குளிர்சாதனமும் எதிர் விளைவுகளும்.

( தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )

ac.jpg
இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் குளிர்சாதன அறைகளும் குளிர் சாதன வீடுகளும் தான்.  ஒருபக்கம் உலகம் பூமி வெப்பத்தை அதிகரித்துக் கொண்டு தன்னை சூடாக்கிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மனிதன் தற்காலிகத் தப்பித்தல்களுக்காக குளிர் அறைகளில் தஞ்சம் புகுகிறான்.

அதிகப்படியான வெப்பத்தையோ, குளிரையோ தாங்க முடியாமல் மனிதன் இருட்டுக் குகைகளின் கர்ப்பப் பைக்குள் தன்னை சுருக்கிக் கொண்டபோதே துவங்கியிருக்க வேண்டும் ஏர்கண்டிஷன் என்றழைக்கப்படும் குளிர்சாதன கருவியின் முதல் தேவை.

இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுக்கு ஒன்றரை கோடி குளிர்சாதனப் பெட்டிகள் தயாராக்கப்படுகின்றன. இந்தியாவிலும் வெயில் காலங்களில் குளிர்சாதனப் பெட்டிகளின் விற்பனை அணை கடக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் அரை இலட்சம் குளிர்சாதனப் பெட்டிகள் விற்பனையாகியிருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம். உண்மையில் இந்த எண்ணிக்கை இதை விட அதிகமாகவே இருக்கும்.

உலக அளவில் சுமார் 40 பில்லியன் டாலர்களை ஈட்டும் இந்த குளிர்சாதனப் பெட்டிகள் நமக்கு சுகத்தைத் தருவதுடன் நமக்குத் தெரியாமலேயே பிரச்சனைகளையும் தந்து செல்கிறது என்பதை பலர் அறிவதில்லை.

தனிமனிதனுடைய வெப்பத் தப்பில்களுக்கான தேவை எனும் நிலையில் இல்லாமல் தொழிற்சாலைத் தேவை என்னும் கணக்கிலேயே குளிர்சாதனம் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

குறிப்பாக ஆடை தயாரிப்பு ஆலைகளில் ஈரப்பதத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், அதிகப்படியான வெப்பத்தைக் குறைக்கவும் தான் இந்த குளிர்சாதன பயன்பாடே ஆரம்பித்திருக்கிறது. அதன் பின் அச்சு ஆலைகள், புகைப்பட நிலையங்கள் என இதன் பயன்பாடு மெல்ல மெல்ல விரிவடைய ஆரம்பித்தது.

ஆயிரத்து எண்ணூறுகளின் இறுதியில் பொருட்களைப் பதப்படுத்துவதற்காக குளிர் அறைகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் அப்போதெல்லாம் குளிர்சாதனப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அறைகளில் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு அதைச் சுற்றி குழாய்களில் குளிர்ந்த தண்ணீரை பாய்ச்சிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து இரண்டில் நியூயார்க்கின் பங்கு வர்த்தக வளாகம் ஒன்றில் மைய குளிர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே மனிதனின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் குளிர்சாதன அலுவலகம் எனலாம்.

1920 களுக்குப் பின் திரையரங்குகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. அதிக வெப்ப காலத்தில் திரையரங்குகளைப் புறக்கணித்திருந்த மக்களுக்கு இது மிகப்பெரிய அழைப்பாகி விட்டது. பொதுவாக வெயில் காலத்தில் மூடப்பட்டோ, வெறிச்சோடியோ கிடந்த திரையரங்குகள் புத்துயிர் பெற ஆரம்பித்தன. வருமானமும் அதிகரித்தது. எனவே வியாபார வளர்ச்சிக்கு குளிர்சாதனம் தேவை எனும் கருத்து திரையரங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டது. மெல்ல மெல்ல திரையரங்குகள் குளிரை நோக்கிப் பயணித்தன.

நாம் இன்று பயன்படுத்தும் குளிர்சாதனத்தின் முன்னோர்கள் பயன்பாட்டிற்கு வந்தே சுமார் நூறு ஆண்டுகள் தான் ஆகின்றன. இப்போதெல்லாம் குறைந்த விலைக்கே கிடைக்கும் இந்த குளிர்சாதன வசதி பழைய காலங்களில் எட்டாக்கனி. 1952ல் அமெரிக்காவிலுள்ள டெலாஸில் குளிர்சாதன வசதி செய்து கொடுக்க வசூலிக்கப்பட்ட தொகை சுமார் ஐந்து இலட்சம் !

