விட்டு விடுதலையாகி…

 

விடுதலை தேடியே
வினாடிகள் ஓடுகின்றன.

அலுவலக மேலதிகாரியின்
மின்னஞ்சல் போர்களில்
குற்றுயிராகி
போர்க்களம் சாய்கையிலும்,

நம்பிக்கை நங்கூரங்கள்
சங்கிலி அறுத்து
தனியே பாய்கையிலும்,

ஏமாற்றத்தின் விலாசங்களுடன்
அலையும்
சுருக்குக் கயிறுகளில்
எச்சரிக்கைக் கழுத்துகள்
எதேச்சையாய் விழுகையிலும்,

விடுதலைச் சன்னல்களைத்
தேடி அலையும்
தவறி வந்த பட்டாம்பூச்சியாய்
மனம் அலையும்.

குடும்ப உறவுகளின்
குத்தல் பேச்சுகளிலும்,
நெடுநாள் நட்புகளின்
திடுக்கிடும் திருப்பங்களிலும்
அவை தொடரும்.

அங்கீகார மேடைகள்
புறக்கணிப்புப் பத்திரத்தை
விவரமாய் வாசிக்கையிலும்

சங்கீதக் காதலி
மறுப்புக் கடிதமெழுதி
வேறெவரையோ நேசிக்கையிலும்

அங்கிங்கெனாதபடி
பீலி பெய் சாகாடும் நிலையில்
எப்போதும்
விடுதலையைத் தேடியே
அலைகிறது மனம்

துயரச் செருப்புகளைத்
தூர உதறி
மாலையில் வீடு நுழைகையில்
தாவியணைக்கும் மகளின் கரங்களில்
வினாடியில்
அடிமையாகும் மனம்,
அப்போது மட்டும்
விடுதலையை வெறுக்கும்.

5 comments on “விட்டு விடுதலையாகி…

  1. //துயரச் செருப்புகளைத்
    தூர உதறி
    மாலையில் வீடு நுழைகையில்
    தாவியணைக்கும் மகளின் கரங்களில்
    வினாடியில்
    அடிமையாகும் மனம்,
    அப்போது மட்டும்
    விடுதலையை வெறுக்கும். //

    உண்மையான வரிகள். வாழ்த்துக்கள், சேவியர் சார்.

    Like

  2. வாவ்! சுப்பர்.
    இப்படிதான் இருக்க வேண்டும் கவிதை, எளிமையும் இனிமையும் கொண்டு.
    வாழ்த்துக்கள்!

    கவிதைக்கு தனி போட்டி வெக்கணும்!

    Like

  3. Excellent Poem.I like this:

    அலுவலக மேலதிகாரியின்
    மின்னஞ்சல் போர்களில்
    குற்றுயிராகி – True….

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.