பூக்களில் உறங்கும் மெளனம் : 2

poo.jpg

உறக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலையின் புனிதமாய் இருக்கிறது
பூக்களில் உறங்கும் மெளனம்.

இதழ்களின் இடுக்கில்
இரவில் இளைப்பாறிய இருள்
புறப்படுகையில்
பரிசளித்துச் சென்ற
பனித்துளியில் கலையாமலும்,

மகரந்தச் சலங்கை கட்டி
பூச்சிகள்
அரங்கேற்றம் நடத்தும்
சிறகு நாட்டியத்தில் சிதையாமலும்,

காலைத் தென்றல்
குளிர் சுருட்டி
காது குடைகையில் கலையாமலும்

இன்னும்
இழுத்துப் போர்த்தி
உறங்கிக் கிடக்கிறது மெளனம்

ஓர்
சத்தத்தின் முத்தத்தால்
எழுப்பி விடும் வேகத்தில்
தடதடத்து தோற்கிறது
தொலை தூர ரயில்.

பால்காரரின் குரலில்
பதட்டப்படாமலும்,
விசிறப்பட்ட செய்தித்தாளால்
விழித்து விடாமலும்
இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது
மெளனம்.

.
சத்தங்களோடே
குடித்தனம் நடத்தும்
குடியிருப்பு வாசிகளுக்குப் புரிவதில்லை,

மெளனத்தை
மெளனத்தால் வாசிக்கும் மந்திரம்

7 comments on “பூக்களில் உறங்கும் மெளனம் : 2

  1. Pingback: தேன் » Blog Archive » ‘நச்’ கவிதைப் போட்டி - அறிவிப்பு

  2. //சத்தங்களோடே
    குடித்தனம் நடத்தும்
    குடியிருப்பு வாசிகளுக்குப் புரிவதில்லை,

    மெளனத்தை
    மெளனத்தால் வாசிக்கும் மந்திரம்//

    எதார்த்தமான வரிகள் நண்பரே.

    Like

  3. இதுவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள். இனிய புத்தாண்டு மற்றும்
    பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.