தன்னம்பிக்கை : இந்த வயசுலயா ?

இந்த வயசுல இதெல்லாம் முடியாது .. “ எனும் வாக்கியத்தை எல்லா இடங்களிலும் வெகு சகஜமாய்க் கேட்கலாம். பல சந்தர்ப்பங்களில் நாமே கூட இதைப் பயன்படுத்தியிருப்போம். நமது பிள்ளைகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது நாம் சந்திக்கும் ஏதோ ஒரு நபரிடமோ போகிற போக்கில் சொல்லி விட்டுப் போயிருப்போம்.

இந்தச் சின்ன வாக்கியம் மனதில் உருவாக்குகின்ற பாதிப்பு எவ்வளவு என்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. நாம் ஜஸ்ட் லைக் தேட் சொல்லிவிட்டுப் போகும் இந்த வாக்கியம் ரொம்பவே ஆக்ரோஷமானது. இதைப் பெற்றுக் கொள்ளும் நபருடைய தன்னம்பிக்கையின் மீதும், இலட்சியங்களின் மீதும் ஒரு இடியாக இறங்கவும் வாய்ப்பு உண்டு.

பல குழந்தைகளுடைய ஆர்வமும், வேட்கையும் இத்தகைய வாக்கியங்களால் அணைத்து விடுவதுண்டு. பல இளைஞர்களுடைய இலட்சியங்கள் இதனால் சோர்வடைவதுண்டு. பல முதியவர்களுடைய இனிமையான பொழுதுகள் இதனால் சிதிலமடைவதுமுண்டு.

பெரும்பாலான மக்கள் என்ன செய்கிறார்களோ அதுவே சரியானது எனும் முடிவுக்கு நாம் சீக்கிரமே வந்து விடுகிறோம். ஒரு செயலைச் செய்வதற்கு இது தான் சரியான வயது என்பதை மற்றவர்களுடைய வாழ்க்கையிலிருந்து தான் பொறுக்கி எடுக்கிறோம். அந்த வயதுக்கு முன்போ, அந்த வயதைத் தாண்டியோ அந்த செயலைச் செய்வது நிச்சயம் தோல்வியில் தான் முடியும் என்று பிள்ளையார் சுழி போடும் போதே முடிவு கட்டி விடுகிறோம். 

இது சரிதானா ? சாதனையாளர்களுடைய பட்டியலைப் புரட்டிப் பார்த்தால் அவர்களுடைய சாதனைக்கு வயது எப்போதுமே ஒரு தடையாய் இருந்ததில்லை எனும் உண்மை புரியும். எதை அடைய வேண்டும் எனும் தெளிவான இலட்சியமும் அதை நோக்கிய பார்வையுமே அவர்களிடம் இருக்கும். அர்ஜுனரின் கண்ணுக்குத் தெரிந்த பறவையின் ஒற்றைக் கண்ணைப் போல நேர்த்தியான கூர்மையான இலட்சியப் பார்வை.

ஒருவர் ஒரு நூலை எழுதிப் பதிப்பிக்க வேண்டுமெனில் எத்தனை வயதாகவேண்டும் என்பதைப் பற்றி எல்லோருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கும். அடாவ்டோ கோவால்ஸ்கி டா சில்வா எனும் பிரேசில் நாட்டு எழுத்தாளர்அப்ரெண்டே லேஎனும் நூலை எழுதியபோது அவருடைய வயது என்ன தெரியுமா ? ஐந்தரை!.  பால் குடிக்கும் வயதில் நூல் வடித்திருக்கிறார் அவர்.  

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள எமிலி ரோஸாவுக்கு மருத்துவம் மற்றும்  அறிவியல் மீது அலாதி பிரியம். சின்ன வயதிலேயே அதைக் குறித்த நூல்கள், ஆய்வுகளையெல்லாம் படிக்க ஆரம்பித்தார். அவருடைய முக்கியமான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியானது. அப்போது அவருக்கு வயது வெறும் 11. 

பனினொன்று வயதிலேயே ஆராய்ச்சியா என கின்னஸ் புத்தகம் அவசர அவசரமாய் அவரது பெயரை சாதனைப் பட்டியலில் பதிவு செய்து வைத்தது. அவர் நிறுத்தவில்லை உளவியலில் தனது முதுகலைப் பட்டத்தை டென்வரிலுள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் முடித்தபோது வயது 22. 

ஐந்து வயதென்றால் ஒன்றாம் வகுப்பில் படிக்க வேண்டும் என்பது தான் உலக வழக்கம். அந்த வயதில் ஒரு நூலை எழுதுவதென்பது யாரும் நினைத்துப் பார்க்காத ஒன்று. “இந்த வயசுல உனக்கெதுக்கு இந்த வேலை, நாலு ரைம்ஸ் சொல்லுஎன்று யாரேனும் சொல்லியிருந்தால் அந்த நூல் அரங்கேறியிருக்காது. எமிலி ரோஸாவிடம்முதல்ல நீ ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடி, அப்புறம் ஆராய்ச்சி பற்றிப் பேசலாம்என பெற்றோர் சொல்லியிருந்தால் அவருடைய சாதனை நிகழ்ந்திருக்காது !

நியதிகளை மீறிய செயல்களே சாதனைகளாய்ப் பதிவாகின்றன. வயதைக் காரணம் காட்டி செயல்களைத் தாமதப் படுத்தும் போது அவை சாதாரண வெற்றியாய்க் கூட  மாறாமல் போய்விடுகின்றன. இந்தியாவின் கிஷன் சிரீகாந்த் தன்னுடைய முதல் படத்தை இயக்கியபோது அவருக்கு வயது வெறும் ஒன்பது ! இயக்குனராய் வெற்றிக் கொடி கட்ட வயது ஒரு தடையல்ல என்பதை அவருடைய சாதனைப் படம் நிரூபித்துக் காட்டியது.

இளைஞர்களால் மட்டுமே செய்ய முடியும் எனும் சாதனைகளைச் சிறுவர்களாலும் செய்ய முடியும். சிறு வயதினரால் செய்ய முடிகின்ற விஷயங்களை முதியவர்களாலும் செய்ய முடியும். எதைச் செய்வதற்கும் வயது ஒரு தடையல்ல எனும் அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டாலே போதுமானது !

ஜப்பானிலுள்ள டாமே வாட்டன்பே எனும் பெண்ணுக்கு எவரெஸ்டின் உச்சியை எட்டிப் பிடிக்க வேண்டும் எனும் ஆர்வம். தளராத முயற்சியின் முடிவில் அவர் எவரெஸ்டை எட்டிப் பிடித்தார். ஆனந்தத்தில் அவர் தனது கரங்களை உயர்த்தியபோது அவருக்கு வயது 63 !

வெற்றிபெறுவதற்கான முதல் தேவை வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை தான். அந்த வேட்கையும் தேடலும் இருப்பவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில்லை. எங்கே வாய்ப்புக் கிடைக்கிறது என்பதை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பயணத்தில் ரிஸ்க் எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. இயங்கிக் கொண்டே, தேடிக்கொண்டே, பயணித்துக் கொண்டே இருப்பவர்கள் தான் வெற்றியடைகிறார்கள். ஓய்ந்து விட்டால் நம்மைச் சுற்றி தோல்வியின் கரையான்கள் கூடு கட்டி விடும். தலைக்கு மேல் வேதனையின் வல்லூறுகள் வட்டமிடவும் துவங்கும்.

நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டியது வெற்றிக்கான தேடலின் இன்னொரு தேவை. நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் நமக்கான உற்சாகத்தை பல வேளைகளில் வழங்குவதில்லை. பெரும்பாலும் நமது உயர்வுகளுக்குக் குறுக்கே மதில் சுவர் கட்ட முடியுமா என்றே பார்ப்பார்கள். எனவே நம்மிடம் இருக்கும் தெளிவான இலக்கும், அதை நோக்கிய பயணத்தில் நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொள்வதும் ரொம்பவே அவசியம்.

வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம் என்பதை உணராமல் பலர் தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு விடுகிறார்கள். இதுவே மிகப்பெரிய தோல்விஎன்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன். பலரும் வெற்றி ஃபாஸ்ட் புட் போல சட்டென கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் தான் ஏழே நாட்களில் வெள்ளையாகலாம், முப்பதே நாட்களில் ஒல்லியாகலாம், மூன்றே மாதத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் எனும் கூக்குரல்களுக்குப் பயங்கர கிராக்கி. பல்லாயிரம் முறை தோல்வியடைந்தாலும் வெற்றியடையும் வரை ஓடும் வேட்கையே சாதனைகளுக்குத் தேவை. தாமஸ் ஆல்வா எடிசன் அதையே செய்தார் !

கான்ஸ்டண்டைன் காலியாஸ் எனும் கிரீஸ் நாட்டு எழுத்தாளர் கிளான்ஸ் ஆஃப் மை லைஃப்எனும் நூலைக் கடைசியாக எழுதினார். 169 பக்கங்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட அந்த நூலை அவர் எழுதி வெளியிட்டபோது அவருக்கு வயது 101 ! 2003ம் ஆண்டு அவர் இந்த நூலை வெளியிட்டார். உலகின் மிக முதிய நூலாசிரியர் இவர் தான். ஒருவருடைய வயது, அவருடைய விருப்பத்துக்கும், இலட்சியத்துக்கும் இடையே நிற்க முடியாது என்பதை அவருடைய சாதனை எடுத்துக் காட்டுகிறது. 

சாதனையாளர்களெல்லாம் வெற்றியை ஏதோ சகஜமாக எட்டிப் பிடிக்கவில்லை, அதன் பின்னால் உழைப்பு உறைந்து கிடக்கிறது. “செயல்படக் கூடிய சின்ன அறிவு, செயல்படாமல் கிடக்கும் கடலளவு அறிவை விடப் பெரியதுஎன்கிறார் கலீல் ஜிப்ரான். ஐடியாக்களை மனதில் போட்டுப் புதைத்து வைப்பது பயனளிக்காது, அதை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்பதையே அவருடைய கருத்து படம் பிடிக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த சுவாமிநாத ஐயருக்கு படிப்பின் மீது அதீத ஆர்வம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் அவர் எம்பில் பட்டம் பெற்றபோது வயது 84 ! உலகிலேயே முதிர் வயதில் தத்துவயிலலில் முதுகலைப் பட்டம் பெற்றவரும் இவரே. தனது 83வது வயதில் அந்த பட்டத்தை அவர் பெற்றார். கல்விக்கும், ஆர்வத்துக்கும், இலட்சியத்துக்கும் வயது எப்போதுமே தடையாய் இருப்பதில்லை என்பதையே அவருடைய பட்டங்கள் நமக்கு சத்தியம் பண்ணிச் சொல்கின்றன.

துணிச்சலும் ஆர்வமும் உடையவர்களை வெற்றி ஏமாற்றுவதில்லை. தங்கள் சொகுசு வளையத்தை விட்டு வெளியே வருபவர்கள் மட்டுமே அதை விட உன்னதமான இடங்களை அடைய முடியும். 

வெற்றி என்பது நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு என்கிறார் எழுத்தாளர் ஹென்ரிக் எட்பர்க். வெற்றி பெற வேண்டும் எனும் முடிவை நீங்கள் எடுத்து விட்டால் உங்களை யாரும் தோல்வியடையச் செய்ய  முடியாது என்கிறார் அவர். 

கடைசியாக ஒன்று ! வெற்றிக்கான தேடுதல் ஓட்டத்தில் நேர்மை, உண்மை, நம்பகத் தன்மை போன்றவற்றை தவற விடாதீர்கள். இல்லையேல் நீங்கள் அடையும் வெற்றி உண்மையான வெற்றியாய் இருப்பதில்லை.

வெற்றிக்கு வயதொன்றும் தடையல்ல

முயலாமல் முடங்குதல் விடையல்ல !

 

தன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் அனுமதிச்சீட்டுகள்

விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போலஎன்ற பாரதியார் பாடல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுதந்திரமாய்ப் பறக்கும் சிட்டுக் குருவி சிலிர்ப்பின் அடையாளம். எப்போதேனும் சிட்டுக் குருவியின் கூட்டைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா ? நேரம் கிடைக்கும் போது கவனித்துப் பாருங்கள். சிட்டுக்குருவிகளின் கூடுகள் எப்படி இருக்கின்றன ? கடந்த ஆண்டு எப்படி இருந்தன ? கடந்த நூற்றாண்டில் எப்படி இருந்தன ? வியப்பூட்டும் பதில் என்னவென்றால், நூற்றாண்டுகளாக இவற்றில் ஏதும் மாற்றம் இல்லை என்பதே!

விலங்குகள், பறவைகள் போன்றவையெல்லாம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை. மனிதனுடைய வாழ்க்கையோ மாற்றங்களால் கட்டமைக்கப்பட்டது. அந்த மாற்றங்கள் தான் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டு வருகிறது. 

சிலருக்கு மாற்றங்கள் எதுவும் பிடிப்பதில்லை. குறிப்பாக அலுவலக வேலை, பிஸினஸ் போன்றவற்றில் மாற்றம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறார்கள். கிணற்றுத் தவளையைப் போல வட்டமடித்துக் கொண்டே இருப்பதில் தான் அவர்களுக்குத் திருப்தி அதிகம். அட்டவணையை மாற்றி எதுவும் செய்யமாட்டார்கள். வட்டத்துக்குள் ஓடிக் கொண்டிருக்கும் கடிகார முள்போல அவர்களுடைய வாழ்க்கை பேட்டரி தீரும் வரை ஓடி முடிகிறது.

ஒரு புதிய ரக செல்போனைப் பார்த்தவுடன் நமது செல்போனை மாற்றி விடலாமா எனத் தோன்றுகிறது. ஒரு எல்..டி டிவியைப் பார்த்ததும் நமது சின்ன டிவியை மாற்றி விடலாமா என தோன்றுகிறது. புத்தம் புதிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தவுடன் மாற்றத்துக்காக மனம் தயாராகிவிடுகிறது. ஆனால் முக்கியமான வேலை சார்ந்த மாற்றங்கள் வரும்போது மட்டும் பயம் வந்து கூடாரமடிக்கிறது. 

வெற்றியாளர்கள் மாற்றத்தைக் கண்டு பயந்து ஓடுவதில்லை. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என புன்னகையுடன் எதிர்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சரியான மாற்றத்தை தேடிப் போய் அணைத்துக் கொள்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் பொருளாதார வீழ்ச்சியில் வழுக்கியது. பலர் வேலையிழந்து, பணமிழந்து சிக்கலில் விழுந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். ஆனால் மாற்றங்களைக் கண்டு மிரண்டு போனவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு மடிந்தே போனார்கள்.

மாற்றம் நல்லது என்று பலரும் சொன்னாலும் மாற்றங்களை மக்கள் வெறுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. 

என்ன நடக்கப் போகிறதோ தெரியலையே ! எனும் பயம் முதலாவது. ஒரு வட்டத்துக்குள்ளேயே நீந்திக் கொண்டிருப்பவர்கள் சட்டென ஒரு மாற்றத்தைக் காணும் போது நிலை குலைந்து போகிறார்கள். தொட்டியில் நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனை பிடித்து தரையில் விட்டால் துடிப்பதைப் போல இவர்கள் துடித்து விடுகிறார்கள். உண்மையில் விடப்பட்டது தரையில் அல்ல, கடலில் எனும் வாழ்வின் உண்மையை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

என்னோட வேலை என்ன ஆகும்ன்னு தெரியலையே ? என்னோட எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியலையே, வாழ்க்கையை ஓட்ட என்ன செய்வேன்னு தெரியலையே என்றெல்லாம் மாற்றம் குறித்த திகில் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.  

இரண்டாவது பயம் கட்டுப்பாடு சேர்ந்தது. நம்ம கையில கண்ட்ரோல் எதுவும் இல்லையே எனும் பயம் அது !. நடக்கும் மாற்றங்களெல்லாம் வேறு ஏதோ ஒரு நபருடைய கட்டுப்பாட்டில் இருப்பது போல ஒரு எண்ணம் இவர்களுடைய மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். நமது வாழ்வின் கடிவாளம் நம்மிடம் இல்லையேல் இதில் எப்படி வெற்றி பெறுவது எனும் பயம் அவர்களுக்கு மாற்றத்தைக் கண்டு விலகி ஓடும் மனநிலையைத் தந்துவிடும்.

