காணவில்லை ( சிறுகதை )

poo.jpg

‘இங்கே தானே வெச்சிருந்தேன். எங்கே போச்சு ? காலைல கூட இருந்துதே’ கண்ணன் கத்திய கத்தலில் பயந்து போய் ஓடி வந்தாள் வளர்மதி.

‘என்னங்க ? என்ன வெச்சிருந்தீங்க ? கொஞ்சம் சத்தம் போடாம சொல்றீங்களா ? ‘

‘ஐநூறு ரூபாய் நோட்டு ஒண்ணு. இங்கே டி.வி பக்கத்துல தான் வெச்சிருந்தேன். காலைல ஆபீஸ் போற அவசரத்துல எடுக்க மறந்துட்டேன். இப்போ பாத்தா காணோம்.’ கண்ணன் எரிச்சல் பட்டான்.

‘நானும் ஆபீஸ் போயிட்டு இப்போதான் வந்தேன். எனக்கென்ன தெரியும் நீங்க காசு எங்கே வெக்கிறீங்கன்னு. உங்களோட ஞாபக சக்தி தான் எனக்குத் தெரியுமே. வேற எங்கயாவது வெச்சிருப்பீங்க. பதட்டப்படாம போய்த் தேடுங்க. வளர்மதி சொன்னாள்.

‘என்னோட ஞாபக சக்தி பத்தி நீ லெக்சர் குடுக்க வேண்டாம். காலைல வெச்ச காசைக் கூடவா நான் மறந்து போவேன் ? ஏன் மூணு வருஷத்துக்கு முன்னாடி கட்டிகிட்ட உன்னை இன்னும் மறக்கலை இல்லையா ?’ கண்ணன் பொரிந்தான்.

‘சரி. நீங்க போய் டீ சாப்பிடுங்க. நான் தேடிப்பாக்கிறேன். வேற எங்கயும் போகாது உங்க பணம். உங்க சட்டை பாக்கெட்டிலோ, பாண்ட் பாக்கட்டிலயோ தான் இருக்கும்.’ வளர்மதி கண்ணனை சமாதானப் படுத்தினாள்.

இல்ல மதி. எனக்கு நல்லா நினைவிருக்கு. காலைல சட்டை மாத்தும்போ பாக்கெட்ல இருந்த ஐநூறு ரூபாயை எடுத்து இங்கே வெச்சேன். எனக்கு அந்தப் பொண்ணு மேல தான் சந்தேகம்.

வேலைக்காரப் பொண்ணைச் சொல்றீங்களா ?

ஆமா.

பாவங்க அவ. காலைல இருந்து ராத்திரி வரைக்கும் வேலை பாக்கிறா. நம்ம வீட்டுக்கு வந்து மூணு மாசம் ஆச்சு. எத்தனையோ தடவை என்னோட வளையல்களையும், மோதிரங்களையும் எல்லாம் கழற்றி அங்கே இங்கேன்னு போட்டு வைப்பேன். ஆனா இதுவரைக்கும் ஒண்ணும் காணாம போனதில்லை. பால் பாக்கெட் வாங்கற மீதி இரண்டு ரூபாயைக் கூட அவ தொடறதில்லை. அவளுக்கு அந்த புத்தி எல்லாம் வரும்ன்னு தோணல.

‘ஆமா. நீ வேலைக்காரிக்கெல்லாம் சப்போர்ட் பண்ணுவே. புருஷனை மட்டும் கரிச்சி கொட்டுவே.’ கண்ணனுடைய எரிச்சல் மீண்டும் கிளர்ந்தெழுந்தது.

‘ஆமா. உடனே அப்படி சொல்லுங்க. நான் வேலைக்காரியைத் தானே கல்யாணம் பண்ணியிருக்கேன். அவளுக்கு சப்போர்ட் பண்ண ? ‘வளர்மதியும் லேசாக எரிச்சல் பட்டாள்.

