சுதந்திரம் மறுக்கப்படும் குழந்தைகள்

kids.jpg 

இன்றைய வாழ்க்கைச் சூழல் குழந்தைகளின் மீது ஒரு சுமை வளையமாக விழுந்து விடுகிறது. பாதுகாப்பற்ற சமூகம் குழந்தைகளின் மீதான சுதந்திரத்தின் மீது ஒரு பெரிய எந்திரக் கல்லைச் சுமத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

கோடிட்ட இடங்களை நிரப்பும் வினாத்தாள் போல இருக்கும் சில அறைகளுக்குள் மட்டுமே பறந்து திரியும் வாழ்க்கையைத் தான் இன்றைய சமூகம் குழந்தைகளுக்குப் பரிசளித்திருக்கிறது என்பது வேதனையான உண்மை.

இதனால் குழந்தைகள் பெரும்பாலும் தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்கோ கலியுகக் குத்துப் பாட்டுகளுக்கோ ரசிகர்களாகவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டு விடுகின்றனர். தற்போதைய குழந்தைகள் தொலைக்காட்சிகள் கூட குழந்தைகளால் நடத்தப்படும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகள் போல இருப்பதால் இவர்களுடைய மழலை சுவாரஸ்யங்கள் மறுதலிக்கப்படுகின்றன.

குழந்தைகள் கடத்தல் பயம் நகரக் குழந்தைகளை மதில் சுவருக்குள் வளைய வரவே அனுமதிக்கிறது. வெளியே அனுப்பினால் குழந்தைகள் வீடு வந்து சேர்வார்களா என்னும் வெலு நியாயமான பயத்துடனே உலவ வேண்டிய நிலை பெற்றோருக்கு.

இன்றைய நெரிசல் போக்குவரத்தும், வாகன ஓட்டிகளின் அலட்சியமும் தெருவில் விளையாடும் பிள்ளைகளின் நலனின் மீது மிகப்பெரிய விழும் இன்னொரு சுமையாகி விடுகிறது. கிராமங்களில் சுதந்திரமாய் மரங்களிடையே தும்பி பிடிக்கும் சுவாரஸ்யத்தை நகரம் கற்பனையில் கூட கண்டு களிக்க முடிவதில்லை.

இத்தகைய சூழல் ஆரோக்கியமானதுதானா ? குழந்தைகளின் மழலைக்காலம் வெறும் வகுப்பறைகளிலும், வரவேற்பறைகளிலும், படுக்கையறைகளிலும் மட்டுமே இட்டு நிரப்பும் வருடங்களாகிப் போனது குழந்தைகளை மன ரீதியாக எந்த அளவுக்குப் பாதிப்படையச் செய்கிறது என்பது போன்ற பல ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்து கொண்டே இருக்கின்றன.

வெளியில் ஓடி ஆடி விளையாடாத குழந்தைகளின் உடல் நலன் வெகுவாகப் பாதிப்படைகிறது எனவும், அவர்களுக்குத் தேவையான உடல் ஆரோக்கியம் இருப்பதில்லை எனவும் சமீபத்தில் வெளியான இங்கிலாந்து ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

குழந்தைகளை சுதந்திரமாகவும், திறந்த வெளிகளிலும் விளையாட அனுமதிப்பது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் வளர்க்கிறது என்பது அந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

குழந்தைகள் வரையறை படுத்தப்பட்ட, அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டங்களுக்குள் விளையாடும் போது அவர்களுக்கு விளையாட்டே சுமையாகிப் போய்விடுகின்றது. கட்டுப்பாடற்ற காற்றைப் போன்ற சிறுவயதினர் தங்கக்கூண்டுக்குள் தத்தித் தவழ்தலை எப்போதும் விரும்புவதில்லை.

கணினி விளையாட்டுகளோ, தொலைக்காட்சியோ குழந்தைகளின் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் வளர்ப்பதில்லை. மாறாக கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுகின்றன என்பது தான் நிஜம்.

சுமையான பாட திட்டங்களும், சுமையாய் விழும் சமூக அமைப்பும் கெடுத்துக் கொண்டிருப்பது மிகவும் தூய்மையான, உன்னதமான மழலைக்காலத்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்தியாவில் மட்டுமன்றி இந்த பிரச்சனை ஒரு சர்வதேசச் சிக்கலாகவே மாறியிருக்கிறது. பிரிட்டனின் கடந்த பதினைந்து ஆண்டுகளாக குழந்தைகளின் ஆனந்தம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் ஆரோக்கியமான இடங்களில் விளையாடட்டும் என நினைக்கும் பெற்றோரின் மனோபாவம் கூட இதன் ஒரு காரணி எனக் கொள்ளலாம். உண்மையில் குழந்தைகளின் ஆரோக்கியமும், நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் வாய்ப்பும் இத்தகைய சுதந்திர விளையாட்டுகளில் தான் கிடைக்கின்றன என்பது வசதியாக மறக்கப்பட்டு விடுகிறது.