மூன்றாவது பயம் தோல்வி சார்ந்தது. சூழல் மாறிவிட்டால் வெற்றி பெற முடியுமா எனும் குழப்பம். புதிய இடம் எப்படி இருக்குமோ ? புதிய தலைமை எப்படி இருக்குமோ ? தரப்பட்டிருக்கும் புதிய வேலையில் திறமையாய் செயல்பட முடியுமா ? ஒருவேளை வெற்றி பெறாவிடில் வேலை நிலைக்குமா ? இப்போது இருக்கின்ற நல்ல பெயர் தொடருமா என சங்கிலித் தொடர் போலத் தொடரும் பயங்கள் இதில் அடக்கம்.

நான்காவது பயம் சோம்பேறிகளின் பயம். இந்த வேலையை நாலுவருஷமாவோ, நாப்பது வருஷமாவோ பண்றேன். இதோட எல்லா நுணுக்கங்களும் எனக்குத் தெரியும். கண்ணை மூடிட்டு கூட இந்த வேலையைச் செய்ய முடியும். இனிமே புதிய வேலையைச் செய்தா எப்படி ? இப்போ இருக்கிற இந்த ரிலாக்ஸான சூழல் நிலைக்குமா ? எனும் பயம் அது. ரொம்பவே சொகுசான வேலை சுழற்சியிலிருந்து வெளிவர பயப்படும் மனநிலை இது.

மாற்றங்களை வெறுப்பவன் அழுகத் துவங்குகிறான், மாற்றங்களை ஏற்காதவர்கள் கல்லறை மனிதர்கள் மட்டுமேஎன்கிறார் இங்கிலாந்தின் ஹேரால்ட் வில்சன். 

ஒருவர் பால் ஆலன் என்பவருடன் சேர்ந்து டிராஃப்டேட்டா எனும் சின்ன நிறுவனத்தை ஆரம்பித்தார். டிராபிக் சிக்னல் தகவல்களிலிருந்து தகவல்களைப் பெற்று அவற்றைப் பயனுள்ள அறிக்கைகளாக மாற்றுவது தான் அவர்களுடைய திட்டம். ஓரளவு நிறுவனம் வெற்றிகரமாய் இயங்கிக் கொண்டிருந்தபோது அவர் அதை உதறிவிட்டு மாற்றத்தை நாடினார். அந்த மாற்றம் அவருக்கு உலகப் புகழைக் கொண்டு வந்து சேர்த்தது. அவர் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் !

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நம்மைச் சந்தித்துக் கொண்டே தான் இருக்கும். மாற்றங்களை எந்த அளவுக்கு எதிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு மாற்றங்களுக்குள் இணைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். திசை மாறித் திசை மாறி ஓடும் நதியின் ஓட்டத்துக்கு ஏற்ப நீந்துவதே எளிதானது. எதிரேறுதல் கடினமானது. எனவே மாற்றங்களை மனதளவில் ஏற்றுக் கொள்வதே, மாற்றங்களைப் பழகிக் கொள்வதன் முதல் படியாகும். 

ஒரே பள்ளிக்கூடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி பணிமாற்றம் பெற்றுச் செல்லும்  ஆசிரியர்களின் மன உளைச்சல் கடுமையானது. அவர்கள் பழகிய சூழலை விட்டு வெளியேறுவதை சுமையாகக் கருதுகிறார்கள். புதிய நபர்களைப் பரிச்சயப்படுதல், புதிய சூழலில் நடைபோடுதல், புதியவற்றைச் செய்தல் என பல்வேறு நல்ல அம்சங்கள் அதில் உள்ளன. இரண்டு மணிநேர திரைப்படத்துக்கே பல மாற்றங்கள், இனிய ஆச்சரியங்களெல்லாம் எதிர்பார்க்கும் நம்மில் பலரும் வாழ்க்கையில் அத்தகைய ஆச்சரியங்களைச் சந்திக்கப் பயப்படுவது வியப்பளிக்கிறது.

கோயில் திருவிழாக்களில் விற்கும் கலைடாஸ்கோப் பார்த்திருப்பீர்கள். ஒரு முனையைக் கண்ணில் வைத்து சுழற்றிச் சுழற்றிப் பார்க்கும் போது பிரம்மாண்டமான காட்சிகள் விரிவடைந்து நம்மை வியப்பூட்டும். அப்படிக் காட்டுபவை ஒரு சில வண்ணத் துண்டுகள் தான். மாற்றமும் அத்தகையதே. ஒரு சின்ன மாற்றம் கூட நம்முடைய பார்வையில் மிகப்பெரிய விஸ்வரூப வேறுபாடைக் காட்டக் கூடும். எனவே மாற்றங்களைக் குறித்து மலையளவு கற்பனைகள் வளர்க்காமல், அதன் இயல்பிலேயே அணுகுவதே சிறந்தது.

காலங்களைத் தாண்டி வாழ்பவை மிகவும் வலுவான பிராணிகளோ, மிகவும் அறிவார்ந்த பிராணிகளோ அல்ல. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பிராணிகளே  தலைமுறை தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனஎன்கிறார் டார்வின் ! மாற்றங்களை ஏற்றுக் கொள்வதன் தேவையை தனது பாணியில் சொல்கிறது டார்வினின் தத்துவம். குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் எனும் அவருடைய கோட்பாடு கூட மாற்றத்தின் மீதான கட்டமைப்பு தானே !

முன்னேற்றத்துக்கான மாற்றங்களை விரும்பும் மனம் பாசிடிவ் மனநிலையிலிருந்தே புறப்படுகிறது. நான் இந்த மாற்றத்துக்காகப் பயப்படுகிறேனா ? பயப்படுகிறேன் எனில் ஏன் பயப்படுகிறேன் ? இந்தப் பயம் நியாயமானது தானா எனும் சில கேள்விகளை நமக்கு நாமே கேட்பதே நமக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அள்ளித் தரும். எத்தனை முறை மாற்றத்தைக் குறித்து நேர்மறையாய் சிந்தித்திருக்கிறோம், எத்தனை முறை எதிர் மறையாய் சிந்தித்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள். நீங்கள் வெற்றியாளரா, இல்லையா என்பது புரியவரும்.

அமெரிக்காவிலுள்ள மேசிஸ் எனும் மிகப்பெரிய விற்பனை நிலையம் இன்று சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய்கள் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தை ஆரம்பித்த ரௌலண்ட் ஹஸி மேசி என்பவர் இந்தக் கடையை ஆரம்பிக்கும் முன் நான்கு கடைகள் ஆரம்பித்தார். ஒவ்வொன்றாக நான்குமே தோல்வியடைந்தன. ஒவ்வோர் தோல்வியிலும் மாற்றத்தைக் கற்றுக் கொண்டார். அதை விரும்பி ஏற்றுக் கொண்டு அடுத்த நிலைக்குத் தாவினார். கடைசியில் மேசிஸ் அவருக்கு வெற்றி தந்தது. இன்று 800 க்கும் மேற்பட்ட கடைகள் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

துணிச்சலுக்கும் முட்டாள் தனத்தும் வேறுபாடு உண்டு. விமானத்திலிருந்து பாராசூட்டுடன் குதிப்பதற்கும், எதையும் யோசிக்காமல் குதிப்பதற்குமான வித்தியாசமாய் இதைச் சொல்லலாம். எனவே மாற்றத்தை நோக்கி இடம் பெயரும் முன் அது குறித்த புரிதலும், அறிதலும் இருக்க வேண்டியது அவசியம். அதன் பின் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முதல் சுவடை வைக்கும்போதே இதன் முழு பொறுப்பும் என்னுடையது என்பதை மனதில் எழுதுங்கள். அது மாற்றத்தை வெற்றிகரமாக மாற்றும் உத்வேகத்தை உங்களுக்குத் தரும்.  

மாற்றங்களை எதிர்கொள்வோம்

வாழ்வினிலே  இனி வெல்வோம்

Vetrimani : போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா

போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா

Image result for old man advice

“கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது” என்பது மிகப் பிரபலமான ஒரு சினிமா வசனம். எந்த ஒரு கட்டுரையை வாசித்தாலும் சரி, எந்த ஒரு உரையைக் கேட்டாலும் இந்த இரண்டு வார்த்தைகளையும் பெரும்பாலும் சேர்த்தே தான் பயன்படுத்துவார்கள். போட்டி என்ற வார்த்தையை உச்சரித்தாலே அடுத்து பொறாமை எனும் வார்த்தை மனதில் குதித்து வருமளவுக்கு இந்த இரண்டு வார்த்தைகளும் ஒட்டிப் பிறந்த சயாமிஸ் இரட்டையர்களைப் போல நிலை பெற்றுவிட்டன. ஏன் இந்த இரண்டும் இணைந்தே திரிய வேண்டும் ? கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் சுவாரஸ்யமான சிந்தனைகள் மனதுக்குள் முகம் காட்டுகின்றன.

ஒரு அழகான இளம் பெண் சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறாள் என வைத்துக் கொள்ளுங்கள். ஓரமாக நின்று பார்க்கின்ற மற்ற பெண்களின் மனதில் முதலில் ஒரு ரசனையின் வாசம் எழும். “ஆஹா.. செம அழகா இருக்கா !”. அதன்பின் அவளைப் போல நாமும் மாறவேண்டும் எனும் அழகுப் போட்டி இதயத்தில் வந்தமரும். அப்படி மாற முடியாமல் போகும் போது, அவளது வசீகரத்தை நாம் அடைய முடியவில்லையே எனும் ஆதங்கம் முளைவிட்டு, பொறாமையாய் கிளைவிட்டுத் திரியும்.

பிறரோடான ஒப்பீடுகள் தான் போட்டிக்குத் தூண்டுதலாகவும், பொறாமைக்கு தூண்டு கோலாகவும் இருக்கிறது. “ஐஸ்வர்யா ராய் எவ்ளோ அழகு” என பெண்கள் பொறாமைப் படுவதில்லை. பக்கத்து சீட்ல உக்காந்து வேலை பாக்கற பொண்ணு எவ்ளோ அழகா இருக்கா ! என்று தான் பொறாமைப் படுவார்கள். கூடவே இருப்பவர்கள், தொடர்ந்து பயணிப்பவர்கள், ரொம்ப பழகியவர்கள் இவர்களெல்லாம் நாம் அடைய முடியாத இடத்தை அடைந்தால் நமக்குள் அந்த பொறாமையின் புலிநகம் பிறாண்டுகிறது.

பொறாமை இல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லி விடலாம். பெரும்பாலும் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு பொறாமைக் குட்டிச்சாத்தான் உட்கார்ந்து கொண்டே தான் இருக்கும். பலர் அதை வெளிப்படையாய் காட்டுவார்கள். சிலர் அதை சாதுர்யமாக மறைத்து விடுகிறார்கள். சந்தேகம் இருந்தால் உங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவைன்ட் செய்து பாருங்கள். உங்களுடைய அலுவலகத்தில் உங்களை விட சிறியவர், அல்லது உங்களுடைய நிலையில் இருப்பவர் உங்களை விட அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற்றுச் செல்லும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது ? நீங்கள் கைகுலுக்கிப் பாராட்டும் அந்த நிகழ்வில் எத்தனை சதவீதம் உண்மையின் ஈரம் உறைந்திருக்கிறது ?

“அவனுக்கெல்லாம் இந்த புரமோஷன் கிடைச்சிருக்கு. இதுக்குக் காரணம் என்னன்னா…” என நாம் அடுக்குகின்ற கிசு கிசு மட்டம் தட்டுதல்களில் வெளிப்படுபவை அக்மார்க் பொறாமையே ! நாம் அடைய வேண்டும் என நினைக்கின்ற இடத்தை இன்னொருவர் அடைந்து விட்டாரே என நினைப்பது. அடையவேண்டும் எனும் இலக்கை நோக்கி ஓடும்போது போட்டி வலிமையானதாக இருக்கிறது. அடைய முடியாமல் போகும் போது அந்த இயலாமை பொறாமையை விளைவிக்கிறது.

ஓடுவது ஒரு இலக்கை நோக்கி எனும் போது போட்டியாய் இருப்பது, ஒரு நபரை நோக்கி எனும் போது பொறாமையாய் மாறி விடுகிறது. அடுத்தவன் அந்த இடத்தை அடைந்து விடக் கூடாது எனும் சிந்தனை போட்டியின் சுவாரஸ்யத்தையும், ஆரோக்கியத்தையும் குழி தோண்டிப் புதைத்து விடுகிறது. இணைந்தே பயணிக்கின்ற இருவரில் ஒருவர் உயர்ந்த இடத்தை அடைந்தபின், அந்த இருவரின் இயல்புகளிலும் பெரிய அளவில் மாற்றம் உண்டாகி விடுகிறது.

போட்டி ஒரு மனிதனை வெற்றியாளனாய் மாற்றிக் கொண்டே இருக்கிறது. பொறாமை ஒரு மனிதனை நோயாளியாய் மாற்றிக் கொண்டே இருக்கிறது. அதையே அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. பொறாமை படுகின்ற நெஞ்சில் ஏராளமான நோய்கள் வந்து குடியேறுகின்றன. உயர் குருதி அழுத்தம் முதல், கேன்சர் வரையிலான நோய்களுக்கு பொறாமையின் பாசி படிந்து கிடக்கின்ற இதயம் ஒரு காரணம் என்கின்றன ஆய்வுகள்.

எனவே பொறாமை உங்கள் மனதில் பாதம் பதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால், அதை உடனே அகற்ற வேண்டிய வழிகளைப் பின்பற்ற வேண்டும். பொறாமை என்பது சீற்றம் கொண்ட சிங்கத்தைப் போல. சிங்கத்தைக் கூடவே வைத்துக் கொண்டு யாரும் குடும்பம் நடத்துவதில்லை. அதை விரட்டி விட்டால் தான் வீடு நிம்மதியாக இருக்கும். எனவே பொறாமையை விரட்ட முயற்சியை எடுக்க வேண்டும்.

பொறாமையானது நம்மை நோக்கி நாமே எய்கின்ற அம்பைப் போன்றது. ஒருவர் மீது பொறாமைப் படும்போது நாம் நம்மையே எய்கிறோம். அடுத்த நபருக்கு அது தெரிவது கூட இல்லை. அவரு பாட்டுக்கு அவரு வேலையை செய்துட்டே இருப்பாரு, நாமோ பொறாமையெனும் கூர் முனையினால் நம்மை நாமே காயப்படுத்திக் கொண்டு கீழே விழுந்து கிடப்போம்.

பல வேளைகளில் இது நம்மை சுய பச்சாதாபத்துக்கும் இட்டுச் செல்கிறது. ‘நம்மால முடியாது’ , நாம இதுக்கெல்லாம் லாயக்கில்லை, நாம அதை யோசிக்கவே வேண்டாம், நமக்கு திறமை இல்லை இப்படிப்பட்ட சிந்தனைகள் நம்மை மூழ்கடிக்க இந்த பொறாமையும் ஒரு காரணம் என்கிறது உளவியல்.

நமது பொறாமைக்குக் காரணம் ஒருவேளை நமக்கே தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை சின்ன வயதில் நிகழ்ந்த வாழ்க்கை அனுபவங்கள், பொறாமையையும் வெறுப்பையும் மனதுக்குள் பதியமிட்டிருக்கலாம். அது காலப்போக்கில் நமது இயல்பாய் மாறியிருக்கும். அப்படிப்பட்ட சூழலில் அந்த பொறாமையின் ஆணிவேரைக் கண்டறிவது மிகவும் அவசியமானது. அதைக் கண்டடைவதும், புரிந்து கொள்வதும், அதை விட்டு விலக முடிவெடுப்பதும் முதன்மைத் தேவைகள்.

