வலைத்தளங்களின் வளர்ச்சி

(இந்தவார தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை)


ஞானப் பழத்தைப் பெற முருகன் உலகத்தைச் சுற்றியதும், அம்மையப்பனே உலகம் வினாயகர் தாய் தந்தையரைச் சுற்றியதும் பழைய கதை. இன்று உலகமே  இணையத்துக்குள் தான் சுற்றிக்கொண்டிருக்கிறது.

ஆயிரம் பொய்சொல்லி தான் ஒரு கல்யாணம் செய்யவேண்டும் என்னும் பழமொழி இன்று வேடிக்கையாகி விட்டது. இணையத்தில் இயங்கும் பல்வேறு தளங்கள் (உதா. www.Shaadi.com ) மூலமாகத் தான் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பிடிக்கிறார்கள் இணைய வாசிகள். இணையத்தில் உரையாடி, மின்னஞ்சலில் புகைப்படங்கள் பரிமாறி திருமண தரகர்களின் வேலை இன்று இணையத்தினால் மூச்சுத்திணறுகிறது.

கால்கடுக்க ரயில்வே நிலையத்தில் நின்று டிக்கெட் வாங்கவேண்டிய சிரமமும் இன்ரைய இணையத் தலைமுறைக்கு இல்லை. அவர்கள் நிமிட நேரத்தில் வீட்டி உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டே தேவையான இருக்கைகளை முன்பதிவு செய்து வீட்டிலேயே சீட்டை பிரிண்ட் எடுத்துக் கொள்கிறார்கள். தொலைபேசிக் கட்டணம், கிரெடிட் கார்ட் கட்டணம், ஊரிலிருக்கும் வங்கிக்குப் பணம் அனுப்புதல் என தேவைகளெல்லாம் விரல்நுனியில் நிறைவேறிவிடுகின்றன.

இன்றைய இணைய வளர்ச்சியின் முக்கியமான பயன்களின் ஒன்றாக இந்த வலைத்தளங்களைக் குறிப்பிடலாம். முன்பெல்லாம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வலைத் தளங்களே இயங்கிக் கொண்டிருந்தன. அப்போதெல்லாம் வலைத்தளங்களை உருவாக்குவதற்கும், வலைத்தளங்களுக்குத் தேவையான இடங்களைப் பெறுவதற்கும், வலைத்தளங்களைப் பராமரிப்பதற்கும் நிறைய டாலர்கள் தேவைப்பட்டன.

பிளாக், வேர்ட்பிரஸ் போல இலவச வலைத்தளங்கள் அறிமுகமானபின் இணைய உலகின் வலைத்தளங்கள் நாள் தோறும் சில இலட்சங்கள் எனும் கணக்கில் எகிறிக் கொண்டிருக்கிறது.

இளம் எழுத்தாளர்களுக்கு இந்த வலைத்தளங்கள் பயிற்சிக் களங்களாக இருக்கின்றன, எழுத்தாளர்களுக்கு உலகளாவிய ஒரு அறிமுகம் கிடைப்பதற்கும் இவை வாய்ப்பாக அமைந்து விடுகின்றன. பல்வேறு காரணங்களால் வெகுஜன இதழ்களின் அங்கீகாரம் கிடைக்காத பல சிறந்த எழுத்தாளர்கள் இன்று தங்களுக்கென்று ஒரு வலைத்தளத்தை வைத்துக் கொண்டு சுதந்திரமாக எழுதி வருகின்றனர்.

அச்சு ஊடகங்களில் எழுதாதவர்களுக்கானதல்ல இந்த இணையம். உலகளாவிய கணக்கில் பிரபலமான ஏராளம் எழுத்தாளர்கள் வலைத்தளங்கள் அமைத்திருக்கிறார்கள். ஏராளமான பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் தகவல் தளங்கள் அமைத்திருக்கின்றார்கள். இவை விரைவாய் செய்திகள் பரவ வேண்டும் என்னும் எண்ணத்திலும், எல்லா தகவல்களையும் ஒரே முகவரியின் கீழ் இணைத்து விடும் வசதிக்காகவும் அமைகின்றன.

