காதலர் தினம் : சதிகாரர்களின் சதுரங்கம்

( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை)

காதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி பதினான்காம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் ஆனந்தக் கூச்சலிட, இது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினர் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கிறதோ என்னும் அச்சம் சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே உண்டு.

வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக முதலாளிகளால் உருவாக்கப்பட்டவை அல்லது பிரபலப் படுத்தப் பட்டவை தான் இந்த ‘தினங்கள்’. அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர் தினம், மனைவியர் தினம், எதிர் வீட்டுக்காரன் தினம் என்று ஏதேதோ தினங்களை வர்த்தக வளர்ச்சிக்காக உருவாக்கி அந்தந்த தினங்களில் அந்தந்த நபர்களுக்கு பரிசுகள் வழங்காவிடில் அது சாவான பாவம் போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் வழியாக பரப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு அதன் வெப்பத்தில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திர சாலிகள் அவர்கள்.

முதலாளிகளின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத மக்கள் தங்கள் கரன்சிகளை வாழ்த்து அட்டைகளிலும், பூங்கொத்துகளிலும், சாக்லேட் பாக்கெட்களிலும் செலவிடுகையில் சத்தமில்லாமல் மில்லியன் கணக்கில் லாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள்.

காதலர் தினம் என்னும் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய், ஏதேனும் அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது ஆனால் முதலாளிகள் நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம். இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் பளீரென புலப்படும்.

அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம்.

ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்.

உணவகங்கள், கடைகள் எங்கு பார்த்தாலும் சிவப்பு நிற இதய வடிவ பலூண்களும், மன்மதன் அம்புடன் நிற்கும் படங்களும், பூக்களும் தான். இவையெல்லாம் காதலின் சின்னங்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. பல சிறப்பு உணவுகள் காதலர் தினத்துக்கென்றே தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பல காதலர் தின திட்டங்களும் உள்ளன. சிறிய அளவில் ஆரம்பித்து இரண்டு கோடி ரூபாய் வரை செலவில் இவை நடைமுறையில் உள்ளன. ஹெலிகாப்டரில் சுற்றுதல், மிக மிக ஆடம்பர உணவகத்தில் உணவு, அரச மரியாதை என பணத்தை உறிஞ்சும் திட்டங்கள் அவை.

காதலர் தினத்தன்று தனக்கு ஒரு காதலனோ காதலியோ இல்லை என்று மற்றவர்கள் அறிந்து கொள்வதே அவமானம் என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்காவில் பள்ளி இறுதியாண்டு முடித்து வெளியே வரும் மாணவ மாணவியர் கற்போடு இருந்தால் கேலிக்குரியவர்களாய் பார்க்கப் படுவார்கள். இந்தியாவிலும் அதே போன்ற ஒரு கலாச்சாரத்தை ஊக்குவிக்க ஊடகங்களும், காதலர் தினம் போன்ற விழாக்களும் உதவுகின்றன.

காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடாவிடில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.

நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல், மெய்யின் கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது. இன்றைய திரைப்படங்கள் சித்தரிக்கும் கவர்ச்சிப் பணியே காதலென்று கற்றுக் கொள்ளும் இளவயதினர் ஆழமான திருமண உறவுகளின் மீதான கலாச்சார வேர்களை கத்தரிக்கவும் துணிந்து விடுவது தான் வேதனை.

டிஸ்கோதேக், இரவு உணவக விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு குத்தகைக்கு விட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் காளான்கள் போல சடுதியில் தோன்றி மறைவனவாக உள்ளன என்பதும் காதலை இளைய சமூகத்தினர் இன்னும் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.

பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து …. கம்ப ராமாயணத்தில் கம்பரின் கவித்துவம் கவியும் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகூட்டுவதாய் விளங்குகிறது. காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் மலர்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

இந்த காதலர் தினத்தின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

கிபி இருநூறாம் நூற்றாண்டின் மத்தியில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடியஸ் என்னும் மன்னன் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.

மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. என்று சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்திலும், பிரான்ஸிலும் புனித வாலண்டைன் மிகவும் பிரசித்தம்.

பண்டைய ரோமில் பிப்ரவரி என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம், வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் அன்றைக்கு இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

எப்படியெனினும், வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக ஆரம்பித்தது கவனிக்கத் தக்கது.