வாழ்க்கையில் நம்மிடம் இருப்பதைப் பாராட்டத் துவங்கினாலே, பொறாமை பெரும்பாலும் விடைபெற்று ஓடிவிடும். நோய் நொடியில்லாமல் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதே அதிகபட்ச மகிழ்ச்சிச் செய்தி. அடிப்படை வசதிகளோடு வாழ்க்கையை கொண்டாட முடிந்தால் அது மிகப்பெரிய ஆறுதல் செய்தி. இப்படி நம்மிடம் என்னென்ன இருக்கிறது என்பதைப் பட்டியலிட்டுப் பாராட்டத் துவங்கினால், ஏமாற்றங்களின் குரல் அமுங்கி விடும். பொறாமையின் பற்கள் உடைந்து விடும்.

நம்மைத் தாண்டி ஒருவர் ஓடும்போது தான் பெரும்பாலும் பொறாமை வேர்விடும். எல்லாரும் தனித்தனி இயல்புடையவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித் தனி திறமைகள் உண்டு. அவரவர் பாதையில் அவரவர் பயணிக்கின்றனர். நான் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை இறைவன் நிர்ணயிக்கிறார். இருக்கின்ற தளத்தில் சிறப்பாய் பணி செய்வது மட்டுமே எனது வேலை, இல்லாத தளத்தை நோக்கி ஏக்கம் கொள்வதல்ல எனும் சிந்தனையை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அது பொறாமையை புறக்கணிக்க உதவும்.

நமது வாழ்க்கையில் எது நமக்கு முக்கியம் என்கின்ற பிரையாரிட்டி, முதன்மை விஷயங்களை நாமே கட்டமைத்துக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் இரண்டு வேலை வாய்ப்புகள் வந்தன. ஒன்று குறைந்த சம்பளம் ஆனால் இடமாற்றம் தேவையில்லை, குடும்பத்தோடு இருக்கலாம் எனும் வசதி. இன்னொரு வேலைவாய்ப்புக்கு பக்கத்து மாநிலத்துக்குச் செல்ல வேண்டும். ஆனால் சம்பளம் மூன்று மடங்கு. ‘செம வாய்ப்பு, பெரிய பதவி, எக்கச்சக்க பணம் கொஞ்ச நாள் குடும்பத்தை விட்டுட்டு வெளியூர் போ” என்று அறிவுரை கூறினார்கள் நண்பர்கள். அவரோ, உள்ளூர் வேலையைத் தேர்ந்தெடுத்தார். தனது மகிழ்ச்சி உறவுகளோடு இருப்பது தான், கரன்சிகளோடு கிடப்பதல்ல என்பது அவரது தேர்வாக இருந்தது.

ஒவ்வொரு விஷயமும் அவரவர் தேர்வு. ஒன்று சரி, ஒன்று தவறு என்பதை நிறுவுவதல்ல நமது நோக்கம். எதை முதன்மையாய் வைக்கிறீர்களோ அதைப் பொறுத்தே உங்கள் பொறாமையும், போட்டியும் இருக்கும் என்பது தான் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

அதே போல போட்டிகள் பொறாமையாக மாறி பல்லிளிப்பதற்கு தன்னம்பிக்கைக் குறைபாடு ஒரு முக்கியமான காரணம். நம்மைப் பற்றிய உயர்வான எண்ணங்கள் நமக்கு இருந்தால் பெரும்பாலும் பொறாமை பின்வாசல் வழியாக ஓடியே போய்விடும். என்னால் சாதிக்க முடியும், எனக்கு அந்தத் திறமை இருக்கிறது, எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நான் மதிப்பு மிக்கவன் போன்ற சிந்தனைகளை தன்னம்பிக்கையின் பாடசாலையில் தான் பார்க்கமுடியும். அத்தகைய சிந்தனைகள் நம்மிடம் இருந்தால் நாம் பொறாமையெனும் பொறியில் சிக்கிக் கொள்வதில்லை.

போதுமெனும் மனம் பொறாமையை வெல்ல இன்னொரு மிக வலிமையான ஆயுதம். “நீ முன்னாடி போறியா ? போய்க்கோ”, “நீ பின்னாடி வரியா, பரவாயில்ல வா…” என்பது போன்ற சமநிலை மனநிலை இருப்பவர்களிடம் பொறாமை காணப்படுவதில்லை. வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனநிலையும், தன்னம்பிக்கையும் அவர்களிடம் நிரம்பியிருக்கும். எவ்வளவுதான் சவாலான சூழலாய் இருந்தாலும் இயல்பாய் எடுத்துக் கொள்ளும் மனிதர்கள் புயலடித்தும் சரியாத மரமாய் வளம்பெறுவார்கள்.

நல்ல உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி செய்வதெல்லாம் பொறாமை சிந்தனையை மாற்றும் என கூறி வல்லுநர்கள் வியக்க வைக்கின்றனர். மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இது முதலில் தோன்றுகிறது. ஆரோக்கியமான மனம், நல்ல சிந்தனைகளை கொண்டு வருகிறது. நெகடிவ் சிந்தனைகளை உற்சாகமான மனம் அனுமதிக்க மறுக்கிறது. எனவே, பொறாமை தாண்டிய அழகிய வாழ்க்கைக்கு உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது தேவையாகிறது.

வாழ்க்கை அழகானது. போட்டி என்பது ஆரோக்கியமானது. அந்த போட்டி என்பது நம்மோடு நாமே நடத்துகின்ற போட்டியாய் இருப்பது சிறப்பானது. என்னை நான் மெருகேற்ற அந்த போட்டி உதவும். என்னோடு என்னை நானே ஒப்பிட்டுக் கொள்வேன். எனது திறமைகள் ஒன்றோடொன்று போட்டியிடும். எனது இயல்புகள் ஒன்றை ஒன்று சவால் விடுக்கும். அதில் பொறாமைக்கு இடமில்லை. ஒரு கிளை அதிகம் கனி கொடுக்கிறது என்பதற்காக மறு கிளை பொறாமைப் படாது, மரம் ஒன்றாக இருக்கும்போது. அத்தகைய சூழலில் போட்டியும் பொறாமையும் இரட்டைப் பிறவிகளாய் இருக்காது, இணையாத இரு கோடுகளாய் தான் பயணிக்கும்.

கடைசியாக, வாழ்க்கை என்பது எதை நாம் பெற்றுக் கொண்டோம் என்பதை வைத்து அளவிடப்படுவதில்லை. எதை நாம் விட்டுச் செல்கிறோம் என்பதை வைத்தே அளவிடப்படும். தனக்காய் சேர்த்துக் கொள்வதிலல்ல, பிறருக்காய் செலவழிப்பதில் தான் உண்மையான வாழ்வின் ஆனந்தம் நிரம்பியிருக்கும். அப்படி பிறருக்காய் கொடுப்பதில் போட்டி போடுவோம்.பிறரை வாழவைப்பதில் போட்டி போடுவோம். பிறரை ஆனந்தமாய் வைத்திருக்க போட்டி போடுவோம். அப்போது நமது வாழ்க்கை ஆனந்தமாய் மாறும்.

*

சேவியர்

தன்னம்பிக்கை : பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்

தோற்றுவிடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி. 

வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்என்கிறார் ஷேக்ஸ்பியர். தோல்வியும் வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது ! தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான முதல் கதவைத் திறந்து விட்டோம் என்று தான் பொருள்.

அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஆபிரகாம் லிங்கன் ஆறுமுறை தோல்வியைச் சந்தித்தபின் அரசியல் வெற்றியை ஆதாயமாக்கிக் கொண்டவர். தோல்வி என்பது வெற்றியை நோக்கிய பாதை என்பதில் அவருக்கு உறுதி இருந்தது. எனவே அவர் வெற்றியாளரானார்.

வெற்றிகளில் சிலவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். தோல்விகளில் பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் தோல்வி குறித்த பயத்தில் முயற்சி செய்யாமல் இருப்பதோ எதையுமே, எப்போதுமே நமக்குத் தருவதில்லை என்பது தான் நிஜம்.

ஜுராசிக் பார்க் என்றால் நமது நினைவுக்கு சட்டென வரும் விஷயங்கள் இரண்டு. ஒன்று டைனோசர். இரண்டாவது இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். அவர் தெற்கு கலிபோர்ணிய திரைப்படக் கல்லூரியான யு.எஸ்.சி யில் சேர இரண்டு முறை விண்ணப்பித்தார். இரண்டு முறையும் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தோல்வியால் தளர்ந்து விடாமல் ஸ்பீல்பெர்க் வளர்ந்தார், உலகெங்கும் அவர் புகழ் பரவியது. எந்தக் கல்லூரி அவரை நிராகரித்ததோ அதே கல்லூரி 1994ம் ஆண்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்தது ! தோல்விகளால் ஒரு வெற்றியாளனைப் புதைக்க முடியாது என்பதை உலகம் மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டது.

விழிப்புணர்வு என்பது வேறு பயம் என்பது வேறு. தோல்விகளைக் குறித்த விழிப்புணர்வு இருக்கலாம். ஆனால் அதுவே ஆளை விழுங்கும் பயமாக மாறி விடக் கூடாது என்பதே நாம் கவனிக்க வேண்டிய விஷயம். தோல்வி குறிந்த சிந்தனைகள் எச்சரிக்கை உணர்வைத் தருபவையாக இருக்கும் வரை அவை நமக்கு நன்மை பயக்கும். விபத்து குறித்த பயத்தில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வது எச்சரிக்கை உணர்வு. விபத்து குறித்த பயத்தில் வாகனத்தையே புறக்கணிப்பது கோழைத்தனமானது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் எல்லா போட்டிகளிலும் செஞ்சுரி அடிக்க வேண்டுமென்பது ரசிகனின் விருப்பம். ஆனால் அப்படி நிகழ்வதில்லை. தோல்விகளைப் புறந்தள்ளி விட்டு, அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல வேண்டும் எனும் இலட்சியத்தோடு அவருடைய பயணம் தொடர்கிறது. வெற்றி பெறவேண்டும் எனும் வேட்கை இருந்தால் வெற்றி பெறுவோம். அதே நேரம், தோற்றுவிடுவோமோ எனும் பயம் மட்டுமே போதும் நம்மை வெற்றிபெறாமல் தடுக்க.

வாழ்க்கை பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை. தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்து விடக் கூடாது. அதாவது பயம் நமக்கு அதைத் தாண்டிச் செல்கின்ற தகுதியை உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும். அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்து விடக் கூடாது.

தோல்வி குறித்த பயத்திலிருந்து வெளியே வர தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கை கடைகளில் விற்பனையாவதில்லை. உங்களுக்கு வேறு யாரும் வந்து தன்னம்பிக்கை எனும் ஆடையைப் போர்த்தி விடவும் முடியாது. தன்னம்பிக்கை என்பதை நாமே தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். தனக்கான கூட்டைத் தானே உருவாக்கும் ஒரு சிட்டுக் குருவியைப் போல !

காலையில் எழுந்து குளித்து, ஷேவ் செய்து, புத்துணர்ச்சியுடன் நல்ல ஒரு ஆடையை அணிவதிலேயே ஆரம்பித்து விடுகிறது இந்தத் தன்னம்பிக்கைப் பயணம். “நல்ல  உடை உடுத்துபவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்என்கிறார்கள் உளவியலார்கள். அது நம்மை அறியாமலேயே நமது தன்னம்பிக்கையை அதிகரித்து விடுகிறது. நமது கண்களில் தெளிவு உருவாகிறது. கட்சிதமான நேர்த்தியான ஆடை நமது தன்னம்பிக்கையின் வேர்களில் நீரூற்றுகிறது!

உயர்வான சிந்தனைகள் நமது வெற்றிகளை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நம்மைப் பற்றி நமது மனம் நினைக்கும் பிம்பம் தான் நாம். நம்மைப்பற்றிய உயர்வான சிந்தனைகள் நம்மையும் உயரத்தில் கொண்டு போய் வைக்கும். நம்மைப் பற்றி தாழ்வாக எண்ணினால் நமக்கான இடமும் தாழ்வாகவே இருக்கும். 

கூண்டுக்குள்ளேயே படுத்துக் கிடக்கும் சிங்கம் காலப் போக்கில் தான் ஒரு சிங்கம் என்பதையே மறந்து விடும். அதே போல தான் நம்மை ஒரு சின்னக் கூண்டுக்குள் நாமே அடைத்துக் கொண்டால், நாம் யார் என்பதே நமக்குத் தெரியாமல் போய்விடும். மாறாக நம்மை நாமே தோண்ட ஆரம்பித்தால் நமக்குள்ளிருந்து பெருங்கடல்களே புறப்படக் கூடும்.

தோல்வி பயப்பட வேண்டியதல்ல, இயல்பானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம். நேர் சிந்தனைகள் உங்களுக்குள் வலுவாக இருந்தாலே பயங்களெல்லாம் போய் விடும். பயங்கள் எதிர்மறை சிந்தனையின் பிள்ளைகள். உங்களுக்குள்ளே எப்போதுமே சில குரல்கள் எழுந்து கொண்டே இருக்கும். அந்தக் குரல்களில் எதிர்மறைக் குரல்களைக் கண்டு பிடித்து விலக்க வேண்டியது ரொம்ப அவசியம். 

விலக்குவது இரண்டு வகை. ஒன்று எதிர்மறை சிந்தனைகளை அலட்சியப்படுத்தி விட்டுச் விட்டுச் சென்று  விடுவது. இரண்டாவது, ஒவ்வோர் எதிர்மறை சிந்தனைக்கும் பொருத்தமான ஒரு நேர் சிந்தனையைக் கொடுப்பது. பாசிடிவ் திங்கிங் அதிகரிக்க அதிகரிக்க நெகடிவ் சிந்தனைகள் கழன்று போய்விடும். பின்பு எதிர்மறை சிந்தனைகளே இல்லாமல் நமது மனம் அக்மார்க் பாசிடிவ் மனமாகிவிடும். 

ஹாலிவுட் பட பிரியர்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர்களில் ஒன்று மைக்கேல் ஃபாக்ஸ். மூன்று முறை ஏமி விருது, ஒருமுறை கோல்டன் குளோப் விருது என நடிப்பில் முத்திரை பதித்தவர். அவர் பார்க்கின்சன்ஸ் எனப்படும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தனக்கு நோய் இருக்கும் விஷயத்தையே ஏழு ஆண்டுகாலம் முழுமையாக மறைத்து திரையில் கோலோச்சிக் கொண்டிருந்தார் என்பது வியப்பூட்டுகிறது. பார்கின்ஸ்சன்ஸ் என்பது உயிரையே கொல்லக்கூடிய ஒரு கொடிய வியாதி. நோயின் வீரியம் அதிகமாகி இனிமேல் நடிக்க முடியாது எனும் சூழல் வந்தபோதும் அவர் அசரவில்லை. மூன்று மிக முக்கியமான நூல்களை எழுதிப் பிரபலம் ஆனார். பாசிடிவ் மனதை பார்கின்சன்ஸ் கூட நெருங்கமுடியாது என நிரூபித்தார்.

பாசிடிவ் சிந்தனைகளுக்கு அடுத்தது பாசிடிவ் செயல்பாடு. வெறுமனே நம்மைப் பற்றி உயர்வான சிந்தனைகளை உருவாக்கினால் போதாது. நமது செயல்களிலும் அந்த தன்னம்பிக்கையும் நேர் சிந்தனையும் வெளிப்பட வேண்டும். ஒரு கை குலுக்கலில் கூட நமது தன்னம்பிக்கை வெளிப்பட வேண்டும் என்பதே இதன் பாலபாடம். இவையெல்லாம் நம்முடைய தோல்வி குறித்த பயத்தை விரட்டும் வல்லமை கொண்டவை.

தோல்விகளை விட ரொம்ப அதிகமாய் நம்மை வாட்டுவது தோல்வி குறித்த பயம் தான்.

இது நடந்தால், அது நடந்தால், இப்படி நடக்குமோ, அப்படி நடக்குமோ எனும் பயத்திலேயே நம்முடைய வாழ்வின் பெரும்பாலான செயல்கள் நொண்டியடிக்கின்றன. காரணம் சின்ன வயதிலிருந்தே நாம் கற்றுக் கொண்டிருக்கும் தவறான பாடம் தான். “வெற்றி என்பது நல்லது. தோல்வி என்பது மோசமானது”. அந்த சிந்தனையின் சிறையிலிருந்து வெளியேறுவது அவசியம். எல்லாமே இயல்பானது, சாதாரணமானது, சகஜமானது. 

