நேர்முகத் தேர்வு : எதிர் கொள்ள சில யோசனைகள்

interview1.jpg

( தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )
நேர்முகத் தேர்வு குறித்த பயமும், தயக்கமும் படபடப்பும் பெரும்பாலானோரிடம் இருப்பது இயல்பே. சரியான திட்டமிடுதல் மூலம் இந்த தேவையற்ற பதட்டத்தை விலக்கி நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

நேர்முகத் தேர்வு என்பது குற்றவாளியிடம் வழக்குரைஞர் நடத்தும் விசாரணை அல்ல என்பதை முதலில் நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் அந்தப் பணிக்குத் தகுதியான நபர் என்னும் எண்ணம் நிர்வாகத்துக்கு இருப்பதால் தான் தன்னை அழைத்திருக்கிறார்கள் என்னும் உயர்ந்த சிந்தனை முதலில் உள்ளத்தில் நிலைக்க வேண்டும்.

* முதலில் எந்த பணிக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறோம் என்பதைக் குறித்த முழு அறிவு வேண்டும். அந்தப் பணிக்கு தான் தகுதியானவன் தானா, தனக்குப் பிடித்தமான பணிதானா என்பதில் ஒரு தெளிவு நிச்சயம் வேண்டும். 

* அந்தத் தெளிவு கிடைத்துவிட்டால் பின்னர் அந்தப் பணிக்கு என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதைக் குறித்து தகவல் திரட்ட வேண்டும். அந்த எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யக் கூடிய வகையில் தன்னிடம் தகவல்கள் இருக்கின்றனவா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டும்.

* தன்னம்பிக்கை மிகவும் அவசியம். நேர்முகத் தேர்வில் அமரும்போது சிறு புன்னகையையும், தன்னம்பிக்கையையும் முகத்தில் தவழ விடுங்கள். வேட்டைக்காரனின் முன்னால் மண்டியிடும் பறவை போல் இருக்க வேண்டாம்.

* நேர்முகத் தேர்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்தல் அவசியம். குறிப்பாக எப்போது நேர்முகத் தேர்வு, எந்த இடத்தில், யாரைச் சந்திக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

* மிகவும் முன்கூட்டியே நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டாம். பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாகச் செல்லலாம். சென்ற உடனே நீங்கள் வந்த தகவலை தெரியப்படுத்திவிடுங்கள்.

* நேர்முகத் தேர்வுக்குச் சான்றிதழ்கள் கொண்டு செல்லவேண்டியிருந்தால் அதை முன்கூட்டியே தயாராக எடுத்து வைத்திருங்கள்.

* நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் நிர்வாகத்தைக் குறித்த சில தகவல்களை இணையம் போன்ற இடங்களிலோ, நண்பர்களிடமோ கேட்டு வைத்துக் கொள்வது நேர்முகத் தேர்வாளரை வசீகரிக்கும்.

* என்னென்ன கேள்விகள் கேட்க வாய்ப்பு இருக்கிறது என்பவற்றைக் குறித்து விழிப்பாய் இருங்கள். குறிப்பாக உங்கள் பயோடேட்டா சொல்லும் தகவல்கள் அனைத்திலும் ஆழமான அறிவு கொண்டிருங்கள்.

* நல்ல தூய்மையான ஆடை தன்னம்பிக்கையைத் தரும். மரியாதையையும் பெற்றுத் தரும். அதை மறக்க வேண்டாம். உணவு மட்டும் சுவையாய் இருந்தால் போதாது, பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். அதிகப்படியான பேச்சுகள் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு மூன்று நிமிடங்களில் தெளிவாகப் பதில் அளியுங்கள்.

* கேள்விகளைக் கவனமாகக் கேளுங்கள். கேள்வி முடியும் முன்பு பதிலை துவங்க வேண்டாம். கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே இடைமறித்துப் பேசுதலும் வேண்டாம்.

* பழைய அலுவலகத்தைக் குறித்து எதிர் கருத்துக்கள் எதையும் சொல்ல வேண்டாம். உற்சாகத்துடன் பேசுங்கள். தன்னம்பிக்கையும் நேர் சிந்தனையும் உங்கள் பேச்சில் தொனிக்கட்டும்.

* ‘உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ எனும் கேள்வி எழுப்பப்பட்டால் தெளிவாக நீங்கள் எதையெல்லாம் உங்கள் பலம் என்று கருதுகிறீர்களோ அவற்றை முன்னிலைப்படுத்திப் பேசுங்கள். இது மிக மிக முக்கியம்.

