அர்த்தமிழக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

mumbaigirls.jpg

( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம்  நாளிதழில் வெளியான கட்டுரை )

 மும்பையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இரண்டு இளம் பெண்களை எண்பது இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளனர்.

 சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த புத்தாண்டு நள்ளிரவுக் கொண்டாட்டங்களில் விபத்து நேர்ந்ததில் நீச்சல் குளத்தில் விழுந்து ஒருவர் மரணமடைந்திருக்கிறார் பலர் காயமடைந்திருக்கின்றனர்.

 சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருத்தி கொச்சியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

 இந்த நிகழ்வுகளெல்லாம் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்னும் பெயரில் புகுத்தப்படும் வர்த்தகத் தேவைகள் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தை எந்த விதத்தில் ஊனப்படுத்துகின்றன என்பதற்கான சில உதாரணங்கள் எனக் கொள்ளலாம்.

 இந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்களெல்லாம் தலையாய கடமை போன்ற தோற்றம் இன்று இளைஞர்களிடையே வேரூன்றியிருப்பதற்கு உலகமயமாக்கல் மிக முக்கியமான ஒரு காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை. 

 மேலைநாட்டுக் கலாச்சாரங்களை ஊடகங்கள் வலிந்து புகுத்துவதும், கைநிறைய பணத்தை இளசுகளுக்கு அள்ளிக் கொடுக்கும் கணினி, பி.பி.ஓ நிறுவனங்களும் இந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ஊக்கப்படுத்துகின்றன.

 பல பத்தாயிரம் ரூபாய்கள் வரை கட்டணம் கொடுத்து இரவில் ஆட்டம் போடும் இளசுகளால் நிரம்பி வழிகின்றன நகர்ப்புற நட்சத்திர ஹோட்டல்கள்.

 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்றாலே ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தூக்கம் தொலைத்து வீதிகளில் வலம் வருவதும், இளைஞர்கள் அரை போதையில் இருசக்கர வாகனங்களில் கூச்சலிட்டுக் கொண்டே விரைவதும் சென்னை வீதிகளில் தவிர்க்க முடியாத புத்தாண்டு நள்ளிரவுக் காட்சிகளாகிவிட்டன.

 புத்தாண்டு தினம் என்பது ‘இன்னொரு நாள்’ எனும் பக்குவம் வளரவேண்டும். அல்லது கடந்த ஆண்டில் செய்த செயல்களை நியாயமான முறையில் திரும்பிப் பார்க்கும் ஒரு மைல் கல்லாக இந்த நாளைப் பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து வெறுமனே பொருளையும், நேரத்தையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.

 மனிதத்தையும், குடும்ப உறவுகளையும், சமூக பிணைப்பையும் ஊக்கப்படுத்தும் செயல்களை புத்தாண்டு தினத்தில் கொண்டாடுவதே சிறப்பானதாக இருக்கும்.

 1. புத்தாண்டு தினத்தன்று வீட்டை விட்டு வெளியே சுற்றியலைந்து திரிவதை தவிர்த்து குடும்பத்தினருடன் பொழுதைச் செலவிடுவதே மிகவும் சிறப்பானது. அனைவருமாய் அமர்ந்து பேசி சிரித்து உணவு உண்டு குடும்பமாய் இருப்பது மிகவும் ரம்மியமானது, சிதைந்து வரும் குடும்ப உறவுகளை அது சீர்செய்யும்.

 2. அருகிலிருக்கும் முதியோர் இல்லத்தையோ, கைவிடப்பட்டோர் இல்லத்தையோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தையோ சந்தித்து அவர்களோடு சிறிது நேரத்தைச் செலவிடலாம். அவர்களுடைய புன்னகையில் உங்கள் புத்தாண்டு வெளிச்சம் பெறும்.

