நாவலில் கவிதை வேண்டும் – இறையன்பு

பாதுகாப்பு  வளையங்கள் வலம் வரும் தலைமைச் செயலகத்தில் இருந்து கொண்டும் இலக்கியம் படைப்பவர் எழுத்தாளர் இறையன்பு அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு. நட்பு ரீதியிலான சந்திப்புகளைக் கூட கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டே நடத்த முடியாத அளவுக்கு இறுக்கமான அலுவல். சந்தித்து நீண்டநாட்களாயிற்றே என்று நானும் புதிய பார்வை இதழின் துணை ஆசிரியர் சுந்தர புத்தனுமாக அவரைச் சென்று பார்த்தால் இன்னும் அதே உற்சாகத்துடனும், எளிமையுடனும், இயல்பாகவும் !

இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் அவரை எப்போதுமே உற்சாகமடைய வைக்கும். முழுநேர இலக்கியத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வு என்பது புத்தகத்தை மூடி வைப்பது, முழுநேர வேலையில் இருப்பவர்களுக்கு இளைப்பாறுதல் என்பது புத்தகத்தைத் திறப்பது என்பது போல அவருக்கு இலக்கியம் என்பது இளைப்பாறுதல் களமாகவே இருக்கிறது. ஆனாலும் அந்த இளைப்பாறுதல் களத்தில் நின்று கொண்டு ஏதேனும் வலுவான தத்துவார்த்த பயனுறு செய்திகளைச் சொல்லவேண்டும் என்னும் அவருடைய எதிர்பார்ப்பின் மின்மினிகள் சற்றும் ஒளியிழக்கவில்லை.

இன்னும் புத்தக வடிவம் பெறாத அவருடைய சிறுகதைகளின் கத்தையை வாசிக்கக் கொடுத்தார். அவருடைய உரை நடை ஒரு சிறந்த இலக்கியவாதியின் நடை, அவை அந்த சிறுகதைகளிலும் உயிரூட்டமாக இருந்தன. ஒரு கவிதையின் நளினமும், ஒரு தத்துவார்த்தத் தேடலுமான நடை அவருடைய புதிய கதைகளில் இருப்பதால் பேச்சு மெல்ல அந்தத் திசையில் நகர்ந்தது.

அடுத்ததாக நான் ஒரு நாவல் எழுதப்போகிறேன் என்றவரை இடைமறித்து நாவலை மிகவும் விரிவாக எழுதுங்கள், நாவலில் கவிதையைத் தவிருங்கள். நாவலை நாவலாய் ஆழமாய் எழுதுங்கள் என்றால் சில வினாடிகள் மெளனத்துக்குப் பின் பேசினார்.

உரைநடை இலக்கியங்களில் கவிதை சொல்வது என்பது தவறென்று தமிழில் போதிக்கப் படுகிறது. ஆனால் உலக இலக்கியங்களை எடுத்துக் கொண்டால், காலத்தைத் தாண்டி நிற்கும் படைப்புகளோ, அல்லது விருதுகள் வாங்கும் படைப்புகளோ எல்லாமே ஒரு கவிதைத் தனத்துடன் தான் இருக்கின்றன. ஒரு கவிதையின் நளினமோ அல்லது கவித்துவமான பாங்கோ நாவலில் இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் அந்த முறை தமிழில் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணமும் புரியவில்லை. ஆழமாய் யோசித்துக் கொண்டே பேசுகிறார்.