* ஓரிரு பயோடாடாக்களையும், புகைப்படங்களையும் கையிலேயே வைத்திருங்கள்.

* கண்களில் பார்த்து தைரியமாகப் பேசுவது உங்கள் ஈடுபாட்டைக் காட்டும். எனவே அதையே பின்பற்றுங்கள்.

* உங்கள் பணிநாட்களில் செய்த குறிப்பிடும்படியான சாதனைகள். பெற்ற விருதுகள் இவற்றை தெரியப்படுத்துங்கள்.

* நேர்முகத் தேர்வு என்பது நீங்கள் அந்த வேலைக்குத் தகுதியானவரா என்று பார்ப்பது போலவே, உங்களுக்குத அது தகுதியான வேலை தானா அது என பார்க்கவும் தான். எனவே உங்களுக்குத் தரப்படும் நேரத்தில் உங்கள் கேள்விகளையும் கேளுங்கள்.

* உங்கள் பலவீனங்களை அறிந்து கொள்வது உங்களுடைய பலம், எனவே உங்கள் பலவீனங்களை அறிந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் செல்லும் வேலைக்கு அந்த பலவீனம் தடையாய் இருக்கும் என அறிந்தால் அதை தெரியப்படுத்தாமல் இருப்பது நலம்.

* நேர்முகத் தேர்வின் முடிவில் ‘நான் இந்த வேலைக்குத் தகுதியானவன் என்று தோன்றுகிறதா ?’ என கேளுங்கள். அது உங்களுக்குப் பலன் தரும். எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தால் வாதத்தில் ஈடுபடாமல் சுருக்கமாக பதிலளியுங்கள். உங்களிடம் இல்லாத திறமையை ஒத்துக் கொண்டு அதை விரைவில் பெறுவேன் என நம்பிக்கை தாருங்கள்.

* உங்கள் குணாதியங்கள் நல்லவை என உங்கள் நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துங்கள். தேவையற்ற எரிச்சல், கோபம், படபடப்பு போன்றவற்றை வெளிக்காட்ட வேண்டாம்.

* முந்தைய வேலையை ஏன் விட்டீர்கள் எனும் கேள்வி நிச்சயம் எழும், அப்படிப்பட்ட சூழலில் என்ன பதில் சொல்லவேண்டும் என்பதை மிகவும் எச்சரிக்கையுடன் தயாரித்து வையுங்கள். இருபுறமும் கூர்மையான வாளைக் கையாளும் கவனம் தேவை. பழைய நிர்வாகத்தைப் பழிக்காமல், புதிய நிர்வாகத்துக்கு திருப்தியும், நம்பிக்கையும் ஏற்படும் வகையில் உங்கள் பதில் அமைய வேண்டியது அவசியம்.

* பணிகளுக்கு இடையேயோ, அல்லது படிப்பிற்கும் வேலைக்கும் இடையே இடைவெளி இருந்தால் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டி வரலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

* உங்கள் பணி என்னவாய் இருக்கும் என்பதையும், அதன் முக்கியத்துவங்களையும் உங்களுக்குத்தரப்படும் நேரத்தில் கேளுங்கள்.

* உங்களுக்குத் தெரியாத தொழில்நுட்பத்தில் கேள்வி கேட்கப்பட்டால், அதே போன்ற வேறு தொழில்நுட்பங்கள் தெரிந்தால் அதைக் கூறி விரைவில் இந்த தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்ள முடியும் என நம்பிக்கையூட்டுங்கள்.

* நேர்முகத் தேர்வு என்பது உங்களை மதிப்பிடும் இடம். இந்த இடத்தில் நீங்கள் தவிர்க்க முடியாத நபர் எனும் தோற்றத்தை உருவாக்கினால் உங்களுக்கு நல்ல சம்பளமும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

* நேர்மையாகவும், உண்மையாகவும் பதிலளியுங்கள். வேலை என்பது லாட்டரி சீட்டல்ல ஒரு நீண்ட கால பந்தம் போல. தவறான தகவல்களை அளித்துவிட்டு பணியில் சேர்ந்தால் அது பிரச்சனைகளைச் சம்பாதித்துத் தரலாம்.

இவற்றைக் கவனத்தில் கொண்டால் நேர்முகத் தேர்வுகள் உங்களுக்கு தோழனாக மாறிவிடும்.  கவனமுடன் செயல்பட்டு வாழ்வில் உயருங்கள்.

8 comments on “நேர்முகத் தேர்வு : எதிர் கொள்ள சில யோசனைகள்

  1. more details about an interview. these are useful to the freshers and job seekers. this kind of information to the tamil readers is a good service.

    sundharabuddhan,
    chennai -24.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.