 3. புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக நாம் ஆடம்பரமாய் பணம் செலவு செய்யும் போது நான்கு தெரு தள்ளி பசியில் தவிக்கும் குடும்பங்களை நினைத்துக் கொள்வோம். ஏதேனும் ஒரு குடும்பத்துக்கு ஏதேனும் ஒரு குறிப்பிடும்படியான உதவி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

 4. குடிக்கமாட்டேன், புகைக்கமாட்டேன், உடற்பயிற்சி செய்வேன் என்னும் “நான்” சார்ந்த புத்தாண்டு வாக்குறுதிகள் தேவை தான். அத்தோடு மாதம் ஒரு முறை ஏதேனும் ஒரு நல்ல செயலை ஏழைகளுக்கோ, உதவி தேவைப்படும் எவருக்கோ செய்வேன் என உறுதி மொழி எடுங்கள்.

 5. தேவையற்ற தொலைக்காட்சிப் பேட்டிகளை ஒளிபரப்பும் தினமே புத்தாண்டு என்றாகிவிட்ட சூழலில் நல்ல புத்தகங்களுக்காகவோ, நண்பர்களை சந்திப்பதற்காகவோ இந்த ஆண்டேனும் நேரம் ஒதுக்குங்கள்.

 6. வேலைக்கு நேரத்தை ஒதுக்கும் அவசரத்தில் குடும்பத்தை இரண்டாம் பட்சமாக்கும் நிலையைத் தவிர்க்கவேண்டும். இந்த ஆண்டேனும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என முடிவெடுப்போம்.

 7.        குழந்தைகளை ஏதேனும் ஒரு நல்ல செயலைச் செய்யப் பழக்குவோம். அவர்களை சிறியவர்கள் என ஒதுக்காமல் பிறருக்கு உதவிகள் செய்யும்போது அவர்கள் மூலமாக செய்து அவர்களுடைய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.

8.        புத்தாண்டுக்கு எடுக்கும் முடிவுகளை இரண்டு மூன்று மாதத்துக்கு ஒருமுறை திரும்பிப் பார்த்து கடைபிடிக்கிறோமா என கவனிக்க வேண்டும். சரியான திட்டமிடுதல் மூலம் நமது வாழ்க்கை முறையும் வலுப்படும்.

9.       இந்த ஆண்டு எத்தனை முறை கடும் கோபம் ஏற்பட்ட போதும் அமைதியாய் இருந்தோம் என்பதை கணக்கிட வேண்டுமென முடிவெடுப்போம். ஒவ்வோர் முறை அமைதியாய் இருந்து சூழலை இயல்பாக்கும் போதும் அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களை அது மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

10.    மொத்தத்தில் புத்தாண்டு என்பது நாம் மனிதர்களாகப் பிறந்திருப்பதனால் மகிழவும், மனித நேயமும், மனிதனுக்குரிய குணங்களும் கொண்டு வாழ முயலவுமே என்பதை மனதில் குறிப்போம்.

 புத்தாண்டு என்பது ஒரு நாள் அல்ல. அது ஒரு ஆண்டு என்பதை நினைவில் கொண்டு கொண்டாட்டங்களை வகைப்படுத்துவோம்
 

6 comments on “அர்த்தமிழக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

 1. சேவியர்! நல்லாவே எழுதியிருக்கீங்க!இதைப்படிக்கிறவர்கள் தாங்களும் பின்பற்றி , இந்த விஷயத்தைத் தங்கள் நண்பர்களுக்குச் சொன்னாலே போதும். நீங்கள் எழுதியது சமுதாயத்தில் சில பேரையாவது மாற்றும் என நம்புகிறேன்.

  அன்புடன் கமலா

  Like

 2. நல்ல கருத்துக்கள் கவிஞரே. இப்போது தான் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் செய்திகளை விலாவாரியாகப் படித்துவிட்டு வந்தேன்… வந்ததும் உங்கள் பதிவு கண்ணில் பட்டது.

  Like

 3. அழகு கவிதைகளும், நேர்த்தியான கட்டுரைகளும். தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.