அறிவுப் பரவல் இந்த வலைத்தளங்கள் மூலம் பெருகி வருகின்றன என்பது ஒரு ஆனந்தமான செய்தி. தாங்கள் கற்றுக் கொள்ளும் செய்திகளை வலையேற்றி மற்ற வலைத்தளப் பயன்பாட்டாளர்களின் பார்வைக்கு வைப்பதும் அவர்களுடைய கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதும் என அறிவு விரிவடைய இந்த வலைப்பதிவுகள் உறுதுணையாய் இருக்கின்றன. அரசியல், சினிமா, ஆன்மீகம், இலக்கியம், நகைச்சுவை, கல்வி என பல தலைப்புகளில் இயங்கும் இந்த தளங்களை சிறந்த தகவல் பரிமாற்றத் தளமாகக் கொள்ளலாம்.

இந்த வலைத்தளங்கள் இலவசமாகவும், விரைவான எளிய வடிவமைப்பு வசதியுடனும் இருப்பதே அதன் பலம் மற்றும் பலவீனமாகி விடுகிறது. பல வலைத்தளங்கள் உருவாவதை பலம் என்றும், தேவையற்ற வலைத்தளங்கள் உருவாவதை பலவீனம் என்றும் பயன்பாட்டாளர்கள் அறிவார்கள். உலகின் எந்த பாகத்திலிருந்தும் இந்த தளங்களை இயக்கவோ, கண்காணிக்கவோ முடியும் என்னும் வசதியினாலும், தங்களுக்கென்று ஒரு தனி இடம் (சர்வர்) தேவையில்லை என்பதாலும் இந்த தளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

பல வலைப்பதிவுகள் ஒரு பத்திரிகை போல கட்டமைப்புடனும், தரத்துடனும் தொடர்ந்து இயங்குகின்றன. இந்த தனி நபர் தளங்களில் வரும் தகவல்களை தகவல் திரட்டிகள் தொகுத்து வெளியிடுவதால் பல நல்ல இணைய தளங்கள் புதிய புதிய வாசகர்களைச் சென்றடைகிறது. தமிழ்த் தளங்களின் பதிவுகளைத் தொகுத்தளிக்க தேன்கூடு, தமிழ்மணம் போன்ற பல தளங்கள் பயன்பாட்டில் உள்ளன.

சமுதாயத்தில் நிகழும் சண்டைகளும், சச்சரவுகளும், பிரிவினைகளும் இணையத்திலும் நிகழ்வது தான் வருத்தமான செய்தி. வலைத்தளங்களை ஆரம்பித்துக் கொண்டு தங்கள் ஜாதி வெறியையோ, மொழி வெறியையோ வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் இங்கே ஏராளம். உடனுக்குடன் கிடைக்கும் விமர்சனங்களும், பாராட்டுகளும், ‘தூண்டிவிடும் பேச்சுகளும்’ இந்த வலைத்தளங்களின் வேகத்தைத் தூண்டி விடுகின்றன.

பாலியல் தகவல்களையும், படங்களையும் பயன்படுத்தி தங்கள் தளங்களைப் பிரபலப்படுத்தும் குறுக்கு வழிகளையும் பல பதிவாளர்கள் பின்பற்றுகின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் வலைத்தளங்களை வைத்து பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் குதிப்பவர்களே.

