மாசு :- பூமியை அச்சுறுத்தும் ஆபத்து

(இந்த வார களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை)

 42-17124292.jpg
இயற்கையின் எல்லா பிரிவுகளோடும் மனிதனுக்கு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கிறது. தான் வாழும் இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு எல்லா தனி மனிதர்களுக்கும் உண்டு. சிறு சிறு அலட்சியங்களால் மாசுபடுத்தப்படும் சுற்றுப்புறம் இன்று பூமிக்கே பெரும் அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கிறது.

சுற்றுப்புறச் சூழல் மாசு உருவாக்கியிருக்கும் மிகப்பெரிய சவால் உலக வெப்பம் அதிகரிப்பு என்று உலக நாடுகள் ஒத்துக் கொண்டிருக்கின்றன. பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பது என்பது ஏதோ ஒரு காலநிலைச் செய்தி போல வாசித்து கடந்து போக வேண்டியதல்ல. இது மிகப்பெரிய மாற்றங்களை பூமியில் ஏற்படுத்தி மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாய் உருமாறிவிடும்.

1995க்குப் பிறகு பூமியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது பூமியின் சாதாரண வெப்ப அளவின் விகிதத்தை பெருமளவுக்கு மீறியிருப்பது கவலைக்குரிய செய்தி. நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நிட்ரஸ் ஆக்சைடு போன்றவற்றின் அளவு பூமியில் அதிகரித்திருப்பது பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். காடுகளை அழிப்பதும், எரிபொருட்களின் வெப்பமும் பூமியின் வெப்ப நிலை ஏற்றத்துக்கு இன்னும் சில காரணங்கள்.

முதலாவதாக உலக வெம்மை அதிகரிப்பினால் கடல் மட்டம் உயரும். கடல் மட்டம் உயர்வதனால் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் மூழ்கிப் போகும் அபாயம் உண்டு. பங்களாதேஷ், நெதர்லாந்து, இங்கிலாந்தின் சில பகுதிகள் தாழ்வாக இருப்பதனால் முதல் பாதிப்பு அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.  வெப்பம் சீராக இல்லாமல் அதிகரிப்பது இயல்பாய் நடந்து கொண்டிருக்கும் காலநிலையை முற்றிலும் சிதைத்து விடுகிறது. வெள்ளப் பெருக்கு, வெப்ப அலைகள் பூமியில் வீசுதல், சூறாவளி போன்ற பல இயற்கைச் சீற்றங்களுக்கும் இது காரணமாகி விடுகிறது.

ஒழுங்கற்ற மழையும், கோடையில் அதிக வெப்பமும், பனிக்காலத்தில் கடும் பனியும் இந்த பூமியின் வெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக உருவாகும். தற்போதைய வெப்ப அளவு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரிப்பதாக அமெரிக்காவின் நாசா கவலை தெரிவித்துள்ளது. மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் இந்த வெப்ப ஏற்றத்தினால் வெகு வேகமாகப் பரவுகின்றன.

நான்கு இலட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பூமியில் கார்பண்டை ஆக்ஸைடு அதிகரித்திருப்பதாகவும் இதற்கு முக்கியக் காரணம் தொழிற்சாலைகள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்த கரியமில வாயு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மிலன்கோவிட்ச் வளையத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும், அப்படி நிகழும் பட்சத்தில் துருவப் பனி வேகமாய் உருகி பூமியை மூடி விடும் என்றும் இன்னொரு ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

துருவப் பனி உருகி பூமியின் பகுதியை ஆக்கிரமிக்கத் துவங்கும் போது தண்ணீர்ப் பரப்பு அதிகரிக்கும். தண்ணீர், நிலத்தை விட அதிக வெப்பத்தை உள்ளிழுக்கும் தன்மை கொண்டது. அது பூமியில் விழும் சூரிய வெப்பத்தை முழுதுமாகக் கிரகிக்கும்போது பூமியின் வெப்பம் மீண்டும் அதிகரிக்கும். பனி மீண்டும் உருகும், வெப்பம் மீண்டும் அதிகரிக்கும். இந்த செயல் தொடர்ச்சியாக நடக்கும் போது பூமி முழுவதும் ஒருநாள் தண்ணீருக்குள் மூழ்கிவிடும் அபாயம் உண்டு.

பசிபிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும் 1950 களுக்குப் பின் பெருமளவில் வெப்பமடையத் துவங்கியிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்திருக்கிறது.

கார்பண்டை ஆக்ஸைடின் அதிகப்படியான தேக்கம் காலநிலையில் பெரும் மாறுதலை உருவாக்கியிருக்கிறது. மரங்கள் குறைவாக இருப்பது காலநிலை மாற்றத்தின் காரணிகளில் ஒன்று. நானூறு ஆண்டுகளுக்கு முன் மரங்களை வெட்டியதற்காக மன்னனால் மரண தண்டனை பெற்ற ராஜஸ்தான் பஷானியர்களைப் பற்றிய குறிப்பே நமக்கு சுற்றுப் புறச் சூழல் குறித்து கிடைத்திருக்கும் மிகப் பழைய தகவல்.

வளரும் நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பது கவலைக்குரிய செய்தியாகும். தூய்மையான இருப்பிடம் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. மனிதன் இயற்கையை விட்டும், தூய்மையை விட்டும் தூரமாய் செல்லும்போது நோய்களின் கூடாரத்தைச் சென்றடைகிறான். நாடு என்பது வீடுகளின் கூட்டம். வீடும் அதைச் சுற்றிய இடங்களும் தூய்மைகாக இருக்கும்போது ஒட்டுமொத்த நாடும் தூய்மையாகிறது.

பேருந்திலிருந்து கொண்டே மிச்ச உணவை வீசுவதும், சந்துகளையெல்லாம் கழிப்பிடங்களாக்குவதும், குப்பைத் தொட்டியைத் தூய்மையாய் வைத்துவிட்டு சுற்றுப்புறத்தை குப்பை மேடாக்குவதும் சிறு சிறு தவறுகளின் கூட்டம். இவையே பிழைகளின் பேரணியாய் சமுதாயத்தை உலுக்கும் பிரச்சனையாய் உருமாறுகிறது.

அமெரிக்காவில் ஓடும் வாகனத்திலிருந்து எதையேனும் வெளியே எறிந்தால் $500 அபராதம் செலுத்த வேண்டும். எனவே அங்கே யாரும் பொதுவிடங்களை அசுத்தமாக்குவதில்லை. அமெரிக்காவில் இருக்கும்போது சுற்றுப் புறத்தை சுத்தமாய் வைத்திருக்கும் இந்தியர்கள் கூட, இந்தியா வந்ததும் அதை மறந்து விடுவது தான் வேதனை.

மரங்கள் நடுவது பரவலாக செயலாக்கத்தில் இருக்கும் ஒரு வழிமுறை. இது ஒளிச்சேர்க்கைக்காக கரியமில வாயுவை அதிக அளவில் உள்ளிழுப்பதால் பூமியின் கரியமில வாயு அளவு குறைகிறது. இது பூமியின் வெப்ப அளவை சற்று குறைக்கிறது.

வெப்பத்தையும், காற்றையும் வேறு சக்தியாக மாற்றும் பல புதுப் புது முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றார்கள். இது பூமியின் வெப்ப அளவை சற்றே மட்டுப்படுத்தும் என்பது அவர்களின் கணிப்பு.

மக்கள் தொகைப் பெருக்கமும் பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். வாகனங்களின் பெருக்கமும், அவை சரியான பராமரிப்புகளில் இல்லாததும் பூமியில் கரியமில வாயுவின் பெருக்கத்தை அதிகரிக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவும், இந்தியாவும் அதிக கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இருக்கின்றன.

மாசுகளை பல வகைகளாகப் பிரிக்கலாம். தூய்மையான இயற்கைக் காற்றில் கரியமிலவாயுவின் அளவு அதிகரிப்பதும், தூசுகள் மிகுந்திருப்பதும், ஆலைகளின் புகைகளால் காற்று தன்னுடைய தூய்மையை இழப்பதும் காற்றை மாசுபடுத்தும் வகையில் சேர்கின்றன.

