மென்பொறியாளர்களை மிரட்டும் மன அழுத்தம்.

( இந்த வார தமிழோசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

முழுவதும் குளிரூட்டப்பட்ட அலுவலகம், சோர்வை அகற்ற காண்டீன், மார்பளவு உயரமான சிறு சிறு தடுப்புச் சுவர்களுக்குள் சதாகாலமும் கணிப்பொறி முகத்தைப் பார்த்துக் கொண்டே நகரும் வாழ்க்கை இது தான் பெரும்பாலான கணிணி நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் உலகம். காலையில் அலுவலகத்தில் நுழைந்து நள்ளிரவு தாண்டும் வரை வேலை செய்வோர் இந்தத் துறையில் அதிகம். வெளி உலகிலிருந்து பெரும்பாலும் துண்டிக்கப்பட்டு கணிணிகளில் அடைகாக்கும் இவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தேவையானவற்றை, நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குள் செய்து தருவதற்காக தங்கள் பெரும்பாலான நேரத்தை அலுவலகங்கங்களிலேயே செலவிடுகிறார்கள். வெளிப்பார்வைக்கு பணம், புகழ், வசதியுடன் வாழும் இவர்களுடைய இன்னொரு பக்கம் வேதனை நிறைந்தது.

மென்பொருள் துறையிலிருக்கும் பலருக்கும் மன அழுத்த நோய் இருப்பதாகச் சொல்கின்றன பல்வேறு மருத்துவ ஆய்வுகள். முடிக்க வேண்டிய பணிகள், தொலை பேசி அழைப்புகள் என்று அலைந்து கொண்டிருக்கும் இவர்கள் பெரும்பாலும் தங்களுடைய மனதை ஓய்வெடுக்க வைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்குகிறார்கள். தங்கள் கனவில் கூட கணிணி வேலை வந்து பயமுறுத்துவதாக தன்னைச் சந்திக்க வந்த பொறியாளர்கள் பற்றிச் சொல்கிறார் சென்னையின் மனோதத்துவ மருத்துவர் ஒருவர்.

சதா காலமும் தங்கள் பணியைப்பற்றிய சிந்தனைகளையே மனதில் ஓடவிட்டுக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தங்களுடைய குடும்ப வாழ்க்கை இரண்டாம் பட்சமாகி விடுகிறது. காலையில் எழுவதிலிருந்து நள்ளிரவில் வீடு சேர்வது வரை என அலுவலகமே முக்கால் வாசி நேரத்தை எடுத்துக் கொள்வதால் இவர்கள் துயில்வதற்காகவே வீடுகளுக்குச் செல்லும் நிலமை. கணவனின் அன்பை எதிர்பார்த்து ஏமாறும் மனைவி, தாயின் அன்பை எதிர்பார்த்து ஏமாறும் குழந்தை என்று கணிணி நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் குடும்ப உறவுகள் விரிசலடைகின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்று கணிணி மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்வோரிடையே விவாகரத்து அதிகமாகி இருப்பதாகச் சொல்லியிருப்பதே வேலைக்கும், தனிவாழ்க்கைக்கும் இடையே நிகழ்கின்ற சமநிலையற்ற தடுமாற்ற வாழ்க்கைக்குச் சான்று எனக்கொள்ளலாம்.

கால்செண்டர்களில் பணிபுரிபவர்களின் நிலமை பல மடங்கு பரிதாபம். அவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளின் பகல் நேரத்தில் வேலை செய்யும் சூழல் எழும்போது முழுக்க முழுக்க இரவிலேயே பணிபுரிய நேர்கிறது. இதனால் அவர்களுடைய உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், சதா காலமும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்வதிலும், கோபத்தை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டு பணிவான குரலிலேயே பேசுவதிலும் மன அழுத்தத்தை அதி விரைவிலேயே சம்பாதித்து விடுகிறார்கள். இந்த நிறுவனங்களில் பெரும்பாலும் இளைஞர்களும், இளம் பெண்களும் மட்டுமே வேலை பார்ப்பதால் பாலியல் தவறுகள் தெரிந்தும், தெரியாமலும் நிகழ்வது வாடிக்கையாகி விட்டது. கால்செண்டர்களில் பணிபுரியும் இளைஞர்களும், இளம் பெண்களும் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதற்கு இந்த மன அழுத்தமே மிக முக்கியமான காரணமாகி விடுகிறது.

