கவிஞர் காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு

வாழ்வில் எத்தனையோ நபர்களைத் தினம் தோறும் சந்திக்கிறோம். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

நீ
யாரையோ பார்த்து பிரமிக்கும்
அதே வினாடியில்
யாரோ
உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள்

என்று நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பேன். அவ்வப்போது சந்திக்கும் நபர்களையும், அவர்களுடன் பகிர்ந்து கொண்ட செய்திகளையும் வலையேற்றலாமே என்று திடீரென ஒரு சிந்தனை, அந்த சிந்தனையின் விளைவாகத் தான் இந்த முதல் பதிவு.

உங்கள்
அங்கீகாரம் கிடைத்தால் ஆனந்திப்பேன்.
விமர்சனங்கள் கிடைத்தால் வளர்வேன்.


பார்வையில் கூர்மையும், பேச்சில் நேர்மையுமாக புன்னகைக்கிறார் கவிஞர் காசி ஆனந்தன். வார்த்தைகளில் வீரியமடிக்கும் சிந்தனைகளுக்குச் சம்பந்தமில்லாத ஒல்லியான தேகம். ஈழப்போரின் நினைவுகள் அவருடைய கண்களில் கவலையையும், கனலையும் ஒருசேர அடித்து விட்டுப் போன சுவடுகள் பேச்சில் தவிர்க்க இயலாமல் தலை காட்டுகின்றன. அவருடைய படத்தை வைத்துத் தான் சிங்கள ராணுவத்தினர் குறிபார்த்துச் சுடும் பயிற்சி செய்வதாகவும், இவருடைய கவிதைகள் ஈழத் தமிழ் போராளிகளிடையே தமிழ் உணர்வை ஊற்றுவதாகவும் கதைகள் கேட்டதுண்டு.

வாழ்வில் சந்திக்கும் நபர்களில் எழுத்துகளுக்கும் பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கின்ற நிரப்பப்படாத பள்ளம் அவருடைய சந்திப்பில் இல்லை. பேசுவதை எழுதுகிறார் எழுதுவது அவருடைய வாழ்க்கை சார்ந்ததாகவோ, அல்லது வேட்கை சார்ந்ததாகவோ இருக்கிறது.

காலையில் தாமதமாக வரும் காய்கறி வியாபாரியிடம் ஏன் காலதாமதமாகி விட்டது என்பதைத் தமிழில் வினவுகையில் புரிந்து கொள்ள முடியாத நிலையில் காய்கறி வியாபாரி இருப்பதைக் கவலையுடன் தெரிவிக்கிறார். நான்கைந்து வேறுபட்ட வார்த்தைகளுடன் வினவியும் பதிலில்லாமல் கடைசியில் புரிந்து கொள்டவளாக ‘ஓ.. லேட்டானதை கேக்கறீங்களா சார்’ என்ற அவளுடைய பதில் தமிழின் மீதான அவருடைய ஆர்வத்தின் கால்களை உடைத்ததில் ஆச்சரியமில்லை.

