புன்னகை தேவதை

எத்தனையோ விதமாய்
என்னைச் சுற்றிலும்
மனிதர்கள்.

பலரின்
புன்னகைக் கிடங்குகள்
பூப்பதை நிறுத்தினாலும்,
உதட்டுச் சந்தை
அதை
வினியோகிக்க மறக்காது.

சிலரோ
மூடிவைத்த சீசாவுக்குள்
மூச்சு முட்ட
பூத்துக் குலுங்குவார்கள்.

மிதமாய் பூத்து
அதை
இதமாய் தருபவரும் உண்டு.

பூக்காதவர்கள்
இருக்க இயலாது,
ஆனால் என்ன ?
சிலர்
வசந்த காலத்தில் மட்டுமே
வருவேன் என்கிறார்கள்.

சிலர்
பனியில் மட்டுமே
பூப்பேன் என்கிறார்கள்.

இன்னும் சிலர்
வெயில் வரட்டும்
பூக்களை விளைவிக்கிறேன்
என்கிறார்கள்.

வாடாமல்லியாய்
நிலைப்பதும்,
பத்துமப் பூவாய்
பட்டென்று ஓய்வதும்,

ரோஜாவாய் ராஜ்ஜியம் ஆள்வதும்,
கள்ளியாய்
தூரமாய் பூப்பதும்
செடிகளின்
சம்மதத்தைப் பொறுத்தது.

ஏதேனும்
ஓர் பூ கிடைக்கும் வரை
செடிச் கடைகளை
தேடித் திரியும்
தேனீயாய் நான்.

தேனீக்கும் எனக்கும்
ஒரே ஒரு
சின்ன வித்தியாசம்.

தேனீக்கள்
ஆதாயத்துகாய்
ஆழமாய் குழி தோண்டும்
அசலூர்க்காரன்.

நான்
பூக்களை பூக்களால்
பறிக்க நினைக்கும்
பண்டமாற்றுக் காரன்.

Advertisements

அன்னை மனம்

 

அன்னை சொல்கிறார்.

பட்டினியின் எல்லையை
நம்மில் பலர்
கண்டிருக்கமாட்டோம்.

பசியின் கண்ணீரோடு
நம் பலரின் கண்களுக்கு
பரிச்சயம் இருக்காது.

உங்கள் பணி வீதியில் கிடக்கிறது.
நீங்களோ
வானம் பார்த்து நடக்கிறீர்கள்.

நான் பார்த்தேன்,

ஒருமுறை
அழுக்கு வீதியின்
ஓரத்தில்
ஓர் ஏழைச்சிறுமியைக் கண்டேன்.

அவள் கண்களில்
பட்டினியின் பரிதாபப் பார்வை
ஆயிரம் கண்களோடு
விழித்துக் கிடந்தது.

வாழ்வின்
முதல் பக்கத்தில் நிற்கும் சிறுமி.
வலியில்
கடைசிக் கட்டத்தையும்
தோளில் சுமக்கும் துயரம்
இதயத்தைத் தாக்க
ரொட்டி ஒன்றை கொடுத்தேன்.

அந்தச் சிறுமி,
அதை
வேக வேகமாய் வாங்கி
மெல்ல மெல்ல
தின்னத் துவங்கினாள்.

அவள் கண்கள் முழுதும்
ஓர்
பேரரசைப் பிடித்த
சக்கரவர்த்தியின் சந்தோசம்.

அவளை அரவணைத்துக் கொண்டே
நான் கேட்டேன்,
ரொட்டியை
விரைவாய் தின்றால்
விரைவிலேயே பசி போய் விடுமே ?

சிறுமி
கலவரத்துடன் பதிலளித்தாள்.

ரொட்டி தீர்ந்து விட்டால்
மீண்டும் பசிக்குமோ
என
பயமாய் இருக்கிறது.

– ‘அன்னை’ நூலிலிருந்து

தலைமுறை எறும்புகள்

 

வரிசை பிறழாமல்
நகரும் எறும்புகளின்
வாசனைப் பாதையை
ஆள்காட்டி விரல்கள்
நறுக்கிச் சிரிக்கும்.

வரிசை தெரியாமல்
முட்டி மோதி தெறிக்கும்
எறும்புகளின்
பதட்டக் கணங்களை
வேடிக்கை விழிகள் ரசிக்கும்.

என்
சிறுவயது விளையாட்டு
இன்று என் மகளுக்கு.
எனக்கு முன்
என் தந்தைக்கும் இருந்திருக்கலாம்.

தலைமுறை
தாண்டியும் மாறவேயில்லை
எறும்புகளுக்கு
வரிசைப் பிரியமும்
மனிதர்களுக்கு
வரிசை எரிச்சலும்.

இணையத்தில் எனது நூல்கள்

 

சமீபத்தில் வெளியான எனது இரண்டு நூல்களையும் ( கி.மு – விவிலியக் கதைகள் மற்றும் அன்னை – தெரசாவின் வாழ்க்கை கவிதை நடையில் ) இணையத்தில் வாங்க விரும்புபவர்களுக்கு…

http://www.viruba.com/atotalbooks.aspx?id=482

அருவி வெளியீடு ( தோழமை )
5 D பொன்னம்பலம் சாலை,
கே.கே நகர், சென்னை 78

09444302967

சாலை : பயணிக்கவா ? மரணிக்கவா ?

( இந்த வார தமிழ் ஓசை நாளிதழின் இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை.

ஒரு அமெரிக்கரும், ஒரு இங்கிலாந்து நாட்டவரும், ஒரு இந்தியரும் பேசிக்கொண்டார்கள். அமெரிக்கர் சொன்னார், எங்கள் நாட்டில் வாகனங்கள் வலது புறமாகச் செல்லும். இங்கிலாந்துக் காரர் சொன்னார், எங்கள் ஊரில் இடது புறமாகச் செல்லும். இந்தியர் கடைசியாக சிரித்துக் கொண்டே சொன்னார், எங்கள் ஊரில் இடைவெளி இருக்குமிடமெல்லாம் செல்லும்.

சாலைப்பயணம் என்பது மரணத்தை முன்னிருக்கையில் அமரவைத்துச் செல்வது போலாகிவிட்டது இப்போது. வாகன எமன் எப்போது வந்து உயிரை இழுத்துச் செல்வான் என்று அறியமுடியாத சூழல். எப்போதும் மரணம் நிகழலாம் என்னும் நிலையில் நிகழ்கின்றன இன்றைய சாலைப் பயணங்கள்.

இந்திய சாலைகளில் மட்டுமே சுமார் மூன்று இலட்சம் விபத்துகள் வருடம் தோறும் நிகழ்கின்றன. எண்பதாயிரம் உயிர்களைக் கொல்லும் இந்த சாலை விபத்துகள் மூலம் ஆண்டுக்கு மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கிறது. சாலைகளைப் பயன்படுத்துவோரின் அலட்சியமே தொன்னூறு விழுக்காடு விபத்துகளுக்குக் காரணமாகிறது என்று இந்தியாவிலும், உலக அளவிலும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மஞ்சள் விளக்கு என்பது வேகத்தைக் குறைப்பதற்கான எச்சரிக்கை விளக்கு என்பதற்குப் பதிலாக வேகத்தைக் கூட்டுவதற்கான எச்சரிக்கை விளக்காகத் தான் சென்னை வாசிகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மஞ்சள் விளக்கு வந்தவுடன் காரை நிறுத்தினால் பின்னால் வருபவன் அடுத்த சிக்னல் வரும் வரை திட்டித் தீர்ப்பான். அல்லது மூன்று இருசக்கர வாகனங்களும், இரண்டு ஆட்டோ க்களும் நம்முடைய காரை முத்தமிடும்.

சென்னையில் லேன் இருப்பதும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதும் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். இரயில்வே கிராசிங் என்றால் இருசக்கர வாகனத்தை சாய்த்து நுழைப்பது எழுதப்படாத தேசியச் சட்டமாகிவிட்டது.

ஆட்டோ க்கள் என்றால் பாம்பு போல வளைந்து ஓட வேண்டும் என்பதும், தண்ணி லாரி எனில் சோகிப் அக்தரின் வேகப் பந்து போல செல்ல வேண்டும் என்பதும், இரு சக்கர வாகனங்கள் எனில் கோடிட்ட இடங்களை நிரப்புவது போல செல்லவேண்டும் என்பதும் தான் இன்றைய சென்னை போக்குவரத்து விதிகள். இந்த விதிகளின் படி செயல்படவில்லையெனில் வசவும், புதுசா ஓட்டறான் போல என்னும் நக்கல் பேச்சுகளும் தான் பரிசு.

உலகின் எண்பது சதவீதம் வாகனங்கள் வளர்ந்த நாடுகளிடம் இருக்கின்றன. ஆனால் எண்பது சதவீதம் விபத்துகள் வளரும் நாடுகளில் தான் நிகழ்கின்றன என்கிறது ஆய்வு ஒன்று. காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள சீரான போக்குவரத்து விதிமுறைகளும், அதை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்படும் பாரபட்சமற்ற சட்ட ஒழுங்குகளும் தான்.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சாலை விதி முறைகளை மீறுவோர் பாரபட்சமின்றி தண்டனை பெறுகிறார்கள். குறிப்பிடப்பட்டுள்ள வேகத்துக்கு அதிகமாக வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அபராதம் கட்டியே ஆக வேண்டும். விஸ்கான்சின் மாநிலத்திலுள்ள மில்வாக்கி யில் அதிக வேகத்தில் ஓட்டிய ஒரு உயரதிகாரிக்கு போக்குவரத்துக் காவலர் அபராதம் விதித்த நிகழ்வு ஜர்னல் செண்டினல் பத்திரிகையில் வெளியானது.

ஓட்டும் வேகத்துக்கு ஏற்ப அபராதத் தொகை அதிகமாகும். எத்தனை தடவை வேகமாய் ஓட்டுகிறோம் என்பதற்கு ஏற்பவும் அபராதம் அதிகரிக்கும். பள்ளிக்கூடம் இருக்கும் பகுதிகளில் வேகமாகக் காரை ஓட்டினாலோ, சாலைப் பணி நடக்கும் இடங்களில் வேகமாக காரை ஓட்டினாலோ பல மடங்கு அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அபராதம் கொடுக்க வரும் காவல் துறையினரை லஞ்சம் கொடுத்தும் மடக்க முடியாது.

வாகனங்களில் குழந்தைகளுக்கான தனிப்பட்ட இருக்கைகள் வார்ப்பட்டைகளோடு இருக்கின்றன. அங்கே அந்த இருக்கைகளில் தான் குழந்தைகளை அமர வைக்க வேண்டும், இல்லையேல் கடுமையான அபராதம் கட்ட வேண்டியது தான்.