சீனர்களிடம் ‘ஏழின் இரவு’ எனும் பெயரில் அறியப்படும் இந்த காதலர் தினம் ஏழாம் மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தியதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல், அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்திலும் ‘நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் காணப்படுகிறது.

பிரிட்டனில் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்த காதலர் தினக் கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் சிறிய அளவில் 1700 களிலேயே துவங்கிவிட்டதாக ஊர்ஜிதமற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கிபி 1840 ல் எஸ்தர் எ ஹாலண்ட் என்பவர் வாலண்டைன் தின விற்பனையை அமெரிக்காவில் துவங்கினார். அவருடைய வாழ்த்து அட்டையே வாலண்டைன் தினத்தைத் குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான வாழ்த்து என்பது குறிப்பிடத் தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும், பூக்கள் கொடுப்பதும், சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது.

காதலர் தின வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதை அறிந்த வியாபாரிகள் மார்ச் 24ம் தியதியை வெள்ளை தினம் என்று பெயரிட்டு ஒரு புதிய விழா நாளாக்கினார்கள். அதாவது பிப்ரவரி 14ம் தியதி பரிசு வாங்கியவர்கள் மார்ச் 14ம் தியதி பதில் பரிசு வழங்க வேண்டும் எனும் கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த தினம். கொரியாவில் இன்னும் ஒரு படி மேலே போய் ஏப்ரல் பதினான்காம் நாளை கருப்பு தினமாகக் கொண்டாடினார்கள். எந்த பரிசும் காதலர் தினத்தன்று கிடைக்கா தவர்கள் ஒன்று கூடி கருப்பு நிற உணவை உண்பார்களாம்.

தென்கொரியாவில் நவம்பர் 11ம் தியதி காதலர்கள் பரிசுகளை வழங்கி மகிழும் பெப்பேரோ தினம் கொண்டாடப்படுகிறது. யூத மரபின் படி ஆவே மாதத்தின் பதினைந்தாம் நாள் ( ஆகஸ்ட் கடைசி பகுதி ) காதலர் விழா கொண்டாடப்படுகிறது. வெள்ளை உடை உடுத்தி காதலியர் ஆடுவதைக் காணும் வேலை ஆண்களுக்கு.

பிரேசில் நாட்டில் டயா டாஸ் நமோரதாஸ் எனும் தினம் ஜூன் பன்னிரண்டாம் தியதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் வாழ்த்து அட்டைகள் பூக்கள் கொடுத்து நாளை சிறப்பிப்பது அவர்கள் வழக்கம். அதற்கு அடுத்த நாள் திருமணங்களின் பாதுகாவலனான புனித அந்தோணியார் தினம் அங்கே கொண்டாடப்படுகிறது.

கொலம்பியாவில் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காதல் மற்றும் நட்பு தினம் கொண்டாடப்படுகிறது. அமீகோ சீக்ரட்டினோ – எனப்படும் ரகசிய ஸ்நேகிதனே விழாவும் அங்கே பிரபலம். பின்லாந்தில் நண்பர்கள் தினமாக இது கொண்டாடப்படுவதால் காதலுக்கு உரிய முக்கியத்துவம் இந்த விழாவிற்கு இல்லை. ரொமானியாவில் பிப்ரவரி 24ம் தியதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கும் இன்று பரவி வருகிறது. தாய்லாந்தில் காதலர் தினத்தன்று திருமணப் பதிவு அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. காதலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

வாழ்த்து அட்டை தயாரிக்கும் ஹால்மார்க் போன்ற நிறுவனங்களுக்கு இது வேட்டை நாள். ஏதேனும் நான்கு காதல் வரிகளைப் போட்டு ஒரு அம்பை இதயத்தில் சொருகி விட்டால் அவர்களுடைய விற்பனை சூடு பிடித்துவிடும்.