தண்ணீரை மாசுபடுத்துவது என்பது நிலத்தடி நீரை மாசுபடச் செய்யும் காரணிகளை உள்ளடக்கியது. தேங்கி நிற்கும் தண்ணீருக்கு சரியான வடிகால் வசதிகள் இல்லாமல் போகும் பட்சத்தில் தண்ணீர் மாசுபடுகிறது. கதிரியக்கம் போன்றவற்றால் சுற்றுப்புறம் மாசு அடைவது ஒரு வகை. தொழிற்சாலை அமிலங்களினால் சுற்றுப் புறங்கள் அசுத்தமடைவது இன்னொரு வகை. சாலை, விமான, தொழிற்சாலை சத்தங்களால் உடைக்கப்படும் இயற்கையான மெளனம் கூட ஒருவகையான மாசு தான். அதிகப்படியான வெளிச்சத்தினாலும், வெளிச்சம் சார்ந்தவற்றாலும் சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் இன்னல்களை வெளிச்ச மாசு என்றழைக்கிறார்கள்.

தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், மின்பொருள் கழிவுகள், உணவு, தண்ணீர் என எல்லா வகையான கழிவுகளும் நம்மை சிக்கலுக்குள்ளாக்குகின்றன.

ஆஸ்துமா, அலர்ஜி, புற்றுநோய், மன அழுத்தம், தூக்கமின்மை, தோல் நோய்கள், இரத்த அழுத்தம், கேட்கும் திறன் குறைதல் போன்ற பல நோய்கள் சுற்றுப்புறம் தூய்மையின்மையால் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலக அளவில் தண்ணீர் மாசு காரணமாக ஆண்டுக்கு 14,000 பேர் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் உள்ளன. தூய்மையான காற்று சட்டம், தூய்மையான தண்ணீர் சட்டம் என துறை வாரியாக இவை பெயரிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் விஷக் கழிவுகளை பொதுவிடங்களில் கொட்டினால் ஒன்றே கால் கோடி ரூபாய் அபராதம். ஓடும் வாகனத்திலிருந்து காலி பாட்டிலையோ ஏதேனும் மிச்சப் பொருட்களையோ வெளியே வீசினால் இருபதாயிரம் ரூபாய் அபராதம், என கடுமையான தண்டனைகள் அவர்களுடைய சுற்றுப் புறத்தைப் பாதுகாக்கின்றன. வாகனங்கள் கூட ஆண்டுதோறும் புகை சோதனை செய்து சான்றிதழ் வாங்கிய பின்பே ஓட்ட அனுமதிக்கப் படுகின்றன.

யூகே வில் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு வாரியம் தனியே செயல்பட்டு யூகே வின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிறது.

வர்த்தகத் துறையில் வெகு வேகமாக முன்னேறி வரும் சீனா சுற்றுப் புறச் சூழல் விஷயத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது. சரியான சட்டங்கள் இருந்தாலும் அவை செயல்படுத்தப்படாமல் பல மாசு கட்டுப்பாட்டு திட்டங்கள் செயலற்றுப் போயிருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி, உலகின் பத்து மோசமான நகரங்களில் ஏழு சீனாவில் இருக்கின்றன. மின் உபகரணங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட பல்வேறு துறைகளில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தத் துவங்கியிருக்கும் சீனா அந்த கழிவுகளை சரிவர அப்புறப்படுத்த முடியாததால் சுற்றுப்புறச் சூழல் நலத்தில் கோட்டை விட்டிருக்கிறது.

எனினும் இந்தியா, பிரேசில், தென் கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா 1998ல் எனர்ஜி கன்சர்வேஷன் சட்டம் வந்தபின் கார்பன் பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்துள்ளது.

சுற்றுப் புறச் சூழல் சீர்கேடு அமில மழையைப் பெய்ய வைக்கிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெய்யும் அமில மழை ஏரிகளையும், நிலங்களையும் பாதிப்படையச் செய்கிறது. ஜெர்மனி, ஸ்காண்டினேவியா போன்ற இடங்களில் பெய்த அமில மழை காடுகளிலுள்ள மரங்களின் இலைகளையும், ஏன் வேர்களையும் கூட அழித்திருக்கிறது.

பூமியின் கரியமில வாயு பெருக்கம், கடலின் கரியமில வாயு அளவை அதிகரிக்கிறது. இதனால் கடல் நீர் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறது. கடல்நீர் மாசுபடுவதற்கு 60% விழுக்காடு சாக்கடை கடலில் கலப்பதே காரணமாகிறது. எண்ணைத் தன்மையும், சோப்பு போன்ற பிற ரசாயனங்களும் கடலில் தொடர்ந்து செல்வதால் கடல் அசுத்தமடைந்து கொண்டே இருக்கிறது. சுமார் இரண்டரை இலட்சம் கடல்பறவைகள் இதன்மூலம் இறந்து விட்டதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

நிலம் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது என்பதறிவோம். நிலத்தில் கலக்கும் ஆலைக் கழிவுகளும், அணு கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சுப் பொருட்களும் நிலத்தின் தன்மையை மாற்றி விடுகின்றன. இதன் மூலம் பூமியுடன் தொடர்பு கொள்ளும் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.

