வாணியைத் தவிர அந்த வரவேற்பறையில் இன்னும் ஏழெட்டு பேர் இருந்தார்கள். மெயின்பிரேம் என்னும் கணிப்பொறி சார்ந்த நேர்முகத் தேர்வுக்காக எல்லோரும் பதட்டம் பூசிய முகத்தோடு காத்திருந்தார்கள்.
“நீங்க இண்டர்வியூவுக்கா வந்திருக்கீங்க ?” அருகிலிருந்த இளைஞனிடம் வாணி மெதுவாய்க் கேட்டாள்.
‘என்னங்க கேள்வி இது ? புதுசா ஐயர்ன் பண்ணின வெள்ளைச் சட்டை போட்டுட்டு வந்திருக்கேன். இண்டர்வியூ நடக்கிற ரூமுக்கு வெளியே காத்திருக்கேன். இண்டர்வியூவுக்கு வராம கிளிஜோசியம் பாக்கவா வந்திருக்கேன். குளிச்சிட்டிருக்கிறவனைப் பார்த்து குளிக்கிறியா ங்கற மாதிரி இருக்கே நீங்க கேக்கறது. ” ரொம்பநாள் பழக்கமானவன் போல சிரித்தான் அருண்.
‘இல்லே… கொஞ்சம் டென்சனா இருக்கு. அடுத்ததா என்னைத் தான் கூப்பிடுவாங்க. அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு’ அவள் புன்னகையோடு இழுத்தாள்.
‘கவலையே படாதீங்க. ரிலாக்ஸா இருங்க. அது தான் இண்டர்வியூவுக்கு ரொம்ப முக்கியம். நாம என்ன பண்றோம், என்ன படிச்சிருக்கோம்கிறதை விட எப்படி பிரசண்ட் பண்றோம்ங்கிறது தான் முக்கியம்’ அவன் சொன்னான்.
‘ஆமா… ஆனா எந்த மாதிரி கேள்வி கேப்பாங்கன்னு தெரியலையே… அதான் கொஞ்சம் பயமா இருக்கு’
‘அதுக்கெல்லாம் ஏன் கவலைப்படறீங்க ? மூணு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்களுக்கான இண்டர்வியூ இது. ஆனா எனக்கு ஒரு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் தான் இருக்கு. மிச்சம் எல்லாம் உல்டா தான். நானே கவலைப்படாம இருக்கேன்’ அவன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே மெதுவாய்ச் சொல்லி சிரித்தான்.
‘பயோடேட்டா வில தப்பான தகவல் கொடுத்திருக்கீங்களா ? கண்டு பிடிக்க மாட்டாங்களா ?.’
‘வேற என்ன பண்ண சொல்றீங்க ? புதுசா படிச்சு முடிச்சவங்களுக்கு வேலை எங்கேயும் இல்லை. எங்கே போனாலும் மூணு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் கேக்கறாங்க. யாரும் வேலை தராம எங்கிருந்து எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். அதான் படிச்சு முடிச்சப்பறம் வேலை தேடிட்டு இருந்த இரண்டு வருஷத்தையும் எக்ஸ்பீரியன்ஸ் ஆ மாத்திட்டேன்… அதனால தான் என்னை இண்டர்வியூவுக்கே கூப்பிட்டாங்க’ அவன் சிரித்தான்.
‘அது எல்லோரும் பண்றது தான். நான் கூட மெயின்ஃப்ரேம் படிக்கலை.. கொஞ்ச நாள் ஒரு கம்பெனி, இன்னும் கொஞ்ச நாள் இன்னொரு கம்பெனின்னு இரண்டு மூணு கம்பெனில வேலை பாத்தேன். அந்த அனுபவத்தை வெச்சு பெங்களூர்ல மூணு வருஷம் வேலை பார்த்தது போல காட்டியிருக்கேன். என்ன ஆவப் போகுதோ ?’ அவள் கொஞ்சம் பயந்துகொண்டே மறந்து சொன்னாள்.
‘சத்தமா சொல்லாதீங்க. எங்கேயாவது கேமரா வெச்சு பாத்திடப் போறாங்க’ அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள்.
“வாணி……உள்ளே போங்கம்மா… அடுத்தது நீங்க தான். உள்ளே போய் உட்காருங்க” அட்டண்டர் சொன்னான்.
வாணி உள்ளே போனாள். இரண்டு நிமிடக் காத்திருப்புக்குப் பின் அந்த பாதி வழுக்கைத் தலை மனிதர் கழுத்தில் ஒரு பணக்கார டையுடன் வந்தார்.
“குட்மார்ணிங் வாணி. ஐ ஆம் சாரி டு சே தாட் யூ ஆர் நாட் குவாலிபைட்” அமெரிக்காவிலிருந்து குளோனிங் செய்து இறக்கிய ஆங்கிலத்தில் அவர் சொல்ல வாணி கோபமானாள்.
“சார்….. நீங்க என்னை இன்னும் இண்டர்வியூவே பண்ணலையே சார். அதுக்குள்ள எப்படி வேலையில்லேன்னு சொல்றீங்க. ”
“கூல் டவுன் வாணி…. இண்டர்வியூ தான் முடிஞ்சுபோச்சே… அருண் தான் உன்னை இண்டர்வியூ பண்ணினவர்” அவர் சொல்லச் சொல்ல திகைத்துப் போய் அவமானத்தில் கூனிக் குறுகி வாணி வெளியேறினாள்.
வெளியே அருண் இன்னொரு இளைஞனிடம் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.
Good flow xavier, Finishing is awesome.
LikeLike