அதிகரிக்கும் ஆயுள் : வளரும் நாடுகளை அச்சுறுத்தும் வருங்காலப் பிரச்சனைகள்

 (இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை)

oldies3.jpg
ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி என சகல வசதிகளும் இருந்தன. ஆயினும் உள்ளே இருந்த அனைத்து விழிகளும் யாரேனும் தங்களைச் சந்திக்க வருவார்களா என்றே வாசலை வெறித்தன. என்று தன்னுடைய நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார் அன்னை தெரசா.

முதியோர்களைச் சூழ்ந்துள்ள மிகப்பெரிய சமுதாயப் பிரச்சனை தனிமைப்படுத்தப்படுதல். தனிமைப்படுத்தப் படுதலினால் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு பல விதமான நோய்களும் உருவாவதாக கடந்த வாரம் வெளியான சிகாகோவின் ருஷ் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் திருமணமாகாமல் தனிமைப்படுத்தப்படுபவர்களின் நிலை மிகவும் மோசமானதாக மாறிவிடுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஒருகாலத்தில் தாலாட்டி வளர்த்த தனது பிள்ளைகளாலேயே நிராகரிக்கப்படும் நிலை வரும்போது முதியவர்கள் மன அழுத்தம் போன்ற பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதுவே பிறகு உடல்ரீதியான பல நோய்களுக்கு காரணியாகிவிடுகிறது.

உலக அளவில் முதியோரின் எண்ணிக்கை இன்று வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. இது இன்று உலகளாவிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. 1900 களில் 4% முதியோர்கள் இருந்த அமெரிக்காவில் இன்று சுமார் 14 விழுக்காடு எனுமளவுக்கு அதிகரித்திருக்கிறது. மூன்று மில்லியன் எனும் அளவில் அப்போது இருந்த முதியவர்களின் எண்ணிக்கை இப்போது 36 மில்லியன் எனும் அளவை எட்டியிருக்கிறது. 2020 ம் ஆண்டு இது 17 விழுக்காடைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் 2020ல் நூறு கோடி பேர் அறுபது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள் என்கின்றன பல ஆய்வுகள்.

வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் தான் முதியோர் எண்ணிக்கை வளரும் நாடுகளில் தான் வெகு வேகமாக அதிகரித்து வருகின்றன.

உலக அளவில், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதும், அதிக வயதுடையோர் அதிகரிப்பதும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் முக்கிய காரணமாக குறிப்பிடுகிறது அமெரிக்க சென்சஸ் பியூரோ. இன்னும் பத்தாண்டுகளில் உலக அளவில் உள்ள முதியோர்களில் எழுபத்தைந்து விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் இருப்பார்கள் எனவும்,  80 வயதுக்கும் மேற்பட்டோ ர் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருப்பதாகவும் அதே கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

பெண்கள் ஆண்களை விட அதிக வருடங்கள் உயிர்வாழ்வதாக உலக அளவில் எடுக்கப்பட்ட ப்ல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்து நாடு மட்டும் இதற்கு விதிவிலக்காய் இருப்பது ஒரு ஆச்சரியம். ஆனால் இவர்களில் எத்தனை பேர் தரமான முதுமை வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்பது குடும்ப, சமூக அமைப்பைப் பொறுத்தே அமைகிறது.

சீனாவில் 16 கோடிக்கும் அதிகமான முதியோர்கள் இருக்கிறார்கள். உலகிலேயே முதியோர்கள் அதிகமாய் இருக்கும் நாடு எனும் பெயரை சீனா பெற்றுள்ளது. சீன மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் முதியோர்கள் என்றும், வருடம் தோறும் மூன்று விழுக்காடு முதியோர்கள் அதிகரிப்பதாகவும் சீன தேசிய முதியோர் குழு தலைவர் ஹூய் குறிப்பிடுகிறார். இதே நிலை நீடித்தால் 2020ம் ஆண்டில் 26 கோடி முதியவர்கள் சீனாவில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

சீனாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் உதவித் தொகை, மருத்துவக் காப்பீடு, மற்றும் சமூக பாதுகாப்பு அம்சங்கள் வேகமாக பெருகி வரும் முதியோர் எண்ணிக்கையினால் பாதிப்படைவதாக சீனா கவலை தெரிவித்துள்ளது. இதனால் சீனாவின் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு, பராமரிப்புக்கு அந்நாடு முன்னுரிமை அளித்துள்ளது. முதியோர் பராமரிப்பு இல்லங்களில் படுக்கை வசதிகள் பெருமளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஓரளவுக்கு சீனாவில் முதியோர் பராமரிப்பு முன்னேற்றம் காண்கிறது.