குறிப்பிட்ட வரிசையில் பயணிப்பவர்கள் சிக்னல் செய்யாமல் அடுத்த வரிசைக்குச் செல்வதோ, அல்லது குறுக்கும் நெடுக்குமாக ஓட்டுவதோ அமெரிக்காவில் அபூர்வமான காட்சிகள். முன்னால் செல்லும் யாராவது தவறு செய்கிறார்கள் என்றால் பின்னால் வருபவர் ஹார்ன் அடித்து கண்டிப்பார். அப்படிச் செய்வது முன்னால் செல்பவரைத் திட்டுவது போல. அமெரிக்காவில் வருடக்கணக்கில் கார் ஓட்டினால் இரண்டு மூன்று முறை ஹார்ன் சத்தம் கேட்கலாம் அவ்வளவு தான்.
மற்றவர்களின் கவனத்தைக் கவரவோ, ஹாய் சொல்லவோ, தவறு ஏதும் நிகழாமல் ஹார்ன் அடிப்பதோ சட்டப்படி குற்றம் அமெரிக்காவில்.

அமெரிக்க சாலைகளின் வலது ஓரத்தில் அவசர தேவை வாகனங்கள் செல்வதற்காக மட்டுமே ஒரு வரிசை இருக்கும் (ஷோல்டர் என்பார்கள் ) . அதில் வேறு வாகனங்கள் ஏதும் செல்லக் கூடாது என்பது சட்டம். அதை யாரும் மீறுவதும் இல்லை. சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் வருகிறது என்றால் உடனே எல்லோரும் வலது ஓரமாக சென்று வழிவிடவேண்டும். போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் இந்த அவசர சிகிச்சை வாகனம் ஓரமாய் இருக்கும் பிரத்யேக சாலையில் பயணிக்கும். நோயாளிக்கு போக்குவரத்து நெரிசலினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

‘நில்’ என்னும் அறிவிப்புப் பலகை சிறு சாலைச் சந்திப்புகளிலெல்லாம் காணப்படும். நள்ளிரவானால் கூட அங்கே பயணிக்கும் வாகனங்கள் அந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்தவுடன் நின்றுவிட்டு தான் செல்கின்றன.

பள்ளிக்கூட சிறுவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கதவு திறந்திருக்கிறது என்றால் ‘நில்’ என்று அர்த்தம். குழந்தைகள் இல்லையென்றால் கூட, கதவு திறந்திருக்கும் பள்ளிக்கூட வாகனங்களைக் கடந்து செல்லும் வாகனங்கள், நின்று விட்டுத் தான் சென்றாக வேண்டும். இல்லையேல் பள்ளிக்கூட வாகன ஓட்டியே நிற்காமல் செல்லும் வாகனங்களின் விவரங்களைக் காவல் துறைக்குத் தெரியப்படுத்தி அபராதம் செலுத்த வைப்பார்.

மேலை நாடுகள் எல்லாவற்றிலுமே பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் சாலை விதி வழக்கத்தில் உள்ளது. சாலையில் பாதசாரி வந்துவிட்டார் என்றால் வாகனங்கள் நின்று அவருக்கு வழிவிட்டுச் செல்கின்றன. இது பெரும்பாலான விபத்துகள் நிகழாமல் தடுக்கிறது.

1896ம் ஆண்டு முதல் சாலை விபத்து பதிவு செய்யப்பட்டபோது மக்கள் அதிர்ந்து போனார்கள். சாலையில் விபத்துகள் நடக்குமா? என்ற வியப்பு அவர்களுக்கு. ‘இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்’ என்று உடனே அறிக்கைகள் வெளியிடப்பட்டன. நூற்றாண்டு கடந்து விட்டது, இன்று சுமார் ஒன்றரை கோடி பேர் வருடம் தோறும் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கிறார்கள். சுமார் ஐம்பது கோடி பேர் காயமடைகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO) . இதே நிலை நீடித்தால் இந்த புள்ளி விவரங்கள் இரண்டாயிரத்து இருபதுகளில் இன்றைய நிலையை விட சுமார் அறுபத்தைந்து விழுக்காடுக்கு மேல் அதிகரிக்கக் கூடும் என்று அந்த நிறுவனம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

வளரும் நாடுகளில் ஏற்படும் அதிகப்படியான விபத்துக்குக் காரணம் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் பாதசாரிகள் என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை. தமிழ் நாட்டில் மட்டும் எண்பத்து மூன்று இலட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு மட்டும் சுமார் அறுபத்து ஆறாயிரம் விபத்துகள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

சாலை விபத்துகளில் காயமடைபவர்களைப் பொறுத்தவரையில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதல் என்பது வளரும் நாடுகளில் மிக மிகக் குறைவு. ஆனால் வளர்ந்த நாடுகளில் காயமடைபவர்களில் 98 விழுக்காடு மக்கள் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். காரணம் அவர்களுடைய வாகனங்கள் விபத்துச் சோதனைகளையும், காற்றுப் பை வசதி போன்றவற்றையும் கொண்டிருப்பதும், அங்கு வாகன ஓட்டிகள் இருக்கை வார்ப்பட்டை அணிவது கட்டாயமாக்கப் பட்டிருப்பதும் தான்.

பல நாடுகளில் விபத்து நிவாரண உதவிகள் நல்ல நிலையில் இல்லாததும் விபத்துகளில் காயமடைவோர்களை வெகுவாகப் பாதிக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிப்பவர்கள் விபத்துக் காப்பீடு செய்து கொண்டிருப்பது மிகவும் அபூர்வமாகி இருப்பது விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவ உதவியைப் பாதிக்கிறது.

விபத்துகளின் மூலமாக உயிரிழப்புகள் நேர்வதற்குக் காரணங்களாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முதலாவதாக, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், தேவையற்ற சாலைப்பயணங்களும், சாலைகளின் உறுதிக்கும் தகுதிக்கும் மீறிய வாகனங்களின் எண்ணிக்கையும், வாகனங்களின் வடிவங்களும் விபத்துகளை நிர்ணயிக்கும் காரணிகளில் சில. இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் இவையெல்லாம் ஒரே நேரத்தில் ஒரே சாலையில் செல்லுமிடங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன.

இரண்டாவதாக, அதிக வேகமாய் காரோட்டுவதும், குடித்து விட்டு காரோட்டுவதும், கைபேசி போன்றவற்றைப் பயன்படுத்தி சாலையில் கவனத்தை செலுத்தாமல் வண்டி ஓட்டுவதும், வாகனங்கள் செல்ல சரியான சாலை வடிவமைப்பு இல்லாமல் இருப்பதும், சாலை விதிகள் சரியாக அமுல்படுத்தாமல் இருப்பதும் விபத்துக்கான காரணங்களில் இன்னும் சில.

மூன்றாவதாக இருக்கை வார்ப்பட்டை அணியாமல் இருப்பது,  வாகனம் ஓட்டும் வயது வராதவர்கள் வாகனம் ஓட்டுவது, மக்களிடையே சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பது, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது, வாகன ஓட்டிகள் செய்யும் சிறு சிறு தவறுகளை மன்னிக்கும் மனநிலை இல்லாமல் இருப்பதும் போன்றவையும் விபத்துகளை ஊக்குவிக்கின்றன.

நான்காவதாக விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுக்கள் வருவதில் ஏற்படும் தாமதமும், விபத்து நடந்த இடத்தில் முதலுதவி வசதிகள் செய்யப்படாமல் இருப்பதும், மருத்துவ நிலையங்களுக்குச் செல்வதற்கு ஏற்படும் காலதாமதமும் விபத்து உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாகி விடுகின்றன.

சாலை பாதுகாப்பு என்பது தனிநபர் சார்ந்த விஷயமல்ல. சாலை விதிகளை அரசு நிர்மாணிப்பதும், அதை அதிகாரிகள் கவனிப்பதும், வாகன தயாரிப்பாளர்கள் நாட்டின் சாலைகளுக்கும் போக்குவரத்து விதிகளுக்கும் ஒப்ப வாகனங்களைத் தயாரிப்பதும், காப்பீட்டு நிறுவனங்களின் ஈடுபாடும், தனிநபர்களின் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வும், தனியார் தன்னார்வ நிறுவனங்களின் ஈடுபாடும் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும், எதிர்பாராத விபத்துகளிலிருந்து தப்புவிப்பதற்கும் முக்கியத் தேவையாகின்றன.

ஸ்வீடனில் விஷன் ஸீரோ சாலை பாதுகாப்புக்கு ஒரு முக்கியமான உதாரணமாகக் கொள்ளலாம். இங்கு நடப்பது சைக்கிளில் செல்வது போன்றவை அதிகமாக ஊக்குவிக்கப்படுவதால் மக்களுடைய ஆரோக்கியமும், மாசற்ற காற்று உலவும் சூழலும், மோட்டார் வாகன விபத்துகளற்ற நிலையும் உருவாகியுள்ளது.

சாலை விபத்து என்பது எழுதப்பட்ட விதியல்ல. அதை மிக எளிதில் சரி செய்துவிட முடியும். இருக்கின்ற சிறு சிறு சட்டங்களை கடைபிடிப்பதும், அடுத்தவரை மதித்து நடக்கும் போக்கும் இருந்தாலே போதும் சாலை பயணம் ரம்மியமானதாகி விடும்.

ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ரோமில் 1906ம் ஆண்டு நடந்த ‘இண்டர்நேஷனல் ரோட் காங்கிரஸ்’ ல் இடப்பட்டது.  . பல மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகைகளை விட மொழி வேறுபாடற்ற சின்னங்கள் எளிதில் மக்களுக்குப் புரியும் என்பதற்காக இவை ஆரம்பிக்கப்பட்டன. அபாய முன்னறிவிப்பு, முக்கியத்துவம் குறித்த சின்னங்கள், தடை செய்யப்பட்டதை தெரிவிக்கும் சின்னங்கள், கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சின்னங்கள், சிறப்பு அறிவிப்பு சின்னங்கள், சாலைப் பணி சின்னங்கள், திசை காட்டும் சின்னங்கள் போன்ற பல பிரிவுகளில் இவை வடிவமைக்கப்பட்டன.

