விஷ வாயு : தீதும் நன்றும் பிறர் தர வாரா

விஷ வாயு :

organic.jpg

( கடந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் போபாலில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவும் அதன் விளைவாக நிகழ்ந்த அதிர்ச்சிகரமான மரணங்களும் இன்னும் மக்களின் கண்களில் அனலாய் வீசிக்கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மெல்லிய விஷ வாயு கசிவு ஏற்படுத்திய பீதி சுட்டிக் காட்டுகிறது. அந்த பீதி அகலும் முன்னமே ஹுண்டாய் கார் கம்பெனியில் நிகழ்ந்த விஷ வாயு கசிவும் உயிரிழப்புகளும் மேலும் பீதியை கிளப்பி விட்டிருக்கிறது.

பல இலட்சம் சப்பானில் நிகழ்ந்த அணு குண்டு தாக்குதலுக்கு அடுத்தபடியாக , ரசியாவில் நிகழ்ந்த அணு உலை வெடிப்பு போல போபால் பல ஆயிரம் உயிர்களைப் பலிவாங்கி உலகின் கண்களைக் குளமாக்கியது வரலாறை விட்டு விலகப் போவதில்லை. உயிர்பலியைத் தவிர்த்து கருவிலிருக்கும் குழந்தையைக் கூட ஊனமாக்கிச் சென்ற விஷவாயுக் கசிவு மக்களிடையே இன்னும் துயரம் மிகுந்த உயிர்ப்புடன் உலவி வருகிறது என்பது கண்கூடு.

பொதுமக்களிடையே நிகழும் பீதி அலட்சியப் படுத்திவிடக் கூடியதல்ல. ரசாயனக் கூடங்களிலிருந்தோ , அணுமின் நிலையங்களிலிருந்தோ பாதுகாப்பை மீறிக் கசியும் வாயுக்கள் பெரும்பாலும் மனிதனுக்கு தீங்கு விளைவிப்பவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வாயுக்களில் இருக்கும் ஆர்கானிக் , ஹைட்ரோகார்பன் போன்றவற்றின் அளவை வைத்தே பாதிப்பின் வீரியம் கணக்கிட முடியும்.

சென்னையில் கசிந்த விஷவாயு உயிருக்குச் சேதம் விளைவிக்கக் கூடியதல்ல எனவும், கண் எரிச்சல், மூச்சு விடுதலில் சற்று சிரமம் என்னும் நிலையைத் தாண்டி பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தாது என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த பின்பே மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.

பொத்தாம் பொதுவாக கசியும் வாயுவை சுவாசித்த உடனேயே மரணம் நிச்சயம் என்று பயப்படத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் நமது வீடுகளின் உள்ளேயே ஆர்கானிக் வாயு உலவிக் கொண்டே தான் இருக்கிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? அது தான் உண்மை.

வீட்டிற்கு அடிக்கும் வர்ணப் பூச்சு (பெயிண்டிங்), வார்னிஷ், பெரும்பாலானகிளீனிங்பொருட்கள் இவையெல்லாம் ஆர்கானிக் வாயுக்களை வெளிவிடக் கூடியவையே. இன்னும் கூட தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே நல்ல காற்றை சுவாசித்துவிட்டு வீட்டிற்கு உள்ளே ஆர்கானிக் வாயுவை சுவாசிக்கும் நிலமையே பலருக்கும்.

எனினும் இதுகுறித்து அதிகமாய் பயப்படத் தேவையில்லை. பெரும்பாலும் இந்த வாயுக்களில் குறைந்த விஷத் தன்மையே காணப்படும். பயன்படுத்தப் படக் கூட கால அளவைப் பொறுத்து இந்த பாதிப்பு வேறுபடும் . உதாரணமாக வீட்டு வேலைக்காரப் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றவர்களை விட அதிகம்.

வீடுகளில் இருக்கும் ஆர்கானிக் வாயுக்களின் பாதிப்பிலிருந்து தப்ப நல்ல காற்றோட்டமான சூழலும், பயன்படுத்தாத ஆர்கானிக் தன்மை கலந்த பொருட்களை அப்புறப்படுத்துவதும் அவசியம் . குறிப்பாக பெயிண்ட் போன்றவை மீதமானால் அவற்றை அப்புறப்படுத்துவதே நல்லது.

