சென்னை சங்கமம் : கவியரங்கம் – ஒரு விரிவான கருத்துரை

img_3142-small.jpg

கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் கவிஞர்கள் இங்குலாப், அறிவுமதி, நா.முத்துகுமார், ஆண்டாள் பிரியதர்சினி, சாவல்பூண்டி சுந்தரேசன், வ.எ.ச ஜெயபாலன், கவிப்பித்தன், கபிலன், மரபின் மைந்தன் முத்தையா போன்ற கவிஞர்கள் நடத்திய பட்டிமன்றம் நேற்று சென்னை சங்கமத்தின் விழாவாக நடந்தது.

ஆறுமணிக்கே அரங்கத்தில் சென்றுவிட்டபடியால் ‘காலனியாதிக்கக் கப்பலை மோதி நிறுத்திய சுதேசிப்பாறை – வ.உ.சி’ எனும் வில்லுப்பாட்டைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது. சுமார் ஒருமணி நேரம் உருக உருக கணீர் குரலில் விளாத்தி குளம் ராஜலட்சுமி குழுவினர் நடத்திய வில்லிசை வில்லிலிருந்து ஆவேச அம்புகளை பார்வையாள ர்களை நோக்கி வீசிப் பரவசப்படுத்தியது.

7.15 மணியளவில் கவியரங்கம் ஆரம்பமானது.

முதலில் கவிக்கோ தலைமைக் கவிதையை தன் புண்ணாக்குடன் பேச ஆரம்பித்தார்.. மன்னிக்கவும் புண் – நாக்குடன் பேச ஆரம்பித்தார். ( நாவில் புண்ணாம் எனவே அவருடைய குரலில் வழக்கமாய் தெறிக்கும் மின்சாரம் கம்மி )

தமிழ் நாட்டில் சென்னை சங்கமம் நடக்கக் காரணமாய் இருந்த இளைய பாரதியையும், கவிஞர் கனிமொழியையும் பாராட்டிப் பேசிய அவர், தமிழ் நாட்டில் தமிழுக்கு விழா எடுப்பதைப் பாராட்டும் நிலமை நமக்கு என்று நாசூக்காய்ப் பேசி கைத்தட்டல் பெற்றார்.

உலகில் ஏழு அதிசயங்கள்
உண்டு என்பார்
எட்டாவது அதிசயமும் உண்டு
தமிழ் இன்னும் இருப்பது

என்று தமிழ் மொழியைப் பற்றிக் கவிதை பேச ஆரம்பித்த கவிக்கோவின் தலைமைக் கவிதை முழுவதும் சிறு சிறு பளிச்கள்.

தமிழை

வாயின் சுவாசமே
காதருந்தும் கள்ளே

என்றெல்லாம் வர்ணித்துப் பேசிக்கொண்டே வந்த கவிக்கோ, தமிழனுக்குப் பத்துப்பாட்டு தெரியாது ஆனால் குத்துப்பாட்டு தெரியும் என்று சொன்னபோது அவையில் இருந்த முத்துகுமாரும் கபிலனும் நெளிந்தார்கள்.

மெய்யெழுத்தைக் கற்றோமே, மெய்யெழுதக் கற்றோமா ?
கங்கை கொண்ட தமிழன் இன்று காவிரியையும் இழந்துவிட்டு நிற்கிறான்.
புலிக்கொடியைப் பறக்கவிட்டவன் இன்று புலி என்றதும் புளியமரம் ஏறுகிறான்,

கோயிலுக்கு உள்ளே குடியேற வழியின்றி,
வாயிலுக்கு வெளியே காத்திருக்கும் செருப்பென
தமிழ் இன்று இருக்கிறது என்று தமிழை பழைய இலக்கியங்களையும், புராணங்களையும் ஒப்பிட்டுப் பாடிக்கொண்டே வந்தார் கவிக்கோ.

சினிமாவுக்கும் தனக்கும் ஒத்து வராது என்பதை ( வழக்கம் போல ) ஆங்காங்கே சுட்டிக்காட்டத் தவறவில்லை. .

தமிழனுக்கு
பெரியதிரை பெரிய வீடு,
சின்ன திரை
சின்ன வீடு
வீடு பேற்றுக்காக அறம் பொருள் இழந்தான்,
அகம் புறம் இழந்தான் என்று சிரிக்க வைத்தார்.