பண்டைக்காலங்களில் சாலை சின்னங்கள் மைல்கற்களை வைத்தே அறியப்பட்டன. பண்டைய ரோம பேரரசில் பெரிய தூண்கள் போன்ற மைல்கற்களை ஏற்படுத்தி ரோம் நகரத்துக்கு வரும் வழியும், தொலைவும் சொல்லப்பட்டிருந்தது. அதன் பின் நாகரீகம் வளர வளர மரப் பலகைகள், உலோகப் பலகைகள் என சின்னங்கள் தாங்கும் தளங்கள் மாறின. இப்போது நவீனயுகத்தில் பேசும் சின்னங்கள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

சின்னங்களைப் போலவே பொதுவான நிறங்களையும் விளம்பரப் பலகைகள் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பச்சை பலகையில் வெள்ளை நிறத்தால் எழுதப்பட்டிருப்பவை திசை, தூரம் போன்றவற்றை அறிவிக்கும் பலகைகள். நீல நிறத்தில் இருந்தால் அவை ஓய்வு நிலையங்கள், உணவகங்கள், பெட் ரோல் நிலையங்கள், தங்குமிடங்கள் போன்றவற்றைக் குறிப்பவை. மஞ்சள் பலகையில் கறுப்பு எழுத்துக்கள் எனில் அவை எச்சரிக்கை அறிவிப்புகள் என ஒவ்வொரு வகையான தகவலுக்கும் நிறங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

விளம்பரப் பலகையின் நிறங்களைப் போலவே வடிவங்களும் வகைப்படுத்தப்பட்டு தனித் தனி செய்தி அறிவிக்கின்றன. விளம்பரப் பலகையிலுள்ள எழுத்துக்களோ, சின்னங்களோ அழிந்து போனால் கூட வடிவங்கள் அதன் அர்த்தத்தை உணர்த்தி விடுகின்றன. அல்லது தொலைவிலிருந்தே வடிவங்களைக் கண்டு வாகன ஓட்டுநர்கள் அறிவிப்பினை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

வேகமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சாலையில் செல்லும்போது கவனத்தைச் சிதறவிடும் செயல்களில் ஈடுபடக் கூடாது. நமக்கு முன்னால் செல்லும் வாகனத்தை மட்டும் கவனிக்காமல் அதற்கு முன்பும், நம்மைச் சுற்றிலும் கவனத்தைக் கொண்டிருக்க வேண்டும். வலது புறம் இடது புறம் திரும்புகையில் மிகவும் எச்சரிக்கையுடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யாமலும் திரும்பவேண்டும். கார்களில் பயணிக்கும் போது வாகன ஓட்டியின் இருக்கை முடிந்தவரை முன்னே இருக்கவேண்டும். அருகில் செல்லும் வாகனங்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுடைய வேகத்தையும், செயல்பாட்டையும் கணிக்க வேண்டும், நமது வாகனத்தின் தன்மை வேகம் குறித்த பிரக்ஞை வேண்டும். இரவிலும், சோர்வாக இருக்கும் போதும், மது அருந்திவிட்டும் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவேண்டும். இவையெல்லாம் சாலை விபத்தைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் நமக்குத் தரும் அறிவுரைகள்.

வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குதல் சரிசெய்யப்பட வேண்டும். குறுக்கு வழிகளில் உரிமம் பெறுவது முழுமையாக தடை செய்யப்படவேண்டும். அரசு சாலை விபத்துகளைக் கணக்கில் கொண்டு சாலை பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு நிதி ஒதுக்கீடும் செய்ய வேண்டும். சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே வரவேண்டும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ளது போல எழுத்துத் தேர்வு, கண் பார்வை தேர்வு போன்றவையும் ஓட்டுநர் உரிமை பெறத் தேவை என்ற நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும்.

ஓட்டுநர் உரிமங்கள் புதுப்பிக்கும் போதும் கண்பார்வை சோதனை, சாலை விதிகள் குறித்த தேர்வுகள் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும். ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் வெறுமனே வாகனத்தை இயக்குவதை மட்டும் கற்றுத் தராமல் சாலை விதிகளுடன் கூடவே மனரீதியான தயாரிப்பையும் வழங்க வேண்டும். சாலை விதிகளை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது என்னும் மனப்பான்மையை உளவியல் பயிற்சிகள் உருவாக்க வேண்டும்.

விதி மீறல்களுக்கான தண்டனைகள் அபராதங்கள் போன்றவை தவறு செய்ய நினைப்பவர்கள் தங்கள் சிந்தனையை மறு பரிசீலனை செய்ய வைக்க வேண்டும். ஒவ்வொரு தொன்னூறு வினாடிகளுக்கும் ஒரு விபத்து என்னும் நிலையில் இந்திய சாலை பயணம் திகிலூட்டுகிறது. ஒவ்வொரு ஏழு நிமிடத்திற்கும் ஒரு மரணம் நிகழ்வதாக இன்னொரு அறிக்கை சொல்கிறது. உலகில் நிகழும் மொத்த வாகன விபத்துகளில் ஆறு சதவீதம் இந்தியாவில் நிகழ்கின்றன. பல இலட்சக் கணக்கான வாகன ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே வாகனம் ஓட்டுகிறார்கள். காரணம் மாட்டிக் கொண்டாலும் பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை, லஞ்சமாக ஐம்பதோ, நூறோ ரூபாய் தான் !

சாலை விதிகள், சாலை பராமரிப்பு, சாலை பாதுகாப்பு எல்லாம் சட்ட முன்னுரிமை பெறவேண்டும். தனியார் இயக்கங்களுடன் இணைந்தோ, அல்லது அரசோ சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை, விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வர வேண்டும்.

நிர்ணயிக்கப் பட்டவேகம், பாதுகாப்பு கவசங்கள் அணிதல், மது அருந்தியோ கைபேசியில் பேசிக்கொண்டே செல்பவர்களை கடுமையாய் தண்டித்தல், அணுகக் கூடிய பாதுகாப்பு, முதலுதவி நிலையங்கள் அமைத்தல் போன்றவையெல்லாம் சாலை விபத்துகளின் விபரீதங்களை பெருமளவில் குறைக்க உதவும். வாகன பயன்பாட்டாளர்களும் சரியான தர சோதனை செய்யப்பட்ட வாகனங்களையே பயன்படுத்துவதும் பாதுகாப்பான பயணத்தை நல்க முடியும்.

சாலை விபத்துகளுக்கு சாலைகளின் வடிவமைப்பு, தரம், வாகனங்களின் தரம், அளவு, வேகம் என ஒவ்வொரு சிறு சிறு விஷயமும் காரணமாகின்றன. சாலை விதிகள் என்பவை தலை விதிகள் அல்ல. அவற்றை அணுகும் முறையில் அணுகினால் விபத்துகளற்ற பயணம் சாத்தியமே என்பதற்கு வளர்ந்த நாடுகளே முக்கிய உதாரணமாகத் திகழ்கின்றன.

வரையறுக்கப்பட்ட ஒழுங்குபடுத்தப் பட்ட சட்ட செயல்பாடுகளால் இத்தகைய சாலை விபத்துகளைத் தவிர்த்து இந்தியாவை உலகின் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இணைக்கச் செய்ய முடியும். காவல்துறை தன்னுடைய கடமை மீறுதல்களை சாலைகளில் செயல்படுத்தாமல் இருப்பதே பெரும்பாலான சாலை விதி மீறல்களை நிறுத்திவிடும். லஞ்சம் கொடுத்து தப்ப முடியும் என்னும் நிலை இருக்கும் வரை சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்னும் எண்ணம் மக்களிடம் வலுப்பெறாது.

அவன்

 
கடிகாரம் சத்தமிட்டு அழைத்தது. நல்ல தூக்கம், போர்வையை விலக்கப் பிடிக்கவில்லை விக்னேஷிற்கு. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும். கால்வாசி கூட விரியாத இமைகளின் வழியே சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான் விக்னேஷ். ஆறு மணி. இன்னும் ஒரு பத்து நிமிடம் தூங்கலாம், யோசனையோடு  போர்வையை நன்றாகப் போர்த்தி கைகளைக் கட்டிக் கொண்டி பக்கவாட்டில் சுருண்டு படுத்தவனை தட்டி எழுப்பினான் அவன்.

எரிச்சலோடே கண் விழித்தான் விக்னேஷ். அவனே தான். கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி வந்து தொந்தரவு செய்து விட்டு, காணாமல் போய்விடுகிறான். யாராய் இருப்பான் ? திடுப் பிடுப் என வருகிறான், ஏதேனும் குளறுபடி செய்கிறான், பிறகு சமாதானம் சொல்லிவிட்டு போயே போய்விடுகிறான். யோசித்துக் கொண்டே மீண்டும் கண்களை மூடியவனின் போர்வையை இழுத்தெறிந்துவிட்டுச் சிரித்தான் அவன். காலையிலேயே குளித்துவிட்டான் போல, தூய்மையான ஆடை உடுத்திருந்தான். ஆடைகளில் ஏதோ ஒரு மெல்லிய நறுமணம்.

“எழுந்திரு… எட்டுமணிக்கு உனக்கு அலுவலகத்தில் கான்பரன்ஸ் கால் இருக்கிறது.. மறந்து விட்டாயா ? ” . ஒரு கையில் காபியை உறிஞ்சிக் கொண்டே கேட்டான் அவன்.
” அதெல்லாம் எனக்குத் தெரியும், ஏழரைக்கு வண்டியை உதைத்தால் அது எட்டுமணிக்கு என்னை அலுவலகத்தில் விட்டு விடும்.. நீ என்னை விட்டு விடு பிளீஸ்… இன்னும் ஒரு அரை மணி நேரம் மட்டும் தூங்குகிறேன்”… கெஞ்சல் குரலில் கேட்டான் விக்னேஷ்.

” அதெல்லாம் முடியாது விக்னேஷ்… எட்டுமணிக்கு மீட்டிங் என்றால், நீ ஏழரைக்காவது அங்கே இருக்க வேண்டும். இன்னிக்கு டிராபிக் எப்படி இருக்குமோ ? வழியிலே என்னென்ன பிரச்சனை இருக்குமோ ? ஒண்ணும் தெரியாது.. எழும்பு எழும்பு…” கையில் மிச்சமிருந்த சில தண்ணீர் துளிகளை விக்னேஷின் முகத்தில் உதறிக் கொண்டே சொன்னான் அவன்.

விக்னேஷ் எழுந்தான். ஒருகையில் பிரஷோடும், இன்னொரு கையில் டவலோடும் குளியலறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டே யோசித்தான். யார் இவன் ? என் மனசாட்சியா ? இல்லையே அவன் பார்ப்பதற்கு என்னைப் போல இல்லையே ? அழகாக இருக்கிறானே ? மனசாட்சியாய் இருக்க வாய்ப்பு இல்லை.
ஒருவேளை பேயோ ? ம்ஹூம்…. பேய்க்கு கால் இருக்குமா என்ன ?. யோசித்துக் கொண்டே குளித்து முடித்து வெளியே வந்தான் விக்னேஷ்.

அவன் இன்னும் அங்கே தான் உட்கார்ந்திருந்தான். ” அதான் நான் ரெடியாகி வந்துட்டேன்ல.. நீ கிளம்பு” விக்னேஷ் தான் சொன்னான் குரலில் இருந்தது என்ன உணர்ச்சி என்று அவனுக்கே புரியவில்லை.

