.

பயந்து போன மக்கள் கூட்டம் ஏல்பெரித்துக் கோயிலுக்குள் சென்று ஒளிந்துகொண்டது. கோயிலுக்குள் நுழைந்துவிட்டால் மன்னன் தங்களைக் கொல்லமாட்டான் என்று மக்கள் நினைத்தார்கள். அபிமெலெக்கு தான் எதற்கும் அஞ்சாதவன் ஆயிற்றே ! அவன் தன் படையினரைக் கொண்டு கோயிலை முழுவதுமாய் மரக் கிளைகளினால் மூடி மொத்தமாய் எரித்தான். கோயிலோடு சேர்ந்து மக்கள் மொத்தமும் அழிந்தார்கள்.

அன்று முழுவதும் அபிமெலெக்கின் வீரர்களுக்கு வேட்டை நாள். மனித வேட்டை நாள். அவர்கள் நகரின் மூலை முடுக்கு எங்கும் சென்று உயிரோடிருந்த அனைவரையும்  கொன்று குவித்தனர். பின் நகர் முழுவதும் உப்பைத் தூவினர்.

அங்கிருந்து அருகிலிருந்த தெபேசு நகருக்குச் சென்றான் அபிமெலக்கு. தெபேசு நகர மக்கள் அனைவரும் பயந்து போய் நகரின் கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். பலர் கோட்டையின் உச்சிக்குச் சென்றனர்.

‘வாருங்கள். கோயிலுக்குத் தீயிட்டது போல இந்தக் கோட்டைக்கும் தீயிடுவோம். மக்கள் அனைவரும் வெந்து மடியட்டும்’ அபிமெலக்கு கர்ஜித்தான்.

வீரர்கள் பின் தொடர அவன் கோட்டையை நோக்கி முன்னேறினான். அங்கே கோட்டையின் மேல் ஒரு பெண் ஒரு அம்மிக் கல்லை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தாள். அபிமெலக்கு தனக்கு நேராக கீழே வந்தால் அவனைக் கொல்லாமல் விடப்போவதில்லை என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டாள். எப்படியாவது அபிமெலெக்கு தான் இருக்கும் இடத்துக்குக் கீழே வரட்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.

அபிமெலக்கு கோட்டையை நெருங்கினான். மேலே பெண் காத்திருந்தாள். அவன் நேராக அந்தப் பெண் அமர்ந்திருந்த இடத்துக்குக் கீழாக வந்தான். அவள் உள்ளுக்குள் புன்னகைத்தாள். அவன் நெருங்கி வரக் காத்திருந்தாள்.

இதோ….

இதோ….

அபிமெலெக்கு கோட்டைக்கு மிக அருகே வந்தான். அவள் சற்றும் தாமதிக்கவில்லை, குறி பார்த்து அம்மிக் கல்லை மிகச் சரியாக அபிமெலக்கின் தலையில் போட்டாள்.

அபிமெலக்கின் தலை பிளந்தது ! கீழே விழுந்த அவன் கோட்டைக்கு மேலே பார்த்த போது வெற்றிச் சிரிப்புடன் தெரிந்தாள் அந்தப் பெண்.

‘அவமானம் ஒரு பெண் என்னைக் கொல்கிறாளா ? ஒரு பெண்ணை விட நான் வீரமில்லாதவன் ஆகிவிட்டேனா ? ‘ அபிமெலெக்கு உள்ளுக்குள் அவமானமாய் உணர்ந்தான். உடனே அவன் தன்னுடைய படைக்கலன் தாங்கும் பணியாளனை அழைத்தான்,

‘வா… என் அருகே விரைந்து வா… உன் வாளை எடுத்து என்னைக் குத்திக் கொல்’

‘தலைவரே… உம்மைக் கொல்வதா ? அது என்னால் முடியாது. முடியவே முடியாது’ பணியாளன் மறுத்தான்.

‘இல்லை… இது அரச ஆணை. அபிமெலக்கு ஒரு பெண்ணால் இறந்துபோனான் என்று நாளை உலகம் பேசக் கூடாது. என்னைக் கொன்றுவிடு…. ‘ அபிமெலக்கு சொன்னான். பணியாளனின் மறுமொழி பேசவில்லை.

அவன் அபிமெலெக்கை நெருங்கினான். அவனுடைய கைகளிலிருந்த வாளை தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டான். வாளை அபிமெலெக்குவிற்கு நேராக உயர்த்திப் பிடித்து, அவனுடைய நெஞ்சில் வேகமாக இறக்கினான்.

வாள் அபிமெலெக்கை துளைத்து வெளியேற, அவன் இறந்தான்.

தன்னுடைய எழுபது சகோதரர்களைக் கொன்று, நகரின் ஆயிரக்கணக்கான மக்களையும் படுகொலை செய்த கொடுங்கோல் மன்னன் அபிமெலக்கு இறந்ததைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்தனர்.

இதற்கெல்லாம் காரணமான அந்தப் பெண் மட்டும் கவனிக்கப்படவேயில்லை.

தமிழிஷில் வாக்களிக்க…

கி.மு கதை : கிதியோன், The 300 !!!

இஸ்ரயேலர்கள் சிறிதுகாலம் தங்களை அடிமை நிலையிலிருந்து மீட்டு வந்த கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அவர்களின் குணம் மாறத் துவங்கியது. அவர்கள் வேற்று தெய்வங்களை வழிபடவும், இஸ்ரயேலர்களின் கடவுளை நிராகரிக்கவும் துவங்கினர். தன்னை மதிக்காத இஸ்ரயேலர்களைக் கடவுளும் கைவிட்டார். அவர்கள் மிதியானியரால் தோற்கடிக்கப்பட்டு அவர்களுக்கு அடிமையானார்கள்.

இஸ்ரயேல் மக்கள் மிதியானியரின் கொடுமைக்குப் பயந்து மலைக்குகைகளிலும், பாறை இடுக்குகளிலும் ஒளிந்து வாழ்ந்தார்கள். மிதியானியரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவர்கள் இஸ்ரயேலரின் கால்நடைகள் , விளைபொருட்களைக் கூட விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டனர், அல்லது அழித்தனர். ஏழு ஆண்டுகள் மிதியோனியரின் அடக்குமுறைக்குள் கொடுமை அனுபவித்த இஸ்ரயேலர்கள் மனம் திருந்தி கடவுளை நாடினார்கள். கடவுள் அவர்களுடைய வேண்டுதல் ஒலிகளைக் கேட்டார்.

கடவுள் அவர்களிடம் ஒரு இறைவாக்கினரை அனுப்பினார்.

‘நீங்கள் கடவுளின் கட்டளைகளை மீறினீர்கள் அதனால் தான் உங்களுக்கு இந்தச் சோதனைகள்’ இறைவாக்கினர் சொன்னார்.

‘ஆம் உண்மை தான், நாங்கள் அவரை விட்டு விலகி வெகுதூரம் போய்விட்டோ ம். வேற்று தெய்வங்களுக்கு பலிபீடங்கள் அமைத்து பலி செலுத்தினோம். இதெல்லாம் தீமை என்பதை கடவுள் எங்களுக்குச் சொல்லியிருந்தார். நாங்கள் தான் கேட்கவில்லை. எங்களுக்கு கடவுளிடமிருந்து மன்னிப்புக் கிடைக்காதா ? நாங்கள் மீட்படைய வழியே இல்லையா ?’ மக்கள் கேட்டனர்.

‘கடவுள் நினைத்தால் உங்கள் துயரங்களை நீக்க முடியும். அவரை மட்டும் நம்பி, அவரிடம் மன்றாடுங்கள்’ இறைவாக்கினர் சொன்னார்.

மக்கள் அனைவரும் ஒரே மனதாகக் கடவுளை வேண்டினார்கள். கடவுள் மனமிரங்கினார். யோவாசின் மகனான கிதியோன் மூலம் மக்களை மீட்க கடவுள் தீர்மானித்தார்.  தன்னுடைய தூதர் ஒருவரை கிதியோனிடம் அனுப்பினார். கடவுளின் தூதர் கருவாலி மரத்தின் அருகே வந்து அமர்ந்தார். அங்கே கிதியோன் மிதியானியர்களுக்குப் பயந்து தன்னுடைய தானியங்களை ஒளித்து வைத்துக் கொண்டிருந்தார். கடவுளின் தூதர் அவருக்கு முன்பாக வந்து நின்றார்.

‘வீரனே…. கடவுள் உன்னோடு இருக்கிறார்’ தூதர் கிதியோனை வாழ்த்தினார்

‘இல்லை… கடவுள் எங்களோடு இல்லை. கடவுள் எங்களோடு இருந்திருந்தால் ஏன் எங்களுக்கு இத்தனை துன்பம்’ கிதியோன் விரக்தியாய்ச் சொன்னார்.

‘நீ ஏன் விரக்தியாய் பேசுகிறாய் ? கடவுள் உன்னுடைய மூதாதையர்களுக்குச் செய்த உதவிகளை நீ மறந்தாயா ?’

‘கதைகள் நினைவில் இருக்கின்றன. கடவுளைத் தான் காணோம்’

‘கதைகளா ? எகிப்தியர்களின் அடிமைகளாக நானூறு ஆண்டுகள் கிடந்த உன்னுடைய மூதாதையர்களைக் கடவுள் பல்வேறு அதிசய, அற்புதச் செயல்களின் மூலம் தான் மீட்டார் தெரியுமா ? செங்கடலையே இரண்டாகப் பிளந்து வழியமைத்தார் தெரியுமா ? இவைகளெல்லாம் கதைகளல்ல, உண்மைச் சம்பவங்கள் ‘ தூதர் சொன்னார்.

‘அப்படியானால் இப்போது எங்கே அந்த அதிசயச் செயல்கள் ? கடவுள் எங்களை மீண்டும் அடிமைகளாய் விட்டு விட்டாரே. எகிப்தியரிடமிருந்து மீட்டு மிதியானியர்களிடம் தானே அனுப்பி வைத்திருக்கிறார். எங்களை மீட்கவேண்டும் என்று தோன்றவில்லையா அவருக்கு ? எங்கள் கதறல் ஒலிகள் அவர் காதுகளை எட்டவில்லையா ? ‘ கிதியோன் கேட்டார்.

‘அதற்காகத் தானே உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்’ தூதர் சொன்னார்.

‘என்னையா ?’

‘ஆம்… உன்னைத் தான், உன் மூலமாகத் தான் கடவுள் இஸ்ரயேலர்களை மிதியானியரிடமிருந்து மீட்கப் போகிறார்.’

‘என்ன விளையாடுகிறீர்களா ? நான் என் குடும்பத்திலேயே மிகவும் சிறியவன். என்மூலமாக மீட்பா ? நல்ல வேடிக்கை தான். நான் இதற்குத் தகுதியானவன் அல்ல’

‘இல்லை நீ தான்.. நீ ஒருவன் இதற்குத் தகுதியானவன். நீ தனியாகவே சென்று மிதியானியரைத் தோற்கடிப்பாய். கடவுள் உன்னோடு இருப்பார்’ தூதர் அழுத்தமாய்ச் சொன்னார்.

‘தூதரே, நீங்கள் சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லை. நான் மிதியானியரோடு போரிடவேண்டும் என்கிறீர்களா ?’ கிதியோன் கேட்டார்.

‘ஆம்… உன் தலைமையில் ஒரு படையைத் திரட்டி நீ மிதியானியருக்கு எதிராகப் போரிடவேண்டும். கடவுள் உன்னை வழி நடத்துவார். ‘ தூதர் சொன்னார்.

‘தூதரே…ஒரு நிமிடம் நில்லுங்கள். நான் உடனே வருகிறேன். எங்கும் போய்விடாதீர்கள்’ கிதியோன் தூதரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடினார். வீட்டிற்குச் சென்று சில புளியாத அப்பங்களையும், கொஞ்சம் இறைச்சியையும் எடுத்துக் கொண்டு வந்தார்.

‘நீர் சொல்வதெல்லாம் உண்மையாய் இருந்தால், நீர் உண்மையிலேயே கடவுளின் தூதனாக இருந்தால், எனக்கு ஒரு அடையாளத்தைச் செய்து காட்டுங்கள்’ சொல்லிக் கொண்டே கிதியோன் அப்பங்களையும் இறைச்சியையும் தூதரின் முன்னால் வைத்தார்.

‘ நீ கொண்டு வந்திருக்கும் இந்த அப்பங்களையும், இறைச்சியையும் வைத்தே நான் உனக்கு ஒரு இறை அடையாளத்தைக் காட்டுகிறேன். கொஞ்சம் அப்பத்தையும், இறைச்சியையும் எடுத்து அந்தப் பாறை மீது வை.’ தூதர் சொன்னார். கிதியோன் அவ்வாறே செய்தார்.
தூதர் அந்த அப்பங்களையும், இறைச்சியையும் தன்னிடமிருந்த கோலின் நுனியால் தொட்டார். உடனே நெருப்பு சட்டென்று தோன்றி அந்தப் பொருட்களை எரித்தது.

கிதியோன் பரவசமானார். கடவுள் நெருப்பை அனுப்பிப் பலி பொருட்களை எடுத்துக் கொண்டதை வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருடைய மனதுக்குள் நம்பிக்கை துளிர்விட்டது.

‘இப்போதாவது நம்பு…’ சொல்லிக் கொண்டே சட்டென்று மறைந்தார் ஆண்டவரின் தூதர். கிதியோன் பயந்து போனார்.
‘ஐயோ, நான் எப்படிச் சொல்வேன். கடவுளின் தூதரை நான் நேருக்கு நேராய் சந்தித்தேனே…’ என்று பரவசமடைந்தார்.

அன்று இரவே கிதியோன் அன்னிய தெய்வங்களுக்காய் எழுப்பப்பட்டிருந்த பலிபீடங்களை எல்லாம் தகர்த்து எறிந்தார். இஸ்ரயேலரின் கடவுளுக்காய் அவர் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டியெழுப்பி, அங்கே ஒரு கொழுத்த மாட்டை பலிசெலுத்தினார்.

மறுநாள் மக்கள் தங்கள் தெய்வங்களின் பலிபீடங்கள் தகர்ந்து கிடப்பதைக் கண்டு ஆவேசமடைந்தனர்.

‘இந்தக் கொடுமையைச் செய்த பாவி யார் ? அவனைக் கொல்லவேண்டும்’ என்று மக்கள் கோபமாகச் சுற்றித் திரிந்தனர்.

‘அது கிதியோன் தான்… இரவில் அவன் தன்னுடைய ஆட்களுடன் வந்து பலிபீடம் கட்டுவதைக் கண்டோ ம்…’ அந்தப் பக்கமாய் வசித்து வந்த மக்கள் சொன்னார்கள்.

‘அதெப்படி கிதியோன் எங்கள் கடவுளின் பலிபீடங்களை இடிக்கலாம். அவனை அழிக்காமல் விடப்போவதில்லை’ ஆவேசமடைந்த மக்கள் கிதியோனின் வீட்டை முற்றுகையிட்டார்கள்.

‘கிதியோனே… வெளியே வா… உனக்கு என்ன தைரியம் இருந்தால் எங்கள் கடவுளர்களை அவமானப் படுத்துவாய் ?’ மக்கள் கூச்சலிட்டனர்.

கிதியோனின் தந்தை வெளியே வந்தார். ‘கிதியோன் இங்கே இல்லை… என்ன விஷயம் ? ஏன் கூச்சலிடுகிறீர்கள் ?’

‘ஒன்றும் தெரியாததுபோல் நடிக்கிறாயா ? எங்கள் கடவுளர்களின் பலி பீடங்களை உன் மகன் இடித்துத் தகர்த்திருக்கிறான். அவனைக் கொல்லவேண்டும்’

‘யார் உங்கள் கடவுள் ? ‘

‘பாகால் !… பாகாலின் பலிபீடத்தையும், அதன் அருகே நின்றிருந்த அசேராக் கம்பத்தையும் உன் மகன் அழித்திருக்கிறான்’ மக்கள் கத்தினார்கள்.

‘பாகால் !! அவன் என்ன பெரிய கடவுளா ? ‘ கிதியோனின் தந்தையும் கோபமானார்.

‘ஆம்.. அவர் மிகவும் சக்திவாய்ந்தவர்’ மக்கள் சொன்னார்கள்.

‘அந்த பாகால் பெரிய சக்திவாய்ந்தவனாக இருந்தால் அவன் என் மகனைக் கொல்லட்டும். நீங்கள் அவனைக் கொல்கிறீர்கள் என்றால் உங்கள் கடவுள் கையாலாகாதவர் என்று தான் அர்த்தம். போங்கள்… உங்கள் கடவுளிடம் சொல்லி என் மகனைக் கொல்லச் சொல்லுங்கள். உங்கள் கடவுளுக்கு வீரம் இருந்தால் அவன் என் மகனைக் கொல்லட்டும்’ கிதியோனின் தந்தையும் பதிலுக்குக் கத்தினார்.

‘பாகாலின் கையால் அவன் சாகப் போவது உறுதி. அவனைப் பாகால் அழிப்பான் என்பதைக் குறிக்கும் விதமாக இனிமேல் அவனை நாங்கள் எருபாகால் என்று அழைப்போம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் கலைந்து போனார்கள்.

கிதியோன் மக்களின் கையிலிருந்து தப்பினான். ஆனாலும் இன்னும் அவனுக்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ‘ இது ஒருவேளை கடவுளின் அழைத்தல் இல்லையென்றால் என்ன செய்வது ? கடவுள் தான் தூதரை அனுப்பினாரா ? இல்லை ஏதேனும் கண்கட்டு வித்தையா ?’
கிதியோனின் மனம் பல்வேறு கேள்விகளால் நிறைந்தது.

அவன் கடவுளை நோக்கி,’ கடவுளே… நீர் தான் என்னை அழைத்தீர் என்பதற்கு எனக்கு இன்னுமொரு அடையாளத்தைக் காட்டும். நான் என்னுடைய கம்பளி ஆடையை இன்று இரவு வெட்டவெளியில் வைப்பேன். என்னை அழைத்தது நீர் தான் என்றால் என்னுடைய ஆடையில் மட்டும் காலையில் பனி நிறைந்திருக்கட்டும். மற்ற இடங்கள் எல்லாம் காய்ந்து கிடக்கட்டும்’ என்றார். சொல்லிவிட்டு அன்று இரவே தன்னுடைய கம்பளியைக் கழற்றி வெட்டவெளியில் வைத்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அவருடைய கம்பளியில் மட்டும் பனி நிறைந்திருந்தது. தரை உலர்ந்து கிடந்தது.

‘ஒருவேளை தரையில் விழுந்த பனி உலர்ந்து போயிருக்குமோ ? கம்பளியானதால் மட்டும் உலராமல் ஈரமாய் இருக்கிறதோ ? இது இயற்கையாகவே நடக்கும் சாதாரண நிகழ்வோ ?’ கிதியோனின் மனம் மீண்டும் சந்தேகப் பட்டது.

அவன் மீண்டும் கடவுளை நோக்கி, ‘கடவுளே இன்னும் எனக்கு ஒரே ஒரு அடையாளத்தை மட்டும் செய்து காட்டும். இன்றைக்கும் நான் என் கம்பளியை இங்கே வைத்து விட்டுப் போவேன். நாளைக் காலையில் நான் வந்து பார்க்கும்போது கம்பளியில் மட்டும் பனி இருக்கக் கூடாது. தரையெங்கும் பனி நிறைந்திருக்க வேண்டும். உம்மில் நம்பிக்கை வைக்கக் கடைசியாக எனக்கு இந்த அடையாளத்தைச் செய்து காட்டும்’ என்றான்.

மறுநாள். அவன் கண்களை அவனாலேயே நம்பமுடியவில்லை. முந்தைய நாள் உலர்ந்து கிடந்த தரை இப்போது பனியில் குளித்து தொப்பலாய்க் கிடந்தது. புற்களின் தலைகளிலெல்லாம் பனிக் கூடுகள். ஆனால் கிதியோனின் கம்பளி மட்டும் உலர்ந்து கிடந்தது.

‘கடவுளே… என்னை அழைத்தது நீரே ! உம்மை நம்புகிறேன்’ கிதியோன் மண்டியிட்டு கடவுளிடம் பேசினான்.

மிதியானியருடம் போரிட கிதியோன் தயாரானான். அவன் மக்களை பெருமளவில் திரட்டி கடல் அலையென மிதியானியரை நோக்கிப் படையெடுத்தான். கடவுள் அவனை அழைத்தார்.
‘கிதியோனே… நீ இத்தனை மக்களை அழைத்துக் கொண்டு போகவேண்டாம். வெற்றி பெற்றபின் அவர்கள் கர்வம் கொள்வார்கள். மக்கள் சக்தியே வென்றது என்று அவர்கள் ஆணவம் அடைவார்கள். அவர்களில் சிலர் மட்டும் போதும் உனக்கு. அப்போதுதான் என்னுடைய வலிமையை மக்கள் உணர்வார்கள்’ கடவுள் சொன்னார்.

கிதியோன் கடவுளின் வார்த்தையின் படி மக்களை நோக்கி,’ உங்களில் யாரையும் நான் கட்டாயப் படுத்தவில்லை. போரில் ஆர்வம் இல்லாதவர்களும், பயப்படுபவர்களும் உடனே திரும்பிப் போய்விடுங்கள்’ என்றான்.

மக்களில் முக்கால் வாசி  பேர் உடனே திரும்பி நடந்தார்கள். மிச்சமிருந்த கூட்டம் சுமார் பத்தாயிரம் இருந்தது.

கடவுள் மீண்டும் கிதியோனிடம், ‘இதுவும் மிக அதிகமான கூட்டம் தான். இவர்களை அதோ அந்த நீர் நிலைக்கு அழைத்துப் போய் தண்ணீர் குடிக்கச் சொல். யாரெல்லாம் தண்ணீரை கைகளில் அள்ளிக் குடிக்கிறார்களோ அவர்களை தனியே நிற்க வை. யாரெல்லாம் மண்டியிட்டுக் குடிக்கிறார்களோ அவர்களை திரும்ப அனுப்பிவிடு’ என்றார்.

கிதியோன் மக்களை நோக்கி,’ நீங்கள் எல்லோரும் அந்த நீர் நிலைக்குச் சென்று தண்ணீர் குடியுங்கள்’ என்றார்.

அவர்களில் பெரும்பாலானோர்கள் மண்டியிட்டுத் தண்ணீர் குடித்தார்கள். வெறும் முந்நூறு பேர் மட்டுமே கைகளில் நீரை அள்ளிக் குடித்தார்கள்.
கிதியோன் கலங்கினார். ‘கடவுளே… மிதியானியரை அழிக்க வெறும் முந்நூறு பேர் போதுமா ?’.

கடவுள் அவரிடம் ‘போரிடப் போவது முந்நூறு பேர் என்றால் தோல்வி நிச்சயம் ! ஆனால் போரிடப் போவது முந்நூறு பேர் அல்லவே ! நான் ஒருவன் மட்டுமல்லவா ? அதனால் வெற்றி நிச்சயம் தான். கவலையை விடு’ கடவுள் பதிலளித்தார்.

அன்று இரவு கிதியோனின் நண்பன் ஒரு கனவு கண்டான். கனவில் ஒரு வட்டமான கோதுமை அப்பம் சுழன்று சென்று மிதியானியரின் கூடாரத்தை இடித்துத் தகர்த்தது. நண்பன் கிதியோனிடம் ஓடோ டி வந்தான்.

‘நண்பா… நீ வெற்றி பெறும் வேளை வந்துவிட்டது ! உன்னுடைய வாள் தான் அந்த அப்பம். நீ அவர்களை துரத்தும் நேரம் வ்ந்துவிட்டது என்பதைத் தான் கடவுள் என் கனவு வாயிலாகச் சொல்லியிருக்கிறார்’ நண்பன் சொன்னான்.

‘கடவுள் எனக்கு வாக்களித்திருக்கிறார். நமக்கு நிச்சயம் வெற்றிதான். நாம் போருக்குத் தயாராவோம்’ கிதியோன் சொன்னான்.

கிதியோன் அந்த முந்நூறு பேரையும் மூன்று குழுக்களாகப் பிரித்தார். அவர்களில் ஒவ்வொருவர் கைகளிலும் ஒவ்வொரு நெருப்புப் பந்தமும், ஒரு காலிப் பானையும், ஒரு எக்காளமும் கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்.

நள்ளிரவில் எல்லோரும் கைகளில் நெருப்புப் பந்தத்தோடும், காலிப் பானைகளோடும் மிதியானியர் கூடாரமடித்திருந்த இடத்தைச் சுற்றி வளைத்தார்கள்.

கிதியோன் திடீரென்று எக்காளத்தை எடுத்து ஊதினார். உடனே மிதியானியர்களைச் சுற்றி நின்ற அத்தனை பேரும் பந்தங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு எக்காளம் ஊதினார்கள். பெரும் சத்தத்தைக் கேட்ட மிதியானியர்கள் திடுக்கிட்டு விழித்தார்கள். அப்போது கிதியோனின் வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த பானையை ஒரே நேரத்தில் உடைத்து பெரும் சத்தம் எழுப்பினார்கள். மிதியானியர்கள் இதென்ன சத்தம் என்று அதிர்ந்து போய் நிமிர்கையில் கிதியோனின் வீரர்கள் எல்லோரும் ஒரே குரலாக

‘ஆண்டவருக்காக…. கிதியோனுக்காக’ என்று சத்தமிட்டார்கள். கிதியோனின் திட்டம் வெற்றியடைந்தது. மிதியானியர்கள் குழப்பத்தில் அங்குமிங்கும் ஓடினார்கள். கடவுள் மிதியானியர்களுக்குள்ளேயே திடீர்க் கலகத்தை உண்டாக்கினார். இரவில் மிதியானியர்கள் தங்களுக்குள்ளே சண்டை போட ஆரம்பித்தார்கள்.

மிதியானியர்கள் தங்களுக்குள்ளேயே வெட்டிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் சிதறி ஓட, கிதியோன் மாபெரும் வெற்றி பெற்றார். கடவுளின் வழிகாட்டுதல் அவரை வெற்றி வீரனாக்கியது. மக்கள் எல்லோடும் அவரிடம் வந்து,’ இனிமேல் நீங்கள் தான் எங்களை ஆளவேண்டும்.. வாருங்கள். எங்கள் அரசராகுங்கள்’ என்று அழைத்தார்கள்.

அவரோ அவர்களிடம்,’ மீண்டும் தவறிழைக்காதீர்கள்.. கடவுள் ஒருவரே அரசர். அவர் சொல்வதை மட்டுமே கடைபிடித்து வாழுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

தமிழிஷில் வாக்களிக்க…

கி.மு :: நெற்றிப் பொட்டில் ஆணி !!!

தெபோராளும், பாராக்கும்

debora

ஏகூர் என்பவர் இஸ்ரயேலர்களின் வழிகாட்டியாக இருந்து வந்தார். அவர் வழிகாட்டியாக இருந்தவரைக்கும் இஸ்ரயேலர்கள் கடவுளின் வழியில் நடந்து வந்தார்கள். ஏகூர் இறந்தார். இஸ்ரயேலர்கள் மீண்டும் கடவுளை நிராகரித்து விட்டு அன்னிய தெய்வங்களை வழிபடவும், சிற்றின்பம், வன்முறை போன்றவற்றில் நாட்டம் கொள்ளவும் ஆரம்பித்தனர். கடவுள் அவர்களை மீண்டும் தண்டித்தார்.

அப்போது கானானியரின் மன்னனாக யாபீன் என்பவர் ஆட்சிசெய்து வந்தார். அவர் பலத்த படையினரோடு வந்து இஸ்ரயேல் மக்களைத் தாக்கி மீண்டும் அவர்களை அடிமை நிலைக்குக் கொண்டு வந்தார். இஸ்ரயேலர்கள் மக்கள் கடவுளை மறந்து சிதறிக் கிடந்ததால் அவர்களால் போரில் வெற்றி பெற இயலவில்லை.