உங்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்துப் பாருங்கள். உங்களுடைய கடந்தகாலத் தோல்விகள் பலவும் ஏதோ ஒரு வெற்றியில் தான் முடிந்திருக்கும். தோல்வியடைந்த காதல் ஒரு அன்பான மனைவியைத் தந்திருக்கலாம். தோல்வியடைந்த வேலை இன்னொரு நல்ல வேலையைத் தந்திருக்கலாம். தோல்வியடைந்த தேர்வு தேவையான முக்கியமான ஒரு  பட்டத்தைப் பெற உதவியிருக்கலாம். தோல்விகளோடு வாழ்க்கை முடிவடைவதில்லை, நாமாக முடித்துக் கொண்டாலொழிய. 

பிறரிடம் அன்பாய் இருப்பது, புன்னகைப்பது போன்ற மனித இயல்புகளை விட்டு விடாதீர்கள். உங்கள் மனதை அமைதியாகவும், இளமையாகவும் வைத்திருக்க இவை உதவும். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனம் இரண்டுமே இலட்சியப் பயணத்தின் இரண்டு சக்கரங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெற்றிகளின் கோப்பை நமது வாசலில் வந்து காத்திருப்பதில்லை. வெற்றிக் கோப்பைகளுக்கான ஓட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்வது மட்டுமே அதைப் பெறுவதற்கான ஒரே வழி. இலட்சியங்களை நோக்கிய ஓட்டத்தில் நமக்குத் தேவை முயற்சி மட்டுமல்ல, தோல்வி கண்டு அஞ்சாத மனமும் தான்.  

அமெரிக்க ஜனாதிபது ரூஸ்வெல்ட் பற்றித் தெரிந்திருக்கும். அமெரிக்காவின் முப்பத்து இரண்டாவது ஜனாதிபதி. பன்னிரண்டு ஆண்டு காலம் தொடர்ச்சியாக அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஒரே நபர் ரூஸ்வெல்ட் தான்.  அமெரிக்காவின் மவுண்ட் ரஷ்மூரில் ஒரு பெரிய மலை இவருடைய தலையாக செதுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் டைம் எனப்படும் பத்து பைசா நாணயத்தில் இருப்பதும் இவருடைய தலை தான். 

சரி, இதிலெல்லாம் வியப்பில்லை என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் போலியோவினால் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழே செயலிழந்த நிலையில் இருந்தார் என்பது தான் நம்மை வியப்பின் உச்சியில் கொண்டு போய் நிறுத்துகிறது.  மன உறுதியும், வாழ்க்கையை பாசிடிவ் ஆக அணுகும் மனநிலையும் இருந்தால் வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானதே என்கிறது இவருடைய வாழ்க்கை.

மனதில் பிறக்கட்டும் துணிச்சலின் ஊற்றுகள்

கண்களில் பறக்கட்டும் விடியலின் கீற்றுகள்.

தர்பார் : ஒரு விரிவான விமர்சனம்

தர்பார் எனும் இந்தி டப்பிங் திரைப்படத்தை முதல் நாளே சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதொன்றும் புதிதல்ல. ஏதோ விமர்சனம் எழுதுவதற்காக அலாரம் வைத்து எழுந்து போய் படம் பார்க்கும் இந்த டிஜிடல் தலைமுறை மனிதன் அல்ல நான். ரத்தமும் சதையும் போல‌ உள்ளுக்குள் ரஜினியிசமும் ஊறிப் போன அக்மார்க் ரஜினி ரசிகன். அவர் தொடங்கியும் தொடங்காமலும் இருக்கின்ற அரசியலோ, பேசியும் பேசாமலும் இருக்கின்ற சமூக சிந்தனைகளோ இந்த விமர்சனத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது முன் குறிப்பு.

மும்பையில் இருக்கின்ற அத்தனை தாதாக்களையும் உண்டு இல்லையென துவம்சம் செய்யும் ஒரு வெறிபிடித்த வேங்கையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதை விட ஒரு அட்டகாசமான கதாபாத்திரம் ரஜினிக்கு யாரால் கொடுக்க முடியும். “அவரு யாரையோ தேடறாரு.. யாருன்னு தான் தெரியல” என ஆங்காங்கே பில்டப்கள் ஏற்றப்படுகின்றன. என்கவுண்டர்கள் என்ட்லெஸ் ஆகப் போனபோது வழக்கம் போல ஒரு பாப் கட்டிங் மனித உரிமை அதிகாரி வருகிறார். அவரையும் உருட்டி மிரட்டி அறிக்கையில் கையெழுத்து வாங்க வைக்கிறார் ஆஅ, அதாவது ஆதித்ய அருணாச்சலம், ரஜினி.

அதன் பிறகு மும்பை, நாசிக், கோவா என பல இடங்களில் போதை கும்பலையும், குழந்தை கடத்தும் கும்பலையும் கழுவி சுத்தம் செய்கிறார். அந்த களையெடுக்கும் படலத்தில் ஒரு முக்கியமான நபர் கொல்லப்படுகிறார். அந்த நபருக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட ஒருவர் குடுமியோடு வந்து தலைவரை அழிக்கப் பார்த்து, வேறு வழியில்லாமல் அழிந்து போகிறார். இப்படி ஒரு மாஸ் மசாலா படத்தின் மானே தேனே பொன்மானே என காதல், அப்பா மகள் சென்டிமென்ட், நகைச்சுவை என மேலாக்கில் தூவியிருக்கிறார்கள். இருந்தாலும் கடைசியில், “சாருக்கு ஒரு ஊத்தாப்பம்” என்று தான் பார்வையாளர்கள் காதில் கேட்கிறது.

ரஜினியின் முகமும், பார்வையும், ஸ்டைலும், சண்டைக்காட்சிகளும் ரசிகர்களை மயிர்க்கூச்சரியச் செய்கின்றன. அதன்பின் அந்த மயிர் கூச்சரிய மறந்து தூங்கி விடுகிறது என்பது தான் சோகம். ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைன்ட் என்பது போல, ரஜினி இப்படி முழுக்க முழுக்க அட்டகாசமான பங்களிப்பு செய்தும் படத்தில் ஒரு திருப்தி வரவில்லை என்பது தான் உண்மை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதாவது வெந்து கொண்டிருக்கின்ற பானையிலிருந்து ஒரு அரிசியை எடுத்து சாப்பிட்டு பாத்து சோறு வெந்துதா, வேகலையா, வேகுமா என்பதையெல்லாம் கண்டுபிடிக்கும் பாட்டிகால வழிமுறை அது. இப்பல்லாம் குக்கர் விசிலடிக்காவிட்டால் நமக்கு சோறு வெந்துதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அது அப்படியே இருக்கட்டும். சினிமாக்களைப் பொறுத்தவரையில் ஹீரோ அறிமுகமாகும் காட்சியை வைத்து அந்த படம் எப்படிப் போகும் என்பதைக் கணிக்கலாம்.

இந்தப் படத்தில் ஊரிலுள்ள அத்தனை வில்லன்களும் ஆளுக்கு ஒரு துப்பாக்கியோடு ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். அங்கே ரஜினி வருவார் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. வருகிறார். வானத்திலிருந்து வருகிறார், ஸ்டைலாக, ஸ்லோவாக‌. நூற்றுக்கணக்கான தோட்டாக்கள் அவரை நோக்கிச் சீறிப் பாய்ந்தாலும் அவரது ஸ்லோமோஷனை விட வேகமாக அவற்றால் பயணிக்க முடியவில்லை. தோற்றுப் போய் வேறெங்கோ முட்டி மோதி கீழே விழுந்து கதறி அழுகின்றன. இருநூறு கைத்துப்பாக்கிக்கு எதிராக மெஷின் கண்ணை எடுத்தால் அது ஹீரோ, அதுவே வெறும் வாளை எடுத்தால் மாஸ் ஹீரோ. ரஜினி வாளை எடுக்கிறார், எல்லாருடையை வயிற்றையும் கிழிக்கிறார். ஸ்டைலாக செயரில் உட்கார்ந்து சிரிக்கிறார். வில்லன்களெல்லாம் ஓரமாய், ஏகமாய்ப் பயந்து போய் உட்கார்ந்திருக்கிறார்கள். ரசிகர்களும் தான்.

அப்படிப் பதம் பார்த்ததால் தான், படம் முழுவதும் நம்மைப் பதம் பார்க்கிறது திரைக்கதை. படத்தில் தொடக்கத்திலேயே மகளுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைச் சொன்னபிறகு, அந்த கதாபாத்திரத்தின் மீதான சஸ்பென்ஸ் உடைந்து விடுகிறது. அதனாலேயே ஜாலியான அப்பா மகள் காட்சியைக் கூட அனுதாபத்தோடு பார்க்கும் மனநிலை நமக்கு வந்து விடுகிறது.

அதேபோல, வில்லன் யார் என்பது பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகிறது, ஆனால் பாவம் ஆளானப்பட்ட ஆதித்ய அருணாச்சலத்துக்கு இந்த மேட்டரை யாரும் சொல்லவில்லை. அவர், ‘யாரோ ஒருத்தர்’ அவரு இப்படியா ? அப்படியா என்றெல்லாம் கேட்கும்போது தியேட்டரில் பலர் வெண்ணிற ஆடை மூர்த்தியாய் மாறி உதட்டை உருட்டியதைக் கேட்க முடிந்தது.

நான் மும்பைக்கு போகணும்ன்னா மூணு கண்டிஷன் என அமர்க்களமாய் ஆரம்பிக்கிறார் ரஜினி. ஒன்று, வேலையை முடிக்காம பாதில‌ வரமாட்டேன். ரெண்டு, யாராய் இருந்தாலும் விடமாட்டேன். மூணு, தாடியை எடுக்கமாட்டேன். அப்படியே நான்காவதாக, “பேன்டை இன் பண்ண மாட்டேன்” என்றும் சொல்லியிருக்கலாம் என தொடர்ந்து வருகின்ற காட்சிகள் நமக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஒரு ரஜினி ரசிகனாக ரஜினியை வைத்துப் படமெடுப்பதற்கும், ரஜினி ரசிகர்களுக்காகப் படமெடுப்பதற்கும் உள்ள வேறுபாட்டை பேட்டையும், தர்பாரும் நமக்குப் புரிய வைக்கின்றன.

ஒரு கட்டத்தில் இது சிங்கம் 4 படமா ? இதை இயக்கியது ஹரியா எனும் சந்தேகமே வந்து விடுகிறது. சந்தேகம் வந்த கொஞ்ச நேரத்திலேயே அந்தப் படத்தில் வருவது போல சில காட்சிகளும் வந்து வியக்க வைக்கிறது. சந்தோஷ் சிவன் போன்ற ஜாம்பவான்களுக்கு இந்தப் படத்தில் வேலை குறைவு. குறைந்தபட்சம் புதுமையாய் எதையும் சிந்தைக்க வேண்டிய வேலை சுத்தமாய் இல்லை.

பவர்புல் வில்லன் இல்லாத ரஜினி படம் என்றைக்குமே வியக்க வைக்காது. இந்தப் படத்திலும் வில்லன் பெரிய சைஸ் புஸ்வாணம். சுனில் ஷெட்டியைச் சுற்றி டான்கள் முதியோர்க் கல்வி ஸ்கூல் மாணவர்கள் போல அமர்ந்திருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் போல உணர்ச்சியற்ற முகபாவனையோடு மிரட்ட நினைக்கிறார் அவர். ஆனால் அவருக்குக் கொடுக்கப்படும் காட்சிகள் ஸ்பெஷல் வில்லனை சாதா வில்லனாக மாற்றித் துவைத்துக் காயப் போடுகிறது.

வலியண்ணன் தோட்டத்து வேலியை, பெருச்சாளிகள் ஓட்டை போடுவது போல தேச எல்லையை கட்டிங் பிளேயர் வைத்து கட்பண்ணி இந்தியாவுக்குள் வருகிறார் வில்லன். டிரோன்களை வைத்து அட்சர சுத்தமாய் மனிதனை ஸ்னேன் பண்ணி சுடுகின்ற இந்த ஹைடெக் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் காலத்தில், பட்டனை அமுக்கினா கத்தி விரியும் என ஒரு சிறுபிள்ளை விளையாட்டை நடத்துகிறார். அந்த கத்தியை ஒரு சோபாவில் குத்தி கிழித்து, செய்முறை விளக்கமும் சொல்கிறார். ஒரு பாழடைந்த பில்டிங்கில் போனதும், அட இங்கே செம பாதுகாப்பு என்கிறார். இவரையெல்லாம் எப்படி சர்வ தேசத்து போலீஸ்படையும் தேடித் தேடித் தோற்றுப் போச்சு என்பது ஹரிக்கே விளக்கம், சாரி முருகதாஸ் இல்ல ?

கடைசிக் காட்சியில் வில்லன் தப்பித்துப் போகிறான். ஐயோ, எங்கே போனான்னு தெரியலையே என ஹீரோ டென்ஷன் ஆகிறார். அப்போ வில்லனே கூப்பிட்டு, தான் எங்கே இருக்கிறோம் என்பதைச் சொல்கிறார். ஹீரோ ஒண்டிக்கட்டை என்பதால், செத்துப் போன போலீஸ்காரங்க குடும்பங்களை பணையக் கைதிகளாய்ப் பிடித்து வைத்திருக்கிறார். அப்புறம் என்ன, நூறு இள வில்லன்களை கத்தியை வைத்தே வேட்டையாடிய‌ ரஜினி, கிழ வில்லன் ஒருவரை ஒற்றைக்கு ஒற்றை வேட்டையாடுவது பெரிய விஷயமா என்ன ?

ரஜினி படங்களிலேயே பார்க்க முடியாத ஒரு அதிசயம், அவரது போலீஸ் படையில் கூடவே நடக்க ஒரு இளம் பெண் போலீசை சேர்த்திருப்பது. ஐபிஎல் ஆட்டத்துக்கு சீர் லீடர்ஸ் தேவைப்படுவது போல, ஆதித்ய அருணாச்சலத்தின் ஆட்டத்திற்கும் ஒரு சீர்லீடர் தேவைப்பட்டிருப்பது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும், எழுபது வயசுல தலைவர் இதெல்லாம் பண்றாருல்ல என்கிறார்கள். ஏதோ எழுபது வயசுல அவரு இதையெல்லாம் பண்ணணும்ன்னு நாம கம்பல் பண்ணின மாதிரி.

ரொம்ப சாரி, நயந்தாரா ந்னு ஒரு நடிகையும் இந்தப் படத்துல இருக்காங்க. மறந்துட்டேன். யோகிபாபு உண்மையிலேயே சில ஒன் லைனர்களில் வசீகரிக்கிறார். ‘நீயெல்லாம் பையனா ?’ , ‘உன்னை விட பெரியவன்னா போதி தர்மனை தான் புடிக்கணும்’ என்றெல்லாம் சகட்டு மேனிக்கு தலைவரை அவர் கலாய்ப்பது ரசிக்க வைக்கிறது. ஆனா, ‘உன் வயசுக்கு’ நயந்தாரா ஒரு கேடா என அவளோட அண்ணன் கேக்கும்போ பாவமா இருக்கிறது. எழுபது வயசுல இவ்ளோ கஷ்டப்படறாருல்ல, கன்சிடர் பண்ணினா என்னவாம் ?

படத்தில் ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ், உண்மையிலேயே கலங்க வைக்கிறார். அவரது கண்களும் நடிக்கின்றன. அவர் நடிக்கும்போது தலைவர் போட்டி போட்டு நடித்து கஷ்டப்பட வேண்டாமென அவரை படுக்க வைத்து விடுகிறார்கள். பாவம் எழுபது வயசாகுதுல்ல ?!