” அதெல்லாம் இல்லை… நீ ஏதாவது சாப்பிட்டுட்டு விட்டுக் கிளம்பு.. அதுக்கப்புறம் நான் போறேன்..” பிடிவாதமாய் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
” இவ்வளவு அக்கறையா பேசறியே… நீ எனக்கு ஒரு டீ போட்டு தந்திருக்கலாமே ? ” விக்னேஷின் கேள்விக்கு ஒரு சின்ன சிரிப்பை மட்டுமே கொடுத்துவிட்டு தொலைக்காட்சியில் சானலை மாற்றினான் அவன்.

“யாரோ கதவை தட்டறாங்க பாரேன்” சொன்னான் அவன். அவன் சொல்லி முடித்த அடுத்த வினாடி கதவு தட்டப்பட்டது. விக்னேஷ் சென்று கதவைத் திறந்தான். மாமா ! கோயமுத்தூரிலிருந்து மாமா வந்திருக்கிறார். கூடவே மாமா பெண் வித்யாவும்.

” வாங்க மாமா… வா… வாங்க வித்யா…” உள்ளே அழைத்தான். உக்காருங்க. என்ன ஆச்சரியம் ? சென்னைல ஏதாவது விசேஷமா மாமா ? காரணம் இல்லாம சென்னைக்கு வர மாட்டீங்களே ? சிரித்துக் கொண்டே கேட்டான் விக்னேஷ்.

விசேஷம் என்ன பெரிய விசேஷம் விக்னேஷ் ? . வித்யாவுக்கு இன்னிக்கு இங்க ஒரு கல்லூரில நேர்முகத் தேர்வு. அதுக்குத் தான் வந்தேன். காலேஜுக்கு பக்கத்துல தானே உன் வீடு..அப்படியே உன்னையும் ஒரு பார்வை பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்.
மாமா ஸ்நேகத்தோடு சொல்லி நிமிர்ந்ததும், முந்திரிக் கொட்டை மாதிரி அவன் பேசினான்…
” ஓ… இண்டர்வியூ டைம் வர்ற வரைக்கும் போரடிக்குமேன்னு இங்கே வந்தீங்களா ? “.
மாமா வுக்கு திக் என்றது.
” என்ன விக்னேஷ் இப்படி சொல்லிட்டே ? ஏன் எங்களுக்கு வெளியே இருந்தா  நேரம் போகாதா ? ” மாமா குரலில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.

” நான் என்ன சொல்லிட்டேன் மாமா ? அவன் தானே சொன்னான்… அதுக்காக ஏன் என்னைத் திட்டறீங்க ? ” விக்னேஷ் மன்னிப்புக் கேட்கும் குரலில் சொன்னான்.
” அவனா ? யாரு விக்னேஷ் ? நீ தனியா தானே இருக்கே இங்கே ? வேற யாராவது இருக்காங்களா என்ன ? ” சொல்லி விட்டு சுற்றுமுற்றும் பார்த்தார் மாமா.

” அதோ டி.வி பார்த்துட்டு இருக்கானே அவன் தான் சொன்னான் மாமா ..” விக்னேஷ் காட்டிய திசையில் அவன் இன்னும் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
” என்ன விக்னேஷ்.. விளையாடறியா ? அங்கே யாருமே இல்லையே ? .. ” மாமாவின் குரலில் கொஞ்சம் ஆச்சரியமும், கொஞ்சம் கிண்டலும் கலந்திருந்தது. விக்னேஷின் கண்களைப் பார்த்தார்.
” என்ன ராத்திரி சரியா தூங்கலயா ?…” சொல்லிவிட்டு மீண்டும் ஒருமுறை சிரித்தார்.

” அதை விடுங்க மாமா… நின்னுட்டே இருக்கீங்களே.. வாங்க உட்காருங்க.. என்ன சாப்பிடறீங்க ? ” இயல்புக்கு வந்த விக்னேஷ் கேட்டான்.
” எங்களுக்கு எதுவும் வேண்டாம் விக்னேஷ்.. காலைல தான் சென்னை வந்தோம். வந்த உடனே முதல் வேலையா ஹோட்டல்ல போய் ஒரு கட்டு கட்டிட்டோ ம்ல” சொல்லி விட்டுச் சிரித்தார் மாமா.

விக்னேஷுக்கு குழப்பமாய் இருந்தது. இன்னும் அவன் அங்கே உட்கார்ந்து சிரித்துக் கொண்டும், டி. வி சானலை மாற்றிக் கொண்டும், ஓரக் கண்ணால் வித்யாவை அளந்து கொண்டும் இருந்தான். மாமாவோ யாருமே இல்லை என்கிறார். அப்படியானால் அவன் யார் ? என் கண்ணுக்கு மட்டும் தான் தெரிகிறானா ? எனக்கு ஏதேனும் வியாதியா ? மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறேனா ? நினைக்க நினைக்க குழப்பமாக இருந்தது விக்னேஷிற்கு.

“என்ன விக்னேஷ்.. ஏதோ யோசனை போல இருக்கு ?.. ஏதாவது சொல்லேன் ” மாமா தான் சிந்தனைகளைக் கலைத்தார்.
” ஒண்ணுமில்லே மாமா… சொல்றதுக்கு .. அதான் யோசித்திட்டு இருந்தேன்… நீங்க சொல்லுங்க மாமா … என்ன விசேஷம்  ஊர்ல ? ” கேள்வியை மாமா பக்கமாய் திருப்பி வைத்தான் விக்னேஷ்.
” ஒண்ணுமில்லை விக்னேஷ்… எல்லாருமே நல்லா இருக்காங்க. நினைச்சது எதுவும் நடக்கமாட்டேங்குது… இவளுக்கு இந்த ஒரு சீட் மட்டும் கிடைச்சா நல்லா இருக்கும்… ” சொன்னார் மாமா. கண்களில் ஏதோ ஏமாற்றம்.

” நினைக்காததைப் பற்றி ஏன் மாமா பேசறீங்க நாம மரணத்தைப் பற்றி பேசலாமா ? அது தான் கண்டிப்பா நடக்கப் போற விஷயமாச்சே ” – ஐயோ… அவன் தான் குறுக்கிட்டு கேட்டான் கேட்டுவிட்டு சிரித்தும் விட்டான்.
மாமா திரும்பினார்.. கண்களில் வண்டி வண்டியாய் கோபம்.
” என்ன விக்னேஷ்.. உனக்கு என்ன ஆச்சு ? உன் பேச்சே சரியில்லை இன்னிக்கு. உனக்கு  பிடிக்கலேன்னா சொல்லிடு நாங்க போயிடறோம்…” மாமா சொல்லிவிட்டு வித்யாவைப் பார்த்தார். விக்னேஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு குனிந்தான்.
மனதுக்குள் கோபமும், அவமானமும் பீறிட்டுக் கிளம்பியது.

“வாங்க உட்காருங்க…. சாப்பிட்டுக் கொண்டே சாவைப் பற்றி பேசலாம் ” அப்படின்னு சொன்னா ஏன் ஆச்சரியப் படறீங்க ? சாவு ஒரு நிகழ்வு தானே அதைப் பற்றி பேசறதுக்கு ஏன் பயப்படறீங்க ? ” அவன் தான் மறுபடியும் கேட்டான். விக்னேஷ் இன்னும் குனிந்து தான் இருந்தான். நிமிரப் பிடிக்கவில்லை அவனுக்கு.

” நல்ல ஒரு விஷயத்துக்கு வந்திருக்கும்போ ஏன் அபசகுனமா பேசறே ? வயசுக் கோளாறா விக்னேஷ் ? ” மாமா கேட்பது மெலிதாக காதில் விழுந்தது. அதற்கு அவன் ஏதோ பதில் பேச ஆரம்பித்தான். விக்னேஷ் நிமிரவேவேயில்லை.

” இல்லே மாமா… மரணம் என்பதைத் தவிர வேற எதையும் நீங்க உறுதியா சொல்ல முடியாது இல்லையா ?.. வித்யாவுக்கு இடம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்… ஆனா ஒவ்வொருவருக்கும் சாவு என்பது கண்டிப்பா நடக்கும்.. கேள்வி ஒண்ணே ஒண்ணு தான்… எப்போ ? எப்போ ? எப்போ ? . அதனால நடக்காததைப் பற்றியே பேசிப் பேசி நடக்கலயேன்னு வருத்தப் படறதை விட நடக்கப் போறதைப் பற்றிப் பேசலாமேன்னு தான் அப்படி ஆரம்பிச்சேன்… ”

” உனக்கு ஏதோ மனக் கோளாறு விக்னேஷ்.. நீ இனிமே தனியா தங்கறது நல்லதில்லை. உன் வீட்ல சொல்றேன்.. ஏதாவது பசங்க கூட சேர்ந்து தங்கு.. அது தான் நல்லது… வண்டி ஓட்டும்போ பார்த்து ஓட்டு” மாமாவின் குரலில் கோபத்தோடு கொஞ்சம் கிண்டலும் கலந்திருந்தது.

” எனக்கு பைத்தியம் ந்னு நேரடியா சொல்லுங்களேன். ஏன் கவலைப் படறீங்க ? மாமா ? ” சிரித்தான் அவன்.

” நான் அப்படியெல்லாம் சொல்லலை விக்னேஷ். நீ ரொம்ப நெகட்டிங் ஆவே யோசிக்கறே.. இது நல்லதில்லை. மனசைப் பாதிக்கும் ” மாமா சொன்னார்.

” நான் மட்டும் தான் மாமா… பாசிட்டிவ் ஆ திங்க் பண்றேன். சாவு வராதுண்ணு யோசிக்கிறது தான் நெகட்டிங் திங்கிங். நான் பாசிட்டிங் ஆ தான் பேசறேன். அது மட்டுமில்லை மாமா… வண்டி ஓட்டும்போ இடிச்சுடுவோமோங்கற பயம் கலந்த நெகட்டிங் திங்கிங் தான் நம்மை கவனமா வண்டி ஓட்டச் செய்யும் இல்லையா ? ” அவன் சொல்லிவிட்டு சிரித்தான்.

மாமா விருட் என்று எழுந்தார். அவனுடைய பதிலை விட அந்த சிரிப்பு தான் மாமாவைக் காயப் படுத்தியிருக்க வேண்டும்.
“வர்றேன் விக்னேஷ் நேரமாச்சு”  ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். விக்னேஷ் இன்னும் தலையை நிமிர்க்கவில்லை. வித்யாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவனோ இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தான்.