தமிழனுக்கு விழிப்புணர்ச்சி இல்லையென்று யார் சொன்னது, பெண்களைப் பார்த்ததும் விழி-புணர்ச்சி செய்கிறானே என்று வார்த்தை விளையாட்டும் விளையாடினார்.

தலைமை இடத்துக்குத் தகுதியானவர் என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாய் அவருடைய கவிதை இருந்தது. அவையும் தொடர்ந்து கைத்தட்டலை வழங்கியது.

img_3147-small.jpg

முதலாவதாக கவிபாட வந்தார் சாவல் பூண்டி சுந்தரேசன். தன்னுடைய ஊராட்சித் தலைவர் பதவி பெற்ற அனுபவங்களை, எவ்வளவு பணம் செலவழித்தார் என்பதைப் பற்றியெல்லாம் கவிதை வெடித்தார். ( ஆமா.. நிஜமாவே வெடிக்குரல் ). ஒரு கதை சொல்வது போல இருந்த அவருடைய நீளமான கவிதையில் கவிதைக்குரிய அம்சங்கள் குறைவாகவே இருந்தன.

img_3148-small.jpg

இரண்டாவதாக வந்தார் கபிலன்.

உலகத்தின்
எல்லா மூலையிலும்
தமிழ் இருக்கிறது
தமிழனின் மூளையில் மட்டும்
இல்லை.

என்று பளிச் கவிதை பேசிய கபிலனின் கவிதை முழுக்க பளிச் பளிச் என சிறு சிறு மின்னல்களாய் தெறித்தன கவிதைகள்.

அருவி
 மழையின் பூணூல்
வானவில்
 நிறங்கள் பற்றிய ஏழுவரிக் கவிதை
புல்லாங்குழல்
 காற்றின் பல்லாங்குழி
மின்னல்
 கவிதை எழுதுவதற்குமுன் காணாமல் போன கவிதை
முகப்பரு
 வியர்வையின் வேகத்தடை

என்றெல்லாம் கவிதை பேசிக்கொண்டே வந்த கபிலன் நிலா : வான நடிகையின் தொப்புள் என்றதும் கவிக்கோ ‘அதானே பார்த்தேன். என்னடா சினிமாக்காரன் இன்னும் தொப்புள் பற்றி சொல்லவே இல்லையே ‘ என்று எடுத்து விட கூட்டம் அதிர்ந்தது. உடனே சுதாரித்த கபிலன், நிலா : கவிஞனின் போதை மாத்திரை என்று கவிக்கோவைப் பார்த்து கூற, பிண்ணணி என்னவென்பதைப் புரியாத நமக்கு குழப்ப முடிச்சு !

ஈவ்டீசிங் செய்த முதல் இறைவன் கண்ணன்.

அந்தி வந்தால் நிலவு வரும்,
இந்தி வந்தால் பிளவு வரும்

என்றெல்லாம் சில தூறல்கள் போட்டுவிட்டு கவிதை முடித்த கையோடு விழா மேடையை விட்டு இறங்கி ஓடியே போய்விட்டார் கபிலன்

img_3150-small.jpg

அடுத்ததாக வந்தார் ஆண்டாள் பிரியதர்ஷினி.

தமிழன்னையின் மரண வாக்குமூலம் என்று தன்னுடைய முதல் கவிதையைப் பாட ஆரம்பித்த கவிஞர். ஊடகத் தமிழை ஒரு பிடி பிடித்துவிட்டார்.

ஊடகத் தமிழ் எனும் போதினிலே – துன்பத்
தேள் வந்து பாயுது காதினிலே

என்று ஊடகத் தமிழ் தமிழைக் கொலை செய்கிறது. நாங்கள் செந்தமிழோ, சுத்தத் தமிழோ பேசச் சொல்லவில்லை தமிழ் பேசுங்கள் என்கிறோம்.

ரொம்ப தாங்ஸ் கால் பண்ணினதுக்கு
இந்தத் தமிழ் என்னத்துக்கு ?

ஊடகம்
தமிழ் மேடையா
தமிழ்ப் பாடையா

சொல் கிரீடமா
முள் கிரீடமா ?

