போதை :- வீழ்தலும், மீள்தலும்

( இந்த வார தமிழ் ஓசை நாளிதழின் இலவச இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )
போதைப் பழக்கம் இன்றைய உலகளாவியப் பிரச்சனையாய் உருமாறியிருக்கிறது. உலக அளவில் போதைப் பொருட்களின் தாக்கமும் அதனால் சமூகம் அடையும் பின்னடைவும், சீர்கேடும், சிதைவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. குடும்ப வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, சமூக அந்தஸ்து, நட்பு, உறவினர், பொருளாதாரம் என அனைத்தையும் ஒட்டு மொத்தமாய் சிதைத்து விடக் கூடிய சக்தி இந்த போதைப் பழக்கத்துக்கு உண்டு. கிராமங்களில் சாராய போதைக்கு அடிமையாகி சிதைந்து போகும் குடும்பங்கள் ஏராளம் ஏராளம்.

போதை பெரும்பாலும் ஒரு சுய உணர்வற்ற நிலையில் எடுக்கும் முடிவாகவே இருக்கிறது. போதைக்கு அடிமையானபின் அந்தப் பழக்கத்தைத் தொடர்கையில் சமூகமோ, குடும்பமோ பின் விளைவுகளோ மனதில் எழாதபடி அந்த போதை விருப்பம் மூளையை ஆக்கிரமித்து விடுகிறது. அறிவியலில் இதை டோ போமைன் விளைவு என்கிறார்கள்.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் போதைக்கு அடிமையாய் இருப்பது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன் அதன் குணங்களையும் பாதிப்பதாக அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. கருவில் இருக்கும் குழந்தைக்கு தாயின் சிந்தனைகள், பேச்சுகள் போன்ற சிறு சிறு செயல்களும் சில செய்திகளை பகிர்வதாகவும் போதைக்கு அடிமையான தாய்மார்ளின் குழந்தைகளுக்கு இந்த அனுபவங்களில் குறைபாடு ஏற்படுவதுமே இந்த பாதிப்புக் காரணமாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடும்பத் தலைவரின் போதைப் பழக்கம் குழந்தைகளின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கிறது. அவர்களின் சமூக வாழ்க்கை கேள்விக்குறியாகவும், கேலிக்குறியாகவும் மாறுவதற்கு பெற்றோரின் போதை பல நேரங்களில் காரணமாகிறது. குழந்தைகள் சரியான கல்வி, கவனிப்பு, அரவணைப்பு, அன்பு, வழிகாட்டுதல் போன்றவை இல்லாமல் தடுமாறும் சூழலை இது உருவாக்கி விடுகிறது.

ஹெராயின் என்ற போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மட்டுமே உலகில் இரண்டு கோடி பேர் இருப்பதாக உலக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் உலக மக்கள் தொகையில் கால்வாசி பேர் புகையிலை சார்ந்த பழக்கத்தை உடையவர்களாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (who) தெரிவிக்கிறது. ஹெராயின், கஞ்சா போன்ற போதைப்பொருளுக்கு அடிமையாகி இறப்பவர்களை விட இருபத்து ஐந்து சதவீதம் அதிகமானோர் புகைப் பழக்கத்தினால் இறப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கேனாபிஸ் எனப்படும் போதைப் பொருளே உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் போதைப் பொருள். கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் படி பதினேழு கோடி பேர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். பதினைந்து வயதுக்கு மேற்பட்ட, உலக மக்கள் தொகையில் 4.9 % பேர் இது போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக இந்த அறிக்கை அதிர்ச்சி செய்தி அளிக்கிறது.

அமெரிக்காவில் சமீப காலமாக குறைந்து வரும் இந்த போதைப் பழக்கம் ஆசிய பகுதிகளில் அதிகரித்திருப்பதாகவும், அதற்குக் காரணம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள விழிப்புணர்வும் ஆசியாவில் எழாமல் போன விழிப்புணர்வுமே காரணம் என்றும் போதை குறித்த உலக அறிக்கை தெரிவிக்கிறது.