வலைத்தளங்களில் விளம்பரங்கள் வைத்து காசு பார்க்கும் கலையை கூகிள்விளம்பரம் போன்றவை கற்றுத்தருகின்றன. வலைத்தளங்களுக்கு வருபவர்கள் இந்த விளம்பரங்களையும் ‘கிளிக்கினால்’ வலைத்தள உரிமையாளருக்கு காசு கிடைக்கிறது. கிளிக்குபவர்கள் அந்த தளங்களுக்குச் சென்று ஏதேனும் பொருட்கள் வாங்கினால் வாங்கும் பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப இந்த வலைத்தள உரிமையாளருக்கு வருமானம் வருகிறது. கிளிக்-டு-டொனேட் என்னும் விண்ணப்பங்கள் பல தளங்களில் காணக்கிடைக்கின்றன, இவை பெரும்பாலும் அனாதை இல்லங்கள், ஆதரவற்றோர் நிதி போன்றவற்றுக்காய் வலையேந்துகின்றன.

பே-பர்-பிளாக் இப்போது பிரபலமாகி வருகிறது. இதன்மூலம் தளங்களில் எழுதுபவர் தன்னுடைய செய்தியில் வரும் தகவலை ஒத்த விளம்பர சுட்டி ஒன்றையேனும் தன்னுடைய பதிவுகள் ஒவ்வொன்றிலும் அனுமதிக்க வேண்டும். தளத்துக்கு வருகை தருபவர் அதை ஒத்த வேறு தகவல்களை அறிந்து கொள்ளும் விருப்பத்துடன் அந்த சுட்டிகளை இயக்கும் போது அதற்காக ஒரு சிறு தொகை பிளாக் வைத்திருப்பவருக்குக் கிடைக்கிறது.

இதனால் சம்பாதிக்கும் நோக்குடையவர்கள் எப்படியேனும் வாசகர்களைக் கவர்ந்திழுப்பதற்காக பரபரப்புத் தகவல்களையோ, கவர்ச்சிகரமான செய்திகளையோ தவறாமல் தங்கள் தளங்களில் தொடர்ந்து அளிக்கிறார்கள்.

வலைத்தளங்களின் பூர்வீகத்தை ஐ.பி முகவரி மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதால் சிலர் நிரந்தரமானவே வேறு வேறு ஐ.பி களிலிருந்து வேறு வேறு பெயர்களில் வலைத்தளங்கள் நடத்துகிறார்கள். பெரும்பாலும் உண்மையான முகவரியிலிருந்து வருபவை போலித்தனமாகவும், போலியான முகவரியிலிருந்து வருபவை எழுத்தாளர்களின் உண்மை முகத்தைப் பிரதிபலிப்பனவாகவும் அமைந்து விடுகின்றன.

ஒரு வலைத்தளத்தில் மற்ற வலைத்தளங்களின் முகவரியை இணைக்கும் வசதியும் இருப்பதனால் நிறைய வலைத்தளங்கள், ஒத்த சிந்தனையுடைய அல்லது அவர்களுக்குப் பிடித்தமான வலைத்தளங்களோடு ஒரு இணைப்பு வைத்துக் கொள்கின்றன. இது இணைய தளங்களுக்கிடையே ஒரு மின் கைகுலுக்கலாய் மாறி பரந்து பட்ட சில நட்பு வட்டாரங்களை உருவாக்குகின்றன.

1994 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிளாக் தளங்கள் முதலில் ஒரு இணைய டைரிபோல பலர் தங்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளைக் குறித்து வைப்பதற்காகவே பயன்பட்டது. ஜாண் பர்கர் என்பவரால் 1997 ல் வெப்பிளாக் என்று பெயரிடப்பட்டு பீட்டர் மெர்கோல்ஸ் என்பவரால் 1999ல் பிளாக் என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே நிரந்தரப் பெயராகி விட்டது.

ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆயிருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இந்த தளங்களின் வளர்ச்சி பிரமிப்பூட்டும் வகையில் இருக்கிறது.
வீடியோ படங்களை இயக்கும் தளங்கள், தரமான புகைப்படங்களை இணைக்கும் தளங்கள் என பல்வேறு வகையில் இவை தரம்பிரிக்கப்படுகின்றன.