குழந்தைகள் சமீப காலமாக உடல் எடை அதிகமாய் இருக்கும் பிரச்சனையும் இதனுடன் தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடியதே. நொறுக்குத் தீனிகளுக்குள் குடியிருந்து கொண்டு தொலைக்காட்சிகளில் லயித்திருக்கும் குழந்தைகள் உடல் எடை அதிகரிப்பதில் வியப்பென்ன இருக்க முடியும் ?

இன்றைய நவீன வீடுகளும் ஒரு குழந்தைக்கு மேல் யோசிக்காத பெற்றோர்களால் தான் நிரம்பி வழிகிறது. இத்தகைய சூழல் குழந்தைகளை இன்னும் அதிகமாய் பாதிப்படைய வைக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டு வாழ்வின் மீதான சுவாரஸ்ய அனுபவங்கள் இழந்து இயந்திரத் தனமான வாழ்க்கையையே வாழ வேண்டிய பலவந்தத்திற்கும் பால்யம் புகுந்து விடுகிறது.

வெளியே தனியே போக ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டும் என்னும் கொள்கையை பெரும்பாலான பெற்றோர் கடைபிடிக்கின்றனர். இதனால் அந்த வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய சூழலில் மட்டுமே உலவ வேண்டிய சூழல் உருவாகி விடுகிறது.

இத்தகைய தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள் மன அழுத்தம், அல்லது அதீத கோபம், சமூக அக்கறையின்மை, போன்றவற்றால் தாக்கப்படும் அபாயம் உண்டு. குழந்தைகளுக்கான சுதந்திரம் பறிக்கப்படுகையில் அவர்களின் மனதில் ஏற்படும் ஏமாற்றம் அளவிட முடியாதது.

‘ஓடி விளையாடு பாப்பா’ என்பது கனவாகி விட்டது. சதுர அடிகளால் கட்டப்பட்ட வீடுகளில் ஓடித் திரியும் குழந்தைகளைப் பார்த்து ‘ஓடாதே மெதுவாய் நட’ என வேகத் தடை போடுகிறோம். சத்தம் போட்டால் ‘கத்தாதே அமைதியாய் இரு’ என்கிறோம். படிக்கட்டில் ஏறினால் ‘ஏறாதே..இறங்கி வா’ என அதட்டுகிறோம். மொத்தத்தில் குழந்தைகளுக்கு அவர்களுக்கே உரிய சுதந்திரங்கள் அனைத்தையுமே மறுத்து விடுகிறோம்.

குழந்தைகளை குழந்தைகளுடன் சுதந்திரமாக விளையாட விடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெருமளவு உற்சாகமடையச் செய்கிறது என்பது பல ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு மாறாகவே இன்று நமது வீடுகளும், விளையாட்டை மறுக்கும் கல்வி நிலையங்களும், பாதுகாப்புக்கு உத்தரவாதமற்ற சமூகமும் நடந்து கொள்கின்றன. குறிப்பாக இன்று பல கல்வி நிலையங்கள் குழந்தைகளை செதுக்குவதாய் நினைத்து வாக்கியங்களை மனப்பாடம் செய்யும் ரோபோக்களாக்கிக் கொண்டிருக்கின்றன.

சுதந்திரமாய் விளையாட அனுமதி மறுக்கப்படும் குழந்தைகள் சவால்களை எதிர்கொள்ளும் சக்தியற்றவர்களாகவும், பயத்தினால் சூழப்பட்டவர்களாகவுமே வளர்கின்றனர். இந்த பயத்தை உணவு உண்ண மறுக்கும் குழந்தைக்கு ‘மூணு கண்ணன் வாரான்’ என்று சொல்லும் தாய்மார்கள் ஊட்டி வளர்க்கின்றனர்.

இன்றைய வாழ்க்கைச் சூழல் குழந்தைகளின் மீதான பெற்றோரின் கரிசனையை அதிகப்படுத்தியிருப்பது இயல்பே. ஆயினும் இந்தக் கரிசனையே ஒரு சுமையாய் குழந்தைகளின் மீது சாய்க்கப்படுவதும், குழந்தைகளின் ஆனந்தத்துக்குக் குறுக்கே மிகப்பெரிய மதில் சுவராய் எழுந்து நிற்பதும் ஆரோக்கியமானதல்ல.

