ஒரு கடற்கரையின் இரவு

sea.jpg

விரிந்த கடலின் ஓரம்
பாய்ந்து பாய்ந்து
தேய்ந்து போன கரை.
உப்புக் கடலின் ஈரம் வினியோகிக்கும்
கட்டுக்குள் நிற்காத காற்று.

மனசு நனைகிறது.
என் மணல் மேனி முழுதும்
பல்லாயிரம் சுவடுகள்.

மாலைப் பொழுது
விடியும் போது
விரல்களில் சுண்டல் பெட்டியுடனும்
நரம்புகளுக்குள் வற்றாத நம்பிக்கையுடனும்
தொடர் சுவடு விட்டுச் செல்லும்
சிறுவர்கள்.

விழிகளின் வெளிச்சத்தில்
நேசத்தின் நெருக்கம்
உணர்வுகளை நொறுக்கும் போது
காதுமடலில் சுடு சுவாசம் வீசும்
காதலர்கள்.

கால் தொடும் கடலலையின்
முதல் துளியையும்
நீள் கடலின் ஓரம் தட்டும்
கடைசிச் சொட்டையும்
ஓர்
ஈர நூல் தான் இழுத்துக் கட்டுகிறது
என்று கவிதை சொல்லும் கவிஞர்கள்.

கொட்டும் இருளிலும்
கைதட்டும் அலைகளின் சத்தத்திலும்
அமைதியைப் பிரித்தெடுக்கும்
வறுமைக் கோட்டுக்கு கீழும்
முதுமைக் கோட்டுக்கு மேலேயும் இருப்பவர்கள்.

எதிர்காலத்தை
இருளுக்குள் இளைப்பாற விட்டுவிட்டு
நிகழ்கால நிமிடங்களில்
மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில்
குறி சொல்லிக் கொண்டிருக்கும்
ஜாதகப் பட்சிகள்.

குடியிருப்புக்களில்
காற்று குற்றுயிராகிப் போனதால்
மணல் வெளியின் சந்தடியில்
சுவாசம் தேடும் சந்ததிகள்.

வயிற்றுக்குள் அமிலம் வளர்வதால்
அமுதசுரபி தேடித் தேடி
பிஞ்சுக் கரங்களில்
பருக்கைகள் விழக்காத்திருக்கும்
மணிமேகலைகள்.

அலுவலகக் கதவுகளும்
தொழிற்சாலை மதில்களும்
நிராகரித்த விரக்தியில்
மணலுக்குள் விழுந்த சர்க்கரையாய்
வாசல் தேடி மூச்சிரைக்கும்
இளைஞர்கள்.

இன்னும் இன்னும்.
யாராரோ
என் மேனியைத் தொட்டுக் கொண்டு
என்னில் விட்டுச் சென்ற சுவடுகள்
நெருக்கமாய்
மிக மிக நெருக்கமாய்.

இரவுக் காவலர் பார்வை பட்டு
காதலர்கள் விலகிப் போக.

போர்வைகளின்
பார்வை தேடி
மிச்ச கூட்டமும் வடிந்து முடிந்தபின்,

சில்லறை எண்ணி
சிரித்தும் சிந்தித்தும்
சுண்டல் சிறுவர்கள் சிதறி மறைய.

என்
தூக்கத்தைத் தின்று விட்டு
இரவு நிம்மதியாய்த் துயில,

நிறுத்தாமல் பேசிக்கொண்டிருக்கும்
அந்த நீலக் கடல்.
நான் விழித்திருக்கும் நம்பிக்கையில்.

9 comments on “ஒரு கடற்கரையின் இரவு

  1. Next time while going to beach i will be thinking what sea will be doing that time,whether telling the same poem or it will tell some other thing 🙂

    Like

  2. wonderful!just after reading this only i wonder see also has his autobiography .All the best, you have bright future.

    Like

  3. உங்களை மாதிரி எழுத முடியாது. எழுதவும் வராது. நான் உங்கள் வார்ப்புரு (ரெம்ப்ளேட்) பற்றிச் சொன்னேன். கண்ணை உறுத்தாமல் அழகாக இருக்கிறது. ‘வேர்ட் பிரஸ்’க்கு மாறலாமா என்று யோசிக்கிறேன்.

    Like

  4. நன்றி ஆசாத். திஸ்கியிலிருந்து யூனிகோடுக்கு மாற்றினேன், சில எழுத்துக்கள் உதிர்ந்து விட்டன 🙂 திருத்திவிட்டேன் ! நன்றி

    Like

  5. கடற்கரையில் இவ்வளவு கொட்டிக்கிடக்கிறது என்று ‘வெறும்’கண்ணால் பார்த்திருக்கிறோம். உங்களுக்குக் கவிதைக் கண்கள். மேலும் உங்கள் பக்கம் நேர்த்தியான அழகுடன், அத்துடன் எளிமையாகவும் இருக்கிறது. இப்படி நானும் முயற்சித்துப் பார்க்கலாமா என்றிருக்கிறேன் 🙂

    Like

  6. சேவியர்ஜி,

    நல்ல கவிதை.

    //வறுமைக்கோட்டுக்குக் கீழும்
    முதுமைக்கோட்டுக்கு மேலும்// ரசித்தேன்.

    //மமேகலைகள்// = மணிமேகலைகள்
    //எனில் விட்டுச் சென்ற// = என்னில் விட்டுச் சென்ற
    //சில்லறை எண்// = சில்லறை எண்ணி

    தட்டச்சுப்பிழைகளென நினைக்கிறேன்.

    அன்புடன்
    ஆசாத்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.