‘சரி. நீயே சொல்லு. நாம மூணுபேரும் தான் வீட்ல இருக்கோம். நீயும் எடுக்கமாட்டே வேற யாரும் உள்ளே வரவும் முடியாது. காக்கா வந்து தூக்கிட்டு போச்சுங்கற கதையை எங்கிட்டே சொல்லப் போறியா ? வேலைக்காரியை வேலைக்காரியா வெச்சுக்கணும். அவளுக்கு நீ ரொம்ப இடம் குடுத்துட்டே.’ கண்ணன் கொஞ்சம் சுருதி குறைத்துச் சொன்னான்.

ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிட்டு, படிக்க வசதியில்லாததனால வீட்டு வேலை செய்ய வந்த பொண்ணு அவ. திருட்டு புத்தியெல்லாம் அவளுக்கு வரும்ன்னு எனக்குத் தோணலை. அவ வீட்டில ஆறுபேரு, அதுல நாலுபேரு இவளை விட சின்னவங்க. அப்பா அம்மா கூலி வேலை செய்து வீட்டு வாடகையும் கட்டி, இத்தனை பிள்ளைங்களுக்கு சாப்பாடும் போட முடியாததனால அவ வேலை செய்றா. அவளை நாம காரணம் இல்லாம தப்பு சொல்லக் கூடாது. வளர்மதி சொன்னாள்.

நம்ம கூட சரிசமமா வீட்டு ஹால்ல வந்து உக்கார்றா, சும்மா சும்மா டி.வி பாக்கறா. எல்லா ரூம்லயும் ஏறி இறங்கறா, இப்படியெல்லாம் அவளுக்கு ரொம்ப உரிமை குடுக்கக் கூடாது. வேலைக்காரியை வேலைக்காரியோட இடத்துல வைக்கணும். எல்லா வீட்லயும் இப்படியா செய்றாங்க ? வேலைக்காரியை அடுக்களைல தானே தங்க வெக்கிறாங்க. அப்படித் தான் இருக்கணும். நாம ஆபீஸ் போனதும் முன்பக்க கேட்டையும், பின் பக்க கேட்டையும் பூட்டி சாவியை எடுத்துட்டு போகணும். அவ வீட்டுக்கு உள்ளே தான் இருக்கணும். அது தான் முறை.

அது சரி.. அவ தான் வீடு முழுசும் துடைச்சு வெக்கிறா. நீங்க என்னடான்னா வீட்டுக்கு வந்த உடனே காபி கேக்கறீங்க, பிரிட்ஜ்ல தண்ணி பாட்டில் இல்லேன்னா கத்தறீங்க, சன்னல் ஓரமா தூசு இருந்தா எகிறிக் குதிக்கிறீங்க. அவ சின்னப் பொண்ணு தானே. போன வருசம் வரை அவளுக்கு இப்படி வேலை செய்ய வேண்டி வரும்ன்னு தோணி இருக்குமா ? ஸ்கூல் பையை மாட்டிட்டு சந்தோசமா பிள்ளைங்க கூட சுத்திட்டு இருந்திருப்பா இல்லையா ? படிச்சு நல்ல வேலை வாங்கணும்ன்னு ஆசை இருந்திருக்கும் இல்லையா ? வளர்மதி அவளுக்காகப் பரிந்து பேசினாள்.

நான் இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும், சரி அவ கிட்டே ஒரு வார்த்தை கேப்போம்ன்னு தோணலை இல்லையா உனக்கு ? எனக்கு அட்வைஸ் பண்றதும், என்னை குற்றம் சொல்றதுமே உனக்கு வேலையாப் போச்சு. சரி போகட்டும். இன்னிக்கு ஐநூறு, நாளைக்கு ஆயிரம், அப்புறம் ஒருநாள் யாரும் இல்லாத நேரமா பார்த்து வீட்டைத் தொடச்சு எடுத்துட்டு போயிடுவா. அப்போதான் உனக்குப் புரியும் நான் சொல்றது. கண்ணன் சொல்லிவிட்டு சோபாவில் சாய்ந்தான்.