யாபீன் மன்னனின் படைத்தளபதி பெயர் சிசெரா. அவன் மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். அவனுடைய படைபலம் மிகப் பெரிது. அவனிடம் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட இரும்பு ரதங்கள் இருந்தன. எத்தனை பெரிய படையாய் இருந்தாலும் அவனுடைய ரதங்கள் அவற்றை நிர்மூலமாக்கி வந்தன. அவன் கடுமையான சட்டங்கள் பலவற்றைப் போட்டு இஸ்ரயேல் மக்களை கடுமையாகப் பழிவாங்கினார். இஸ்ரயேலர்கள் உழைப்பின் பயன்களை எல்லாம் அரசனுக்கே கொடுக்க வேண்டிவந்தது. அவர்களால் எதையும் சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை. இஸ்ரயேல் குல பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. இஸ்ரயேல் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

நிலமை கட்டுக்குள் அடங்காமல் போவதைக் கண்ட மக்கள் ஒன்றுகூடினார்கள்.

‘நம்முடைய இந்த நிலமைக்குக் காரணம் நம்முடைய பாவங்கள் தான். நம்மில் பலர் பாகாலை வணங்குகிறோம். இனிமேல் நாம் மனம் திரும்பி கடவுளின் வழிக்கு வரவேண்டும். இனிமேல் நமக்கு நம்முடைய தெய்வத்தைத் தவிர வேறு தெய்வங்களே இருக்கக் கூடாது. அப்போது தான் நம்முடைய கஷ்டகாலத்துக்கு ஒரு விடிவு கிடைக்கும்.’ ஒருவர் பேசினார்.

‘ஆம் உண்மை தான். அனைத்துக்கும் காரணம் நம்முடைய கீழ்ப்படியாமை தான். இனிமேல் நம்முடைய கடவுளை மட்டுமே வழிபட வேண்டும். நம்முடைய மூதாதையர்களின் வாழ்க்கையில் கூட இதே போல பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எல்லாமே கடவுளை விட்டு விலகிப்போனபோது நடந்தவை தான்’

‘நாம் கண்டிப்பாக நம்முடைய நம்முடைய பாவ வழிகளை விட்டு விலகியாக வேண்டும்’

‘கடவுளை வழிபடுவது, அவரை நாவால் துதிப்பதும், பலி செலுத்துவதும் மட்டுமல்ல. அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவும் வேண்டும். எனவே இனிமேல் யாரும் கானானியரோடு கலக்கக் கூடாது. சிற்றின்பச் சுழலில் சிக்கவும் கூடாது’

மக்கள் அனைவரும் நீண்டநேரம் விவாதித்தார்கள். கடைசியில் எல்லோரும் ஒரே குரலாக கடவுளை நோக்கி மன்றாட ஆரம்பித்தார்கள். இஸ்ரயேல் மக்கள் மனம் திரும்பி தன்னுடைய வழியில் வந்ததைக் கண்ட கடவுள் மகிழ்ந்தார். அவர்களை மீட்பதென்று முடிவெடுத்தார்.

தெபோராள் இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டியாகத் தெரிந்தெடுக்கப் பட்டாள்.

தெபோராள் மன உறுதியும், சிந்தனைத் தெளிவும், இறை பக்தியும் நிறைந்தவள். அவள் ஒரு பேரீச்சை மரத்தின் அடியில் வசித்துவந்தாள். கடவுளை மனதில் நினைத்தவர்களுக்கு அதை விட மனநிறைவு அளிக்கக் கூடிய வேறு சொத்துக்கள் ஏது ? தெபோராவும் உலக சொத்து சுகங்கள் மீதெல்லாம் அக்கறைப்படாமல் கடவுளையே நினைத்து வாழ்ந்து வந்தாள்.

ஒருநாள் அவர் பாராக் என்னும் இஸ்ரயேல் வீரர் ஒருவரை அழைத்தாள். பாராக் நல்ல பலசாலி. பல போர்களை முன்னின்று நடத்திய அனுபவம் மிக்கவன்.

‘பாராக். சிசெராவின் கொடுமைகளிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டிய நேரம் வந்து விட்டது’ தெபோராள் சொன்னாள்.

‘இதைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.’ பாராக் ஆனந்தமாய்ச் சொன்னான்.

‘இந்த வெற்றி உன் மூலமாய் தான் வரும்’

‘என் மூலமாகவா ? புரியவில்லையே ?’

‘நீதான் படையைத் திரட்டிக் கொண்டு போய் சிசெராவைத் தோற்கடிக்க வேண்டும். கடவுள் உன்னுடன் இருப்பார்.’

‘ஐயோ.. சிசெராவை எதிர்க்க என்னால் முடியாது. அவரை எதிர்க்குமளவுக்கு நம்மிடம் படை வலிமையும் இல்லை’

‘கடவுள் தான் அனைவரையும் படைத்தவர். அவரால் தோற்கடிக்கப் பட முடியாத மனிதர் இல்லை. அவர் நம்மோடு இருக்கிறார். தைரியமாகச் செல்’

‘இல்லை… எனக்குப் பயமாக இருக்கிறது. என்னால் முடியாது’ பாராக் மீண்டும் மறுத்தார்.

‘கடவுள் உன்னோடு வந்தால் கூட பயமா உனக்கு ?’ தெபோராள் கேட்டாள்.

‘கடவுள் வருவது இருக்கட்டும். நீங்கள் என்னோடு வந்தால் நான் நம்பிக்கையுடன் போரிடச் செல்கிறேன். முடியுமா உங்களால்’ பாராக் கேட்டார்.

‘சரி… நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால், நீ கடவுளை முழுவதும் நம்பாததால் செசரா உன் கையால் சாகமாட்டான். அவனுடைய சாவு ஒரு பெண்ணினால் தான் வரும்’ தெபோராள் சொன்னாள்.

‘ஒரு பெண்ணினால் சிசெரா என்னும் மாபெரும் வீரன் கொல்லப்படுவானா ? வேடிக்கைக் கதையாக இருக்கிறதே’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்ட பாராக் அதை வெளிக்காட்டாமல் தெபோராவிடமிருந்து விடைபெற்று இஸ்ரயேல் படையைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். பெரும் இஸ்ரயேலர் படை ஒன்று தயாரானது.

சில நாட்கள் சென்றபின் தெபோராள் பாராக்கை மீண்டும் அழைத்து,’ போருக்கான தருணம் வந்து விட்டது. சிசெராவிற்கு எதிராகப் போரிடப் புறப்படுவோம்’ என்றாள். படை கடவுளின் ஆதரவுடன் சிசெராவை எதிர்த்துப் போரிடப் புறப்பட்டது.

போர் துவங்கியது.

இஸ்ரயேலரின் படைக்கு முன்னால் சிசெராவின் இரும்பு ரதங்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சிசெரா பெரும் பின்னடைவைச் சந்தித்தார். போரில் இஸ்ரயேலர்களின் கை ஓங்கியது. சிசெரா ரதத்தை விட்டுத் தப்பியோடினார். தப்பியோடிய சிசெரா யாகேல் என்பவளுடைய கூடாரத்தில் தஞ்சம் புகுந்தார். யாகேலின் கணவனும், யாபீன் அரசனும் நண்பர்களாக இருந்தார்கள்.

‘வாருங்கள். நீங்கள் சிசெரா தானே ? ‘ யாகேல் வரவேற்றாள்.

‘ஆம்.. இஸ்ரயேலர் படை நம்முடைய படையைச் சிதறடித்து விட்டது. நான் தப்பியோடி இங்கே வந்தேன். நல்லவேளை இது உன் கூடாரம். இங்கே எனக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது’ சிசெரா சொன்னான்.

‘கண்டிப்பாக … உங்களைப் போன்ற ஒரு வீரரைப் பாதுகாப்பது எனக்கு மகிழ்ச்சியல்லவா ? மிகவும் களைப்பாய் இருக்கிறீர்கள். ஏதேனும் குடிக்கத் தரவா ?’ யாகேல் கேட்டாள்.

‘கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்’

யாகேல் உள்ளே சென்று சிசெராவிற்குக் குடிப்பதற்காக பால் கொண்டு வந்தாள். சிசெரா அதைக் குடித்துச் சோர்வகற்றினார்.

‘மிக்க நன்றி யாகேல். நான் உள் அறைக்குச் சென்று கொஞ்சம் இளைப்பாறுகிறேன். யாரேனும் என்னைத் தேடி வந்தால் நான் இங்கே வரவேயில்லை என்று சொல்’ சிசெரா சொல்லிவிட்டு உள் அறைக்குச் சென்று படுத்தார். கடுமையான போரும், தப்பியோடிய களைப்பும் அவரை தூக்கத்துக்குள் இழுத்துச் சென்றன.

யாகேலின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து சிசெரா அயர்ந்து உறங்கினான். ஆனால் யாகேலோ மன்னன் யாபீனையும், தளபதி சிசெராவையும் மிகவும் வெறுத்தாள். அது சிசெராவிற்குத் தெரியவில்லை.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிசெராவைப் பார்க்கப் பார்க்க யாகேலுக்குள் இருந்த வன்மம் வெளிவந்தது. சிசெராவைக் கொல்வதற்குச் சரியான சந்தர்ப்பத்தைக் கடவுளே தனக்கு அளித்திருப்பதாய் நினைத்தாள். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விட்டால் இவனைப் பழிவாங்க வேறு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். சிசெராவைக் கொல்வதென்று முடிவெடுத்தாள்.

வீட்டிலிருந்த பெரிய சுத்தியல் ஒன்றைக் கைகளில் எடுத்தாள். கூடாரத்தில் இருந்த நீளமான ஆணி ஒன்றையும் எடுத்தாள்.

நேராக தூங்கிக் கொண்டிருந்த சிசெராவின் அருகில் சென்று அவனுடைய நெற்றிப் பொட்டில் ஆணியை வைத்தாள். கோபமும், ஆத்திரமும், வெறுப்பும் அவளுடைய கண்களில் கொப்பளித்துப் பாய, கையிலிருந்த சுத்தியலால் ஆணியை ஓங்கி அடித்தாள். என்ன நடக்கிறது என்பதைப் சிசெரா புரிந்து கொள்ளும் முன் யாகேல் அடித்த ஆணி அவனுடைய நெற்றிப் பொட்டைப் துளைத்து மறுமுனை வழியாக வெளியே வந்து தரையில் புதைந்தது.

சிசெரா துடிதுடித்து இறந்தான். தெபோராளின் வாக்குப் படி அவனை ஒரு பெண்ணே கொன்று விட்டாள்.

தப்பியோடிய சிசெராவைத் தேடிக் கொண்டு பாராக் அந்தப் பக்கமாக வந்தான். வாசலிலே பாராக்கின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த யாகேல் அவனுக்கு எதிரே வந்து நின்றாள்.

‘வாருங்கள் … நீங்கள் பாராக் தானே’

‘ஆம் பெண்ணே… நீ யார் ?’

‘உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சி’ யாகேல் புன்னகைத்தாள்.

‘இன்னும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை பெண்ணே. சிசெரா தப்பியோடிவிட்டான். சிசெராவைக் கொன்றபின் தான் முழுவெற்றி கிடைக்கும். அவனைத் தான் தேடி அலைகிறேன்’ பாராக் சொன்னார்.

‘சிசெராவா ? அவன் இதோ என்னுடைய வீட்டின் உள் அறையில் படுத்திருக்கிறார்’ யாகேல் சொன்னதும், பாராக் தன்னுடைய உடைவாளை உருவிக் கொண்டு அவளுடைய கூடாரத்துக்குள் பாய்ந்தார். உள்ளே சிசெரா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான்.

‘செசரா உன் கையால் சாகமாட்டான். அவனுடைய சாவு ஒரு பெண்ணினால் தான் வரும்’ என்று தெபோராள் சொன்ன வார்த்தைகள் அவனுடைய மனதில் எதிரொலித்தன. கடவுளின் செயலை எண்ணி வியந்தான்.

சிசெரா கொலைசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டதும் யாபீன் மன்னன் நடுங்கினார். இஸ்ரயேலர்களுக்கு அஞ்சி ஒடுங்கினான். இஸ்ரயேலர்களின் கை எங்கும் ஓங்கியது. அவர்களுக்கு எதிராக இறுக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுகளும் அறுந்தன.

இவ்வாறு இஸ்ரயேல் மக்களைக் கடவுள் ஒரு கொடுமையான மன்னனிடமிருந்து பாதுகாத்தார்.

கி.மு : ஏகூத் பின்னிய சதி வலை

 haman_mordechai

இஸ்ராயேல் மக்களை மேசேக்குப் பின்பு திறமையாக வழிநடத்தியவர் யோசுவா. அவருடைய மறைவிற்குப் பிறகு அவர்களுக்குச் சிறப்பான வழிகாட்டிகள் இல்லாமல் போயிற்று. கானான் நாட்டில் வசித்து வந்த இஸ்ரயேலர்கள் கானானியரை முற்றிலும் விரட்டிவிடாமல் அவர்களையும் தங்களோடு தங்க வைத்திருந்தனர். அதுவே அவர்களுக்கு எதிராய் முடிந்தது. கானானியர்கள் பலுகிப் பெருகிப் பலம் கொண்டார்கள். இஸ்ரயேல் மக்களோடு கடவுள் இருந்ததால் அவர்களை கானானியரால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

காலப்போக்கில் இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்குச் செய்த நன்மைகளையெல்லாம் மறந்து விட்டு கானானியரோடு திருமணபந்தங்களை ஏற்படுத்தவும், கானானியரின் தெய்வமான பாகாலை வணங்கவும் துவங்கினார்கள். இஸ்ரயேல் மக்கள் தங்கள் இனத்தில் தான் பெண்கொள்ளவேண்டும் என்பதே அவர்களுக்குக் கடவுள் கொடுத்திருந்த கட்டளை. அதை இஸ்ரயேலர்கள் மீறத் துவங்கினார்கள். தன்னைப் புறக்கணித்த இஸ்ரயேலர் மீது கடவுள் கோபம் கொண்டார். அவர்களைக் கைவிட்டார். கானானியரின் கை ஓங்கியது. அவர்கள் இஸ்ரயேலரை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்து கொடுமைப்படுத்தத் துவங்கினார்கள்.

அந்நாட்களில் மோவாப் நாட்டை எக்லோன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மிகச் சிறந்த போர்வீரன். அவனுடைய ஆட்சியில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் மேல் அரசன் கடுமையான வரிகளைச் சுமத்திக் கொடுமைப்படுத்தினான். இஸ்ரயேல் மக்கள் நிம்மதியின்றித் தவித்தார்கள்.

இஸ்ரயேலர்கள் கடவுளை விட்டு விலகிச் செல்வதும், மீண்டும் மனம் மாறிக் கடவுளை நம்புவதும் அடிக்கடி நடந்தது. இந்த முறையும் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகச் செய்த தங்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் கடவுளை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் மனமிரங்கினார். அவர்களுக்கு வழிகாட்ட நியாயாதிபதி ஒருவரை நியமித்தார். அவர் தான் ஏகூத்.

ஏகூத் இஸ்ரயேல் மக்கள் தலைவர்களை ஒன்றுகூட்டினார்.

‘நாம் இந்த மன்னனின் கீழ் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகப் பெரும் கஷ்டத்தை அனுபவித்துவிட்டோ ம். இனிமேலும் நாம் சும்மா இருந்தால் நம்முடைய மூதாதையர்கள் நானூறு ஆண்டுகள் எகிப்தில் அடிமைப்பட்டது போல நாமும், நம்முடைய வருங்காலத் தலைமுறையினரும் கஷ்டப்படுவார்கள். எனவே இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்’ ஏகூத் சொன்னார்.

‘நாங்கள் என்ன செய்யவேண்டும் ?’ மக்கள் பிரதிநிதிகள் கேட்டார்கள்.

‘முதலாவதாக நீங்கள் யாரும் இனிமேல் பாகாலை வழிபடக் கூடாது. நம்முடைய கடவுளைத் தான் வழிபட வேண்டும். நமக்கு ஒரே ஒரு கடவுள் தான். அவரே உண்மையானவர் என்பதை பலமுறை நாம் கண்டிருக்கிறோம். எனவே நம் வழிகளை மாற்றிக் கொண்டு நம் கடவுளில் நிலைத்திருக்கவேண்டும்’

‘இரண்டாவதாக, நமக்கு நல்ல வழிகாட்டிகள் இல்லை. எனவே என்னுடைய தலைமையை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும். நான் உங்களுக்காக கடவுளின் அருளோடு போராடுவேன்’ ஏகூத் சொல்ல அனைவரும் ஒத்துக் கொண்டார்கள்.

‘இப்போது மன்னனுக்குச் செலுத்தவேண்டிய வரிப்பணத்தையெல்லாம் என்னிடம் கொடுங்கள். இந்தமுறை நான் அதை மன்னனிடம் கொடுக்கிறேன்’ ஏகூத் சொன்னார். மக்கள் அவ்வாறே செய்தனர்.

‘நீங்கள் எல்லோரும் ஒரு போருக்குத் தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நாம் போரிட வேண்டி வரலாம்’ ஏகூத் கூடியிருந்த மக்களிடம் கூறினார்.

ஏகூத் இடதுகைப் பழக்கம் கொண்டவர். எனவே எப்போதும் தன்னுடைய கத்தியை இடுப்பின் வலது பக்கத்தில் சொருகி வைப்பது அவருடைய வழக்கம். இந்தமுறையும் அவர் ஒரு கூர்மையான கத்தியை எடுத்து அதை தன் இடையின் வலது பக்கத்தில் மறைத்து வைத்தார். பின் மன்னனுக்குரிய வரிப்பணத்தையும் எடுத்துக் கொண்டு மன்னனின் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார்.

வரிப்பணத்தோடு ஏகூத் வருவதைக் கண்ட மன்னன் மகிழ்ந்தான்.

‘அரசே…. எங்கள் தலைவரே.. இதோ உமக்கான வரிப்பணம்’ ஏகூத் போலி பவ்யம் காண்பித்தார்.

‘நல்லது. உங்களை நான் பாராட்டுகிறேன். சரியான நேரத்தில் வரிப்பணத்தைச் செலுத்துவதில் நீங்கள் கெட்டிக் காரர்கள்’ மன்னன் சிரித்தான். அரசவை மொத்தமும் சிரித்தது.

‘மன்னனே… உங்கள் அரசாட்சியில் நாங்கள் நலமுடன் இருக்கிறோம். எனவே வரிப்பணம் செலுத்துவதில் எங்களுக்கு எப்போதும் தாமதம் ஏற்படுவதில்லை’ ஏகூத் வஞ்சகமாய் புகழ்ந்தான். வரிப்பணத்தையெல்லாம் மன்னனிடம் ஒப்படைத்த ஏகூத் மன்னனை நோக்கி,

‘அரசே ஒரு விண்ணப்பம்’ என்றார்.

‘சொல்… என்ன விண்ணப்பம் ? வரியைக் குறைக்கவேண்டுமா ?’ மன்னன் நகைத்தான்.

‘இல்லை அரசே. இது மிக மிக ரகசியமானது. உம்மிடம் மட்டுமே சொல்லவேண்டும். இந்த அரசவைப் பணியாளர்கள் கூட கேட்கக் கூடாது’ ஏகூத் சொன்னார்.

‘ சரி என்னுடன் வா…’ மன்னர் ஏகூரை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றான். அந்த அறை எப்போதுமே குளிர்ச்சியாக இருக்குமாறு கட்டப்பட்டிருந்தது.

‘சொல்.. என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் ?’ மன்னன் கேட்டான்.

ஏகூத் தாமதிக்கவில்லை, கணநேரத்தில் தன்னுடைய வலது இடையில் சொருகியிருந்த கத்தியை இடது கையினால் உருவி எடுத்து மன்னன் சுதாரிக்கும் முன் அவனுடைய வயிற்றில் குத்தினார். கத்தி மன்னனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு மறுபுறம் வந்தது. மன்னன் கத்தாமலிருக்க தன்னுடைய வலது கையினால் மன்னனுடைய வாயைப் பொத்திய ஏகூத்,’ அரசே… இதுதான் நான் சொல்ல வந்த ரகசியம்’ என்று ஆத்திரக் கண்களோடு உறுமினார். மன்னனின் கண்கள் மரணபயத்தில் தத்தளித்து அடங்கியது. மன்னன் இறந்தான்.

ஏகூத் எதுவுமே நடவாதவர் போல மெதுவாக அரண்மனையை விட்டு வெளியேறினார். சற்றும் தாமதியாமல் உடனே சென்று தயாராய் இருந்த இஸ்ரயேல் மக்களை ஒன்று சேர்த்து மன்னனுக்கு எதிராகப் போரிடவும் தயாரானார்.

அறைக்குள் சென்ற மன்னன் நீண்டநேரமாக வெளியே வராததால் அரச அலுவலர்கள் அரசர் சென்ற அறைக்குள் நுழைந்தனர். அங்கே அரசன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு ஒட்டுமொத்தமாக அதிர்ந்தார்கள்.

‘ஐயோ… நமது மன்னனை அந்த இஸ்ரயேலன் கொன்று விட்டான்’

‘உடனே படைத்தளபதியை வரவழையுங்கள்… இஸ்ரயேலர்களை அழித்தொழிக்க வேண்டும்…’

‘என்ன ஆயிற்று.. ஏன் பதட்டப்படுகிறீர்கள் ?’

அரண்மனை சடுதியில் பரபரப்புக்குத் தாவியது. ஆனால் அதற்குள் ஏகூத் இஸ்ரயேலர் படையோடு அரண்மனையைத்தாக்கினார். போருக்குத் தயார் நிலையில் இல்லாத அரண்மனை வீரர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். இஸ்ரயேலர்களின் கை ஓங்கியது. மோவாபியர் படை படுதோல்வி கண்டது. இஸ்ரயேலர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

நீண்ட நாளைய அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்ட ஏகூரையும், ஏகூத் வழியாகச் செயலாற்றியக் கடவுளையும் இஸ்ரயேலர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

 

பிடித்திருந்தால்…… வாக்களியுங்கள்… நன்றி

கி.மு : எரிகோ வீழ்ந்த வரலாறு.

jericho_walls_wide_view

மோசே இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டியாக இருந்து கானானை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார். அவருக்குப் பின் மக்களை வழிகாட்டுவதற்காகத் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர் தான் யோசுவா.

யோசுவாவும் மோசேயைப் போல கடவுளை முழுமையாக நம்பி அவருடைய வழியில் நடந்து வந்தார். மோசேயைக் கடவுள் தன்னிடம் அழைத்துக் கொண்டபின் யோசுவா மோசேயின் இடத்திற்கு வந்தார். இப்போது மக்கள் யோசுவாவின் கீழ் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். யோசுவாவின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் நிறைய போர்களில் ஈடுபட்டனர். கடவுள் அவர்களோடு இருந்ததால் பல வெற்றிகளைப் பெற்றனர்.

இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் கொடுப்பதாக வாக்களித்திருந்த ஒரு இடம் எரிகோ. யோசுவா முதலில் எரிகோவைக் கைப்பற்றத் திட்டமிட்டார்.

யோசுவா தன் நம்பிக்கைக்குரிய இரண்டு பேரை அழைத்து,’ நாம் நமக்குரிய இருப்பிடத்தை அடைவதற்குரிய நேரம் வந்துவிட்டது. முதலில் எரிகோவைக் கைப்பற்றவேண்டும். நீங்கள் இரண்டுபேரும் அந்த நகருக்குள் சென்று நோட்டமிட வேண்டும். எரிகோவைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் நீங்கள் சேகரித்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்.’ என்றார்.

‘சரி… நாங்கள் சென்று நாட்டை உளவு பார்த்து வருகிறோம். என்னென்ன தகவல்கள் வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் நாங்கள் எதையும் தவறவிடாமல் பார்த்து வருவதற்கு உதவியாய் இருக்கும்’ அவர்கள் சொன்னார்கள்.

‘முதலில் நகரின் அமைப்பு நமக்குத் தெரியவேண்டும். அவர்களின் நகருக்குள் எந்த வழியாக நுழையலாம் ? எந்த யுத்த தந்திரம் ஒத்து வரும் ? நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன ? மக்கள் எப்படிப்பட்டவர்கள் ? என்பதையெல்லாம் நீங்கள் அறிந்து வரவேண்டும்’ யோசுவா தெளிவுபடுத்தினார். உளவாளிகள் தங்கள் பணியைச் செய்யப் புறப்பட்டனர். எரிகோ பட்டணம் யோர்தான் நதியின் மறுகரையில் இருந்தது. அவர்கள் இருவரும் நதியைக் கடந்து எரிகோவுக்குள் நுழைந்தார்கள்.

அவர்கள் எரிகோ நகரை நோட்டமிட்டுக் கொண்டே நடந்தார்கள். நகர் மிகவும் உயரமான வலிமையான மதில்சுவரினால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதைத் தாண்டி உள்ளே செல்வது மிகவும் கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

மதில் சுவரின் அருகே காவல் காத்துக் கொண்டிருந்த படைவீரர்கள் இவர்களைக் கண்டு சந்தேகப்பட்டார்கள்.

‘இவர்களைப் பார்த்தால் நம்முடைய தேசத்தவர் போல இல்லை… ஏதோ திட்டத்துடன் தான் இங்கே வந்திருக்கின்றார்கள்’

‘கோட்டைக்கு இரவில் கூட காவல் இருக்குமா என்று அவர்கள் ஒருவரிடம் விசாரிப்பதைக் கண்டேன்’ காவலர்களின் சந்தேகம் வலுத்தது.

‘எதற்கும் நாம் மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொல்வோம்’ அவர்கள் முடிவெடுத்து மன்னனிடம் சென்று தங்கள் சந்தேகத்தைச் சொன்னார்கள்.

‘அப்படியா ? அவர்கள் உளவாளிகளாய்த் தான் இருக்கவேண்டும். ஏன் நீங்கள் அவர்களைக் கைதுசெய்து அழைத்து வரவில்லை. உடனே செல்லுங்கள். போய் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களைப் பிடித்து அரசவைக்குக் கொண்டுவாருங்கள்’ மன்னன் கட்டளையிட்டான். வீரர்கள் உளவாளிகளைத் தேடி எரிகோ ம் அதிலருகே வந்தார்கள்.

உளவாளிகள் இருவரும் ஒரு சத்திரத்தை அடைந்தார்கள். அந்தச் சத்திரத்தை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பெண். அவளுடைய பெயர் ராகாப். ராகாப் என்பதற்கு விசாலம் என்பது பொருள். அவள் எரிகோ மதிலை ஒட்டிய ஒரு சத்திரத்தில் பாலியல் தொழில் செய்து பிழைப்பை நடத்தி வந்தாள். மனதளவில் அவள் மிகவும் நல்லவள்.

வந்த இருவரையும் ராகாப் வரவேற்றாள்.

‘நீங்கள் யார் ? உங்களை நான் இதற்குமுன் பார்த்ததேயில்லையே’ அவள் கேட்டாள்.

‘நாங்கள் ஒரு விஷயமாக இங்கே வந்திருக்கிறோம். அது என்னவென்பதை நீ விரைவிலேயே அறிந்து கொள்வாய்’ அவர்கள் சொன்னார்கள்.

இதற்கிடையில் அரசரின் படையினர் அந்த இருவரையும் தேடி அவளுடைய சத்திரத்திற்கு வந்தார்கள். அரச வீரர்கள் வந்திருப்பதை அறிந்ததும் அவள் உளவாளிகள் இருவரையும் பரணின் மீது கிடத்தி சணல்கொண்டு மூடினாள். பின் வெளியே வந்தாள்.

