பார்த்தேன் வியந்தேன் : பத்மநாபபுரம் அரண்மனை

2.jpg
பத்மநாபபுரம் அரண்மனை
வியப்பூட்டும் வரலாற்றுச் சின்னம்

இந்த முறை விடுப்பு எடுத்துக் கொண்டு கிராமத்துக்குச் சென்றிருந்த போது எங்கள் ஊருக்கு அருகிலே உள்ள பத்மநாமபுரம் அரண்மனைக்குச் செல்லலாம் என்று கிளம்பினேன். நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் தக்கலை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது அந்த அரண்மனை.

பலமுறை பார்த்த இடம் என்றாலும் இன்னும் கம்பீரம் குறையாமல் கேரள அழகு மிளிர வசீகரிக்கிறது பத்மநாபபுரம் அரண்மனை.

கிபி 1592 முதல் 1609 வரை திருவிதாங்கோட்டை ஆட்சி செய்த இரவி வர்மா குலசேகர பெருமாள் இந்த அரண்மனையை கிபி 1601ல் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

சுமார் எண்பத்து ஆறு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாக பரந்து விரிந்து இருந்த இந்த பத்மநாபபுரம் கோட்டைப் பரப்பு தற்போது ஆறரை ஏக்கர் எனுமளவில் சுருங்கியிருக்கிறது. தமிழகத்தில் இருந்தாலும் இந்த ஆறரை ஏக்கர் நிலப்பரப்பையும், அரண்மனையையும் கேரள அரசு தான் பராமரித்து வருகிறது.

உள்ளே நுழைந்ததும் வரவேற்கும் நிசப்தமான அறையைக் குறித்து ‘இங்கே தான் வருஷம் பதினாறு படத்தை எடுத்தார்கள்’ என்று வழிகாட்டி சொல்லும்போது எரிச்சல் மேலிடுகிறது. பல நூற்றாண்டுகளாக இருக்கும் வரலாற்றை விளக்க ஒரு திரைப்படம் தேவைப்படுகிறது என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

தொன்னூறு வகையான பூக்களை கூரையின் மரவேலைப்பாடுகளாய் சித்தரித்திருக்கும் இடம், ஒரே மரத்தில் கடைந்தெடுத்த பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகள் உள்ள கூரை, கூரை முழுவதும் செதுக்கப்பட்டிருக்கும் தாமரைப் பூக்கள் என மரவேலைப்பாடுகள் அரண்மனையை ஆக்கிரமித்திருக்கின்றன.

மன்னனின் ஆலோசனைக் கூடம் திரைப்படங்களில் மிகைப்படுத்தப்படும் விதத்தில் இல்லாமல் சிறு அறை போல அமைந்திருந்து வியப்பூட்டுகிறது. அதே போல பிரஞ்ச் சன்னல் போன்ற அமைப்புடன் அமைந்துள்ள இடம் அம்பாரி முகப்பு என்றழைக்கப்படுகிறது. இது மன்னன் தேரோட்டம் பார்க்கவும், மக்களுக்கு தரிசனம் கொடுக்கவும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

அரசியின் அந்தப்புரம், கட்டில், அறைகள் என இன்னொரு புறம் அமைந்துள்ளது. அங்கே கிருஷ்ணரின் லீலைகள் படம் பிடித்து வைக்கப்பட்டிருப்பது மெலிதாக புன்னகைக்க வைக்கிறது.

பெண்கள் எந்த உரிமைகளும் இல்லாமல் இருந்த நிலை இங்கும் புலனாகிறது. அவர்கள் அரண்மனை நாட்டிய அறையில் நிகழும் கலை நிகழ்ச்சிகளைக் கூட மேல் தளத்திலிருந்து சிறு துளை வழியாகவே பார்த்து ரசிக்க முடியும்.

இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிய பெரிய இரண்டு அறைகள் அன்றைய அரசர்களின் அன்னதான பணிகளை விளக்கும் விதத்தில் இருக்கிறது.

