கன்சல்டன்சிகளின் பிடியில் கணிணி பட்டதாரிகள்

சென்னையில் எந்தத் தெருவில் நுழைந்தாலும் ஒரு கணிணி மென்பொருள் நிறுவனத்தைப் பார்த்துவிட முடியும் எனுமளவுக்கு இன்று கணிணி மென்பொருள் துறை அதி வேக வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்தியாவிலேயே பெங்களூருக்கு அடுத்தபடியாக சென்னை கணிணி மென்பொருள் தயாரிப்பில் பந்தயக் குதிரையின் வேகத்துடன் முன்னிலையில் நிற்கிறது. கணிப்பொறி நிறுவனங்களில் வேலை பார்ப்பது இன்று சமூகத்தின் மரியாதைக்குரிய ஒரு தொழில் ஆகிவிட்டது. வேலையில் சேர்ந்த ஒரு சில ஆண்டுகளிலேயே சென்னையில் ஒரு பிளாட்டும், குறைந்த பட்சம் ஒரு ஹுண்டாய் சாண்ட்ரோ காரும் வாங்குமளவுக்கு சம்பளத்தை அள்ளித் தரும் நிறுவனங்கள் இவை என்பதால் இன்று கணிணி துறை நோக்கி படையெடுப்பதையே இளைஞர்கள் பலர் தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகக் குறித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிராமப்புறங்களிலும், உயர் கல்விகளைக் குறித்த திட்டமிடுதல் விழிப்புணர்வு இல்லாத சிறிய ஊர்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கணிணி மென்பொருள் துறையில் வேலை வாங்கும் வித்தை எளிதில் கைவருவதில்லை. அவர்களில் பலருக்கு கணிணி மென்பொருள் துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை. கணிப்பொறியாளர்கள் என்பவர்கள் கண்ணாடி டை சகிதமாய் உடைந்த தமிழை ஆங்கிலத்தால் நிரப்பி பேசிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் என்று திரைப்படம் வார்த்தெடுத்திருக்கும் பிம்பத்தையே உள்வாங்கிக் கொண்டு உலவிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். ஏதேனும் ஒரு கணிணி படிப்பை முடித்துவிட்டால் வேலை வீடு தேடி வந்துவிடும் என்னும் தவறான எண்ணத்துடன் கனவுகளை வளர்க்கிறார்கள் இவர்களில் பலர். உண்மையில் நிஜம் அது தானா ?

படித்து முடிக்கும் முன்பே வேலை வாங்கி விடுகின்ற கணிப்பொறிப் பட்டதாரிகளையும், படித்து வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் கணிப்பொறிப்பட்டதாரிகளையும் சென்னை நகரம் முழுக்க பார்க்க முடியும். ஒருவருக்கு மிகவும் இலகுவாக வாய்த்து விடுகின்ற கணிப்பொறி வேலை எப்படி இன்னொருவருக்கு பிரம்ம பிரயர்த்தனம் செய்தால் கூட கிடைக்காமல் போகிறது ? ஒருவர் பெரிய நிறுவனத்தில் சேர்ந்து உயர்ந்து கொண்டே இருக்க, இன்னொருவர் சிறு சிறு நிறுவனங்களிலேயே அடைபட்டுக் கிடப்பதற்கான காரணங்கள் என்ன ? கேள்விகளை உடைத்தால் கணிப்பொறி நிறுவனத்தைச் சுற்றியிருக்கின்ற வட்டங்களும் உடைபடத் துவங்கும்.

பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் கடைசியாண்டு படித்து வரும் மாணவ மாணவியருக்கு அவர்களுடைய கல்லூரியிலேயே சென்று தேர்வு நடத்தி வேலைக்கான அழைப்பிதழையும் கையோடு கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு கல்லூரி படிப்பு முடிந்ததும் ஒரு நல்ல ஐந்திலக்க சம்பளம் சர்வ நிச்சயம். ஆனால் எல்லா கல்லூரிகளிலும் இந்த ‘காம்பஸ் இண்டர்வியூ’ என்றழைக்கப்படும் வளாகத் தேர்வு நடப்பதில்லை. குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டும் தான். கிராமப்பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு பெரும்பாலும் கிடைப்பதில்லை.