‘இங்கே இரண்டு உளவாளிகள் வந்ததாக கேள்விப்பட்டோ ம். உண்மையா ?’ வந்த வீரர்கள் கேட்டார்கள்.

‘இங்கே இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் உளவாளிகளா ? அது எனக்குத் தெரியாதே. தெரிந்திருந்தால் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து உங்களிடம் ஒப்படைத்திருப்பேனே.’ ராகாப் நடித்தாள்.

‘அவர்கள் இப்போது எங்கே ?’

‘அவர்கள் இரவில் வந்தார்கள். வந்துவிட்டு கொஞ்ச நேரத்திலேயே சென்று விட்டார்கள். என்வீட்டுக்கு மக்கள் வருவதும் போவதும் சகஜம் தான். ஆனால் யாரும் இங்கே தங்குவதில்லை. அவர்கள் இருவரும் யோர்தான் நதியிருக்கும் பக்கமாகச் சென்றார்கள்’ ராகாப் சொன்னாள்.

‘சரி.. அவர்கள் இனிமேல் இங்கே வந்தால் உடனே எங்களுக்குத் தகவல் சொல்’ சொல்லிக் கொண்டே வீரர்கள் யோர்தானை நோக்கி விரைந்தார்கள். அவர்கள் சென்றபின் சணலுக்குள் ஒளிந்திருந்த உளவாளிகள் இருவரும் வெளியே வந்தார்கள்.

‘எங்கள் உயிரைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி’

‘ நன்றி இருக்கட்டும். முதலில் உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் யார் ?’

‘எங்களைக் காப்பாற்றிய உன்னிடம் நாங்கள் உண்மையை மறைக்க விரும்பவில்லை. நாங்கள் இருவரும் இஸ்ரயேலரின் உளவாளிகள்.’

‘இஸ்ரயேலரின் உளவாளிகளா ? எகிப்திலிருந்து மீண்டு வந்த அந்த இஸ்ரயேலர்களா ?’ ராகாப் ஆச்சரியமாய்க் கேட்டாள்.

‘ஆம். அதே இஸ்ரயேலர்கள் தான்’

‘உங்களுக்குக் கடவுள் செய்த அற்புதங்களைப்பற்றியெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்கள் கடவுள் உண்மையிலேயே மிகவும் சக்திவாய்ந்தவர் தான். நீங்கள் இந்த நாட்டின் மீது போர் தொடுக்கப் போகிறீர்களா ?’ ராகாப் கேட்டாள்.

‘ஆம். இந்த நகரைக் கடவுள் எங்களுக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே நாங்கள் இந்த நகரைக் கைப்பற்றி குடியேறுவோம்’ அவர்கள் சொன்னார்கள்.

‘நீங்கள் போரிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்’ ராகாப் கேட்டாள்.

‘சொல்.. எங்கள் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் நீ இஸ்ரயேல் குலத்துக்கே உதவியிருக்கிறாய். உனக்கு என்ன உதவி வேண்டும் என்று தயங்காமல் கேள்’

‘நீங்கள் போரிட்டு நகரைப் பிடிக்கும்போது என்னையும், என் குடும்பத்தினரையும் கொல்லாமல் காப்பாற்ற வேண்டும்’ அவள் விண்ணப்பித்தாள்.

‘சரி… உன்னையும் உன் குடும்பத்தினரையும் நாங்கள் கொல்லமாட்டோ ம். போர் நடக்கும் போது, நீ உன்னுடைய உறவினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இந்த வீட்டில் தங்கியிருக்கவேண்டும். வீட்டை மூடியே வைத்திரு. வீட்டு சன்னலில் ஒரு பெரிய சிவப்புக் கயிறு ஒன்றைக் கட்டிவை. அது எங்களுக்கு அடையாளமாக இருக்கட்டும்’ அவர்கள் சொன்னார்கள். ராகாப் திருப்தியடைந்தாள்.

‘சரி.. நாங்கள் எப்படி இங்கிருந்துத் தப்பிப்பது. எங்கும் எங்களைத் தேடி வீரர்கள் நிற்பார்களே’ உளவாளிகள் பயந்தனர்.

‘கவலைப்படாதீர்கள். இந்த வீட்டு மாடியிலுள்ள சன்னல் எரிகோ மதிலை ஒட்டியே இருக்கிறது. ஒரு நீளமான கயிற்றை ஜன்னலில் கட்டி அதன் வழியாக நீங்கள் மதிலைத் தாண்டலாம்’ அவள் யோசனை சொன்னாள்.

‘ஓ… மிக்க நன்றி. அது நல்ல யோசனையாய் இருக்கிறது. அப்படியானால் நாங்கள் விரைவிலேயே யோர்தானை அடைந்துவிடலாம்’

‘இல்லை…….. நீங்கள் நகருக்கு வெளியேபோனதும் யோர்தான் நதிக்குச் போகாதீர்கள். அங்கே கண்டிப்பாக காவல் பலமாக இருக்கும். அருகிலேயே ஒரு மலைப்பகுதி இருக்கிறது. நீங்கள் அங்கே போய் மூன்று நாட்கள் பாறைகளுக்கிடையே ஒளிந்திருங்கள். மூன்று நாட்களுக்குப் பின் எப்படியும் மன்னன் உங்களைத் தேடுவதைக் கைவிடுவான். நீங்கள் தப்பிக்கலாம்’ அவள் சொன்னாள்.

அவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டார்கள். அவள் ஒரு நீளமான கயிற்றை எடுத்து ஜன்னலில் கட்டி மறுநுனியை மதிலுக்கு வெளியே போட்டாள். அவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு இறங்கத் தயாரானார்கள்.

‘என்னை மறந்து விடாதீர்கள். இந்த சன்னலில் சிவப்புக் கயிறொன்றைக் கட்டி வைப்பேன். நீங்கள் என் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டும்’ அவள் மீண்டும் நினைவு படுத்தினாள்.

‘கவலைப்படாதே.. எங்களைக் காப்பாற்றிய உங்களை நிச்சயம் காப்பாற்றுவோம்’ உளவாளிகள் வாக்குறுதி கொடுத்து விட்டுத் தப்பிச் சென்றார்கள். ராகாப் சொன்னதன்படி அவர்கள் மலைப்பகுதிகளில் மூன்று நாள் மறைந்திருந்துவிட்டு நான்காம்நாள் நள்ளிரவில் யோர்தானைக் கடந்து தப்பித்தார்கள்.

தப்பிவந்த உளவாளிகள் யோசுவாவிடம் வந்து எரிகோவைப்பற்றிய அனைத்துச் செய்திகளையும் சொன்னார்கள். யோசுவா மகிழ்ந்தார். வெற்றி நமக்குப் பக்கத்தில் தான் என்று ஆனந்தமடைந்தார். ராகாப்பின் வீட்டிற்குள் யாரும் நுழையக் கூடாதென மக்களுக்குக் கட்டளையிட்டார்.

‘தலைவரே… எரிகோவின் மதில்சுவர் மிகவும் பெரியது, வலுவானது. அதைத் தாண்டி நாம் உள்ளே செல்வது எப்படி ?’ மக்கள் யோசுவாவிடம் கேட்டனர்.

‘அதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்’ யோசுவா சொன்னார்.

‘ நாம் யோர்தான் நதியைக் கடந்து செல்லவேண்டுமே ? இருநூறு அடி நீளமான நதி கரைபுரண்டோ டுகிறதே. நம்முடைய பெண்களும், குழந்தைகளும், கால்நடைகளும் எப்படிக் கடந்து செல்வார்கள்’ மக்கள் மீண்டும் கேட்டார்கள்.

‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.

‘வாருங்கள். எல்லோரும் எரிகோவுக்குப் போவோம்’ யோசுவா மக்களையெல்லாம் கூட்டிச் சேர்த்தார். கடவுளின் பத்துக் கட்டளைகள் அடங்கிய பேழையை திருப்பணியாளர்கள் முன்னே எடுத்துச் செல்ல மக்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டார்கள். யோர்தான் நதி கரைபுரண்டோ டிக் கொண்டிருந்தது.

மக்கள் அனைவரும் யோர்தானின் கரையில் வந்து சேர்ந்தார்கள்.

‘கடவுளின் பேழையைச் சுமந்து வருபவர்கள் முதலில் நதியில் இறங்குங்கள்’ யோசுவா சொன்னார்.

கடவுளின் பேழையைச் சுமந்து வந்தவர்கள் நதியில் கால்வைத்தார்கள்.

என்ன ஆச்சரியம் ! யோர்தான் நதியின் தண்ணீர் இரண்டு புறமும் பிரிய நதியின் நடுவே ஓர் பாதை உருவானது. வலதுபுறமும் இடதுபுறமும் தண்ணீர் மதில் போல உயர்ந்தது. ஓடிக் கொண்டிருந்த நதி. ஓய்வெடுத்தது.

மக்கள் வியந்தனர். செங்கடலைக் கடந்தது போல, மக்கள் கூட்டம் யோர்தானையும் கடந்தது. எல்லா மக்களும் மறுகரையை அடையும் வரை கடவுளின் பேழையைச் சுமந்தவர்கள் நதிக்குள் நின்றார்கள். அவர்களும் கடைசியாகக் கரையேறியதும் இரண்டு பக்கமுமாகப் பிரிந்திருந்த நதி ஒன்றுசேர்ந்தது. மக்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். எரிகோ தமக்குச் சொந்தமாகும் என்று உறுதியாக நம்பினார்கள்.

அவர்கள் யோர்தானைக் கடந்து கில்கால் என்னுமிடத்தில் கூடாரங்களை அமைத்தார்கள். யோசுவா அவர்களிடம்’ இஸ்ரவேலர்களுடைய பன்னிரண்டு கோத்திரங்களின் நினைவாக பன்னிரண்டு கற்களை இங்கே நடுங்கள். வருங்கால சந்ததியினர் இந்தக் கற்களைக் காட்டி இது என்ன ? என்று விசாரிக்கும் போது, கடவுள் நமக்குச் செய்த அற்புதங்களைச் சொல்லுங்கள்’ என்றார். அதன்படியே அவர்கள் பன்னிரண்டு கற்களை நாட்டி யோர்தான் நதி வழிவிட்ட அதிசயத்தை நினைவு கூர்ந்தார்கள்.

எரிகோவை எப்படிப் பிடிப்பது ? என்ன யுத்த தந்திரம் வகுப்பது என்பதைப்பற்றிக் கடவுள் எதுவும் சொல்லாததால் அனைவரும் கூடாரங்களில் அமைதியாகக் காத்திருந்தனர். திடீரென ஒரு நாள் கடவுளின் தூதர் யோசுவாவிற்குத் தோன்றினார்.

யோசுவா தரையில் வீழ்ந்து தூதரைப் பணிந்தார்.

‘கடவுளின் தூதரே… நீர் எங்களுக்குச் சொல்லவந்த செய்தி என்னவோ ?’ யோசுவா பணிவுடன் கேட்டார்.

‘எரிகோவை நீங்கள் எப்படிக் கைப்பற்றப் போகிறீர்கள் என்பதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்…’ தூதர் சொல்ல, யோசுவா கவனமானார்.

‘கடவுளின் உடன்படிக்கையை ஆலயப்பணியாளர்கள் ஏழுபேர் சுமந்து செல்லவேண்டும். அவர்களுக்கு முன்பாக ஏழு கொம்புகளையுடைய எக்காளத்தை ஊதியபடி ஏழுபேர் செல்லவேண்டும். அவர்கள் எரிகோ மதிலை ஒருநாளைக்கு ஒருமுறை என ஆறு நாள் சுற்றவேண்டும். ஏழாவது நாளில் மட்டும் ஏழுமுறை சுற்றிவர வேண்டும். ஏழுமுறை சுற்றிவந்தபின் அவர்கள் எக்காளம் ஊதவேண்டும். அப்போது எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து பயங்கர சத்தத்தோடு ஆர்ப்பரிக்க வேண்டும். அப்போது மதிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழும் நீங்கள் நகரைக் கைப்பற்றலாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நகரிலுள்ள பொருட்கள் தீட்டானவை. அவற்றை தீயிட்டு அழியுங்கள் யாரும் அதிலிருந்து எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டாம்’ கடவுளின் தூதர் சொல்லி மறைந்தார்.

யுத்தத்துக்கான வியூகம் வகுக்கப்பட்டதில் யோசுவா மிகவும் மகிழ்ந்தார். உடனே தகவல் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலையிலேயே தூதர் சொன்னபடி கடவுளின் பேழை எக்காள சத்தத்தோடு மதிலைச் சுற்றி வந்தது. அப்படியே தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்தன.

ஏழாவது நாள். இன்று தான் எரிகோ மீது இஸ்ரயேலர்கள் படையெடுக்கப் போகும் நாள். கடவுள் சொன்னபடி அன்று மட்டும் ஏழுமுறை மதில் சுற்றிவரப்பட்டது. யோசுவா எல்லோரையும் அமைதியாய் இருக்குமாறு பணித்தார். மக்கள் அமைதியாய் இருந்தார்கள். ஏழாவது முறை சுற்றி வந்து எக்காளம் ஊதப்பட்டபோது.

‘ஆர்ப்பரியுங்கள். இதோ… இந்த நகர் நமக்குச் சொந்தமாகப் போகிறது’ யோசுவா மக்களை உற்சாகப்படுத்தவும் மக்கள் ஒரே குரலாய் ஆரவாரம் செய்தார்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் ஒரே குரலாக கூக்குரலிட்டதும் எரிகோ நகர மதில் இடிந்து விழுந்தது. உறுதியாகவும், உயரமாகவும் பாதுகாப்பாக இருந்த மதில் தானாகவே இடிந்துத் தரையில் விழுந்தது. இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினார்கள். எரிகோ மக்கள் பயந்து சிதறி ஓடினார்கள்.

இதுதான் தருணம் என்று இஸ்ரயேல் படை எரிகோவுக்குள் நுழைந்து நகரிலுள்ள அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தியது ! ராகாப் தன்னுடைய சன்னலில் ஒரு சிகப்புக் கயிறை அடையாளமாகக் கட்டி வைத்திருந்தாள். எனவே அவளுடைய வீடு மட்டும் தாக்கப்படவில்லை. அவளுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் அந்த வீட்டிற்குள் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். நகர் அழிக்கப்பட்டு, தீயிடப்பட்டுக் கொளுத்தப்பட்டது. ராகாப் உளவாளிகளுக்குச் செய்த உதவி அவளுடைய முழுக் குடும்பத்தையும் காப்பாற்றியது.

எரிகோ, இஸ்ரயேலர்களுக்குச் சொந்தமாயிற்று.

0

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்.

கி.மு கதைகள் : வாழ்த்தாய் மாறிய சாபம்

16

அக்காலத்தில் ஆங்காங்கே குறிசொல்பவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். இவர்கள் கடவுளிடம் மனதால் பேசி, கடவுள் என்ன சொல்கிறாரோ அவற்றை மக்களுக்குத் தெரிவிப்பார்கள். அவர்கள் எப்போதும், யாரைக்கண்டும் அஞ்சுவதில்லை. மன்னனை சபிக்கவும், குடியானவனை வாழ்த்தவும் அவர்கள் தயங்குவதேயில்லை. பணம் பதவி செல்வாக்கு இவற்றுக்கு அவர்கள் விலைபோவதுமில்லை.

பிலேயாம் ஒரு மிகச்சிறந்த மனிதர். தெய்வ பக்தர். அவர் குறி சொல்வதில் சிறந்து விளங்கினார். அவர் கடவுளிடம் பேசி கடவுள் சொல்வதை மக்களுக்குத் தவறாமல் சொல்லிவந்தார்.

அந்த நாட்டு மன்னன் பாலாக் இஸ்ரயேலர்களைக் கண்டு பொறாமைப் பட்டான். இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாகவும், ஒரே குழுவாகவும் தங்கியிருந்ததும், அவர்களிடையே இருந்த ஏராளமான செல்வங்கள், கால்நடைகள் இவைகளும் அவனை பொறாமைப் பட வைத்தன. எப்படியாவது அவர்களிடமிருந்து அவற்றையெல்லாம் அபகரிக்க வேண்டும் என்று மன்னன் திட்டமிட்டான்.

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பைப்பெற்றவர்கள் எனவே அவர்களை நேரடியாக வீழ்த்தமுடியாது. ஏதேனும் சூழ்ச்சி செய்து தான் அவர்களை வீழ்த்தவேண்டும் என்று பாலாக் திட்டமிட்டான். அவனுடைய மனதில் பிலேயாம் வந்தார்.

பிலேயாம் இறைபக்தர். அவர் ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்வார். அவர் ஒருவனை சபித்தால் அவன் அழிவுறுவான். எனவே பிலேயாமை அழைத்து இஸ்ரயேல் மக்களைச் சபிக்கச் செய்யவேண்டும் என்று மன்னன் முடிவெடுத்தான்.

பாலாக்கின் வீரர்கள் பிலேயாமின் இல்லத்தில் வந்து நின்றனர்.
‘பிலேயாம்… மன்னன் உன்னை அழைக்கிறார். நீ உடனடியாக மன்னனைச் சந்திக்க வேண்டும்’

‘நான் ஏன் மன்னனைச் சந்திக்கவேண்டும் ? ஏதேனும் முக்கியமான விஷயமா ?’ பிலேயாம் கேட்டார்.

‘ஆம். இஸ்ரயேல் மக்கள் நம்முடைய மோவாப் நாட்டிலே தங்கியிருக்கிறார்கள் அல்லவா ? அவர்களை நீர் சபிக்க வேண்டுமாம் ‘ வீரர்கள் சொன்னார்கள்.

பிலேயாம் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அப்போது கடவுள் அவரோடு பேசினார். ‘ பிலேயாம்.. நீ பாலாக்கின் வீரர்களோடு போகவேண்டாம். இஸ்ரயேல் மக்கள் என்னுடையவர்கள். அவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள். சபிக்கப் படவேண்டியவர்கள் அல்ல’

161பிலேயாம் கண்களைத் திறந்தார். ‘ இல்லை. நான் உங்களோடு வர முடியாது. இஸ்ரயேல் மக்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களை நான் சபிக்கமுடியாது என்று மன்னனிடம் போய்ச் சொல்’ பிலேயாம் தெளிவாகச் சொன்னார்.

வீரர்கள்  மன்னனிடம் வந்து விஷயத்தைச் சொல்ல, மன்னன் கடும் கோபமடைந்தார்,

‘உயிர் மீது அவருக்கு ஆசையிருந்தால் உடனே என்னிடம் வரச் சொல்லுங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

இரண்டாவதாக வீரர்கள் சிலர் பிலேயாமைச் சந்திக்கச் சென்றார்கள்.

‘நீர் உடனே மன்னனைச் சந்தித்தாகவேண்டும். இது அரச கட்டளை. இல்லையேல் இங்கேயே உமது தலையை வெட்டி வீசுவோம்’ வீரர்கள் எச்சரித்தார்கள்.

பிலேயாம் வேறு வழியின்றி அவர்களுடன் சென்றார். அவர்கள் அவரை ஒரு கழுதையின் மீது அமரவைத்து அழைத்துச் சென்றனர். கடவுள் இதைக் கண்டு கோபமடைந்தார்.

‘பாலாக்கைச் சந்திக்க வேண்டாமென்றல்லவா நான் சொன்னேன். இஸ்ரயேலர்களைச் சபிக்க வேண்டாமென்றல்லவா நான் கூறினேன்.. பிலேயாம் என் வார்த்தைகளை மீறிவிட்டானே ‘ என்று வருந்தினார். உடனே தன்னுடைய தூதர் ஒருவரை அனுப்பி அவரை வழிமறிக்குமாறு சொன்னார்.

பிலேயாம் கழுதையில் சென்றுகொண்டிருந்தபோது கடவுளின் தூதர் வாளுடன் அவருக்கு எதிரே வந்து நின்றார். அவர் பிலேயாமின் கண்களுக்குத் தெரியவில்லை. கழுதையின் கண்ணுக்கு மட்டுமே தெரிந்தார். கழுதை அவரைக் கண்டதும் விலகி ஓடியது. பிலேயாம் கழுதையை அடித்தார்.

கழுதை இருபுறமும் மதில்சுவரால் கட்டப்பட்ட வழியில் ஓடியது. கடவுளின் தூதர் இருபுறத்திலுமிருந்து கழுதையை நெருக்கினார். கழுதை பயணிக்கச் சிரமப்பட்டது. பிலேயாம் கழுதையை இரண்டாவது முறையாக அடித்தார்.

மீண்டும் கடவுளின் தூதர் கழுதையின் முன்னால் வந்து நின்று வாளை ஓங்கினார். உடனே கழுதை தரையில் படுத்தது. பிலேயாமின் கோபம் கரைகடந்தது. கழுதையை மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்தார்.

உடனே கழுதை… ‘பிலேயாம்.. ஏன் என்னை அடிக்கிறாய் ?’ என்று கேட்டது.

கழுதை பேசியதைக் கேட்ட பிலேயாம் நடுங்கினார்.

‘நீ என்னை ஏன் மூன்று முறை அடித்தாய் ? கடவுளின் தூதர் வாளோடு என்னை வழிமறிக்கிறாரே’ கழுதை சொன்னதும்  பிலேயாம் தன் தவறை உணர்ந்தார். இஸ்ரயேல் மக்களைச் சபிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்.

அப்போது கடவுளின் தூதர் அவருடைய கண்களுக்கும் தரிசனமானார். ‘ நீர் போய் கடவுள் சொல்வதை பாலாக்கிற்குச் சொல்லும்’ தூதர் சொன்னார். பிலேயாம் தெளிவு பெற்றவராய் மன்னனின் அரண்மனைக்குச் சென்றார்.

பாலாக்கின் அரண்மனை.

பிலேயாமிற்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசன் உட்பட அனைவருமே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

‘இதோ.. பிலேயாம் நம்மிடம் வந்திருக்கிறார். இனிமேல் வெற்றிகள் எல்லாம் நமக்கே. பிலேயாம்,  உம் வாயால் அந்த இஸ்ரயேல் மக்களைச் சபியுங்கள் ‘ மன்னன் ஆனந்தமாய்க் கூறினான்.

‘அரசே… கடவுள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நான் சொல்வேன். மன்னன் சொல்வதையெல்லாம் என்னால் செய்ய முடியாது.’ பிலேயாம் அமைதியாகச் சொன்னார். மன்னன் புரியாமல் பார்த்தான்.

‘இஸ்ரயேல் மக்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் மீது சாபம் வராது’ பிலேயாம் சொன்னார்.

உடனே மன்னனும், கூட இருந்தவர்களும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

‘இஸ்ரயேல் மக்கள் கடவுளின் மக்கள். அவர்களை வாழ்த்துவோர் வாழ்த்தப்படுவார்கள், சபிப்போர் சாபத்துக்கு ஆளாவார்கள். நானும் இஸ்ரயேல் மக்களை வாழ்த்துகிறேன்…’ பிலேயாம் மீண்டும் சொன்னார். மன்னனின் முன்னிலையில், அனைத்து அரசவை ஊழியர்களின் முன்னிலையில் பிலேயாம் கடவுள் தன்னுடன் இருக்கும் தைரியத்தில் துணிந்து நின்றார்.

பிலேயாமின் வார்த்தைகளைக் கேட்ட பாலாக் மன்னன் கோபமடைந்தான். பிலேயாமை ஏதேனும் செய்தால் கடவுளின் சாபம் தனக்கு வந்துவிடுமோ என்று பயந்து அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டான்.

கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வரவிருந்த சாபத்தை, வாழ்த்தாக மாற்றியதை அறிந்த இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்

கி.மு : மோசஸ் – வியப்பூட்டும் விடுதலைப் பயணம் !


எகிப்து  நாட்டில் எரேபியக் குடும்பமான இஸ்ரயேல் என்றழைக்கப்பட்ட யாக்கோபு-வின் குடும்பம் குடிவந்தபின் அவர்களுடைய வம்சம் தழைத்தது. இஸ்ரயேலையும் அவருடைய தலைமுறையினரையும் எகிப்திய மன்னர்களும் மக்களும் மிகவும் அன்புடனும், மரியாதையுடனும் நடத்தி வந்தார்கள். காலம் உருண்டோ டியது. பல தலைமுறைகள் தோன்றி மறைந்தன. எகிப்திற்கு புதிதாய் ஒரு மன்னன் அரியணை ஏறினான். எபிரேயர்களின் சோதனைக் காலம் அங்கே ஆரம்பமானது.

அரியணையேறிய மன்னன் தன் நாட்டைச் சுற்றிப் பார்த்தான். எங்கும் எபிரேயர்களின் கூட்டம். எகிப்தியர்களை விட வலிமையிலும், அழகிலும் திறமையிலும் சிறந்து விளங்கிய எபிரேயர்களின் கூட்டத்தைப் பார்த்த மன்னனுக்கு உள்ளுக்குள் பயம் வந்து உட்கார்ந்து கொண்டது. அவசரமாக அரசவையைக் கூட்டினான் மன்னன்.

‘நம் நாட்டில் எபிரேயர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. எனக்கு முன்பு ஆட்சி செய்தவர்களின் கண்களுக்கு அது தென்படவில்லை போலிருக்கிறது. இப்போதேனும் நாம் சுதாரிக்க வேண்டும். இல்லையேல் இஸ்ரயேலர்களின் எண்ணிக்கை நம்மை விட அதிகரித்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுமானால், எகிப்தியர்களின் பாடு திண்டாட்டம் தான். அப்புறம் பிழைக்க வந்த இஸ்ரயேலர்களால் நம்முடைய பிழைப்பு கெடும். நாம் சுதாரித்தாக வேண்டும்’

‘ஏன் மன்னா அப்படிச் சொல்கிறீர்கள் ?.. அவர்களால் நமக்கு என்ன ஆபத்து வந்து விடப் போகிறது ?’

‘ஏதேனும் அண்டை நாட்டு மன்னன் நம் நாட்டின் மீது படையெடுத்து வருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். இஸ்ரயேலர்கள் அவர்களோடு சேர்ந்து நம்மை எதிர்க்கும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா ? அப்படி ஒரு நிலமை வந்தால் நாம் அன்னியர்களிடம் தோற்கடிக்கப் படுவோமே ?’

‘ஆம் மன்னா. இதுவரை யாரும் இப்படி யோசித்ததில்லை. இப்போது என்ன செய்யலாம் இஸ்ரயேலர்களை எகிப்தை விட்டுத் துரத்தி விடலாமா ?

‘ அதுவும் புத்திசாலித்தனமான யோசனையல்ல. அவர்கள் இப்போது  நாட்டை விட்டுப் போனால் கூட அவர்கள் எகிப்தின் செல்வங்களோடு தான் போவார்கள். அப்படிப் போனாலும் இழப்பு நமக்குத் தான். எகிப்தில் எகிப்தியர்களுக்கு பாதுகாப்பும் இருக்காது, வளங்களும் இருக்காது. இதற்கு புத்திசாலித்தனமாக ஏதாவது செய்தாக வேண்டும். எகிப்தின் செல்வங்களும் எகிப்தை விட்டுப் போகக் கூடாது. இஸ்ரயேலர்களின் கையும் ஓங்கக் கூடாது. ஏதேனும் வழி செய்தாக வேண்டும்’

‘என்ன செய்யலாம் என்பதையும் நீங்களே முடிவு செய்யுங்கள் அரசே… ‘அரசவை மன்னனை நோக்கி பணிவாய் நின்றது.

‘எனக்குத் தெரிந்த ஒரு சிறந்த வழி, இஸ்ரயேலர்களை எகிப்தியர்களின் அடிமைகள் ஆக்குவது தான். அவர்கள் நமக்கு அடிமைகளாக நாம் சொல்வதைக் கேட்டு நடப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நாட்டை விட்டுச் செல்லவும் அனுமதிக்கப் படக் கூடாது. அவர்களுடைய வலிமையை நாம் நம்முடைய எகிப்து நாட்டில் புதிய நகரைக் கட்டும் பணிகளுக்காய் செலவிட வைக்க வேண்டும்’ மன்னன் கூறினான்.