உலகத்தில் பத்து வினாடிக்கு ஒருவர் புகை பிடிக்கும் பழக்கத்தினால் இறந்து கொண்டிருக்கிறார். நுரையீரல் புற்று நோய் வந்து இறப்பவர்களில் 82 விழுக்காடு மக்கள் புகை பிடிக்கும் பழக்கமுடையவர்கள் என்கிறது மருத்துவ ஆய்வு. புகை பிடித்தல் எனும் போதைப் பழக்கம் மிக வேகமாகவும் அபாயகரமாகவும் வளரக் கூடிய ஒன்று. மிகவும் எளிதாகக் கிடைப்பதாலும், மிகவும் மலிவாகக் கிடைப்பதாலும், புகைத்தல் என்பது சமூக அந்தஸ்து போன்ற ஒரு மாயையை ஊடகங்கள் உருவாக்கியிருப்பதனாலும் இது இன்று உலகெங்கும் வேரோடிப் போயிருக்கிறது.

புகைத்தலினால் ஐரோப்பாவில் ஆண்டுக்கு 79,000 மக்கள் இறக்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்துவதற்காக புகை பிடித்தல் தடைச் சட்டம் ஒன்று விரைவில் UK வில் வர இருக்கிறது. தற்போது அயர்லாந்தில் புகை பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. அது UK விலும் அமுல் படுத்தப் படப் போகிறது.

அமெரிக்காவில் பெண்களிடையே அதிகமாக இருக்கும் போதைப் பழக்கம் இந்தியப் பெண்களையும் விட்டு விடவில்லை. மும்பையில் மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்னும் விகிதத்தில் போதைக்கு அடிமையாகும் நிலை உள்ளது. இந்தியாவில் மட்டும் குறைந்த பட்சம் சுமார் ஏழு கோடி பேர் போதைக்கு அடிமையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பன்னிரண்டு வயதுக்கும் பதினெட்டு வயதுக்கும் இடைப்பட்ட பதின்வயதினரில் 28.7 விழுக்காடு மக்கள் ஏதோ ஒரு போதைப் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என அதிர்ச்சியளிக்கிறது அதே ஆய்வு.

கவனிப்பாரற்று தெருவில் அலையும் சிறுவர்கள் என்றோ ஒருநாள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள் என்கிறார் மும்பை குழந்தை நல அமைப்பாளர் பாரதி.

அமெரிக்காவில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு நபர் போதைப் பழக்கத்தினால் இறந்து கொண்டிருக்கிறார். பதினெட்டு வயதிற்கும் இருபத்தொன்று வயதுக்கும் இடைப்பட்டவர்களின் 51% ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பெண்களில் இது 36% என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.

அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ‘போதையிலிருந்து விடுபட’ பயிற்சிகளும், மருத்துவங்களும் நடைபெறுகின்றன. ஆனாலும் அது மிகப் பெரிய வெற்றியடையவில்லை. போதைப்பழக்கத்திலிருந்து மக்களை வெளியே கொண்டு வருவது அத்தனை எளிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.

போதைக்கு அடிமையானவர்கள், தான் போதைக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை ஒத்துக் கொள்தல் அவசியம். போதை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் நம்மைக் கொண்டு வந்து விட்டது என்பதையும், அதனால் நம்முடைய வாழ்க்கையில் நாம் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் உணர்ந்து கொள்ளாமல் போதையிலிருந்து வெளியேறல் சாத்தியமில்லை.

போதைப் பழக்கத்திலிருந்து மக்களை வெளியே கொண்டு வர மக்களின் சமூக அமைப்பையும், தனிமனித நம்பிக்கைகளையும் பலப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் போதைப் பழக்கத்தை ஒழித்து விட முடியும் என்பது ஒரு சாராரின் வாதம்.

நாம் நம்மை விடப் பெரிய சக்தி என்று நாம் நம்பும் கடவுளிடம் நம்மை ஒப்படைத்து, மனதை நல்வழிப்படுத்த வேண்டும். இறைவன் கொடுத்த கொடையே நமது உடல். நமது உடல் இறைவன் உறையும் ஆலயம் அதை தீட்டுப் படுத்தக் கூடாது போன்ற நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் போதையை ஒழித்துவிடலாம் என்பது இன்னொரு தரப்பினரின் வாதம்.

போதைக்கு அடிமையாகி இருப்பவர்களிடம் எல்லாம் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் எண்ணம் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் இயலாமையினால் உழலும் நிலைக்கு இந்த போதைப் பழக்கம் அவர்களை இழுத்துச் சென்று விடுகிறது. விளையாட்டாய் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஆரம்பித்த பழக்கம் வாழ்வின் பிற்பகுதியை மிகப்பெரிய இருட்டுச் சுரங்கத்துக்குள் இட்டுச் செல்லும் என்று ஆரம்பிக்கும் போது யாருமே நினைத்துப் பார்ப்பதேயில்லை.

போதைக்கு அடிமையானதை எப்படி அறிந்து கொள்வது ?