அமெரிக்கா போன்ற வெளி நாடுகளைப் பொறுத்தவரையில் அவர்கள் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரையே வேலை செய்கிறார்கள். அதுவும் வார இறுதியான வெள்ளிக் கிழமைகளில் மூன்று மணியோடு மூட்டை கட்டுகிறார்கள். சனி, ஞாயிறுகளில் அங்கே வேலை பார்ப்பது என்பது ஜனாதிபதியோடு தேநீர் சாப்பிடுவது போல அபூர்வமானது. எனவே அவர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதில்லை. அழுத்தம் எல்லாம் இந்திய தொழிலாளர்களுக்குத் தான். நாற்பது மணி நேர வேலையை இரண்டு நாட்களில் முடித்தாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்படுவது இந்திய அலுவலகங்களில் மட்டுமே. ஏதேனும் அமெரிக்க அலுவலகங்களில் வார இறுதிகளில் யாராவது வேலை பார்த்தால் அது நிச்சயம் ஏதேனும் இந்தியராகத் தான் இருக்கும் !

இந்திய அலுவலகங்களைப் பொறுத்தவரையில் இருக்கும் வாடிக்கையாளரைத் தக்கவைப்பதும், வேலையை சிறப்பாகவும், வேகமாகவும் முடித்து வாடிக்கையாளர்களைக் கவரவும் அதிகப்படியான உடல் உழைப்பை அவர்கள் செலவிடவேண்டியிருக்கிறது. அதிகமாய் வேலை செய்பவர்களுக்கு சிறப்பான பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் வழங்கப்படுவதால் ஊழியர்களும் தங்கள் வாழ்க்கை சுரண்டப்படுவதை உணராமல் இரவு பகலாக வேலை பார்க்கிறார்கள். பல அலுவலகங்களில் ஊழியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட விடுப்புகள் கூட தேவைப்படும்போது வழங்கப்படுவதில்லை. பல ஊழியர்கள் மடிக்கணிணியை வீடுகளுக்குக் கொண்டு சென்று வேலை செய்வதும், நள்ளிரவு, அதிகாலை என கால நேரம் இல்லாமல் வரும் அழைப்புகளுக்கு ஏற்ப வேலை முடித்துக் கொடுப்பதும் இங்கே வழக்கமான நிகழ்வுகள். அதிகப்படியான உழைப்பைச் செலுத்தியும் அங்கீகாரம் பெறாத ஊழியர்கள் அதிக மன அழுத்தத்தில் உழல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமன்றி அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க தனி குழுக்கள் இயங்குகின்றன. அவர்கள் விசைப்பலகையை எப்படி இயக்குவது, மெளஸை எப்படிப் பிடிப்பது, இருக்கையில் எப்படி உட்கார்வது, எப்படிப்பட்ட உடற்பயிற்சிகள் செய்யவேண்டும் போன்றவற்றை ஊழியர்களுக்கு விளக்கி ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துகின்றார்கள். இந்தியாவில் அப்படிப்பட்ட வசதிகள் இல்லை என்றே சொல்லலாம்.

ஜப்பானில் ஊழியர்களின் மன அழுத்தம் கோபம் முதலியவற்றைக் குறைக்க வித்தியாசமான வழிமுறையைக் கையாள்கிறார்கள். ஒரு தனியறையில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மேலதிகாரிகளின் படங்களைத் தொங்க விட்டிருக்கிறார்கள். ஊழியர்கள் அங்கே சென்று அந்த படங்களை நோக்கி கத்துவதும், குத்துவதும் என தங்கள் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள். வேடிக்கையாய் தோன்றினாலும் இது மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைப்பதாகவும் கோபத்தை மனதுக்குள் பூட்டி வைப்பதனால் வரும் நோய்களிலிருந்து தப்புவிப்பதாகவும் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கணிணி மென்பொருள் நிறுவனங்களில் இப்படி தங்கள் குடும்பத்தினரையே மறந்து வேலை செய்பவர்களில் பலர் மனநிலை பாதிக்கப்படுவதுமுண்டு. சென்னையில் இன்று பல பொறியாளர்கள் மனநிலை மருத்துவர்களின் ஆலோசனை மையங்களில் வருகை புரிவது இதற்காகத் தான். அதிகப்படியான வேலை நேரம், அளவுக்கு மீறிய வேலைப்பழு, மறுக்கப்படும் விடுமுறைகள், மிகக் குறுகிய கால வரையறை, குறைந்து போகும் ஓய்வு நேரம், பயண நேரம், மேலதிகாரிகளின் கண்காணிப்பு, இரவில் தூக்கமின்மை, ஒரே மாதிரியான வேலை போன்றவையெல்லாம் மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் காரணிகளில் சில. 24/7 என்ற கண்காணிப்புப் பிரிவிலும், உதவி பிரிவிலும் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க இயல்வதில்லை.