கைபேசி மூலமாகவும் இன்று வலைத்தளங்கள் இயக்கப்படுகின்றன, அவை மொபிளாக் என அழைக்கப்படுகின்றன.

உலகெங்கும் இந்த தளங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அவற்றிலுள்ள செய்திகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தர பிளாக் டிக்கர், ஃபீட்ஸ்டெர், டெக்னோரதி போன்ற தேடல் தளங்கள் இயங்குகின்றன.

டெக்னோரதி, அலெக்ஸா இண்டர்நெட் போன்ற தளங்கள் உலகின் பிரசித்தி பெற்ற தளங்களை வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கையை வைத்தும், அவர்கள் வாசிக்கும் பக்கங்களை வைத்தும் கணக்கிடுகிறது. ஷியூ ஜிஞ்செலி எனும் சீன வலைத்தளம் சுமார் ஐந்து கோடி வாசகர்களை இழுத்து முதலிடத்தில் இருக்கிறது.

தணிக்கைக் குழு இல்லாத இந்த சுதந்திர வலைப்பதிவுகளில் பாலியல் சம்பந்தமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில தளங்கள் உண்மையான அக்கறையுடன் தகவல்களைச் சொன்னாலும், பல தளங்கள் வெறுமனே சிற்றின்பச் சின்னமாகவே திகழ்கின்றன. சொந்த வலைப்பதிவுகள் தானே என்று படு சுதந்திரமாக சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் தகவல்களைப் பதிப்பிப்பவர்களுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கின்றன உலகளாவிய சில நிகழ்வுகள்.

சிங்கப்பூர் அரசு முஸ்லிம் விரோத சிந்தனைகளைத் தங்கள் வலைத்தளங்களில் எழுதி வந்த இருவரை சிறையில் அடைத்திருக்கிறது. பிரிட்டனில் அரசியல் வாதி ஒருவரை ‘நாசி’ என்று வர்ணனை செய்திருந்த ஒரு கல்லூரிப் பேராசிரியர் வழக்கைச் சந்தித்து பல இலட்சம் ரூபாய்களை அபராதம் செலுத்தவேண்டி வந்தது. மார்க் கியூபன் என்பவர் என்.பி.ஏ விளையாட்டு அதிகாரிகளை தரக்குறைவாக தன்னுடைய தளத்தில் விமர்சித்திருந்ததற்காக சமீபத்தில் அபராதம் செலுத்தினார்.

எலென் எனும் விமான பணிப்பெண், தன்னுடைய சீருடையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிட்டதற்காக வேலையை இழந்திருக்கிறார். இந்தியாவில் கவ்ரவ் சாப்னிஷ் என்னும் ஐ.பி.எம் பொறியாளர் ஒருவர் ஐ.ஐ.பி.எம் பற்றி தவறான தகவல்களை தன்னுடைய தளத்தில் வெளியிட்டதனால் வேலையை இழந்தார்.

ஆங்காங்கே இதுபோன்ற தனிநபர் விரோத, சமுதாய சமநிலை தகர்க்கும் மனப்போக்குடைய தளங்கள் மீது சட்டம் பாய்ந்தாலும் ஏராளமான தளங்கள் எழுத்துச் சுதந்திரம் என்னும் பெயரில் அவதூறு வினியோகித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இவை வலைத்தளங்களா இல்லை கொலைக்களங்களா என்ற சந்தேகம் நிசமான அக்கறையுடன் தளங்கள் அமைத்திருப்போருக்கு எழுவது இயல்பே.

www.blogger.com, www.wordpress.com போன்ற இலவச தளங்கள் தரும் வலைகள் இன்று மிகவும் பிரசித்தம். சமீபத்திய ஆய்வு படி சுமார் எழுபது மில்லியன் வலைத் தளங்கள் இயங்குகின்றன.