என்று சொல்லிக் கொண்டே வந்தவர். ஒலிபெருக்கு தூக்குக் கயிறு என்று சொல்ல, கூட்டத்தினர் புரியாமல் விழித்தனர். உடனே புரியவில்லையே கொஞ்சம் இம்மாஜின் பண்ணுங்க. என்று சொல்ல கூட்டம் கொல் என சிரித்தது. அடடா.. ஆங்கிலத்தைத் திட்டிக் கொண்டே வந்த நாம் வசமாக மாட்டிக் கொண்டோ மே என்று ஆண்டாள் பிரியதர்ஷினி சமாளித்தார். இப்படிச் சொன்னாதான் உங்களுக்குப் புரியும்ன்னு… அசடு வழிந்தார். கூட்டம் சிரிப்பை நிறுத்தவில்லை.

நூல் வீடு, முத்தம் பற்றி இரண்டு சுமார் கவிதைகளை வாசித்துவிட்டு அமர்ந்தார் கவிஞர்

img_3152-small.jpg

அடுத்ததாக பா பாடியவர் மரபின் மைந்தன் முத்தையா.

கடல் அலைகள் கரையுடனான தன் காதலைச் சொல்ல வந்து கொண்டே இருக்கின்றன இன்னும் சொல்லவில்லை. இன்னும் சொல்லாததனால் தான் கரை இன்னும் அங்கேயே இருக்கிறது என்று கவிதை பாடியவர்.

ஒரு குழந்தையுடன் கடைவீதியில் கொஞ்சியதையும், அதை அந்தக் குழந்தையின் தாய் தடுத்ததையும். நம் பழைய காதலை பேச மாட்டேன், நீ குழதையை அழைத்துச் சென்றது அனாகரீகம் என்று சிறு கதைக் கவிதை சொல்லி அரங்கை நிமிர வைத்தார். பனை மரங்கள், காவிரி பற்றி சில வரிகள் பாடிவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டார் மரபின் மைந்தன் முத்தையா.

img_3153-small.jpg

 வந்தார் கவிப்பித்தன்.

சிலம்பணிந்த பாதத்தில்
சினிமா முள் குத்துவதால்

என்று தமிழின் நிலையை பேச ஆரம்பித்த கவிஞர், மரபுக் கவிதையில் பிரமாதமாகப் பேசினார். மரபுக் கவிதைகள் மேடைக் கவிதைக்கு சிறந்தவை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்வது போலிருந்தது அவர் பேச்சு.

கலைஞரைப் பாராட்டுவதிலும், தாலாட்டுவதிலுமே அவருடைய கவிதை இருந்தது. உன் சூரியனில் தேன் குடிக்கும் வண்டாக வேண்டும், தோளினிலே கிடக்கும் மஞ்சள் துண்டாக வேண்டும். கடிகார முள்ளாக வேண்டும், கவனத்தை ஈர்க்க வேண்டும், நட்சத்திரங்களைப் பறித்து நடைபாதை அமைக்க வேண்டும், உன் தலையில் மீண்டும் சுருள் முடி காண வேண்டும் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே சென்று

நீ
இரங்கல் கவிதை
எழுதுவாயெனில்
இறந்து போகவும் ஆசை.

என்று எழுதி கூட்டத்தினரின் கைத்தட்டல் குவியலிடையே சென்று அமர்ந்தார் கவிப்பித்தன்

img_3154-small.jpg

ஈழக் கவிஞர் ஜெயபாலன் கவிதை வாசிக்க வந்ததும் கூட்டத்தின் இயல்பே மாறிவிட்டது எனலாம். மிகவும் உணர்ச்சிப் பூர்வமாகக் கவிதை வாசித்துக் கொண்டே வந்த கவிஞர் ஜெயபாலன் காதலைக் குறித்து அழகாகப் பாடினார். ஏவாளுடன் கூட்டு சேர்ந்து கடவுளையும், பாம்பையும் வெளியே துரத்த வேண்டும். இதைத் தின் என்றும், தின்னாதே என்றும் சொல்ல அவர்கள் யார் ? என்னும் தொனியில் கவிதை வாசித்தார்.

