கொசு !

kosu2.jpg 

( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )கொசுப் பிரச்சனை என்பது மிகவும் சிறியது என்று அனைவரும் ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் சிறு உளி பெரும் பாறையைச் சரித்து விடுவது போல சிறு கொசுக்கள் மனித குலத்துக்கே மிகப்பெரிய சவாலாக விளங்குகின்றன. இது அடுத்தவர்களின் பிரச்சனையென்றோ அரசின் பிரச்சனையென்றோ கருதும் ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் கொசுக்கள் ஆனந்தமடைந்து வளர்கின்றன.

பதினேழு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை இந்த கொசுக்கள் என்று நம்பப்படுகிறது. சுமார் பதினான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கொசுவின் படிகத்தை ஆராய்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொசுக்கள் மணிக்கு ஒரு மைல் வேகம் முதல் ஒன்றரை மைல் வேகம் வரை பறக்கக் கூடியவை.

சராசரியாக ஐந்து மைல் சுற்றளவு வரை இவை பறந்து திரியும். கொசுக்கள் 0.01 மில்லி லிட்டர் வரை இரத்தத்தை உறிஞ்சுகின்றன. பெண்கொசுக்கள் மட்டுமே இரத்தம் உறிஞ்சுகின்றன. இடப்போகும் முட்டைகளின் வளர்ச்சிக்காகவே கொசுக்கள் இரத்தம் குடிக்கின்றன. தேவையற்ற வேளைகளில் தேனீக்களைப் போல தாவரங்களிலேயே இவை தவமிருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை 1953 களிலிருந்தே கொசுக்களையும் மற்ற சில நோய்களைப் பரப்பும் பூச்சிகளையும் ஒழிக்க வேண்டுமென்று பல திட்டங்கள் போட்டும், ஒழிக்கும் மருந்து முறைகளை மாற்றியும் பல வகைகளில் அரசு முயன்று வருகிறது. பல ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தும் இன்னும் கொசுத் தொல்லை ஒழியவில்லை.

கொசு வலைகள், கொசு ஒழிப்பு மருந்துகள், மின் கொசு ஒழிப்பு இயந்திரங்கள் என எத்தனையோ வகையான தடுப்புச் சுவர்கள் எழுப்பினாலும் கவலைப்படாமல் வந்து கடித்து இம்சிக்கும் கொசுக்களை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது நாடு. உலக அளவில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வகைக் கொசுக்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கொசு அளவில் சின்னதாக இருந்தாலும் பாதிப்புக் கணக்கைப் பார்த்தால் உலகப் போர் கணக்காக உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அதிர வைக்கிறது. கொசுக்களினால் வரும் நோய்களைப் பட்டியலிட்டால் மலேரியா, யானைக்கால், டெங்கு காய்ச்சல், ஜப்பானீஸ் என்செபலிடீஸ், சிக்குன்குன்யா, எல்லோ ஃபீவர், மேற்கு நைல் காய்ச்சல், வைரல் காய்ச்சல், ரிஃட் வேலி காய்ச்சல் என உலக அளவில் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் ஐம்பது கோடி மக்கள் மலேரியா தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்களில் சுமார் இருபது இலட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்பது அதிர்ச்சித் தகவல். இந்தியாவை மட்டும் எடுத்துக் கொண்டால் சுமார் இருபதாயிரம் பேர் ஆண்டு தோறும் மலேரியா நோயினால் தாக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் தான் உலகிலேயே மலேரியா பாதிப்பினால் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இங்கு சுமார் பத்து இலட்சம் பேர் ஆண்டுதோறும் மலேரியாவினால் உயிரிழக்கிறார்கள். உலகில் நாற்பது வினாடிக்கு ஒரு குழந்தை மலேரியாவினால் இறந்து கொண்டிருக்கிறது என்பது பதை பதைக்க வைக்கும் செய்தி.

கொசுக்களால் பரவும் யானைக்கால் நோய்க்கு ஆண்டுக்கு சுமார் பன்னிரண்டு கோடி பேர் உள்ளாகின்றார்கள். இதில் தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் மட்டுமே சுமார் மூன்று கோடி பேர் பாதிப்படைகிறார்கள் என்பது கவலையளிக்கும் செய்தி. இந்தியாவில் மட்டுமே அறுபது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்த நோய்க்குள் தள்ளப்படுகிறார்கள்.