பொங்கல் தினத்தில் பக்கத்து தெருவில் நடந்து சென்றபோது அத்தனை வீடுகளும் ‘ஹேப்பி பொங்கல்’ என்று ஆங்கிலத்திலோ, அல்லது ஆங்கிலத்தைத் தமிழிலோ வாழ்த்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் திடுக்கிடுகையில் நமக்கும் நம் மொழி மீதான ஆர்வத்தின் மீது திகில் படர்கிறது. ஏன் தமிழ் வளர்கிறது வளர்கிறது என்று போலித்தனமான சலுகைப் போர்வைகளைப் போர்த்தி நடக்கிறீர்கள் ? ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய தேசம் முழுவதும் பேசப்பட்டு வந்த மொழியாக தமிழ் இருந்ததற்கான வரலாறுகள் உள்ளன இன்று தமிழ் நாட்டில் மட்டும் பேசுகிறோம் இது வளர்ச்சியா ? இலங்கையில் ஒன்பது மாகாணங்களிலும் இருந்த தமிழ் இன்று இரண்டு மாகாணங்களுக்கு இடம் பெயர்ந்து தினமும் சிங்களத் தோட்டாக்களினால் நெற்றியில் புள்ளியிடப்பட்டு உயிரெழுத்துக்களெல்லாம் மெய்யெழுத்துக்களாகி வருகிறதே இது வளர்ச்சியா ? என்று அவர் பதை பதைப்புடன் வினவுகையில் அவரிடம் போலித்தனம் இல்லை. அரசியல் வாதி ஒருவர் தன்னுடைய இருக்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொல்லிக் கொள்ளும் சால்ஜாப்பு அறிக்கையாக அவருடைய பேச்சு இல்லை. வலிகளுடன் விழுகின்றன வார்த்தைகள். ஒரு சிறிய இடத்தில் துவங்கிய ஆங்கில மொழி உலகெங்கும் பரவியிருப்பதை வளர்ச்சி என்று சொல்லலாம், உலகின் பல இடங்களில் பரவி இருந்த தமிழ் ஒரு இடத்தில் சுருங்கியதை எப்படி வளர்ச்சி என்று கொண்டாடுவது என்று கேட்கையில் மறு பேச்சு பேச முடியவில்லை.

இலக்கியத்தின் பக்கமாக மெல்ல பேச்சைத் திருப்பினால் கண்கள் மின்னலடிக்க பேசுகிறார். அவருடைய பார்வையில் கவிதைகளை சிந்தல், நறுக்குகள், பாக்கள் என மூன்றாகப் பிரித்து பேசுகிறார். சாரலடிக்கும் மழையைப் போல, அல்லது அருவியில் விழும் நீரின் சாரல் போல மனதை தொட்டு சிலிர்க்க வைப்பது சிந்தனை. நறுக்கென்று தலையில் குட்டுவது போல, ஒரு வீச்சுடன் வந்து விழும் அருவி நீர் போல என்பது நறுக்கு. பா என்பது இசையுடன் கலந்தது என்று பிரித்துப் பேசி உதாரணங்கள் அடுக்குகையில் மனம் அவருடைய வாதத்தை, அவருடைய கவிதை பாணியை அங்கீகரிக்கிறது.

தமிழா / ஆடாய் மாடாய் ஆனாயடா / என்றேன் / கை தட்டினான் – என்பன போன்ற எழுத்துக்களை கவிதைகள் என்றால் மறுப்பதற்குத் தயாராக ஒரு கூட்டம் இருக்கலாம். ஆனால் நறுக்குகள் எனும் போது யாரும் வெறுக்க மாட்டார்கள் என்பதே கவிஞருக்கு ஒருவிதமான பொது அங்கீகாரம் கிடைப்பதற்கு ஏதுவாகிறது. தனிப்பட்ட முறையில் நறுக்குகளின் தீவிர ரசிகன் நான் என்பேன். அவற்றை வீரியமிக்க வாள் வீச்சுகளாய் பாவிக்கிறேன், அதையே கவிஞரும் விரும்புகிறான் என்றால் கவிஞரின் பார்வையில் வாசகனின் வாசிப்பு இயங்குவது ஒரு சமதளக் கண்ணோட்டமல்லவா.