* அடிக்கடி போதை வேண்டுமென்று தோன்றும். பயன்படுத்தும் போதைப் பொருளைப் பொறுத்து ஒரே நாளில் பலமுறை கூட பயன்படுத்தத் தோன்றும்.

* ஏதாவது செய்து தேவையானது கிடைக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளத் தோன்றும். எதை மறந்தாலும் போதைப் பொருளை மறக்காமல் கை யிருப்பு  வைத்துக் கொள்ளத் தோன்றும்.

* நிறுத்த வேண்டுமென்று அடிக்கடி முயன்று தோற்றுப் போன அனுபவங்கள் இருக்கும். நிறுத்தினாலும், அது மிகவும் குறிகிய நாளே நீடிக்கும்.

* போதைப் பொருள் கிடைப்பதற்காக கீழ்த்தரமான செயலைக் கூட செய்யத் தோன்றும். திருடுவதோ, கெஞ்சுவதோ, வெட்கம் பாராமல் அலைவதோ  நடக்கும்.

* அந்த போதை தான் உங்கள் பிரச்சனைகளின் தீர்வு என்னும் மன நிலை உருவாகும்.

இவையெல்லாம் நீங்கள் போதைக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தும் எச்சரிக்கை மணிகள். மணி அடிக்கும் போதே விழித்துக் கொண்டால் பெரிய விபத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும்.

போதைப் பொருட்கள் நமது ஞாபக சக்தியை விழுங்கி ஏப்பமிடுகின்றன. நரம்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்கின்றன. இரத்த அழுத்தத்தை அதிகரித்து சீரான இதயத் துடிப்பை பாதிக்கின்றன. கவனத்தைச் சிதைக்கின்றன. ஒரு குழப்பமான மனநிலைக்குள்ளும், குற்ற உணர்ச்சிக்குள்ளும் நம்மை ஆழ்த்துகின்றன. சோர்வையும் உடல் பலகீனத்தையும் உருவாக்குகின்றன என அடுக்கிக் கொண்டே செல்லும் போதையினால் ஏற்படும் நன்மை என்று ஒன்று கூட இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் போதைக்கு அடிமையாகாமல் கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது.

* பள்ளிக்கூடத்தில் குழந்தை ஒழுங்காகச் செல்கிறானா ? அவனுடைய நண்பர்கள் யார் ? படிப்பில் திடீர் வீழ்ச்சி ஏதாவது ஏற்படுகின்றதா என்பதை பெற்றோர் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். பள்ளிக்கூடத்துக்கு அடிக்கடி வருகை தந்து ஆசிரியர்களைச் சந்திக்க வேண்டும் அது குழந்தைகள் வழி தவறாமல் தடுக்கும்.

* உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். செயல்பாடுகளிலோ அல்லது உரையாடல்களிலோ ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதை ஆழமாகக் கவனிக்க வேண்டும்.

* திடீரென ஆடை அணிவதிலோ, ஒழுங்காக இருப்பதிலோ கவனம் செலுத்தாமல் இருக்கிறானா ? புதிதாக கவனக் குறைவு போன்றவை இருக்கிறதா என்பதை யும் கவனிக்க வேண்டும்.

* திடீரென தனிமை தேடுகிறானா ? அவனுடைய தனிமை அறையில் யாரும் நுழைவதைத் தடுக்கிறானா ? குடும்பத்தினருடனான உறவில் ஏதேனும் மாற்றம் ஦  தரிகிறதா எனப் பார்க்க வேண்டும்.

* அடிக்கடி பணம் கேட்கிறானா ? உண்மையான தேவை தானா என்பதை கண்டறியுங்கள். படிக்கும் காலத்தில் அளவுக்கு அதிகமாக பணம் கேட்கிறானெனில்   ஏதோ பிழையிருக்கலாம் என கணியுங்கள்.

போதைக்கு ஒருவன் அடிமையாக பல காரணங்கள் இருக்கலாம். தனி மனித குணாதிசயம் அதில் முக்கிய காரணி. மிக அதிக பிடிவாத குணமும், மனக் கட்டுப்பாடும் இல்லாதவர்கள் போதைக்கு அடிமையாவது அதிகம்.

பதின் வயதினரைப் பொறுத்தவரையில் அவர்கள் சார்ந்திருக்கும் சமூக அமைப்பும், நண்பர்கள் வட்டாரமும் அவர்களுடைய பாதையை நிர்ணயிக்கின்றன. பெற்றோரின் வழிகாட்டுதலும், முன்மாதிரிகையும் இந்த கால கட்டத்தில் அவசியத் தேவையாகின்றன.