பல வடிவமைக்கப்பட்ட இணைய தளங்களுடன் பிளாக் எனப்படும் தனி நபர் தளங்கள் போட்டு போட்டுக்கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றன. முக்கியமான நூறு வலைத்தளங்களை எடுத்துக் கொண்டால் அதில் 10 முதல் 20 சதவீதம் வரை பிளாக்கள் இடம்பிடித்திருக்கின்றன. மொழிவாரியாக பிளாக்களை வரிசைப்படுத்தினால் ஆங்கிலம், ஜப்பானிய, சீன மொழிகள் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன.

கிரெடிட் கார்ட் வேண்டுமா என்று தொலை பேசியில் தொல்லை செய்யும் அழைப்புகளைப் போலவே, இந்த தளங்களிலும் ஸ்பாம் எனப்படும் விளம்பர இடைச்சொருகல்கள் எங்கிருந்தேனும் வந்து நுழைந்து வெறுப்பேற்றுகின்றன. சுமார் எழுபது சதவீதம் வருகைகள் இந்த தேவையற்ற தளங்களிலிருந்தே வருகின்றன. எனவே இப்போதெல்லாம் அவற்றைத் தடுப்பதற்கான வழி முறைகளுடன் தான் தளங்கள் உருவாகின்றன.

தினசரி சுமார் ஒரு இலட்சம் தளங்கள் உருவாகின்றன என்கிறது டெக்னோரதி ஆய்வு. (சுமார் ஒன்றே முக்கால் இலட்சம் என்கிறது சி.என்.என் ஐ.பி. என் தகவல் ஒன்று ) இன்னும் சொல்லப்போனால் ஒரு வினாடிக்கு ஒரு வலைத்தளம் என்னும் கணக்கை விட அதிகமான எண்ணிக்கையில் தளங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சுமார் பதினைந்து இலட்சம் பதிவுகள் தினமும் அரங்கேறுகின்றன. உருவாகும் பாதி வலைத்தளங்கள் வெறுமனே இருந்தாலும் மீதி வலைத்தளங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதே ஒரு ஆச்சரியச் செய்தி தான்.

நன்மைக்கும், தீமைக்குமிடையே கழைக்கூத்தாடியின் கவனத்துடன் நடந்துகொண்டிருக்கிறது மனித வாழ்க்கை. இது இணைய வாழ்க்கைக்கும் விதிவிலக்கல்ல. மனிதனின் அறிவு வளர்ச்சியின் கனிகளையும், மன வளர்ச்சியின் கனிகளையும் இணையம் அறுவடை செய்யும் அதே வேளையில், மனித பலவீனங்களின் வெளிப்பாடுகளையும் அது வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. அன்னம் ஆவதும், காகம் ஆவதும் பயன்பாட்டாளர்களின் தேடலைப் பொறுத்தது. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.

Advertisements

3 comments on “வலைத்தளங்களின் வளர்ச்சி

 1. Migavum payanulla oru thoguppaga irukku xavier…..valaithalangal patrina migasirantha oru parvai. Romba elimaya, puriyum vagayila solli irukinga….ithai pondru niraya puthiya thagavalgalai, ethirparkirom!! Vazhthugal!!

  Like

 2. Anbu Xavier,

  Idhu nijamagave neraya thagavalgalai ulladaki , migavum ubayogamana thagavalgali kondullathu. Indraya kalaootathin kattayam inyam enbathai kundrin mel etta vilakku pol solli yerikireergal . Yeppadi manidta kulam nanmaikum , theemaikum idaye sikki thavikiratho athuyum , ekalakatathil , naam ena seiya vendum enbathyum solluvatthil pudumai pugunthulathu.

  Edhai pol melum pala pudhia thagavalgal vara vazthukal

  Anbudan
  Amal

  Like

 3. You explained the plus and minus of the internet. As you told annam or kagam? This is the only differentiating factor that decides if Internet is best or worst..And obviously it is left to people choice..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s