சீரியல் கில்லர்ஸ்


கடந்த வெள்ளிக்கிழமை நல்ல மழை பெய்கிறதே என்று விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தேன். தொலைக்காட்சியில் காலையிலிருந்தே தொடர்கள் ஓடிக்கொண்டே இருந்தன. நான் எப்போதுமே தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை என்பதால் அதன் வீரியம் எனக்கு இது வரை உறைக்காமல் போனதில் ஆச்சரியமில்லை. அன்றைக்கு ஹாயாக சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சித் தொடர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்த எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

எல்லா சீரியல்களிலும் ஏதாவது ஒரு மனைவி தன்னுடைய கணவனை இன்னொருத்திக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். திருமணம் செய்து வைத்ததோடு நின்று விடாமல் அவரும் மனைவியாகவே தொடர்கிறார். அல்லது கணவனின் குடும்பத்தில் வேலைக்காரியாகவோ, கொடுமைகளைச் சகித்துக் கொள்ளும் இயலாமை நிறைந்த பெண்ணாகவோ சித்தரிக்கப்படுகிறார். போதாக்குறைக்கு ‘உங்களைப் பாத்துட்டே இருந்தா போதும்’ என்பன போன்ற வசனங்கள் வேறு. அடக்கடவுளே !!

சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இந்த தொலைக்காட்சித் தொடர்கள் செய்து விடமுடியும் என்பதை வீட்டுக்கார அம்மாக்களின் கவலை தோய்ந்த உரையாடல்களே எடுத்துக் காட்டுகின்றன. ‘அபிக்கு என்ன ஆகும்’ என்பதே தற்காலத் தாய்மார்களின் தலைபோகும் விவாதக்களமாகி விட்டது. பெரும்பாலான வீடுகளில் சாப்பிடும் நேரத்தையும், கடைக்குச் செல்லும் நேரத்தையும், இன்ன பிற வேலைக்கான நேரங்களையும் தொலைக்காட்சி தொடர்களே நிர்ணயம் செய்கின்றன. ‘வாங்க.. சீக்கிரம் போய் ரேஷன் வாங்கிட்டு வருவோம்… ஆரம்பிச்சுடப் போவுது சீரியலு..’

இந்த தொடர்கள் எல்லாம் என்ன சொல்ல வருகின்றன ? மனைவி தன்னுடைய கணவனை இன்னொருத்திக்குத் திருமணம் செய்து வைப்பது தியாகத்தின் சின்னமென்றா ? அல்லது கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தால் அது சாதாரணம் என்றா ? திருமணத்துக்கு முன்னால் உறவு கொள்வதும், தாய்மை அடைவதும் தவறில்லை என்றா ? அல்லது இதெல்லாம் ரொம்ப சகஜம், இப்படி உங்கள் வீட்டில் நடந்தாலும் கவலைப்படாதீர்கள் என்றா ? இந்த தொடர்கள் வளர்ந்து வருகின்ற இளைஞர்களின் மனதில் அல்லது இளம் பெண்களின் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன என்று நினைத்தால் திகிலடிக்கிறது.

முன்பெல்லாம் ஒரு சில இயக்குனர்களின் திரைப்படங்களில் அதிர்ச்சி தரும் திருப்பங்களுக்காக இப்படி ஏதேனும் கலாச்சார மீறல்கள் இடம்பெறும். இப்போதோ அதுவே கலாச்சாரம் என்று மக்களை நம்பச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றனவோ என்று பயமாக இருக்கிறது. எந்த தொடரிலாவது ஒரு கணவனுக்கு இரண்டு மனைவியரோ அல்லது கொச்சையான ஒரு உறவோ இல்லாமல் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்ததில் பதில் என்னவாயிருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

‘பியூனுக்கு பத்து ரூபாய் குடுத்தா வேலை முடியும்’ என்று பேசப்பட்டு வந்த ஒரு விஷயம், இன்றைக்கு ‘பியூனுக்கு காசு குடுக்காம எப்படி முடியும்’ என்று மாறி விட்டிருக்கிறது. லஞ்சம் என்பது ஒரு கட்டாயக் கடமை போலவும், சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டு நீதிபதிகளால் அங்கீகரிக்கப் பட்டது போலவும் தான் இப்போது பேசப்படுகிறது. இதே நிலமை நாளை உறவுகள் சார்ந்த உரையாடல்களிலும் நிகழும் அபாயம் இருக்கிறது. குறைந்த பட்சம் ‘ஊர் உலகத்துல இல்லாததையா செஞ்சுட்டான்’ என்றாவது விவாதங்கள் எழும் காலம் தொலைவில் இல்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்றும், குடும்ப உறவு என்றும், ஆணாதிக்கம் இல்லாத பெண்களுக்கு உரிமை கொடுக்கும் சமுதாயம் என்றும் நம்முடைய சமுதாயத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணங்களையெல்லாம் இந்த தொலைக்காட்சித் தொடர்கள் சின்னாபின்னமாக்கி விடுகின்றன. மாறாக புதிய ஒரு அபாயகரமான கலாச்சாரத்தைக் குடும்பத்தின் உள்ளே சத்தமில்லாமல் விதைத்துச் செல்கின்றன

மேல்நாட்டுத் திரைப்படங்களால் நம்முடைய கலாச்சாரம் கெட்டு விட்டது என்று தயவு செய்து இனிமேல் யாரும் கொடிபிடிக்காதீர்கள். தொலைக்காட்சித் தொடர்களால் கெட்டுப் போகாத எதையும் மேல்நாட்டுத் திரைப்படங்கள் கெடுக்கவில்லை. அவர்கள் திரைப்படங்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘இது அவர்கள் கலாச்சாரம்’ என்று சொல்லும் நாம் நம்முடைய தொடர்களைப் பார்க்கும்போது இது தான் நமது கலாச்சாரம் என்று சொல்ல முடிகிறதா ?