முதியோர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இன்றைய இந்திய மக்கள் தொகையில் 8.2 சதவீதம் பேர் முதியோர்கள். உலக முதியோர்களில் பாதிபேர் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கிறார்கள். 1996ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலகில் அனைத்து நாடுகளிலுமே 2025ல் முதியோர் விழுக்காடு மிகவும் அதிகரிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சி 167 விழுக்காடு என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்

முதியோர்கள் பெரும்பாலும் வருமானத்துக்காக இன்னொரு நபரைச் சார்ந்திருக்கும் நிலையே இன்று இந்தியாவில் பரவலாகக் காணப்படுவதால் அரசின் நிலைப்பாடு இங்கே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. முதியோர் இல்லங்களில் முதியவர்களை அனுப்புதல் இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவிலேயே அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் 1970களை விட 55 விழுக்காடு 1980 களில் அதிகரித்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை ஐம்பது வயதை எட்டிவிட்டாலே முதுமையின் உச்சத்தை அடைந்துவிட்டதுபோல வாழ்வின் மீதான பிடித்தத்தை தளர்த்திவிடுகிறார்கள். இது மிகப்பெரிய தவறு என்கின்றனர் மருத்துவர்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் எண்பது வயது முதியவரும் நல்ல ஆடைகள் அணிந்து, தன்னுடைய காரை தானே ஓட்டிக் கொண்டு கடைக்குச் செல்கிறார். வார இறுதிகளில் வெளியிடங்களுக்குச் செல்கின்றார். இதனால் அவர்கள் மன அளவில் இளமையாய் உணர்கிறார்கள்.  மன ரீதியாக முதுமையை உணர்பவர்களே விரைவில் முதுமையடைகிறார்கள்.

முதியோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்திகள் என நிபுணர்கள் பின்வரும் குறிப்புகளைத் தருகிறார்கள்.

பணி ஓய்வு என்பது உண்மையில் பணி மாற்றம் எனக் கொள்ளவேண்டும். ஒரு பணியிலிருந்து ஓய்வு பெற்று வீட்டிலோ, சமூகத்திலோ தனக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். புத்துணர்ச்சியான மனம் நோய்களின் முதல் எதிரி.

பல இடங்களைச் சென்று பார்ப்பதும், புதியவர்களுடன் நட்பு கொள்வதும், இயற்கை அழகை ரசிப்பதும் மனதிற்குத் தெம்பூட்டும். பிடித்தமான நூலை படிப்பதற்கும், படைப்பதற்கும் முதுமை ஒரு வரப்பிரசாதம் எனக் கொள்ளவேண்டும். சில வாரங்களுக்கு முன் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சிட்னி ஷெல்டன் எண்பது வயதைத் தாண்டியபின்னும் எழுதிக் கொண்டிருந்ததாக அவரைப் பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பழைய நண்பர்களைத் தேடிச் சென்று பார்ப்பதும், அவர்களுக்குக் கடிதம் எழுதுவதும், தொலைபேசுவதும் மனதை இலகுவாக்கும். பகைமை, விரோதம் காரணமாக பிரிந்திருப்பவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதும், விழிகள் நனைய பாசத்தைப் பகிர்வதும் முதியவர்களின் மன அழுத்தத்தைப் பெருமளவு குறைக்கின்றன. இளமையில் தவற விட்ட தருணங்களை முதுமையில் மீண்டெடுப்பது சுகமான அனுபவம்

பொழுதுபோக்குகளை விட்டுவிடாமல் தொடர்வதும், காலத்துக்கேற்ற புதிய பொழுதுபோக்குகளைக் கையாள்வதும் உற்சாகத்தை மீட்டெடுக்கும். மன மலர்ச்சிக்கு தொடர்ந்து பல பொழுதுபோக்குகளைக் கையாளுங்கள் என அறிவுறுத்துகின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.