குழந்தைகளின் மீதான அக்கறை அவர்களின் சுதந்திரமான விளையாட்டை தடை செய்வதாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு அதற்குரிய பாதுகாப்பான சூழலையேனும் உருவாக்கித் தருவது பெற்றோரின் கடமையாகும்.

நம்முடைய பால்யத்தின் சுவாரஸ்யங்களின் ஒரு பகுதியையேனும் நமது மழலைச் செல்வங்களும் அனுபவிக்கும் படியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கும் முனைப்பை பெற்றோர் முதன்மைப் பணியாகக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கே உரிய குழந்தைகளின் சுதந்திரங்களை மீட்டுக் கொடுப்போம், அவர்களுடைய ஆனந்தத்தின் எல்லையை விரிவாக்குவோம்

2 comments on “சுதந்திரம் மறுக்கப்படும் குழந்தைகள்

 1. மிக அருமையான ஒரு கட்டுரை இது. நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளவைகள் எனக்கு முன்பே தெரிந்தவையாக இருந்தாலும், மீன்டும் மீன்டும் சொல்ல கேட்பது நிறைய பயன் அளிப்பதாக உள்ளது. விட்டு போன தவறுகளை திருத்தி கொள்ள உதவுகிறது. மேலும் புரிதலை நீட்டிக்க உதவும்……

  மேலும், கொஞ்ச காலமாக, நான் பார்த்து வரும் ஒரு விசயத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணம்.
  என் அப்பா, எனக்கும் என் தங்கைக்கும் கொடுத்த சுதந்திரத்தை விட, தன் பேரனுக்கு மிக மிக அதிக சுதந்திரம் கொடுத்து வருகிரார்.
  இதற்கு காரணங்கள் நிறைய இருக்க முடியும்……..
  (1). தந்தைக்கும் மகனுக்கும் உள்ள ego தாத்தாவுக்கும் பேரனுக்கும் இயல்பாகவே இல்லாமல் போய்விடுகிறது. (2) அத்தனை எதிர்பார்ப்புகளேடு வளர்த்த மகன்/மகள் ஒன்றும் தான் கணவு கண்டது போல உலக சாதனை படைக்க வில்லை என்ற புரிதல். (3) முக்கியமாக கூடுதலாக கிடைத்த 30 வருட அனுபவம்……
  எப்படியோ, தாத்தா பாட்டியிடம் குழந்தைகளுக்கு தேவையான சுதந்திரம் ஓரளவு கிடைக்கவே செய்கிறது. ஆனாலும், எங்கே அவர் கொடுக்கும் செல்லதில், தன் பேச்சை தன் மகன் கேட்காமல் போய்விடுவானோ என்ற அச்சத்தில், அதையும் தடுக்கின்றனர் இன்றைய அப்பாக்கள்…அம்மாக்கள்..

  அதே போல, வாசிங்டன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் சென்ற மாதம் வெளியாயிருந்தன. அமரிக்காவில் மிக பிரபலமாக விற்றுகொண்டிருக்கும் பேபி ஐன்ஸ்டீன் (“Baby Einstein”) DVD வரிசைகள் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியில் உதவுகிண்றனவா? என்பது தான் அந்த ஆய்வு. அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அவர்கள் கண்டது, மூளை வளர்ச்சியில் பாதிப்பே. மூன்று வருடங்களாக இந்த வகை DVD க்களை பார்த்து வரும் குழந்தைகள், இவற்றை பார்க்காது வளர்ந்த குழந்தைகளை விட புதிய வார்த்தைகளை கற்றுகொள்வதில் 50% மந்தமாக இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனலும் மூளையில் இது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியதா என்பது பற்றிய தெளிவு இன்னும் இல்லை…. ஆராய்ச்சி தொடர்கிறது.

  குயில் என்றதும் என்னக்கு நினைவு வருவது அந்த இரட்டை பனைமரம்தான். 3 அல்லது 4 வது படித்த அந்த காலத்தில், இனிய அந்த குரலை கேட்டதும் , அதை குயிலின் சத்தம் என்று என் வீட்டில் வேலை செய்த சரோஜா-க்கா சொன்னதும், மரத்தை சுத்தி தேடினாலும் என் கண்ணுக்கு அகப்படாத அந்த குயிலும்தான் நினைவுக்கு வரும். அந்த மாத்திரத்தில் என் மனம் ஒரு கணத்திற்கு குழந்தை ஆகிவிடும்.

  இன்னும் இருபது வருடங்கள் கழித்து என் மகளுக்கு என்ன நினைவு வரும்……? ஒரு வேளை என் வீட்டு கணிணி-யின் ஒலி பெருக்கி தோண்றலாம்…………….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.