அதிகப்படியான வேலை மன உளைச்சலைத் தருவது போல பல உடல்ரீதியான பாதிப்புகளையும் தருகிறது. முதுகு வலி, கை வலி, இடுப்பு வலி , பார்வை குறைபாடு போன்ற நோய்கள் இந்த சூழலில் வெகு சகஜம். தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் அதிகப்படியான வேலை மன அழுத்தங்களைச் சந்திப்பதால் கருச்சிதைவுகள் கூட ஏற்படுவதுண்டு என்பது அதிர்ச்சியான தகவல். புள்ளி விவரக் கணக்கில் பெங்களூர் இதில் முன்னணியில் இருக்கிறது.

கணிணி மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் இருப்பதை அறிந்தே இருக்கின்றன. பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் இந்த மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக வருடம் ஓரிரு முறை ஏதாவது ஒரு கடலோர ஓய்வு விடுதிகளுக்குச் சென்று ஆடிப்பாடுவதும், அலுவலகத்துக்கு உள்ளேயே பல விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதும் என ஊழியர்களில் மனநிலையை கொஞ்சம் இலகுவாக்குகின்றன. அலுவலகங்களிலேயே இருக்கும் பூப்பந்து, மேஜைப்பந்து, கேரம் போன்ற விளையாட்டுகள் ஊழியர்களின் மன உளைச்சலை சில வேளைகளில் மட்டுப்படுத்துகின்றன. தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுவது மன அழுத்தத்தைப் பெருமளவு குறைக்கிறது. என்னதான் இருந்தாலும் இவை யானைப்பசிக்குக் கொடுக்கப்படும் சோளப்பொரி போல ஆகிவிடுகின்றன.

இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ‘பிரேக் துரூ’ என்றழைக்கப்படும் சில பயிற்சிகளையும் கொடுக்கின்றன. சுமார் நாற்பது ஐம்பது பேராக ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்கி இந்த பயிற்சியைப் பெறுகிறார்கள். மேன்ஃபோர்ட் அலையன்ஸ் போன்ற சர்வதேச தரத்தில் இயங்கும் பல குழுக்கள் இதற்கென்றே இருக்கின்றன. பயிற்சியில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு அவர்களுடைய முக்கியத்துவத்தையும், அவர்களுக்கும் சமூகத்துக்கும் உள்ள தொடர்பையும், குடும்பத்துக்கு அளிக்க வேண்டிய முன்னுரிமையையும் அவர்களுக்குப் புரிய வைத்து அவர்களை சமூகத்தோடு இணைக்கின்றன இந்த பயிற்சி நிறுவனங்கள். ஊழியர்களிடம் இருக்கும் ஈகோ போன்ற குணாதிசயங்களை விலக்கவும், தலைமைப்பண்பை வளர்க்கவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவுகின்றன. ஐம்பது பேர் கொண்ட குழுவுக்கு நான்கு நாள் பயிற்சி அளிக்க இந்த பயிற்சி நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளம் சுமார் ஆறு இலட்சம் !.