ஆண்டுவிழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதும் மனதை உற்சாகமூட்டும். உடல் வலிமை ஒத்துழைக்கக் கூடிய விளையாட்டுகளை மறுக்காமல் ஈடுபடுவது மனதை இளமையாக்கும்.

முக்கியமாக வாழ்வின் முந்தைய காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்து வருந்துவதோ, ஏதேனும் எதிர்மறைச் சிந்தனைகள் மனதை வாட்டுவதோ உடலுக்கும், மனதுக்கும் கேடு விளைவிக்கும். எனவே இவற்றை மிகவும் கவனத்தோடு தவிர்த்தல் வேண்டும்.

தினமும் டைரி எழுதுங்கள். உங்கள் வாழ்வின் சுவாரஸ்யங்களால் அது நிரம்பி வழியட்டும். மனதில் என்னால் முடியும் எனும் நம்பிக்கையை வளர்ப்பதும், அனைத்தையும் பாராட்டி ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்குவதும், வாழ்க்கையை திறந்த மனதோடு ஆனந்தமாய் செலவிடுவதும் முதுமையில் மிகவும் அவசியம். ஜான் கிளென் தன்னுடைய 77வது வயதில் தன்னுடைய இரண்டாவது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாய் நடத்தினார். முதுமை பெருமைக்குரியது, இளவயதில் மரணம் தன்னை கடத்திப் போகவில்லை என்பதை முதுமை தான் ஊர்ஜிதப்படுத்துகிறது.

முதுமை இறைவனோடு ஒன்றித்திருப்பதின் காலம் என்றே மதக் கலாச்சாரத்தில் ஊறிப்போன இந்தியர்களின் கருத்தாக இருக்கிறது. அதிலும் மறுமையை நம்பும் மனிதர்களுக்கு ஆறுதல் துணையாக இருப்பது இறை நம்பிக்கையே. உடலே இறைவனின் கொடை, எனவே உடலை தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும், தீய பழக்கங்கள் அண்டாமலும் காக்க வேண்டும் என்பது பல மதவாதிகளின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கைகள் ஒருவகையில் மனதின் சோகங்களைத் துடைத்தெறிவதாகவும், எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு வாழ்க்கையை முதியவர்களுக்கு நல்குவதாகவும் மனோதத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆன்மீக நாட்டமுடையவர்கள் ஆன்மீகத்தில் ஆழமாய் நுழைவது மனதுக்கு மிகவும் ஆறுதலும், உற்சாகமும் அளிக்கும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை 65 வயது என்பது முதுமையின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. அந்த வயதில் அமெரிக்கர்கள் பணியிலிருந்து விடுபட்டு முழுமையான அரசு காப்பீடு மற்றும் சலுகைகள் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.

முதியோர்கள் தினமும் சிறிது தூரம் நடக்க வேண்டுமென்றும், உடல் நலனில் அக்கறை காட்டுவதற்குத் தயங்காமல் சிறிது உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.

HALE (Health Ageing: a Longitudinal study in Europe) எனும் மருத்துவ ஆய்வு ஒன்றில் 65 வயதுக்கு மேற்பட்டோ ர்ஆரோக்கியமான உணவு, மெலிதான உடற்பயிற்சி, குடிப்பழக்கம், புகைபிடித்தல் பழக்கம் இல்லாமை போன்றவற்றைக் கொண்டிருந்தால் இதய நோய், புற்று நோய் போன்ற பாதிப்புகளிலிருந்து 60% தப்பி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவு என்பது காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் இவற்றை உள்ளடக்கியது. மற்ற கொழுப்பு சத்துள்ள அசைவங்களைத் தவிர்ப்பதும், எண்ணைப் பதார்த்தங்களைத் தவிர்ப்பதும் அத்தியாவசியம்