பல காட்சிகள் சட்டென ஆரம்பித்து சடக்கென முடிந்து விடுகின்றன. உதாரணமாக கைதிகளைக் கொண்டு வில்லனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் காட்சி. பேச ஆரம்பிச்சு ஒரு நிமிசத்துல நேரடியாக போலீஸ் பட்டாளம் வில்லனின் இடத்தை முற்றுகையிடுகின்றன. காணாமல் போன பெண்களைக் கண்டுபிடிக்க கிடைக்கின்ற க்ளூ எல்லாம் ராஜேஷ்குமாராக வேண்டுமென நினைத்து பள்ளிப் பிள்ளைகள் எழுதிப் பார்க்கும் துப்பறியும் கதை போல இருந்தது. அதிலும், மூக்கில வெள்ளையா இருந்துச்சு… ஓ.. அப்போ கோகைன்… என்று சொல்லும்போது, ஷப்ப்பா… என்றிருக்கிறது.

இரண்டு காட்சிகள் முருகதாஸ் டச்சுடன் இருந்தன. ஒன்று மந்திரியின் மகளைக் கண்டுபிடித்த பின்பும், அதைச் சொல்லாமல் அவளைத் தேடும் சாக்கில் அவர் நடத்துகின்ற வேட்டை. இன்னொன்று வில்லன், பொதுமக்களைக் கொண்டே போலீஸை வேட்டையாட வைக்கும் காட்சி. இரண்டுமே அட போட வைத்தன.

ரயில் நிலைய சண்டைக்காட்சி ‘சிறப்பு, வெகு சிறப்பு’ பாணியில் வியக்க வைத்தது. சில இடங்களில் ரஜினியே அடுத்த தலைமுறை நடிகர்களின் மேனரிசத்தைச் செய்தது வியக்க வைத்தது. ரசிக்கவும் வைத்தது.

அனிருத் மட்டும் இல்லாமல் போயிருந்தால் ரசிகர்களுக்கு உற்சாகமே இல்லாமல் போயிருக்கும். ஒண்ணுமே இல்லாத வாணலியில் கூட அம்மாக்கள் கிளறோ கிளறென்று கரண்டியால் கிளறுவது போல, ரசிகர்களை உருப்பேற்றி உசுப்பேற்றி விட்டதில் முக்கிய பங்கு அனிருத்தையே சாரும். அதிலும் அண்ணாமலை இசை, பில்லா கால சிக்னேச்சர் இசையையெல்லாம் நவீனப்படுத்தி அளித்திருப்பது புதுமை.

படம் முடிந்தபோது அருகில் இருந்த நண்பர் கேட்டார், உண்மையிலேயே இது முருகதாஸ் படம் தானா ? அவர் கேட்டு முடித்ததும் திரையில் கொட்டை எழுத்தில் எழுதிக்காட்டினார்கள். கதை, திரைக்கதை, இயக்கம் முருகதாஸ் என்று. நல்லவேளை, சந்தேகம் தீர்ந்தது.

அட்டகாசமான ரேஸ்காரை களமிறக்கியவர்கள், அதற்கான டிராக்கைப் போட மறந்தது ஏமாற்றமே.

தர்பார் என்றால் அரசவை என்று பொருள். இங்கே அரை சுவை என வைத்துக் கொள்ளலாம். தமிழாவது வாழட்டும்.

தன்னம்பிக்கை : நீ என்னவாக விரும்புகிறாய் ? 

நீ என்னவாக விரும்புகிறாய்” – இந்தக் கேள்வியை பல வேளைகளில் பலரும் நம்மிடம் கேட்டிருப்பார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோ ஒரு பதில் நம்மிடம் தயாராய் இருந்திருக்கும். “நான் டாக்டராவேன், நான் இன்சினியராவேன், நான் டீச்சராவேன்எனும் பதில்கள் பள்ளிக்கூடத்துக்கு.  அந்தப் பதில்கள் பெரும்பாலும் நமது பெற்றோரைப் பார்த்தோ, தெரிந்தவர்களைப் பார்த்தோ உருவாக்கிய பிம்பமாகவே இருக்கும். பலவேளைகளில்டீச்சர் கேட்டா, சயிண்டிஸ்ட் ஆவேன்னு பதில் சொல்லுப்பாஎன குழந்தைகளிடம் அவர்களுக்கான பதிலையும் நாமே உருவாக்கி அனுப்பி வைக்கிறோம்.

கல்லூரி காலத்தில் இலட்சியம் ஒருவேளை நல்ல ஒரு வேலை கிடைப்பதாய் இருக்கலாம். வேலைக்குச் சென்றபின்போ, நமது மேலதிகாரியின் இருக்கையை எட்டிப் பிடிப்பதே ஒரே  இலட்சியமாகிப் போகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட ஒரு கேள்வியை எதிர்கொள்ளவே முடியாமல் தடுமாறிப் போய் விடுகிறோம். 

உண்மையிலேயே நாம் என்னவாக விரும்புகிறோம் ? . எப்போதாவது ஆர அமர இதைப்பற்றி யோசித்திருப்பாமா ? “இல்லைஎன்பதே நமது உள்மனம் சொல்கின்ற பதிலாய் இருக்கும். இப்படி ஒரு சிந்தனையே தேவையில்லை எனும் சூழலே நமக்குச் சின்ன வயது முதல் அமைந்தும் விடுகிறது. 

ஞானத்தின் துவக்கம் தன்னை அறிதலில் இருந்து துவங்குகிறதுஎன்கிறார் அரிஸ்டாட்டில். “பிறரைப் பற்றி அறிவது அறிவு. தன்னைப் பற்றி அறிவதே ஞானம்என்கிறார் லியோ ட்ஸூ. தான் யார், தனது இயல்புகள் என்ன ? தனது ஆழ்மன ஆசைகள் என்ன ? தனது பாதை ஏது ? என்பதை உணர்கின்ற வினாடியில் தான் புதிய உலகமே நமது கண்களுக்கு முன்பாக விரியத் துவங்குகிறது. 

வில்மா ரொடோல்ஃப் அமெரிக்காவிலுள்ள டென்னிஸி மாகாணத்தில் பிறந்தார். பிறந்தபோது அவளுடைய எடை வெறும் இரண்டு கிலோ. குறைப்பிரசவம். சின்ன வயதிலேயே போலியோ வந்து பற்றிக்கொள்ள இடது கால் செயலிழந்து விட்டது. உலோகக் கவசம் போட்டால் மட்டுமே கால் நேராக நிற்கும் எனும் சூழல். அவளிடம் சின்ன வயதில்நீ என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டார்கள். “விளையாட்டு வீராங்கனையாக வேண்டும். ஓட்டப்பந்தயங்களில் வெற்றி பெறவேண்டும்என்றாள் அவள் கண்கள் மின்ன. 

நேராக நிற்கவே முடியாத கால்கள். மனதிலோ ஓட்டப்பந்தய வீராங்கனையாகவேண்டும் எனும் தழல். காலத்தின் கோலம் அவளை சின்னவயதில் ரொம்பவே சோதித்தது. கடுமையான காய்ச்சல், சின்னம்மை, பெரியம்மை, இருமல் என இல்லாத நோய்களெல்லாம் அவளை வந்து பிடித்தது. ஒருவழியாக பன்னிரண்டாவது வயதில், உலோகத்தின் துணையில்லாமல் நிற்கத் துவங்கினாள்.

அதன்பின் வாய்ப்புக் கிடைத்த அனைத்து ஓட்டப் பந்தயங்களிலும் ஓடினாள். தவறாமல் கடைசியில் வந்தாள். ஆனால் அவளுக்குள் இருந்த ஆவலும், வேட்கையும் கொஞ்சமும் அணையவேயில்லை. படிப்படியாய் தனது இலட்சியத்தின் பாதையில் ஒட்டிக்கொண்டே இருந்த அவர் 1956ம் ஆண்டு தொடர் ஓட்டத்தில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார் !

1960ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களையும் நிலை குலைய வைத்தது. நூறு மீட்டர் இருநூறு மீட்டர், நானூறு மீட்டர் என மூன்று ஓட்டங்களிலுமே தங்கப்பதக்கங்கள் வென்று உலகையே பிரமிக்க வைத்தார். எல்லாமே சாதனை வெற்றிகள். உலகின் மிக வேகமான வீராங்கனை என அவளை உலகம் கொண்டாடியது. நேராக நிற்கவே தடுமாறிய வில்மா, வரலாற்றின் பக்கங்களில் புயலாக புகுந்து கொண்டார்.

என்னவாகவேண்டும் எனும் தெளிவு உள்ளுக்குள் குடிகொள்ளும்போது எல்லாமே தொட்டுவிடும் தூரத்தில் வந்து சேர்ந்து விடுகிறது. எல்லாவற்றையும் அடையும் அளவிட  முடியாத வலிமையை மனம் தந்து விடுகிறது.  

என்னவாக விரும்புகிறோம் என்பதில் தெளிவாக இருப்பவர்கள் பாதியிலேயே பாதை மாறிப் போவதில்லை என்பதற்கு உதாரணங்களாக கோலிவுட் கவுண்டமணி முதல் விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் வரை வரிசையில் நிற்கிறார்கள். எது தனது உண்மையான வலிமை, எதை நோக்கி நான் செல்ல வேண்டும் எனும் தெளிவைப் பெற்றவர்களே வெற்றியாளர்களாய் பரிமளித்திருக்கிறார்கள் என்பதை வரலாறு கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறது !

மாமரத்துக்கு என்னதான் உரம் போட்டாலும், மினரல் வாட்டரையே ஊற்றினாலும் அதில் ஆப்பிள் காய்க்கப் போவதில்லை. ஆப்பிள் தான் வேண்டுமென அதில் பழங்களை ஒட்டி வைத்தாலும் அது பயன் தரப் போவதில்லை. மாறாக, மாமரத்தின் இயல்பை அறிந்து அதற்கேற்ற பராமரிப்பை நல்கினால் மிகச்சிறந்த மாமரமாய் அது மாறும். அப்படியே மனிதனின் இயல்புகளும்.  

அதன் முதல் படியாக இருப்பது உணர்தல் !  தன்னுடைய உண்மையான விருப்பம் எது ?. தனது இயல்பான வலிமை எது என கண்டறிவதே முதல் தேவை. இரண்டாவது அந்த விருப்பத்தை நோக்கிய பாதையில் பயணிப்பது. விருப்பமான பாதையில் பயணிப்பதைப் போன்ற ஆனந்தமான அனுபவம் வேறு இருக்க முடியாது. இலட்சியங்கள் காதலைப் போல !. காதலிக்காகவோ, காதலனுக்காகவோ கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் சுவாரஸ்யமாய்க் காத்திருக்கும் அற்புதத் தருணம் போன்றது அது. பலருக்கும் அத்தகைய வாழ்க்கை அமைவதில்லை என்பது தான் துயரம்.

உங்கள் அருகில் இருக்கும் நபரிடம் கேட்டுப் பாருங்கள், “இது தான் நீங்கள் விரும்பிய வாழ்க்கையா ?” என்று ! பெரும்பாலானவர்களின் பதில் உங்களை வியக்க வைக்கும். எழுத்தாளராக விரும்பி கிளார்க்காக வேலை செய்பவர்கள், பாடலாரிசியராக விரும்பி ஹோட்டலில் வேலை செய்பவர்கள், டீச்சராக விரும்பி .டியில் வேலை செய்பவர்கள் என பல முகங்களை நீங்கள் தரிசிக்கலாம். கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தங்கள் இலட்சியங்களையும், இயல்புகளையும் பரணில் தூக்கிப் போட்டவர்கள் இவர்கள்.

இன்னும் சிலர் இலட்சியத்தின் பாதையில் ஒட்டத்தை ஆரம்பிப்பார்கள். கால் இடறியவுடனே பாதை மாற்றி விடுவார்கள். அல்லது போதுமடா சாமி என ஒதுங்கிவிடுவார்கள். அப்படி ஒதுங்காதவர்களைக் கூட சுற்றியிருப்பவர்கள் உசுப்பேற்றுவார்கள். “இதெல்லாம் உனக்கு விதிச்சதில்லைப்பா… ”, “இதெல்லாம் உனக்குச் சரிப்படாதுஎனும் விமர்சனங்கள் அவர்களைத்  தடம் மாற்றி ஏதோ மூலையில் மிச்ச வாழ்க்கையைக் கழிக்க வைக்கும்.  

நீங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ உங்களுக்குத் தடையாக இருக்கும் சிக்கல்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். பின்னுக்கு இழுக்கும் நண்பர்களாய் இருக்கலாம், படிப்பாய் இருக்கலாம். தங்குமிடமாய் இருக்கலாம். வேலையாய் இருக்கலாம். அந்த சிக்கல்களை அடையாளம் கண்டு கொண்டால் அதிலிருந்து மீள்வதும் எளிதாகிவிடும்.

எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்பாஎன்று பலரும் தங்கள் இலட்சியங்களின் மேல் காலத்தின் கூடாரமடித்துப் படுத்துறங்குவதுண்டு. உண்மையில் அப்படி ஒரு நேரம் வருவதேயில்லை. நாம் தான் பயணத்தைத் தொடரவேண்டுமேயன்றி, கூரையைப் பிய்த்துக் கொண்டு தெய்வம் கொட்டுவதெல்லாம் கதைகளில் மட்டுமே சாத்தியம். 

இலட்சியங்கள் சமரசமற்ற ஆழ்மன விருப்பத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும். நண்பன் சொன்னான், மாமா சொன்னார், மச்சான் சொன்னான் என்றெல்லாம் உங்கள் இலட்சியங்களை உருவாக்காதீர்கள். அது போல இலட்சியம் மிகவும் தெளிவான ஒரு புள்ளையை அடைவதாக இருந்தால் நல்லது. உதாரணமாக, சினிமா துறையில் வெற்றி பெறவேண்டும் என்று சொல்வதை விட, சினிமா துறையில் இயக்குனராக வேண்டும் எனும் சிந்தனை கூர்மையானது. இத்தகைய தெளிவான பார்வை அதை நோக்கியப் பயணத்தை நெறிப்படுத்துகிறது. சஞ்சலங்களை விட்டு விலகி நடக்கும் பலம் தருகிறது.  

புல்லாங்குழல் இசைக்க விருப்பம் இருப்பவர், காலம் முழுதும் வீணை கற்றுக் கொண்டிருந்தால் அவருடைய ஆசை எப்போதுமே நிறைவேறப் போவதில்லை. புல்லாங்குழலுக்கான இசைப்பயிற்சியில் நுழைவதே ஒரே வழி. இலட்சியங்களைக் குறித்த தெளிவான பாதை இத்தகைய தயாரிப்புகளை எளிதாக்கித் தரும். 

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இலட்சியம் எதுவாகவும் இருக்கலாம். இலட்சியங்கள் ஒரு பதவியையோ, இருக்கையையோ சென்றடைய வேண்டிய கட்டாயமில்லை. அன்பான, கருணையான, நேர் சிந்தனையுடைய, கோபப்படாத மனிதனாக மாறவேண்டும் எனும் இயல்புகளின் இலட்சியம் கூட ஆராதிக்கப்பட வேண்டியதே.

நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அந்த நிலையை அடைந்துவிட்டதாகவே மனதில் உங்களைக் கருதிக் கொள்ளுங்கள். அவர்களைப் போலவே உங்களுடைய சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ளுங்கள். அப்போது விரைவாகவே அந்த இடத்தை அடைந்து விடுவீர்கள் என்கிறார் ஜான் கால்ஹன் எனும் வல்லுனர்.

வெற்றியாளர்கள் கருப்பாகவோ, வெள்ளையாகவோ, ஒல்லியாகவோ, குண்டாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லாரிடமும் பொதுவாக ஒரே ஒரு விஷயம் இருக்கும். அது  தன்னைக் குறித்த தெளிவான புரிதலும், இலக்கைக் குறித்த விலகாத  பார்வையும், அதை நோக்கிய தளராத பயணமும் தான்.

இலக்கு எதுவெனும் அறிதல் கொள்

வெல்லும் மனதிடம் அதையே சொல்.