‘அப்படியே செய்யுங்கள் மன்னா’

அரசவையில் விவாதிக்கப் பட்ட விஷயம் அரச ஆணையானது ! எபிரேயர்கள் எகிப்தியர்களின் அடிமைகளாக வேண்டும். நகரங்களை நிர்மாணிக்கும் பணியில் அவர்கள் அடிமை வேலை பார்க்க வேண்டும்  ‘ மன்னனின் ஆணை இஸ்ரயேல் மக்களை அதிர்ச்சியின் உச்சியில் நிறுத்தியது. அவர்களுடைய சுதந்திரமும், இது வரை சேமித்த செல்வமும் அந்த ஒரே ஆணையால் பறிபோய்விட்டது. அரசனுடைய ஆணை ஆனந்தமாய் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர்களை ஒரே நாளில் அழுகைக்குள் தள்ளியது. அவர்கள் எகிப்தியர்களுக்கு அடிமைகளாய் ஆனார்கள்.

இஸ்ரயேலர்களை அடிமைப்படுத்திய எகிப்தியர்கள் அவர்களைக் கடுமையான வேலைகளைச் செய்ய வைத்தனர். இஸ்ரயேலர்கள் வலிமையானவர்கள் எனவே அவர்களைக் கொண்டு மன்னன் இரண்டு நகரங்களைக் கட்டத் தீர்மானித்தான். இஸ்ரயேல் மக்கள் அனைவரும் புதிய நகரம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிறுவர், முதியவர், பெண்கள் என்ற பாகுபாடோ  சலுகைகளோ யாருக்கும் அளிக்கப்படவில்லை. அவர்கள் அனைவருமே  கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டி இருந்தது. அடிமைகளின் உயிருக்கு எந்தவிதமான மதிப்பும் இருக்கவில்லை. நாள்தோறும் நூற்றுக்கணக்கான அடிமைகள் நகர் நிர்மாணிக்கும் பணியில் பெரிய பெரிய பாறைக் கற்களுக்கு அடியே நசுங்கியும், இடிபட்டும் இறந்து போனார்கள். அப்படி இறந்தவர்களைப் பற்றி யாருமே கவலைப் படவில்லை.

எபிரேயர்களுக்கு உணவு மட்டுமே வழங்கப் பட்டது. அவர்களுக்கு எதிர்த்துப் பேசும் உரிமையோ, மறுத்துக் கூறும் உரிமையோ தரப்படவில்லை. அதிகாலை முதல் நள்ளிரவு வரை அவர்கள் நகர் நிர்மாணிக்கும் பணிகளில் உயிரைக் கொடுத்து உழைத்தார்கள்.

ஆனாலும் அவர்களின் வம்சம் மட்டும் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது. ஆண்டுதோறும் அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அடிமைகளாய் இருந்தாலும் அவர்களுடைய வம்சம் வளரக் கூடாது என்று மன்னன் நினைத்தான். எனவே அவன் புதிதாய் ஓர் ஆணையிட்டான். அவன் மருத்துவப் பெண்களை அழைத்து,
‘ நீங்கள் இஸ்ரயேல் குலப் பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போது ஆண் குழந்தை பிறந்தால் உடனே கொன்று விட வேண்டும்’ என ஆணையிட்டான்.

மருத்துவப் பெண்கள் மனம் வருந்தினார்கள். மன்னனின் ஆணை தவிர்க்க முடியாதது தான், ஆனாலும் அவர்கள் குழந்தைகளைக் கொல்லவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பின் மன்னன் நகர்வலம் வந்தபோது ஏராளமான சிறு ஆண்குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தன. மன்னன் சினந்தான். மருத்துவப் பெண்களை அழைத்தான்.

‘ஆண்குழந்தைகளைக் கொல்லவேண்டும் என்பதல்லவா என் கட்டளை ! நீங்கள் அதை மீறி விட்டீர்கள். நகர் முழுவதும் ஏராளம் இஸ்ரயேல் சிறுவர்களைப் பார்க்கிறேன். என்னுடைய கட்டளைய மீறிய உங்களுக்கு என்ன தண்டனை தெரியுமா ?’ மன்னன் கோபத்துடன் கேட்டான்.

‘மன்னா… மன்னியுங்கள். அரசருடைய ஆணையை மீறும் அளவுக்கு நாங்கள் அறிவிலிகள் அல்ல. அப்படிச் செய்தால் எங்கள் உயிர் எங்களிடம் இருக்காது என்பதும் எங்களுக்குத் தெரியாதா ? நாங்கள் உங்கள் கட்டளைகளை மீறியதேயில்லை’ மருத்துவப் பெண்கள் பணிவாய் சொன்னார்கள்.

‘பின் எப்படி இஸ்ரயேல் குலத்தில் ஆண் குழந்தைகள் விளையாடுகின்றன. பிறந்தவுடன் குழந்தைகள் இறக்காதது தானே இதற்குக் காரணம் ?’ மன்னன் மீண்டும் கோபத்தில் கத்தினான்.

‘மன்னா… அதற்குக் காரணம் நாங்களல்ல. அந்த இஸ்ரயேல் குலப் பெண்கள் தான். அவர்கள் மிகவும் வலிமையானவர்கள். நாங்கள் அவர்களுக்குப் பிரசவம் பார்க்கச் செல்லும்முன்பே அவர்கள் குழந்தைகளைப் பெற்று விடுகிறார்கள். எனவே எங்களுக்கு குழந்தைகளைக் கொல்லும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டதேயில்லை. எங்களை நம்புங்கள்’ உயிருக்குப் பயந்து நடுங்கினார்கள் மருத்துவப் பெண்கள்.

‘சரி நீங்கள் போகலாம். இனிமேல் உங்களை நம்பிப் பயனில்லை நானே நேரடியாக மக்களுக்கு ஆணையிடுகிறேன்’. என்று கூறி மன்னன் புதிய ஆணை ஒன்றை அறிவித்தான்.

‘அடிமைகளுக்குப் பிறக்கும் எந்த ஆண்குழந்தையும் வாழக் கூடாது. அவர்கள் நைல் நதியில் எறிந்து கொல்லப்பட வேண்டும். பெண் குழந்தைகள் வாழட்டும்’

இஸ்ரயேல் குலத்துப் பெண்களும் ஆண்களும் இந்த அறிவிப்பினால் கதிகலங்கிப் போனார்கள். ஆனாலும் மன்னனின் கட்டளைக்கு மறுப்பு ஏது ?  அடிமைகள் மன்னனின் கட்டளையை நிறைவேற்றத் துவங்கினார்கள். அதன் பின் பிறந்த ஆண் குழந்தைகள் எல்லோரும் நைல் நதியில் வீசப்பட்டார்கள். பத்து   மாதம் சுமந்து கனவுகளோடு பெற்றெடுத்த குழந்தைகளை அவர்கள் ஒப்பாரியோடு ஆற்றில் வீசியதால், பிரசவ வீடுகள் எல்லாம் ஒப்பாரி ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. ஏராளமான பிஞ்சு உயிர்களைக் குடித்த அந்த நைல் நதி வழக்கம் போல மெளனமாய் ஓடிக் கொண்டிருந்தது.

அந்நாட்களில், ஒரு அடிமைத் தம்பதியினர் பிரசவ நாளுக்காகக் காத்திருந்தனர். ‘கடவுளே… எங்களைக் கைவிடாதிரும். எங்களுக்கு ஆண்குழந்தை வேண்டாம். ஒரு பெண் குழந்தையைத் தாரும்’ என கண்ணீரோடு வேண்டிக் கொண்டிருந்தனர்.

நாட்கள் நெருங்கிக் கொண்டே இருந்தன. அவர்களிடம் பதட்டமும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

பிரசவ நாளும் வந்தது. அவளுக்குப் ஒரு அழகான குழந்தை பிறந்தது. அவசர அவசரமாக குழந்தையைப் பார்த்த தம்பதியினர் அதிர்ந்து போயினர். அது ஒரு ஆண் குழந்தை.

‘ஐயோ.. என்ன செய்வேன். தவமிருந்து பெற்ற மகனை நான் நைல் நதிக்குத் தின்னத் தருவதா ? தண்ணீரில் வீசவா தங்கத்தை நான் பெற்றெடுத்தேன் ‘ என்று அழுது புலம்பினர். ஆனாலும் குழந்தை பிறந்த செய்தியை அவர்கள் யாருக்கும் சொல்லவில்லை.

குழந்தை ரகசிய அறையில் வளர்க்கப் பட்டான். நாட்கள், வாரங்களாகி, வாரங்கள் மாதங்களானது. மூன்று மாதம் முடிவடைந்தது.

எத்தனை நாள் தான் ஒரு குழந்தையை மறைத்து வைக்க முடியும் ?. எந்த நேரமும் எகிப்திய அதிகாரிகளால் தங்கள் வீட்டுக் கதவு தட்டப் படலாம். தங்கள் குழந்தையின் தலை வெட்டப் படலாம் என்னும் பயம் அவர்களைக் கொன்று கொண்டிருந்தது. இறுதியாக ஒரு முடிவு எடுத்தனர்.

‘ஆண்டவரே… இது நீர் எங்களுக்குத் தந்த மகன். இவனை நாங்கள் நைல் நதியில் மிதக்க விடுவோம். நீர் தான் இவனைக் காத்துக் கொள்ள வேண்டும்’ என உருக்கமாக மன்றாடினர். பின் தண்ணீர் நுழையாத ஒரு பேழையைச் செய்து அதற்குள் குழந்தையை வைத்து மூடி நைல் நதியில் மிதக்க விட்டனர்.

நைல் நதி ஒரு அடிமையின் குழந்தையைச் சுமந்து கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. நைல் நதியின் நாணல்களிடையே அந்தப் பேழை மெல்ல மெல்ல நுழைந்து பயணித்துக் கொண்டிருந்தது. என்ன நடக்குமோ என்னும் அச்சத்தில் தூரமாய் நின்று கவனித்துக் கொண்டிருந்தாள் அந்தக் குழந்தையின் அக்கா.

பேழை நகர்ந்து நகர்ந்து மன்னனின் மகள் குளிக்கும் இடத்திற்கு வந்தது. மன்னனின் மகளும் தோழிகளும் நீராடிக் கொண்டிருக்கையில் அது அவர்களுக்கு அருகே மிதந்து வந்தது. இதைத் தூரத்திலிருந்து பார்த்த சகோதரி திகைத்துப் போனாள். ‘ஐயோ… யாரிடம் சேரக் கூடாது என்று நினைத்தோமோ அவர்களிடமே சென்று சேர்ந்து விட்டதே. என் சகோதரனும் நைல் நதிக்குள் எறியப்படுவானே’ என அழுதாள். ஆனால் நடந்ததோ வேறு !

மன்னனின் ஹ்மகளை அந்தக் குழந்தையின் கொள்ளை அழகு கட்டிப் போட்டு விட்டது. ‘இந்தக் குழந்தையை நான் வளர்ப்பேன்’ என்றாள்.

‘அதெப்படி முடியும் ? இது எபிரேயக் குழந்தையாயிற்றே. அடிமையின் மகனல்லவா ? இவன் சாகவேண்டும் என்பது தானே மன்னனின் ஆணை’ தோழியர் பயந்தனர்.

‘ஆணையிட்டது என் தந்தை தானே. அவருக்குத் தெரியாமலேயே வளர்ப்போம். நீங்கள் இதைப்பற்றி யாரிடமும் மூச்சு விடக் கூடாது’

‘சொல்கிறோம் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். இவனை எப்படி வளர்ப்பீர்கள் ? பாலூட்டி வளர்க்க ஒரு தாய் வேண்டுமே ..’

‘நீங்கள் போய் குழந்தையை இழந்த ஒரு எபிரேயப் பெண்ணை அழைத்து வாருங்கள். அவள் இவனை வளர்க்கட்டும். குழந்தை வளர்ந்தபின் அவளுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுத்து விட்டு இவனை நான் பெற்றுக் கொள்வேன். சரிதானே ?’ மன்னனின் மகள் கேட்டாள்.

தோழியர் அரைமனதோடு ஒத்துக் கொண்டனர். இதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் சகோதரி தோழியர் முன் ஒன்றும் அறியாதவளாக வந்து நின்றாள்.

தோழியர் அவளிடம், ‘ நீ போய் ஒரு எபிரேயச் செவிலியை அழைத்து வா. ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும். நல்ல கூலி கொடுக்கலாம் என்று சொல்லி அழைத்து வா’ என்றனர்.

அவள் ஆனந்தமாய் ஓடிப் போய் தன் தாயை அழைத்து வந்தாள். குழந்தையை வளர்க்க வாய்ப்புக் கிடைத்த சொந்தத் தாய் மகிழ்ந்தாள். தன் சொந்த மகனுக்குச் செவிலியானாள்.

குழந்தை வளர்ந்தான். தாய் அவனை அரண்மனையில் மன்னனின் மகளிடம் ஒப்படைத்தாள். பையனைப் பார்த்த இளவரசி மகிழ்ந்தாள். நதியிலிருந்து அவனை எடுத்திருந்ததால் அவள் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள். மோசே என்றால் ‘எடுக்கப் பட்டவன்’ என்று பொருள்.

இந்த மோசே தான் அரசனை எதிர்ப்பான் என்றும், அடிமைகளை விடுதலை செய்ய வைத்து எகிப்தை விட்டு வெளியே கூட்டிச் செல்வான் என்றும் அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

எபிரேய குலத்தில் பிறந்த மோசே எகிப்தியர்களின் மாளிகையில் வளர்ந்தான். அவன் அடிமை இனத்தைச் சேர்ந்தவன் என்பது எகிப்தியர்களுக்குத் தெரியாது. ஆனால் தான் அடிமையாய் இருக்கும் எபிரேய குலத்தைச் சேர்ந்தவன் என்பதும், ஆளும் எகிப்திய குலத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதும் மோசேக்குத் தெரிந்தே இருந்தது.

சிறுவன் மோசே வளர்ந்து இளைஞனானான். பார்வைக்கு மிகவும் கம்பீரமாக இருந்த அவனை அரச குலப் பெண்கள் எல்லோரும் காதல் கண்ணோடு பார்த்தார்கள்.

ஒருநாள் மோசே அரசகுல ஆண்களுக்கே உரிய கம்பீரத்தில் நகர்வலம் வந்தார். அவருடைய முதல் நகர்வலம் ! . அரச ஆடைகள் அணிந்து, சாரட் வண்டியில் பவனி வந்தபோது தான் அவருக்கு இதுவரை தெரிந்திராத தன் இன மக்களின் அடிமை நிலை தெரிய வந்தது. எகிப்திய அதிகாரிகள் எபிரேயர்களை அடித்துத் துன்புறுத்தி வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். எழுந்து நடக்கவே இயலாத மூதாட்டிகளும், வயதானவர்களும் கூட கடுமையான வேலைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்ட மோசே மிகவும் வருந்தினார். தன் இன மக்கள் அடி வாங்கி அடிமைகளாய்க் கிடக்கிறார்களே என பரிதவித்தார். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்னும் எண்ணம் அவர் மனதில் எழுந்தது.

சற்று தூரம் சென்றபோது ஒரு எபிரேயனை எகிப்திய அதிகாரி மூர்க்கமாக அடித்துக் கொண்டிருந்தான். அந்த அடிமையோ எழ முயன்று எழ முயன்று முடியாமல் கிடந்தான். இருந்தாலும் அந்த எகிப்தியன் அடிப்பதை நிறுத்தவில்லை. இதைக் கண்ட மோசே மிகுந்த ஆவேசம் கொண்டார். வண்டியிலிருந்து இறங்கி நேராக அவனிடம் சென்றார்.

‘ஏன் அவனை தொடர்ந்து அடிக்கிறாய் ? அவன் தான் வலிமையில்லாமல் விழுந்து கிடக்கிறானே ? உனக்கு மனசாட்சியே இல்லையா ?’

‘அடிமைகளை இப்படித் தான் நடத்த வேண்டும். பல்லக்கிலா ஏற்றிச் சுமக்க முடியும் ‘ எகிப்தியன் சொல்லி முடிக்கும் முன் மோசேயின் கரம் அவனுடைய கழுத்தை நெரித்தது.

‘நீயெல்லாம் வலி என்றால் என்னவென்றே அறியாதவன். இதோ இப்போது அறிந்து கொள் ‘ என்று அவனுடைய கழுத்தை நெரித்தார்.
அந்த எகிப்தியன் மோசேயின் வலிமையான கரங்களுக்குள் நசுங்கி இறந்தே போனான் !.

மோசே சுற்றும் முற்றும் பார்த்தார். நல்லவேளை யாரும் கவனிக்கவில்லை. இறந்து போன எகிப்திய அதிகாரியை அங்கேயே மண்ணில் புதைத்து விட்டு எந்தவிதமான குற்ற உணர்வும் இன்றி அரண்மனைக்குத் திரும்பினார்.

மறு நாளும் தன்னுடைய மக்களின் நிலையைப் பார்ப்பதற்காக மோசே நகர்வலம் வந்தார். அப்போது இரண்டு இஸ்ரயேலர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். மோசே ஆச்சரியப் பட்டார். எகிப்தியர்கள் தான் இஸ்ரயேலர்களை அடிக்கிறார்கள் என்றால், இங்கே இரண்டு இஸ்ரயேலர்களே தங்களுக்குள் சண்டையிடுகிறார்களே ? என்று வருந்தினார். நேராக அவர்களிடம் சென்றார்.

‘உங்களுக்கென்ன பைத்தியமா ? எகிப்தியர்கள் தான் உங்களை அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்றால், நீங்கள் ஏன் உங்களுக்குள் அடித்துக் கொள்கிறீர்கள் ? நீங்கள் ஒற்றுமையாய் இருப்பது தானே உங்களுக்கு நல்லது ?’ என்றார்.

 ’ நீ… யார் அதைக் கேட்க ?…’ என்றனர் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள்.

‘உங்கள் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். ஒன்றுபட்டு இருந்தால் தான் உங்களால் அமைதியான வாழ்க்கை வாழவும் முடியும், கொடுமைகளை எதிர்க்கவும் முடியும். இல்லையேல் இந்த அடிமை நிலையில் காலம் முழுதும் இருக்க வேண்டியது தான்’

‘நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ. நேற்று ஒரு எகிப்தியனை அடித்துக் கொன்று யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைத்து விட்டாயல்லவா… அதே போல எங்களையும் கொன்று புதைத்து விடலாம் என திட்டமிடுகிறாயா’ அவர்கள் கத்தினர்.

மோசே திடுக்கிட்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். சுற்றிலும் எகிப்திய அதிகாரிகள் நிறைந்திருந்தனர். மன்னன் காதுக்கு விரைவில் இந்த செய்தி எட்டிவிடும் என்பது அவருக்குப் சட்டெனப் புரிந்தது. உதவி செய்யப் போய்ப் பெரும் இக்கட்டில் மாட்டியதை உணர்ந்தார். அவர் நினைத்தது போலவே, உடனே விஷயம் மன்னன் காதுக்குப் போயிற்று.

‘ அதெப்படி ஒரு எகிப்தியன் இன்னொரு எகிப்தியனைக் கொல்லமுடியும். அதுவும் ஒரு அடிமைக்காக ? என்ன சொல்கிறீர்கள். நம்ப முடியவில்லையே’ மன்னன் கொதித்தான்.

‘மன்னா… அவன் உண்மையில் எகிப்தியன் இல்லையாம். அவன் எபிரேய அடிமையாம். உங்கள் மகள் தான் அவனை வளர்த்ததாக அரண்மனையில் பேசிக் கொள்கிறார்கள்’ ஒரு அதிகாரி மெல்லிய குரலில் பேசினார்.

‘என்ன… அவன் அடிமையா ? அரண்மனை இத்தனை காலம் ஒரு அடிமை மகனையா அரசனைப் போல நடத்தியது ? இது அரச குலத்துக்கே அவமானம்.  அவனை உடனே கொன்று விடுங்கள். ‘ மன்னனின் கோபம் பலமடங்கு உயர்ந்தது.

அதற்குள் மோசே உயிர் பிழைக்க ஓடிவிட்டிருந்தார். எகிப்தை விட்டே வெளியேறி மிதியான் என்னும் நாட்டில் குடியேறினார். சிலகாலம் அங்கு தங்கியிருந்த அவர், அங்கு வாழ்ந்து வந்த ஒரு அர்ச்சகரின் மகளை மணமுடித்தார். வருடங்கள் ஓடின. மோசே தன் இன மக்கள் எகிப்தில் அடிமையாய்க் கிடப்பதை மறந்தார். தன் மனைவியோடும், குடும்பத்தினரோடும் மகிழ்ச்சியாக வாழ்ந்து அவந்தார். அவருடைய மாமனாருக்கு ஏராளமான ஆடுகள் இருந்தன. அதை மேய்ப்பதையே மோசே தொழிலாகக் கொண்டார்.

எகிப்தில் மோசேவைக் கொல்லத் தேடிய மன்னன் இறந்து விட்டான். அத்துடன் அவனைக் கொல்லவேண்டும் என்னும் அரச ஆணையும் மறைந்து விட்டது. ஆனால் இஸ்ரயேலர்களின் அடிமைத்தனம் மட்டும் மாறவேயில்லை. அவர்களுடைய சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவர்கள் கடவுளிடம் தங்கள் குறைகளைக் கூறி அழுது கொண்டே இருந்தார்கள். கடவுள் அவர்களைக் காப்பாற்ற முடிவெடுத்தார்.

ஒரு நாள் மோசே ஓரேபை மலைப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு சற்றுத் தொலைவில் இருந்த ஒரு பச்சைப் புதர் பற்றி எரியத் துவங்கியது. மோசே திடுக்கிட்டார். இதென்ன இந்த பச்சைச் செடி எப்படி திடீரெனத் தீப்பிடித்தது ? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று எண்ணியவராக புதரை உற்றுப் பார்த்தார். பச்சைப் புதர் எரிந்து கொண்டே இருந்தது. ஆனால் கருகவில்லை. அதைக் கண்ட மோசே மிகவும் ஆச்சரியமடைந்தார். புதரை நோக்கி நடந்தார்.

‘நில்… மோசே…. நில்….’ எரிந்து கொண்டிருந்த புதரிலிருந்து ஆண்டவரின் குரல் ஒலித்தது.

மோசே உச்சி முதல் பாதம் வரை சில்லிட்டார். நடுங்கினார்.

‘நீ.. உன்னுடைய செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு அருகே வா. இது கடவுளின் இடம். புனிதமான இடம். இதை நீ அசுத்தப் படுத்தாதே…’
மோசே பயந்தவராய், தன்னுடைய மிதியடிகளைக் கழற்றி எறிந்து விட்டு நெருப்பை நெருங்கினார்.

‘எகிப்தில் என்னுடைய மக்கள் அடிமையாய்க் கிடக்கிறார்கள். நீ போய் அவர்களை விடுவிக்க வேண்டும். எகிப்தின் செல்வங்களோடு இஸ்ரயேல் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும். அவர்களை நீ தான் எகிப்தை விட்டு பாலும், தேனும் பொழியும் சுதந்திர தேசமான கானான் தேசத்துக்குக் கூட்டி வர வேண்டும். உன்னோடு நான் இருந்து உனக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன்’ கடவுள் சொன்னார்.

‘ஐயோ நானா… கடவுளே… என்னால் முடியாது. எனக்கு எந்தத் திறமையும் இல்லை ‘ மோசே மறுத்தார்.

‘இல்லை. இதைச் செய்வதற்கு சரியான ஆள் நீ தான். நீ… எபிரேயப் பெரியவர்கள் சிலரைக் கூட்டிக் கொண்டு எகிப்திய மன்னனின் அரண்மனைக்குப் போ. அங்கு போய் மன்னனிடம், கடவுள் தான் என்னை உன்னிடம் அனுப்பினார்.. நீ அடிமையாய் வைத்திருக்கும் எபிரேயர்கள் கடவுளுக்கு ஒரு பலி செலுத்த விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறி பாலை நிலத்தில் கடவுளுக்குப் பலிசெலுத்தட்டும் என்று சொல்’  என்றார் கடவுள்

‘ஐயோ ஆண்டவரே… இது எப்படி முடியும். எபிரேயப் பெரியவர்களிடம் நான் போய் கடவுள் அனுப்பினார் என்றால் எந்தக் கடவுள் என்று கேட்பார்கள். யாரும் நம்பப் போவதில்லை. நான் என்ன சொல்வது’

‘இருக்கிறவர் நானே… என்பதே கடவுளின் பெயர்’ எனச் சொல்.

‘ஆண்டவரே… நான் சென்றால் என்னை எகிப்திய மன்னன் கொன்று விடுவானே’ மோசே அஞ்சினார்.

‘எகிப்தில் உன்னைக் கொல்லச் சட்டம் இயற்றியவன் இறந்து விட்டான். எனவே நீ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவேண்டாம்.  அங்கே உனக்கு எந்த ஆபத்தும் வராமல் நான் பார்த்துக் கொள்வேன். நீ போய் நான் சொன்னதைச் செய்’ கடவுள் சொன்னார்.

‘கடவுளே… என்னை யாரும் நம்ப மாட்டார்கள். என்னை எல்லோரும் பைத்தியக்காரனாய்ப் பார்ப்பார்கள்’

‘ மோசே !  உன் கையில் வைத்திருக்கிறாயே ஒரு கைத்தடி… அதைக் கீழே போடு’ என்றார் கடவுள். மோசே அதைக் கீழே போட்டார் உடனே அது ஒரு படமெடுத்தாடும் பாம்பாக மாறியது. மோசே பயந்து போய் பின் வாங்கினார்.
‘பயப்படாதே… அதன் வாலைப் பிடித்துத் தூக்கு’ கடவுள் ஆணையிட்டார். மோசே அதன் வாலைப் பிடித்துத் தூக்க அது மீண்டும் கைத்தடியாக மாறியது.

‘மோசே… இப்போது உன் கையை மடிக்குள்  விட்டு வெளியே எடு’ கடவுள் கூற, மோசே அப்படியே கையை உள்ளே விட்டு வெளியே எடுத்தார். அவருடைய கை தொழுநோயாளியின் கையாய் மாறியிருந்தது. மோசே திகைத்தார்.
‘கவலைப்படாதே மோசே… உன்னுடைய கையை மீண்டும் உன் மடிக்குள் போட்டு வெளியே எடு’ கடவுள் கூறினார். மோசே அப்படியே செய்தான், இப்போது அவருடைய கை சாதாரண நிலைக்கு வந்திருந்தது.

‘நீ எகிப்திற்குப் போய் உன்னை நம்ப மறுப்பவர்களிடம் இதைக் காண்பி அவர்கள் நம்புவார்கள்’ என்றார் கடவுள்.

‘ஐயோ… கடவுளே… இதெல்லாம் மந்திர தந்திரம் என்று சொல்லி என்னை நம்ப மறுப்பார்கள்… என்னை விட்டு விடுங்கள்’ மோசே தப்பிக்கும் வழி தேடினார்.

‘இவற்றைப் பார்த்தும் அவர்கள் நம்பாவிடில், நீ நைல் நதியின் தண்ணீரை கொஞ்சம் அள்ளி தரையில் ஊற்று அது இரத்தமாக மாறும்’ என்றார்,

‘ஐயோ… ஆண்டவரே…  எனக்குப் பேசவே தெரியாது. சபையில் நிற்கும் துணிச்சலும் எனக்கு இல்லை. வேறுயாரையாவது அனுப்புங்கள்’ மோசே விண்ணப்பித்தான்.