நிலத்தில் விளையும் காய்கறிகளில் இந்த நச்சுத் தன்மை படர்ந்து மனிதர்களின் உடலிலும் கலந்துவிடுகிறது. குழந்தைக்கு ஊட்டப்படும் தாய்ப்பாலில் கூட இந்த காய்கறிகளின் நச்சு கலந்திருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உலக அளவில் உள்ள தண்ணீரில் 0.01 விழுக்காடு மட்டுமே குடிநீர். அந்த தண்ணீரும் தற்போது குறைந்தும், மாசுபட்டும் வருவது உயிரினத்துக்கே விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகும்.

நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டம் பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தில் இருந்தாலும் அவை செயலாக்கம் பெறவில்லை என்பது கண்கூடு. நிலத்தை மாசுபடுத்துவதால் நிலத்தடி நீரும் மாசடைகிறது. ஜப்பானில் நிலத்தடி நீர் உலகிலேயே சிறந்ததாக அமெரிக்காவின் தேசிய ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் 1980ல் ஆரம்பிக்கப்பட்ட சூப்பர்ஃபண்ட் சட்டம் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளது.

நீர் மாசுபடுவதால் ஐரோப்பாவின் பேசின் நதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் காணப்பட்ட சுமார் இரண்டு இலட்சம் சால்மன் மீன்களும் அழிந்து விட்டிருக்கின்றன.

உலகில் இரண்டு கோடி விதமான ரசாயனப் பொருட்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு இருபத்து ஏழு வினாடிகளுக்கு ஒரு புதிய ரசாயனப் பொருள் உருவாக்கப்படுவதாகவும் அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இவை கழிவுகளாகும் போது சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.

அமெரிக்காவிலுள்ள குடிநீரை ஆராய்கையில் அதில் 300 வகையான ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிரது. அதில் 129 வகையானவை உடலுக்குத் தீமை விளைவிப்பவை!.

டயாக்சின் எனும் நச்சுத்தன்மையினால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதால் கருச்சிதைவுகளும், குறை பிரசவங்களும் அதிக அளவில் நேர்கிறது என்பது ஒரு திடுக்கிட வைக்கும் தகவல். ஆண்களின் உயிரணுக்களை இந்த நச்சுத் தன்மைகள் பல மடங்கு குறைப்பதாகவும் அதே ஆய்வு தெரிவிக்கிறது.

கழிவுகளை வீட்டுக் கழிவுகள், ஆலைக் கழிவுகள் என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் ஆலைக் கழிவுகள் பெரும்பாலும் நச்சுத்தன்மை உடையனவாக இருக்கின்றன. மனித அலட்சியங்களினால் அசட்டை செய்யப்படும் கழிவுகள் ஏதோ ஒரு வகையில் மனிதனையே சென்றடைகிறது என்பது தான் உண்மை. கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்களின் வாயிலாகவோ, தரையை சேதப்படுத்தும் கழிவுகள் தானியங்களாகவோ, நீராகவோ காற்றில் கலக்கும் நச்சுகள் சுவாசம் வழியாகவோ ஏதோ ஒரு விதத்தில் மனிதனைச் சரணடைகின்றன இந்த கழிவுகள்.