தன்னுடைய நாவல் மிக அதிக பக்கங்கள் கொண்ட நாவலாய் இருக்கக் கூடாது என்றும், நாவல் தடிமனாக இருந்தால் அதற்கு மதிப்பு அதிகம் என்பது கூட நம்முடைய தவறான பார்வை தான் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். நோபல் பரிசு வாங்கும் நாவல்கள் கூட நூறு பக்கமோ, நூற்று ஐம்பது பக்கமோ தான் இருக்கின்றன. அளவில் எதுவும் இல்லை, அடர்த்தியில் தான் இருக்கிறது. எந்த ஒரு படைப்பும் அதன் பின்னால் ஒரு தத்துவம் சார்ந்த ஒலி எழாமல் இருந்தால் நிலை நிற்பதில்லை. தத்துவம் இழையோடும் படைப்புகள் ஒருவித கவிதைத் தனத்துக்குள் வந்து விடுகின்றன. அந்த கவிதைத் தனத்தை சிறப்பாக வெளிப்படுத்தினால் நாவல் கவித்துவமான, தத்துவார்த்தச் சிந்தனைகளுடன் சிறப்பாய் வரும் என்பதில் ஐயமில்லை.

அன்பு இழையோடும், உறவுகளை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளே நிலை நிற்கின்றன. காரணம் உலகம் உறவுகளால் இயங்குகிறது. முதியவருக்கும், சிறுவனுக்கும் இடைப்பட்ட பாசப் பிணைப்பைப் பேசும் பல படைப்புகள் காலம் தாண்டி நிற்கின்றன. காரணம் வாழ்வை முடித்த ஒருவரின் பார்வையும், தேடலும், வாழ்வின் முதல் படியில் நிற்கும் ஒரு சிறுவனின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் பாசத்தையும், தத்துவத்தையும் உள்ளடக்கியவை. வாழ்வின் அடிப்படையான அன்பு இலக்கியத்தில் இடம்பெறுவதே சமுதாயத்தின் வளர்ச்சிக்கான பார்வையாய் இருக்க முடியும். என்று தன்னுடைய கனவுகளைச் சொல்லிக் கொண்டே, ஆனால் எனக்கு உறவுகள் பற்றி எழுதத் தெரியாது என்று பளிச் என்று சொல்லிச் சிரிக்கிறார்.

என்னுடைய சமீபத்தியப் புத்தகங்களான ‘இயேசுவின் கதை’ மற்றும் ‘கல் மனிதன்’ புத்தகங்களை அவரிடம் கொடுத்தேன். சமீப காலமாக தமிழ் பதிப்பகத் துறையில் தரமான தயாரிப்புகள் வருகின்றன என்று மகிழ்ச்சியையும், பழைய பதிப்பகங்கள் எப்படி இருந்தன என்பன பற்றியும் நினைவு கூர்ந்து பேசிக் கொண்டிருந்தார். கவிதைகள் என்பது கனமான செய்திகளைத் தாங்கினாலும் இலகுவான நடையில் இருப்பதையே அவரும் விரும்புகிறார்.

இப்போதெல்லாம் திருக்குறளை கவிதை வடிவில் வடிவம் மாற்றுபவர்கள் அதை திருக்குறளை விட கடினமாக்கி விடுகிறார்கள். தேவையற்ற திணிப்புகளும், வேண்டுமென்றே அடர்த்தியாக்குவதாய்ச் சொல்லிக் கொண்டு தொடர்புகளற்ற வார்த்தைகளைத் தொடுப்பதும், கவிதையின் தரத்தைக் கூட்டுவதில்லை. இயல்பாகவே எழுவதுதான் கவிதை. எனத் தொடர்ந்த பேச்சு பழைய நண்பர்கள் பற்றியும், சமீபத்திய இலக்கியவாதிகள் பற்றியும், முக்கியமாக இலக்கியப் பதிவுகள் பற்றியும், சமீபத்திய நோபல் பரிசு நூலைப் பற்றியும் தொடர்ந்தது.

தலைமைச் செயலகத்தின் செயற்கைக் குளிற்காற்றில் அதற்கு மேல் அமர்ந்து இலக்கியம் பேசுவது அரசின் கடமைகளைப் பொறுத்தவரையில் வெட்டியாய் பொழுதைக் கழிப்பது என்பதால் புத்தகங்களைப் படித்து உங்கள் கருத்துக்கள் சொல்லுங்கள் என்று விடைபெறுகையில் சொல்லிக் கொண்டோ ம்.

3 comments on “நாவலில் கவிதை வேண்டும் – இறையன்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.