கல்லறைகளின் கதை

kal.jpg

( இந்த வார களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை)
.

செத்தால் ஆறடி நிலம் தான் என்று இனிமேல் யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஆறடி நிலமே இல்லாத நிலையில் தான் இன்று பல நாடுகளும், நகரங்களும் தவிக்கின்றன. காடுகளை அழித்து வசிப்பிடங்களாக்கிக் கொண்ட மனிதனுக்கு மரணத்துக்குப் பின் அடக்கம் செய்ய இடமில்லாத நிலை இன்று உலக நாடுகளை உலுக்குகிறது.

ஷங்காயில் தற்போது இருக்கும் கல்லறைகளை விட பாதி அளவில் கல்லறைகள் கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னூறு சதுர மீட்டர் பரப்பளவில் ஏழாயிரம் கல்லறைகள் கட்டி அவற்றை விற்பனை செய்யும் முறை அங்கு பரவலாகி உள்ளது.

இப்போதெல்லாம் நிற்க வைத்துப் புதைக்கும் முறை பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. இதன் மூலம் இடப் பற்றாக்குறையை கொஞ்சம் சமாளிக்க முடியும் என்பது அவர்களின் திட்டம்.

இடப்பற்றாக்குறையை சமாளிக்க, இறந்தவர்களை முதலில் எரித்து சாம்பலை அளவில் மிகச் சிறிய கல்லறையில் அடக்கம் செய்வதும் சில இடங்களில் செயல்படுத்தப் படுகிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி என பல இடங்களில் இந்த இடப்பற்றாக்குறை காரணமாக திரும்ப பயன்படுத்தும் வகையிலான கல்லறைகளின் தேவைகள் அதிகரித்திருக்கின்றன. பழைய காலத்தில் குகைகளைப் போன்ற கல்லறைகள் கட்டி அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. அதேபோல இப்போதும் பூமிக்கு மேலே கல்லறை குடியிருப்புகள் கட்டி அவற்றை விற்பனை செய்யும் போக்கும் அதிகரித்திருக்கிறது.

போரில் மாண்ட வீரர்களை கி.மு ஆயிரத்தில் கிரேக்கர்கள் எரித்ததே மேற்கு நாடுகளில் பிணங்களை எரிக்கும் வழக்கம் குறித்துக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான தகவல்.

ரோமர்கள் கிரேக்கர்களின் இந்த பழக்கத்தைக் கடைபிடித்து வந்தார்கள். ஆனால் கி.பி நூறில் இந்த பழக்கம் ரோமில் தடை செய்யப்பட்டது. இதற்கு விறகுத் தட்டுப்பாடும் கிறிஸ்தவர்கள் எரித்தலை விரும்பாததும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பகுதியில் உடல்கள் வானத்துப் பறவைகளுக்கு உணவாகவோ, ஆறுகளில் எறியப்பட்டோ , புதைக்கப்பட்டோ , குகைகளில் போடப்பட்டோ  தான் அழிக்கப்பட்டன.

அதன்பின் பல நூற்றாண்டுகள் கடந்தபின் இறந்தவனின் ஆவி தன்னுடைய உடல் முழுமையாக அழிக்கப்பட்ட பின்பே இன்னொரு பிறவி எடுக்க முடியும் என்னும் நம்பிக்கை மெல்ல மெல்ல உருவெடுத்ததால் விரைவிலேயே உடலை அழித்தல் நல்லது என்னும் சிந்தனை வலுப்பெற்றது. இதுவே உடலை எரிக்கும் வழக்கத்துக்கு வித்திட்டது. இந்து மதத்தில் கிமு 1900 களிலேயே எரித்தல் சடங்கு நடந்ததற்கான குறிப்புகள் உள்ளன.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவோம் என்றும் எனவே உடல் மண்ணில் புதைக்கப்படவேண்டுமே தவிர எரிக்கப்படக் கூடாது என்றும் நம்புகிறார்கள்.

மனித உடல் இறைவனின் சாயல் என்றும் அதை எரித்தல் தகாது என்றும், எரித்தல் என்பது வேற்று தெய்வங்களின் பலியிடுதல் முறையை ஒத்திருப்பதாகவும் கிறிஸ்தவர்கள் புதைத்தலை விரும்புவதன் காரணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

எனினும் பல கிறிஸ்தவர்கள் தற்போது எரித்தலை பல்வேறு காரணங்களுக்காக ஒத்துக் கொள்கிறார்கள். இது பெரும்பாலும் மதம் சார்ந்த அடக்கச் சடங்குகளுக்குப் பிறகே நடத்தப்படுகிறது. எரித்தல் புதைப்பதை விட செலவு குறைவாக இருப்பதாலும், விரைவிலேயே உடல் அழிந்து விடும் என்பதாலும், எளிதாக இருப்பதாலும் கூட சிலர் எரித்தலை விரும்புகிறார்கள்.