தென் துருவப் பகுயில் வானில் விழுந்துள்ள ஓசோன் ஓட்டை இன்னொரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. காற்றில் ஏற்படும் மாசு (குளோரோபுளூரோகார்பன்) இதன் முக்கிய காரணியாக விளங்கும் அதே நேரத்தில் குளிர்சாதனப் பெட்டி, பிரிட்ஜ், தானியங்கி விற்பனை இயந்திரங்கள் போன்றவற்றிலிருந்து வெளியாகும் வாயுவும் இந்த ஓசோன் ஓட்டைக்கு குறிப்பிடத்தக்க காரணமாக விளங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலம் வலுவிழப்பதால் தோல் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் மனிதனுக்கு வருகின்றன. கடலின் மேற்பரப்பில் வாழும் மீன்கள் அழிகின்றன. புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் இறந்து போகும் மீன்களை உண்ணும் பெரிய மீன்களும் அதனால் பாதிக்கப்பட்டு இயற்கைக்கே அது அச்சுறுத்தலாகி விடுகிறது. தொடர்ந்து ஓசோன் படலம் வலுவிழந்தால் பூமியில் மனிதர்கள் உட்பட உயிரினங்களே அழிந்து போகும் என்பது அதிர்ச்சித் தகவல்.

மனிதன் தன்னுடைய சுய தேவைக்காக விலங்குகளை வேட்டையாடி அழித்தும், காடுகளை அழித்தும் இயற்கைக்குச் செய்திருக்கும் அழிவும், இருபதாம் நூற்றாண்டில் எங்கும் வியாபித்திருக்கும் தொழிற்சாலைகளும் சுற்றுப் புறச் சூழலின் புனிதத்துவத்தைப் புதைத்துவிட்டன. பயன்படுத்தப் பட இயலாத பாலை நிலங்கள் இதன்மூலம் அதிகரித்திருக்கிறது. ஆண்டுக்கு 60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடம் பாலை நிலமாக மாறி வருவதாக யு.என்.இ.பி (United Nations Environment Program) தெரிவித்துள்ளது. மரங்களின் அழிவும், மக்கள் தொகை அதிகரிப்பும், சுற்றுப்புறச் சூழல் மாசும் இதன் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பது சாதி, மத, இன, மொழி, நாடு வேறுபாடுகளற்று மனிதகுலம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவற்றை தவறவிடும் ஒவ்வொரு தருணங்களிலும் பூமியின் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் உணரவேண்டும். அன்றாடம் நிகழ்த்தும் சிறு சிறு செயல்களின் மூலம் நமது சுற்றுப்புறத்தைக் காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு.

பொதுவிடங்களில் குப்பைகளைச் சேர்க்காமல் குப்பைத் தொட்டியில் குப்பைகளைப் போடுதல். பொதுவிடங்களில் தேவையற்றவற்றை எரித்து காற்றை மாசுப்படுத்துதல், தண்ணீரை தேவையற்ற விதத்தில் தேங்க விடுதல், கழிவு நீர் தேங்குமிடங்களில் அடைப்புகள் ஏற்படுத்துதல், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

1970களில் சிப்கோ இயக்கம் இந்தியாவில் நடைபெற்றது. மரங்களை அரவணைத்து மரம் இயற்கையைப் பாதுகாப்போம் எனும் கோஷங்கள் மகாத்மா காந்தியை முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்டது. மரம் நடுதலும், இயற்கைப் பராமரித்தலும் மிகவும் அவசியம்.

சைக்கிள் போன்ற வாகனங்களையோ, மின் வாகனங்களையோ இயக்குவதன் மூலம் ஒரு வருடத்திற்கு 16,000 பவுண்ட் கரியமில வாயுவை பூமியில் கலக்காமல் தடுக்கலாம். வாகனம் வாங்கும்போது அதிக மைலேஜ் கிடைக்கக் கூடிய வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் சுற்றுப் புறத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைக்க முடியும்.

வாகனத்தைச் சரியாகப் பராமரிப்பதன் மூலமும் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும். வாகன சக்கரங்களைச் சரியாக வைத்திருப்பதும், காற்று வடிகட்டியை சரியாகப் பராமரிப்பதும் கூட வருடத்திற்கு ஆயிரம் பவுண்ட் கரியமில வாயுவைக் குறைக்கிறது.

சரியான புகைச் சோதனை செய்யப்படாத வாகனங்கள் சாலைகளில் செல்ல அரசு கடுமையான தடை விதிக்க வேண்டும். அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் மட்டும் ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் டன் எடையுள்ள காற்று மாசு இந்த புகைச் சோதனையின் மூலம் தவிர்க்கப்படுவதாக வாஷிங்டன் எமிஷன் கண்ட் ரோல் தெரிவித்துள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த சட்டம் இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் பிழையின்றிப் பின்பற்ற வேண்டும்.

