முன்னுரை

வாழ்க்கை ஒவ்வொரு மனிதனையும் தனக்குள்ளேயும் வெளியேயும் இரண்டு பாகமாகப் பிரிக்கிறது. ஒன்று வயிற்றுக்கான வாழ்வு, மற்றது மனசுக்கான வாழ்வு. மனம் சார்ந்த வாழ்வு மனிதனின் சிந்தனைகளை,கற்பனைகளை, எதிர்பார்ப்புகளை எல்லாம் வானளாவ விரிக்கிறது.
சமூகத்தின் அந்தஸ்து, தனிப்பட்ட ரசனைகளின் நீள அகலம் இவையெல்லாம் மனம் சார்ந்த வாழ்வின் எதிர்பார்ப்புகளாக விரிகின்றன.

வயிறு சார்ந்த வாழ்வுக்கு இலட்சியங்கள், எதிர்பார்ப்புகள், தேவைகள் எல்லாம் ஒன்றே. உணவு. உயிரை உள்ளுக்குள் பிடித்து வைப்பதற்காகவும், பாதத்தை அடுத்த அடிக்கு எடுத்து வைப்பதற்காகவும் உடல் தேடும் இலட்சியபீடம் உணவு.

இதுவே அடிப்படை. பட்டினியின் தொட்டிலில் கிடந்துகொண்டே யாரும் ரசனைச் சமையல்களைப் பரிமாறுதல் சாத்தியமில்லை. அடுத்தசுவாசத்துக்கான காற்றை எந்தக் கீழ்திசைத் தென்றல் கொண்டு வரும் என்று அறியாத நுரையீரல்கள், மூச்சு முட்டிக் கொண்டே எத்தனை நேரம் தான் சிற்பம் கொத்த முடியும் ?

சமுதாயத்தில் பாதிபேர் வளர்ச்சிகளுக்காக ஓடிக்கொண்டிருக்க, மீதி பேர் சாலையோரங்களிலும், சாக்கடை ஓரங்களிலும் கிழிந்து போனவற்றை மட்டுமே சொந்தமாய்க் கொண்டு வயிற்றுக்கான கவலையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கவனித்துச் செல்ல ஆட்கள்இல்லை. அனாதைகள், முதியோர்கள், நோயாளிகள் எல்லாம் மனுக்குலத்தின் அழுக்குகளாக, சமுதாயத்தின் தேவையற்ற முதுகுச் சுமைகளாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழலில் தான் அன்னை தெரசா வருகிறார்.

ஒவ்வொரு ஜீவனிலும் இறைவனைக் காணுங்கள். ஒவ்வொரு நோயாளியின் புண் துடைப்பதில் ஆன்மீகத்தைப் பண்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு அனாதையை அரவணைப்பதிலும் ஆண்டவனை அறிந்து கொள்ளுங்கள். கைவிடப்பட்ட முதியோரை ஆதரிப்பதில் ஆண்டவனை அணிந்து கொள்ளுங்கள். ஆன்மீகம் என்பது வாசித்துச் சொல்வதல்ல, வாழ்ந்து சொல்வது. என அன்னை சொன்ன ஆன்மீகக் சிந்தனைகளுக்குள் மனிதநேயமே இறை தரிசனம்என்னும் தத்துவம் வெளிப்படையாய் இருந்தது. வரலாற்றுப் புள்ளிவிவரங்கள் மேலும் பல சிந்தனைவாதிகளை நமக்குக்காட்டக் கூடும், சொல்லிவிட்டுக் கடந்து போகாமல் வாழ்ந்து காட்டியவர் பட்டியலில் இருக்கிறார் அன்னை.

யாரும் நெருங்க மறுக்கும் மனிதர்களை அரவணைக்கிறார். வீதியோர வறியவனையும், வானளாவ புகழில் இருக்கும் செல்வந்தனையும் ஒரே போல பாவிக்கிறார். அதற்கு அன்னை சொல்லும் விளக்கம், “அனைவரிலும் இருப்பவன் ஒருவன்.  இறைவன்”.