தனிமை, மன இறுக்கம் போன்ற மன நிலை உடையவர்களுக்கு போதைப் பழக்கம் எளிதில் தொற்றிக் கொள்ளும். காரணம் அவர்கள் தங்களுடைய குறைபாடுகளை போதைகளால் சரி செய்து விடலாம் என தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

பெற்றோரோ, குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களோ போதைப் பழக்கம் உடையவர்களாய் இருந்தால் குழந்தைகளுக்கும் அந்த மனநிலையும், பழக்கமும் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.

போதைப் பழக்கம் தனி மனிதனைப் பாதிக்கும் விஷயம் என்று கருதி விடவும் முடியாது. இதனால் மற்றவர்களும் பாதிப்படையும் சூழல் உருவாகிறது.

ஒருவருடைய போதைப் பழக்கம் குடும்பத்தின் பொருளாதாரத்தையும், நிம்மதியையும், ஆனந்தத்தையும் ஒட்டு மொத்தமாய் அழித்து விடும் வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் திறமை குறைதலும், அடிக்கடி விடுப்பு எடுக்கும் நிலையினால் நம்பிக்கை இழத்தலும், ஒரு கால கட்டத்தில் வேலையையும், புகழையும் இழக்கும் நிலையும் உருவாகலாம்.

மாணவர்களைப் பொறுத்தவரை தங்களுடைய முன்னேற்றமும், உடன் பயிலும் மாணவர்களின் முன்னேற்றமும் சிந்தனையும் மாறுபடும் வாய்ப்பும் உண்டு.

திருடுதல் ஏமாற்றுதல் போன்ற தீய, சமூக விரோத செயல்களுக்கு போதைப் பழக்கம் ஒருவனை இட்டுச் செல்லும் வாய்ப்பும் உள்ளதால் அது ஒரு சமூகத்தைப் பாதிக்கும் விஷயமாகவும் மாறி விடும் வாய்ப்பு உண்டு.

போதைகளின் பிடியில் சிக்கியவர்கள் பாலியல் தவறுகளுக்குள்ளும் சிக்கி நோய்களைப் பரப்பவோ, பெற்றுக் கொள்ளவோ, கலாச்சார சீரழிவிற்குக் காரணியாக மாறவோ அதிக வாய்ப்புகள் உள்ளன.

சில மருந்துகள் கூட போதை தரக் கூடியவை அவற்றை சரியான மருத்துவச் சீட்டு இல்லாமல் வினியோகிப்பதைத் தடை செய்ய வேண்டும். கிராமப் புறங்களில் ‘அரிஸ்டம்’ எனப்படும் பெண்களின் தாய்மைக் கால மருந்தை போதைக்காகப் பயன்படுத்தப் படும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

பத்து முதல், இருபத்தி இரண்டு விழுக்காடு வரை சாலை விபத்துகளுக்கு குடித்து விட்டுக் காரோட்டுவதே காரணம் என NHTSA அறிக்கை தெரிவிக்கிறது.

போதைக்கு அடிமையானவர்கள் வெளி வருவது கடினம். ஆனால் முடியாதது அல்ல. பெரும்பாலும் போதைக்கு அடிமையானவர்கள் தானாய் முன் வந்து பரிசோதனைகளோ, மருத்துவமோ செய்யாதபோது உறவினர்கள், நண்பர்கள், சமூகம் முன்வந்து அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். இந்தியாவில் அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதா, நேச்சுரோபதி, யோகா என அனைத்து வகையான மருத்துவ பயிற்சிகளும் போதையிலிருந்து விடுபட உதவுகின்றன.

விடுபட முடியவில்லையே எனும் குற்ற உணர்விலிருந்து முதலில் வெளி வர வேண்டும். சிறிது சிறிதாக சீரான விடுபடுதல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தயக்கமில்லாமல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைகளும், மருத்துவமும் பெற வேண்டும். பழைய போதை கும்பல் இருக்கும் திசை பார்த்து தலை வைத்துக் கூட படுக்கக் கூடாது.

போதையிலிருந்து விடுதலைக்காக பரவலாக மேற்கொள்ளப்படுவது விடுபடுதல் மருத்துவம் எனலாம். மருத்துவமனையில் சிறிது காலம் தங்கி மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் போதைப் பழக்கத்திலிருந்து சிறிது சிறிதாக விடுபட வைத்தல். இந்த முறையில் ஒரேயடியாக போதையை நிறுத்தாமல் அதன் அளவைக் குறைத்து பரிசோதிப்பார்கள். நாளடைவில் அவர்கள் முழுவதுமாக அதிலிருந்து விடுபடும் வாய்ப்புகள் உள்ளன.