மோசே தொடர்ந்து மறுப்பதைக் கண்ட கடவுளுக்குக் கோபம் வந்தது. ‘உனக்கு வாயைக் கொடுத்தவனே நான் தான். என்னிடம் நீ பேச்சைப் பற்றி பேசுகிறாயா. கடவுளிடமே நீ மறுத்துப் பேசுகிறாயா ? சரி… உனக்குக் கூட்டாளியாக ஆரோனை அழைத்துப் போ’ என்றார்.

கடவுள் இவற்றைச் சொன்னதும், எரிந்து கொண்டிருந்த தீ சட்டென அணைந்து போயிற்று. மோசே ஏதும் புரியாதவராய் திரும்பிப் பார்க்க அவரை நோக்கி ஆரோன் வந்து கொண்டிருந்தார்.

மோசே வியந்தார். கடவுள் சொன்னதெல்லாம் உண்மையே என்பதைப் புரிந்து கொண்டார்.

மோசேயும், ஆரோனும் கடவுளுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக எகிப்திற்குச் சென்றார்கள். எகிப்தைச் சென்றடைந்து அங்கிருந்த எபிரேய மக்களைச் சந்தித்து கடவுள் சொன்னதையெல்லாம் சொன்னார். மக்களோ நம்பவில்லை. ‘ இதெல்லாம் சுத்த உளறல். கடவுளாவது பேசுவதாவது ‘ என்று சிரித்தனர். மோசே கலங்கவில்லை. கடவுள் சொன்ன அனைத்து அற்புதங்களையும் அவர்கள் முன்னே செய்து காட்டினார். தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் ஆரோன் ஆண்டவரின் திட்டத்தைத் தெளிவாகச் சொன்னார். மக்கள் நம்பினார்கள்.

மோசே சில பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு மன்னனின் முன் வந்து நின்றான்.

‘மன்னா.. நான் மோசே வந்திருக்கிறேன். கடவுள் இஸ்ரயேலரை விடுதலை செய்யச் சொன்னார். அவர்களை விட்டு விடு. அவர்கள் பாலை நிலத்தில் கடவுளுக்குப் பலி செலுத்த வேண்டுமென்பது எங்கள் கடவுளின் கட்டளை ‘ என்றார்.

மன்னன் உரக்கச் சிரித்தான். ‘ஆஹா… எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டாய் ? எல்லோரையும் விடுவிப்பதா ?’ என்று சொல்லி மீண்டும் சிரித்தான்

‘மன்னா… இது கடவுளின் கட்டளை. இதை நீ நிறைவேற்றியே ஆகவேண்டும்’ மோசே துணிவும் கம்பீரமும் நிறைந்தவராய் பேசினார்.

‘யார் உன் கடவுள். அவரை எனக்குத் தெரியாதே. அவர் சொல்வதை நான் ஏன் கேட்கவேண்டும் ? எனக்குத் தான் வேறு கடவுள் இருக்கிறாரே ‘ மன்னன் மீண்டும் சிரித்தான்

‘கடவுளைப் பழித்துப் பேசாதே. அரசனாய் இருக்கிறோம் என்னும் ஆணவத்தில் பேசாதே. கடவுளின் வார்த்தைக்குக் கட்டுப்படு’

‘கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு விட்டு கட்டுப்படு என்று கட்டளையிடுகிறாயா ?’ மன்னன் கோபமானான்.

‘கட்டுக் கதையா ! இதோ பார்…’  மோசே தன் கையிலிருந்த கோலை தரையில் போட்டார். அது சீறும் பாம்பாக மாறியது.

‘ஓ… இதுதான் உன் கடவுளின் செயலா ? உன் கடவுள் வெறும் மந்திரவாதியா ? இதே போல் செய்து காட்ட என்னிடம் ஏராளமான மந்திரவாதிகளும், கண்கட்டு வித்தைக்காரர்களும், சூனியக்காரிகளும் உண்டு… பார்க்கிறாயா ?’ மன்னன் ஏளனமாகக் கூறிக்கொண்டே அருகிலிருந்த அரசவை மந்திரவாதிகளைப் பார்த்தான்.

மந்திரவாதிகள் தங்கள் கைகளில் இருந்த மந்திரக் கோல்களைத் தரையில் போட்டார்கள். அவை பாம்புகளாக மாறின. ஆனால் மோசே யின் பாம்பு அந்த பாம்புகளையெல்லாம் விழுங்கி விட்டது.

மன்னனுக்குக் கோபம் வந்தது. ஒரு அடிமை மகன் அரசவையில் வைத்துத் தன்னை அவமானப் படுத்தி விட்டானே என்று கடுங்கோபமடைந்தான்.

‘ மோசே… ஆரோன்…. உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ? ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கும் இஸ்ரயேல் மக்களின் மனதை நீ கெடுக்கிறாய். உன்னுடைய செயல்களினால் பாதிக்கப் படப் போவது யார் தெரியுமா ? உன் இன மக்கள் தான்.’ மன்னன் அதட்டினான்.

‘கடவுளின் முன்னிலையில் இருக்கும் எங்களுக்கு எந்தப் பாதிப்பையும் எவனும் தந்து விட முடியாது’ மோசே பதில் கூறினார்.

‘ஓஹோ… கடவுள் !!! பார்க்கலாமா ? இன்று முதல் அடிமைகளுக்கு செங்கல் அறுப்பதற்காக வழங்கப் பட்டுக் கொண்டிருந்த வைக்கோல் கொடுக்கப் பட மாட்டாது. அவர்களே வைக்கோலைத் தேடிச் சேகரிக்க வேண்டும். ஆனால் , இன்றுவரை அவர்கள் அறுத்துக் கொண்டிருந்த செங்கற்களில் ஒன்று கூட குறையக் கூடாது. இது அரச கட்டளை’ என்றான் மன்னன்.

இதைக்கேட்ட மோசே வருந்தினார். இஸ்ரயேலர்களோ மோசேயின் மேல் கடும் கோபம் கொண்டனர்.

‘இதற்குத் தான் உன்னுடைய கடவுளையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்தாயா ? வைக்கோல் கிடைக்கும் போதே குறிப்பிட்ட செங்கற்களை அறுத்துக் கொடுக்க நா ங்கள் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கிறது. இப்போது நீ வந்து எங்கள் வேலையை இரட்டிப்பாக்கி விட்டாய்’

‘உன் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டே, எங்கள் மனதையும் கலைத்து விட்டாயே’

‘எங்களைக் கொல்வதற்கான வாளை எடுத்துக் கூர் தீட்டி மன்னனின் கையில் கொடுத்தது போல் ஆயிற்றே. இதுவரை கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச சலுகைகள் கூட இனிமேல் கிடைக்காதே’

இஸ்ரயேலர்கள் மோசேயை வசை மொழிகளால் தாக்கினார்கள். மோசே வருந்தவில்லை. எபிரேயர்களை மீட்டுச் செல்வது என்னும் கடவுளின் கட்டளையில் உறுதியாக இருந்தார்.

மறுநாள் மன்னன் நைல் நதிக் கரையோரம் நீராட வருகையில் மோசே அவர் முன் நின்றார்.
‘மன்னா.. மீண்டும் சொல்கிறேன். கடவுளின் கட்டளையை மீறாதே… மக்களைப் போகவிடு’ என்றார்.

‘இல்லாவிட்டால் நீ என்ன செய்வாய் ? வேறு ஏதாவது வித்தை கைவசம் இருந்தால் செய்து காட்டேன். பொழுது போகும் ‘ மன்னன்  சிரித்தான்.

மோசே தன்னிடமிருந்த கோலை எடுத்து நைல் நதியை அடித்தார். நைல் நதியில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் முழுதும் இரத்தமாக மாறியது. நதியிலிருந்து தொட்டிகளில் சேமித்து வைக்கப் பட்டிருந்த தண்ணீரும் இரத்தமாக மாறிற்று. நதி இரத்தமாக மாறியதால் அதிலிருந்த மீன்கள் எல்லாம் மூச்சு விட முடியாமல் மடியத் துவங்கின.

மன்னனுக்கு அருகில் நின்றிருந்த மந்திரவாதி ஒருவன் ஒரு குவளை நல்ல நீரை எடுத்து மந்திரம் கூறி நிலத்தில் ஊற்ற அதுவும் இரத்தமாக மாறியது.
‘மோசே… ஏதாவது புதிய வித்தை கண்டு பிடி. உன்னுடைய வித்தைகளெல்லாம் ஏற்கனவே என்னுடைய மந்திரவாதிகளுக்குத் தெரிந்தது தான் !’ மன்னன் நகைத்தான்.

ஏழு நாட்கள் எகிப்து முழுவதும் இரத்தத்தாலும், செத்த மீன்களின் நாற்றத்தாலும் நிறைந்திருக்கையில் மோசே மீண்டும் மன்னன் முன்னிலையில் வந்து நின்றார்.

‘இஸ்ரயேல் மக்களைப் போகவிடு. இல்லையேல் கடவுள் உன்னுடைய நகரை முழுதும் தவளைகளால் தாக்கப் போகிறார்’ மோசே எச்சரித்தார்.

‘ஓ… மன்னனுக்கு எதிராகத் தவளைகளா ? உன் கடவுள் தவளை வினியோகிப்பவரா… நடக்கட்டும் நடக்கட்டும்’ என்று மன்னன் இளக்காரமாய்க் கூறினான்.

மறுநாள் காலையில் நகர் முழுதும் தவளைகளால் நிறைந்தது. குளங்கள், ஏரிகள், கிணறுகள் எங்கும் தவளைகள் நிறைந்தன. அவை கூட்டம் கூட்டமாக வெளியேறி சாலைகளிலும் மக்களின் வீடுகள் சமையலறைகள், உணவுகள் , படுக்கையறைகள் எங்கும் நிறைந்தன. மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்தது. மன்னன் மோசேயை அழைத்தான்.

‘இந்த தவளைகள் நகரை அழிக்கின்றன. அவற்றை இல்லாமல் செய்து விடு. இல்லையேல் நீ பெரும் அழிவுக்கு உள்ளாவாய்’ மன்னன் சினந்தான்.

‘இது கடவுளின் சித்தம். நான் எதுவும் செய்ய இயலாது. நீ இஸ்ரயேலர்களைப் போக அனுமதிப்பாய் என்றால், நான் கடவுளிடம் மன்றாடி தவளைகளை ஒழிக்கிறேன்’ மோசே தெளிவாகச் சொன்னார்.

‘ சரி…  நீ தவளைகளை அழித்து விடு. நான் உன் மக்களைப் போக விடுகிறேன்’ மன்னன் சொன்னான்.

மோசே ஆண்டவரிடம் மன்றாட, தவளைகள் எல்லாம் செத்து மடிந்தன. அவை நகரம் முழுவதும் பெரிய மலைகள் போல குவியல் குவியலாகச் கூட்டிச் சேர்க்கப் பட்டு அழிக்கப் பட்டன. தவளைகளின் தொல்லை ஒழிந்ததைக் கண்ட மன்னன் மகிழ்ந்தான். தான் சொன்ன வாக்கிலிருந்து பின் வாங்கினான். அடிமைகளைப் போகவிடவில்லை.

மோசே மன்னனிடம். ‘ நீ .. கடவுளின் ஆணையை மீறிவிட்டாய். இனி நடக்கப் போவதைப் பார்..’ என்று சொல்லிக் கொண்டே தன் கையிலிருந்த கோலை எடுத்து புழுதி நிறைந்திருந்த தரையில் அடித்தார். உடனே நகர் முழுதும் கொசுக்களால் நிறைந்தது. அவை மக்களின் மேலும் கால்நடைகளின் மேலும் அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சத் துவங்கின. மக்கள் பெரும் அவஸ்தைப் பட்டார்கள்.

மன்னன் மந்திரவாதிகளை அழைத்தான்.
‘ம்… நீங்கள் இதேபோல கொசுக்களை உருவாக்குங்கள்’

மந்திரவாதிகள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் கொசுக்களை உருவாக்க முடியவில்லை. ‘மன்னா இது கடவுளின் செயல் தான் எங்களால் கொசுக்களை உருவாக்க முடியவில்லை’ என்றனர் மந்திரவாதிகள்.

‘அதெப்படி இது கடவுளின் செயலாகும் ? இது கடவுளின் செயல் என்றால் ஏன் எபிரேய மக்களின் மேலும் கொசுக்கள் கடிக்கின்றன ?, எபிரேயர் வீடுகளில் ஏன் தவளைகள் இருந்தன ? இது உங்கள் கடவுளின் செயல் அல்ல…’ என்றான் மன்னன்.

‘மோசே… நீ… இந்தக் கொசுத்தொல்லையை தீர்த்தால் நீங்கள் உங்கள் கடவுளுக்குப் பலியிடும் சுதந்திரத்தைத் தருவேன். ஆனாலும் இஸ்ரயேலர்கள் எகிப்தை விட்டுச் செல்ல அனுமதி கிடைக்கப் போவதில்லை’ மன்னனின் மனம் இறுகியது.

‘இந்த நாட்டிலே பலியிடுதல் கடவுளின் விருப்பமல்ல. இங்கிருந்து மூன்று நாட்கள் நடந்து பாலை நிலத்தில் தான் நாங்கள் பலியிட வேண்டும்’ மோசே சொன்னார்.

‘அது நடக்கப் போவதில்லை. ‘ மன்னன் எதிர்த்தான்.

‘நீ முரண்டு பிடிப்பது மனிதர்களோடு அல்ல, கடவுளோடு. இனிமேல் நீ காணப் போவது மிகக் கொடுமையானதாய் இருக்கும். நாளைக்கு வண்டுகள் தேசமெங்கும் நிறையும். ஆனால் எந்த எபிரேயனையோ, அவனுடைய வீடு களையோ, கால்நடைகளையோ அவை தாக்காது. இதிலிருந்தாகிலும் நீ கடவுளின் செயலைக் கண்டு கொண்டால்… அது உனக்கு நலம்’ மோசே சொன்னர்.

மறுநாள் நகரெங்கும் வண்டுகள் அட்டகாசம் செய்தன. ஆனால் எபிரேயர்களும், அவர்களின் வீடுகள் கால்நடைகளும் வண்டுகளால் தாக்கப் படவில்லை.
இதைக் கண்ட எகிப்தியர்கள் இது கடவுளின் செயல் தான் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

மன்னன் மோசேயிடம்  ‘சரி… இந்த முறை நான் உங்களைப் போக விடுகிறேன். ஆனால் பாலை நிலத்தில் வெகுதூரம் போய் விடாதீர்கள். அங்கு உங்கள் கடவுளுக்குப் பலியிடும்போது எனக்காகவும் மன்றாடுங்கள்’ என வஞ்சனையாய்ப் பேசினான். கடவுள் வண்டுகளை அழித்தார். மன்னன் மீண்டும் தன் வாக்குறுதியிலிருந்து பின் வாங்கினான்.

‘இனிமேலும் நீ மக்களை போக அனுமதிக்காவிடில் இனிமேல் உன் கால்நடைகள் எல்லாம் கொடிய நோய் வந்து சாகும்’ மோசே எச்சரித்தார்.
அவ்வாறே எகிப்தியரின் கால்நடைகள் எல்லாம் மடிந்தன. அடிமைகளின் கால்நடைகளோ நன்றாக இருந்தன. அவற்றிற்கு ஒன்றும் நேரவில்லை. இதைக் கண்டும் மன்னனின் மனம் மாறவில்லை.

‘மன்னா…. நீ… கடவுளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறாய். நீ அழிவது உறுதி. கடுமையான தண்டனைகள் தான் உன்னைத் திருத்தும். எனவே உன்னுடைய இனத்தினர் மீதெல்லாம் கொப்புளங்கள் தோன்றி அவதிப்படுவீர்கள்’ என்றார் மோசே.

அவ்வாறே எகிப்தியர் அனைவருக்கும் உடலில் கொப்புளங்கள் தோன்றி பயங்கர வலியைக் கொடுத்தன. அதிலிருந்து மன்னனோ, மந்திரவாதிகளோ கூடத் தப்பவில்லை. எகிப்தியர்கள் அனைவரும் கொப்புளங்கள் வந்த உடலினால் பெரிதும் அவதியுற்றனர். மன்னனிடம் சென்று தங்களுக்கு உதவுமாறு வேண்டினர்.
மன்னன் மீண்டும் மறுத்தான். அவனுடைய நெஞ்சம் கடினமாகி இருந்தது.

மோசே மன்னனிடம் ‘நீ… இப்போதும் கூட என்னுடைய மக்களை அனுப்ப இசையாதது உன் அழிவுக்கான நாள் நெருங்கி வருவதையே காட்டுகிறது. நாளை கல்மழை பொழியும் எகிப்து அழியும்’ என்றார்.

அவர் சொன்னபடியே மறுநாள் கல்மழை பொழியத் துவங்கியது. உலகம் இதுவரைச் சந்தித்திராத பெரிய கல்மழை அது. பயங்கரக் கல்மழையானது எகிப்தியரின் எஞ்சியிருந்த கால்நடைகளையும், வீடுகளையும், மரங்களையும் அழித்தது. கல்மழை தரையில் விழுந்தபோது அதிலிருந்து நெருப்பு கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. ஆனால் எபிரேயர்கள் எவரையும் கல்மழை தாக்கவில்லை. மழை விழுந்து நெருப்பு எழுந்திருப்பதைக் கண்டதும் மன்னன் திகிலுற்றான். மழை விழுந்து நெருப்பு அணைவதை மட்டுமே கண்டிருந்த மக்கள், மழை விழுந்து நெருப்பு எழுவதைக் கண்டதும் நடுங்கினர்.

‘மோசே.. நான் இதுவரை செய்ததெல்லாம் தவறுதான். இந்தக் கல்மழையை எப்படியாவது நிறுத்திவிடு. உன் மக்களைப் போக விடுகிறேன். நீங்கள் போய் விரும்பும் இடத்தில் உங்கள் ஆண்டவரைத் தொழுது கொள்ளுங்கள்’ என்றான் மன்னன்.
மோசே கல்மழையை நிறுத்தினார். ஆனால் மன்னனின் கல்நெஞ்சம் மாறவில்லை.

மீண்டும் மோசே மன்னனிடம்,’ எத்தனை காலம் தான் நீ இப்படி ஆண்டவனின் கட்டளைகளை மீறுவாய் ? கடவுளோடு போரிட்டு யாரேனும் வெற்றிபெற முடியுமா ? மூடனே… நாளை வெட்டுக்கிளிகள் உன் நகரை நிறைக்குமே என்ன செய்வாய் ?’ என்றார்.
மறுநாள் வெட்டுக் கிளிகளால் நகரம் நிறைந்தது. தரை காண முடியாத அளவுக்கு வெட்டுக் கிளிகள் எங்கும் நிறைந்தன. அவை பயிர்கள் அனைத்தையும் தின்று தீர்த்தன.

மன்னன் மோசேயிடம்’ வெட்டுக் கிளிகளை நகரை விட்டு அப்புறப் படுத்து. உங்கள் அனுப்புவேன் இது சத்தியம்’ என்றான்.

‘இனிமேலும் வஞ்சனை செய்யாதே … வெட்டுக் கிளிகளை ஒழிக்கிறேன். ஆனால் இப்போதும் நீ வாக்கு மாறினால் நிலமை பன் மடங்கு மோசமாகும்’ என்று கூறிய மோசே வெட்டுக் கிளிகளை ஒழித்தார். அவை கடலில் போய் மறைந்தன.

மன்னன் மோசேயை நோக்கி,’ சரி. இனிமேலும் நான் உன்னுடன் போட்டியிட விரும்பவில்லை. நீங்கள் போய் பலி செலுத்துங்கள். ஆனால் உங்கள் இன ஆண்கள் மட்டும் போய் வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி வாருங்கள். பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் எல்லாம் இங்கேயே இருக்கட்டும்’ என்றான்.

மோசேயோ,’ இல்லை… இது கடவுளுக்கான பலி. ஆண், பெண், குழந்தைகள் என்று பாகுபாடில்லாமல் எல்லோரும் போக வேண்டும். எல்லா செல்வங்களோடும் போக வேண்டும். கால்நடைகளை நாங்கள் பலியிடவேண்டும். எனவே கால்நடைகளும் மிகவும் முக்கியம்’ என்றார்.

மன்னன் வழக்கம் போலவே மறுத்தான்.

மோசே நகருக்குள் இருளை வரவழைத்தார். எகிப்தியர் வாழும் பகுதிகளை காரிருள் மூடியது. அவர்களால் எதையும் பார்க்க முடியவில்லை. கொளுத்தி வைக்கும் தீப்பந்தங்களால் அந்த இருளை விலக்க முடியவில்லை. அருகருகே இருக்கும் இருவர் கூட தங்கள் முகங்களைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. மூன்று நாட்களாகியும் இருள் விலகாததைக் கண்ட மன்னன் மோசேயிடம் விண்ணப்பித்தான். ‘ நீங்கள் பலி செலுத்தப் போங்கள். உங்கள் இனப் பெண்கள், குழந்தைகள் கூட வரட்டும். ஆனால் கால்நடைகள் மட்டும் எகிப்திலேயே தங்கட்டும்’ என்றான்.

மோசேவோ,’ இல்லை… பலியிடுவதற்கான பொருட்கள் எங்களுக்கு மிகவும் அவசியம்’ என்றார். மன்னனோ ‘என் நாட்டுச் செல்வங்கள் எகிப்தை விட்டு வெளியேறுவதை எப்படி என்னால் அனுமதிக்க முடியும் ? செல்வங்களை நீங்கள் எடுத்துச் செல்வதை நான் அனுமதிக்கப்போவதில்லை ‘ என்று கூறி மோசேயின் விருப்பத்தை நிராகரித்தான்.

மோசே ஆண்டவரிடம் மன்றாடினார். ‘ கடவுளே .. என்ன செய்து இந்த மக்களை மீட்பது. இந்த மன்னனின் மனதை மாற்ற முடியவில்லையே ?’ என்று மனமுருகி வேண்டினார்.

கடவுள் மோசேயிடம்.’ இனிமேல் அவன் உங்களைப் போக விடுவான். நான் அவனுக்கு மிகப் பெரிய தண்டனை கொடுக்கப் போகிறேன். அது என்ன தெரியுமா ? எகிப்திய இனத்தின் தலைப்பேறான பிள்ளைகளையும், கால் நடைகளையும் கொன்றுவிடுவேன். அதற்குப் பின் அவன் மனம் மாறாமல் இருக்க முடியாது’ என்றார்.

மோசே ஆண்டவரிடம்,’ ஆண்டவரே.. இந்த முறையும் நீர் எபிரேயர்களுக்கு உதவ வேண்டும். அவர்களின் தலையீற்றுகளை அழிக்க வேண்டாம்’ என விண்ணப்பித்தார்.

‘அவர்கள் என் மக்கள் அவர்களை நான அழிக்க மாட்டேன். நான் சொல்வதன் படி நீ செய்’ என கடவுள் மோசேயை அனுப்பினார்.

மோசே இஸ்ரயேலர்களிடம் போய்… ‘இன்று இரவு கடவுள் தலையீற்றுகளை அழிக்கப் போகிறார். அதிலிருந்துத் தப்பிக்க வேண்டுமெனில் நீங்கள் உங்கள் வீட்டுக் கதவில் ஆட்டு இரத்தத்தைப் பூசி வையுங்கள். இரத்தம் பூசப்பட்ட வீடுகள் தப்பும். இரத்தம் பூசப்படாத வீடுகளில் உள்ள தலையீற்றுகள் அழிக்கப் படும்’ என்றார்.

இஸ்ரயேலர்கள் அவ்வாறே செய்தனர். இரவில் கடவுளின் தூதர் நகர் முழுவதும் உலா வந்தார். அப்போது இரத்தம் பூசப்படாதிருந்த எகிப்தியர்களின் குடும்பங்களில் இருந்த தலையீற்றுகள் இறந்து போயின. எபிரேயர்கள் தப்பினர்.

மறுநாள் விடிவதற்குச் சற்று நேரம் இருக்கையில் நகரின் ஒரு ஓரத்தில் அழுகுரல் ஒன்று ஆரம்பமானது. அழுகுரலைக் கேட்டு எழுந்த எபிரேயர்கள், தங்கள் குடும்பத்தில் மூத்தவன் இறந்து போயிருப்பதைக் கண்டு அவர்களும் அழ ஆரம்பித்தனர். இப்படியே சங்கிலித் தொடர் போல அழுகை எகிப்து முழுவதும் பரவியது. சாவு இல்லாத வீடுகளே இல்லாததால், அழுகை பெருஞ் சத்தமாய் எகிப்தை நிறைத்தது. ஆனால் எபிரேயர்களின் வீடுகளில் யாரும் அழியவில்லை.

‘மன்னா…. விஷயம் அறிந்தீர்களா ? எகிப்தில் எல்லா வீடுகளிலும் மரணம் நடந்திருக்கிறது’ தலை தெறிக்க ஓடி வந்து விஷயம் சொன்னான் ஒருவன்.

‘இதெல்லாம் அந்த மோசேயின் வேலை.. அவனை ஒழிக்காமல் விடமாட்டேன்’ மன்னன் உறுமினான்.

‘மன்னா… எகிப்து அழிகிறது. அந்த அடிமை நாய்களை அனுப்பி விடுங்கள். இவர்களால் நாம் பட்ட துன்பம் போதும்’ அதிகாரிகள் விண்ணப்பித்தனர்.

‘அப்படி அனுப்பினால் நான் பயந்து பின் வாங்கியது போல் ஆகாதா ? முடியவே முடியாது’ மன்னன் மறுத்தான்.

‘இப்போது எல்லாத் தலைச்சன் பிள்ளைகளும் இறந்து விட்டார்கள். இனி மிச்சமிருக்கும் மக்களும் இறந்தபின் தான் அடிமைகளை அனுப்புவீர்களா ‘ அதிகாரிகள் ஆவேசப் பட்டனர்.

அப்போது தான் மன்னனுக்கு, தன்னுடைய மகனின் ஞாபகம் வந்தது. ஒரே மகன். தலைச்சன் பிள்ளை ! மன்னன் தன் மகனுடைய அறைக்கு ஓடினான். அதிர்ந்தான் ! அங்கே அவனுடைய ஒரே மகன் படுக்கையில் பிணமாகக் கிடந்தான்.

ஒரே இரவில் நிகழ்ந்த அந்த மாபெரும் துயரச் சம்பவம் மன்னனை மிகவும் பயப்படுத்தியது. இனிமேலும் மோசேயும் அவன் இனத்தினரும் எகிப்தில் இருந்தால் எகிப்து முழுதும் அழிந்துவிடும் என்று மன்னன் அஞ்சினான். தன் உயிரை நினைத்துப் பயப்பட ஆரம்பித்தான்.

உடனே உத்தரவிட்டான். நனூற்று முப்பது ஆண்டுகள் அடிமைகளாய் வாழ்ந்த எகிப்தியரின் உள்ளங்களில் தேனாய்ப் பாய்ந்தது அந்த உத்தரவு. தங்கள் உரிமைகளையெல்லாம் இழந்து  அதிக உழைப்பால் வருந்திக் கொண்டிருந்த மக்களை உற்சாகத்தில் திளைக்கவைத்தது அந்த உத்தரவு. ‘இஸ்ரயேலர்கள் உடனே எகிப்தை விட்டு வெளியேறட்டும்’ என்பதே அது.

சுமார் ஆறுஇலட்சம் அடிமைகள் அளவில்லாத ஆனந்தம் அடைந்தார்கள். அவர்கள் தங்கள் கால்நடைகளையும், சொத்துக்களையும் பயணத்துக்காய் ஆயத்தப் படுத்தினார்கள். பயணத்துக்கு முன் எபிரேயப் பெண்கள் எகிப்தியர்களிடமிருந்து பொன்னும் வெள்ளியும் வாங்கிக் கொண்டார்கள். எபிரேயர்கள் கேட்ட எதையும் எகிப்தியர்கள் மறுக்கவில்லை. காரணம் நாடு முழுவதும் எகிப்தியர்களின் கடவுள் மீதான பயம் நிறைந்திருந்தது.