உள்ளே சமையலறையில் நின்றுகொண்டு இவர்களுடைய உரையாடலை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரமா வால் அழுகையைக் கட்டுப் படுத்த முடியவில்லை. வீட்டின் பின்புறம் சென்று சுவரில் முகத்தைச் சாய்த்துக் கொண்டாள். மூச்சுக்கு முன்னூறு தரம் கேட்பவர்களிடமெல்லாம் தன்னுடைய ஐயாவைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கும் என்னையா சந்தேகப் படுகிறார்கள் ? வீட்டில் என்னை ஒரு தங்கையைப் போல பார்த்துக் கொள்கிறார்கள் என்று அம்மாவிடம் ஆனந்தக் கண்ணீரோடு சொல்வேனே எல்லாம் பொய்யா ? நான் வேலைக்காரி தானா எப்போதுமே ? அவர்களிடம் அன்பாகப் பழகினால் அது எல்லை மீறுவதா ? ரமா தலையைக் குனிந்து நின்று அழுதாள்.

அவளுடைய மனசுக்குள் பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் சாயங்கால நேரமும், தம்பிகளோடு அரட்டையடித்து, கிடைப்பதை உண்டு கதை பேசி கிண்டலடிக்கும் தருணங்களும் வந்து நிறைந்தன. அம்மாவின் மடியில் தலை வைத்து அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

அம்மா என்ன செய்வாள் பாவம். ஆறு பிள்ளைகளை  வளர்த்த வேண்டுமே. அம்மா சம்பாதித்தது இந்த பெரிய குடும்பம் தான். பொருளாதாரத்தை மறந்து விட்டுப் பார்த்தால் எந்த விதமான சந்தோசங்களுக்கும் குறைவில்லாத குடும்பம். பணம் மட்டும் இல்லாத வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது. கடவுள் ஒரு பொட்டி நிறைய பணத்தை வீட்டுக்குள் கொண்டு வந்து தந்தால் எப்படி இருக்கும் ? ஸ்கூலுக்குப் போய் வந்து, சந்தோசமாக உண்டு விளையாடி இருந்திருக்கலாம். ரமாவின் மனதுக்குள் ஏதோதோ எண்ணங்கள் வந்து வந்து மோத அவள் கண்கள் நிற்காமல் வழிந்தன.

‘ரமா….’ வளர்மதி கூப்பிட்டாள்.

கண்களில் வழிந்த கண்ணீரை அவசர அவசரமாய் துடைத்துக் கொண்டே வீட்டுக்குள் ஓடி வந்தாள் ரமா. ஹாலுக்குள் கால் வைக்கும்போது கூசியது. நான் இந்த இடத்துக்குத் தகுதியில்லாதவள் என்னும் எண்ணம் முதன் முறையாக அவளுக்குள் ஓடியது. அந்த எண்ணமே அவளுக்குள் இருந்த எல்லா சோகங்களையும் தூண்டி விட்டிருக்க வேண்டும். கண்கள் மீண்டும் கலங்கின.

‘நான்.. எடுக்கலேம்மா…’ அதற்குமேல் அவளால் பேசமுடியவில்லை. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

வளர்மதி திடுக்கிட்டாள். இந்தக் காட்சியை எதிர்பார்க்காத கண்ணனும் ஒருவினாடி திகைத்தான்.

ஏய்.. ஏன் அழறே. இப்போ யார் உன்கிட்டே என்ன கேட்டாங்கன்னு அழறே. டீ போடணும் அதுக்காகத் தான் கூப்பிட்டேன். அழாதே. அவங்க ஏதோ வேலை நெருக்கடியில வந்திருப்பாங்க அதனால ஏதாச்சும் சொல்லுவாங்க. நீ அதையெல்லாம் பெருசா எடுத்துக்காதே. ஆமா… உன் அக்காவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தாங்களே என்ன ஆச்சு ? பேச்சை திசை திருப்பும் நோக்கில் கேட்டாள் வளர்மதி.