இந்த குளிர்சாதன வசதி மனிதனுக்கு பல இன்னல்களையும் பெற்றுத் தருகின்றது என்பது தான் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு செய்தி.

நம்முடைய உடல் சுற்றுப்புற வெப்பத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது. ஆனால் குளிர் அறைகளில் இருக்கும்போது செயற்கையான சமநிலை கிடைத்துவிடுவதால் உடலின் செயல்பாடு தேவையற்றதாகி விடுகிறது.

உடல் தன்னுடைய இந்த செயலை பயன்படுத்தாத போது சேமிக்கப்படும் சக்தி கொழுப்பாக மாறி உடலில் தேங்குகிறது. கடைசியில் இது உடல் பருமனுக்கு வழிசெய்து விடுகிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி.

குளிர்சாதன அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு இன்னொரு பெரிய சிக்கல் இருக்கிறது. மனித உடல் அறைகளிலுள்ள குளிர் காலநிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு அதிக நேரம் அங்கேயே செலவிடுகிறது. இதனால் வெளியிலுள்ள வெப்பத்தைத் தாங்கும் திறன் உடலுக்குக் குறைகிறது.

குளிர் அறைகளை விட்டு நிஜத்தின் வீதிகளுக்கு வரும்போது வெப்ப அலைகள் குளிர் நிலையிலுள்ள உடலை அதிகமாய் பாதித்து விடுகின்றன. இதனால் தான் குளிர் அறைகளில் இருப்பவர்கள் வெளியே வந்ததும் பதறி ஓடுகிறார்கள்.

குளிர்சாதனம் நம்மை எப்போதுமே இரண்டு விதமான காலநிலைகளில் வாழச்செய்கிறது. குளிர் அறையிலிருந்து வெளியே வருவதும், பிறகு உள்ளே செல்வதும் என வாழ்க்கை ஓடும் போது உடல் அதற்குரிய மாற்றங்களை விரைவில் செய்ய வேண்டியிருப்பதால் பல நோய்களைக் கொண்டு வந்து விடுகிறது.

பெரும்பாலான அலுவலகங்களில் அதிக நேரம் குளிர்சாதனக் கருவிகள் ஓடும்போது ஒரே காற்றை திரும்பத் திரும்ப சுழற்சியாய் பயன்படுத்துவதால் காற்றில் இருக்கும் மாசு வெளியே எங்கும் செல்லாமல் சுவாசத்தில் கலந்து விடுகிறது. இது தொற்று நோய்க் கிருமிகள் யாராவது ஒருவரிடம் இருந்தாலே அந்த அறையிலுள்ள அனைவரையும் விரைவில் பற்றிக் கொள்கிறது

சிக் பில்டிங் சிண்ட்ரோம் (SBC) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நோய்களுக்கு குளிர்சாதனமும் ஒருமுக்கிய காரணம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தலைவலி, சிறு மயக்கம், சைனஸ், கண் எரிச்சல், கண்ணில் கண்ணீர் வழிதல், தொண்ட பிரச்சனைகள் என பல அறிகுறிகளைக் கொண்டது தான் இந்த சிக் பில்டிங் சிண்ட்ரோம்.

குளிர்சாதனப் பெட்டிகள் ஈரப்பதமுள்ள காற்றை உலரவைத்துக் குளிர வைத்து அனுப்புகிறது. இந்த மாற்றம் அலர்ஜி நோய் உள்ளவர்களை பெருமளவில் பாதிக்கும் என்கிறார் சர்வதேச மருத்துவக் கழக மருத்துவர் பால் செமுகோமா.

குளிர் அறைகளிலுள்ள காற்று ஒரு அடைபட்ட அறைக்குள் சுற்றிச் சுற்றி வருவதால் காற்றில் பரவும் நோய்களை இது பெருமளவில் ஊக்கப்படுத்துவதாகவும், ஆஸ்த்மா போன்ற நோயாளிகளுக்கு அதிக கெடுதல் விளைவிப்பதாகவும் அவர் கூடுதல் தகவல்களைச் சொல்கிறார்.

பல குளிர்சாதன வகைகள் சற்று ஈரப்பதத்தையும் அறைகளில் பரப்புகின்றன. இத்தகைய அறைகளில் நிமோனியாவைப் பரப்பும் லெஜியோனிலா பாக்டீரியாக்கள் உருவாகும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கார்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனங்களால் கார்களில் நுண்ணுயிரிகள் அதிகம் இருப்பதாகவும் அது சுவாசம் தொடர்பான நோய்களைத் தரும் வாய்ப்பு உள்ளது எனவும் கம்போலா மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

குளிர்சாதன அறைகளிலேயே மழலை முதல் வளரும் குழந்தைகள் வெளியிலுள்ள வெப்பத்தை ஏற்றுக் கொள்ளும் நிலை வரும்போது அதிக பாதிப்படைகின்றன.