தன்னம்பிக்கை : வேலையே வாழ்க்கையல்ல

என் வீட்டுக்காரர் எப்பவுமே ஆபீஸ் ஆபீஸ்னு அதையே கட்டிகிட்டு அழறாருஎனும் புலம்பலைக் கேட்டதில்லையெனில் நீங்கள் நிஜமாகவே புண்ணியம் செய்தவர்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி போல இந்த புலம்பல்கள் எல்லா இடங்களிலும் காற்றைப் போல சர்வ சுதந்திரமாக அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. 

ஆபீஸ் எனக்கு முதல் வீடு, வீடு எனக்கு இரண்டாவது ஆபீஸ்எனும் கரகரப்பான குரல் மறு முனையிலிருந்து எழுகிறது. வீட்டில் தூங்குவதைத் தவிர வேறெதையும் பெருசாய் செய்துவிடாத மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கை என்பது அலுவலகத்தில் வேலை செய்வது, அதை அப்படியே வீட்டிலும் தொடர்வது !  

இப்படி ஒரு வாழ்க்கை தேவையா ? என இவர்களிடம் கேட்டுப் பாருங்கள். “வாழ்க்கைல முன்னேறணும்ன்னா இப்படியெல்லாம் செய்தே ஆகணும்என்பார்கள். சரி, வாழ்க்கை என்றால் என்ன என்று இன்னொரு கேள்வியையும் கேட்டுப் பாருங்கள் ? முழிப்பார்கள். நமது வாழ்க்கை தனது அர்த்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறதோ எனும் கவலை எழுகிறது. ரிட்டையர்ட் ஆகும் வரை ஓயாமல் வேலை செய்து விட்டு, கடைசியில் திரும்பிப் பார்க்கும் போது நாம் அனுபவிக்காமல் தவற விட்ட தருணங்கள் நம்மைப் பார்த்து நகைக்கும்.

வேலை முக்கியமானது, வாழ்க்கைக்குத் தேவையானது. ஆனால் அதுவே வாழ்க்கையல்ல எனும் தெளிவு நமக்கு ரொம்பவே அவசியம். வேலையின் வேலிகளைக் கடந்த ஒரு வாழ்க்கை வசந்தங்களோடும், மழலைப் புன்னகையோடும் நம்மைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே இருக்கிறது. வாழ்வின் உன்னத நிமிடங்கள் இங்கே தான் உலவிக் கொண்டிருக்கின்றன.

வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில்வர்க்லைஃப் பேலன்ஸ்என்கிறார்கள். இந்த சமநிலை தடுமாறும் போது தான் வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் சிதைந்து போகின்றன. அல்லது வேலையின் முன்னேற்றம் முடங்கிப் போகிறது.

வேலை, ஆரோக்கியம், குடும்பம், நட்பு, உயிர் என ஐந்து பந்துகளை மேலே எறிந்து விளையாடும் விளையாட்டு தான் வாழ்க்கை. இதில் வேலை மட்டும் ரப்பர் பந்து, தரையில் விழுந்தாலும் துள்ளி வரும். மற்ற எல்லாமே கண்ணாடிப் பந்துகள். விழுந்தால் கீறல் விழலாம், உராய்வுகள் ஏற்படலாம் ஏன் உடைந்தே கூட போய்விடலாம். எப்போதுமே பழைய வசீகரத்துக்கு அவை திரும்ப முடியாது. எனவே வாழ்க்கைக்கும் வேலைக்குமிடையே சீரான ஒரு சமநிலை இருக்க வேண்டியது அவசியம்  என்கிறார் பிரைன் டைசன்.

வேலையையே கட்டிக் கொண்டு அழுபவர்கள் உடலைக் கவனிக்க மாட்டார்கள். மருத்துவரைப் பார்க்க வேண்டும், ஒரு செக்கப் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் போக மாட்டார்கள். காரணம் கேட்டால், “ரொம்ப வேலை, டைமே கிடைக்கலைஎன்பார்கள். வேலைக்காக தங்களுடைய ஆரோக்கியத்தையே அடகு வைக்கும் இத்தகைய மனிதர்கள் ஒரு காலகட்டத்தில் நோயின் வீரியத்தால் வீழ்த்தப்பட்டு மருத்துவமனைக் கட்டிலில் அசையாமல் படுத்திருப்பார்கள். 

மறு புறம் மனநலமும் அவர்களைப் புரட்டிப் போடும். எரிச்சலும், கோபமும் அவர்களுடைய இரு அகக் கண்களாக மாறும். வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது உடல் சோர்வில் சுற்றப்பட்ட கசங்கிய தலையணையாய் தெரியும். குடும்பத்தினர் சொல்வதை கவனிக்கவோ, அவர்களோடு உற்சாகமாய் நேரம் செலவிடவோ மனமிருக்காது. உளைச்சல், அழுத்தம் என இவர்களுடைய மனம் யானை புகுந்த வயல் போல சின்னாபின்னமாகிக் கிடக்கும்.

வேலையை இழந்து விடுவோமோ எனும் பயம் தான் பெரும்பாலான மக்கள் அதிக நேரம் வேலை செய்வதன் காரணம்என்கிறார் உளவியலார் ராபர்ட் புரூக்ஸ். ஒருவேளை உங்களுடைய வேலை உங்களுக்குத் தேவையான ஓய்வு நேரத்தைத் தராவிட்டால் சம்பளம் குறைந்ததானாலும் அடுத்த  வேலையை நோக்கிப் போவதே நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள். ! 

புளூஸ்டெப்ஸ் டாட் காம் எனும் இணைய தளம் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது. ஊழியர்களின் வேலைவாழ்க்கை சமநிலைக்காக நிறுவனங்கள் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடுவதில்லை என குற்றப்பத்திரிகை வாசித்தவர்கள் 82% பேர். இன்னொரு சர்வே 70% ஊழியர்களிடையே வேலை அழுத்தம் குறித்த கவலையும், தேவையான நேரத்தைக் குடும்பத்துடன் செலவிட முடியவில்லையே எனும் ஆதங்கமும் இருப்பதாய்ச் சொன்னது. 

மாறிவரும் வாழ்க்கைச் சூழல், உலகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவையே இதன் காரணம் என பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்தனர்.  இந்த வேலைவாழ்க்கைச் சமநிலைப் பிரச்சினை ஒரு சர்வதேசப் பிரச்சினையாக வேர் விட்டிருப்பதையே இத்தகைய ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.

வர்க்லைஃப் பேலன்ஸ் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் அதை எப்படி உருவாக்குவது என்பதில் தடுமாற்றங்கள் இருக்கும். இதற்கு மலையைப் புரட்டி வெளியே எறிய வேண்டிய தேவையெல்லாம் இல்லை. சின்னச் சின்ன சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டாலே போதுமானது. உதாரணமாக, வாரம் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாகவே வீட்டுக்குக் கிளம்பி வருவது கூட குடும்ப உறவின் இடைவெளியை சீரமைக்க உதவும். 

வேலையை வேலைசெய்யும் இடத்திலேயே விட்டு விட்டு வாருங்கள். அலுவல் நேரம் முடிந்த பின்னும் அதை முதுகிலும், மூளையிலும் தூக்கிச் சுமப்பது தவறு. ஒருவேளை வீட்டிலிருந்து செய்யும் வேலையெனில் இவ்வளவு மணி நேரம் தான் வேலை என தெளிவாய் வரையறுத்து அந்தக் கோட்டில் நில்லுங்கள்.

அடுத்த வாரத்துக்கான திட்டமிடுதல் பயனளிக்கும். ஆனால், அதில் தங்கள் ஆனந்தங்களுக்கான நேரம் இடம் பெற வேண்டியது அவசியம். நண்பரைப் பார்ப்பது, பூங்கா போவது, வீட்டிலேயே இருப்பது என எதுவானாலும் சரி, போடும் திட்டத்தில் நிலைத்திருங்கள். “இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதேஎன ஏதாவது வேலையை தலையில் இழுத்துப் போடாதீர்கள்.

எவ்வளவு மணி நேரம் வேலை செய்தோம் என்பதை விட, இந்த மணி நேரத்தில் எவ்வளவு வேலை செய்தோம்என்பதே திறமையை வெளிப்படுத்தும். சிலர் காலை முதல் மாலை வரை வேலை செய்வார்கள். இவர்களுடைய பெரும்பாலான நேரம் கிசு கிசுக்களிலோ, இணையத்தில் ஆர்குட், ஃபேஸ் புக் போன்ற இடங்களிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ செலவிடப்படும். இந்த அனாவசிய நேரத்தையெல்லாம் விலக்கினால் அந்த நேரத்தை வேலை தாண்டிய வாழ்க்கைக்காகச் செலவிடலாமே !

வேலை வேலை என்று அலைபவர்கள் கட் பண்ணும் ஒரு விஷயம் உடற்பயிற்சி. உண்மையில் அவர்கள் நிறுத்தக் கூடாத ஒரு வேலை அது தான். உடற்பயிற்சி செய்பவர்களால் முழு நாளிலும் உற்சாகத்தைக் கட்டிக் காக்க முடியும். அதே போல நிம்மதியாய்த் தூங்கவும் பழகுங்கள். தூக்கத்தை விட்டு வேலை செய்யத் துவங்கினால் சீட்டுக் கட்டு போல வாழ்க்கை சரிந்து விடும்.

வாழ்க்கைக்கும், வேலைக்கும் இடையே அழுத்தமான கோடு கிழியுங்கள். 

வாழ்க்கைக்கும், வேலைக்கும் இடையே அழுத்தமான கோடு கிழியுங்கள். வேலை நேரத்தில் ஆத்மார்த்தமாய் வேலை செய்வதும், மற்ற நேரத்தை மன மகிழ்ச்சியாய்ச் செலவிடுவதும் அவசியம். அவ்வப்போது லீவு போட்டு குடும்பத்தோடு ஹாயாக எங்கேயாவது போவது, நண்பர்களுடன் கொட்டமடிப்பது என திட்டமிடுங்கள். “லீவ் எடுக்காவிட்டால் பணம் கிடைக்கும்என லீவை எல்லாம் பணமாய் மாற்ற முயலாதீர்கள். பெயர், பணம், புகழ், பதவி எல்லாமே தற்காலிகமானவை. ஆழமான அன்பு, உற்சாகமான நட்பு, குடும்ப உறவு போன்றவையே வாழ்க்கையை அழகாக்குபவை. 

உங்க அலுவலகத்திலேயே சிலர் வேலைவாழ்க்கை சமநிலையை வெகு ஜோராகக் கடைபிடிப்பார்கள். அவர்களோடு சகவாசம் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் மனநிலை உங்களை எப்போதுமே சட்டென எட்டிப் பிடித்து விடும். அமெரிக்கா போன்ற நாடுகளில் வெள்ளிக்கிழமை மாலையில் அலுவலகத்தை விட்டு வெளியேறினால், மீண்டும் திங்கட்கிழமை காலையில் அலுவலகம் நுழையும் வரை வேலையே பார்க்க மாட்டார்கள். முழுக்க முழுக்க குடும்பத்தோடு செலவிடுவார்கள். அப்படி ஒரு பாலிஸியை நீங்களும் கைக்கொள்ளுங்கள். வார இறுதிகள் அடுத்த வாரத்துக்கான உற்சாக டானிக்கை உற்பத்தி செய்து தரும்.

வேலை செய்வது வாழ்க்கையை நிம்மதியாக வாழத்தான் தான். வேலையே அதற்கு வேட்டு வைத்து விடக் கூடாது. குடும்ப ஆனந்தங்களை மீண்டெடுக்கவும், சுவாரஸ்யமாய்க் கொண்டாடவும் மனதில் அது குறித்த சிந்தனைகளைப் பசுமையாய் வைத்திருங்கள். எதிர்பாராத நேரத்தில் உங்கள் கணவருக்கோ, மனைவிக்கோ கொடுக்கும் ஒரு சின்ன அன்புப் பரிசு கூட குடும்ப வாழ்வின் பிணைப்பை அதீத வலுவாக்கித் தரும் ! 

அன்பாக வாழ்ந்திடப் பழகு

அன்பின்றி அமையாது உலகு

தன்னம்பிக்கை : மாத்தி யோசி, வெற்றியை ருசி…

ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள் இருப்பதே கூட நமக்குத் தெரிவதில்லை.  வாழ்க்கையின் பெரும்பாலான விஷயங்களில் இது நடந்து விடுகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் விடையாக நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு தீர்வையே தேர்ந்தெடுக்கிறோம். ஒரு கட்டத்தில் அதுவே பழகிப் போக, “இந்தப் பிரச்சினைக்கு இது மட்டும் தான் தீர்வுஎன முடிவு கட்டி விடுகிறோம்.  

துப்பறியும் நாவல்களைப் படிக்கும்போது நமக்கு ஆங்காங்கே மெல்லிய ஆச்சரியம் எழுவதற்கான காரணமும் அது தான். “அடடாஇது நமக்கு தோணாம போச்சே !”  என்று கதாநாயகர்களைப் பாராட்டுகிறோம். தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளானாலும் சரி, அலுவலகப் பிரச்சினைகளானாலும் சரி, வித்தியாசமாய் யோசித்து புதிது புதிதாய்த் தீர்வுகளைக் கண்டுபிடிப்பவர்களை வெற்றி தேடி வந்து அரவணைத்துக் கொள்ளும். 

வித்தியாசமாய் யோசிப்பவர்கள் தனித்துத் தெரிகிறார்கள். சாமந்திப் பூக்களின் தோட்டத்தில் ஒரு பூ மட்டும் நீல நிறமாய்த் தெரிந்தால் சட்டென கண்களை ஈர்த்து விடுவதைப் போல.  

விண்வெளியில் காற்று இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். விண்வெளி வீரர்கள் சாதாரண பேனா கொண்டு போனால் பயன் இருக்காதாம். எனவே வெற்றிடத்தில் எழுதுவதற்குரிய ஸ்பெஷல் பேனாவைக் கண்டு பிடிக்க அமெரிக்கர்கள் பிரம்மப் பிரயர்த்தனம் செய்தார்கள். கடைசியில் பல கோடி ரூபாய்கள் செலவு செய்து வெற்றிகரமாக ஒரு பேனாவைக் கண்டு பிடித்தார்கள். ரஷ்யர்களுக்கும் இதே சிக்கல் வந்ததாம். அப்போது ரஷ்ய விண்வெளி ஊழியர் ஒருவர் சொன்னார்,”எதுக்குப் பேனா ? ஒரு பென்சில் கொண்டு போய் எழுதுவோமே” ! அவர்களுக்கு இரண்டு ரூபாயில் பிரச்சினை தீர்ந்தது !

விண்வெளியில் வைத்து எழுதவேண்டும்என்பது தான் கொடுக்கப்படும் பிரச்சினை. அதற்குத் தீர்வு பல மில்லியன் டாலர் பேனாவாகவோ, இரண்டு ரூபாய் பென்சில் ஆகவோ இருக்கலாம். ஆனால் எது லாபகரமானது ? எந்தச் சிந்தனை வலுவானது ? எந்தச் சிந்தனை எளிதானது ? எது  வழக்கத்துக்கு மாறாகச் சிந்திக்கிறது ? இவை தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். 

ஒரு பெரிய சோப் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஒரு புகார் வந்தது. ஒருவர் வாங்கிய சோப்களில் ஒரு கவருக்குள் சோப் இல்லை. வெறும் கவர் மட்டுமே இருந்தது !  நிறுவனத்துக்கு இதே போல அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் புகார்கள் எழ, நிர்வாகம் இதற்கு ஒரு பரிகாரம் கண்டுப் பிடிக்க முயன்றது. கம்பெனியிலுள்ள பெரிய வல்லுனர்கள் எல்லாம் ஒரு அறையில் கூடி விவாதித்தார்கள். ஏகப்பட்ட ஐடியாக்கள் வந்தன.