டெங்கு காய்ச்சலை எடுத்துக் கொண்டால் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் ( SEAR ) சுமார் மூன்று கோடி பேர் வருடம் பாதிப்படைகிறார்கள். சிக்குன் குன்யா நோயும் சமீபத்தில் இந்தியாவை உலுக்கிய நிகழ்வு நம் நினைவுகளை விட்டு இன்னும் நீங்கியிருக்க வாய்ப்பில்லை. ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் எல்லோ ஃபீவர் எனப்படும் காய்ச்சல் மிகவும் கொடுமையாக மக்களை வதைக்கிறது.

கொசுத்தொல்லைக்கு பாதிப்படையாத பகுதி என்று இந்தியாவில் எந்த இடமும் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் மலேரியாவே தாக்காத இடம் என்று கூட ஒரு பாகம் இல்லையாம். விவசாயம் தொழிற்சாலை கல்வி நிலையம் என பாகுபாடின்றி எல்லா இடங்களும் கொசுக்களின் அரசவை நடந்து கொண்டிருக்கிறது.

கொசுக்களினால் வரும் தீமைகள் தெரிந்திருந்தும், கொசுக்களை ஒழிப்பது அவசியம் என்பது புரிந்திருந்தும் ஏன் இன்னும் கொசுக்கள் ஒழியவில்லை ? யார் இதன் பொறுப்பாளி எனும் கேள்விகளைக் கேட்டால் விடைகள் நம்மை நோக்கியே விரல் நீட்டுகின்றன.

தேங்கிக் கிடக்கும் கழிவு நீரில் சுமார் நாற்பத்தெட்டு மணி நேரத்திலேயே முட்டையிலிருந்து அடுத்த படியான லார்வா நிலைக்குச் செல்கின்றன. பின் அடுத்த நிலைக்குச் சென்று நான்காவது நிலையில் கொசுக்கள் உருவாகி விடுகின்றன, அதுவும் நூற்றுக் கணக்கில் ஒரே நேரத்தில்

இந்தியாவின் வளர்ச்சியடையாத சேரிப்பகுதிகளும், ஏழைகளும், கல்வியறிவு பெறாத மக்களும் வாழும் பகுதிகளும் கொசுக்களின் முக்கிய இலக்காக இருக்கின்றன. நெரிசல் மிகும் நகரங்களில் ஒழுங்குபடுத்தப்படாத சேரி அமைப்புகள் குப்பைகளையும், தண்ணீரையும் மூலை முடுக்குகளில் தேங்க விட்டு கொசுக்களின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கி விடுகின்றன.

சேரிகளைப் பற்றியோ அதன் ஒழுங்கமைப்பைப் பற்றியோ ஏன் அங்கே வாழும் மனிதர்களைப் பற்றியோ கூட மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ளாத அரசியல் அமைப்புகளும் ஒருவகையில் இந்த கொசு பரவலுக்குக் காரணமாகின்றன.

நல்ல வரையறுக்கப்படாத கழிவு நீர் பாசன வசதிகள் இல்லாத இடங்களில் நீர் தேங்குகிறது. நீர் தேங்குமிடம் கொசுக்களின் கூடாரமாகி விடுகிறது. நல்ல கழிவு நீர்ப் பாசன வசதி நகரத்தில் இருந்தாலே இந்த கொசுக்களின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்து விட முடியும்.

கழிவுகளை அகற்றுவதிலும், நகரின் பாகங்கள் கழிவு தேங்குவதில் அரசின் சுகாதாரத் துறை எடுத்துக் கொள்ளும் அலட்சியமும் கூட இந்த கொசுக்களுக்குச் சாதகமாகி விடுகின்றன. இந்தியாவின் எந்த ஒரு நகரத்தை எடுத்துக் கொண்டாலும் நூற்றுக்கு மேற்பட்ட ஒழுங்குபடுத்தப் படாத சேரிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் கழிவு நீரோ, குப்பைகளோ வெளியேற்றும் வசதி கூட இல்லாமல் இருப்பது வேதனை.

இந்திய அளவில் குடும்பக் கட்டுப்பாடுக்கோ, எயிட்ஸ் நோய்க்கோ வேறெந்த பாதிப்புக்கோ ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு கொசு பரவலுக்கும், கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் ஏற்படுத்தப்படவில்லை என்பது வருத்ததுடன் ஒத்துக்கொள்ள வேண்டிய செய்தியாகும்.

கல்வியறிவு இல்லாத மக்களிடம் கொசுவினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்க வேண்டியது அவசியம். கொசுக்கடி என்பது கொசுவை அடித்தவுடன் நின்று போய் விடுவதல்ல பல சிக்கல்களுக்கும் நம்மை இட்டுச் செல்லும் என்பதை மக்களுக்குப் புரிய வைப்பதில் அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றல் அவசியம்.