ஒரு மிகப் பெரிய பேரணியாக அந்த விடுதலையின் பயணம் ஆரம்பமானது. அவர்கள் பாலை நிலம் வழியாக நடந்து கடவுள் கட்டளையிட்டிருந்த கானான் நாட்டிற்குப் போகத் துவங்கினார்கள். எபிரேய மக்கள் திரள் எகிப்தைக் கடந்தனர். கடவுள் அவர்களோடு இருந்தார்,.

இரவு நெருங்கியபோது திடீரென ஒரு நெருப்புத் தூண் அவர்களுக்கு முன்னால் சென்றது. எபிரேயர்கள் கடவுளில் செயலை எண்ணி வியந்தனர். பகலில் பாலை நிலத்தில் வெயில் வந்தபோது அவர்களுக்கு மேல் வானத்தில் ஒரு மிகப் பெரிய மேகம் வந்து அவர்களை வெயிலிலிருந்து பாதுகாத்தது. அவர்கள் நடந்து நடந்து செங்கடலின் கரையில் வந்தார்கள்.

இதற்கிடையில் மன்னனின் காதுகளுக்குச் செய்தி வந்தது.’ மன்னா … கடவுளுக்குப் பலியிட பாலை நிலத்துக்குப் போகிறோம் என்று போன மக்கள் தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் பாலை நிலத்தைக் கடந்து விட்டார்கள்’

மன்னன் சினந்தான். மகனை இழந்த சோகமும், அடிமைகளை இழந்த கோபமும் எல்லாம் சேர்ந்து அவனை மிகவும் ஆவேசப் பட வைத்தன. அவன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு எபிரேயர்களைத் தேடிப் புறப்பட்டான்.

தூரத்தில் செங்கடலின் கரையில் இஸ்ரயேலர்கள் நிற்பதைக் கண்ட மன்னன் வேகமாக படையைச் செலுத்தினான். எகிப்தியப் படை தொலைவில் வருவதைக் கண்ட எபிரேயர்கள் அலறினார்கள்.

‘ஐயோ…. இந்த பாலை நிலத்தில் நாம் சாகப் போவது உறுதி.’

‘பேசாமல் அடிமை வேலை செய்திருந்தால் உயிரையாவது காப்பாற்றியிருக்கலாம்’

‘எங்களைக் கொல்லத்தான் இங்கே கூட்டி வந்தீர்களா ?’
மக்கள் பலவிதமாகப் புலம்பினார்கள்.

மோசே ஆத்திரமடைந்தார்.’ மடையர்களே… இன்னும் எத்தனை நாள் தான் இப்படி நம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள். எத்தனையோ அதிசயங்களைக் கண்டீர்களே ? இன்னும் கடவுளை நீங்கள் நம்பவில்லையா ?கடவுள் எல்லோரையும் காப்பார்’ என்று சொல்லிக் கொண்டே தன் கையிலிருந்த கோலை எடுத்து செங்கடலை நோக்கி நீட்டினார்.

உடனே பெரும் காற்று வீசியது. அந்த பெரும் காற்று செங்கடலை இரண்டாகப் பிரித்தது. தண்ணீர் இருபுறமும் வானளாவ நிற்க, தண்ணீருக்கு இடையே கட்டாந்தரை தோன்றியது. இஸ்ரயேலர்கள் அந்த அற்புதக் காட்சியைக் கண்டு மெய்மறந்தார்கள். அனைவரும் கடலுக்குள் இறங்கி ஓடினார்கள். எகிப்தியப் படைகள் நெருங்கிக் கொண்டிருந்தன. திடீரென ஒரு நெருப்பு வேலி எகிப்தியர்களுக்கும் எபிரேயர்களுக்கும் இடையே வந்து நின்றது. எகிப்தியர்கள் அந்த நெருப்பு வேலியைக் கடக்க வெகுநேரமாயிற்று. அதற்குள் எபிரேயர்கள் கடலுக்குள் வெகுதூரம் சென்று விட்டிருந்தனர்.

எல்லா எபிரேயர்களும் மறுகரையை நெருங்கிய நேரத்தில் எகிப்தியப் படைகள் கடலுக்குள் இறங்கி விரைந்தன. இஸ்ரயேலர்கள் மிகவேகமாக மறுகரையை அடைந்தனர். எல்லா எகிப்தியப் படைகளும் இஸ்ரயேலர்களை அழிக்கும் ஆவேசத்தில் நடுக்கடலைத் தாண்டி வண்டிகளில் வேகமாக வந்துகொண்டிருந்தன. அப்போது மோசே தன்னுடைய கையிலிருந்த கோலை மீண்டும் கடல் மீது நீட்டினார். இருபக்கமும் மதில் போல உயர்ந்து நின்றிருந்த கடல் திடீரென ஒன்றுசேர்ந்தது ! பாதை தண்ணீரால் மூழ்கியது.

எகிப்தியப் படைகள் கடலுக்குள் மூழ்கி அழிந்தன. யாருமே தப்பவில்லை. இஸ்ரயேலர்கள் விடுதலையானார்கள். செங்கடலைத் தாண்டி மகிழ்ச்சியோடு தங்கள் விடுதலைப் பயணத்தைத் தொடந்தார்கள். அத்துடன் எகிப்தியர் பற்றிய அச்சுறுத்தல் முடிந்து போயிற்று.

மோசே தனி ஒருவராக மக்களை வழிநடத்திக் கொண்டிருந்தார். அவர்களுடைய பயணம் சுடும் பாலை நிலத்தைக் கடந்து கொண்டிருந்தது. அடிமைகளாய் இருந்த மக்கள் சுதந்திரமாய் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்த மோசே மிகவும் ஆனந்தப் பட்டார். ஆனால் அந்த ஆனந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

சில நாட்களிலேயே மக்கள் மோசேயிடம் மிகப் பெரிய விண்ணப்பம் ஒன்றை வைத்தார்கள். ‘நாங்கள் கொண்டுவந்திருந்த உணவுகள் எல்லாம் தீர்ந்து விட்டன. எங்களுக்கு உணவு வேண்டும்’

‘இந்த பாலை நிலத்தில் உணவுக்கு எங்கே போவது ? உங்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் தீர்ந்து விட்டனவா ?’ மோசே கேட்டார்.

‘ ஆம். உணவுகள் எல்லாம் தீர்ந்து விட்டன…’ மக்கள் பதில் சொன்னார்கள்.

‘எகிப்திலே எங்களுக்குப் பட்டினி நிலமை வந்ததே இல்லை. நீர் தான் எங்களை பாலை நிலத்தில் கூட்டி வந்து சாகடிக்கிறீர்.’ மக்கள் மோசேயின் மீது பழி சுமத்தினார்கள்.

‘கவலைப் படாதீர்கள். கடவுளின் அதிசயச் செயல்களை நீங்கள் துவக்கம் முதலே கண்டு வருகிறீர்கள் அல்லவா ? நாளை முதல் மீண்டும் காண்பீர்கள். உங்களுக்கு உண்பதற்கான உணவைக் கடவுள் நாளை கொடுப்பார்’ என்றார் மோசே.

‘அப்படியானால் எங்களுக்கு அப்பம் கிடைக்குமா ?’ மக்கள் கேட்டனர்.

‘கடவுளை நம்புங்கள். உங்களுக்குத் தேவையானது எல்லாம் கிடைக்கும்’ மோசே கூறினார்.

மறுநாள் காலையில் மக்கள் தங்களுடைய கூடாரங்களை விட்டு வெளியே வந்தபோது வெளியே பனி மூடிய நிலையில் ஏதோ ஒரு பொருள் எங்கும் நிறைந்து கிடப்பதைக் கண்டார்கள். மக்கள் அதைக் கைகளில் எடுத்து தங்களுக்குள்ளேயே ‘மன்னா ?’ என கேட்டுக் கொண்டனர். மன்னா என்றால் எபிரேய மொழியில் ‘இது என்ன ?’ என்பது பொருள். மன்னா என்பதே தன் பெயராயிற்று. மக்கள் அதை எடுத்துக் கொண்டு மோசேயிடம் ஓடினார்கள்.

‘ஐயா… எங்கள் கூடாரங்களின் வெளியே இதோ இந்தப் பொருள் நிறைந்து கிடக்கிறது. இது என்ன? ‘ என்று கேட்டனர்.

அதற்கு மோசே,’ இது தான் உங்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் உணவு. இது மிகவும் சுவையானது. இந்த அப்பங்களை சுட்டு உண்டு பசியாறுங்கள். இதுவே கடவுள் உங்களுக்குத் தந்த உணவு.’ என்றார்.

‘அப்படியா ! அப்படியானால் இப்போதே போய் எல்லாவற்றையும் சேகரித்துக் கூடாரங்களுக்குள் வந்து கொட்டி வைக்கிறோம்’

‘வேண்டாம். கடவுள் இந்த உணவு உங்களுக்கு எப்போதும் தருவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே உங்கள் ஒரு நாள் தேவைக்குரியவற்றை மட்டும் எடுங்கள். கூடுதலாக எடுக்க வேண்டாம். வாரத்தின் ஆறாவது நாள் மட்டும் இரண்டு நாட்களுக்குரியதை சேகரியுங்கள். ஏனென்றால் ஏழாவது நாள் நமது கடவுளின் ஓய்வு நாள். அன்று நீங்கள் வேலை செய்யக் கூடாது ‘ என்றார் மோசே.

மக்கள் மகிழ்ந்து போனார்கள். அவர்கள் மன்னாவை சேகரித்து உண்டு மகிழ்ந்தனர். அது மிகவும் சுவையான எண்ணைப் பணியாரம் போல இருந்தது. ‘ஒருவேளை நாளை கிடைக்காமல் போனால் என்ன செய்வது ? ‘ சில சந்தேகப் புத்தி கொண்டவர்கள் பேசிக் கொண்டார்கள்.
‘நாம் போய் இன்னும் கொஞ்சம் சேகரித்து வைப்போம். மோசேக்குத் தெரியவேண்டாம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் அதிகமாகச் சேகரித்து கூடாரத்துக்குள் பதுக்கி வைத்தார்கள். மறு நாள் காலையில் அவர்கள் பார்த்தபோது, அடுத்த நாளுக்காகச் அவர்கள் சேமித்து வைத்திருந்த மன்னா அழுகிப் போய் புழுக்கள் நிறைந்து கெட்ட வாசம் வீசிக்கொண்டிருந்தது.

மோசே அவர்களிடம்’ ஏன் கடவுளின் கட்டளையை மீறுவதிலேயே குறியாய் இருக்கிறீர்கள் ? ஒரு நாள் உணவைத்தானே சேகரிக்கச் சொன்னேன் ? நீங்கள் ஏன் நம்பிக்கையில்லாமல் அதிகமாய் சேகரித்தீர்கள் ? ‘ என்று கோபித்தார்.

அவர்கள் அவரிடம்,’ அது தவறுதான். ஆனால் இதன் மூலம் ஒரு உண்மை எங்களுக்கு விளங்கியிருக்கிறது. ஒரு நாள் சேகரிப்பது மறு நாளுக்குப் பயன்படாது ! நீரோ ஏழாவது நாளுக்கான உணவை ஆறாவது நாளே சேமிக்கச் சொல்லியிருக்கிறீர். அப்போது மட்டும் இது அழுகாதா ? அப்படியானால் ஏழாவது நாள் பட்டினி தானா ? .’ என்றனர்.

‘மீண்டும் மீண்டும் நீங்கள் உங்கள் அறிவால் கேள்விகள் உருவாக்கி குழம்பிப் போகிறீர்கள். கடவுளை நம்புங்கள்’ என்றார் மோசே.

ஆறாவது நாள் மக்கள் இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவைச் சேகரித்தார்கள். என்ன ஆச்சரியம் ! மறுநாள் எந்த உணவும் கெட்டுப் போகவில்லை.
மக்கள் கடவுளின் அருளை எண்ணி வியந்தனர். ஆனால் அப்போதும் சில மனிதர்களுக்குள்ளிருந்த சந்தேகப் பேய் அகலவில்லை.

அவர்கள் ‘சரி…. ஏழாவது நாள் வெளியே போனால் என்ன நடக்கும் ? ஏன் மோசே ஏழாவது நாள் வெளியே போய் மன்னாவைச் சேகரிக்காதீர்கள் என்றார் ? ‘ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டே சிலர் ஏழாவது நாள் மன்னாவைச் சேகரிக்கச் சென்றனர். என்ன ஆச்சரியம், நேற்றுவரை எங்கும் நிறைந்து கிடந்த மன்னா இன்று எங்குமே காணோம். வெற்றுத் தரை மட்டுமே அவர்களுக்கு முன்னால் இருந்தது !

‘உங்களையெல்லாம் திருத்தவே முடியாது. கடவுளின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்.’ என்று மோசே மீண்டும் எச்சரித்தார்.

அவர்களுடைய பயணம் தொடர்ந்தது. தினமும் காலையில் அவர்களுக்கான மன்னா கிடைத்துக் கொண்டே இருந்தது. ஒருநாள் கூட யாரும் பசியால் வாடவில்லை. ஆனால் வெறும் மன்னாவைத் தின்று தின்று மக்கள் சலித்து விட்டனர். இறைச்சியும் இருந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் நினைத்து மோசேயிடம் வந்தனர்.

‘மோசே…. நாங்கள் எகிப்தில் இருந்தபோது அடிமைகளாய் தான் இருந்தோம், ஆனாலும் எங்களுக்கு விருப்பமான உணவு கிடைத்து வந்தது. இப்போது இந்த வெறும் அப்பங்களை மட்டும் நாங்கள் எத்தனை காலம் தான் தின்பது ? எங்களுக்கு இறைச்சி வேண்டும்’ என்றனர் மக்கள்.

‘நீங்கள்… அழிந்து போகும் உணவுக்காகத் தான் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறீர்கள். வெறும் உணவுக்காக அடிமை வாழ்வு தான் மேல் என்று சொல்கிறீர்களே… உங்களுக்கே வெட்கமாக இல்லையா ? சரி. பொறுத்துக் கொள்கிறேன். நான் கடவுளிடம் பேசி உங்களுக்கு இறைச்சிக்கு ஏற்பாடு செய்கிறேன்’ மோசே கூறினார்.

மோசே கடவுளிடம் பேசினார். கடவுள் சொன்னார்.’ மோசே… கவலைப்படாதே., நாளை அவர்களுக்கு இறைச்சி கிடைக்கும்’.

மறுநாள் காலையில் மக்கள் தங்கள் கூடாரங்களை விட்டு வெளியே வந்தபோது தரையெங்கும் காடைகள் நிறைந்து கிடந்தன. மக்கள் தேவையானமட்டும் காடைகளைப் பொறுக்கி அவற்றின் இறைச்சியை உண்டு மகிழ்ந்தார்கள்.

பயணம் தொடர்ந்தது. பாலைவனப் பயணம், நாட்கள் செல்லச் செல்ல மக்களிடம் இருந்த தண்ணீரும் தீர்ந்து விட்டது. தண்ணீர் இருக்குமா என மக்கள் தேடி அலைந்தனர். எங்கும் தண்ணீர் இல்லை. கடைசியில் ஒரு பாலைவனச் சோலையைக் கண்டு மக்கள் ஆனந்தித்தார்கள். வேகமாக அதை நோக்கி ஓடினார்கள். அங்கே ஒரு பெரிய ஊற்று ! தாகம் கொண்ட மக்கள் எல்லாம் தண்ணீரை அவசர அவசரமாகக் குடித்தனர் !குடித்த வேகத்திலேயே அதை வெளியே துப்பினர். அது அத்தனை கசப்பு !

மோசேயிடம் மீண்டும் வந்தது முணுமுணுப்பு…’ எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட இல்லை. இருக்கும் தண்ணீரை வாயில் வைக்கவே முடியவில்லை அத்தனைக் கசப்பு !’.

மோசே அருகிலிருந்து ஒரு மரக் கட்டையை எடுத்து அந்த ஊற்றில் போட்டார். உடனே ஊற்று தன்னுடைய கசப்பை எல்லாம் களைந்து நல்ல சுவையானதாக மாறியது. மக்கள் தாகம் தீர தண்ணீரைக் குடித்து விட்டு, தங்கள் தோல்பைகளிலும் நிரப்பிக் கொண்டனர்.

பயணம் கானான் நாட்டை நோக்கி தொடர்ந்து நடந்தது. நாட்கள், வாரங்கள், மாதங்கள் என பயணம் நீண்டது.

மக்களுக்கு மீண்டும் தண்ணீர் தட்டுப் பாடு வந்தது. அது ஒரேபு பாறை நிலப் பகுதி. அங்கே தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளே காணப்படவில்லை. மீண்டும் மோசே கடவுளிடம் வேண்டினார். கடவுள் மோசேயிடம் பேசினார்.

‘நீ போய் ஒரேபு பாறையின் முன்னால் போய் நில். உன் கையிலிருக்கும் கோலால் அந்தப் பாறையை அடி. அதிலிருந்து தண்ணீர் வரும். அதைக் குடித்து மக்கள் தாகம் தணிக்கட்டும்’

மோசே அவ்வாறே செய்தார். பாறை மீது தன்னிடமிருந்த கோலால் அடித்தவுடன் தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. மக்கள் போதிய மட்டும் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டனர்.

இவ்வாறு மக்களின் தேவைகளையெல்லாம் மோசே தனியொருவராக கடவுளின் துணையோடு தீர்த்து வந்தார். அதனால் எப்போதும் அவருடைய கூடாரத்தைச் சுற்றி மிகப் பெரிய கூட்டம் வேண்டுதல்களோடு காத்துக் கிடந்தது. மோசேக்கு இளைப்பாற நேரமே கிடைக்கவில்லை. இதைக் கண்ட மோசேயின் மாமனார் மோசேயிடம்,

‘நீர் இப்படி தனியொருவனாய் மக்களைச் சமாளிக்க முடியாது. எனவே மக்களை குழுக்கள் குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் இறை பக்தியும், திறமையும் வாய்ந்த ஒவ்வொரு பெரியவரை தலைவராக அமர்த்தும்.’ என்றார். மோசேவிற்கும் அது சரியெனப் பட்டது. அப்படியே மக்கள் பிரிக்கப் பட்டனர். குழுக்கள் எல்லாம் சமமாக இல்லாமல், சில குழுக்களில் ஆயிரம் பேர், சில குழுக்களில் நூறுபேர் , சில குழுக்களில் ஐம்பது பேர் என பல அளவுகளில் இருந்தது. அந்தந்த குழுக்களை அந்தந்த தலைவர்கள் கவனித்துக் கொண்டார்கள் தலைவர்களால் தீர்த்து வைக்க முடியாத பெரிய பிரச்சனைகள் மட்டும் இப்போது மோசேயிடம் வந்தன.

அவர்களின் பயணம் சீனாய் மலையடிவாரத்தை வந்தடைந்தது.

மக்கள் மோசேயிடம் வந்து,’ கடவுள் உங்களோடு பேசுகிறார் … பேசுகிறார் என்கிறீரே… அந்தக் கடவுளை எங்களுக்குக் காட்டும். நாங்களும் கடவுளைக் காண வேண்டும் ‘ என்றனர்.

மோசே அவர்களிடம்,’ நான் கடவுளிடம் இது பற்றிப் பேசுகிறேன்’ என்றார்.

அன்றே கடவுள் மோசேயிடம், ‘நான் இன்றிலிருந்து மூன்றாவது நாள் இந்த மலையில் என்னுடைய மக்களுக்குக் காட்சி தருகிறேன். யாரும் மலையில் கால்வைக்கக் கூடாது. அப்படிக் கால் வைப்பவன் அழிக்கப் படுவான். எல்லோரும் மலையடிவாரத்தில் நின்று என்னை தரிசிக்கவேண்டும். உங்கள் கால் நடைகள் கூட இந்த மலையில் நடமாடக் கூடாது’ என்றார்.

விஷயம் கேள்விப் பட்ட மக்கள் மகிழ்ந்தனர். மூன்று நாட்களும் மிகவும் சுத்தமாகக் குளித்து, நல்ல ஆடைகளை அணிந்து எந்த விதமான இச்சைகளிலும் ஈடுபடாமல் கடவுளுக்காகக் காத்திருந்தனர்.

சரியாக மூன்றாவது நாள். வானத்தில் பேரிடி ஒன்று கேட்டது. கடவுள் நெருப்பு வடிவில் சீனாய் மலையில் வந்திறங்கியதை மக்கள் கண்டார்கள். மலை முழுதும் புகையத் துவங்கியது. மோசே கடவுளுடன் பேசினார். கடவுள் இடிமுழங்குவது போல மோசே க்குப் பதில் கொடுத்தார். மக்கள் நடுநடுங்கினர். மோசேயிடம் அவர்கள் ஓடிப் போய், ‘ஐயோ… கடவுளைக் கண்டது போதும். எங்களுக்குப் பயமாக இருக்கிறது. இனிமேல் நீர் மட்டுமே கடவுளுடன் பேசும்’ என்றனர்.

பின் கடவுள் மோசேயை மலையுச்சிக்கு அழைத்தார். ‘உலகுக்கெல்லாம் பொதுவான என்னுடைய கட்டளைகளை நான் தருவேன்.. மேலே வா’
மோசே மலையுச்சிக்குச் சென்றார். மக்கள் அனைவரும் நடுக்கத்தில் இருந்தனர். யாரும் மலையை நெருங்கக் கூட இல்லை.

கடவுள் மோசேயிடம் தம் கைப்பட பாறையில் எழுதிய பத்துக் கட்டளைகளை இரண்டு கல்வெட்டுகளாகப் பெயர்த்துக் கொடுத்தார். அதற்காக மோசே நீண்ட நாட்கள் மலையுச்சியிலேயே கடவுளுடன் தங்க வேண்டியதாயிற்று. மோசே மலையில் ஏறி நீண்ட நாட்கள் ஆனதால், மலையடிவாரத்தில் இருந்த மக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர்.

‘மலைக்குச் சென்றால் உடனே திரும்புபவராயிற்றே மோசே… இப்போது ஏன் இவ்வளவு தாமதம் ? மோசேயை நெருப்பு அழித்திருக்கக் கூடும்’

‘அவர் இனிமேல் திரும்பி வருவார் என்னும் நம்பிக்கை இல்லை. உண்ணாமல் ஒரு மனிதன் இத்தனை காலம் மலைமீது உயிரோடு இருக்கக் முடியுமா என்ன ‘

‘இனிமேல் என்ன செய்வது. ? யார் நம்மை வழி நடத்துவது ?’ என்றெல்லாம் மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. மக்களின் நடவடிக்கைகளும் மாறத் துவங்கின. அவர்கள் சிற்றின்பத்திலும், விரோதம், பகை , கோபம், சண்டை என கடவுளுக்குப் பிடிக்காத அனைத்து செயல்களையும் செய்யத் துவங்கினர். தங்களிடமிருந்த தங்கநகைகளையெல்லாம் ஓரிடத்தில் போட்டு உருக்கி ஒரு கன்றுக் குட்டியின் உருவத்தைச் செய்து ‘ இதுவே இனிமேல் நம் கடவுள். இதை நாம் வணங்குவோம்’ என்றார்கள். அந்த உருவத்திற்கு பலி செலுத்தவும், பூஜை செய்யவும் ஆரம்ப்பித்தனர்.

கடவுள் நாற்பது நாட்களாய் தன்னோடு மலையுச்சியில் இருந்த மோசேயிடம்,’ நீ கீழே போ. இந்த பத்துக் கட்டளைகள் அடங்கிய கல்லையும் உன்னுடன் எடுத்துச் செல். கீழேயிருக்கின்ற மக்கள் நீ வரமாட்டாய் என நினைத்துத் தவறான பாதையில் போகிறார்கள்’ என்றார்.

மோசே மலையுச்சியிலிருந்து கிளம்பி மலையடிவாரத்தை அடையும் போதே எங்கும் கேளிக்கைச் சத்தங்கள், நடனங்கள் என கூட்டம் அமர்களப் பட்டுக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மோசேயின் கோபம் கட்டுக் கடங்காமல் போயிற்று.

‘நானூறு ஆண்டைய அடிமைத்தனம் உங்களுடையது. அதை விட்டு வெளியேற்றிய ஆண்டவருக்கு எதிராகவே நடக்கிறீர்களே… பாவிகளே’ என்று உரத்த குரலில் கத்திக் கொண்டே கடவுள் கொடுத்த கட்டளைகள் இருந்த கல்லையும் ஆவேசத்தில் தூக்கி எறிந்தார். அது உடைந்து சிதறியது.

‘உங்களுக்கு வாழும் கடவுள் போதாதா ? தங்கக் கன்றுக் குட்டி என்ன தந்தது ? ‘ என்று கேட்டுக் கொண்டே அவர்களுடைய கன்றையும் பலி பீடங்களையும் தகர்த்தெறிந்தார். மோசேயைப் போலவே கடவுளின் கோபமும் அந்த மக்கள் மேல் இருந்தது. கடவுள் மோசேயை அழைத்து,
‘இனிமேல் நான் இந்த மக்களைக் கைவிடப் போகிறேன். என்னை நம்பாமல் தங்களை நம்பும் இவர்களை நான் கொன்று அழிப்பேன்’ என்றார்.

மோசே கடவுளிடம்’ கடவுளே… இதற்காகவா எனக்கு இத்தனை பணிகள் தந்து என்னை இந்த மக்களிடம் அனுப்பி வைத்தீர். இதைக் கேள்விப் பட்டால் எகிப்தியர்கள் எல்லோரும் இஸ்ரயேலர்களின் கடவுள் இஸ்ரயேலர்களைப் பாலை நிலத்துக்கு வஞ்சகமாய்க் கூட்டிப் போய் கொன்றுவிட்டார் என்று சொல்ல மாட்டார்களா ?  வேண்டாம் கடவுளே.. இந்த முறை அவர்களை மன்னியும்’ என்று மன்றாடினார்.

கடவுள் சம்மதித்தார். மோசே கீழே போய் குழுக்களின் தலைவர்கள் எல்லோரையும் அழைத்து, ‘தீயவர்கள் என்று தோன்றுவோரை எல்லாம் கொன்றுவிடுங்கள். மிஞ்சியிருப்போர் கடவுளின் கட்டளைகளைக் கேட்போராக இருக்கட்டும்’ என்று சொன்னார். அதன்படி சுமார் மூவாயிரம் பேர் கொன்று குவிக்கப் பட்டனர்.

கடவுள் மோசேயிடம் பத்துக் கட்டளையின் இரண்டாவது பிரதி ஒன்றைக் கொடுத்தார். ஆனாலும் கடவுள் மோசேக்கு தன்னுடைய முகத்தைக் காட்ட வில்லை. நெருப்பு, ஒலி போன்றவை மூலமாக மட்டுமே அவருடன் பேசி வந்தார். மோசேக்கு கடவுளின் முகத்தைக் காண வேண்டும் என்னும் ஆவல் வளர்ந்து கொண்டே இருந்தது.

ஒருநாள் அவர் கடவுளிடம்,’ கடவுளே உம்மை நெருப்பு வடிவிலும், ஓசைவடிவிலும், மேகம் வடிவிலும் நான் சந்தித்து வருகிறேன். ஒருமுறை எனக்கு உமது முகத்தைக் காட்டுவீரா ?’ என்று வேண்டினார்.

கடவுள் மோசேயின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். மோசேயோடு தினமும் மேகத்தின் வடிவில் அவருடைய கூடாரத்துக்குள்ளேயே சென்று பேசி வந்தார். மோசேயின் இந்த வேண்டுதலையும் கடவுள் நிராகரிக்கவில்லை.