மெத்லின் குளோரைடு, பென்சேன் போன்ற மூலக்கூறுகள் அடங்கிய பெயிண்ட் வகைகளை அதன் உறைகளிலிருந்து கண்டறிந்து கவனமாக கையாள வேண்டும். வீட்டு உபயோகப் பொருட்களுடன் அவற்றைக் கலந்து வைக்கவே கூடாது.

ஆலைகளில் ஏற்படும் விஷ கசிவைக் கண்டுபிடிக்க புதிய உத்தியாக புற ஊதாக்கதிர் காமராக்கள் வந்துள்ளன. இவை பல மீட்டர் தூரத்திலிருந்தே மெல்லிய கசிவைக் கூட கண்டுபிடித்துவிடும் திறன் கொண்டவை. வீரியமுடைய வாயுக்கள் எனில் இவை பல நூறு மீட்டர் தூரத்திலிருந்தே கண்டுபிடித்துவிடும்.

ஆலைகளிலிருந்து விஷவாயு கசிவைத் தவிர்க்க அரசு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்பட வேண்டும். ஆலைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த சோதனைகள் நடுநிலையுடன் நிகழ்த்தப்பட வேண்டும்.

  • கசிவு ஆபத்து நிகழ்ந்தால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆலை தொழிலாளர்களுக்கும், ஆலை இருக்கும் இடத்திலுள்ள பொதுமக்களுக்கும் அரசும் நிறுவனமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
  • இத்தகைய ஆலைகள் இருக்கும் இடங்களில் அரசே ஆம்புலன்ஸ் உதவி, மருத்துவ உதவி போன்றவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  • பணியாளர் ஒருவரின் அலட்சியமே போபாலில் வாயு எமனாய் உருவெடுத்தது. எனவே அத்தகைய அலட்சியங்கள் அணு அளவு கூட நடக்காத நிர்வாகம் ரசாயன ஆலைகளில் நிச்சயம் வேண்டும்.
  • விஷ வாயு கசிவு போன்ற அபாயங்கள் நிகழும் போது நிர்வாகம் துரிதகதியில் சுற்றியிருக்கும் மக்களுக்கு தகவலைத் தெரிவிக்க வேண்டும். சைரன், ஆலை ஒலி, ஒலிபெருக்கி அறிவிப்பு என ஏதேனும் ஒன்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
  • சாலைகளில் ஓடும் வாகனங்களிலிருந்து வரும் புகையின் அளவைஎமிஷன் சோதனைமூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • வீடுகளில் பயன்படுத்தப் படாத பெயிண்டிங் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
  • வீடுகளை நல்ல காற்றோட்டமாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.
  • காற்றோட்ட வசதியில்லாத அறைகளில் ஹைட்ரோகார்பன் போன்ற விஷத் தன்மையுடைய பொருட்கள் இல்லாத சாதாரணமான பூச்சுகளைப் பயன்படுத்துவது சிறந்தது.
  • வீட்டு உபயோகப் பொருட்களையும் பாத்திரங்கள், கழிவறை போன்றவற்றை சுத்தப்படுத்தும் பொருட்களையும் ஒரே இடத்தில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு வாங்கும் பல விதமான பொம்மைகளில் கூட இத்தகைய விஷத் தன்மை இருக்கிறது. அத்தகைய பெயிண்டிங் அடங்கிய பொருட்களை குழந்தைகளுக்கு அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சில எளிய வழிமுறைகளை நம்முடைய அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம் சிறு சிறு பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

ஆலைகள் போன்ற பெரிய வாயு கசிவு நிகழும் வாய்ப்பு உள்ள இடங்களை நிர்வாகமும், அரசும் சரிவர கவனித்து பேரிழப்புகளிலிருந்து சமூகத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்.

Advertisements

2 comments on “விஷ வாயு : தீதும் நன்றும் பிறர் தர வாரா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s