மேற்கு ஐரோப்ப நாடுகளைப் பொறுத்தவரையில் உடலை எரித்தல் என்பது கிறிஸ்தவம் நுழைந்தது முதல் ஆயிரத்து எண்ணூறுகளின் பிற்பகுதி வரை சட்ட விரோதமாக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் எரித்தல் என்பது பிரபலமற்ற ஒரு செயலாகவே இருந்து வந்திருக்கிறது. 1970ல் வெறும் 8 விழுக்காடு உடல்கள் மட்டுமே எரிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலை நாடுகளில் நடைமுறையில் இருக்கும் எரித்தல் கருவிகளில் சுமார் 760 முதல் 1150 டிகிரி செண்டிகிரேட் வெப்பத்தைச் செலுத்தி உடலை அழிக்கிறார்கள்.

ஜப்பானைப் பொறுத்தவரையில் ஏறக்குறைய நூறு சதவீதம் பேர் எரித்தலையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானில் அடக்கத்துக்கு ஆகும் செலவு மட்டும் சுமார் பதினெட்டு இலட்சம் ரூபாய் !. உலகிலேயே அடக்கத்துக்கு அதிக செலவாகும் நாடு எனும் சாகாப் புகழ் ஜப்பானுக்கு இருக்கிறது

யூதர்களும் உடலை எரிப்பதை எதிர்க்கிறார்கள். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், விண்ணக வாழ்வுக்கு உயிருடன் எழுப்பப் படுவதற்கும் உடலை எரிப்பதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்னும் சிந்தனை தற்போது ஆங்காங்கே எழும்பி வருகிறது.

உடலை எரிப்பதால் இறந்தவர் ஆவியாய் அலைய மாட்டார் என்பது, ஆன்மா தூய்மையடையும் என்பதும், எரியும் நெருப்பு மேல் நோக்கி எரிவதால் இறந்தவரும் விண்ணகம் செல்வார் என்பதும் பல மதத்தினரின் நம்பிக்கையாக உள்ளது.

பண்டைய கால யூத வழக்கப்படி எரித்தல் என்பது குற்றவாளிகளுக்கும், அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்புவோருக்கும் கொடுக்கப்படும் அவமான மரணமாகக் கருதப்பட்டது. எரியூட்டப்பட்ட சாம்பல் காற்றில் கலந்து மறைவதனால் அப்படி இறப்பவர்களுக்கு மறுமை இல்லை என்று நம்பப்பட்டது.

கழுத்துப் பகுதியிலுள்ள ஒரு எலும்பிலிருந்தே கடவுள் மனிதனை உயிர்த்தெழச் செய்வார் என்னும் யூத நம்பிக்கை எரியூட்டும் உடல்கள் உயிர்த்தெழுதலில் பங்குபெறுவதில்லை என்று முடிவு கட்டி விட்டன.

இரவில் எரியூட்டுதலை பல மதங்கள் தவிர்க்கின்றன. இரவில் மரணமடைந்தவரைக் கூட பகலில் தான் எரியூட்டுகிறார்கள். காரணம் அதுதான் இறந்தவனின் ஆன்மாவை பேய்கள் பறித்துக் கொள்ளாமல் காப்பாற்றுமாம்.

புதைப்பது தவறு என்றும், அப்படிப் புதைத்தால் நரகத்திலுள்ள பேய்கள் அந்த உடல்களை ஆக்கிரமித்து, இறந்த மனிதனின் ஆன்மாவைக் கைப்பற்றிவிடும் என்று சில மதங்கள் நம்புகின்றன.

பாரசீ பிரிவினர் உடலை எரிப்பதும் இல்லை புதைப்பதும் இல்லை. வெறுமனே உடலை டாக்மே அல்லது மெளனத்தின் கோபுரம் என்னுமிடத்தில் விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

சூரியனின் வெப்பமும், பறவைகளும் உடலை அழித்துவிடுகின்றன. மனிதன் இறந்தபின்னும் அவனுடைய உடலைச் சுற்றி ஐந்து விதமான சக்திகள் சுற்றிக் கொண்டிருக்கும் எனவும், உடலை வெறுமனே வெளியே விட்டுச் செல்வது தவறு எனவும் எரிக்கும் பழக்கமுடையோர் வாதிடுகின்றனர்.

எது எப்படியோ, உலகெங்கும் சுமார் ஐந்து கோடி மக்கள் வருடம் தோறும் இறக்கிறார்கள். அவர்கள் உடல்கள் எரித்தல் அல்லது புதைத்தல் என்னும் ஏதோ ஒரு வகையில் மரணத்துக்குப் பின் அடங்கிவிடுகின்றன.


 

One comment on “கல்லறைகளின் கதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.