ஞானக்கூத்தனுடன் ஒரு நட்பு உரையாடல்

புகழ் என்பது ஒருவகைப் புறக்கணிப்பு – ஞானக்கூத்தன்


வாகனம் தூக்கிக் கொண்டு
தீவட்டி பிடித்துக் கொண்டு
வாத்தியம் இசைத்துக் கொண்டு
பலூன்கள் விற்றுக் கொண்டு
தெருக்காரர் ஊர்வலத்தில்
இருப்பதால் நஷ்டப்பட்டார்
எங்களூர் அரங்கநாதர்
  – ஞானக்கூத்தன்

கடந்த சனிக்கிழமை செப்டம்பர் ஒன்பதாம் தியதி ஞானக்கூத்தனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். திருவல்லிக்கேணியில் காரோட்டுவது என்பதை எதற்கு வேண்டுமானாலும் ஒப்பிடலாம் போல. கயிறு மேல் நடப்பது, கத்தி மேல் நடப்பது அல்லது எப்படி வேண்டுமானாலும். ஒருவழியாக ஞானக்கூத்தனின் வீட்டுக்குச் சென்று சேர்வதற்குள் ஒரு தெருக்கூத்தை நடத்தி முடித்துவிட்டேன். அந்த களைப்பையும், எரிச்சலையும் எல்லாம் மூட்டை கட்டி சன்னல் வழியே வெளியே எறிந்து விட்டது அவருடன் நடந்த சந்திப்பு.

சுற்றிலும் புத்தகக் குவியல்கள். காலச்சுவடு கவிதைகள், சிற்றிதழ்கள், ஆங்கிலக் கவிதை நூல்கள் என குவித்தும், அடுக்கியும் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்கு நடுவில் ஒரு இருக்கை போட்டு தன்னுடைய பொழுதை ரம்மியமாய்ச் செலவிட்டுக் கொண்டிருந்தவரை உசுப்பினேன். கவிதையை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் என்று ஞானக்கூத்தனைக் குறிப்பிட்டால் யாரும் மறுப்புச் சொல்லப் போவதில்லை என்று நினைக்கிறேன். அவருடன் நடந்த உரையாடல் கூட ஒரு கவிதைத் தொகுப்பை வாசிப்பது போல சுவாரஸ்யமானதாகவே கழிந்தது.

இன்றைய கவிதை உலகின் பார்வையைக் குறித்து பேச்சு துவங்கியது. இன்னும் நாம் கவிதைக்குள் கொண்டு வராத நடைமுறை வாழ்வின் செயல்பாடுகளையும், கலியுக சமுதாய, பொருளாதார, அறிவியல் வளர்ச்சியையும் குறித்து விரிவாக உரையாடினார். எப்படி ஒரு கவிதைக்குள் நாம் எழுதும் விமானப் பயணம் குறித்த பதிவு எதிர்காலத்தில் நம்முடைய கால மாற்றத்தின் அடையாளங்களுக்கான சாட்சிகளாய் நிலைக்கும் என்றும், இதை உதாரணமாகக் கொண்டால் இன்னும் என்னென்ன நாம் கவிதைக்குள் செய்ய முடியும் என்றும் உரையாடல் சுவாரஸ்யமாகச் சென்றது. அவருடைய ஒரு கவிதையில் மனநிலை சரியில்லாத பெண்ணை ஆட்டோ வின் முன் கண்ணாடி வழியாகப் பார்ப்பதாகக் குறிப்பிடுகையில், கவிதை மனநிலை சரியில்லாத பெண்ணின் வாழ்வை ஆட்டோ  ஓடும் ஒரு காலகட்டத்தில் பதிவு செய்கிறது என்றார்.

ஒரு பாடையின் நிழலின் கீழ் பதுங்கிப் பதுங்கிச் செல்லும் ஒரு நாயைக் குறித்த கவிதை ஒன்றை அவர் எழுதியிருப்பார். அதைக் குறித்த பேச்சை ஆரம்பித்த போது, கவிதைக்கான முதல் தேவை கவனிப்பு என்பதைக் குறித்து உரையாடினார்.