மலையாளமும் தமிழும் கலந்த அரண்மனைப் பணியாளர்கள் அந்த அரண்மனையில் பதினான்கு மன்னர்கள் வாழ்ந்ததையும், கடைசியாக ஆண்ட மார்த்தாண்ட வர்மாவின் கதைகளையும் சுவாரஸ்யமாய் விளக்குகின்றனர்.

பெரிய அறை ஒன்றில் வரையப்பட்டுள்ள பிரமிக்க வைக்கும் ஓவியங்கள் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியையும், அவரைக் கொல்ல எட்டுவீட்டுப் பிள்ளைமார் செய்யும் சதிச் செயல்களையும் படம் பிடிக்கிறது.

ஒருமுறை கோயிலில் தனியே கடவுளைத் தரிசிக்க வரும் மன்னனைக் கண்டு கொண்டு அவரைக் கொல்ல வாசலில் வாள்களோடு காத்திருக்கின்றனர் எதிரிகள். உள்ளே மன்னனுக்கு விஷயம் புரிந்து விடுகிறது. ஆனால் மன்னனும் பூசாரியும் தவிர யாரும் உள்ளே இல்லை.

மன்னன் வெளியே வந்தால் தலை உருள்வது நிச்சயம். பூசாரி மன்னனைப் பணிகிறான். மன்னர் பூசாரியின் ஆடையை அணிந்து வெளியே வந்து தப்பிச் செல்கிறார். பூசாரி மன்னனின் ஆடையுடன் வெளியே வந்து வாளுக்கு இரையாகிறார்.

இப்படி பல கதைகள் ஓவியங்களில் உயிரோட்டமாய் உலவுகின்றன. பெரும்பாலும் மன்னனின் உதவிகளும், பரிசுகளும் பிராமணர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

127 அறைகள் கொண்ட அரண்மனையில் பல அறைகள் இன்று பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. கீறல் விழுந்த சுவர்களும், வசீகரம் இழந்த பாதையுமாக பல இடங்கள் பராமரிப்பை கெஞ்சும் நிலையில் இருப்பது வேதனை.

எனினும் அரண்மனையில் புராதனம் கெடாமல் பார்த்துக் கொள்ளும் விதம் உண்மையிலேயே பாராட்டுதற்குரியதே. குதிரைக்காரன் விளக்கு, சீனாவிலிருந்து வந்திருந்த ஊறுகாய் பானைகள், வித்தியாசமான பூட்டுகள், ஆட்டுரல், என எல்லாமே ரசிப்பதற்குரியனவாக இருக்கின்றன அரண்மனையில்.

முந்நூறு வருடங்களுக்கு முந்தைய கடிகாரம் ஒன்று இப்போதும் உயிர்த்துடிப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. பூட்டப்பட்ட ரகசிய சுரங்கப்பாதை இக்கட்டான சூழல் வந்தால் மன்னனின் குடும்பம் தப்பிச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்திருக்கிறது.

குறுகிய படிக்கட்டுகளும், நல்ல சில்லென பாதங்களை குளிர்விக்கும் தரையும் என மாறி மாறி வரும் அறைகளில்  சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை கற்பனைகளில் கொண்டு வந்து பார்த்தால் சிலிர்க்கிறது.

முப்பத்து எட்டு கிலோ எடையுள்ள உருண்டையான கல் ஒன்று முற்றத்தில் இருக்கிறது. அரச படையில் சேர விரும்புபவர்கள் அந்த கல்லைத் தூக்க வேண்டும். ஒருமுறை இருமுறை அல்ல, நூறு முறை தொடர்ந்து தூக்க வேண்டுமாம் !