‘மோசே… நீ என்னுடைய பிரிய பக்தன். என் நண்பன். உன்னுடைய வேண்டுதல்களை நான் நிராகரிக்கமாட்டேன். ஆனால் என்னைக் கண்டவன் பிறகு உயிர்வாழ முடியாது. இது தான் உண்மை நிலை.’ என்றார்.

மோசே வருந்தினார். மோசேயின் கவலையைக் கண்ட கடவுள் அவரிடம்.’ சரி.. சரி நீ அதோ அந்த பாறையின் இடையே நின்றுகொள். என்னுடைய முகத்தை உன்னால் தரிசிக்க இயலாது. நீ உன் இன மக்களுக்காக இன்னும் நீண்ட நாட்கள் உயிரோடு இருந்தாக வேண்டும்.’ என்றார்.

அதன்படி மோசே பாறையின் இடையே நின்று கொண்டார். கடவுள் அவருக்கு எதிரே நடந்து போனார். எங்கும் வெளிச்சம் சொல்ல முடியாத அளவுக்கு நிறைய, கடவுள் போவதை மோசே பின்னாலிருந்து பார்த்தார். கடவுளின் முகத்தைப் பார்க்கவில்லை.

மீண்டும் மக்களை நல்வழிப்படுத்தி மோசே பயணத்தைத் துவங்கினார். எகிப்திலிருந்து பயணம் புறப்பட்டு ஆண்டுகள் இரண்டு முடிந்திருந்தன.

பயணத்தில் மீண்டும் அவர்களுக்குச் சோதனை வந்தது. தண்ணீர் கிடைக்கவில்லை.
கடவுள் மோசேயிடம். ‘உனக்கு எதிரே இருக்கும் பாறையிடம் போய் தண்ணீர் கேள் அது உனக்குத் தண்ணீர் தரும்’ என்றார்.

மோசே பாறையின் அருகில் போனார். பாறையருகில் சென்று பாறையிடம் நீர் கேட்பதற்குப் பதிலாக தன்னிடமிருந்த கோலால் பாறையை ஓங்கி அடித்தார் ! முதல் முறையாக கடவுளின் கட்டளையை மீறிச் செயல்பட்டார் மோசே. தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. ஆனால் தன்னுடைய கட்டளையைக் கடைபிடிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்ட மோசேயின் மீது கடவுள் கோபம் கொண்டார்.

‘நான் உன்னிடம் பாறையிடம் பேசத் தான் சொன்னேன். பாறையை அடிக்கச் சொல்லவில்லை. நான் சொன்னதைக் கேட்காமல் நீ உன்னைக் கடவுளாகப் பாவித்து பாறையை அடித்து விட்டாய். எனவே நீ கானான் நாட்டில் கால் வைக்க மாட்டாய்’ என்றார்.

மோசே அழுதார். ‘கடவுளே… தெரியாமல் நடந்த பிழை இது. என்னை மன்னியும். கானான் தேசத்தில் மக்களைக் கொண்டு சேர்க்கும் வரத்தை எனக்குத் தரவேண்டும்’ என்று கதறினார்.

கடவுள் அவரிடம்,’ நீ என்றும் என் பாசத்துக்குரியவன் தான். ஆனாலும் நீ கானான் நாட்டை தூரத்திலிருந்து தான் பார்ப்பாய். அதனுள் நுழைய மாட்டாய்’ என்றார்.

கானானை நோக்கிய பயணம் தொடர்ந்தது. மக்கள் பாவம் செய்தும், கடவுளுக்கு எதிராய் முணு முணுத்தும் நடந்ததால் விரைவில் அடைய வேண்டிய கானான் நாட்டை அடைய அவர்களுக்கு நாற்பது ஆண்டுகள் ஆயிற்று !

மோசே கானான் நாட்டை நெருங்குகையில் ஒரு மலையின் உச்சியில் ஏறி நின்று கானான் தேசத்தைப் பார்த்தார். கானான் நாடு நல்ல வளத்தோடு இருந்தது. தான் கூட்டி வந்த மக்கள் எல்லாரும் விரைவில் கானான் நாட்டிற்குள் சென்று விடுவார்கள் என்னும் நிம்மதி மோசேயின் மனதுக்குள் நிறைந்தது. அந்த மலையிலேயே அவர் பணிந்து இறைவனை மன்றாடினார்.

கடவுள் அவரின் கரம் பிடித்து அவரை உயிரோடு வானகத்துக்கு அழைத்துச் சென்றார்.

( எனது கி.மு – விவிலியக் கதைகள் நூலிலிருந்து…)

கி.மு : யோசேப்பு – ஒரு அடிமையின் கதை !

 

யோசேப்பு யாக்கோபின் பிரிய மகன். யாக்கோபிற்கு பல மனைவிகள் மூலம் மொத்தம் பன்னிரண்டு பிள்ளைகள். யோசேப்பும், பென்யமினும் அவருடைய பிரிய மனைவி ராகேலின் பிள்ளைகள். யோசேப்பின் மீது தந்தை யாக்கோபுக்கு அளவு கடந்த பாசம். அவர் யோசேப்பை மிகவும் செல்லமாய்க் கவனித்து வந்தார். அவனு க்காக தனியாக ஒரு அழகிய அங்கியையும் தன் கைப்பட செய்து கொடுத்தார். அதனால் யோசேப்பின் சகோதரர்கள் அனைவருக்கும் அவன் மீது பயங்கர பொறாமை.

‘நாம் பத்து பேர் இருக்கும்போது நம் தந்தை அவனிடம் மட்டும் அளவு கடந்த பாசம் கொண்டிருக்கிறார் பார்த்தீர்களா ? நமக்கு அவர் என்றைக்காவது ஏதாவது செய்து தந்திருக்கிறாரா ? பார்… செல்ல மகனுக்கு அங்கியாம் … ம்ம்ம்’  என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். யோசேப்பு மீது பொறாமையை வளர்த்துக் கொண்டார்கள். ஆனால் யோசேப்புவோ சகோதரர்களிடம் கள்ளம் கபடமில்லாமல் அன்பு கொண்டிருந்தான்.

ஒருநாள் அதி காலையில் அவன் சகோதரர்களிடம் ஓடி வந்து
‘அண்ணா … நான் ஒரு கனவு கண்டேன். சொல்லவா ?’ என்றான்
‘சரி சொல்… என்ன கனவு ?’ சகோதரர்கள் கேட்டனர்.

‘நாம் எல்லோரும் வயலில் அறுவடை செய்து அறுத்த அரிகளைக் கட்டுகளாகக் கட்டிக் கொண்டிருந்தோம். அப்போது என்னுடைய அரிக்கட்டு திடீரென எழுந்து நின்றது. உடனே உங்கள் அரிக்கட்டுகள் எல்லாம் அதை வணங்கின’ என்றான்

சகோதரர்கள் எரிச்சலடைந்தார்கள்.  ‘ஓ… உன்னை நாங்கள் எல்லோரும் வணங்க வேண்டும் என விரும்புகிறாயா ? நீ அதிகாரம் செலுத்த ஆசைப்படுகிறாயா ? போடா… போ’ என்று துரத்தினர். இந்த கனவைச் சொன்னபின் இன்னும் அதிகமாக அவனை வெறுத்தனர்.

இன்னும் சில நாட்கள் சென்றபின் யோசேப்பு இன்னொரு கனவு கண்டான் அதில் சூரியனும், சந்திரனும், பதினொரு நட்சத்திரங்களும் அவனை வணங்கின. இந்த கனவையும் அவன் சகோதரர்களிடம் சொன்னான். அவர்கள் அவன் மீது கொண்ட பொறாமையை அதிகப் படுத்தினார்கள்.

யோசேப்பு இளையவன் ஆகையால் தந்தையுடன் அதிக நேரத்தைச் செலவிட்டான். அவனுடைய சகோதரர்கள் பத்து பேரும் ஆடுகளை மேய்ப்பதற்காக பக்கத்து ஊரான செக்கேமிற்குச் சென்றனர். யோசேப்பு தந்தையுடன் தங்கியிருந்தான்.

நாட்கள் பலகடந்தன, மந்தைகளை ஓட்டிச் சென்ற சகோதரர்கள் திரும்பவில்லை. மகன்களைக் காணாத தந்தை வருந்தினார். அவர் யோசேப்பை அழைத்து,’ மகனே, நீ போய் உன்னுடைய சகோதரர்களும் மந்தையும் நலம்தானா என்பதை விசாரித்து வா’ என்று சொல்லி அனுப்பினார். யோசேப்பும் புறப்பட்டார்.

யோசேப்பு செக்கேமிற்குச் சென்று அந்த ஊர் முழுவதையும் சுற்றிப் பார்த்தான். எங்கும் அவனுடைய சகோதரர்களைக் காணோம். விசாரித்ததில் அவர்கள் அருகிலுள்ள தோத்தான் என்னும் ஊருக்குச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது. எனவே யோசேப்பு தோத்தானை நோக்கிப் போனார்.

தூரத்தில் யோசேப்பு வருவதைக் கண்ட சகோதரர்கள் கோபம் கொண்டனர். ‘அதோ பார், நம் தந்தையின் செல்ல மகன் வருகிறான். அவனை இங்கேயே கொன்றுவிடவேண்டும். அவன் இருந்தால் தந்தை நம்மைக் கவனிக்கவே மாட்டார்’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ரூபன், யோசேப்பின் சகோதரர்களில் ஒருவன், யோசேப்பின் மீது வெறுப்பு இருந்தாலும் அவனைக் கொல்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. ‘ நாம் அவனைக் கொல்ல வேண்டாம். ஒரு பெரிய குழியில் தள்ளிப் போடுவோம். அவனுடைய இரத்தத்தை சிந்தவேண்டாம். அவன் அங்கேயே கிடந்து செத்து ஒழியட்டும் ‘ என்றான். குழியில் தள்ளிவிட்டால் யாருக்கும் தெரியாமல் இரவில் வந்து அவனைக் காப்பாற்றி அனுப்பி வைக்கலாம் என்பது அவனுடைய ரகசியத் திட்டம். சகோதரர்களுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. அவனைக் கொன்ற பாவம் நமக்கெதற்கு ? அவனே தானாக செத்துத் தொலயட்டும் என்று கூறி அவனைக் குழியில் தள்ள முடிவெடுத்தனர்.

சகோதரர்களின் திட்டத்தை எதுவும் அறியாத யோசேப்பு சகோதரர்களிடம் ஓடோ டி வந்து.. ‘அண்ணா… எல்லோரும் நலம் தானே ? மந்தைகள் எல்லாம் நலம் தானே… உங்களைக் காணாமல் அப்பா ரொம்ப வருத்தப் பட்டார். அதனால் தான் உங்களைத் தேடி வந்தேன்’ என்று சொல்லி தன் முத்துப் பற்கள் காட்டிச் சிரித்தான்.

சகோதரர்கள் தாமதிக்கவில்லை. ‘ இங்கேயும் எங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டாயா ? ‘ என்று கூறிக் கொண்டே அவன் மேல் பாய்ந்து அவனுடைய அங்கியை அவிழ்ந்து அருகிலிருந்த பாழுங்கிணற்றில் தள்ளினார்கள்.

யோசேப்பு திகைத்தான். தன்னுடைய சகோதரர்களின் இந்தத் தாக்குதலை அவன் எதிர்பார்க்கவில்லை. ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று கதறினான். ஆனால் அது வெளியே யாருக்கும் கேட்கவேயில்லை.

அந்த வழியாக வணிகர் கூட்டம் ஒன்று எகிப்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அதைக் கண்ட சகோதரர்களில் ஒருவனான யூதா,’ எனக்கு இன்னொரு யோசனை வருகிறது. இவனைக் குழியில் போட்டு விட்டுப் போவதற்குப் பதிலாக, இந்த வணிகர்களிடம் அடிமையாய் விற்று விடலாமே. அவனைக் கொன்ற பாவமும் வேண்டாம், அவனை குழியில் போட்டு விட்டுப் போகும் பாவமும் வேண்டாம். எல்லாவற்றுக்கும் மேலாக அவன் மூலம் நமக்குப் பணமும் கிடைக்கும். அவன் பள்ளத்திலேயே கிடப்பதால் நமக்கு லாமபில்லை… என்ன சொல்கிறீர்கள் ? ‘ என்று சகோதரர்களிடம் கேட்டான். அவர்களுக்கும் அது நல்ல முடிவாகத் தோன்றியது. எனவே அவனை வெளியே எடுத்து இருபது வெள்ளிக்காசுக்கு அவனை அடிமையாக விற்றனர். யோசேப்பு சகோதரர்களைப் பார்த்து அழுதுகொண்டே வணிகர்களோடு பயணமானான்.

சகோதரர்கள், தங்கள் மந்தையிலிருந்து ஒரு ஆட்டை அடித்துக் கொன்று அந்த இரத்தத்தை யோசேப்பின் அங்கியில் தோய்த்து எடுத்துக் கொண்டு தந்தையிடம் சென்றனர். மிகவும் பதட்டமடைந்தவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு
‘அப்பா… இது நம்ம யோசேப்பின் அங்கியா பாருங்கள். வழியில் கண்டெடுத்தோம். யோசேப்புக்கு நீங்கள் செய்து கொடுத்த அங்கி போல இருக்கிறதே என்று எடுத்து வந்தோம்… சீக்கிரம் பார்த்து சொல்லுங்கள் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது ‘ சகோதரர்கள் சோகத்தை முகத்தில் வரவழைத்துக் கேட்டார்கள்.

அங்கியைக் கண்ட தந்தை அதிர்ந்தார். ‘ ஐயோ.. இது நான் யோசேப்புவிற்குச் செய்து கொடுத்த அங்கியாயிற்றே… என்னுடைய அருமை மகனை ஏதோ காட்டு விலங்கு தாக்கிக் கொன்று விட்டதா ?… ஐயோ என்ன செய்வேன்… அருமை மகனே நீ இறந்து விட்டாயா’ என்று புலம்பி அழுதார். சகோதரர்கள் உள்ளுக்குள் சிரித்தனர். தந்தை தான் உடுத்திருந்த ஆடைகளை அவிழ்ந்தெறிந்துவிட்டு கோணி உடுத்தி சாம்பலில் அமர்ந்து ஏழு நாட்கள் ஒப்பாரி வைத்து அழுது புலம்பினார். சோகமான சம்பவங்கள் நடந்தால் அப்படி அழுவது அக்கால வழக்கம்.

யோசேப்புவை வணிகர்கள் எகிப்து கொண்டு சென்று, பார்வோன் மன்னனின் மெய்க்காப்பாளன் ஒருவனிடம் நல்ல விலைக்கு விற்றனர். கடவுள் யோசேப்போடு இருந்தார். எனவே மெய்க்காப்பாளன் யோசேப்பை அடிமைபோல நடத்தாமல் தன்னுடைய இல்லத்திலேயே தங்க வைத்தார்.

யோசேப்பு தொட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்புற நடந்தன. எனவே மெய்க்காப்பாளன் அவனை தன்னுடைய இல்லத்தின் அனைத்து பொறுப்புகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்தான். யோசேப்பு அனைத்தையும் திறம்பட நடத்தினான். வருடங்கள் செல்லச் செல்ல அவனுடைய தோற்றம் மிகவும் வலிமையாக, அழகாக மாறியது.

யோசேப்பின் அழகிய கட்டுடலைக் கண்ட மெய்க்காப்பாளனின் மனைவிக்குள் மோகம் ஊறியது. எப்படியாவது அவனோடு உறவு கொள்ள வேண்டும் என எண்ணினாள். யோசேப்பை அழைத்து,

‘தலைவர் எல்லாவற்றையும் கவனிக்குமாறு தானே உன்னை நியமித்தார். ஆனால் நீ சில விஷயங்களைக் கவனிப்பதேயில்லை’ என்றாள்.

‘இல்லையே அம்மா, நான் எல்லாவற்றையும் நன்றாகக் கவனிக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்’

‘உன்னிடம் ஒரே ஒரு பிழை மட்டும் தான் இருக்கிறது. நீ அவருடைய சொத்துக்களில் ஒன்றை மட்டும் கவனிக்காமல் விட்டு விட்டாய்’ அவள் கண்சிமிட்டினாள்.

‘புரியும் படி சொல்லுங்களேன்’

‘நீ என்னைக் கவனிப்பதேயில்லையே’ அவள் குழைந்தாள்.

‘உங்களைக் கவனிக்கத் தான் தலைவர் இருக்கிறாரே’ யோசேப்பு சிரித்தான்.

‘உன்னைப் போல அழகான வாலிபன் இங்கே யாரும் இல்லை. உன்னுடைய கவனிப்பு எனக்கு வேண்டும்’ அவள் சொல்ல, யோசேப்பு திடுக்கிட்டான். அதுவரை எஜமானி தன்னுடன் விளையாட்டாய் பேசுகிறாள் என்று நினைத்திருந்தவனுக்கு இப்போது அதிச்சி..

‘அம்மா…. அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்’ யோசேப்பு குரலைத் தாழ்த்தினான்.

‘இதில் தப்பு ஒன்றுமில்லை யோசேப்பு. வா… என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள். என்னுடைய விருப்பமில்லாமல் என்னைப் பலாத்காரம் செய்வது தான் தவறு. இதில் தவறு ஒன்றும் இல்லை. வா… தலைவனுக்குத் தெரியாமல் சங்கமித்திருப்போம்’ என்றாள்.

யோசேப்பு மறுத்தான்.,’ ஐயோ… நீங்கள் என் எஜமானி. தலைவர் என்மீது கொண்ட நம்பிக்கையால் தான் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்தார். உங்களை அவர் என்னிடம் ஒப்படைக்கவில்லை. உங்களோடு உறவு கொள்வது நான் தலைவனுக்குச் செய்யும் துரோகம். என்னை மன்னியுங்கள்’

‘யோசேப்பு…. ஏன் பயப்படுகிறாய் ? இது யாருக்கும் தெரியாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ என்னுடன் இன்று ஒரு நாள் மட்டும் உறவு கொள்…’

‘இல்லை எஜமானி… யாருக்கும் தெரியாவிட்டாலும். இது கடவுளுக்குத் தெரியும் என்னை விட்டு விடுங்கள். இது தவறு.’ என்று சொல்லி விட்டு அவ்விடம் விட்டு ஓடினான்.

ஆனாலும் அவள் யோசேப்பை தொடர்ந்து வற்புறுத்தி வந்தாள். ஒருநாள் வீட்டில் யாருமே இல்லாதபோது, தலைவி யோசேப்பின் மேலாடையை இழுத்து அவிழ்த்தாள்,’ யோசேப்பு. இன்று நீ என்னுடன் உறவு கொண்டேயாகவேண்டும். கவலைப்படாதே.. வா… என்னுடைய அழகிய உடலை அனுபவி… என்னோடு படு…’ என்று யோசேப்பை அழைத்தாள். அவன் மீண்டும் மறுத்தான். தலைவி அதிகாரமாய் சொல்லிப் பார்த்தாள், கெஞ்சலாய் சொல்லிப் பார்த்தாள், கொஞ்சலாய்ச் சொல்லிப் பார்த்தாள். யோசேப்பு எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை. தலைவி விடவில்லை. அவனை வலுக்கட்டாயமாக இழுத்தாள். அவன் தன்னுடைய மேலாடையை விட்டு விட்டு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினான்.

தலைவி தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி பொருமினாள். ஒரு அடிமை தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவில்லையே என ஆத்திரம் கொண்டால். எப்படியும் யோசேப்பை பழிவாங்க வேண்டுமென காத்திருந்தாள்.

மாலையில் கணவன் வீடு திரும்பியதும் அவனிடம்,’வேலைக்கு ஆள் எடுக்கும் போது எதையும் விசாரிப்பதில்லையா ?’ என்று பொய்க்கோபத்துடன் கேட்டாள்.

‘நீ யாரைப்பற்றிச் சொல்கிறாய் ?’

‘யோசேப்பு பற்றித் தான்’

‘அவனுக்கு என்ன ? நன்றாகத் தானே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறான்’

‘ஆமாம்… ரொம்பவும் நன்றாகக் கவனிக்கிறான். சொத்துக்களை மட்டுமல்ல, உங்கள் மனைவியையும் சேர்த்து கவனிக்கிறான். இன்று அந்த அடிமை நாய் என்ன செய்தான் தெரியுமா ? என்னுடைய மேலாடையை இழுத்து என்னை பலாத்காரம் செய்யப் பார்த்தான். நான் கூச்சலிட்டதும் இந்த மேலாடையை விட்டு விட்டு ஓடி விட்டான்’ அவள் பொய்யாய் விசும்பினாள்.

தலைவன் அதிர்ந்தான். அவன் யோசேப்பை அழைத்து,’ துரோகியே… உன்னை எவ்வளவு நம்பினேன். இப்படி நம்பிக்கை துரோகம் செய்து விட்டாயே.. ‘ என்று கூறி அவனை அரச கைதிகளை அடைக்கும் கொடிய சிறையில் அடைத்தான். செய்யாத தவறுக்காக யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டார்.

சிறையிலும் ஆண்டவர் யோசேப்போடு இருந்தார். எனவே சிறைக்காப்பாளரின் தயவு அவருக்குக் கிடைத்தது. கைதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார் அவர். யோசேப்பும் அந்த பணியைச் செவ்வனே செய்து வந்தார்.

ஒருநாள் மன்னனனுக்கு மதுபரிமாறுபவனும், அப்பம் தயாராக்குபவனும் ஏதோ காரணத்துக்காகத் தண்டனை பெற்று அதே சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களுக்கும் யோசேப்பு தான் கண்காணிப்பாளனாய் இருந்தான்.

சிலநாட்கள் கழிந்தபின் ஒருநாள் இரவு அவர்கள் இருவரும் ஒரே விதமான இரண்டு கனவுகளைக் கண்டனர். கனவு கண்டு கண்விழித்துக் கனவின் பொருள் புரியாமல் வருத்தமாய் அமர்ந்திருந்தனர். யோசேப்பு அவர்கள் வருத்தமாய் இருப்பதைக் கண்டார்.
‘ஏன் வருத்தமாய் இருக்கிறீர்கள். சிறையில் ஏதேனும் உங்களை வருத்தமடையச் செய்ததா ?’ யோசேப்பு கேட்டார்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. நாங்கள் இருவருமே ஒவ்வொரு கனவு கண்டோ ம். இரண்டுமே ஒரே போல் இருக்கின்றன ஆனால் அதன் விளக்கம் தெரியவில்லை’ என்றனர்.

‘இவ்வளவு தானா சங்கதி… கனவை என்னிடம் சொல்லுங்கள். கனவின் பலன் கூறும் திறமையைக் கடவுள் எனக்கு அளித்திருக்கிறார். உங்கள் கனவுகளின் பயனை நான் சொல்கிறேன்’

மதுபரிமாறுபவன் தன் கனவைச் சொன்னான்,’ மூன்று திராட்சைக் கிளைகள் நிற்கக் கண்டேன். அவை பழுத்துத் தொங்கின. நான் அவற்றைப் பிழிந்து கிண்ணத்தில் வடித்து மன்னனுக்குக் கொடுத்தேன்’ இதுவே கனவு.

‘ஆஹா… இது நல்ல கனவல்லவா. இன்னும் மூன்று நாட்களில் நீ விடுதலை செய்யப் படுவாய். மீண்டும் உனக்கு மதுபரிமாறும் வேலை கிடைக்கும். நீ மீண்டும் வேலையில் அமர்ந்ததும் மன்னனிடம் எனக்காகப் பரிந்து பேசி என்னை சிறையிலிருந்து விடுதலை செய். ஏனெனில் நான் நிரபராதி’ என்றான்.

மதுபரிமாறுபவன் மகிழ்ந்தான். அப்பம் சுடுபவன் தன் கனவைச் சொன்னான்.

‘என் தலையில் மூன்று அப்பக் கூடைகள் இருந்தன. அவற்றைப் பறவைகள் வந்து தின்றுவிட்டன’ இதன் விளக்கம் என்ன? என்றான்

‘ஐயோ… சகோதரனே.. சோகமான செய்தியைச் சொல்ல வைத்து விட்டாயே. இன்னும் மூன்று நாட்களில் நீ கழுமரத்தில் ஏற்றப்படுவாய். உன் தலையை கழுகுகள் வந்து கொத்தும். உன் நிலையை நினைத்து நான் வருந்துகிறேன்’ என்றான்.

அப்பம் சுடுவோன் மிகவும் கலக்கமுற்றவனாக இடிந்து போய் அமர்ந்தான்.

மூன்று நாட்களுக்குப் பின், யோசேப்பு சொன்னதன் படியே அவர்கள் இருவருக்கும் நடந்தது. ஆனால் மதுபரிமாறுபவன் யோசேப்பை மறந்தான். அவனுக்கு உதவிசெய்யவில்லை. யோசேப்பு சிறையிலேயே கிடந்தான்.

இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. மீண்டும் கனவு ! இப்போது கனவு கண்டது மன்னன் !! இரண்டு கனவுகள்.

மன்னனின் கனவில் நைல் நதியிலிருந்து ஏழு கொழுத்த பசுக்கள் வெளியேறி வந்தன. அதைத் தொடர்ந்து ஏழு நலிந்த பசுக்கள் வெளியேறி வந்து முதலில் வந்த அந்த ஏழு கொழுத்த பசுக்களையும் தின்று விட்டன.

ஏழு செழிப்பான கதிர்கள் வயலில் விளைந்தன. அதன் பின் ஏழு கருகிய பயிர்கள் தோன்றி அந்த ஏழு செழிப்பான கதிர்களையும் விழுங்கி விட்டன.

இந்த இரண்டு கனவுகளும் மன்னனின் தூக்கத்தைக் கெடுத்தன. இதன் பலனை அறிய நாடெங்கும் மன்னன் மந்திரவாதிகளையும், குறி சொல்வோரையும் வரவழைத்தான். ஆனால் யாராலும் அந்த கனவுகளின் விளக்கத்தைக் கணிக்க முடியவில்லை. மன்னனின் வருத்தம் அதிகரித்தது. ஏதாவது புரிகிறதா என்று தன் அரசவையில் இருக்கும் அனைவரிடமும் கேட்டான். பயனில்லை.

அப்போது தான் மன்னனின் மது பரிமாறுவோனுக்கு யோசேப்பின் நினைவு வந்தது. அவன் மன்னனிடம் சென்று
‘அரசே… நான் ஒன்று கூறுவேன். தவறெனில் மன்னியுங்கள்.’

‘சொல்.. என்ன விஷயம் ? கனவின் விளக்கம் உனக்குத் தெரியுமா ?

‘எனக்குத் தெரியாது அரசே. ஆனால் சிறையில் யோசேப்பு என்றொருவர் இருக்கிறார். அவர் கனவுகளுக்குச் சரியான விளக்கம் சொல்வார்’

‘என்ன ? கனவுகளுக்கு விளக்கம் சொல்பவன் ஒருவன் சிறையில் இருக்கிறானா ? நம்பும்படியாக இல்லையே ?’ மன்னன் சந்தேகக் குரலில் கேட்டான்.

‘அரசே.. உண்மையிலேயே அவன் கனவுகளுக்குச் சொல்லும் பலன்கள் மிகவும் சரியாக இருக்கும். நானும் அப்பம் தயாரிப்போனும் சிறையில் இருந்தபோது எங்கள் கனவுகளுக்குச் சரியான விளக்கம் சொன்னான். அதன்படி நான் விடுதலையானேன், அப்பம் தயாரிப்போன் கழுமரம் ஏறினான்.’

‘அப்படியா ? அப்படியானால் உடனே அவனை இங்கே அழைத்து வாருங்கள்’ என ஆணையிட்டான் மன்னன். யோசேப்பு மன்னனின் அரசவைக்கு அழைத்து வரப்பட்டான்.