பாதாளச் சாக்கடைத் திட்டம் செம்மையாகப் பயன்படுத்தப்பட்டால் கொசுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தலாம் என்பதற்கு வளர்ந்த நாடுகள் உதாரணமாகத் திகழ்கின்றன. கொசுக்களினால் ஏற்படும் தீமைகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டுக்குள் இருப்பதற்கு அவர்களிடமுள்ள விழிப்புணர்வும், அரசின் செயல்பாடுகளுமே காரணம்.

பாதாளச் சாக்கடைத் திட்டம் பணச் செலவை ஏற்படுத்தும் திட்டம் எனினும் ஆரோக்கியமான சமுதாயத்தை அது கட்டி எழுப்பும். கொசுக்களினால் வரும் நோய்களினால் செலவாகும் பணத்துடன் ஒப்பிட்டால் இந்த செலவு குறைவானதாகவே இருக்கும். கொசுக்கள் மட்டுமல்லாமல் வேறு பல நோய்களையும் கூட இந்த பாதாளச் சாக்கடைத் திட்டம் ஒழித்துவிடும்.

கொசுவின் வளர்ச்சிக்கு இன்னொரு முக்கியமான காரணம் ஆலைக் கழிவுகள். இந்தியாவின் ஆலைகளில் கழிவுகளை மனித பாதிப்பு எல்லைக்கு வெளியே அழிக்கும் வசதி பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆலைக் கழிவுகளின் தேக்கம் கொசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. சரியான கழிவு அழிப்பு வசதியற்ற ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனும் சட்டங்கள் பழுதுபார்க்கப் படாமல் வெறுமனே எழுத்துக்களில் மட்டுமே வாழ்கிறது.

கிராமப் புறங்களை எடுத்துக் கொண்டால் அங்கிருக்கும் பெரும்பாலான விவசாய நிலங்களில் கொசுக்களுக்கு எளிதில் இனப்பெருக்கம் செய்து கொள்ள முடிகிறது. விவசாயப் பகுதிகளில் தண்ணீர் தேங்குதலும், இயற்கை உரங்கள், குப்பைகள் தேங்குதலும் வெகு சகஜம் என்பதனால் கிராமப் புறங்களில் கொசுக்கள் உல்லாசமாக வளர்கின்றன. பெரும்பாலான கொசுக்கள் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை உயிரோடு இருக்கின்றன. சில வகை கொசுக்கள் ஆறு மாதங்கள் வரை உயிரோடு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவின் முக்கால் வாசி மக்கள் கிராமங்களில் விவசாயம் சார்ந்த இடங்களில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு கொசுவினால் ஏற்படும் இன்னல்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது கிராமப் புறங்களில் கொசு ஒழிப்பை முக்கியமற்றதாக்கி விடுகிறது.

கிராமப்புற வீடுகளின் கொல்லைப் புறங்கள் கழிவுகள் தேங்கும் இடங்களாக இருக்குமெனில் அது கொசுக்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாகி விடுகிறது. வீட்டின் சுற்றுப் புறங்களைச் சுத்தமாக வைத்திருக்கும் கிராமப் பகுதிகளில் பெரும்பாலும் கொசுக்கள் தொந்தரவு தருவதில்லை.

இந்தியாவில் பழங்குடியினர் சுமார் நான்கு கோடி பேர் இருக்கிறார்கள். மலைப்பிரதேசங்களிலும், காட்டுப் பகுதிகளிலும் வாழும் இவர்களுடைய இடங்களிலும் கொசுக்களை ஒழிப்பது என்பது சவாலான செயலாகவே இருக்கிறது.

நாட்டின் பாசனத் திட்டங்களில் ஏற்படும் பழுதுகளும் கொசுக்களுக்கு வரப்பிரசாதமாகி விடுவதுண்டு. சரியாக பராமரிக்கப் படாத பாசன இடங்களில் கொசுக்கள் குடியேறி விடுகின்றன. சாதாரணமாக இருபத்து ஐந்து அடி உயரம் வரை கொசுக்கள் பறக்கின்றன எனினும் இவை இனத்துக்கு ஏற்ப மாறுபடுகின்றன. சிங்கப்பூரில் சில வகைக் கொசுக்கள் 21 வது மாடி வரைக்கும் பறக்கின்றன. எட்டாயிரம் அடி உயர இமய மலையிலும் கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இரண்டாயிரம் அடி பள்ளத்தாக்குகளிலும் கொசுக்கள் வாழ்கின்றனவாம் !

தனியார் துறைகளைப் பொறுத்தவரையில் லாபம் என்பதே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதால் பொதுமக்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த விஷயத்தில் அரசே முன்னின்று அதற்குரிய செயல்களைச் செய்ய வேண்டியது அவசியம்.