போதையிலிருந்து விடுபடும் போது தூக்கமின்மை, குழப்பம், கோபம், எரிச்சல், வியர்த்துக் கொட்டுதல் உட்பட ஏராளமான பக்க விளைவுகள் தோன்றும். பெரும்பாலானவை மனம் சார்ந்த விளைவுகளே. இவற்றைப் புரிந்து கொண்டு ஒரு நல்ல சமூக, குடும்ப, நண்பர்கள் அமைப்புடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னொரு முறை தொடர்ந்த ஆலோசனை மையங்கள், குழுக்கள் மூலமாக மன மாற்றம் ஏற்படுத்துவது. இந்த முறையில் ஆன்மீகம் சார்ந்த அமைப்புகளும் செயல்படுகின்றன. மனதை கடவுள் பால் ஒருமுகப் படுத்துவதன் மூலமாக உலகியல் சார்ந்த போதைகளிலிருந்து விடுபடும் அறிவுரைகள் நிகழ்த்துகிறார்கள். இதனடிப்படையில் நடக்கும் பயிற்சிகளில் அமெரிக்காவின் பன்னிரண்டு நிலை முறை ஒன்று மிகவும் பிரபலம்.

போதைக்குள் செல்லாமல் இருப்பதே ஒரு மனிதன் செய்ய முடிந்த மிகச் சிறந்த செயல் எனலாம். வருமுன் காப்பதே மிகவும் சிறந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும் குழந்தைகள் போதைக்குள் செல்லாமல் தடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், குழந்தையைச் சார்ந்த அனைவருக்கும் உண்டு.

அடிக்கடி உரையாடுங்கள். அவர்களுடன் போதையின் தீமைகளையும், அதன் பக்க விளைவுகளையும் விரிவாக எடுத்துரையுங்கள். அவர்கள் பேசுவதை அவர்களுடைய கருத்துக்களையும் கவனமாகக் கேளுங்கள். முக்கியமாக அவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குங்கள். சிறு வயதினர் அறிவுரைகளைக் கேட்டு வளர்வதை விட பார்த்து வளர்வதே ஆரோக்கியமானது. அவர்களோடான உறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு இரண்டு மடங்காக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சுமார் 6 இலட்சம் குழந்தைகளும் இந்த நோய்க்கு ஆளாகியிருப்பது வேதனை. இந்த எயிட்ஸ் நோய் பரவலுக்கும் போதைப் பழக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நார்கானோன் தலைவர் ‘கிளர்க் கார்’ தெரிவிக்கிறார். இதை நிரூபிப்பது போல இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் எயிட்ஸ் நோயாளிகளில் 80% பேர் போதைக்கு அடிமையானவர்கள் என்னும் திடுக்கிடும் ஆய்வறிக்கையும் வெளியாகி உள்ளது.
சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை வைத்துக் கொண்டோ , சட்டத்தை மீறுபவர்களின் துணையுடனோ போதை மருந்துகள் புழக்கத்துக்கு வந்து கொண்டே இருக்கிறது. சட்டம் இன்னும் கடுமையாக்கப் பட்டு இத்தகைய குற்றங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மறுவாழ்வு நிலையங்கள் பல எளிதாக மக்களை அடையக்கூடிய நிலையில் உருவாக்கப் பட வேண்டும். மக்களிடையே போதையைக் குறித்த விழிப்புணர்வை அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

போதைப்பழக்கத்திலிருந்து ஒரு மனிதனை விடுபட வைப்பது முதல் நிலை. முதலில் அவன் போதைக்கு அடிமையாகக் காரணமாயிருந்த காரணிகளைக் கண்டுபிடித்து அவற்றை விலக்குவது இரண்டாவது நிலை. போதை தான் நமக்கு எதிரியே தவிர போதையினால் பாதிக்கப்பட்ட நபர் அல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கிய சமுதாயம் அமைய அனைவரும் ஒன்றுபட்டு போதைக்கு எதிராய் போராட வேண்டியது அவசியம்.

15 comments on “போதை :- வீழ்தலும், மீள்தலும்

  1. “போதை தான் நமக்கு எதிரியே தவிர போதையினால் பாதிக்கப்பட்ட நபர் அல்ல” — Punch Statement.

    Superb article…

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.