மாமா கதவை அடைத்த சத்தத்தில் உறவு கொஞ்சம் பலவீனப் பட்டிருப்பது போல் தெரிந்தது விக்னேஷிற்கு. விக்னேஷ் நிமிர்ந்தான். கண்கள் இரத்தச் சிவப்பாகி இருந்தன. கோபத்தின் அத்தனை சக்திகளையும் திரட்டி அவனை நோக்கிக் கத்தினான்…
” உனக்கென்ன பைத்தியமா ? ஏன் இப்படி என் மாமாவை விரட்டினாய் “. விக்னேஷின் விரல்களெல்லாம் நடுங்கின, உதடுகள் துடித்தன, மூச்சுக் காற்று ஒழுங்கில்லாமல் அலைந்தது.

அவன் சிரித்துக் கொண்டே சொன்னான். ” அடே மடையா…. தன்னோட பொண்ணை உனக்கு கட்டி வைக்கணும்ங்கிறது மாமா வோட எண்ணம்.
அவ வேற இங்கே தங்கி படிக்க போறாளாம். வருசக் கணக்கா… புரியுதா ? நான் அவங்களை துரத்தாம இருந்தா அவ உங்கூடவே சுத்திட்டு இருந்திருப்பா… மனசுல ஆசையும் வளத்திருப்பா…  அப்புறம் நீ காதலிச்சிட்டு இருக்கிற ஜோதியோட கதி என்ன ஆவறது ? ”

” இல்லை …. அது உண்மையா இருக்காது. அப்படியே அது உண்மையா இருந்தாலும் இது தான் வழியா அதுக்கு ? என்ன தான் இருந்தாலும்… வீட்டுக்கு வந்தவங்களை இப்படி பேசி துரத்தினது  தப்பு தப்பு தப்பு…. நீ முதல்ல வெளியே போ.. இனிமேலும் உன் முகத்துல முழிக்க நான் விரும்பல… சும்மா நீயா எதையெதையோ கற்பனை பண்ணிட்டு உன் வாய்க்கு வந்ததைப் பேசிட்டே… இனிமே இதை நான் எப்படி சரிபண்ணப் போறேனோ ? ” விக்னேஷ் கோபம் குறையாமல் கையில் இருந்த புத்தகத்தைத் தூக்கி அவன் மேல் வீசினான்.

சிரித்துக் கொண்டிருந்த அவன் எழும்பினான். சிரிப்பை நிறுத்தினான். கண்களில் கொஞ்சமாய் கோபம். நேரடியாக விக்னேஷின் முகத்துக்கு முன்னால் வந்து நின்றான்.

” வாயை மூடுடா.. நான் செய்ததெல்லாம் சரி தான். எந்த தப்பும் கிடையாது… பாரு நேரம் ஏழரை… இப்போ வண்டியை கிளப்பினால் தான் எட்டுமணிக்கு நீ ஆபீஸ் போக முடியும். சும்மா என்னை கத்தற வேலையெல்லாம் வெச்சுக்காதே கொன்னுடுவேன்… நான் சொன்னதுல எந்த தப்பும் இல்லைன்னு நினைச்சுக்கோ…. எது வந்தாலும் பார்த்துக்கலாம் கிளம்பு..”
சொல்லிவிட்டு டி.வி ரிமோட்டை சோபாவில் விட்டெறிந்துவிட்டு காற்றில் கரைந்து காணாமல் போனான் அவன்

கல்மனிதன் – விமர்சனம் by சொக்கன்.

கல்லுக்குள் ஈரம்

– என். சொக்கன்

தமிழில் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் என்று ஒரு பாகுபாடு இருப்பதைப்போலவே, புரிகிற கவிதைகள், புரியாத கவிதைகள் என்றும் பிரிவினை உண்டாகியிருப்பதை மறுக்கமுடியாது.

எது புரிகிறது, எது புரியாதது, எது இலக்கியம், எது ஜல்லி என்னும் பொதுத் தலைப்புகளில், இந்த இரு கட்சியினரும், ஒருவர் மற்றவர்களைத் தாக்கிக்கொள்வதிலும் குறைச்சலில்லை. இந்த சிண்டுபிடிச்
சண்டைகளைப்பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும் குறைவே இல்லை.

அந்தவிதத்தில், பொதுஜனப் பரப்பைச் சென்றடையவேண்டும் என்னும் நோக்கத்துடன் எழுதுகிறவர்களின் குறிப்பிடத்தக்கவர் சேவியர். அவரது ஐந்தாவது தொகுதியான, ‘கல் மனிதன்’, ஒரே ஒரு இடத்தில்
புரியாத கவிதைகளைக் கிண்டல் செய்வதுபோல் லேசாக உரசிப் பார்க்கிறது, மற்றபடி, தான் பார்த்த மனிதர்களைத் தனது கவிதை மொழியில் பதிவு செய்வதிலேயே முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறார்
கவிஞர்.

முன்னுரையில் ‘உள்ளடக்கத்தில்மட்டுமின்றி, வடிவ எளிமையிலும் மனித நேயம் பயில்கின்றன இக்கவிதைகள்’, என்று திரு. இந்திரன் குறிப்பிடுவதுபோல், இந்தக் கவிதைகளின் அழகு மொத்தமும், அவற்றின்
எளிமையில்தான் உள்ளது. மனிதர்களையும், அவர்தம் மன உணர்வுகளையும் எளிய வார்த்தைகளில் பதிவு செய்திருக்கும் இக்கவிதைகளை, யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதைவிட, ஒவ்வொருவரும்
இக்கவிதைகளில் தங்களை உணரலாம் என்பதுதான் இவற்றின் முக்கியமான தகுதி.

இந்தப் பொதுப்பண்புக்கு ஒரு சிறிய உதாரணமாக, ‘வேர்’ எனும் இந்தச் சிறு கவிதையைச் சொல்லலாம்
:

‘இத்தனை
வருடங்களுக்குப்பிறகும்
நான்
பேசினால்
கண்டுபிடித்துவிடுகிறார்கள்
என் ஊரை’

இதே தொகுதியின் வேறொரு கவிதையில் சேவியர் எழுதுவதுபோல், நமது ஊர், நமது மாநிலம், நமது நாடு என்று பயண தூரங்களும், புலம்பெயர்தலின் தீவிரமும் விரிவாகிக்கொண்டே சென்றபோதும், நமது
வேர்களை இழந்துவிடுவதில்லை என்பதில் ஒரு சந்தோஷம் எல்லோருக்கும் இருக்கும், அல்லது இருக்கவேண்டும் என்பதை, சேவியரின் பல கவிதைகள் பேசுகின்றன.

அதேபோல், சக மனிதனின்மீது நேசம் தேவை என்பதையும், தனது கவிதைகளில் அடிக்கடி வலியுறுத்துகிறார் சேவியர். இவை, வெறும் கோஷங்களைப்போல் இல்லாமல், ஈரமான காட்சிப் பதிவுகளாக
விரிந்து, மனதில் ஆழ்ந்த தாக்கத்தை உண்டாக்குகின்றன.

இந்த உத்தியின் நீட்சியாக, சேவியரின் சில கவிதைகள், சின்னக் கதைகள்போலவே விரிகின்றன. ‘காதல் கணவன்’, ‘கல்யாணக் கணக்குகள்’, ‘காதலுக்குப் பின் திருமணம்’, ‘கயிற்றில் தொங்கும்
கொடி’, ‘மின்சாரம்’ ஆகிய கவிதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

பெரும்பாலும் இரண்டு பக்கங்களுக்கு நீளும் இந்தக் கவிதைகளைவிட, ‘படிகள்’, ‘நிறக் குறியீடு’, ‘வாழ்க்கை’, ‘நிலைகள்’ போன்ற சிறு கவிதைகளில் சேவியர் முன்வைக்கும் நுணுக்கமான கேள்விகளும்,
அவதானிப்புகளும்தான் இந்தத் தொகுதியின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன.

இதே காரணத்தால்தான், ‘திட்டு’ போன்ற கவிதைகளின் வார்த்தை விளையாட்டுக் குறும்பையும் மீறி, அந்தக் கவிதைகள் வெளிப்படுத்தும் உணர்வுகள்தான் சிறப்பாக வெளிப்படுகிறது.

ஆங்காங்கே தலைகாட்டும் காதல் கவிதைகள், ஏனோ இந்தத் தொகுப்பில் பொருந்தாத அம்சங்களாகவே உறுத்தித் தெரிகின்றன. அதேபோல், ‘விலக்கப்பட்ட வியர்வைகள்’, ‘கடவுளும், பூசாரியும்’ போன்ற
சில கவிதைகள் மேலும் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கலாமோ என்கிற ஆதங்கமும் தலைகாட்டுகிறது.

தொகுப்பை வாசித்து முடித்தபின், பல கவிதைகள் மனதில் நிற்கின்றன. அவற்றில் மிகச் சிறந்ததாக ஒன்றைச் சொல்லவேண்டுமானால், ‘அப்பா என் உலகம்’ என்ற கவிதையைக் குறிப்பிடலாம். இதைப்
படித்தபிறகு, இனிமேல் தம்ளரிலோ, பாட்டிலிலோ தண்ணீர் குடிக்கும்போதெல்லாம், ‘தண்ணீர்தான் உலகிலேயே சுவையான பொருள்’ என்று சொல்லும் அப்பாவின் நினைவுதான் வரப்போகிறது என்பதுமட்டும்
நிச்சயமாகத் தோன்றுகிறது.

(கல் மனிதன் / சேவியர் / சந்தியா பதிப்பகம் / 128 பக்கங்கள் / ரூ 60/-)

கைகள்

( இந்தவார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கவிதை )

.

நெரிசல் சாலையில்
தடுமாறுபவர்களை
சாலை கடத்தும் கைகளை விட,

நெருப்புச் சாலையில்
வியர்வை ஆறு
வழிய வழிய
பாரம் இழுப்பவருக்கு
உதவும் கைகளை விட,

தபால் அலுவலகத்தில்
நலமா எனும்
நாலுவரிச் செய்தியை
முதியவர் எவருக்கோ
பிழையுடனேனும்
எழுதித் தரும் கைகளை விட,

நீளும் வறுமைக் கைகளை
வெறும்
விரல்களோடேனும்
தொட்டுப் பேசும் கைகளை விட,

எந்த விதத்திலும்
உயர்ந்ததில்லை
கவிதை எழுதும் கைகள்.

கைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்

தமிழ் ஓசை நாளிதழின் இலவச இணைப்பான களஞ்சியம் இதழில் இந்த வாரம்(21.01.2007) வெளியான எனது கட்டுரை

 

கைபேசிகள் சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்பட்டன. கைபேசி வைத்திருப்பவர்கள் அதை மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியும் விதமாக வைத்திருப்பதும். பொது இடங்களில் சத்தமாகப் பேசி மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதுமாக இருந்த காலம் மலையேற்஢விட்டது. இப்போதெல்லாம் கைபேசி இல்லாதவனை கையே இல்லாதவன் போல பார்க்கிறது சமூகம். ‘என்னது உன்கிட்டே கைபேசி இல்லையா ?’ என்று ஏதோ சாவான பாவத்தைச் செய்து விட்டது போல நம்ப முடியாத ஆச்சரியக் குரலில் தான் கேட்கிறார்கள் கைபேசி இல்லாதவர்களிடம்.