தனக்குக் காதலி இருப்பதைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவும், பழைய காதலர்கள் தங்கள் உடைந்து போன காதலை நினைத்து டாஸ்மார்க் கடைகளில் தாடி தடவவும், மற்றவர்கள் ஐயோ நமக்கு யாரும் இல்லையே என நினைத்து தனிமையில் புலம்பவும் ஒரு நாள் தேவை தானா என்பதை இளைஞர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

வாழ்த்து அட்டைகள், பரிசுகள், பூங்கொத்துகள் என வர்த்தக வளாகத்தைச் சூடுபிடிக்கச் செய்யும் இந்த காதலர் தினம் உண்மையில் எதைத் தான் தருகிறது ?. காதலை வெளிப்படுத்தவும் கொண்டாடவும் 364 நாட்கள் வலுவற்றவையாகி ஒரே ஒரு நாள் பட்டுமே பலமுடையதாகிறதா ? காதல் என்பது மைல் கல்லா பயணமா ? சிந்திப்போம். வர்த்தக வலையில் விழுந்து விடாமலும், சதிகாரர்களின் சதுரங்கத்தில் வெட்டுப்படாமலும் நம்மைக் காத்துக் கொள்வோம்.

15 comments on “காதலர் தினம் : சதிகாரர்களின் சதுரங்கம்

  1. Thangalin Inda Aarachi Katturai Miga Arumai,
    Thangalin inda Payanam neenda thuram Oyamal Selvadarku,
    en manamaarnda valthukal(anubavamillai irundalum)..

    Like

  2. மனமார்ந்த நன்றிகள். உங்கள் பாராட்டுகளையும், ஊக்கத்தையும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். நேரம் கிடைக்கையில் பிற கட்டுரைகளையும் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.

    Like

  3. காத‌ல‌ர் தின‌த்தை ஏதோ ஒரு தேசிய‌த் திருவிழாவாக‌ ந‌ம‌து நாட்டில் கொண்டாட‌ப்ப‌டுவ‌தைத‌ த‌விர்க்க‌, இளைஞ‌ர்க‌ளிடையே விழிப்புண‌ர்வு ஊட்டும் உங்க‌ள‌து இக்க‌ட்டுரையைப் பாராட்டுகிறேன். இப்போது க‌ட‌ந்துபோன‌ காத‌ல‌ர் தின‌த்துக்கு முன் இக்க‌ட்டுரையை நான் ப‌டிக்க‌ நேர்ந்திருந்தால், இத‌னை ப‌டிக‌ள் எடுத்து நான் அங்க‌ம் வ‌கிக்கும் எங்க‌ள் எழுத்தாள‌ர் அமைப்பின் சார்பில் எங்க‌ள் ந‌க‌ரின் ப‌ல‌ ப‌குதிக‌ளில் விநியோக‌ம் செய்திருப்பேன். ந‌ன்றி!

    > கிரிஜா ம‌ணாள‌ன்
    செய்தித் தொட‌ர்பாள‌ர்
    திருச்சி மாவ‌ட்ட‌ எழுத்தாள‌ர் ச‌ங்க‌ம்
    திருச்சிராப்ப‌ள்ளி ‍ 620021

    Like

  4. அருமையான கட்டுரை
    வியாபார உத்திக்கு ஒரு சவுக்கடி

    Like

  5. கட்டுரையும் கவித்துவமா இருக்குதே. கலக்குங்க..
    அப்படியே கீழுள்ளதப் படிச்சு மேலான கருத்துக்கள சொல்லுங்க குறைங்களையும் சொல்லுங்க ப்ளீஸ்.

    http://theyn.blogspot.com/2007/02/blog-post_3307.html

    Like

  6. Nice article. Look at it this way, people who have rational thoughts with true love know that Valentines day is just a day which business people are making use of it. So they will not fall for that, no worries about them. Others who want to impress their lover/friend during that ‘only’ day, will fall for that. MNCs using those guys as a cash cow, is rationalised!!!

    Like

  7. தங்களது கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது. தாங்கள் உபயோகப்படுத்தும் font என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

    Like

  8. Good article….
    If this article published at least one week before, some awareness might got created among the people. Let the card printers read tamil literature and give quotes from them, so that people will eventually understand, the spirit of love, instead of celeberating it for just 24hrs.

    Like

  9. i have read ur lovable article. you are collecting universal details about the valentines day. its a western culture. nowadays all the feastivals and cultural activities of western countries are migrated to india. because of ulagamayamakkal. The one word will change the whole world. best wishes for your writing articles on burning issues.
    sundharabuddhan
    chennai 24

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.