‘அவங்க பத்தாயிரம் ரூபா கேட்டாங்க. அவ்வளவு பணம் அம்மா கிட்டே இல்லை. அதனால ….’ ரமா நிறுத்தினாள்.

‘அதனால….’

‘அக்கா.. ஒருத்தர் கூட போயிட்டாங்க…’ ரமா தலைகுனிந்தாள்.

‘ஐயோ. அம்மா என்ன சொன்னாங்க ?’

‘அம்மா தான் ஓடிப் போக சொன்னாங்க. நம்ம கிட்டே பணம் இல்லேம்மா. உன்னை நல்ல ஒரு இடத்துல கட்டி கொடுக்க வசதியில்லாதவளாயிட்டேன். அதனால போயிடுன்னு சொன்னாங்க..’ ரமாவின் கண்களில் மீண்டும் கண்ணீர்.

வளர்மதியும், கண்ணனும் அதிர்ந்து போனார்கள். அந்த அம்மா இப்படி ஒரு முடிவெடுக்க எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்கள், எவ்வளவு அழுதிருப்பார்கள் என்பதை நினைக்க நினைக்க கண்ணன் நிலைகுலைந்தான்.

‘சரி.. நீ போய் ரெண்டு டீ போடு’ வளர்மதி சொல்லி விட்டு சோபாவில் அமர்ந்ததும் காலிங்பெல் அழைத்தது.

கண்ணன் கதவைத் திறந்து வெளியே வந்தான்.

வெளியே கார்பெண்டர் பாலாஜி.

பாலாஜியைப் பார்த்ததும் தான் கண்ணனின் மனசுக்குள் சட்டென்று நெருப்புப் பொறி ஒன்று விழுந்தது. அந்த ஐநூறு ரூபாய் இவருக்குத் தானே கொடுத்தேன் காலையில் ! நெருப்பை மிதித்து விட்டது போலாயிற்று கண்ணனுக்கு. மிகப்பெரிய தவறு செய்து விட்ட உணர்வில் தலையை ஆட்டினான். பாலாஜி கையில் கொண்டு வந்திருந்த பில்லை கண்ணனின் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

உள்ளே வந்த கண்ணனுக்குள் குற்ற உணர்வு தலைதூக்கியது. கொஞ்சம் நிதானமாய் யோசித்திருக்கலாம். அல்லது அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டாமலாவது இருந்திருக்கலாம். தனக்குக் கீழே இருப்பவர்களை மரியாதையுடன் அணுகும் மனநிலை ஏன் எனக்கு இல்லாமல் போய்விட்டது ? பணம் இல்லாதவர்கள் எல்லாம் திருடர்கள் என்னும் முட்டாள்தனமான எண்ணம் ஏன் எனக்குள் எழுந்தது ?  நம்பிக்கையின்மையில் உழலும் நானல்லவா கேவலமானவன்.

கண்ணனின் குழப்பமான உடல் அசைவுகளைக் கவனித்த வளர்மதி கேட்டாள், ‘என்னங்க ஆச்சு ? ஒரு ஐநூறு ரூபாய்க்கா இப்படி யோசிக்கிறீங்க ? வேணும்ன்னா ரமாவை வேலையை விட்டு அனுப்பிடலாம்’

வேண்டாம்…வேண்டாம். பாவம் சின்னப் பொண்ணு. ஏதேதோ பேசிட்டேன். வழக்கம் போலவே தப்பு எம்மேல தான். ஏன் தான் இப்படி எல்லா விஷயங்களையும் மறந்து தொலைக்கிறேனோ ? கண்ணன் இரண்டு கைகளையும் பிணைத்து பின்னந்தலையில் வைத்து அழுத்தினான்.

என்ன சொல்றீங்க.