சோப்கள் வரிசை வரிசையாக ஒரு பெல்ட் வழியாக ஊர்ந்து போய்க் கடைசியில் ஒரு இடத்தில் வந்து சேரும். அந்த இடத்துக்கு வந்து சேருவதற்கு முன் அந்தக் கவர்களிலெல்லாம் சோப் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். சோப் இல்லையேல் அதை எடுத்துத் தனியே வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

சரி. கவருக்குள் சோப் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது ? ஆளாளுக்கு ஒரு ஐடியா சொன்னார்கள். ஒருவர் சொன்னார். “ஒரு எக்ஸ்ரேக் கருவியைப் பொருத்தலாம். அந்தக் கருவி ஒவ்வொரு சோப்பாக ஸ்கேன் செய்து உள்ளே சோப் இருக்கிறதா இல்லையா என்பதைக் காட்டி விடும். அப்புறம் ஒரு ரோபோ கையை வைத்து அந்த டப்பாவை எடுத்துத் தனியே வைக்கலாம் ! 

இன்னொருவர் சொன்னார். சோப் ஊர்ந்து போகும் இடத்தில் ஒரு சின்ன எடை மிஷின் ஒன்றை வைக்க வேண்டும். சோப் இல்லையென்றால் எடை குறைவாய் இருக்கும். அதை அப்புறப்படுத்தி விடலாம்

இப்படி ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். நீங்களாய் இருந்தால் இந்தச் சூழலில் என்ன பதில் சொல்வீர்கள் ? இதில் எது சிறந்த வழி ? அல்லது இதை விடச் சிறந்த எளிய வழி உண்டா ? இவை தான் இங்கே கேள்விகள்.

கூட்டத்திலிருந்த ஒருவர் ஒரு அட்டகாசமான ஐடியா சொன்னார். “சோப்கள் ஊர்ந்து வரும் இடத்தில் ஒரு பெரிய ஃபேனை வேகமாகச் சுழல விடுங்கள். சோப் இல்லாத கவர்களெல்லாம் தானே பறந்து போய்விடும். பறக்காத கவர்களிலெல்லாம் சோப் இருக்கிறது என்று அர்த்தம் ! ” இது தான் அவருடைய ஐடியா ! மிக எளிமையான, செலவில்லாத இந்த ஐடியா கரகோஷத்துடன் அங்கீகரிக்கப் பட்டது.

இதை ஆங்கிலத்தில்அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங்என்பார்கள். அதாவது வழக்கமாக மக்கள் யோசிப்பது போல யோசிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாய் யோசிப்பது. லேட்டரல் திங்கிங் என்றொரு சமாச்சாரமும் உண்டு. அதுவும் ஏறக்குறைய இதே அடிப்படையிலானது தான். ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக வழக்கமாக உள்ள வழிகளையோ, சட்டெனப் புலப்படும் வழிகளையோ விட்டு விட்டு வேறு புதுமையான வழிகளை யோசிப்பது தான் இரண்டுக்குமான அடிப்படை. ஒரு சின்ன வித்தியாசமான ஐடியா போதும் ஒரு நிறுவனம் உச்சிக்குப் போக ! ஐபேட், ஐபோன் போன்றவற்றின் வருகைக்குப் பின் ஆப்பிள் நிறுவனம் அடைந்திருக்கும் பிரமிப்பூட்டும் வளர்ச்சி நாம் அறிந்ததே.

ஐடியாக்களைக் கண்டுபிடிக்க செலவு ஏதும் இல்லை. மூளையைக் கசக்க வேண்டும் அவ்வளவு தான். பெரிய பெரிய கண்டுபிடிப்புகளெல்லாமே சின்னச் சின்ன ஐடியாவின் நீட்சிகள் தான். ஒரு காலத்தில் தீக்குச்சியும், அதை உரசி நெருப்பு பற்ற வைக்கும் மருந்தும் தனித்தனியே இருந்தன. பெட்டிக்குள் குச்சியைப் போட்டு, அதன் பக்கவாட்டில் மருந்து தடவி உரச வைக்கலாம் என்பது ஒரு சின்ன ஐடியா தான். ஆனால் எவ்வளவு அட்டகாசமான ஐடியா இல்லையா ?

எட்வர்ட் டி பானோ என்பவர் லேட்டரல் திங்கிங் விஷயத்தில் புலி. இவர் எழுதிய 40 நூல்கள் இருபத்து ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இவருடைய பார்வையில், அறிவும் சிந்தனையும் வேறு வேறு. வித்தியாசமானச் சிந்தனையை யார் வேண்டுமானாலும் பயிற்சியின் மூலமாக உருவாக்கலாம். ஏன் ? எப்படி ? எனும் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் போதுமாம்.

இன்னொரு விதமாகச் சொன்னால், லேட்டரல் திங்கிங் என்பது ஒரு விஷயத்தை பலருடைய பார்வையில் பல கோணங்களில் யோசிப்பது. உதாரணமாக வீடு கட்டுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். படுக்கையறை நல்ல வெளிச்சமாய் இருக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம். 

எலக்ட்ரீஷியன்நிறைய லைட் போடலாம்என்பார். கார்ப்பெண்டரோ, “ ரூம் சன்னலைப் பெரிசு பெருசாக வைக்கலாம் ?” என்பார். “பளிச் நிறத்தில் பெயிண்ட் அடித்தால் வீடு வெளிச்சமாய்த் தெரியும்.” என்பது பெயிண்டரின் பார்வையாய் இருக்கும். டிசைனரோஇரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டலாம், நிறைய கண்ணாடி பொருத்தலாம்என்பார். வாஸ்துக்காரர் ஒருவேளைபெட்ரூமை கிழக்குப் பக்கம் பார்க்கிறமாதிரி வையுங்கஎன்பார்.  இப்படி எழும் பலருடைய கோணத்தை நீங்கள் ஒருவரே யோசித்துச் சொன்னால் உங்கள் சிந்தனை வளர்ச்சியடைகிறது என்று பொருள்.  

வாழ்க்கை எந்த அளவுக்கு போட்டிகளும், சவால்களும் நிறைந்ததோ அந்த அளவுக்கு வாய்ப்புகளும், வரவேற்புகளும் நிரம்பியது. உங்களுடைய சிந்தனை கூர்தீட்டப்பட்டதாக இருந்தால் பாதைகளில் சிவப்புக் கம்பளம் நிச்சயம் உண்டு. வந்தோமா, போனோமா என்றிருக்காமல் தினசரி செய்யும் வேலைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் ? என்ன புதுமைகள் புகுத்தலாம் என யோசித்துக் கொண்டே இருங்கள். ஆச்சரியமூட்டும் உயரிய இருக்கைகள் உங்களுக்கு இடமளிக்கும்.

ஒரு கோடீஸ்வரர் இருந்தார். அவருக்குப் பயங்கரமான கண் வலி. அவருடைய வலியைப் போக்க வழி தெரியாமல் எல்லா மருத்துவர்களும் கையைப் பிசைந்தார்கள். கடைசியில் ஒரு துறவியைக் கூட்டி வந்தார்கள். அவர்உங்கக் கண்ணுக்கு நிற அலர்ஜி வந்திருக்கிறது. இன்னும் ஒரு மாசத்துக்குப் பச்சை நிறங்களை மட்டும் பாருங்க. மற்ற நிறங்களைப் பார்க்காதீங்கஎன்றார் இவர் கோடீஸ்வரரல்லவா ? வீடு, படுக்கை துணிகள் எல்லாமே பச்சை கலராய் மாற்றப்பட்டன. பச்சை உடை, பச்சை முகமூடி இல்லாமல் யாரும் அவரை நெருங்க முடியவில்லை.  

ஒரு மாதம் கழிந்து துறவி வந்தார். அவர் மீதே பச்சை பெயிண்டைக் கொட்டினார்கள். துறவி அதிர்ச்சியடைந்தார். கோடீஸ்வரரோ, “மன்னியுங்கள் உங்க உடை காவி நிறம். அதனால் தான் பச்சை பெயிண்ட் கொட்டச் சொன்னேன்.” என்று சமாதானப்படுத்தினார் . துறவி வாய்விட்டுச் சிரித்தார். “இவ்வளவு களேபரத்துக்குப் பதிலா நீங்க மட்டும் ஒரு பச்சைக் கலர்க் கண்ணாடி வாங்கி கண்ணுல மாட்டியிருந்தா போதுமே ! ” என்றார் !

இது தான் எளிய, அதே நேரம் வலிமையான சிந்தனை. எந்த ஒரு செயலைச் செய்யவும் பல வழிகள் இருக்கும். நமக்கு ரொம்பவேப் பரிச்சயமான வழியில் நடப்பதைத்தான் நாம் விரும்புவோம். ஆனால் அந்த வழியை விட்டு விட்டு இன்னொரு வழியில் நடக்கும் போது தான் புதுமைகளைக் கண்டடைய முடியும்.

கூரான சிந்தனைகள் கருவாகட்டும்

எதிர்காலம் வளமாக உருவாகட்டும்.

தன்னம்பிக்கை : அழுத்தமற்ற மனமே அழகானது. 

மன அழுத்தம். இன்று எல்லா இடங்களிலும் பரவலாகப் பேசப்படக்கூடிய விஷயம் இதுவாகத் தான் இருக்கும். பேசறவங்க பேசிட்டுப் போகட்டும் என விட்டு விடவும் முடியாது. காரணம் இன்று உலகிலுள்ள நோய்களில் 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நோய்களுக்கான காரணம் இந்த மன அழுத்தம் தான் என்று சொல்லி அசரடிக்கிறது அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று. 

மன அழுத்தத்துக்கான காரணங்கள் இவ்ளோ தான் என பட்டியலிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, வேலை, குடும்பம் இப்படி மன அழுத்தத்துக்கான காரணிகள் நீண்டு கொண்டே போகும். ரொம்ப சத்தம், அதிக வெளிச்சம் இதெல்லாம் கூட சிலருடைய மன அழுத்தத்தை சகட்டு மேனிக்கு அதிகரித்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மன அழுத்தம்னா என்ன ? எனும் கேள்விக்கும் மிகச் சரியான பதிலைச் சொல்லிவிட முடியாது. நம்மை வெளியிலிருந்தோ, உள்ளிருந்தோ தாக்குகின்ற பிரச்சினைகளுக்கு நமது உடலும் மனமும் தருகின்ற பதில் தான் இந்த மன அழுத்தம் என்பது மருத்துவ விளக்கம். டென்ஷன், எரிச்சல், கோபம், கவனமின்மை, சோர்வு, குழப்பம், வேகமான இதயத் துடிப்பு என இந்த மன அழுத்தத்தின் பிள்ளைகள் எக்கச்சக்கம்.

இந்த மன அழுத்தங்களை மொத்தமாகக் கொட்டி நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். முதலில் வருவது யூஸ்ட்ரெஸ்.சட்டென உங்களுக்கு ஒரு லாட்டரி அடித்ததென்று வைத்துக் கொள்ளுங்கள் ? உங்களுக்கு எப்படியிருக்கும் ? அந்த வகை மன அழுத்தம் இந்த வகையில் வருகிறது. படிப்பில் சாதனை செய்வது, தம்பதியர் பெற்றோராவது, கார் வீடு போன்றவை வாங்குவது, விடுமுறைக்கு பிடித்தமான இடத்துக்குச் செல்வது, அல்லது ஒரு திக் திக் திகில் படம் பார்ப்பது. இப்படிப்பட்ட விஷயங்களுக்காய் வருகின்ற அழுத்தம் இந்த வகை. இந்த மன அழுத்தம் கொஞ்சம் சமர்த்து !

இரண்டாவது வகை மன அழுத்தம் டிஸ்ட்ரெஸ் எனப்படுகிறது. திடீரென நேர்கின்ற ஒரு மரணம். பணச் சிக்கல்கள், வேலைப் பழு, உறவுகளுக்கிடையே வருகின்ற சிக்கல், உடல்நலமின்மை போன்றவற்றினால் வருவது தான் இந்த வகை மன அழுத்தம். ரொம்பவே சிக்கலை உண்டாக்கும் இந்த வகை மன அழுத்தத்தை அதன் கால அளவை வைத்து அக்யூட் அல்லது குரோனிக் என இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். அக்யூட் என்றால் கொஞ்ச நேரம் இருக்கும் மன அழுத்தம். குரோனிக் என்பது நீண்ட கால மன அழுத்தம்

ஹைப்பர்ஸ்ட்ரெஸ் என்பது மூன்றாவது வகை. ஒரு மனிதனை அவனுடைய இயலாமையின் எல்லை வரை தள்ளிக் கொண்டே போனால் நிகழ்வது தான் இந்த மன அழுத்தம். வீட்ல பிள்ளைகளைக் கவனித்துவிட்டு, அலுவலகம் ஓடி வேலை செய்து, மீண்டும் வீட்டுக்கு வந்து குடும்பத்தைக் கவனிக்கும் குடும்பத் தலைவிகளுக்கு சர்வ சாதாரணமாய் வருகின்ற மன அழுத்தம் இது. வருகின்ற பணத்தை வைத்துக் கொண்டு வாடகை கொடுக்கவா, குழந்தைகளைப் படிக்க வைக்கவா, சாப்பிடவா என திணறித் திரியும் வறுமைக் கோட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் மக்களில் பலர் இந்த மன அழுத்தத்தில் வாழ்பவர்கள் தான்.

இன்னொரு  வகை மன அழுத்தம் ஹைப்போஸ்ட்ரெஸ் எனப்படும். இது கொஞ்சம் வித்தியாசமான மன அழுத்தம். “என்னய்யா ஒரேமாதிரி வேலையைச் செய்து செய்து போரடிக்குதுஎன்பவர்களின் மன அழுத்தம் இந்த வகையானது. இவர்களிடம் உற்சாகமோ, சாதிக்கும் வேகமோ, சுறுசுறுப்போ இருக்காது.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஃபேமிலி பிஸிசியன்ஸ்அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் 89 சதவீதம் மக்கள் தங்களுடைய வாழ்வில் கடுமையான மன அழுத்தத்தைச் சந்தித்திருந்தார்கள் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியானது. நடுவயது நபர்கள் இத்தகைய கடுமையான மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களுக்கு உணர்வு ரீதியான நட்பு ரொம்ப அவசியமாம். இல்லையேல் அவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் மரணமடையும் வாய்ப்பு அதிகம் என அதிர வைக்கிறது இந்த ஆய்வு. 

மன அழுத்தம் பல்வேறு நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. தலை வலி முதல், நெஞ்சு வலி வரை ஏகப்பட்ட நோய்களுக்கும் மன அழுத்தம் காரணமாகி விடுகிறது. தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் வந்தால் அது குழந்தைகளையும் நேரடியாய்ப் பாதிக்கும் என குண்டைத் தூக்கிப் போடுகிறார் அமெரிக்காவின் மருத்துவர் மாயோகிளினிக்ஸ். 

நகைச்சுவை உணர்வு இருப்பவர்களுக்கு மன அழுத்தம் எளிதில் வராது. சிலர் எல்லா விஷயங்களையுமே இலகுவாக எடுத்துக் கொள்வார்கள். தேடித் தேடி சிரிப்பவர்கள் அவர்கள். இவர்களுக்கு மன அழுத்தமே இருக்காது என்கிறார் மனோதத்துவ நிபுணர் லீ பெக். 

மன அழுத்தம் குறித்து ஆராய்ச்சிகள் செய்த சார்லஸ் ஸ்விண்டால் என்ன சொல்கிறார் தெரியுமா ? “ மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து சதவீதமும், அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பது 90 சதவீதமும் நிர்ணயிக்கின்றனஎன்கிறார். அதாவது மன அழுத்தம் வேண்டுமா ? வேண்டாமா என முடிவெடுக்க வேண்டியது நாம் தான் என்பது அவருடைய தீர்மானமான முடிவு.

உதாரணமாக, குடும்பத்தில் பிரச்சினை வந்தால்எல்லாமே உன்னால தான்என தப்பைத் தூக்கி அடுத்தவர் தலையில் போடாமல், “நமக்கு ஒரு பிரச்சினை வந்திருக்கு, அதை எப்படித் தீர்ப்பது என்று பார்ப்போம்என அமைதியாய் அணுக வேண்டும். பிரச்சினைகளைத் தோண்டாமல், தீர்வுகளைத் தேடுவது மன அழுத்தமற்ற சூழலுக்கு உத்தரவாதம் என்கிறார் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே.