ஏழைகளைப் புறக்கணிக்க மனிதன் கண்ட வழி ‘ஆண்டவன் சாபம்’ எனும் வார்த்தை. ஏழை ஏழையாய் இருப்பது அவனுடைய சாபம் என்றும், பணக்காரன் பணக்காரனாய் இருப்பது அவனுக்கு  ஆண்டவன் தந்த அதிகப்படியான வரம் என்றும் தப்பித்தல் உளறல்களால் மனிதனை மனிதன் மறுதலித்துக் கொண்டிருந்தபோது தான் அன்னை தொழுநோயாளியையும் தொடுங்கள் என்று அதிர்ச்சிப் பணியை ஆரம்பிக்கிறார்.

காசை விட அதிகம் தேவையானது கருணையே, பணத்தை விடப் புன்னகையை அதிகமாய் செலவிடுங்கள் என்கிறாள் அன்னை. கடந்துசெல்லும்போது ஒரு வறியவனையோ, முதியவனையோ பார்த்தால் ஒரு புன்னகை கொடுத்து விட்டுப் போவதில் என்ன குறைவு வந்து விடப் போகிறது என்று அன்னை கேட்பதில் அர்த்தம் இருக்கிறது அல்லவா ?.

அன்னை தெரசாவின் பணி மதம் சார்ந்த பணியாக இருக்கவில்லை. ஒரு இந்து நல்ல இந்துவாக வேண்டும், ஒரு மு?லிம் நல்ல முஸ்லிமாக வேண்டும், ஒரு கிறிஸ்தவன் நல்ல கிறிஸ்தவனாக வேண்டும் இதுவே நான்  விரும்புவது, என அன்னை சொல்வதில் ஓர் அழுத்தமான உண்மை இருக்கிறது. நல்ல மதவாதி ஆண்டவன் பணிகளைச் செய்வான், ஆண்டவன் பணி என்பது அன்பு என்ற ஒன்றே.

தேசம் கடந்து வாசம் வீசிய அந்த மனித மலர் நம்மைப் பார்த்து சொல்வதெல்லாம் ஒன்று தான். கவனியுங்கள். வானக் கனவுகளை விட பூமிப்பாதைகளை கவனியுங்கள். நம் விரல் தீண்டலுக்காய், நம் ஒரு தோழமைப் புன்னகைக்காய், நாம் நல்கப் போகும் ஒரு சிறு உதவிக்காய் காத்திருக்கிறார்கள் நம்மைச் சுற்றிலும் மனிதர்கள். வீட்டு சன்னலைத் திறந்து பாருங்கள். காற்று வருவதை மட்டும் கண்மூடிக் கவனிக்காமல் சாலையில் தெரியும் மனிதர்களையும் கவனியுங்கள். அந்த இடத்தில் நாம் இருந்தால் நம் எதிர்பார்ப்புகள் எதுவாக இருக்கும் என எண்ணிப் பாருங்கள் அதுவே பணி வாழ்வின் அடிப்படை.

கண்திறந்துக் கவனித்தால், அன்னை பணிசெய்த கல்கத்தா வீதிகள் எங்கும் கண்டுபிடிக்கப் படலாம். அவர்களுக்காய் இறப்பது நடைமுறை சாத்தியமில்லை தான், ஆனால் சிலவற்றைத் துறக்கலாமே.

புன்னகையை விட அழகிய கவிதையை யாரும் எழுதிவிட முடியாது. புன்னகை எனும் கவிதையை யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். எழுதுங்களேன்…

மனித நேயம் நிறைக்காத வாழ்க்கை அதன் அர்த்தம் இழக்கிறது. புன்னகை இறைக்கும் இதயங்களில் தான் வாழ்வின் மொத்தமும் இருக்கிறது.

இந்த கவிதை நூல், அன்னையின் வாழ்க்கையை எளிமையாகச் சொல்கிறது. இதைப் படித்துவிட்டு யாரேனும் என்னைக் கவனித்தால், நான் தோற்றுப் போய்விட்டதாகக் கருதிக் கொள்கிறேன். இதைப் படித்த யாரேனும் ஏழை வீதியைக் கவனிப்பதையே வெற்றி என பெற்றுக் கொள்கிறேன்.

அன்புடன்

சேவியர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s