ஏதேனும் ஒரு பிரபல கணிணி நிறுவனத்திலிருந்து புதியவர்கள் தேவை எனும் அழைப்பு வந்தால் குறைந்த பட்சம் பத்தாயிரம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். நிறுவனம் தேர்வு செய்வதோ பத்து பேரையோ, இருபது பேரையோ அல்லது அதிக பட்சம் சில நூறு ஆட்களையோ தான். சமீபத்தில் சென்னையின் முன்னணி நிறுவனமொன்றில் வேலைக்கான அழைப்பு விடுக்கப்பட்டபோது குவிந்த விண்ணப்பங்கள் முப்பதாயிரம் ! சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்த ‘ஜாப் ஃபெயர்’ என்று அழைக்கப்படும் ஆள் தேர்வுக்கு கணிப்பொறிச் சான்றிதழ்களுடன் வந்தவர்கள் சுமார் அறுபதாயிரம் பேர் !

இத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் கணிணி சான்றிதழ்களுடன் அலைந்து கொண்டிருக்கையில் அவர்களிலிருந்து தகுதியான ஒரு நபரைத் தேர்வு செய்வது என்பது பெரிய நிறுவனங்களுக்கு ஒரு மிகப்பெரிய தலைவலி. வேலை செய்யும் நேரத்துக்கு ஏற்ப டாலர் கணக்கில் சம்பாதிக்கும் அவர்கள் தங்களுடைய நேரத்தைச் செலவிடுவது என்பது ஒரு மிகப்பெரிய தொகையைச் செலவு செய்வது போல. அதிலும் வந்திருக்கும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து ஒரு ஐந்து பேரைத் தேர்வு செய்வதற்குள் எந்த தேவைக்காக ஆள் தேடினார்களோ அந்த தேவையே முடிந்து போயிருக்கும் ! இந்த சிக்கலைச் சமாளிக்கத் தோன்றியவை தான் கன்சல்டன்சிகள் !

சென்னையில் இன்று ஏராளம் கன்சல்டன்சிகள் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கின்றன. இவை கணிணி பொறியாளர்களுக்கு வேலை வாங்கித் தருவதன் மூலம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சம்பாதிக்கின்றன. எந்த பெரிய முதலீடும் தேவைப்படாமல், எந்த பெரிய திறமையும் இல்லாமல் மாதம் தோறும் பல இலட்சக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கும் இந்த நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன ?

முதலில் வேலை தேடியலையும் பட்டதாரிகளையோ, ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலை மாற்றம் தேடும் பொறியாளர்களையோ,  இந்த கன்சல்டன்சிகள் வளைத்துப் பிடிக்கின்றன. அதற்காகவே பல இணைய தளங்களையும் அவை இயக்குகின்றன. இவர்களுடைய தகவல்கள் கிடைத்ததும் அவற்றை தங்கள் தகவல் தளத்தின் கீழ் சேமித்துக் கொள்கின்றன. குறைந்த பட்சம் ஐயாயிரம் நபர்களுடைய தகவல்கள் தேவை  கன்சல்டன்சி ஒன்றை ஆரம்பிக்க.

ஒரு அலுவலகம் ஆரம்பித்தபின் இவர்கள் கணிணி மென்பொருள் நிறுவனங்களைச் சென்று சந்திக்கிறார்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் ஆட்களைத் தேர்வு செய்வதற்கென்றே ஒரு தனி பிரிவு இயங்கும். அவர்களிடம் சென்று தங்களிடம் நல்ல தரமான பட்டதாரிகள் இருப்பதாகவும் நிறுவனம் எதிர்பார்க்கும் தகுதி, திறமை, அனுபவம் அடிப்படையில் நபர்களை நேர்முகத் தேர்வுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் திறமையாகப் பேசுவார்கள். இவர்களுடைய பேச்சில் தொனிக்கும் நம்பகத் தன்மை பல நிறுவனங்களை மயக்கி விடும். சில வேளைகளில் நிறுவனங்களில் ஆள் தேர்வு பிரிவில் இருக்கும் சிலரிடம் ‘ரகசிய’ பேரம் பேசியும் சில கன்சல்டன்சிகள் நிறுவனங்களில் இணைந்து விடுகின்றன

கன்சல்டன்சிகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் நிறுவனங்கள் ஆட்கள் தேவைப்படும் போது செய்தித் தாள்களில் விளம்பரம் எதுவும் செய்யாமல் நேரடியாக இவர்களையே அணுகுகிறார்கள். இவர்களும் நிறுவனம் கேட்கும் தகுதி, அனுபவம் அடிப்படையில் தங்களிடம் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பரிசீலித்து அவர்களை முதலில் அழைப்பார்கள். அழைத்து ஒரு நேர்முகத் தேர்வை அவர்களே நடத்தி திறமையானவர்களில் சிலரை தேவைப்படும் நிறுவனத்துக்கு அனுப்பி வைப்பார்கள். நிறுவனத்துக்கு இப்போது இரண்டு கட்ட தேர்வு நேரமும், உழைப்பும் மிச்சம். ஒரு நபர் தேவையென்றால் கன்சல்டன்சிகள் ஐந்தோ, பத்தோ நபர்களை நேர்முகத் தேர்வுக்காய் அனுப்பி வைக்கிறது. அதில் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார் இந்த ஒப்பந்தம் பெரும்பாலும் மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கிறது.

ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்வது நிறுவனங்களுக்கு இன்னொரு வசதி. நபர் திறமையானவரா என்பதை கண்டறிவதற்காக அந்த ஒப்பந்த காலத்தைப் பயன்படுத்தலாம். நபர் திறமைசாலி இல்லையெனில் ஒப்பந்தம் முடிந்தவுடன் அவரை வேலையிலிருந்து நிறுத்தியும் விடலாம். இந்த ஒப்பந்ததாரர்கள் நிறுவனங்களின் பெயர் பட்டியலிலோ, ஊதிய பட்டியலிலோ, சலுகைப்பட்டியலிலோ எதிலும் இடம் பெறுவதில்லை. எனவே நிறுவனங்களுக்கு இவர்களை கழற்றி விடுதல் என்பது மிக மிக சுலபம். எந்த விதமான எதிர் வினைகளும் வருவதில்லை. நபர் தகுதியானவர் எனில், ஒப்பந்த காலத்துக்குப் பின் அந்த நிறுவனத்தின் நிரந்தர பணியாளராகி விடுகிறார். குறுகிய கால தேவைகளுக்காக பெரும்பாலும் நிறுவனங்கள் கன்சல்டன்சிகளை மட்டுமே நம்பியிருக்கின்றன.

ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டதும் கன்சல்டன்சி அந்த நிறுவனத்துடன் ஊதிய ஒப்பந்தம் இட்டுக் கொள்கிறது. நிறுவனம் அந்த நபருடைய ஒப்பந்த காலம் முடியும் வரை ஊதியத்தை ஊழியரிடம் வழங்காமல் கன்சல்டன்சியிடமே வழங்குகிறது. இந்த ஊதியத்தில் பெரும்பகுதியை கன்சல்டன்சி தனக்காய் ஒதுக்கி விட்டு மிகச் சிறிய ஒரு பகுதியை மட்டுமே ஊழியருக்கு வழங்குகிறது.  சில கன்சல்டன்சிகள் நிறுவனத்திடம் ஊழியரை ஒப்படைத்து விட்டு ஒரு பெரும் தொகையை அதற்குரிய கூலியாகப் பெற்றுக் கொள்கின்றன. ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளரை ஒரு நிறுவனத்துக்குத் தருகையில் இலட்சக் கணக்கான ரூபாய்கள் கூட கன்சல்டன்சிக்கு வழங்கப்படுவதுண்டு. சில கன்சல்டன்சிகள் வேலை வாங்கித் தந்தால் முதல் மாத சம்பளத்தை அதற்குரிய கூலியாக ஊழியரிடமிருந்து வசூலிக்கிறது.

சில கன்சல்டன்சிகள் நிறுவனங்களில் நேர்முகத் தேர்வு வாய்ப்பு வாங்கித் தருவதற்காக வேலை தேடி அலைபோரிடமிருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை வசூலிக்கின்றன. ( ஒரு இலட்சம் வரை வசூலிக்கும் கன்சல்டன்சிகள் சென்னையில் இருக்கின்றன ) நான்கைந்து மாதங்கள் வேலை தேடி அலைந்து எப்படியும் ஏதேனும் ஒரு வேலையில் சேரவேண்டும் என்று துடிக்கும் பலர் இந்த கன்சல்டன்சிகளிடம் காசைக் கொடுத்துக் காத்திருப்பதுண்டு.

ஒரு விதத்தில் சிறப்பாகச் செயல்படுவது போல தோன்றினாலும் இந்த கன்சல்டன்சிகளின் திரை மறைவுச் செயல்பாடுகளும், இந்த கன்சல்டன்சிகளால் வேலை தேடுவோருக்கு ஏற்படக்கூடிய இன்னல்களும் ஏராளம். வருமானத்துக்காக தகுதியற்ற பலரையும் இந்த கன்சல்டன்சிகள் போலியான அனுபவ சான்றிதழ்களுடன் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்து விடுகின்றன. நிறுவனங்களும் கன்சல்டன்சிகளை நம்பி அவர்களை தம்முடன் சேர்த்துக் கொள்கின்றன. பல போலி கன்சல்டன்சிகள் நிதி நிறுவனங்கள் போல திடீர் அலுவலகங்கள் ஆரம்பித்து அப்பாவி பட்டதாரிகளிடம் பணம் கறந்து விட்டு கம்பி நீட்டி விடுகின்றார்கள். இன்னும் சில நெஞ்சழுத்தக்கார கன்சல்டன்சிகள் பணம் வாங்கிவிட்டு இப்போ அப்போ என்று இழுத்தடிப்பார்கள். கடைசியில் இவர்களுடைய தயவில்லாமலேயே அவருக்கு வேலை கிடைத்து விடும்.