ஒரு அருங்காட்சியகமும் அமைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் அது. வரலாறுகளின் மடியில் காலம் எப்படி புரண்டு விளையாடியிருக்கிறது என்பதை அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

செயற்கை விளக்குகள் ஏதும் பொருத்தப்படாததால் அரண்மனை அனுமதி மாலை நான்கரை மணியுடன் முடிவடைந்து விடுகிறது. அற்புதமான வேலைப்பாடுகளுடன் வரலாற்றின் விரல் பிடித்து நடக்கும் சுக அனுபவம் இந்த அரண்மனை தரிசிப்பில் கிடைக்கிறது. அந்த அனுபவத்தை விரும்புபவர்கள் கண்டிப்பாக போய் வரலாம்.


 

18 comments on “பார்த்தேன் வியந்தேன் : பத்மநாபபுரம் அரண்மனை

 1. அன்பின் நண்பரே,
  இடுகைக்கு நன்றி. பத்மநாபபுரம் செல்லும் எண்ணத்தில் உள்ளேன். ஆதலால் தங்கள் இடுகையைப் பத்திரப்படுத்திக் கொண்டேன். சென்னையிலிருந்து பத்மநாபபுரம் செல்லவேண்டுமானால், தங்குமிடம் மற்றும் பேருந்து வசதி பற்றி எழுத முடியுமா (கார் வைக்காமல், உள்ளூர் நகரப் பேருந்து பயணத்தை மிகவும் விரும்புவன் நான்). விபரம் கொடுத்தீர்கள் என்றால் உபயோகமானதாய் இருக்கும்

  நன்றி

  Like

 2. கேரளா போய்விட்டு திரும்பும் வழியில் பத்மநாதபுரம் அரண்மணையையும் பார்த்து வருவதாக ஏற்பாடு செய்து போய் அன்று ‘அவதி’ன்னுட்டாங்க. சனி அல்லது திங்கள் அவதி என்று நினைக்கிறேன். அதனால் அதையும் சொன்னால், பார்க்க விரும்புபவர்கள், என்னைப் போல் அவதிப்பட்டு திரும்ப நேராது.

  Like

 3. Dear Xavier,

  Don’t give wrong picute about this place like Kerala toursum. Compare the other palaces in our country and tourist palces in KK. this palaces is nothing. more or less same as our Chettinad houses.

  So, don’t expect too much.

  You will get regret if you visit there.

  Like

 4. I beleive all the palace in kerala is more like big house rather than a palace.
  There is one palace in cochin(mattanchery)…….. it also appears same as mentioned in xvaiers description.
  Its small or big we need to appreciate the nice work overthere.

  Like

 5. வருகைக்கு நன்றி நண்பர்களே. பத்மநாபபுரம் அரண்மனை நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் அல்லது திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் ஏறினீர்கள் என்றால் தக்கலை என்னுமிடத்தில் இறங்கிக் கொள்ளுங்கள். அங்கிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது அரண்மனை.

  நான் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் அளவில் மிகப் பெரியனவாக உள்ளன. அவற்றைச் சுருக்கி விரைவில் வலையேற்றுகிறேன். அப்போது அதன் அழகு தெரியும்.

  அரண்மனை பெரிதாய் இருக்கிறதா சின்னதாய் இருக்கிறதா என்பதல்ல பிரச்சனை. அதன் வரலாற்றுச் சிறப்பும், அரச வாழ்க்கை அப்போது எப்படி நடந்திருக்கிறது என்பதை கற்பனையில் தரிசிக்கும் சுகமும் அலாதியானது.

  வரலாற்றுச் சிறப்புகளைப் பார்க்க விரும்பாதவர்கள் தவிர்க்கலாம். ஆனால் ரசனையுடையவர்களை நிச்சயம் பிரமிக்க வைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

  பார்த்து முடித்து விட்டு வரும்போது வெளியே இருக்கும் கடையில் “நொங்கு சர்பத்” ஒண்ணு குடிச்சிட்டு வாங்க. திருப்தியா இருக்கும்.