குளிர்சாதனப் பெட்டிகள் சுற்றுப் புறத்தின் வெப்பத்தை அதிகரிக்கிறது. அத்துடன் நின்று விடாமல் ஓசோன் பாதிப்புக்கும் காரணமாகி விடுகிறது. அதாவது ஓசோன் பாதிப்பிற்குக் காரணமான ODC’s (Ozone Depleting Compounds) குளிர்சாதனப் பெட்டிகள், மற்றும் பிரிட்ஜ்களில் உள்ளன. குளிர்சாதனப் பெட்டிகளின் பயன்பாடு அதிகரிக்கும் போது காற்றில் இந்த ODC க்கள் அதிகரித்து ஓசோனை பாதிப்படைய வைக்கின்றன.

அதிக குளிர்சாதனப் பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைக்காத போது மின் வெட்டுகளுக்கும் இது காரணமாகி விடுகிறது.
 
குளிர்சாதன அறை இல்லாமல் எப்படி உடலை குளிரச் செய்வது என்பதற்கும் சில வழிமுறைகளைச் சொல்கின்றனர்.

* கைகளை நல்ல குளிர்ந்த நீரில் சற்று நேரம் வைத்திருக்கலாம்.

* ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி முகத்தையோ கைகளையோ குளிரச் செய்யலாம். அதன் பின் காற்று வீசும் சன்னலோரத்தையோ, மின்விசிறியையோ நாடலாம்.

* நிறைய தண்ணீர் குடியுங்கள். அதிக குளிரான தண்ணீரைக் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதிக குளிரான நீரை தனக்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ள உடல் அதிக சக்தியைச் செலவிட வேண்டியிருக்கிறது.

* கணிப்பொறி, ஸ்டவ், தேவையற்ற மின்விளக்குகள் இவற்றை அணைத்து விடுங்கள்

* ஒரே நேரத்தில் அதிகமாக உண்ணாமல் புரோட்டீன் சத்து குறைந்த உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவது உடலின் வெப்பம் அதிகரிப்பதை தடுக்கும்.

என சின்னச் சின்ன செயல்களிலேயே உடலுக்குத் தேவையான குளிர் நிலையை அளிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இது மட்டுமன்றி மனிதனை தனித்து அடைபட அழைப்பு விடுக்கின்றன இந்த குளிர்சாதன வசதிகள். பிறரோடும் ஊரோடுமுள்ள ஈடுபாடும் இதனால் குறைந்து விடுகிறது. பெரும்பாலும் படுக்கை அறைகளிலேயே அடைபடுகின்றனர் மக்கள்.

மனித உடல் இயற்கையை விட்டு விலகும்போதெல்லாம் ஏதேனும் சிக்கல்களைச் சந்திப்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. குளிர்சாதன வசதிகளும் நவீன யுகத்தின் அவசியத் தேவைகளாகி விட்டன. குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாது எனும் சூழல் வந்தாலும் கூட அது குறித்த விழிப்புணர்வுடன் அணுகுவது நல்லது.

Advertisements

12 comments on “குளிர்சாதனமும் எதிர் விளைவுகளும்.

 1. பூமி வெப்பத்தை வேகமாக அதிகரித்துக் கொண்டே குளிர் சாதனப் பெட்டிகளிடம் தஞ்சம் புகுவது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது போன்றது. அத்துடன் அதைப் பயன்படுத்துவதால் உடலுக்கும் இவ்வளவு கேடு! பயனுள்ள கட்டுரை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  Like

 2. இந்த நேரத்திற்குத் தேவையான கட்டுரை சேவியர் ஸார்.. குளிர்சாதனக் கருவி என்பது இப்போது நடுத்தர வர்க்கக் குடும்பத்தையும் ஆட்டிப் படைக்கிறது.. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் 2 மாத கைக்குழந்தைக்காக குளிர்சாதனக் கருவியை வாங்கிப் பொறுத்தியிருக்கிறார்கள். அக்குழந்தையின் தந்தை ஒரு அச்சகத்தில் கம்பாசிடர்.. இதை என்னவென்று சொல்வது.?

  Like

 3. //நன்றி முபாரக் தொடர்ந்து வருகை தாருங்கள்//

  தொடர்ந்து வருகை தந்துகொண்டுதான் இருக்கிறேன் :-), ஹி.ஹி.. உங்கள் சிரிப்புப் பக்கத்துக்கு

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s