உலக அளவில் முதியோர்கள் அதிகமாய் இருக்கும் நாடுகளின் ஒன்று ஜப்பான். ஜப்பானியர்கள் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது திங்கட் கிழமையை முதியோர் மரியாதை தினமாகக் கொண்டாடுகிறார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் கொண்டாடிவரும் இந்த நாளில் கெளரவிக்கப் படுகிறார்கள்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதியோர் உதவித்தொகை வழங்கும் வழக்கம் பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. 1940ல் முப்பத்து மூன்று நாடுகளில் இருந்த இந்த வழக்கம் இன்று நூற்று ஐம்பத்தைந்து நாடுகளில் காணப்படுகிறது. ஆனால் இவை வளர்ந்த நாடுகளில் சரியான முறையில் செயல்படுத்தப் படுமளவுக்கு வளரும் நாடுகளில் செயல்படுத்தப் படுவதில்லை. அது முதியோர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கிறது.

டெமிண்டியா, அல்ஸீமர் போன்ற இரண்டு நோய்கள் முதியவர்களைத் தாக்கும் அபாயம் உண்டு. கூட்டுக் குடும்பத்தில் ஆனந்தமாய் வாழும் முதியோர்களை இந்த நோய் பெரும்பாலும் தாக்குவதில்லை என்பது இங்கே கவனிக்கத் தக்கது. முதுமையில் அவர்களுடைய பார்வையும், கேட்கும் திறமையும், ஞாபக சக்தியும் குறைவதால் அந்த நாட்களில் பரிதவிப்பும், பயமும், நிலைதடுமாற்றமும் வருவது இயற்கை. இதை கவனத்துடன் அணுகவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

முதுமை ஓய்வின் காலம். முதுமையில் பெற்றோரையோ, குடும்பத்தில் உள்ள வயதானவர்களையோ பராமரிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. அவர்கள் பரிதாபத்துக்கோ, கருணைக்கோ உரியவர்கலல்ல, அவர்கள் அன்புடன் அணுக வேண்டியவர்கள். பணத்தைக் கொண்டு நிரப்பிவிட முடியாத வேதனையும், எதிர்பார்ப்பும் அவர்களுடைய சுருக்கம் விழுந்த முகத்தில் தேங்கி நிற்கின்றன. அவர்களை அன்புடன் அரவணைப்பதில் இருக்கிறது மனித நேயத்தின் மொத்தமும்.


 

Advertisements

3 comments on “அதிகரிக்கும் ஆயுள் : வளரும் நாடுகளை அச்சுறுத்தும் வருங்காலப் பிரச்சனைகள்

 1. Arumaiyana katturai. Mudirchi enbadhu mudhalil ennamagae, piragudaan unnmaiyagae varugiradhu enbadhu enn thaizhmayanae karuthu, melum namm samudayathil velayilirundhu oivu endru vandaalae mariyadhai poi vidugiradhu, yennnendral sambarippavnai poliyanae oru maryiyadhaiyudan daan samoogam parkiradhu, panamae manidhanai nirnayikiradhu, manidhae thanmai endra ondru marithu varukiradhu. ellorum thangalum kuzhandai, valiba, mudhiya paruvangalai anubavithae therae vendum, adhanai marakkae koddathu.

  Like

 2. மனித நேயம் மறந்த மனிதர்கள்..

  தாமரையின் கவிதை நினைவுக்கு வருகிறது..

  புத்தர் சிரித்தார் :

  ஆக்சிஜன் மேலிருந்த
  அன்பு குறைந்துபோய்
  இப்போதெல்லாம்
  ஹைட்ரஜனோடு
  ஐக்கியமாகி விட்டோம்
  புத்தர் சிரித்தார் என்று
  நாமும் சிரித்து வைத்தோம்
  அணுக்குண்டுகளைக்
  கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
  மனித நேயத்தை
  ஏவு கணையில்
  ஏற்றி அனுப்பி விட்டார்களே
  என்ற உதைப்பின் ஊடாக…….

  கடவுள் இருக்கிறானா இல்லையா என்பதல்ல கேள்வி.. மனிதன் இருக்கிறானா..?? என்கிறார் உலக நடிகர்.. கமல்.. சரியான கேள்விதான்..

  சூர்யா
  துபாய்
  butterflysurya@gmail.com

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s