வேலை தேவை எனும் விண்ணப்பங்கள் எல்லாம் நிறுவனங்களிலிருந்து கன்சல்டன்சிகளுக்கே சென்றுவிடுவதால், கன்சல்டன்சி பற்றிய அறிவு இல்லாத பட்டதாரிகள் நிறுவனங்கள் அழைப்பு விடுக்கட்டும் என்று நிழல் யுத்தம் செய்ய நேர்கிறது. சரியான கன்சல்டன்சிகளை சரியான நேரத்தில் அணுகாத பல பட்டதாரிகள் எப்படி வேலை வாங்குவது ? எப்படி நிறுவனங்களை அணுகுவது என்று நிலைதடுமாறிப்போவது சகஜமே. இப்போது இணைய தளங்கள் பல வேலை வாங்கித் தரும் வேலையைச் செய்வதால் இந்த காத்திருப்பு இணைய தளத்தை உபயோகிக்கும் பட்டதாரிகளுக்கு மிகவும் குறைவு என்றே சொல்லலாம்.

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களிடம் சேரும் நபர் உண்மையிலேயே அனுபவஸ்தர் தானா ? அவர் சமர்ப்பித்திருக்கும் சான்றிதழ்கள் சரியானவை தானா என்பதை ஒரு மூன்றாவது நபர் மூலம் பரிசோதித்து அறிகிறது. இந்த உளவு நிறுவனங்களில் பணியாற்றுவோர் எல்லா நிறுவனங்களுடனும் தொடர்பில் இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட அலுவகத்தில் பணியாற்றியிருக்கிறாரா ? எப்போது பணியாற்றினார் ? அவர் திறமையானவர் தானா ? அவருடைய ஊதியம் எவ்வளவு ? அவருடைய பணி அனுபவங்கள் என்ன என்பதையெல்லாம் விலாவரியாக ஆராய்ந்து நிறுவனங்களுக்கு இந்த உளவு நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பிக்கின்றன. இந்த அறிக்கைகள் போலியாய் சேர்ந்த பலருடைய வேலைக்கு உடனடி வேட்டுகளை வைத்து விடுகின்றன.

கன்சல்டன்சிகளை நம்பும் நிறுவனங்கள் பல வேளைகளில் உளவுப் பிரிவின் மூலமாக விசாரணை ஏதும் நடத்துவதில்லை. இந்த நம்பிக்கையை முதலீடாகக் கொண்டு கன்சல்டன்சிகள் தகுதியற்றவர்களுக்கு முகமூடி அணிவித்து நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

சில பல குறைபாடுகள் கன்சல்டன்சிகளில் இருந்தாலும் நிறைகளைக் கருத்தில் கொண்டு பெரும்பாலும் கன்சல்டன்சிகளையே நம்புகின்றன நிறுவனங்கள். கன்சல்டன்சிகள் புற்றீசல் போல பெருகிவிட்டதால் அவர்களிடையேயும் வாய்ப்பு பிடிக்கும் போட்டி வலுத்து வருகிறது. புதிதாக வேலை தேடும் இளைஞர்கள் இந்த கன்சல்டன்சிகளைப் பற்றிய சரியான அறிவு பெற்றிருப்பது விரைவில் வேலை பெறுவதற்கு ஏதுவாக அமையும். கன்சல்டன்சிகளை தேர்ந்தெடுக்கையில் கவனம் செலுத்தாதவர்களுக்கு அதுவே வினையாக மாறிவிடுவதும் உண்டு. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு நம்பிக்கைக் கவசத்தை மனதில் கொண்டு பட்டதாரிகள் வேலைக் களத்தில் போரிடல் அவசியம்

இந்த வார தமிழோசை இணைப்பான, களஞ்சியம்  இதழில் வெளியான எனது கட்டுரை
 

Advertisements

3 comments on “கன்சல்டன்சிகளின் பிடியில் கணிணி பட்டதாரிகள்

  1. already i read your article. fine. keep it up. oneday you become a consultant on computer technology in the tamil journalism field. this is the right time to use it no hesitation. it is my view. in the future xavier is the name referred for computer related articles in the tamil field. please inform to indran about the article. ask his opinion. thanks lot.

    Like

  2. Machi, you have made things so clear which many people come across daily. Nice short story abt the consultancy. Appreciate it.

    Like

  3. Pingback: IT கம்பெனிகளின் திரை மறைவு வேலைகள் « அலசல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s