ஈழத்துக் கவிதை ஒன்றை வாசித்துக் கொண்டே வந்தவர். கரிசல் பூமிக் கவிதை முடியும் முன் கண்கலங்கி மேடையிலேயே அழுதுவிட்டார். அந்தக் கவிதை முடிக்கப்படாமல் பாதியிலேயே நின்றது. பார்வையாளர்களின் பரவச உற்சாகம் ஈழத்தின் கவிதை ஈரத்தை கண்களில் வாங்கி மெளனமானது.

img_3156-small.jpg

அடுத்ததாக வந்தார் கவிஞர் நா. முத்து குமார்

ஆறு ஏழு கவிதைகள் வாசித்த முத்து குமாரின் கவிதைகள் எல்லாமே சற்று எள்ளல் கலந்து வசீகரித்தன. கூட்டத்தினர் மிகவும் ரசித்தனர். நகைச்சுவைத் துணுக்குகளைக் கவிதையாக்கும் லாவகம் முத்து குமாரின் வரிகளில் தெரிந்தது.

ஆனால் எனக்கு ஒரே ஒரு குறை. எல்லா கவிதைகளுமே நான் ஏற்கனவே வாசித்த கவிதைகள். புத்தகமாய் வந்த கவிதைகளை வாசிப்பதை விட்டு விட்டு புதிய கவிதையை வாசித்திருந்தால் சுவாரஸ்யம் அதிகரித்திருக்கும். நண்பர் முத்து குமார் அந்த விதத்தில் ஏமாற்றிவிட்டார்.

img_3158-small.jpg

அறிவு மதி வந்தார் ஏழாவதாக. தலித் விடுதலை பற்றியும், திராவிட இயக்கத்தின் செயல்களைப் பற்றியும். அக்கிரகாரங்களுக்கும், தலித்களுக்கும் நடந்த பிரச்சனை பற்றியும் சிறிது நேரம் பேசிய பின் கவிதைகள் வாசித்தார். நட்புக் காலம் நூலிலிருந்து அவர் வாசித்த கவிதை நன்றாக இருந்தது. மற்ற கவிதைகள் சலிப்பை ஏற்படுத்தும் ரகம். ஆனால் அவற்றை ஈடு செய்யும் வகையில் சுனாமி பற்றி ஒரு பாடல் பாடி அற்புதப்படுத்தி விட்டார் !

img_3160-small.jpg

கடைசியாக வந்தார் சிவப்புக் கவிஞர் இங்குலாப்.

ஈழக் கவிஞர் ஒரு கவிதையை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

‘முடித்து வை’ என்கிறதோ அந்த முடியாத கவிதை – என்று ஈழப் போரை முடியுங்கள் / கவிதையை முடியுங்கள் என்னும் இருபொருள் வரிகளில் கவிதை ஆரம்பித்தார். வழக்கம் போலவே அவருடைய கவிதைகள் காரசாரமாக இருந்தன. பழைய கவிதைகளையே இன்குலாப் அவர்களும் பாடினார். என்பது அடுத்த ஏமாற்றம்.
எதிர்பார்ப்புகளை ஒரேயடியாக ஏமாற்றாமல், அதே வேளையில் முழு திருப்தி தராமல் முடிந்தது கவியரங்கம். முழு விருந்து எதிர்பார்த்துச் சென்றவன் தயிர்சாதம் சாப்பிட்டுத் திரும்பியது போல கவியரங்கம் நிறைவுற்றது.

 

Advertisements

5 comments on “சென்னை சங்கமம் : கவியரங்கம் – ஒரு விரிவான கருத்துரை

 1. கவிக்கோ பாடியதும் பழைய கவிதைகள்தானே?
  அவர் கடந்த சில வருடங்களாக ஒரே கவிதையட்டைகளைத்தான் தூக்கிக்கொண்டு கவியரங்கம் ஏறுகிறார்.
  ஆனால் என்ன? எத்தனைமுறையும் கேட்கலாம். அவ்வளவுதான் வித்தியாசம்.

  Like

 2. சுவாரசியமாகத் தொகுத்தளித்திருக்கிறீர்கள்.

  Like

 3. Dear Mr. Xavier,
  It is very fine and beautiful to see your web site.
  Wishes for your efforts.
  Really nice work.

  With regards,

  Suresh Barathy,
  General Secretary,
  Tamilnadu Social Welfare Association- TANSWA,
  Dammam, Saudi Arabia.
  00966 562180063.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s