‘நீ கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் வித்தகனா ?’ மன்னன் அதிகாரத் தோரணையில் கேட்டான்.

‘நானல்ல… கடவுள் எனக்கு உணர்த்துவதை நான் சொல்வேன். அவ்வளவே…’ பணிவாய் பதில் சொன்னான் யோசேப்பு.

சரி இதோ நான் கண்ட கனவுகளைக் கேள்… இதற்கு விளக்கம் சொல்.

நைல் நதியிலிருந்து ஏழு கொழுத்த பசுக்கள் வெளியேறின. அதைத் தொடர்ந்து ஏழு நலிந்த பசுக்கள் வெளியேறி கொழுத்த பசுக்களைத் தின்று விட்டன.
ஏழு செழிப்பான கதிர்கள் வயலில் விளைந்தன. அதன் பின் ஏழு கருகிய பயிர்கள் தோன்றி அந்த ஏழு செழிப்பான கதிர்களையும் விழுங்கி விட்டன.

‘இவையே கனவுகள். விளக்கம் தெரிகிறதா ?’ மன்னன் வினவினான்.

‘தெரிகிறது மன்னா. ஏழு கொழுத்த பசுக்கள் என்பது ஏழு வளமான ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு நலிந்த பசுக்கள் அதைத் தொடர்ந்து வரும் ஏழு வறட்சியான, பஞ்சத்தின் ஆண்டுகளைக் குறிக்கும். பயிர்களின் விளக்கமும் இதுவே.’

‘ஒரே பொருளில் ஏன் இரண்டு கனவுகள் வந்தன என்பதைப்பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா ?’

‘தெரியும் அரசே. ஒரு கனவு உண்மையை உங்களுக்கு கடவுளால் அறிவிக்கப் பட்டது. இன்னொரு கனவு அதை உறுதி செய்கிறது’

‘அப்படியானால் உன்னுடைய விளக்கத்தின்படி இன்னும் ஏழு ஆண்டுகளுக்குப் பின் நாட்டில் கடுமையான பஞ்சம் வரும் என்கிறாய். அப்படித்தானே ?’

‘ஆம் அரசே. ஆனால் அந்தப் பஞ்சத்திலிருந்து நாம் தப்பிக்க ஒரு வழி இருக்கிறது’

‘என்ன வழி ?’

‘மன்னா, வரும் ஏழு ஆண்டுகள் நமக்கு வளமானதாக இருக்கும். அதன் பின்பு தான் பஞ்சத்தின் ஆண்டுகள் வரப் போகின்றன. எனவே இந்த பஞ்சத்திலிருந்து எகிப்து தப்பவேண்டுமெனில் இப்போதிருந்து ஏழு ஆண்டுகள் நாம் நகரெங்கும் தானியங்களைக் களஞ்சியங்கள் கட்டிச் சேமிக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தானியங்களைச் சேமித்தோமென்றால், அடுத்த ஏழு ஆண்டைய கொடிய பஞ்சத்திலும் எகிப்து பசியாறும்’ யோசேப்பு சொன்னார்

யோசேப்பின் விளக்கங்களும், வழிமுறைகளையும் கேட்ட மன்னன் வியந்தான். ‘ இதோ… அறிவும், திறமையும், கடவுள் அருளும் கொண்ட உன்னையே நான் அதற்குப் பொறுப்பாளியாக்குகிறேன். நீ இனி எகிப்து முழுவதற்கும் ஆளுநன் ஆவாய். நான் மட்டுமே உனக்கு மேலதிகாரி. மற்ற அனைவருக்கும் நீயே மேலதிகாரி. நீ சொன்னபடி எகிப்தில் தானியங்களை சேமிக்கும் பணியைத் துவங்கு. எதிர்காலப் பஞ்சத்திலிருந்து நாட்டைக் காப்பாற்று’ மன்னன் ஆணையிட்டான்.
யோசேப்பு மகிழ்ந்தார். அடிமையாய் விற்கப்பட்ட தான் எகிப்து முழுமைக்கும் ஆளுநர் ஆனது கடவுளின் செயல் தான் என உறுதியாய் நம்பினார்.

எகிப்து நகர் முழுவதும் ஏழு ஆண்டுகள் கணக்கின்றி தானியங்கள் யோசேப்பின் கண்காணிப்பின் கீழ் சேமிக்கப்பட்டன. ஏழு ஆண்டுகள் முடிந்தபோது எகிப்தின் தானியக் கிடங்குகள் எல்லாம் நிரம்பி வழிந்தன.

நாட்டில் பஞ்சம் துவங்கியது.

பஞ்சம் தன் கொடிய நகங்களை நீட்டி மக்களைப் பிராண்டியபோதும் எகிப்து மட்டும் எந்தக் குறைவும் இன்றி மகிழ்ந்திருந்தது. யாருக்கும் எதுவும் குறைவில்லை. மக்களுக்குத் தானியங்கள் யோசேப்பின் கண்காணிப்பில் குறைவின்றி வழங்கப்பட்டன. மக்கள் எல்லோரும் யோசேப்பின் திறமையைக் கண்டு வியந்தனர்.

யோசேப்பின் சகோதரர்களையும் பஞ்சம் பிடித்துக் கொண்டது !

யாக்கோபு தம் பத்து மகன்களையும் அழைத்து,’ எங்கும் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் எகிப்தில் மட்டும் பஞ்சம் இல்லையென்று கேள்விப்பட்டேன். நம்மிடம் உண்பதற்குத் தானியங்கள் ஏதும் இல்லை. என்வே நீங்கள்  எகிப்திற்குப் போய் நமக்கு உணவு வாங்கி வாருங்கள்’ என்று அவர்களை எகிப்திற்கு அனுப்பினார். தங்கள் சகோதரன் தான் எகிப்து தேசத்தின் ஆளுனர் என்பதை அவர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை.

இளையவன் பென்யமினை மட்டும் அவர் அவர்களோடு அனுப்பவில்லை. யோசேப்பை இழந்த துயரத்திலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. இந்த இளையவனையும் இழந்து விடக் கூடாதே என்னும் கவலை அவரிடம் இருந்தது.

அவர்கள் அனைவரும் எகித்து நாட்டுக்குச் சென்று யோசேப்பின் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள். சகோதரர்களைப் பார்த்த யோசேப்பு திடுக்கிட்டார். சகோதரர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் அவருடைய முகத்தை உற்று நோக்கவில்லை. ஆளுநரின் முகத்தை யாரும் ஏறிட்டுப் பார்க்கக் கூடாது என்பது அங்கே எழுதப்படாத விதி.

சகோதரர்கள் தான் வந்திருக்கிறார் என்று அறிந்தும் யோசேப்பு அறியாதவர் போல் நடித்தார். அவர்களிடம் கடுமையாய் பேசினார்.
‘நீங்கள் யார். ? எங்கிருந்து வருகிறீர்கள் ? நீங்கள் உளவாளிகள் தானே ? எகிப்து நாட்டை வேவு பார்க்கத் தானே நீங்கள் வந்திருக்கிறீர்கள்’ என்று கர்ஜித்தார்.

அவர்களோ,’ தயவு செய்து மன்னியுங்கள். நாங்கள் உளவாளிகள் அல்ல. பஞ்சத்தால் நாங்களும் எங்கள் தந்தையும் மிகவும் அவதியுற்றோம் அதனால் தான் நாங்கள் உமது பாதத்தில் வந்து மண்டியிடுகிறோம்’ என்றனர்.

யோசேப்போ’ உங்களை எப்படி நம்புவது ? உங்களைப் பார்த்தால் உளவாளிகள் போலதான் தெரிகிறது’ என்றார்.

‘தயவு செய்து எங்களை நம்புங்கள். நாங்கள் உளவாளிகள் அல்ல. கருணை காட்டுங்கள். நாங்கள் பன்னிரண்டு பேர் உண்டு. ஒருவன் இறந்து விட்டான். இன்னொரு இளையவனை எங்கள் தந்தை எங்களோடு அனுப்பவில்லை. அதனால் தான் நாங்கள் பத்து பேரும் உம்மிடம் வந்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒரு தந்தையின் மக்கள்’ என்றனர்.

‘ என்னால் நம்பமுடியவில்லை. உங்களைப் பார்த்தால் எகிப்து நாட்டில் பாதுகாப்பு இல்லாத இடங்களைப் பார்வையிட வந்தவர்கள் போலத் தான் தெரிகிறது. யாரங்கே… இதோ இவர்களைப் பிடித்து மூன்று நாள் சிறையில் அடையுங்கள்’ யோசேப்பு ஆணையிட்டார். அவர்களுக்குச் சிறையில் உணவுக்கு எந்தக் குறையும் வராமல் ரகசியமாய் கவனித்துக் கொண்டார்.

மூன்று நாட்களுக்குப் பின் யோசேப்பு அவர்களிடம் வந்து. ‘ நீங்கள் சொன்னவற்றையெல்லாம் யோசித்துப் பார்தேன். ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையாய் கூட இருக்கலாம். எதற்கும் நீங்கள் போய் உங்கள் இளைய சகோதரனை அழைத்து வாருங்கள். அவனை நீங்கள் அழைத்து வந்தால் நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையென்று நான் அறிந்து கொள்வேன்.’

‘சரி நாங்கள் சென்று அவனை அழைத்து வருகிறோம்.’

‘ஆனால், உங்களை எப்படி நம்புவது ? தம்பியை அழைத்து வருகிறேன் என்று சொல்லி நீங்கள் தப்பிப் போக நினைக்கலாம் இல்லையா ? அதனால் உங்களில் ஒருவன் இங்கே இருக்கட்டும் மற்றவர்கள் போய் இளையவனை அழைத்து வாருங்கள்’ யோசேப்பு சொன்னார்.

அவர்களுடைய சகோதரர்களில் ஒருவரான சிமியோன் மட்டும் சிறையில் இருக்க, மற்றவர்கள் புறப்படத் தயாரானார்கள்.

யோசேப்பு பணியாளனை அழைத்து,’ இவர்களுடைய அனைத்து தானிய மூட்டைகளிலும் தானியங்களை நிறைத்து அனுப்பு’ என்று ஆணையிட்டார். அவர்கள் அப்படியே செய்தார்கள். சகோதரர்கள் தங்கள் மூட்டைகளோடு பயணமானார்கள்.

வழியில் ஒரு சத்திரத்தில் இளைப்பாறினார்கள். அவர்களுடைய கழுதைகளில் ஒன்று மிகவும் களைத்துப் போய் இருந்தது.

‘சரி… ஒரு மூட்டையைத் திறந்து கொஞ்சம் தானியம் எடுத்து கழுதைக்குக் கொடுப்போம்’ சொல்லிக் கொண்டே அவர்கள் தானிய மூட்டையைத் திறந்தார்கள். அதிர்ந்தார்கள். அவர்களுடைய தானிய மூட்டையில் தானியத்தோடு சேர்ந்து தானியத்துக்காய் அவர்கள் கொடுத்த பண முடிப்பும் இருந்தது.

‘நாம் தானியத்துக்காகக் கொடுத்த பணம் எப்படி இங்கே வந்தது ?’

‘ஒரு வேளை தவறுதலாக வைத்துக் கட்டியிருப்பார்களோ’ அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டே வீட்டை வந்தடைந்தார்கள்.

நேராக தந்தையிடம் சென்று தங்களுக்கு நடந்தவற்றை அனைத்தையும் கூறினர். பென்யமினை கூட்டிக் கொண்டு சென்றால் தான் சிமியோன் விடுவிக்கப் படுவான் என்றும் சொன்னார்கள்.

தந்தை புலம்பினார். ‘முதலில் ஒரு மகனை இழந்தேன். இப்போது இன்னும் ஒருமகனை இப்போது இழந்து விட்டேனே. அவன் சிறையில் என்ன பாடு படுகிறானோ ? அவனுடைய உயிருக்கு உத்தரவாதம் கூட இல்லை.  நீங்கள் ஏன் இன்னும் ஒருவன் இருக்கிறான் என்று சொன்னீர்கள் ? அதைச் சொல்லாமல் இருந்திருக்கக் கூடாதா ? இப்போது நீங்கள் பென்யமினையும் கொல்லப் பார்க்கிறீர்களா ?’  என்று கதறினார்.

‘இல்லையப்பா… அவர் நம்மைப் பற்றியும் நம் குடும்பத்தைப் பற்றியும் துருவித் துருவி விசாரித்தார்… உங்களைப் பற்றி நிறைய கேட்டார். நீங்கள் உயிரோடு நலமாக இருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டார். அவரிடம் பொய்சொல்லித் தப்புவிக்க முடியவில்லை .. மன்னியுங்கள்’ சகோதரர் தலை கவிழ்ந்தனர்.

‘ஆளுநன் விசாரிக்கத் தான் செய்வான். அதற்காக எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவதா ?’ தந்தை நிறுத்தாமல் தவித்தார்.

‘கவலைப்படாதீர்கள் அப்பா. நாங்கள் ஏதாவது வழி செய்து அவனைக் கூட்டி வரலாம். நீங்கள் ரொம்ப சோர்வாக இருக்கிறீர்கள். நாங்கள் கொண்டு வந்திருக்கும் தானியத்திலிருந்து கொஞ்சம் எடுத்து சமைக்கலாம்’

சொல்லிக் கொண்டே அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தானிய மூட்டைகளைப் பிரித்தார்கள்.  தங்கள் தானிய மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது எல்லா மூட்டைகளிலும் பணமுடிப்பு இருந்தது. அதைக் கண்டு அவர்கள் இன்னும் அதிகமாக அச்சமடைந்தனர்.

யாக்கோபு அழத் துவங்கினார். ‘என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்களே ? முதலில் யோசேப்பு இறந்து போனான், இப்போது சிமியோனையும் விட்டு விட்டு வந்திருக்கிறீர்கள். இனிமேல் நான் பென்யமினையும் இழக்க வேண்டுமா ? முடியவே முடியாது. ராகேலுக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளில் யோசேப்பை இழந்து விட்டேன். இனி இருப்பது பென்யமின் மட்டுமே அவனையும் இழக்க நான் தயாராக இல்லை’. என்று பிடிவாதமாய் மறுத்து விட்டார்.

ஆனால் அவருடைய பிடிவாதம் நீண்ட நாட்கள் நிலை நிற்கவில்லை. கொண்டு வந்த தானியங்கள் தீரத் துவங்கின. மேலும் எகிப்திற்குச் சென்று ஏதேனும் வாங்கி வந்தால் தான் உண்ண முடியும் என்னும் நிலமை. அங்கே செல்ல வேண்டுமென்றால் பென்யமினைக் கொண்டு போயாகவேண்டும் ? என்ன செய்வதென்று தெரியாமல் சகோதரர்களும், தந்தையும் திகிலுற்றார்கள்.

அப்பா,’ நாங்கள் பென்யமினைக் கூட்டிக் கொண்டு போகாவிடில் நாங்கள் ஆளுநரிடம் சொன்னதெல்லாம் பொய்யென்று ஆகிவிடும். பிறகு சிமியோனை மீட்கவும் முடியாது, நாங்களும் சிறையிலடைக்கப் படுவோம்… தயவு செய்து பென்யமினை அனுப்புங்கள். எப்படியாவது அவருடைய காலில் விழுந்து சிமியோனையும் விடுவிக்கச் செய்து, தானியங்களையும் வாங்கி வருகிறோம்’ சகோதரர்கள் தந்தையிடம் விண்ணப்பம் வைத்தனர். ஆனாலும் பென்யமினுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்னும் பயம் அவர்களுக்குளும் இருந்தது.

யாக்கோபுக்கு பென்யமினை அனுப்புவதில் சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் அவனை அனுப்பாமல் ஏதும் நடக்கப் போவதில்லை என்பது அவருக்கும் புரிந்தது. என்ன செய்வது என யோசித்தார்.

‘சரி… பென்யமினை அழைத்துக் கொண்டு போங்கள். ஆனால் அவனுக்கு ஏதும் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அவன் திரும்பாவிடில் நீங்கள் என்னை உயிருடன் பார்க்க முடியாது. இன்னொன்றும் சொல்கிறேன்… போனதடவை உங்கள் பணம் உங்கள் மூட்டையிலேயே இருந்தது இல்லையா ? அது ஒரு வேளை தவறுதலாகவோ, அல்லது உங்களைச் சோதிப்பதற்காகவோ வைத்ததாக இருக்கலாம். அதனால் இந்தமுறை அதையும் சேர்ந்த்து இரண்டு மடங்கு பணத்தைக் கொடுங்கள். கூடவே நிறைய அன்பளிப்புகளையும், காணிக்கைகளையும் கொண்டு போங்கள். எல்லோரும் பத்திரமாய் போய்வாருங்கள். நீங்கள் பத்திரமாய் திரும்பி வரும் வரை என்னுடைய உயிர் என்னிடம் இருக்காது.. கவனம்….’ யாக்கோபு கண்ணீரோடு கையசைத்தார்.

அவர்கள் பதட்ட மனத்தோடு எகிப்தை வந்தடைந்து யோசேப்பின் முன் வந்து நின்றார்கள். அவர்களைக் கண்ட யோசேப்பு மகிழ்ந்தான். அவர் தன்னுடைய பணியாளனை நோக்கி,’ இவர்களை என் வீட்டுக்குக் கூட்டிப் போ. இவர்களுக்கு நல்ல கொழுத்த கன்றை அடித்து விருந்து ஏற்பாடு செய். என்னோடு இவர்களும் இன்று மதிய உணவு உண்ணட்டும்’ என்று ஆணையிட்டார்.

சகோதரர்களுக்கோ பயம் மேலும் அதிகரித்தது. அவ்வளவு தான் நாம் தொலைந்தோம். ஏதோ ஒரு சதித் திட்டத்தோடு தான் இந்த விருந்து நடக்கிறது. இனிமேல் நாம் தப்பவே முடியாது. நம் உடமைகளைப் பறித்து இவர் நம்மை சிறையில் தான் அடைக்கப் போகிறார் என்று நடு நடுங்கினார்கள். நடுங்கிக் கொண்டே அந்த பணியாளரிடம்,’ ஐயா… கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நாங்கள் தானியம் வாங்க வந்தபோது நீங்கள் தவறுதலாக எங்கள் பணத்தையும் அதிலேயே போட்டு கட்டி விட்டீர்கள் போலிருக்கிறது. எனவே அந்தப் பணத்தையும் சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம்’ என்றனர்.

பணியாளன் சிரித்தான்,’ அப்படியெல்லாம் இருக்காதே. உங்கள் பணம் என்னிடம் வந்து விட்டது. நீங்கள் உளறாமல் வாருங்கள்’ என்றார். சகோதரர்கள் ஏதும் புரியாமல் விழித்தார்கள்.

எல்லோரும் யோசேப்பின் வீட்டில் வந்து பயத்தோடு காத்திருந்தனர். கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை எல்லாம் தயாராக எடுத்து வைத்திருந்தனர். யோசேப்பு வந்ததும் அவரிடம் காணிக்கைகளைக் கொடுத்து அவருடைய மனதைக் குளிர வைக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.

யோசேப்பு மிடுக்குடன், ஆளுநர் உடையில் வந்தார்.

அவர்கள் அவரை ஏறிட்டுப் பார்க்காமல் காணிக்கைகளை அவர்முன் வைத்துவிட்டு தரையில் விழுந்து வணங்கினார்கள்.

‘ எழுந்திருங்கள்… உங்கள் தந்தை நலம் தானே ?’

‘ எங்கள் தந்தை நலமாய் இருக்கிறார்.’

‘ எங்கே … உங்கள் இளைய தம்பி ? பென்யமின் ?’

‘இதோ….’ அவர்கள் பென்யமினை சுட்டிக் காட்டினார்கள்.

தம்பியைக் கண்டதும் யோசேப்புவின் உள்ளம் பாசத்தால் உருகியது. இமைகளை உடைத்துக் கொண்டு கண்ணீர் வெளியேறியது. உடனே உள் அறைக்குச் சென்று சிறிது நேரம் அழுது விட்டு மீண்டும் ஆளுநர் மிடுக்கில் அவர்களிடம் வந்தார்.

‘சரி…. வாருங்கள் உண்போம்…’ என்று சொல்லிக் கொண்டே யோசேப்பு அவர்களை மூத்தவன் துவங்கி பென்யமின் வரை வயது அடிப்படையில் வரிசையாக அமர்த்தினார். அதைக் கண்ட சகோதரர்கள் மிகவும் ஆச்சரியப் பட்டனர்.

எல்லோரும் திருப்தியாக உணவு உண்டு மதுவும் அருந்தினார்கள்.

இப்போதும் யோசேப்பு தன்னை யாரென்று சொல்லவில்லை. இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்ப்போம் என்று முடிவெடுத்து, பணியாளனை தனியே அழைத்தார்.

‘எல்லாருடைய மூட்டையிலும் தானியத்தையும், அவர்கள் தந்த பணத்தையும் வைத்துக் கட்டிவிடு. பென்யமினுடைய பையில் மட்டும் என்னுடைய வெள்ளிக் கோப்பையையும் வைத்துக் கட்டு. அவர்கள் போகட்டும். கொஞ்ச தூரம் சென்றபின் நீ அவர்களைத் துரத்திப் பிடித்து இங்கே கூட்டி வா’ என்றார்.

பணியாளன் ஏதும் புரியாமல் விழித்தான் ஆனாலும் யோசேப்பு சொல்வதைச் செய்வது தானே அவனுடைய வேலை ! அதைச் செய்தான்.

அவர்கள் தானிய மூட்டைகளோடு சென்று புறப்பட்டார்கள். சற்று நேரப் பயணத்துக்குப் பின் அவர்களைத் தொடர்ந்து சென்ற பணியாளன் குரல் கொடுத்தான்.

‘நில்லுங்கள்’

பணியாளனின் குரல் தங்களுக்குப் பின்னால் ஒலிப்பதைக் கேட்டதும் வழியில் வந்து கொண்டிருந்த சகோதரர்கள் நின்றார்கள்.

‘சொல்லுங்கள்… ஐயா…’

‘என்ன இப்படி செய்து விட்டீர்கள் ? உங்களை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்ட எங்கள் தலைவரிடமே நீங்கள் உங்கள் வேலையைக் காட்டி விட்டீர்களே ?’

‘ஐயா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? புரியவில்லையே ?’

‘புரியவில்லையா ? எங்கள் தலைவனின் வெள்ளிக் கிண்ணத்தைத் திருடி வந்து விட்டீர்களே…’

‘நாங்களா ? தலைவரின் வெள்ளிக் கிண்ணத்தைத் திருடினோமா ? இல்லவே இல்லை… இப்படியெல்லாம் வீண் பழி சுமத்தாதீர்கள். நாங்கள் அப்படி பட்டவர்கள் அல்ல’

‘பொய் எல்லாம் வேண்டாம். எங்கள் தலைவர் குறி பார்ப்பதில் கெட்டிக் காரர். வெள்ளிக் கிண்ணம் காணவில்லை என்றதும் குறிபார்த்தார். அது உங்களிடம் தான் இருக்கிறதாம்.. உங்களை நான் சோதனையிட்டாக வேண்டும்’

‘தாராளமாக எங்களைச் சோதனையிடுங்கள். எங்களில் யாரிடமாவது அந்த வெள்ளிக் கிண்ணம் இருந்தால் நீங்கள் அவனைக் கொன்று விடலாம்’ சகோதரர்கள் சொன்னார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை அது பென்யமினின் மூட்டைக்குள் இருக்கிறது என்னும் ரகசியம்.

மூட்டைகள் ஒவ்வொன்றாய் அவிழ்க்கப் பட்டன. பென்யமினின் மூட்டை அவிழ்க்கப் பட்டபோது பளிச்சிட்டது வெள்ளிக் கிண்ணம்.

சகோதரர்கள் அதிர்ந்தார்கள். எல்லோரும் யோசேப்பின் முன்னிலையில் இழுத்து வரப்பட்டார்கள்.

‘திருடர்களே… உங்களுக்கு விருந்து தந்து உபசரித்தேன்.. நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா ‘ யாக்கோபு போலியாய் கர்ஜித்தார்.

‘ஐயா… எப்படிச் சொல்வது ? அது எப்படி வந்ததென்றே எங்களுக்குத் தெரியாது… என்ன சொல்லி உங்களை நம்பவைப்பேன். நாங்கள் அப்படிப் பட்டவர்கள் அல்ல. நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்’ சகோதரர்கள் அழுதார்கள்.

‘சரி எல்லோரும் போங்கள். கிண்ணத்தைத் திருடிய பென்யமின் மட்டும் இங்கே நிற்கட்டும்’ யோசேப்பு சொன்னார்.

‘ஐயா… தயவு காட்டுங்கள். பென்யமின் இல்லையேல் எங்கள் தந்தை இறந்தே விடுவார். இவனைப் பத்திரமாகத் திருப்பி ஒப்படைப்போம் என்று நாங்கள் எங்கள் தந்தைக்கு வாக்களித்திருக்கிறோம். கருணை காட்டுங்கள். ஏற்கனவே அவர் தன்னுடைய ஒரு மகனை இழந்து அழுது கொண்டே இருக்கிறார்’ என்றார்கள்.

யோசேப்புவால் இதற்கு மேல் தன்னை மறைக்க முடியவில்லை. பணியாட்களை வெளியே அனுப்பிவிட்டு சகோதரகள் முன்னிலையில் சத்தமிட்டு அழுதார். சகோதரர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.

பின்பு தன்னுடைய தலைப்பாகையை எடுத்து விட்டு, சகோதரர்களே… ‘என்னை நன்றாக உற்றுப் பாருங்கள்… நான்தான் யோசேப்பு ! உங்கள் சகோதரன்’ என்றார்.

சகோதரர்கள் ஆனந்தமாய் அதிர்ந்தார்கள். அவரை முதன் முதலாய் உற்றுப் பார்த்தார்கள். அவர்களிடம் மகிழ்ச்சியும், அச்சமும் பீறிட்டது,

‘யோசேப்பு.  எங்களை மன்னித்து விடு. நாங்கள் உனக்கு மிகப் பெரிய கொடுமை செய்தோம். நீ இப்படி பெரிய ஆள் ஆனதைக் காணும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எங்களை மன்னித்து விடுவாயா ? ‘ சகோதரர்கள் அவரிடம் மன்னிப்பு வேண்டினர்.

யோசேப்பு சிரித்தார். ‘ கவலைப் படாதீர்கள். நீங்கள் எந்த தப்பும் செய்யவில்லை… இது எல்லாம் கடவுளின் சித்தம். அவர் எல்லோருக்கும் ஒவ்வொரு இடத்தைத் தயாராக்கி வைத்திருக்கிறார். நீங்களெல்லாம் அதைச் செயல்படுத்த அவரால் தெரிந்து கொள்ளப் பட்டீர்கள். அவ்வளவே’ என்றார்.

அனைவருக்கும் செல்வமும், ஏராளம் வண்டிகளில் தானியங்களும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

சகோதரர்கள் நாடு திரும்பி, நடந்ததையெல்லாம் தந்தையிடம் சொன்னார்கள். தந்தை ஆனந்தம் மேலிட உற்சாகமாய் சத்தமிட்டார். அவரிடம் சிறிது காலமாய் காணாமல் போயிருந்த உற்சாகம் திரும்ப வந்தது. யோசேப்பு தந்தையையும் சகோதரர்களையும் எகிப்து நாட்டிற்கு வரவழைத்தார். இஸ்ரயேல் என்று கடவுளால் பெயரிடப்பட்ட யோசேப்பின் தந்தை யாக்கோபு எகிப்திற்கு வந்தார். அங்கே இஸ்ரயேலில் குலம் பலுகிப் பெருகியது. அவர்கள் நீண்டகாலம் மகிழ்வுடன் வாழ்ந்தார்கள்.
0

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 73 other followers