இந்த மன அழுத்தம் சர்வதேச அளவில் எல்லோரையும் பின்னிப் பிணைந்திருப்பதால் தான் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் எனப்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் பயிற்சிகளுக்கும் பஞ்சமில்லை. மென்பொருள் நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ ஊழியர்களை சுற்றுலா, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சிரிப்பு நிகழ்ச்சிகள் என ஏதாவது செய்து உற்சாகமூட்டுகின்றன. 

உலக பிரபலங்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள், கடுமையான மன அழுத்தத்தில் உழன்று அதிலிருந்து வெளிவந்தவர்கள் எக்கச் சக்கம். வின்ஸ்டன் சர்ச்சில், பிரபல நாவலாசிரியர்கள் அகதா கிறிஸ்டி, ஜே.கே ரௌலிங், இளவரசி டயானா, பிரிட்னி ஸ்பியர்ஸ், பெயிண்டிங் பிதா மகன் வான்கோ, ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர், மைக்கேல் ஏஞ்சலோ, ஐசக் நியூட்டன், லியோ டால்ஸ்டாய் என இந்தப் பட்டியல் ரொம்பவே பெருசு. மன அழுத்தத்தைத் தாண்டி வரலாறு படைக்க முடியும் என்பதன் சான்றாக இவர்களெல்லாம் நமக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார்கள்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட பத்து கட்டளைகள் இவை.

  1. கடைசி நிமிட பரபரப்பை நிறுத்துங்கள். எங்காவது செல்ல வேண்டுமெனில் ஒரு அரை மணி நேரம் முன்னதாகவே கிளம்புவது. காலையில் ஒரு பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுவது. பயணத்துக்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக் கொள்வது போன்றவற்றை வழக்கமாக்குங்கள். 
  2. ஒரு நேரம் ஒரு வேலையை மட்டும் செய்யுங்கள். எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்து கொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை! போதுமான  ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும். 
  3. உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள். இரைச்சல், வெளிச்சம், தாமதம், சில வகை வாசனைகள், சில நபர்கள் இத்யாதி..இத்யாதி என இந்தப் பட்டியல் எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.
  4. உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உடல் மன அழுத்தத்தின் எதிரி. உடலில் இரத்த ஓட்டமும், ஆக்ஸிஜன் ஓட்டமும் சீராக இருக்கும் போது உடலில் மன அழுத்தம் வரும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங் போன்றவையும் உங்கள் தினசரி வேலையில் இடம் பெறட்டும்.
  5. தீய பழக்கங்களைக் கைகழுவி விடுங்கள். புகை மது, போதை போன்றவை மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள். 
  6. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. 
  7. ஒரு நல்ல பொழுதுபோக்கைக் கைவசம் வைத்திருங்கள். உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும் ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் விளையாடுவது. செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.
  8. பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள். நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கத்தை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.  
  9. சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட கொண்டாடுங்கள். சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத் தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள்.
  10. 10.பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்.

அழுத்தமற்ற மனதுஇனி

வெற்றிகளே உனது

தன்னம்பிக்கை : மறுத்தல் உயர்வு தரும்.

தமிழில் நாம் சொல்வதற்குத் தயங்கும் ரொம்பக் கஷ்டமான வார்த்தை என்ன தெரியுமா ? “முடியாதுஎன்பது தான். இந்தியக் கலாச்சாரத்தில்மறுத்துப் பேசுவதுஎன்பது கொஞ்சம் அநாகரீகமானது. “பெரியவங்க சொன்னா மறுத்துப் பேசாதேஎனும் பாட்டி அட்வைஸ்  முதல், “ஐயாவோட பேச்சுக்கு மறுப்பு ஏதுங்கஎனும் கக்கத்தில் துண்டை சொருகும் உழைப்பாளியின் பதில் வரை, மறுத்துப் பேசக் கூடாது என்பதையே போதிக்கிறது.

முடியாதுஎன்று சொல்ல விடாமல் நம்மை பின்னுக்கு இழுக்கும் காரணிகள் பல உண்டு. அந்த நபருடனான நட்பு முறிந்து விடுமோ ? நம்மை நம்பி வந்துக் கேட்கிறார் முடியாது என்பது நல்லாவா இருக்கும் ? முடியாதுன்னு சொல்லிட்டா ரொம்ப வருத்தப்படுவாரே ? ஒருவேளை கோபப்படுவாரோ ? இப்படிப்பட்ட காரணங்கள் தான்சரிஎனும் தலையாட்டல்களுக்குக் காரணமாகிவிடுகிறது. மறுத்துப் பேசாமல் இருப்பது நம்முடைய முதுகின் மேல் சோதனைகள் விக்கிரமாதித்ய வேதாளமாய் வந்தமரக் காரணமாகி விடுகிறது என்பதை நாம் உணர்வதில்லை. 

சரிஎன சொல்வது மிகவும் எளிது. “இதை வாங்கித் தருவீங்களா டாடி ?” என்று மகள் கொஞ்சுவாள். “இந்த வேலையைச் செய்ய முடியுமா ?” எனும் மேலதிகாரி  விண்ணப்பம் வைப்பார். “இதைப் பண்ணுடா பிளீஸ்எனும் நண்பன் கேட்பான். “சரிஎனும் ஒரு வார்த்தைப் பதில் ரொம்பவே எளிது. ஆனால் அந்த ஒரு பதிலுடன் வேலை முடிந்து போவதில்லை. அதன் விளைவால் நடக்கும் நிகழ்ச்சிகள் நமக்குப் பிடிக்காததாகவோ, நம்மால் செய்ய முடியாததாகவோ இருந்து விடுகிறது.

நமக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைச் செய்ய நாம் ஒத்துக் கொள்ளும் போது, நமக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்யும் வாய்ப்பு தடை பட்டுப் போகிறது. உதாரணமாக, அலுவலகத்தில் அதிகமான வேலை தரப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். “சாரிஇன்னிக்கு முடியாதுஎன்று சொல்வது உங்களுடைய தன்னம்பிக்கையின் அடையாளம். அதை விட்டு விட்டு, “சரி குடுங்கஎன இழுத்துப் போட்டுக் கொண்டால் உங்களுடைய மாலை நேர திட்டங்களெல்லாம் காலி. 

குழந்தை ஏதோ ஒரு பொருளை விரும்பிக் கேட்கிறது. அது தேவையற்றது என நீங்கள் நினைக்கும்போதுமுடியாதுஎன்று சொல்வதே நல்லது. எல்லாவற்றுக்கும் சரி எனும் பதிலைச் சொல்வது குழந்தைகளின் பதின் வயது காலத்தில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்கின்றனர் உளவியலார்கள். முடியாது என சொல்லி மறுத்து, தோல்வியின் முகத்தையும் குழந்தைகளுக்குக் காட்ட வேண்டியது அவசியம். அது தான் பிற்காலத்தில் தோல்விகள் சகஜம் என்பதைக் குழந்தைகளுக்குப் போதிக்கும். அது தெரியாத இளசுகள் தான் தோல்வி எனும் வார்த்தையைக் கேட்டதும் தற்கொலைக்குத் தயாராகி விடுகிறார்கள். 

நெருங்கிய நண்பர்களுக்கிடையேமறுப்புஇல்லாதபோது பல கெட்ட பழக்கங்கள் வந்து தொற்றிக் கொள்கின்றன. “ஒரு தம் போடுவோம் மச்சிஎனும் போதுவேண்டாம், சாரி.. “ என ஒரு சின்ன மறுப்பைச் சொன்னாலே தப்பித்து விடலாம். “முடியாதுஎன்று சொல்வது நம்மை நாமே மதிப்பதற்குச் சமம் என்கின்றனர் உளவியலார். என்னோட நேரத்தை நான் மதிக்கிறேன் என்பதன் அடையாளம் தான் தேவையற்றவைகளுக்குநோசொல்வது ! அடுத்தவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினால் நீங்கள் அடுத்தவர்களை மதிக்கிறீர்கள், உங்களை மதிக்கவில்லை என்பது தான் ஒருவரிச் செய்தி!ச்ச்ச்

முக்கியமான வேலையில் இருக்கும்போது சிலர் போன் பண்ணி சாவாகாசமாய்ப் பேசத் துவங்குவார்கள். “ஏலே ராசா என்னலே செய்றேஎன ஆரம்பிப்பவர்களிடம் ஒரு நிமிடம் பேசிவிட்டுசாரி.. அப்புறம் பேசலாமா ? கொஞ்சம் பிஸிஎன்று சொல்லக் கூட தயங்குகிறோமா இல்லையா ? 

தன்னுடைய இலட்சியம் என்ன என்பதில் தெளிவாக இருப்பர்களால் எளிதில் மறுப்பைச் சொல்ல முடிகிறது. அரைவேக்காடு மனநிலை உடையவர்கள் பெரும்பாலும் மறுத்துச் சொல்லத் தயங்குகிறார்கள். காரணம், அது சரியா தவறா என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை ! 

எல்லாவற்றையும் தலையாட்டிக் கொண்டே ஏற்றுக் கொள்பவர்களுக்கு ஆயுள் ரொம்பக் கம்மி. காரணம் அவர்களிடம் எப்போதுமே மன அழுத்தம் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும். மறுக்காததற்காக தன்மீதான கோபமும், தன்னை இந்த சூழலில் மாட்டி விட்டதற்காக மற்றவர்களிடம் கோபமும் எப்போதும் இவர்களிடம் இருக்கும். கோபம் கொந்தளிக்கும் மனம் நோய்களின் கூடாரம் தானே ! 

முடியாதுஎன்று சொல்வது தவறில்லை எனும் மனநிலை முதல் தேவை. சொல்வதற்கெல்லாம் சரி என தலையாட்டிக் கொண்டிருக்க யாராலும் முடியாது. அமெரிக்கர்கள்நோசொல்வதற்குத் தயங்குவதில்லை என்கிறது ஒரு புள்ளி விவரம். முடியாத விஷயத்தைமுடியாதுஎன்று சொல்லி விட்டுச் சென்று விடுவார்கள். அதே போல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும்நோசொல்லத் தயங்குவதில்லை. அதனால் தான் அவர்களுக்கு எப்போதுமே குடும்பத்தைக் கவனிக்க கொஞ்சம் நேரம் கிடைக்கிறது !

சரிஎன ஒத்துக் கொண்டால் அதன் தொடர்ச்சியான விளைவுகள் என்னென்ன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். “என்ன, ஒரு அரை மணி நேர வேலை தானே !” என்று பல வேளைகளில் நினைப்போம். அந்த அரை மணி நேரம் அதன் பின் வரக்கூடிய எல்லா வேலைகளையும் பின்னுக்குத் தள்ளும். இதே போல நான்கைந்து அரை மணி நேர வேலை வந்தால் நிலமை என்னவாகும் ? பிஸி..பிஸி.. என ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். “சாரி.. முடியாதுஎன்று ஒரு மறுப்பை சரியான நேரத்தில் சொன்னால் மற்ற அனைத்துமே அதனதன் இடத்தில் கட்சிதமாய் வந்து அமரும் ! ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நேற்றைக்குத் தொலைத்த பணத்தை இன்று மீட்கலாம். ஆனால் நேச்ச்ற்று தொலைத்த நேரத்தை என்றுமே மீட்க முடியாது !

சரி என்று சொல்வதற்கு ஒரு வார்த்தை போதும். சாரி.. என்று சொல்வதற்கு ஒரு சின்ன விளக்கமும் தேவைப்படும். மன்னியுங்கள், ஒரு முக்கியமான வேலையில இருக்கேன் . சாரி, இது எனக்குப் புடிக்காத விஷயம். சாரி, இப்போதைக்கு புதுசா எதையும் ஒத்துக் கொள்ற மாதிரி இல்லை. எனக்கு டைமே இல்லை. இப்போதைக்கு என்னோட கவனத்தை இதுல செலுத்தற மனநிலைல நான் இல்லை. சாரி, இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. சாரி, எனக்கு கொஞ்சம் குடும்பம் சார்ந்த வேலைகள் இருக்கு. சாரி, எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும். இப்படி ஏதாவது ஒரு சின்ன காரணம் சொல்லிவிட்டாலே போதுமானது !

மறுக்கும் போது உங்களுக்கு மாற்று வழி ஏதேனும் தோன்றினால் அதைச் சொல்லலாம். உதாரணமாகநாளைக்குக் காலையில முடியாது, நாளை மறுநாள்னா ஓகே”. அல்லதுஎன்னை விட மாலதி இந்த வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும் என நினைக்கிறேன்என்பது போல ஏதோ ஒன்று.  மாற்று வழி சொல்லவேண்டும் என்பது கட்டாயமில்லை.  மனதில் தோன்றினால் மட்டும் சொல்லுங்கள். ! தேவையில்லாத விஷயங்களைச் சொல்லி அது பூமராங் மாதிரி உங்களைத் திரும்பித் தாக்காமல் இருக்க வேண்டும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அகஸ்டின் ஓக் மண்டினோ புகழ்பெற்ற ஒரு எழுத்தாளர். அவருடைய பல புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைத்தவை. அவருடைய கிரேட்டஸ்ட் சேல்ஸ்மேன் இன் வேல்ட் புத்தகம் ஐந்து கோடிக்கு மேல் விற்றுப் பட்டையைக் கிளப்பியது. அவர் எழுத்தாளராவதற்கு முன் வாழ்வில் பல்வேறு சோதனைகளில் சிக்கினார். மிகப்பெரிய குடிகாரராய் மாறினார். கடைசியில் மனதை ஒருமுகப்படுத்தி, குடிக்குநோசொல்லி எழுத்துக்கு வரவேற்புக் கம்பளம் விரித்தார். அது தான் இன்று அவரை உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளர்களின் வரிசையில் அமர வைத்திருக்கிறது. எனவேநோசொல்வது மற்றவர்களோடு மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். உங்கள் மனம் உங்களை தவறு செய்யத் தூண்டும் போதெல்லாம் கூட எழும்பட்டும் குரல்நோ

சில மின்னஞ்சல்களுக்கு உடனடியாக மறுப்பு எழுதவேண்டுமென்பதில்லை. சைலண்டாக இருந்து விடலாம். மௌனம் என்பது மறுப்பு என்பது தான் மின்னஞ்சல் மொழி. பதிலைத் தாமதப்படுத்துவது, பதிலளிக்காமல் இருப்பது, உடனடியாக நோ சொல்வது எது அந்தச் சூழலுக்குத் தேவை என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்

உங்களுடைய வேலைகளையெல்லாம் தரம்பிரியுங்கள். எது அதி முக்கியம் என்பது முதல், எது அவசியமற்றது என்பது வரை தரம் பிரியுங்கள். அதனடிப்படையில் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். எதை மறுக்கவேண்டும் என்பது உங்களுக்கு அப்போது புரியும். மறுத்துப் பேசுவது உங்களுக்கு நல்ல பெயரைத் தான் சம்பாதித்துத் தரும் என்பது தான் உண்மை.  அவரு முடியும்ன்னா முடியும்னு சொல்லுவாரு, சொன்னா முடிச்சிடுவாருஎனும் டயலாக்கை நீங்கள் ஆங்காங்கே கேட்டிருக்க வாய்ப்பு உண்டு ! எல்லாவற்றுக்கும் தலையாட்டுபவர்கள் பெரும்பாலும் இளிச்சவாயன் பட்டத்துக்குள் தாமாகவே போய் சேர்ந்து விடுகிறார்கள்.

உலகின் பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வாரன் பஃபெட் சொல்லும் சேதி சுவாரஸ்யமானது. சாதாரண வெற்றியாளர்களுக்கும், சாதனை வெற்றியாளர்களுக்குமிடையே உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா ? சாதனை வெற்றியாளர்கள் ஏறக்குறைய எல்லாவற்றுக்கும் நோ சொல்வார்கள்என்கிறார் இவர். முக்கியமானவை தவிர எல்லாவற்றையும் மறுத்துவிட வேண்டும் என்பதே இவரது வெற்றி பார்முலா.  

மறுப்புச் சொல்லிட மறக்கவும் வேண்டாம்

வாழ்வின் இனிமையை துறக்கவும் வேண்டாம்

 

By சேவியர் Posted in Uncategorized