முக்கியமாக இமிட்டேஷன் குறித்த உரையாடல் எங்கள் உரையாடலில் முக்கிய பங்கு வகித்தது. வெளிநாட்டு இலக்கியங்களையும், பிறமொழி இலக்கியங்களையும் தமிழில் செய்யும் போது நாம் கவனிக்க வேண்டியவை குறித்து பேசுகையில், நாம் பெரும்பாலும் கவிதைகளின் வடிவத்தையோ, கட்டமைப்பையோ தான் எடுத்துக் கொள்வதையும் அவர்களுடைய கவிதைகளின் கூறுகளையும், அவை பேசுகின்ற செய்திகளையும் எடுத்துக் கொள்ளத் தவறுவதையும் சுட்டிக் காட்டினார். உதாரணமாக கிருபானந்த வாரியாரைப் போல தெருமுனைகளில் பேசிக் கொண்டிருக்கும் ஒருவர் எப்படி நகைச்சுவை செய்திகளை கிருபானந்தவாரியாரின் உரையாடல் போல அமைக்கிறாரோ அது போல தான் இன்றைய கவிதை நிகழ்வதாகக் குறிப்பிட்டார். திரைப்பாடலை பகடிப் பாடலாக்கும் வித்தை போன்றவற்றை வைத்துக் கொண்டு நாம் மேனாட்டு இலக்கியங்களைப் போன்ற இலக்கியங்களைப் படைத்துவிட்டோ ம் என்று கூறுவதில் இருக்கக் கூடிய சிக்கல்களைக் குறித்தும் பேசினார்.

பேச்சின் இடையே அவருடைய பேரப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டே இருந்தவரிடம், மழலை தான் கவிதைகளில் அழகான கவிதை என்று சொன்ன போது சிரித்துக் கொண்டார். அவருடைய நேரத்தில் பெரும்பான்மையை இப்போது ஆனந்தமாய் குழந்தைகளுடன் செலவிடுவதை ஒரு குழந்தையாய் மாறி குதூகலத்துடன் சொன்னார்.

இன்றைய கவிதை உலகின் வளர்ச்சி என்பது விமர்சனங்களை சார்ந்திருப்பதாகச் சொன்ன அவர், ஒரு கவிஞர் ஒரு படைப்பை எழுதியவுடன் அவர் வசவுகளை மட்டுமே சந்திக்க நேர்கிறது என்றும். அந்த வசவுகள் நாளடைவில் ஒரு அங்கீகாரத்துக்குரிய கவிஞராக அவரை ஆக்கி விடுவதையும், அங்கீகாரம் கிடைத்தபின் அவர் வசவுகளை எழுதினால் கூட அவை கவிதைகளே என்று பாராட்டப் படுவதையும் சற்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். ஞானக்கூத்தனின் கவிதைகள் ஒரு நிலையை அடைந்து விட்டன என்பதற்காக விமர்சனங்கள் வராமல் இருப்பதை ஒரு பேரிழப்பு என்று குறிப்பிட்ட அவர், புகழ் என்பது ஒருவகைப் புறக்கணிப்பு என்று முத்தாய்ப்பு வைத்தார்.

இன்றைய இளம் கவிஞர்களுக்கு உங்களைப் போன்ற அனுபவஸ்தர்களின் அறிவுரைகளும், வழிகாட்டல்களும் தேவை. அதற்காக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் ஒன்றை வைத்த போது மிகவும் ஆனந்தமாக ஒத்துக் கொண்டார். ஒரு இருபது முப்பது இளம் கவிஞர்களைப் பேச விட்டு அவர்களின் கவிதை குறித்த புரிதலையும், கவிதையின் பரிமாணங்கள் குறித்த தெளிவுகளையும், அவர்களுடைய விருப்பங்களைக் குறித்தும் அறிந்து கொள்ள ஆசைப்படுவதாகச் சொன்னார்.