தன்னிடமிருந்த கவிதைகளை ஈழத்தில், கண்ணீரின் ஈரத்தில் தொலைத்ததை ஒருவித சோகத்துடன் நினைவு கூர்கிறார். குருதியின் வாசனையோடு கவிதைகளும் மடிந்து போன சம்பவங்களை நினைவு கூர்கையில் அவருடைய முகம் குழந்தையைப் பறிகொடுத்த ஒரு தாயைப் போல பரிதவிக்கிறது. தூரத்தில் குரைக்கும் நாயோசை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வரும் ஈழத்தின் இரவுகளை நினைவு கூர்ந்தார். நாய் குரைக்கும் ஓசை நெருங்க நெருங்க விளக்குகளை அணைத்துவிட்டு துடிக்கும் இதயத்தின் ஓசையையும் கைகளால் தடுத்துக் கொண்டு, நாயோசையைத் தொடரும் காலடி ஓசைகள் தன் வீட்டு வாசலில் நின்று விடக் கூடாதே எனும் உயிர்ப்படபடப்பில் மரணத்தின் வாசனையை இரவுகளின் சுவாசித்துக் கழியும் தமிழர்களின் வாழ்க்கையை அவர் சொல்கையில் குரல் தழுதழுக்கிறது. சற்று நேரம் நிறுத்தி விட்டு, இலங்கை முழுவதும் தமிழர்களுக்குப் பதில் மலையாளிகளோ, தெலுங்கர்களோ இருந்திருந்தால் இதற்கு முன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு நீதி வழங்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா என்று இதுவரை யோசித்திராத கோணத்தில் ஒரு கேள்வியையும் வைக்கிறார்.

பேச்சு மீண்டும் மீண்டும் தமிழ் மொழியின் மீதே திரும்பியது அவருக்கு தமிழ்மீதாக இருக்கும் தாகத்தை மெய்ப்பிக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு சில கருத்துக்களை அவர் முன்வைக்கிறார்.

முதலாவது, தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப் படுவது என்பது தமிழை இழிவு படுத்துவது போல, தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்வியே எல்லா பள்ளிகளிலும் நிகழ்த்தப்பட வேண்டும். அது தான் உண்மையான தமிழ் வளர்ச்சிக்கு அடிகோலும். வேண்டுமானால் ஆங்கிலத்தைக் கட்டாயப் பாடமாக்கலாம். இன்றைக்கு தமிழை இந்தி அழித்துக் கொண்டிருப்பதாக எழும்புவது அரசியல் கடலில் அடிக்கும் மாய அலை. உண்மையில் ஆங்கிலச் சுனாமியில் சிக்கி தமிழ் தன்னுடைய முகத்தை சிதைத்துக் கொண்டிருப்பது தான் நிஜம்.

இரண்டாவது, தமிழ் நாட்டில் தமிழில் எழுதப்படும் எல்லா பெயர்ப்பலகைகளும் தூய தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிக் கலப்பு என்பது அறவே கூடாது. பிரான்ஸ் நாட்டில் ஒரு குழுவே இருக்கிறது. பிரான்ஸ் மொழியில் ஆங்கிலம் கலந்து எழுதினால் பிரஞ்ச் மொழியை அவமானப்படுத்துவதாக வழக்கிடும் உரிமை கூட உள்ளது. ஆனால் நமது நாட்டில் தான் தமிழுக்காகப் பாடுபட்ட மறை மலை அடிகளார் பாலத்தைக் கூட ‘மறைமலை அடிகள் பிரிட்ஜ்’ என்று எழுதிப் பழகுகிறோம்.

ஊடகங்களில் தமிழ் மொழி செம்மைப்படுத்தப் படவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இன்றைக்கு தமிழில் படமெடுத்தால் கூட அதை ஆங்கிலப் பெயருள்ள தொலைக்காட்சியில் தான் திரையிட வேண்டியிருக்கிறது என்று ஒருவர் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டிப் பேசுகிறார். தமிழ் மீதான ஆர்வம் எந்த அளவுக்கு ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதை அவருடைய பேச்சு தெளிவாக்குகிறது. நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சமாதானங்கள் உண்மையில் தமிழின் வளர்ச்சியின் மீது தடைக்கல்லாகத் தான் அமரும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

பேச்சு தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதைப் பற்றித் திரும்புகிறது. பேச்சு கலகலப்பாகிறது. பாருங்கள் தமிழ்ப் படத்துக்கு தமிழில் பெயர் வைப்பதற்குக் கூட வரிச்சலுகை கொடுக்க வேண்டி இருக்கிறது. கூடவே தமிழ் அல்லாத பிற மொழிகளில் பெயர்வைத்தால் ஐம்பது சதவீதம் அதிக வரி என்று விதித்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்று தன்னுடைய கருத்தையும் வைக்கிறார்.