சரியான சட்ட திட்டங்களோ, வழிமுறைகளோ, மக்களை ஈடுபடுத்தும் முயற்சிகளோ இல்லாத நிலையே இன்று கொசு ஒழிப்பு முயற்சியில் இருக்கிறது. இதை ஒழுங்கு படுத்த வேண்டியது அவசியம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து கொசு ஒழிப்பு முயற்சியை ஊக்குவிப்பதும் பயனளிக்கும்.

கொசு பரவுதலைத் தடுப்பதற்குப் பதிலாக பெரும்பாலும் கொசுவிலிருந்து தப்பிக்கும் முயற்சிகளைத் தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். வலைகளுக்குள் பதுங்கிக் கொள்வதும், கொசு திரவங்களைப் பயன்படுத்துவதும் தற்காலிகத் தப்பித்தல் வழி முறைகளே.

கொசுக்களை கரியமில வாயுவின் வாசனை ஈர்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பீர் குடித்திருப்பவர்களையும், சிலவகை வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவோரையும் கொசுக்கள் விரட்டி விரட்டிக் கடிக்கின்றன. தாய்மை நிலையிலிருக்கும் பெண்களையும் கொசுக்கள் அதிகமாகக் கடிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நீளமான ஆடைகள் அணிவதும், வீரியம் குறைந்த கொசு திரவங்களை ஆடை மறைக்காத பகுதிகளில் பூசுவதும் கொசுக்களின் கடியிலிருந்து சற்று பாதுகாக்கும்.

கொசுக் கடியிலிருந்து தப்புவதற்காக உடலில் பூசும் மருந்துகளை குழந்தைகளின் உடலில் பூச வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். காயம் பட்ட இடங்களில் பூசுவதோ, தாய்மை நிலையிலிருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவதோ, அதிகநேரம் உடலில் பூசியிருப்பதோ ஆபத்தாக முடியும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கழிவுகளையும், குப்பைகளையும் சரியாக அழிக்காமல் அலட்சியமாய் விடும் தருணங்களிலெல்லாம் நாம் கொசுக்களை வளர விடுகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங்களில் போடுவதும், பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் போன்றவற்றை சந்துகளில் எறிவதும் கொசுக்களுக்கு வரவேற்புப் பத்திரம் வாசிப்பதற்குச் சமம் என்பதை உணர்தல் அவசியம்.

கொசுக்கள் இடம் மாறி இடம் மாறி இனப்பெருக்கம் செய்து கொண்டே இருக்கும். கொசு மருந்துகளைத் தொடர்ந்து அடிக்கும் போது கொசுக்கள் அதை எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்கின்றன, எனவே கொசு மருந்துகளெல்லாம் காலப் போக்கில் நம்மைப் பார்த்து ஏளனம் செய்யும், கொசுக்களை ஏதும் செய்யாது.

கொசுக்கள் மனிதர்களின் தவறுகளுக்குப் பிறக்கும் பிள்ளைகள் என்று தான் சொல்ல வேண்டும். சுத்தமான சுகாதாரமான சுற்றுப் புறத்தைக் கொண்டிருக்கும் இடங்களில் கொசுக்கள் வருவதில்லை. எனவே கொசுக்களைக் குறை கூறுதல் பயனில்லை. அழைத்து குருதி விருந்து வைக்கும் நாம் தான் நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்.

தனிமனிதத் தவறுகளைத் திருத்தாமல் அரசையும், அமைப்புகளையும் கொசு ஒழிப்புக்கு நம்புவது என்பது கானல் நீரில் தேனீர் குடிக்கும் கனவைப் போன்றதே. நம்முடைய தவறுகளின் வேர்களை வெட்டி விடுதலே மிக மிக அவசியமானது.

பழைய பாத்திரங்கள், வாகன டயர்கள், தண்ணீர் தேங்கிக் கொண்டேயிருக்கும் பூந்தொட்டிகள், அல்லது இதுபோல தண்ணீர் தேங்கி நிற்க வசதியுள்ள எந்த இடமாக இருந்தாலும் கவனித்துக் கொள்ள வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

வீட்டில் கழிவு நீர், அல்லது குப்பைகள் வெளியேறும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்தலும், குப்பைகளைக் குப்பைக் கூடையில் போட்டு சரியான முறையில் அதை அகற்றி விடுதலும் கொசுக்களை ஒழிக்க உதவும். ஏழைகளும், கல்வியறிவற்றவர்களும் நிறைந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்துதல் அவசியம்.

2 comments on “கொசு !

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.