  Like

 6. உண்மை தான் நாஞ்சில் மைந்தரே.. ஒரு இரண்டு சதவீதம் தான் சொல்லியிருக்கிறேன். அங்கே நிறைய குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார்கள். மலையாளம் கலந்த தமிழில். சுவாரஸ்யமாய் இருக்கும் படிக்க 🙂

  Like

 7. Hi Xavier,

  5 yrs back, we from DSQ software planned for a trip to Kanyakumari (watch the sunset), Padmnabhapuram palace, Trivandrum, allepey – Cochin (back waters trip) . Unfortunately we could not make it.

  Your description has brought the location right in front of my eyes and re-ignited my urge to visit the place.

  All these days I had a wrong notion that you only release kavitha kalanjiyam, never knew your other interests.

  Thanks a lot.

  Revathi

  Like

 8. சேவியர்,பத்மனாப புரம் அரண்மனயைக்கு சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் சென்றிருந்தேன்,அந்த பிரமிப்பு இன்னும் என்னை விட்டு அகலவில்லை,இன்னும் கூட நிறைய சுவாரஸ்யமான தவல்கள் பத்மனாப புரம் அரண்மனயைக்கு உண்டு ,குறிப்பாக சிமென்ட் கண்டுபிடிக்காத காலத்தில் போடப்பட்ட தளங்கள்,பூஜை அறையின் சிவப்பு வண்ணம் மற்றும் வாஸ்த்து படி அமைக்கப்பெற்ற அறைகள்.

  Like

 9. //குறுகிய படிக்கட்டுகளும், நல்ல சில்லென பாதங்களை குளிர்விக்கும் தரையும் என மாறி மாறி வரும் அறைகளில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை கற்பனைகளில் கொண்டு வந்து பார்த்தால் சிலிர்க்கிறது.//
  படிக்கும் போது இதைப் பற்றி எழுதுவீர்களா இல்லையா என்ற எதிர்பார்ப்புடன் படித்தேன்.ஏமாற்ற(ற)வில்லை.வெளியிலுள்ள தட்பவெப்ப
  நிலையில்லா உள் அமைப்பு ஆச்சரியம்.

  //பெண்கள் எந்த உரிமைகளும் இல்லாமல் இருந்த நிலை இங்கும் புலனாகிறது. அவர்கள் அரண்மனை நாட்டிய அறையில் நிகழும் கலை நிகழ்ச்சிகளைக் கூட மேல் தளத்திலிருந்து சிறு துளை வழியாகவே பார்த்து ரசிக்க முடியும்.//

  ராணியும் அழகிய மரவேலைப் பாடமைந்த அறைக்குளிருந்தே நடன நிகழ்ச்சியை காண்டிருக்கின்றார்.
  பெண்களுக்கான பகுதி..உள் கட்டமைப்புடன் கட்டப்பட்டு இருப்பது தங்களின் கூற்றினை மெய்படுத்துகிறது.

  Like

 10. One guy here has commented “nothing to admire and it looks like house in Chettinad”.
  May be in a negative intention or some thing wrong with his view.As this Padmanbhapuram was once the capital of Cheranad.From this palace only the rulers then ruled the entire Kerala.There are lot of things to admire.There is an underpass(tunnel) from here to the present capital of Kerala.The carvings in wooden pillars,Carved wooden column in a single wood,Medicated wooden cot made of 64 different types of trees,The long dining area,The floor made of material other than cement and tiles,The dance hall and the furniture etc etc.Lot to list.The arechitecture of the palace itself is admirable.

  Subsequently those rulers are the one they have developed and constructed lot of Schools in KK District viz. SLB School,Nagercoil,SMRV School Sree Moolam Ramavarma HS School,SMSM (Sree Moolam Sashti Moorthy)HSS Suchindram
  Lot of other structures.Those all made during those period are good and admirable architecture and also strong still now.

  Like

 11. Dear all,

  Mr.Joseph has commented nothing is there to admire and will get once they visit.

  I think we all can make a tour to Mr.Josephs house which is the admirable one than Padmanabhapuram

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.