இருபத்து ஒன்பது ஆண்டுகாலம் காதலித்துத் திருமணம் செய்த அவருடைய நேசத்துக்குரிய மனைவி தேனீர் பரிமாற, அதை சுவைத்துக் கொண்டே தன்னுடைய இலக்கிய உலகின் அடுத்த எதிர்பார்ப்புகளையும், படைப்பு சார்ந்த விருப்பங்களையும், எழுதிக் கொண்டிருக்கும் பணிகளைப் பற்றியும் பேசுகிறார். இன்னும் சில காலம் தொடர்ந்து எழுதுமளவுக்கு அவரிடம் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன சிந்தனைகள் என்பது மட்டும் தெளிவாகிறது. ‘வன்ன மயில் இப்போது கூத்தாடுமா இல்லை போராடுமா ?’ என்ற ஒரு நாட்டியப் பாடலை எழுதி முடித்த கதையை விவரிக்கிறார். வன்னி மயில்கள் நிறைந்த பகுதி, இப்போதைய போர் சூழலில் சூழ்ந்திருக்கும் கரும் புகைகளினால், நீரைக் குடித்து நிமிராமல், உயிர்களைக் குடித்து நிறைந்திருக்கும் போர் மேகங்களினால்  இந்த மயில்கள் தோகை விரித்தாடுமா இல்லை ஆயுதம் எடுத்து போராடுமா என்னும் கற்பனையை கவிஞர் விவரிக்கையில் சிலிர்த்துப் போய் பார்த்திருப்பதைத் தவிர வேறேதும் செய்யவில்லை நான்.

கடைசியில் என்னுடைய அடுத்த நூலுக்கான முன்னுரைக்காக கொண்டுசென்றிருந்த கவிதைக் காகிதங்களை அவரிடம் கொடுத்துவிட்டு விடைபெறுகையில் ஒரு முகமூடி அணியாத கவிஞரைச் சந்தித்துத் திரும்பிய மகிழ்ச்சி மனசெங்கும்.

Advertisements

6 comments on “கவிஞர் காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு

 1. சேவியர்ஜி,

  அடுத்த நூலா. வாழ்த்துகள்.

  என்ன தலைப்பு?

  அன்புடன்
  ஆசாத்

  Like

 2. அன்பு சேவியர்

  உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் காசி ஆனந்தன் உங்கள் பதிவுக்கு இன்று வரவழைத்துவிட்டார்.

  ஈழத்தின் பாரதி காசி ஆனந்தனின் வேதனை நிரம்பிய பேட்டியைப் படிக்கையில் வேதனை அதிகரிக்கிறது.

  என்று தான் நமது தமிழுக்கு விடிவு காலம் பிறக்குமோ.

  நல்ல ஒரு பேட்டி என்பதை விட சந்திப்பு என்றே சொல்லலாம்.

  நன்றி.

  தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.

  Like

 3. சேவியர் அவர்களுக்கு வணக்கம், வலைப்பூவிற்கு புதியவன் ஆனாலும் தங்களது மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும் படித்திருக்கிறேன். காசிஅனந்தன் கட்டுரையின் உரைநடை நேர்த்தி பிரமாதமாக இருந்தது. நன்றி.

  Like

 4. மிக்க நன்றி செல்வேந்திரன். என்னுடைய கவிதை நூலை படித்திருக்கிறீர்கள் என்பதைக் கேட்பதே ஆனந்தமாக இருக்கிறது 🙂 கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். திடர்ந்து வாருங்கள் .. வாசியுங்கள்..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s