கார்ப்பெண்டருக்கு நான் தான் காலைல அந்த ஐநூறு ரூபாயைக் குடுத்தேன். கண்ணன் மெதுவாகச் சொல்ல வளர்மதி புன்னகைத்தாள்.

அதான் நான் அப்பவே சொன்னேன். கேட்டீங்களா ? சரி.. பணக் கவலை தீர்ந்திடுச்சு இல்லே ?

புதுக் கவலை வந்திருக்கு மதி. நான் ரமாவை அப்படி திட்டியிருக்கக் கூடாது. அவ சந்தோசமா வீட்டுக்குள்ள ஓடியாடிட்டிருந்தா. அவளை ரொம்பவே தப்பா சொல்லிட்டேன். அதான் எனக்கு இப்போ கவலையாயிருக்கு. கண்ணன் மெதுவாய் சொல்லி முடிக்கவும் ரமா இரண்டு டம்ளர்களில் டீயுடன் அவர்கள் முன்னால் வந்து நின்றாள்.

‘வா ரமா.. இங்க வந்து உட்காரு..’ கண்ணன் அழைத்தான்.

ரமா அமைதியாக நின்றாள்.

‘ரமா.. என்னை மன்னிச்சுடு. நான் தான் அந்த பணத்தை நம்ம பாலாஜி கிட்டே குடுத்திட்டேன். ஆபீஸ் போற பரபரப்புல அதை மறந்தே போயிட்டேன். அதை மறந்துட்டு உன்னை ஏதேதோ பேசிட்டேன். என்னை மன்னிச்சுடு.’ கண்ணன் சொன்னதும் பதறினாள் ரமா.

‘என்னய்யா இப்படியெல்லாம் பேசறீங்க.. நீங்க என்னை திட்டலாம்…’ ரமா உடைந்த குரலில் சொன்னாள்.

‘ஐயான்னு கூப்பிடாதே ரமா. இனிமே என்னை அண்ணா ந்னே கூப்பிடு. இதை உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ. இனிமே எந்த சந்தர்ப்பத்துலயும் நான் உன்னை சந்தேகப் பட மாட்டேன்.’ ஒரு வேலைக்காரச் சிறுமியிடம் பேசுகிறோம் என்றெல்லாம் நினைக்காமல் மனசு திறந்து அமைதியாக தவறை முழுவதுமாய் ஒப்புக்கொண்ட மனநிலையில் பேசினான் கண்ணன்.

நீங்க எப்பவுமே இப்படிதான். அந்த எல்லை இல்லேன்னா இந்த எல்லை. இரண்டு எக்ஸ்ட்டிரீம் மெண்டாலிடி. கன்னா பின்னான்னு திட்டறது, தப்புன்னு தெரிஞ்சா மொத்தமா சரண்டர் ஆகிடது.  சொல்லிய வளர்மதி சிரித்தாள்.

‘ஆரம்பிச்சுட்டியா உன்னோட வேலையை’ கண்ணன் சொல்ல, ரமா சற்று முன் நடந்த சண்டையை முழுவதும் மறந்து விட்டு புன்னகைத்தாள்

10 comments on “காணவில்லை ( சிறுகதை )

 1. அருமையான கதை!!
  புரியாமையால் ஏற்படும் குளப்பத்தை தெளிவாக காட்டிய உம் கதைக்கு ஒரு பேஷ்!!!!!!!! 🙂

  Like

 2. Endha kadhai paditha udan en kangalil kaneer vandhu vitadhu. Avalavu unarchi poorvamaai erundhadhu.

  Like

 3. Ms. Bala. Nantri. வலைத்தளத்தை நீண்ட நேரம் பார்வையிட்டிருக்கிறீர்கள். மனமார்ந்த நன்றிகள்

  Like

 4. நிறைய இடங்களில் படித்த கதைதான், இருப்பினும் என்னை சற்றே மெய் சிலிர்க்க வைத்து விட்டது அவளோட அக்காவின் திருமண முடிவு. அருமை!!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.