மனித வடிவில் மனிதம்

ஆகஸ்ட் 26,1910

வரலாறு
தன் மேல் கொட்டப்பட்ட
தூசுகளைத் தட்டி விட்டு
இந்த நாளை
ஓர்
மயிலிறகால் எழுதியது.

இது தான்
அன்னை தெரசா என்று
அகில உலகமும்
அன்போடு அழைக்கும்
ஆக்னஸ்
அவனியில் அவதரித்த நாள்.

தீக்குழியில் தாமரைகள்
பூப்பதில்லை,
அவை
தடாகத்தின் ஆழத்தில் தான்
பாதங்களைப் பதிக்கும்.

விதைகள் பதர்களானால்
விளைச்சல் இருப்பதில்லை.
ஆக்னஸ்
நல்ல
நிலத்தில் விதைக்கப்பட்டவள்.

அவள் தந்தை
நிக்கோலா,
தாய் டிரானஃபைல்,
இருவரும்
வாழ்வின் அடித்தளத்தை
மண்ணில் கட்டாமல்
மனித நேயத்தில் கட்டியிருந்தார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபை
அவர்களின்
பணி வாழ்வை நன்றாக
பக்குவப் படுத்தியிருந்தது.

பிறந்த
மறு நாளே ஆக்னசுக்கு
திருமுழுக்கு தரப்பட்டது.
கிறிஸ்தவ மதத்துக்குள் நுழையும்
ஆன்மீக அனுமதி அது.

லாசர்
அகதா,
இருவரும் ஆக்னஸின்
உடன்பிறந்தோர்.

ஆக்னஸின்
தந்தையோ, தாயோ,
ஏழைகள் தங்கள்
வாசல் தீண்டி வரும் வரை
காத்திருப்பதில்லை,
அவர்களின்
வீடு தேடிச் சென்று
வழங்குவதையே
வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

ஆக்னஸ்
அன்னையிடம்
தாய்ப்பாசத்தோடு
தரணிப் பாசமும் கற்றாள்,

தந்தையிடமிருந்து
பொருள்களை விட
அதிகமாய்
மதிப்பீடுகள் பெற்றாள்.

இறை நம்பிக்கையில்
இணைந்து,
நம்பிக்கை எல்லாம்
இறையில் வைத்தாள்.

குடும்பம்,
அவளுக்கு முதல் ஆலயம்.
ஆலயம்
அவளுக்கு முதல் குடும்பம்
என்றானது.

தினசரி காலை
ஆலய வழிபாடு,
அவளுக்கு
அத்தியாவசியத் தேவையானது.

குடும்பம்
அதற்குக் கூட்டு நின்றது.

தத்தித் தத்தி
நடக்கத் துவங்கியபோதே,
பகிர்தலில் பரிமளித்தாள்,
சுய நலம் எனும்
புலி நகம்
தன்னைத் தீண்ட
அவள் சம்மதம் தரவில்லை.

குடும்பம்
ஆக்னஸின் மனநிலங்களில்
வைக்கோல் வளர்க்காமல்
கதிரை மட்டுமே
கொத்துக் கொத்தாய் வளர்த்தது.

ஆக்னஸ்,
பால் பற்கள் விழும் முன்
இறைவன் பால் விழுந்தாள்.

ஆக்னஸிற்கு
ஐந்து வயது தாண்டிய பின்
ஒரு பொழுதில்
நற்கருணை வடிவில்
இயேசுவை ஏற்றுக் கொண்டாள்.

அது
அவள் மனதுக்குள்
அணை கட்டி வைத்திருந்த
ஆன்மீக ஆறுகளை எல்லாம்
ஆக்ரோஷமாய்ப்  பாய வைத்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s