பொருளாதாரத்தில் மட்டுமே தன்னிறைவை எட்டுவது என்பது வாழ்வின் உன்னத நிலை இல்லை. மனதில் நிலைகொள்ளும் மகிழ்ச்சியின் அளவை வைத்தே வாழ்வின் வெற்றி கணக்கிடப்படுகிறது. சமூகத்துடனும், குடும்பத்துடனும் இயல்பான உறவை வைத்துக்கொள்ளாத நிலையில் எழும் ஆனந்தம் தற்காலிகமான சலுகைச் சாரல் போல வேர்களை நனைக்காமல் விலகிவிடும். கணிணி நிறுவனங்களில் பணிபுரிவோர் இதைக் கருத்தில் கொண்டு குடும்ப வாழ்க்கைக்கும் அலுவலக வாழ்க்கைக்கும் போதுமான முக்கியத்துவத்தை அளித்து சமூகத்தோடு இணைந்து வாழ்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு அத்தியாவசியமாகிறது.

10 comments on “மென்பொறியாளர்களை மிரட்டும் மன அழுத்தம்.

 1. உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கீங்க சேவி.. நான் இதை எல்லாம் என்னை சுற்றி இருப்பவர்களிடம் காண்பதுண்டு.. நான் இந்த மாதிரி மன அழுத்தங்களில் சிக்குவதில்லை..

  Like

 2. Anna,

  Your words are true. However, Software Engineers need to think about the same pressure is there for all other professions.When compared to Government Sector , SE’s package is good and lifestyle is good. They should be very carful in their peer pressure.

  Anyway I agree on all your words…

  Divakar Subramanian

  Like

 3. Hi Xavier

  I am new to this software industry and within this few days of my journey i am able to visualise the work pressure my peers are undergoing. Its really important that each software professional should consider this and try to avoid it.

  Rajalakshmi.

  Like

 4. Instead of speaking of negative, speak about the positive of the industry. Speak about the economical prospectus of the industry. On all economical struggles, there is always struggle. Do not expect all new industry will be like government office. A factory worker works 8 hours with all kind of struggle. If you do not want to do this job, the neighbor countrymen are willing to do it for cheap and without comment. Look at the economical growth we are seeing in the past few years and move on.

  The pressure is not only on the computer industry, it is all around I know people are leaving at 6AM and coming home at 8PM, what do they expect?

  This is my thought.

  Like

 5. Just think of a situation when you have all emenities you can think of but you do not posses the health you need to enjoy them… This is what is happening these days as far as S/w industry is concerned. I am in this industry for quite a long period of time, but work/life balance is a real challenge.

  When you realise that the American(anybody on the client-side) who works with you in the same project and the same kind of role or who actually gives his requirements, does very less than you and still gets more than you… The concerned is not even available for any queries or clarifications when needed. But you sit at work and put your heart and soul to make the project a successful one without any recognition(your hard work and share in the success not noticed well and recognised), it is then frustration creeps in. That is what is happening in atleast 80% of the s/w people’s life.
  You do not eat good food at proper times, later suffer from ailments arising due to thet. You have very less physical work, results in related health problems. You do not even get the time to stretch yourself. You do not get adequate time to look into your family/personal work. If you are married and live a nuclear family it is still worse.

  All industries have their own problems but IT industry surely has unique problems which shakes the nation’s key strengths: Youth & Culture.

  PS: Many S/w companies have started their units in China, but are facing real problems wrt quality and communication since skilled techies are very less when comapred to India.

  Like

 6. Is it a vicious circle? Are the S/W guys doing double the job that other industry workers are doing?. If so why? Are the companies adding so much work pressure on a few guys , instead of breaking down the job and distributing the renumeration?

  Why so many youngsters are loosing their health?

  I wonder..

  Like

 7. நன்றி ஜெயா. வருகைக்கும், கருத்துக்கும். மென்பொருள் நிறுவனங்களுக்கு இடையேயான “புராஜக்ட் பிடிக்கும்” போட்டியே இதன் முதன்மையான காரணம். போட்டியாளர்கள் பெருகி விட்டதால் குறைந்த லாபத்துக்கு வேலையைச் செய்து தருவேன் என ஒப்பந்தமிடக்கூடிய சூழலில் மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. கூடவே விரைவில் செய்து தருவேன் எனும் ஒப்பந்தங்கள். இவை இரண்டும் இளைஞர்களை அதிக நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்களில் வேலை 9 – 10 மணி நேர வேலை கட்டாயமாக்கப்பட்டுள்ளது ! 😦

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.