இன்றைய பல கவிஞர்கள் தங்களை அறியாமலேயே பல மேனாட்டு கவிதைக் கூறுகளை தங்கள் கவிதைகளில் பயன்படுத்தி வருவதைக் குறிப்பிட்ட அவர் அவற்றைக் குறித்த புரிதல்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். கவிதைகளில் கலைச் சொற்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களைப் பற்றிப் பேசுகையில் ஒத்துக் கொள்கிறார். ஆங்கில இலக்கியத்தின் ஒரு வசதியே பல தொழில்நுட்பப் பெயர்களை அப்படியே கவிதைகளில் பயன்படுத்த முடிகின்ற தன்மை என்றும், தமிழில் அதை கலைச் சொற்களாக்கிப் பயன்படுத்துகையில் நடைமுறைவாழ்விலிருந்து அன்னியப்பட்டுச் செல்கின்ற ஒரு உணர்வைத் தவிர்க்க முடிவதில்லை என்பதையும், அதற்காக நாம் அதைச் செய்யாமல் விடக் கூடாது என்பதையும் நுட்பமாக விளக்கினார்.

என்னுடைய ‘இயேசுவின் கதை’ புத்தகத்தைப் பற்றிப் பேசுகையில், ஏன் தமிழில் போந்தியு பிலாத்து என்கிறீர்கள் உண்மையில் அவருடைய பெயர் போன்ஷியஸ் பைலட் தானே என்று கேட்டார். ஆங்கிலத்தின் ஆதிக்கம் எல்லா இடங்களிலும் இருக்கிறது என்பதற்கான உதாரணம் தான் இது என்று சொன்னேன். கேள்வியுடன் பார்த்தார். எபிரேய மொழியில் போன்தியுஸ் பிலாத்து என்று தான் இருக்கிறது. ஆங்கில நாவுக்கு வசதியாக அவர்கள் தான் அதை போன்சியஸ் பைலட் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழ் பொது மொழிபெயர்ப்பு பைபிளில் இருக்கும் பெயர்கள் ஏறக்குறைய உண்மையான ஒலியுடன் ஒத்துப் போகும். அதற்காகத் தான் வெறும் மொழிபெயர்ப்பு மட்டுமற்றி ஒலிபெயர்ப்பையும் கருத்தில் கொண்டு அதை மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று சொன்னேன். புதுத் தகவலைக் கேட்டுக் கொண்டிருந்தவர் ‘இயேசுவின் கதை’ குறித்த அவருடைய கருத்துக்களை கலந்துரையாடலில் தெரிவிக்கிறேன் என்றார்.

கவிதை குறித்த உரையாடல்களில் தவறாமல் இடம்பெறும் பாப்லோ நெருதாவின் படைப்புகள் குறித்துப் பேசிய அவர், நாம் பிரமிப்பூட்டும் படைப்புகள் வாசிக்கையில் பிரமித்து விட்டுப் போய்விடுகிறோம். அதை தமிழுக்குத் தருவதற்கு தயங்குகிறோம். எதைப் பேசினாலும் நாம் நிலவையோ, கடலையோ, பூ வையோ உவமைக்கு அழைத்துப் பழகிவிட்டோ ம். அதில் தவறில்லை ஆனால் புதிய முயற்சிகள் வந்து கொண்டே இருக்க வேண்டும். தேக்க நிலைக்கு கவிதை உலகம் சென்றுவிடக் கூடாது என்றார்.

இணையத்தில் உலவும் தனி இலக்கிய உலகத்தைப் பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன். விடைபெறுகையில் கவிதை தன்னுடைய பக்கங்களில் நிரப்பிக் கொள்வதற்காக இன்னும் ஏராளமான பக்கங்களை வெள்ளையாகவே விட்டு வைத்திருப்பதாகவும், இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் தங்கள் கவிதை குறித்த அறிதல்களை இன்னும் விரிவடையச் செய்ய வேண்டும் என்றும் தோன்றியது.

எல்லா மொழிகளும் நன்று
கோவிக்காதீர் நண்பரே
தமிழும் அவற்றில் ஒன்று

 – ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுப்பிலிருந்து.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s