ஊருக்கு ஒரு தொலைபேசி என்றிருந்த காலம் தாண்டி, வீட்டுக்கு ஒரு தொலைபேசி என்னும் நிலையையும் கடந்து, ஆளுக்கு ஒரு கைபேசி எனும் நிலையில் இருக்கிறது இன்றைய வாழ்வு. அதுவும் அலுவலகவாசிகள் பலருக்கும் ஒன்றுக்கு இரண்டாக கைபேசிகள் இருக்கின்றன. இன்றைக்கு பிரமிப்பூட்டும் வகையில் வளர்ந்துள்ள கைபேசிகளின் வரலாறு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது.

தொலைபேசி நெட்வர்க்குடன் இணைக்கப்பட்ட முதல் கைபேசி ஸ்வீடன் நாட்டு காவல் துறையினரால் 1946ம் ஆண்டு வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. காவல் துறையினர் உபயோகப்படுத்தி வந்த தகவல் தொடர்பு ரேடியோவே இதன் முன்னோடி எனலாம். 1947ம் ஆண்டு பெல் சோதனைச் சாலை பொறியாளர் டி.எச். ரிங் என்பவரால் இந்த கைபேசிகள் தன்னுடைய நிலையிலிருந்து சற்று முன்னேறின. எனினும் 1960 களில் எலக்ரானிக்ஸ் துறை மேம்படும் வரை இந்த கைபேசிகள் வளர்ச்சியடையவில்லை.

1967 களில் கைபேசி வைத்திருப்பவர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்ட பின் அந்த எல்லையை விட்டு வெளியே சென்றால் அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும். ஒவ்வொரு அழைப்புக் கோபுரத்தின் எல்லைக்குள்ளேயே அந்தந்த அழைப்பை பேசி முடித்துவிட வேண்டும். அப்போதெல்லாம் அந்த அழைப்பு எல்லையே மிகவும் குறுகியது என்பது வேறு விஷயம்.

பெல் ஆய்வுக்கூட பொறியாளர் ஆமோஸ் எட்வர்ட் என்பவர் 1970ல் தானியங்கியாக ஒரு அழைப்பு கோபுர எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு அழைப்பு துண்டிக்காமலேயே செல்லும் ‘அழைப்பு கைமாற்ற’ தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார். அது கைபேசி வளர்ச்சிக்கு பேருதவியாயிற்று. 1971ல் ‘ஏ.டி & டி’ நிறுவனம் கைபேசி சேவை ஒப்புதலுக்காக பெடரல் தொலை தொடர்பு குழுவிடம் விண்ணப்பித்தது. அது சுமார் பதினோரு ஆண்டுகளுக்குப் பின் 1982ல் அங்கீகரிக்கப்பட்டு தனியாக அலைவரிசை ஒதுக்கப்பட்டது.

1956ல் எரிக்ஸன் நிறுவனம் ஸ்வீடன் நாட்டில் தனது முதல் தானியங்கி கைபேசியை வெளியிட்டபோது அந்த கைபேசியின் எடை எவ்வளவு தெரியுமா ? சொன்னால் நம்ப மாட்டீர்கள். நாற்பது கிலோ. அரை மூட்டை அரிசியின் எடை. எப்படித் தான் தூக்கிச் சுமந்தார்களோ !! அதன் பின் அதே நிறுவனம் 1965ல் நவீன இலகுவான கைபேசி ஒன்றைத் தயாரித்தது. அதன் எடை ஒன்பது கிலோ !!!! அப்போதைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 150 !. அன்றிலிருந்து சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அங்கே மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை வெறும் 600 தான்.

முழுதும் தானியங்கியாக செயல்படத் துவங்கிய முதல் கைபேசி 1981ம் ஆண்டின் நோர்டிக் கைபேசி தான். இதை முதல் தலைமுறை கைபேசி என்று அழைத்தனர். ஆயினும் எண்பதுகளிலெல்லாம் கைபேசிகள் வாகனங்களில் நிரந்தரமாக பொருத்தப்பட்டு அவை வாகன தொலைபேசிகள் போல செயல்பட்டன. காரணம் அவற்றின் அளவு மற்றும் எடை.

1990ல் முதல் டிஜிடல் தொழில்நுட்ப கைபேசி அமெரிக்காவில் ஆரம்பமானது, அதற்கு அடுத்த ஆண்டு முதல் ஜி.எஸ்.எம் தொழில்நுட்ப கைபேசி ஐரோப்பாவில் துவங்கியது. அதன் பின்பே இந்த கைபேசி அசுர வளர்ச்சி பெற்று எட்டாக் கனியாக இருந்த நிலையிலிருந்து அத்தியாவசியத் தேவை என்னும் தளத்துக்கு இடம் பெயர்ந்தது.

இப்போதையை கைபேசிகள் ஒரு கணினி போல செயல்படுகின்றன. பேசுவதற்கான என்னும் அடிப்படை வசதியைத் தாண்டி, புகைப்படம் எடுப்பது, வீடியோ படம் எடுப்பது, மின்னஞ்சல் அனுப்புவது, இணையப் பக்கங்களை வாசிப்பது, தகவல்கள் சேமித்து வைப்பது, இன்னும் ஒரு படி மேலே போய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது கூட கைபேசிகளில் கைவந்திருக்கிறது.

கைபேசி இருப்பதனால் தகவல் தொடர்பு பெருமளவு வளர்ந்து விட்டது. இதன் மூலமாக உலகோடும், குடும்பத்தோடும் எப்போதும் இணைந்து இயங்கும் நிலை உருவாகி இருக்கிறது. கைபேசி பழக்கம் பெருகி விட்டபிறகு அமெரிக்காவில் விபத்துகள் பற்றிய தகவல்களும், குடித்து விட்டு காரோட்டுபவர்கள் பற்றிய தகவல்களும், அவசர தேவை அழைப்புகளும் மிக விரைவில் வந்தடைவதாக அமெரிக்க காவல்துறை கடந்த ஆண்டு தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

கைபேசியில் புகைப்படம் எடுக்கும் வசதியும், வீடியோ எடுக்கும் வசதியும் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தப்பட்டால் சமுதாயத்தில் நிகழும் பல தவறுகளைப் பதிவு செய்வதற்கும், லஞ்சம் உட்பட நிகழும் சட்ட மீறல்களை சாட்சிக்காக காட்சிப்படுத்தவும் பயன்படுத்த முடியும் என்கிறது அமெரிக்க காவல் துறை.

ஜப்பானில் நிலநடுக்கம் நிகழப்போகிறதெனில் அந்த அபாய முன்னறிவிப்பினை நாட்டிலுள்ள எல்லா கைபேசிகளுக்கும் அனுப்பி விடுகிறார்கள். இதன்மூலம் ஜப்பானியர்கள் எங்கே இருந்தாலும் நிலநடுக்கம் எங்கே எப்போது நிகழப்போகிறது என்பதை அறிந்து கொள்கிறார்கள்.

அமெரிக்க உளவு நிறுவனம் கைபேசிகளை உளவாளிகள் போலப் பயன்படுத்துகிறது. தொலைவிலிருந்தே கைபேசிகளின் மைக்-கை இயக்கி சந்தேகத்திற்கிடமான நபர்களின் உரையாடல்களை உற்றுக் கேட்பதை அமெரிக்க அரசு உளவு நிறுவனங்கள் செய்து வருகின்றன. கைபேசிகள் இப்போது இணையத்துடன் ஒன்றித்துவிட்டதால் உளவு மென்பொருட்களை எந்த கைபேசிக்கு வேண்டுமானாலும் கைபேசி சேவை வழங்கு நிறுவனங்கள் விரும்பினால் தரவிறக்கம் செய்ய முடியும். அமெரிக்க உளவு நிறுவனத்தின் விண்ணப்பங்கள் நிறைவேற்றப்படுவதாக பெரும்பாலான கைபேசி சேவை வழங்கு நிறுவனங்கள் ஒத்துக் கொள்கின்றன. சில மெளனம் சாதிக்கின்றன.

பெரிய நிறுவனங்களில் உயரதிகாரிகள் முக்கியமான ரகசிய தீர்மானங்கள் நிறைவேற்றும் போதும் இத்தகைய உளவு வேலை எதிரிகளால் நிகழ்த்தப்படலாம் என்னும் அச்சம் நிலவுவதால் பெரும்பாலான நிறுவனங்கள் தீர்மானக் கூட்டங்களின் போது கைபேசிகளை அனுமதிப்பதில்லை. மட்டுமன்றி கைபேசிகளிலுள்ள பாட்டரிகளை கழற்றிவிடுமாறும் அவை அறிவுறுத்துகின்றன.

எல்லா வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை உண்டு என்னும் நியூட்டனின் விதி இங்கும் விதிவிலக்காகவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு குற்றமுமாக கைபேசிக் குற்றங்கள் வளர்கின்றன. ஏதேனும் ஆபாசப் படங்களுடன் பிரபல நடிகைகளின் படங்களை உலவ விடுதல், வீடியோ காட்சிகளை உலவ விடுதல், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி எரிச்சல் மூட்டுதல், அலுவலகத்திலும், கல்லூரிகளிலும் கூடவே இருக்கும் பெண்களைக் கூட தவறான கண்ணோட்டத்தில் புகைப்படம் எடுத்து அதை மற்றவர்களுக்கும் அனுப்புதல் என ஆரம்பித்து தவறுகள் ஏறுமுகத்தில் செல்கின்றன. கைபேசிகளின் அபரிமிதமான வளர்ச்சியினால் இவை சில நிமிடங்களுக்குள் நாடு முழுவதும் பரவியும் விடுகின்றன.

லண்டனில் பத்தொன்பது வயது இளம் பெண் ஒருவரை கைபேசிக்காக துப்பாக்கியாய் சுட்ட நிகழ்வும், சென்னையில் கைபேசி வாங்கும் ஆசைக்காக சிறுவனைக் கடத்தி கொலை செய்த மாணவர்களின் வெறிச்செயலும் எச்சரிக்கை மணி அடித்திருக்கின்றன. பல சமூக விரோத குற்றங்களுக்குக் கைபேசிகள் காரணமாய் இருக்கும் அதே வேளையில் சமூக விரோதிகளை அடையாளம் காட்டவும் இவை பெருமளவில் பயன்படுகின்றன. அமெரிக்காவில் பல குற்றவாளிகள் கைபேசிகளில் எக்கச்சக்கமாக மாட்டி கம்பி எண்ணுகின்றனர்.