பொருட்கள் வாங்கும்போது பிளாஸ்டிக் பைகளை விலக்கிவிட்டு, மட்கிப் போகும் பைகளை உபயோகிப்பதும், குறைந்த அளவு பைகளை உபயோகிப்பதும் சுற்றுப் புறத்தைப் பாதுகாக்கும். மின் உபகரணங்கள் பயன்படுத்தாத வேளையில் அணைத்து வைத்திருப்பது கூட காற்றின் மாசைக் கட்டுப்படுத்துகிறது.

கழிவுகளை அழித்து புதிய பொருட்கள் தயாரிக்க முடியுமெனில் அதை கண்டிப்பாகச் செய்வது மாசுகளை பெருமளவு குறைக்கிறது. பிளாஸ்டிக், கண்ணாடி, துணிகள், காகிதம் போன்றவை அழித்து மீண்டும் தயாரிக்க இயலும் பட்டியலில் உள்ளவற்றில் சில. அரசு தரமான கழிவு நிலையங்கள் அமைத்து கழிவுப் பொருட்கள் பாதிப்பு ஏற்படாத தொலைவில் அழிக்கப்பட ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம்.

தண்ணீரை மிகச் சிக்கனமாகச் செலவு செய்யவேண்டும் என்றும் உலகின் எந்த மூலையில் செலவு செய்யப்படும் ஒரு துளி நீரும் ஒட்டுமொத்த உலகிற்கே இழப்பாகும் என்றும் உலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உலகையே அச்சுறுத்தும் இந்தப் பிரச்சனையில் தனி மனித ஈடுபாடே ஒரு தீர்வை நல்கமுடியும். எனவே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செயலாக்கவும் ஒவ்வொருவரும் முன்வருதல் வேண்டும். அதுவே வருங்கால தலைமுறையினருக்கு தரமான பூமியை நல்கும்

Advertisements

13 comments on “மாசு :- பூமியை அச்சுறுத்தும் ஆபத்து

 1. அருமையான பதிவு.

  > வழக்கத்திற்குவிட அதிகமாக சென்ற வருடம், ஓசோன் படலம் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருந்ததாம்.

  > தென் ஆப்பிரிக்காவில் சென்ற வருடம் ஒரு பனிமலையே காணாமல் போய்விட்டதாம்.

  அது சரி, ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ கதை நீங்கள் எழுதியதா?

  -ஞானசேகர்

  Like

 2. மன்னிக்கவும். இடப்பக்கம் உங்கள் படைப்புகளின் பட்டியலில் இப்போதுதான் கவனித்தேன்.

  உங்களின் ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ கதையின் மரத்தடி சுட்டியை எனது நண்பன் ஒருவன் அனுப்பினான். அந்த சேவியர்தான் நீங்களா என்ற சந்தேகத்தில்தான் அது உங்கள் கதையா எனக் கேட்டேன்.

  உண்மையிலேயே மிக அருமையான கதை. அறிவியலையும், ஆன்மீகத்தையும் குழப்பாமல் தெளிவாக எழுதி இருந்ததால் மிகவும் பிடித்துப்போய்விட்டது. நன்றி.

  -ஞானசேகர்

  Like

 3. உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அற்புதம். என்னைப் பேன்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக அமைகின்றது உங்கள் பக்கம். மிக்க நன்றி.

  Like

 4. //உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அற்புதம். என்னைப் பேன்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக அமைகின்றது உங்கள் பக்கம். மிக்க நன்றி.//

  நன்றி நித்தியவாணி 🙂

  Like

 5. NaaKaRikathThin
  NavaNiiThak KaaThalin
  ViiLai VU Thaan
  MaaSuthaRum ViLaiVU.
  AaaThaliNaal
  UrpPath Thiyai Vida
  MiNu MiNuk Kum
  KavIR CikKaaKa
  MuuDum Alaku Plastic, Aluminiyam,
  Poonra VatRai NiikKi
  éLiThaana PoorudKalaalum
  Ivat Rai Suit Ri Varum PooRutKalai
  Miin Rum Pari MaaTRam Sééjiyak Kuudiya
  Thaana Poorud Kalal ThayaatikKum
  Poorud Kalai Arasu Saddamaaka KoonduvaRa Véénn Dumm.
  K.Siva(France)

  Like

 6. இது போன்ற கட்டுரைகள் மனிதர்களை மாற்றினால் ,மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் வாழும்.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s