காதலித்துத் திருமணம் செய்து கொண்டவனை, இன்னொருத்திக்குக் கட்டி வைத்து விட்டு தன் கணவன் என்று சொல்லிக் கொண்டு ஒரு பாத்திரம் நடமாட, ஒருத்தியைத் திருமணம் செய்துவிட்டு பழைய காதலியுடன் சுற்றிக் கொண்டு ஒரு பாத்திரம் சுழல, முதல் மனைவி மூலமாகப் பிறந்த மகளுக்கு இரண்டாவது மனைவி மூலமாகப் பிறந்த மகன் தொல்லை கொடுக்க என்று சுழலும் ‘கோலங்கள்’ தொடர் உறவுகளின் மீது நாம் வைத்திருக்கும் மரியாதையை ஒரேயடியாக உடைத்து எறிகிறது. அது இன்றைக்கு தமிழகத்தின் நம்பர் ஒன் தொடர் என்று அறியும்போது உண்மையிலேயே அதிர்ச்சியாய் இருக்கிறது.

கோலங்கள் என்றல்ல கணவருக்காக, மலர்கள், கஸ்தூரி என்று எந்த தொடரை எடுத்தாலும் இதே நிலமை தான். அலுவலகத்தில் வேலை செய்யும் கணவன் மீது வீணான சந்தேகத்தைக் கூட இந்த தொடர்கள் பலவேளைகளில் கொளுத்தி விடுகின்றன என்பதே நெஞ்சைச் சுடும் உண்மை.

தொடர்களை எடுக்கும் இயக்குனர்களுக்கு ஒரு தரமான தொடரைத் தரவேண்டும், சமுதாயத்துக்குத் தேவையான செய்திகளைச் சொல்லவேண்டும் என்னும் அடிப்படை மனித சிந்தனை இல்லாமல் போவது தான் இப்படிப்பட்ட தரமிழந்த தொடர்கள் வருவதற்கான முக்கிய காரணம். அவர்களுடைய எண்ணமெல்லாம் பார்க்கும் தாய்மார்களையெல்லாம் உச்சுக் கொட்ட வைக்கவேண்டும் என்பதும், பரிதாபப்பட வைக்க வேண்டும் என்பதும் தான். அதன் தாக்கம் வீடுகளில் எந்த அளவுக்கு விழுதிறக்குகிறது என்பதைப்பற்றிய அக்கறை அவர்களுக்கு அறவே இல்லை.

பெரிய திரையில் எப்போதேனும் இதே கருத்துடன் ஒரு திரைப்படம் வந்தால், ‘உயிர்’ திரைப்படம் போல, கொந்தளித்து எழும் ஊடகங்களும், அமைப்புகளும், பொதுமக்களும் சத்தமில்லாமல் நம்முடைய வாசலுக்குள் வந்து கலாச்சார மீறல் செய்யும் இந்த தொடர்களை ஆரத்தி எடுத்து வரவேற்பது ஏனென்பது எனக்கு விளங்கவே இல்லை. இருபது நாள் ஓடும் ஒரு திரைப்படத்துக்கே இந்த எதிர்ப்பு எனில் இரண்டு வருடங்கள் இழுத்தடித்து, சொல்ல வரும் சாக்கடைக் கருத்தை ஆர அமர சொல்லி விட்டுப், போகும் தொடர்களுக்கு எவ்வளவு பெரிய ஒரு எதிர்ப்பு எழுந்திருக்க வேண்டும் ! ஆனால் எழவில்லையே !

ஆபாசத் திரைப்படங்களோ, வன்முறைத் திரைப்படங்களோ சமுதாயத்தில் ஏற்படுத்தி விடாத தாக்கத்தை இந்த தொடர்கள் செய்து விட முடியும். நட்ட பின் ஒரு வருடம் வேர்களை மட்டுமே வளர்த்துக் கொள்ளும் மூங்கில் மரம் போல இந்த விஷ விதைகள் நம்முடைய சமுதாய மக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது. குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையேல் அறுவடை காலத்தில் அவதிப்பட்டே ஆக வேண்டும்

Advertisements

4 comments on “சீரியல் கில்லர்ஸ்

  1. You are 100% correct Xavier. Most of the tv seriels are like that…I watched one the seriel 2 days back. In that, a girl fill fall in love with guy who got married. The guy will not accept her love. So, she will kidnap him with the help of gundas and threat him that she will kill him, if he does not accept her love.

    Like

  2. Excellent one xavier……..Serial Killers unmayave killers than!! 9.’0 clock vettuku pona, mariyadhaye irukka mattengudhu….advertisement naduvulathan Dosai varuthu, adutha ad-ku chutney varuthu….ketta, Abi-yoda kashtam unakku enga puriyuthu-nnu namakku thittu vera!! Unmayave kathay ennanu yarukkum kadasi varaikum purayuthu!! Varaverkathakka karuthugal xavier….Ithu pola innum niraya karuthugal velivara asai padugirom xavier!!

    Like

  3. Pingback: ரொமாண்டிக் ராஸ்கல் வைரமுத்துவும், ராட்சஸன் இளையராஜாவும் « அலசல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s