அமெரிக்காவில் எழுபது சதவீதம் சிறுவர்கள் கைபேசி வைத்திருக்கிறார்கள். சி.ஐ.ஏ புத்தகத்தில் இங்கிலாந்தில் மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையில் கைபேசிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கைபேசி வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் செல்கிறது. உலகெங்கும் கைபேசி பயன்பாட்டாளர்களின் தொகை பெருமளவில் உயர்ந்திருப்பதால் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்தும் மக்களிடையே ஒருவிதம் பயம் தோன்றியிருக்கிறது.

இவை எலக்டோ  மேக்னட்டிக் அலைகளைக் கொண்டு இயங்குவதால் கைபேசி பயன்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அலைகளை நமது மூளை ஈர்த்துக் கொள்கிறது. இதனால் அதிக நேரம் பேசுவதால் மூளை பாதிப்படைவதாகவும், சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தால் இதயம் பாதிப்படைவதாகவும், ஆண்மைக்குக் கூட இதனால் ஆபத்து இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தினம் தினம் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன.

கைபேசி கோபுரங்களின் அருகே, குறிப்பாக சுமார் முந்நூறு மீட்டர் சுற்றளவில், வசிக்கும் மக்களுக்கு பலவிதமான நோய்கள் வருவதாக பிரான்ஸிலுள்ள சாண்டினி குழுவின் ஆய்வு தெரிவித்து அதிர்ச்சியளிக்கிறது.

ரெப்லக்ஸ் என்னும் ஐரோப்ப ஆய்வு ஒன்று டி.என்.ஏ க்களுக்கு கைபேசி கதிர்களால் பாதிப்பு ஏற்படுவதாக அறிக்கை வெளியிட்டது. ஸ்வீடன் நாட்டின் கரோலின்ஸ்க்கா நிறுவனம் தொடர்ந்து கைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்துவது நிச்சயம் கெடுதலை விளைவிக்கும் என்றும், புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. எனினும் இதை கைபேசி நிறுவனங்கள் மறுத்துள்ளன, மாறும் காலத்துக்கேற்ப கைபேசிகள் நவீனத்துவம் பெறுவதாகவும் ஒத்துக்கொள்ளாத அளவுக்கு கதிர்களை அவை வெளியிடுவதில்லை என்றும் அவை சாதிக்கின்றன.

கைபேசி உபயோகிப்பதால் புற்றுநோய் வருவதாக டெபோரா ரைட் என்னும் அமெரிக்கர் உட்பட சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதற்கு ஒரு முடிவு காணும் விதமாக கைபேசி நிறுவனத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து ‘அறிவியல் ஆலோசனை குழு’ ஒன்றை ஆரம்பித்து சுமார் இருபது கோடி ரூபாய் செலவிட்டு இந்த கைபேசி பயன்பாட்டிற்கும், புற்று நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என்று கடந்த பத்து ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தனர். ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

கைபேசிகளால் உருவாகும் நோய்களைப் பற்றி ஆதாரபூர்வமாக இன்னும் எந்த அறிவியல் ஆய்வு அறிக்கையும் வெளி வரவில்லை என்பது ஆறுதலான செய்தியெனினும், கைபேசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும் இன்னும் எந்த ஆய்வும் வரவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கைபேசிக் காமராக்களின் உதவியினால் கிரடிட் கார்ட் (கடனட்டை) போன்றவற்றை நமக்குத் தெரியாமலேயே படம் எடுத்து இணையத்தில் பயன்படுத்தும் அச்சுறுத்தலும் நம்மைத் தொடர்கிறது. சாதாரண கைபேசிக் காமராக்களில் கடனட்டையை தெளிவாக புகைப்படமெடுப்பது சாத்தியமில்லை என்று சொல்லப்பட்ட போதிலும் நவீன வகை கைபேசிகளில் அதிக மெஹா பிக்சஸ் புகைப்படங்களில் இவை சாத்தியம் என்பதால் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது பயன்பாட்டாளர்களின் தேவையாக இருக்கிறது.

அமெரிக்காவில் 1990 ல் நாற்பது இலட்சம் பேர் கை பேசி வைத்திருந்தார்கள். இன்று சுமார் இருபத்து மூன்று கோடி பேர் கைபேசி உபயோகிக்கிறார்கள். உலக அளவில் வருடத்திற்கு பத்து கோடி கைபேசிகள் உபயோகிக்க முடியாத படி பழுதாகிவிடுகின்றன. இவற்றை சரியான முறையில் அழிக்காவிட்டால் அதிலுள்ள டாக்சிக் உதிரிகளும், அழிந்து போகாத பாகங்களும் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு அதிகரிக்கும் என்பது இன்னொரு அச்சுறுத்தல்.

குடித்து விட்டுக் காரோட்டுவதைப் போல செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதும் இந்தியா உட்பட உலகின் நாற்பது  நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. விபத்துகளின் பின்னணியை அலசிப்பார்த்தால் சில வினாடிகள் தவறவிடும் கவனமே பெரும்பாலும் காரணமாகிறது. ஏ.ஏ அமைப்பு உலகளாவிய அளவில் நிகழ்த்திய ஆய்வில் கைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் விபத்துகளில் விழ நான்கு மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதிகம் குடித்திருக்கிறோமா என்று கண்டுபிடிப்பதற்கான கைபேசி ஒன்றை எல்.ஜி நிறுவனம் அமெரிக்காவில் வெள்ளோட்டம் விட்டிருக்கிறது. அந்த தொலைபேசியிலுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடிகாரர் ஊதினால் கைபேசி சொல்லிவிடும் அவரால் காரை ஓட்டமுடியுமா, காவலர் பிடித்தால் அபராதம் போடுவாரா போன்ற விஷயங்களை !

பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், சக மாணவ மாணவியரை தேவையில்லாமல் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கவும், அமெரிக்காவில் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் கைபேசி தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாகன ஓட்டிகள் கைபேசி உபயோகிப்பதும் அங்கே பெரும்பாலான மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

கைபேசிகளின் எண்ணை எப்படியோ பெற்றுக் கொண்டு விடாமல் தொந்தரவு செய்யும் வியாபார அழைப்புகளும் இன்று ஏராளமாகி விட்டன. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நம்முடைய கைபேசி அல்லது தொலை பேசி எண்ணுக்கு தேவையற்ற தொலை பேசி அழைப்புகள் அதிகம் வருகிறது என்றால் அந்த சேவை வழங்கு நிறுவனத்துக்கு நம்முடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்து நம்முடைய எண்ணை அவர்களுடைய விசேஷ தகவல் சேமிப்பில் இணைத்துக் கொள்ளலாம். அதன்பின் நமக்கு ‘தொந்தரவு’ அழைப்புகள் வராது. மீறி வந்தால் வழக்கு பதிவு செய்து நஷ்ட ஈடு பெற்றுக் கொண்டு ஜாலியாக போக வேண்டியது தான்.

அமெரிக்காவின் மாநில இணைய தளங்கள் அனைத்திலும் இந்த சேவைக்கான இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். இப்போது இந்த வசதியை இந்தியாவில் ஏர்டெல் நிறுவனமும் துவங்கியிருப்பதாக கேள்வி. இந்தியா, ஜப்பான், ஐரோப்பா போன்ற நாடுகளில் வருகின்ற அழைப்புகளுக்கு பணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால் அமெரிக்கா, கனடா, ஹாங்காங் போன்ற நாடுகளில் வருகின்ற அழைப்புகளுக்கும் இப்போதும் பயன்படுத்தும் நிமிடத்திற்கு ஏற்ப பணம் வசூலிக்கப்படுகிறது.

கைபேசி எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க திருட்டுப் போவதும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. யூ.கே வில் மட்டும் பன்னிரண்டு வினாடிக்கு ஒரு கைபேசி திருட்டு போவதாகவும், கடந்த ஆண்டு மட்டும் முப்பத்து ஒன்பது கோடி பவுண்டுகள் மதிப்புள்ள கைபேசிகள் திருடு போயிருப்பதாகவும் ஹாலிபேக்ஸ் காப்பீடு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைபேசிகள் திருடுபோவதைத் தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. நோக்கியா தொலைபேசியில் *#92702689# என்ற எண்ணை அழுத்தினால் வரிசை எண், உருவாக்கப்பட்ட தேதி, வாங்கிய நாள், கடைசியாக பழுது பார்த்த நாள் போன்றவற்றை அறிய முடியும்.

இந்த வரிசை எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைபேசி ஒருவேளை திருடுபோய்விட்டால் இந்த எண்ணை சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, அல்லது சைபர் கிரைம்க்கு (இணையக் குற்றங்கள் தடுக்கும் காவல்துறையின் சிறப்புப் பிரிவு) தெரியப்படுத்தினால் அவர்கள் இந்த கைபேசியை செயலிழக்கச் செய்து விடுவார்கள். இதை பரவலாக எல்லோரும் பயன்படுத்தும் பட்சத்தில் கைபேசி திருடுவதில் எந்த பயனும் இல்லை எனும் நிலை உருவாகி கைபேசித் திருட்டை அறவே ஒழிந்துவிடலாம்.

IMEI என்று அழைக்கப்படு இந்த எண், ஒவ்வொரு முறை கைபேசியை நாம் இயக்கும்போதும் தகவல் சேமிப்பிலிருந்து நமது எண்ணை சரிபார்த்து கைபேசி இணைப்பு உருவாகும். தடை செய்யப்பட்ட எண் எனில் இந்த இணைப்பு உருவாகாது. உலகின் எந்த தொலைபேசி நிறுவனம் தரும் எந்த சேவையும் , எந்த சிம் கார்ட்டும் இதை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.

சென்னை சைபர் கிரைம் பிரிவு பல கைபேசிகளை IMEI மூலம் கண்டு பிடித்துள்ளது. ஏதேனும் கைபேசி தொலைந்து விட்டால் cop@vsnl.net என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு வழக்கு பதிவு செய்ய அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நமது கைபேசிகளில் ஏராளமான எண்களை சேமித்து வைத்திருப்போம். அதுவும் இளைஞர்களின் கைபேசிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம் நூற்றுக்கணக்கான எண்கள் நிரம்பி வழியும். அதில் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக ICE (In Case Of Emergency ) என்று ஒரு எண்ணை சேமித்து வைக்க அறிவுறுத்துகின்றன சர்வதேச தொலைபேசி சேவை நிறுவனங்கள். சம்பந்தப்பட்ட நபர் ஏதேனும்  விபத்தில் சிக்கிக் கொண்டால் யாரை அழைப்பது என்னும் குழப்பங்களுக்கு விடை சொல்வதாக இந்த எண் அமையும்.

மேஜை நாகரீகம், உடை நாகரீகம் போல கைபேசியில் பேசுவதற்கும் நாகரீக வரைமுறைகள் உள்ளன. நண்பர் குழுவினருடன் உரையாடுகையில் கைபேசி மணியடித்தால் ‘மன்னியுங்கள்’ என்று சொல்லிவிட்டு சற்றுத் தொலைவில் சென்று பேசுங்கள். ஏதேனும் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் கைபேசி கிணுகிணுத்தால் அந்த அழைப்பை மிகவும் குறுகியதாய் ஆக்கிக் கொள்ளுங்கள் இல்லையேல் அருகிலிருக்கும் நண்பர் முக்கியமற்றவராகவும் கைபேசியில் பேசுபவர் முக்கியமானவர் போலவும் ஒரு தோற்றம் உருவாகிவிடும். காதலியுடன் அமர்ந்திருக்கையில் கைபேசியை அணைத்துவிடுங்கள்.

ஆலயங்கள், உணவு விடுதிகள், மரண வீடுகள், திருமண வீடுகள், பேருந்து போன்ற வாகனங்கள், திரையரங்குகள் இங்கெல்லாம் கைபேசியை அதிர்வு முறையில் வைத்திருங்கள். அப்போது தொலைபேசியின் சத்தம் வெளியே வந்து மற்றவர்களை இம்சைப்படுத்தாது. மற்றவர்களின் அனுமதியின்றி அவர்களை எந்தக் காரணம் கொண்டும் புகைப்படம் எடுக்காதீர்கள். பொது இடங்களில் சத்தமாய் பேசி மற்றவர்களின் அமைதியான மனநிலையைக் கெடுக்காதீர்கள்.

எல்லாவற்றிலும் முக்கியமாக நீங்கள் சமீபத்திய அழைப்பு இசை வைத்திருக்கிறீர்கள் என்பதற்காக அதை அலறவிடாதீர்கள். எல்லோரும் கேட்கட்டும் என்பதற்காக அழைப்பை எடுக்க தாமதிக்காதீர்கள். இவையெல்லாம் கைபேசி நாகரீகங்களாகவும், இவை தெரியாதவர்கள் நாகரீகம் கற்காத கற்கால வாசிகள் போலவும் மேல் நாடுகளில் பார்க்கப்படுகின்றார்கள்.

கனடாவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகம் இணையத்தின் வளர்ச்சி இனிமேல் கைபேசிகளில் தான் என்று தனியாக ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. எப்போதும் கிடைக்கும் இணைப்பு, எங்கிருந்தும் இயக்கும் வசதி போன்றவற்றால் இனிமேல் இணையம் கணினியின் மூலமாக இயக்குவது என்பது அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறது அந்த ஆய்வு. மிக அதிக தரம் வாய்ந்த டிஜிடல் காமரா, வீடீயோ வசதி, மின்னஞ்சல், இசை என அனைத்தும் கைபேசிகளில் வந்து விட்டதால் உலகம் உள்ளங்கையில் என்னும் வாக்கியம் நிஜமாகியிருக்கிறது.

ஆகாயத்துக்கு அடுத்த வீடு – விருதுக்குத் தகுதியானதா


எழுதிக் கொண்டிருந்தான்
விமர்சனங்கள் வந்தன
எழுதாமல் இருந்தான்
விருதுகள் வந்தன.

மேத்தா தன்னுடைய சாகித்ய அகாதமி விருது பெற்ற நூலில் இந்தக் கவிதையை எழுதியுள்ளார். அவர் எழுதியது பொய்க்கவில்லை. தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருந்தபோது வாய்க்காத சாகித்ய அகாடமி விருது இப்போது அவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த நூலிலுள்ள கவிதைகள் கடந்த பல ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியான அவருடைய கவிதைகளின் தொகுப்பு. இந்தக் கட்டுரையின் முதல் நான்கு வரிகளில் இருக்கும் கவிதையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். கவிஞரின் வாக்கு பொய்க்கவில்லை என்பது புலனாகும்.

காயம் பட்டவர்களின்
புண்களின் மீது
கவிதை எழுதாதே
தோழா
களிம்பு தடவு

என்று அவர் சமூகத்தின் மீதான அக்கறை பிரதிபலிக்க, எடுத்ததுக்கெல்லாம் கவிதை வடிப்பவர்களைப் பார்த்து கோபத்தில் கொப்பளிக்கிறார். கவிதை நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இந்தக் கவிதை இருக்கும் அதே நூலில் கவிஞர் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழக மாணவிகள் மூவர் தர்மபுரியில் எரிக்கப்பட்டதையும், குஜராத் கலவரத்தையும், தஞ்சை வறுமையையும், குழந்தைகள் தீயில் கருகியதையும், நடிகை சில்க்.ஸ்மிதா அவர்களின் தற்கொலையையும் கவிதையாய் வடித்துத் தந்திருக்கிறார். கவிதை எழுதாதே என்று சொல்லிக் கொண்டு கவிஞரே கவிதை எழுதுகிறாரே என்று நான் நினைப்பது போலவே நீங்களும் நினைத்தால் கவிஞரை சந்திக்கும் போது கேளுங்கள்.

சில காதல் கவிதைகளையும் கவிஞர் இந்தத் தொகுதியில் தந்திருக்கிறார். கம்பன் காவியத்தில் / வாலி வதை/ கண்ணே நீ செய்வது / வாலிப வதை – என்று அவர் குற்றப்பத்திரிகை என்னும் கவிதையில் கசிந்துருகுகிறார். கன்னிமாடம் என்னும் கவிதையில் காதலி பிரிவைப் பற்றி எழுதுகிறார். இதயத்தின் தொலைபேசி என்னும் கவிதையில் ஏழெட்டு பக்கத்துக்கு காதலன் காதலியின் தொலை பேசி உரையாடல்களையும், பின் திருமணப் பத்திரிகை நீட்டும் சம்பவத்தையும் ( இன்னுமா ? ) எழுதுகிறார். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் வாசித்த கவிதைகளின் வாசமே இதிலும். பழையதானதால் கொஞ்சம் தூசு வாசனையடிக்கிறது.

மனிதனுக்கு மதம் பிடிக்கிறது, மதத்துக்கு மதம் பிடிக்கிறது என்றெல்லாம் இன்னும் எத்தனை காலம் தான் கவிஞர்கள் எழுதிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

கால்நடைக்குத் / தெரியுமா /கவிதை நடை

என்றும்,

மூக்கைப் பிடித்தபடி / தாக்குப் பிடிக்கிறது / கூவம் நதிக்கரையில்/ கூவ வந்த குயில்

என்றும் சில சின்னச் சின்னக் கவிதைகளையும் கவிஞர் எழுதியிருக்கிறார்.

முக்கியமான கவிதையான ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ கவிதையைப் பற்றிக் குறிப்பிட்டேயாக வேண்டும். காதலன் காதலி பிரிவுக் கவிதை தான் இதுவும்.

எந்த ஊரில் இருந்தால் என்ன
என் கடிதத்தை நீ
தொட்டவுடன் சிலிர்க்கும் எனக்கு
.
.
நீ பார்த்த பார்வைகளைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக
.
என்றெல்லாம் சொல்லிவிட்டு

அவசியம் அனுப்பி வை
உன்
திருமண அழைப்பிதழை

என்று முடிக்கிறார் கவிஞர். இந்தக் கவிதையே நூலின் தலைப்பாகவும் அமைந்து விட்டிருக்கிறது. நூலின் தலைப்பிற்கு பெருமை சேர்க்கும் என்று நினைத்து ஆர்வமாய் வாசித்த இந்தக் கவிதை கூட ஏமாற்றத்தைத் தருவது சற்று வியப்பளிக்கிறது. குளங்களை எங்கே போய் குளிப்பாட்டுவது, குடைக்கு யார் குடை பிடிப்பது என்பது போன்ற கல்லூரி மாணவர்கள் எழுதிப் பழகும் கவிதைகளும் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ நூலில் இருக்கும் கவிதைகளில் சில ஈர்க்கின்றன. வசதி உள்ளவர் / வழுக்கி விழுந்தால் / குளியல் அறை என்று / கூறுக. பஞ்சை பராரிகள் / வழுக்கி விழுந்தால் / படுக்கை அறை என்று / பகர்க. என்னும் நூலில் வறுமை மக்களின் வாழ்க்கைக் கசப்பை நுட்பமாகக் கூறுகிறார். ஈராக் அழிந்து / சிதைந்த பிறகு தான்/ தெரிந்தது / பேரழிவு ஆயுதங்கள் / எவர் கையில் / இருந்ததென்பது – என்னும் கவிதையில் அமெரிக்காவின் வன்முறை போரைக் குறித்த தார்மீக கோபத்தைப் பதிவு செய்கிறார்.

புதுமையான சிந்தனையையோ, புதிய மொழியையோ சுமக்காமல் வெறுமனே முடிவு தெரிந்த துப்பறியும் படம் பார்ப்பது போல பல கவிதைகள் வெறுமனே நீள்கின்றன.

யார் தட்டியபோதும் / திறந்ததே இல்லை / இப்போது ஒவ்வொரு கதவையும் / ஒங்கி ஓங்கித் தட்டி / ஓய்கிற போது / தெரிகிறது. தட்டும் கையின் வலியும் / திறக்காத கையின் திமிரும். என்கிறார் கவிஞர். அவர் எந்தக் ‘கை’ யின் உதவியுடன் தட்டினார் என்பது தெரியவில்லை. ஆயினும் ஒருவழியாக கதவு திறந்திருக்கிறது.

கவிஞர் மேத்தாவின் நூல்கள் பத்துக்கு மேற்பட்டவற்றை நான் படித்திருக்கிறேன். கல்லூரி நாட்களில் வியப்பை அளித்த கண்ணீர்ப் பூக்கள் கவிதை நூலைப் போல மேத்தாவின் வேறெந்த நூலும் என்னை ஈர்க்கவில்லை என்றே சொல்வேன் நான்.

கவிஞர் மு. மேத்தா சாகித்ய அகாதமி விருது பெற தகுதியுடையவாராய் இருக்கலாம். ஆனால் அவருடைய ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ அதற்குரிய தகுதியுடன் விளங்குவதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கவிதை நூலுக்குக் கிடைத்திருக்கும் சாகித்ய அகாதமி விருது ‘இதுக்கே கிடைக்குதுன்னா நம்ம புக்குக்கும் கிடைக்கும்’ என்னும் ஒரு நம்பிக்கையை தமிழகக் கவிஞர்களுக்கு வழங்கியிருக்கிறது என்பது மட்டும் நிஜம்.